Tuesday, November 30, 2010

அப்பா மாற்றிய பாதை

உலகத்தில் பிரபஞ்ச ரகஸ்யத்தை கூட கண்டு பிடித்துவிடுகிறார்கள்.  ஆனால் எத்தனை பேர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி முழுமையாக உண்மையாக புரிந்திருக்கிறார்கள்? 

பாதி காலம் பயம். மீதி கொஞ்சம் வெறுப்புமாய் வாழ்ந்து வெளியே வந்து விட்ட பிறகு தான் முழுமையான அவரவர் அப்பா குறித்த புரிதலின் ஆரம்பமே தொடங்குகிறது.   நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். 

என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன். 

ஆனால் இவர் இப்போது அப்பாவைப் பற்றி மூச்சு விடாமல் பேசத் தொடங்கிய பிறகு கொட்டித் தீர்க்கட்டும் என்று அமைதியாய் கேட்டுக் கொண்டுருந்தேன். அவரின் நீண்ட உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.   அமைதியாய் இருந்தேன்.

பேசத் தொடங்கினார்.

" நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சில சமயம் என் அம்மா பள்ளிக்கு வருவார். நானும் அம்மாவும் பள்ளிக்கு வெளியிருக்கும் மரத்தடியில் வெகு நேரம் பேசிக்கொண்டுருப்போம்.  அப்போது தான் அவர் முகத்தில் புதிய மலர்ச்சி தெரியும். சிறையை விட்டு பறவைப் போல அவர் பேச்சில் உற்சாகம் வழிந்தோடும். 

அம்மா பொதுவாக வீட்டில் இருக்கும் போது அதிகமாக பேசமாட்டார்.  ஆனால் நான் எந்த விசயத்தைப் பற்றி அவருனுடன் பேசினாலும் அவரின் தெளிவான கருத்தை எடுத்து வைப்பார். அதிகமாக படிக்கவில்லையே தவிர அவராகவே உணர்ந்த விசயங்களை நகைச்சுவையாக எடுத்து வைப்பார். 

எங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் என் தோழிகள் " யாரிவர்?  உன்னோட அக்காவா?" என்று கேட்பார்கள். 

"அந்த அளவிற்கு அம்மா எப்போதுமே வசீகரமாய் இருப்பார்.  ஆடம்பர சேலைகளோ பெரிதான நகைகள் இல்லாத அவரின் முகம் எப்போதும் புன்னகையுடன் தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து பெரிய திலகமிட்ட பிறகே தன்னுடைய அன்றாட கடமைகளை தொடங்குவார்.  அப்பாவும் அம்மாவும் எங்கேயும் சேர்ந்து போய் நான் பார்த்ததேயில்லை. "

"அம்மாவிடம் பல முறை கேட்டுருக்கின்றேன்.  சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார்.  ஆனால் குடும்ப விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். வீட்டில் என்னுடன் அதிகமாக பேசும் நேரமே தம்பியும் அப்பாவும் இல்லாத நேரமாகத்தான் இருக்கும். என்னுடைய தம்பியை ஒரு அளவிற்கு மேல் அம்மாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மெதுவாக புரிந்து கொண்டேன்.  காரணம் அவன் எப்போதுமே அப்பாவுக்கு பிடித்த பையனாக இருந்த காரணமே அவனிடம் ஒவ்வொரு கெட்ட பழக்கங்களும் வீடு வரைக்கும் வர ஆரம்பித்தது.. அதுவே ஏராளமான பிரச்சனைகளும் கொண்டு வந்து சேர்த்தது.  . அப்பாவிடம் இது குறித்து கேட்ட முடியாது.  அவர் ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.  

"அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான்." என்று சொல்லிவிடுவார்..

"எனக்கு என் அம்மாவிடம் பிடித்த விசயமே, எது குறித்தும் புலம்புவதேயில்லை.  பல சமயம் எனக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க வீட்டில் ஒன்றுமேயிருக்காது.  அவசரமாய் பக்கத்து டீக்கடையில் ஏதோ ஒன்றை வாங்கி பொட்டலத்தை என் பையில் திணித்து அனுப்பி வைத்து விடுவார். அம்மா என் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் பல சமயம் என் பசியை போக்கியிருக்கிறது." 

"நானும் அம்மாவைப்போலவே இருக்க முயற்சிப்பேன்.  ஆனால் என் முகவாட்டம் அவருக்கு என் எண்ணங்களை காட்டி கொடுத்து விடும். பள்ளியில் மற்றவர்கள் அணிந்து வரும் உடைகளும், தோழிகளின் அலட்டல் பேச்சுக்களையும் வந்து சொல்லும் போது அம்மா ஒரே வார்த்தையில் சொல்லுவார்."

"உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நம்முடைய ஆசைகளைப் போலவே.  ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி வேண்டும். நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு.  உன் கவனத்தை வேறு எதிலும் மாற்றாதே" என்பார். 

எனக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மனதுக்குள் மறுகிக் கொள்வேன்.

"வீட்டில் அப்பா உருவாக்கும் ஒவ்வொரு சண்டைகளுக்கு வெவ்வேறு காரணங்கள்.  ஆனால் மொத்தமாக பார்த்தால் அவரின் ஆண்மையற்ற வீராப்பு தான் முதன்மையாக இருக்கும்.  ஓமக்குச்சி நரசிம்மன் போல உள்ள தோற்றத்தில் அவரின் குடியும் பீடிப்பழக்கமும் நிரந்தர நோயாளியைப் போலவே வைத்திருக்க அம்மாவின் வசீகரத்தை அவர் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்."

"எனக்கு இது மெதுவாக புரிந்தாலும் அம்மாவிடம் கேட்க முடியாது.  கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஒரே வார்த்தையில் என்னை அடக்கி விடுவார்.  

"ஆம்பிளைங்றவங்க முன்னபின்ன தான் இருப்பாங்க.  அது என்பாடு.  உன்னோட வேலை படிக்கிறது மட்டும் தான்.  அதில் மட்டும் கவனமாயிரு" என்று அது குறித்து தொடர்ந்து பேச விடமாட்டார்.  பல முறை என் தம்பியே என் புத்தகங்களை ஒழித்து கிழித்து வேறு பக்கம் தூக்கி எறிவது வரைக்கும் நாங்கள் இருவருமே வீட்டுக்குள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்தோம்.  

பலமுறை அம்மாவுடன் சண்டை போட்டுருக்கின்றேன்.  " எங்கேயாவது போய் விடுவோம்.  இந்த நரகம் போதுமென்று" அழைத்த போதிலும் அம்மா தெளிவாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 

" இக்கரைக்கு அக்கறை பச்சை.  நீ நினைப்பது போல பெண்கள் தனியாக வாழ்வது சுலபமில்லை.  படிப்பது, வாசிப்பது, கேட்பது என்பதற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்யாசத்தை நீ போகப் போக புரிந்து கொள்வாய்" என்று அன்பாக மிரட்டி மாற்றி விடுவார். 

 "அப்பாவின் ஒரே பிரச்சனை அவரின் தாழ்வு மனப்பான்மை.  அவரால் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.  அவரின் தொடர்ச்சியான தொழில் தோல்விகளும், இழந்த சொத்துக்களும், உடல்நலம் குன்றியது என்று எல்லாநிலையிலும் அம்மா கூடவேயிருந்தார்.  ஆனால்...................."

நிறுத்திவிட்டு என்னை பார்த்து புன்னகைத்தார். 

இப்போது ரயில் இடையில் வந்து கொண்டுருந்த மற்றொரு ரயிலுக்காக இருட்டுக்குள் நின்று கொண்டுருந்ததை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கழிப்பறைக்கு செல்பவர்கள் வந்து சிலர் எங்களுடன் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுருநத்ர்கள். அவரின் பேச்சு தடைபட்டது. எங்கள் இருவரையும் கவனித்த சிலர் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டுருந்தார்கள்.  எதுவும் நடக்கின்றதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவர்களும் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். 

ரயில் நகரத் தொடங்கியது.  தொடர்ந்தார்.

"ஒரு தடவை அப்பா உடம்பு சரியில்லாம வீட்டுக்குள் இருமிக்கிட்டே படுத்துருந்தார். நான் வெளியே திண்னையில் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்தேன்.  அப்பாவின் தொடர்ச்சியான இருமல் கேட்க நான் வேகமாக உள்ளே ஓட அம்மா என்னை தடுத்து படிக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.  அப்பாவின் கோப வார்த்தைகளும், அவர் இருமலை மீறி அம்மாவிடம் சண்டை போடுவது வரைக்கும் என்னால் கேட்க முடிந்தது.  சற்று நேரம் மயான அமைதி.  ஆனால் அம்மா என்னை நோக்கி வெளியே வந்த போது கையில் என்னுடைய பள்ளிக்கூட பைக்கட்டு மூட்டைகளுடன் மற்றொரு சிறிய பையில் தேவையான துணிகளும் இருந்தது..

" இனி இந்தாளுகூட வாழமுடியாது. வா நாம வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்வோம்" என்று என் பேச்சை எதிர்பார்க்காமல் என் கையை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தார்.  வந்து நின்ற பேரூந்தில் ஏறி ரயில்நிலையத்துக்கு வந்தோம். 

அது கோயமுத்தூர் செல்வதாக அருகே இருந்தவர்கள் சொன்னார்கள்.  டிக்கெட் கூட எடுக்காமல் அமர்ந்திருந்த அம்மாவை அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல பார்த்தேன். 


காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது.  இதுவரைக்கும் அம்மாவின் முகத்தில் நான் கோபத்தின் சாயலைக்கூட பார்த்ததில்லை, ஆனால் இப்போது முற்றிலும் புதிய மனுஷியாக தெரிந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்ட போது "சமயம் வரும் போது சொல்கின்றேன்" என்று தன்னை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தார். 

ரயில் ஓடத் தொடங்கியது.  எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.

Sunday, November 28, 2010

கதை சொல்லும் நேரமிது

நாகரிக வாழ்க்கை தோன்றியிராத ஆதிவாசிகளுக்கு உரையாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க அவர்கள் எழுப்பிக் கொண்டுருந்த சப்தங்களே போதுமானதாக இருந்துருக்கக்கூடும்..  ஓஓஓஓஓ........ ஆஆஆ....... போன்ற சப்தங்களே அவர்களின் வாழ்க்கை முழுக்க பரவியிருந்தது. இந்த சப்தங்களே அவர்களின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான உரையாடல்களை ஒழுங்கு படுத்தியிருந்தது. 

தாங்கள் வாழ்ந்த குகை போன்ற அமைப்பில் இருந்த பெண்களுக்கு வேட்டைக்குச் சென்ற தங்களுடைய தலைவன் திரும்பி வரும் வரைக்கும் எவருடன் பேசியிருப்பார்கள்? ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்த அந்த பேரமைதி அவர்களுக்கு எதை கற்றுக் கொடுத்துருக்கும்?

உரையாடல் கலை நாகரிகத்தை விரைவுபடுத்தியிருக்கிறது என்ற உண்மையைப் போலவே அவஸ்யமற்ற உரையாடல் இரு நாடுகளை பகையாளியாகவும் மாற்றி விடுகின்றது என்பதும் உண்மை தானே? 

சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்? 

கடி எழுத்துக்களை சொந்தம் கொண்டாடும் மனிதர்கள் விரும்பும் நொடி நேர புகழ் வரைக்கும் தறி கெட்டு தனக்காக கூட்டத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படித்தான் இந்த உரையாடல் கலை இன்றைய தினத்தில் பன்முகத் தன்மையோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. பல வித அர்த்தம் கற்பித்து தரங்கெட்டும் போகத்தொடங்கி விடுகிறார்கள்..

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரையாடல் என்பது கலை மட்டுமல்ல.  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையை உருவாக்குவதாக இருக்கிறது.  அதுவும் எதிரெதிர் பாலினம் என்றால் கரம் சிரம் புறம் பார்க்க வேண்டியதாய் உள்ளது.  கண்கள் எங்கே கவனிக்கிறது என்பதில் தொடங்கி பேசும் கருத்துக்கள் எங்கங்கே தாவுகின்றது என்பது வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் மறைமுக கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஏறக்குறைய அவஸ்த்தை உரையாடல்களை தாண்டி தங்களுக்கான இருப்பை இருவருமே தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

பாலியல் தொழிலாளியின் மகள் என்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என் கண்களையே பார்த்துக் கொண்டுருந்தார். எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை.  நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.  

ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம்.  அத்தனையையும் கவனித்து பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது.  ஆனால் என்னுடைய பார்வையில் வேறுவிதமாக தெரிந்தார்.  

ஒரு அமைப்பை உடைத்து வந்த புதிய மனுஷியாகவே தெரிந்தார்.  ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள வில்லை.  காரணம் அவர் என்னை இப்போது அதிகமாக கவனித்துக் கொண்டுருப்பது தெரிந்தது. 

அவர் நான் என்ன செல்லப் போகின்றேன் என்பதில் ஆர்வமாய் இருப்பது போல தெரிய நான் பேச்சை மாற்றுவதில் குறியாக இருந்தேன்.

"சரிங்க. அப்புறம்?" என்று பொதுவாக பேசிவைக்க அவர் முகம் மாறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பட்டென்று வெடித்தார்.

"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "  என்றார்.

உரையாடல் தடம் மாறிக்கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். கேட்க விருப்பமில்லையென்றாலும் பிரச்சனை.  கேட்டாலும் உச் கொட்டியே ஆக வேண்டிய அவஸ்யம்.  இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாமென்று பேசத் தொடங்கினேன்.

"நாம் ரெண்டு பேரும் கடந்த இரண்டு மணி நேரமா பேசியிருப்போம. அதற்குள் உங்களின் முப்பது வருட அனுபவத்தையும் நான் எப்படி புரிந்து கொண்டுருப்பேன்னு நினைக்கிறீங்க?" 

அவர் பதில் சொல்ல எத்தனிக்க அமைதி படுத்தி விட்டு தொடர்ந்தேன்.

"ஒரு நாடு அல்லது ஒரு தலைவனின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டால் நமக்கு எத்தனையோ விசயங்கள் கிடைக்கும்.  உங்களின் சோகம், துக்கம் போன்றவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன பெரிதான பிரயோஜனம் இருக்கப் போகின்றது.  குறைந்தபட்சம் நீங்கள் சொன்னமாதிரி ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்த புரிந்துணர்வு உள்ள ஆணாக நான் தெரிவதால் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிட பாக்குறீங்கன்னு நினைக்கின்றேன்."  

"நீங்களே உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் போய் சொல்லிப்பாருங்க. யாரும் நம்ப மாட்டாங்க.  நானே போய் ஒரு பெண் அறிமுகமான கொஞ்ச நேரத்தில் சொந்தக் கதை சோகக்கதையை பகிர்ந்துகிட்டார்ன்னு யார்க்கிட்டேயும் சொல்லமுடியுமா?  நான் சொன்னாக்கூட என் நண்பர்கள் என்ன சொல்வார்கள்.  பெண் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடைசியில் என்ன நடந்தது என்று வேறு வித அர்த்தத்தில் கேட்டு அர்த்தபுஷ்டியாய் பார்ப்பார்கள்" என்றேன்.

அவரின் வேகம் மட்டுப்பட்டது போல் தெரிந்தது. 

சற்றுநேரம் வெளியே ஓடிக் கொண்டுருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டுருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவர் கண்களில் வடிந்து கொண்டுருந்த நீரைப் பார்த்து சற்று தர்மசங்கடமாக இருந்தது. 

காயப்படுத்தி விட்டோமோ? என்று ஆற்றாமையாக இருந்தது. மனம் முழுக்க இருந்த அவரின் ஆதங்கத்தை ஏதோவொரு வழியில் இறக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஏராளமான அவஸ்த்தையான சிந்தனைகள் அவருக்குள் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவரின் கண்ணீரைக் குறித்து கேட்டாலோ அது இன்னமும் அதிகப்படுத்துவதாக மாறிவிடும். 

அழுகை என்பது எனக்குப் பிடிக்காத விசயம்.  அதுவும் பெண்கள் கண்களில் இருந்து பொல பொலவென்று வரும் கண்ணீர் எனக்கு எப்போதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பாமல் இருக்கைக்கு திரும்பி வந்து பைக்குள் வைத்திருந்த திண்பண்டங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.  

"எனக்கு நொறுக்குத்தீனி பழக்கமுண்டு.  உங்களுக்குண்டா?" என்றேன்.

நான் அவரை இயல்பு நிலைக்கு மாற்று விரும்புவதை புரிந்து கொண்டு சிரித்து விட்டார். நான் நீட்டியதில் இருந்து முறுக்கை எடுத்துக் கொண்டார்.

மெதுவாக அவரை இயல்பு நிலைக்கு மாற்றி முடிந்த போது அவரின் கதை சொல்லும் நேரமும் தொடங்கியது.

"நம்முடைய முன்னோர்கள் குறித்து நமக்குள் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும்.  ஆனால் எனக்கு முன்னால் என் குடும்பத்தில் இருந்த மூன்று தலைமுறைகளைப் பற்றி தெரிந்த போது வியப்பாகத்தான் இருந்தது. காரணம் எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தவறாமல் வந்து கொண்டுருந்த குடிப்பழக்கம்.


தாத்தாவின் அப்பாவுக்கு கள்ளு என்றால் கொள்ளைப்ப்ரியம். ஆனால் தாத்தாவிற்கு சாரயமே போதுமானதாக இருந்தது.  ஆனால் என் அப்பாவுக்கு விஸ்கியை குடித்தால் தான் பொழுதே விடியும். அந்த அளவிற்கு மொடாக்குடியராக இருந்தார்." 

"எங்களின் குலத்தொழிலே இந்த துணிகளோடு தான் இருந்தது. கைத்தறி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரைக்கும் தாங்களே வடிவமைப்பு செய்வது வரைக்கும் தொழில் ரீதியாக நல்ல நிலையில் தான் மூன்று தலைமுறையும் இருந்தது.  ஆனால் அப்பாவிடம் தொழில் வந்த போது உருவான தொழில் போட்டிகளிலிருந்து அவருக்கு மீண்டுவரத் தெரியவில்லை. அவருக்கு மற்றொரு பிரச்சனை. என் அம்மாவின் அழகு.  எங்கள் வீட்டுக்கு எவரும் எளிதில் வந்து விட முடியாது.  அப்பா தொழில் மேல் வைத்திருந்த கவலைகளை விட அம்மா குறித்து தனக்குள் வைத்திருந்த மாய பிம்பங்கள் தான் அதிகமாகயிருந்தது.  அதுவே எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்ற மாய வலைக்குள் அப்பாவை சிக்க வைத்துவிட்டது. என்னுடைய பள்ளி காலங்களில் ஒவ்வொரு நாளும் அம்மாவின் காயங்களைப் பார்த்தபடியே தான் சென்று கொண்டுருந்தேன்.  அதன் தாக்கம் என்னை பலவிதங்களிலும் படுத்தி எடுத்தது.  என்னுடைய ஒரே தம்பியிடம் கூட இவற்றை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவனும் ஏறக்குறைய அப்பாவின் மறு உருவமாகவே இருந்தான்." 

"பெண் என்பவள் அடுக்களைக்குள் இருப்பவள் என்ற அவர்களின் ஆணாதிக்க கருத்தை என்னால் உடைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது.  எந்த பிரச்சனைகளையையும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்." 

"அவரின் நோக்கமெல்லாம் என்னை கல்வி ரீதியாக மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல பத்தாவது வந்த சேர்ந்த போது என்னைச் சுற்றி வந்து கொண்டுருந்த பையன்களின் பேச்சும் செயல்பாடுகளும் அப்பாவை ரொம்பவே யோசிக்க வைக்க என் படிப்பையும் நிறுத்தி விட்டார்."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். 

நான் கூர்ந்து கவனிக்கிறேனோ என்பதை கவனிப்பது புரிந்தது. எந்த வியப்புக்குறியும் எனக்குள் இல்லாததைப்பார்த்து அவரின் முகத்தில் வித்யாச ரேகைகள் தெரிந்தது.  நான் கவனித்த போதிலும் வெறுமையாக போலித்தனமாக சிரித்து வைத்தேன்.  ஆறுதல் சொல்வேன் என்று நினைத்துருப்பாரா தெரியவில்லை. ஆனால் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரின் கேள்வி உணர்த்தியது.


"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்

நான் பதில் சொல்ல முயற்சிப்பதற்குள் "என் அப்பா குணாதிசியத்தை தெரிந்து கொண்டு அப்புறம் உங்கள் கருத்தைச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அப்பாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அது பாஸ்பரஸ் குண்டாக இருந்தது.

Saturday, November 27, 2010

பெண் நட்பூ

நட்பு, தோழமை, ப்ரியம், பரஸ்பர புரிந்துணர்வுகள் போன்ற பல வார்த்தைகள் சம காலத்தில் வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளர்களாக மாறி வரும் உலகில் புனிதமான உறவுகளுக்குண்டான அர்த்தங்களும் மாறிக் கொண்டே வருகின்றது..

ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொள்வது முதல் பாரபட்சம் காட்டும் பெற்றோர்கள் வரைக்கும் அவரவருக்குண்டான அவஸ்ய தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு போலித்தனமாக முகமூடி அணிந்து கொண்டு தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். 


ஒவ்வொரு சமயத்திலும் பள்ளி முதல் கல்லூரி வரையிலுமான நான் பழகி வந்த நண்பர்களை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு.  முதல் வகுப்பு முதல் பத்து வரைக்கும் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்த கோவிந்தராஜனை விட ஒன்பதில் அறிமுகமான மாதவனுடன் அதிகம் நெருக்கமாய் பழகி ஆழமான வேருடன் கிளை பரப்பி நிற்க முடிந்துருக்கிறது.  அதுவே இருவரையும் பல நிலைகளிலும் ஒன்று சேர வைத்திருக்கிறது. இடையில் புகுந்த சிலரால் இருவரையும் பகையாளியாகவும் மாற்றி இருக்கிறது.

அற்ப காரணங்கள் இருவரையும் புரட்டிப் போட்டு தடம் மாறி வெவ்வேறு பாதையில் போய்க் கொண்டுருந்தாலும் இருவரிடத்திலும் இருக்கும் ஆழமான அன்பு மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. இருவருமே இன்று வரையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொண்டுருந்த போதிலும் கூட.

அவனுடன் கடந்த பத்து வருடங்கள் பேச்சு வார்த்தை இல்லையென்ற போதிலும் ஊரில் இப்போது கூட மற்றவர்களிடத்தில் " ஏன்டா அவன் என்னமோ எழுதிக்கிட்டு இருக்கானாம்ல" என்று மற்றவர்களிடம் கேட்டு இந்த வலைதளத்தை படிக்க முடியா சூழ்நிலையில் வேறொரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அங்கலாய்ப்பது வரைக்கும் அவனின் ஏக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. ஆனால் அளவாய் நிதானமாய் என்னுடன் இருந்த கோவிந்த்ன் இந்த வலை எழுத்துக்களை சமீபத்தில் உள்நுழைந்து படிக்க ஆரம்பிக்க இன்று "உன்னை நினைத்து பெருமையாய் இருக்கு" என்பது வரைக்கும் புரிந்துணர்வாய் தொடர்ந்து கொண்டுருக்கிறான். 

எந்த இடத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத போது உருவாகும் அன்பு என்பது சாகும் வரைக்கும் நம்மோடு தான் இருக்கும். சாசுவதமென்பது நம் கையில் மட்டுமே.  சாகாவரம் கூட நம்முடைய வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது..பழமொழிகள், அறிவுரைகள் என்பதைவிட ஒவ்வொருவரின் அனுபவங்கள் கொடுக்கும் பாடத்திற்கு இணையான வேறு ஏதும் உலகில் உண்டா?

இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்..  திரைப்படம், பாடல்கள், ஓவியம், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மற்ற கெட்ட பழக்கங்கள் என்று ஒரே பாதையில் இரு நபர்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. 

நான் ரயில் பயணத்தில் சந்தித்த பெண்ணுக்கும் எனக்கும் முன் பின் பழக்கமோ வேறெந்த வகையிலும் அறிமுகமோயில்லை.அவருடன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானதற்கு முக்கிய காரணம் திருப்பூர். 

திருப்பூர் சார்ந்த நபர் என்றதும் அந்த எண்ணம் இயல்பாகத் தோன்றியது. நான் பேசத் தொடங்கியதும் அதுவே தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டு செல்ல இந்த ஆடை உலகமே காரணமாக இருந்து.

அரட்டை என்பதில் தொடங்கி இருவருக்குள்ளும் இருந்த ஏராளமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது வரைக்கும் முடிவில்லாத நிலையாக போய்க் கொண்டுருந்தது. அவர் என்னைப் பற்றி விசாரித்து முடித்ததும் அவரின் அறிமுகம் தொடங்கியது. அப்போது தான் அவரின் தற்போதைய நிலை குறித்து புரிந்து கொள்ள முடிந்தது 

அவரின் பெயர் நாகமணி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகள் பிரிவின் இந்திய பிரதிநிதியாக பணியாற்றிக் கொண்டுருக்கிறார். .உலக நாடுகளை சுற்றி வருவதென்பது இவரைப் போன்றவர்களுக்கு உள்ளூர் சுற்றுவது போல. வாங்கும் சம்பளம் பெரும்பாலும் அமெரிக்கன் டாலரில் தான் இருக்கும்.  வரி பிரச்சனையில்லாத வாழ்க்கை.  வாங்கும் சம்பளத்தை வசதிக்ளுக்காக தொலைக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் எல்லாவிதங்களிலும் வீடு தேடி வரும் வாழ்க்கையை பெற்றவர்.

இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போலவே இங்கு நடந்து கொள்வார்கள்.

இரண்டு காரணங்கள். 

ஒன்று இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவரைப் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.  மற்றொன்று இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஒத்ததாகவே இருக்கும்.  நம்மவர்களுக்கு பிடிக்க சொல்லவா வேண்டும்.  வாய் கொப்பளிக்கக்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேட்கும் இவர்களின் நடவடிக்கைகள் நான் ஏற்கனவே அறிந்ததே.

என்னுடைய அனுபவத்தில் வட நாட்டு இந்தியர்களைத் தான் இது போன்ற பதவிகளில் அதிகம் பார்த்துருக்கின்றேன். நம்மவர்கள் இருந்தாலும் அல்லக்கை நொல்லக்கை போலவே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரும் டெல்லி மும்பாயிலிருந்து பல ஆண்டுகள் திருப்பூர் வந்து போய்க் கொண்டு இருந்தாலும் அல்லது இங்கேயே அலுவலகம் வைத்திருந்தாலும் வாயிலிருந்த ஆங்கிலம் மட்டுமே கொப்பளித்துக் கொண்டுருக்கும்.

தமிழ் பேசத் தெரிந்தாலும் மறந்தும் கூட வந்து விடாது.  ஆனால் தனக்கான பிச்சைக்காசை கேட்கும் போது குழைவில் வரும் மழலைத் தமிழைக் கேட்க நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

ஆனர்ல் அந்த பெண்ணின் உரையாடல் அவரின் பதவி குறித்து நான் மனதில் வைத்திருந்த அத்தனைக்கும் எதிர்மாறாய் இருந்தது. 


அவர் பேசிய வார்த்தைகளில் அவஸ்யமில்லா தருணங்களைத் தவிர ஆங்கில வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு பாசாங்கு இல்லாமல் பேசிக் கொண்டுருந்தார்.

எங்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்த மற்ற நான்கு பேர்களும் வயதானவர்களாக இருந்த காரணத்தால் அவர்களின் உறக்கம் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் அவர் மடை திறந்த வெள்ளம் போல உற்சாகமாக ஒருக்களித்து படுத்தபடியே என் முகம் பார்த்து பேசிக் கொண்டுருந்தார்.  ரயில் பெட்டியின் உள்ளே எறிந்து கொண்டுருந்த மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் அவரின் கற்றை சுருள் முடிகள் புதுக் கவிதைகளை எழுதிக் கொண்டுருந்தது. அவரின் இயல்பான தமிழும் எதார்த்தமான வார்த்தைகளும் எனக்குள் இருந்த அவர் குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.  

பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் தந்திரங்கள், தரம் குறித்த எதிர்பார்ப்புகள், திருப்பூரில் வாழ்ந்தவர்களின் சரித்திரங்கள், வீழ்ந்தவர்களின் தரித்திர பட்டியலுமாய் இருவரின் பேச்சுகளும் தண்டவாள ரயில் போல ஓரே மாதிரியான சீரான வேகத்தில் ஓடிக் கொண்டுருந்தது. அவரின் உலக அறிவுக்கும் என்னுடைய உள்ளூர் அறிவுக்கும் பெரிதான இடைவெளிகள் தோன்றாமல் இருக்க இருவருமே மனதிற்குள் வியப்புக்குறியை குறித்துக் வைத்துக் கொண்டுருந்தோம். 

பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 

சொந்த வாழ்க்கை பகிர்தல் தொடங்கியது. வெவ்வேறு பாலினமாக இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கை இருவருக்கும் பொதுவானதாக இருக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியாய் இருந்தது. 

குடும்பம், குழந்தைகள் என்று பேசத் தொடங்கிய போது அவரின் முகமும் மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் தொடர விரும்பியதும் அவராக இருந்தாலும் தொழில் குறித்து உரையாடிய போது இருந்த அவரின் வேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.  நான் உணர்ந்து ஒதுங்க நினைத்த போதிலும் பெண் குழந்தைகள் என்றதும் அவர்களைப் பற்றி மிக ஆர்வமாய் விசாரிக்கத் தொடங்கினார். இது போன்ற குறுகிய பயணங்களில் உருவாகும் நட்பென்பது வினோதமானது.  சில சமயம் வீபரீதம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடும். 

ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் ஒரு விமான பயணத்தில் தன அருகே அமர்ந்திருந்த பெண்ணுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவே அமெரிக்காவின் பிரபல்ய கட்டிடத்திற்கு கிரானைட் கல் பதிக்கும் ஒப்பந்தம் கிடைத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்து மற்றொருமொரு விபரீத சம்பவம் இந்த சமயத்தில் என் நினைவில் வந்து போனது. 

என்னுடைய நண்பர் நாககோவிலிருந்து திருப்பூருக்கு வந்து கொண்டுருந்தார். பேரூந்து இருக்கையில் அவர் அருகே அமர்ந்த நபரும் திருப்பூர் என்பதால் இருவரும் மிகுந்த சந்தோஷமாகவே பரஸ்பரம் பலவற்றையும் பறிமாறிக் கொண்டு வந்து இருந்திருக்கிறார்கள். . பகவான் வேறொரு வகையில் தன் விளையாட்டை தொடங்க ஆரம்பித்தது வினை. 

என்னுடைய நண்பர் பேச்சு வாக்கில் தனக்கு பிடித்த ஸ்டார் நடிகர் பெயரை வெகு சிலாக்கியமாக பேச பேரூந்தில் அறிமுகமானவருக்கும் பயங்கர சந்தோஷம்.  காரணம் அவர் அந்த நடிகரின் வெறியர்.  கேட்கவா வேண்டும்.  சொந்தக் கதை சோகக்கதையிலிருந்து தடம் மாறி அந்த ஸ்டார் நடிகரின் கதையின் உள்ளே நுழைய இருவரும் கட்டிபிடி வைத்தியர்களாக மாறிவிட்டனர். இடையே ஒரு பேரூந்து நிறுத்தத்தில் வண்டி நின்றது.  அறிமுகமான நண்பர் கட்டாயப்படுத்தி என் நண்பரை உள்ளே இருந்த டாஸ்மார்க் கடைக்கு அழைத்துச் செல்ல இருவரும் உற்சாகத்தில் மிதக்க அவர்கள் வந்த பேரூந்து இவர்களை காணாமல் கிளம்பி விட்டது.  

அடித்த மப்பில் இருவரும் நடிகரைப் பற்றி பேசிக் கொண்டே செல்ல என் நண்பர் தெரியாத்தனமாக ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.  ஸ்டார் நடிகரின் பழைய வாழ்க்கையில் திருச்சி விமான நிலையத்தில் அந்த நடிகர் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை பேசத் தொடங்கி விட மப்பு உச்சத்தில் இருந்த நண்பருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. வாக்குவாதம் தொடங்கி, தொடர்ந்து முற்றி முடிந்த போது ஐந்து நிமிடத்தில் உடைத்த பீர் பாட்டில் என் நண்பரின் கையில் நுழைய உயிர் தப்பினால் போதும் என்று திருப்பூர் வந்து சேர்ந்தார். 

நான் கேட்டு முடித்த போது நண்பர் வருத்தப்படுவாரே என்று வெளியே வந்து சிரித்து விட்டு மீண்டும் மீண்டும் அடக்க முடியாமல் வாயில் தண்ணீர் குடிப்பது போல நடித்து புரையேற்றத்துடன் அவர் அருகில் நின்று ஆறுதல் சொன்னேன். இதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வேறு விதமாக கேட்டேன். 

"உங்களுக்கு நிச்சயம் காலையில் நிறைய வேலைகள் இருக்கும்.  தூங்குங்களேன்" என்றேன்.

அதற்கு அவரின் பதில் வேறுவிதமாக இருந்தது.

"அது என்ன உங்கள் குடும்பத்தைப் பற்றி பேசி விட்டு என் குடும்பக் கதையைக் கேட்க விரும்பமில்லையா?" என்றார்.

ஆமாம் இல்லை என்று சொல்லத்தெரியாமல் மையமாக புன்னகைத்தேன்.
அவரே தொடர்ந்தார். 


"உங்களுக்கு விருப்பம் என்றால் வாசல்படிக்கு அருகே சென்று பேசலாமா?" என்றார்

பயமும் படபடப்புமாய் ரயில் பெட்டியின் இரண்டு வாசலுக்கும் நடுவில் எதிர் எதிரே நின்று கொண்டுருந்தோம்.  

ரயிலின் வேகம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. இரண்டு பக்கமும் வெளியே தெரிந்து கொண்டுருந்த வெளிச்சம் இருட்டு, ரயில் சத்தம், என்று அத்தனையும் ஒரு கணம் என் காதில் கேட்கவில்லை.  காரணம் அந்த பெண்மணி வீசிய வெடிகுண்டு.

வெடிகுண்டு வந்து என்னைத் தாக்கியது.

"என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்..