Showing posts with label 2012 நினைவுகள். Show all posts
Showing posts with label 2012 நினைவுகள். Show all posts

Sunday, December 30, 2012

திரும்பிப் பாரடா 2012 - மகிழ்ச்சி அறிவிப்பு


11.கனவாகிப் போய்விடுமோ என்று கவலைப்பட்ட டாலர் நகரம் என்ற புத்தகம் ஜனவரி மாதம் வெளியாகின்றது.  மிக அழகாக நேர்த்தியாக, வண்ண புகைப்படங்களுடன் சேர்த்து ஆவணம் போல 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் இதனை கொண்டு வருகின்றது. 27 அத்தியாயங்களுடன் திருப்பூர் சார்ந்த படங்களுடன் வருகின்றது.  சமீப காலமாக புத்தகத்திற்கு எவரும் படங்கள் போடுவதில்லை.

ஆனால் இந்த படத்தோடு படிக்கும் போது தான் உண்மையான திருப்பூருக்குள் உலாவிய திருப்தி கிடைக்கும். புத்தக வடிவில் ஏறக்குறைய 360 பக்கங்கள் வரக்கூடும். மிக அழகாக சுருக்கப்பட்டு வாசிப்பவனை நகர விடாது தொடரச் செய்யும் திரு மலைநாடன் இதில் காட்டிய உழைப்பு மகத்தானது. இத்துடன் மற்றொரு சிற்பியும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பற்றிய முழுவிபரங்களை அறிவிக்கின்றேன்.

12,.பலருக்கும் இந்த தொடர் சென்று சேர்ந்துள்ளது. தினந்தோறும் என் தளத்திற்கு வருபவர்கள் என் தளத்தின் கீழே உள்ள டாலர் நகரம் படத்தின் வாயிலாக 4 தமிழ்மீடியா தளத்திற்கு சென்று கொண்டிருப்பதை கவனிக்கும் போது தேடல் உள்ளவர்களை இந்த வலையுலகம் அதிகம் பெற்றுள்ளது என்பதை உண்ர்ந்தே வைத்துள்ளேன். ஜனவரி மாதம் 2013 இறுதியில் இதற்கான விழா நடைபெறுகின்றது.  இந்த விழாவின் மூலம் மேலும் சில நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றது.

இது குறித்த முழுமையான விபரத்தை விரைவில் வெளியிடுகின்றேன்.

நண்பர் ராஜநடராஜன் அடிக்கடிச் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் திருப்பூர் தொழில் சம்மந்தபட்ட அத்தனை பேர்களிடமும் சென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் பல முறை விமர்சனங்களில் தெரிவித்துருப்பதை அடிப்படையாக வைத்து திருபபூருக்குள் இந்த புத்தகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்படி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் ஆதரவு அளிக்க கோருகின்றேன்.

13.இந்த வருடத்தில் எனக்கு அறிமுகமான வலைஉலகத்திற்கு  தெரியாத இரண்டு மனிதர்கள் உண்டு. 

ஒன்று திரு.சங்கர நாரயணன். இவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்து இங்கே பணிபுரிந்துவிட்டு தற்போது ஒரிஸ்ஸாவில் கட்டுமான தனியார் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருக்கின்றார். 

இவர் திருப்பூர் சாயப்பட்டறை முதல் தான் படித்த கேட்ட அத்தனை நல்ல மற்றும் அக்கிரம நிகழ்வுகளையும், கட்டுரைகளையும் அவர் சார்ந்த குழும மின் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்பவர். நான் கூகுள் ப்ளஸ் ல் வெளியிடும் படங்களில் பெரும்பான்மையாக இவர் எனக்கு அனுப்புவதே. அத்துடன் குறிப்பிட்ட பிரச்சனைகளை எவர் எவருக்கு அனுப்பி அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை இவர் மூலம் தான் கற்றுக் கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் உள்ள அத்தனை அதிகார வர்க்கத்தினரை துவைத்து காயப் போட்டு கதறடித்து வருகின்றார். அற்புதமான புத்திசாலி. ஆனால் நம்மவர்கள் என்ன சாதாரணமானவர்களா? ஆணி அடித்தால் கூட ரத்தம் வராத அளவுக்கு தோல் பெற்ற பாக்கியவான்களாச்சே. இவர் அறுபது வயதை கடந்தாலும் இவர் தேர்ந்தெடுத்து வாசிக்கும் தளத்தையும் அதில் அவர் வைக்கும் விமர்சன பாங்கையும் நான் கற்றுக் கொள்ள இன்னும் நாலைந்து வருடங்கள் ஆகும்.

14.அடுத்து திரு. லஷ்மணன் அவர்கள்.  சேலத்தைச் சேர்ந்தவர். இவரும் தொழில் நுட்ப பட்டப் படிப்பு முடித்து வெளிநாடுகளில் பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது சேலத்தில் அற்புதமான கலையம்சம் மிகக வீட்டில் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன்  அமைதியான வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருப்பவர். வாழ்வின் இறுதிக் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொண்டேன். அவர் வீட்டைப் பார்த்தவுடன் காரைக்குடி பக்கம் உள்ள வீடுகள் தான் என் நினைவுக்கு வந்தது. வீட்டின் வடிவமைப்பும் இவரும் மற்றும் இவர் குடும்பத்தினரே.

இவர் 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியான காக்க காக்க நோக்க நோக்க என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.இவர் மூலமாகத்தான் திரு. சங்கர நாராயணன் அறிமுகமானார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு சமயத்தில் படித்தவர்கள். ஒத்த வயதுள்ளவர்கள். இவர் படிக்கும் பல தளங்களை குழும மின் அஞ்சல் வழியாக தினந்தோறும் அனுப்பிக் கொண்டேயிருப்பார்.  வேலைகளுக்கிடையே என் வலையுலக வாசிப்பு என்பது இது போன்ற சுட்டிக்காட்டல் மின் அஞ்சல் மூலமாகத்தான் பார்க்கப்படுகின்றது. பகிரப்படுகின்றது. இரண்டு என்சைக்ளோபீடியாக்கள் எனக்கு நண்பராக இருந்தது இருபப்து இந்த வருடத்தின் மகத்தான் அங்கீகாரம்.

15.இந்த வருடத்தில் டீச்சர் திருமதி துளசி கோபால் அவர்களை சென்னையில் நடந்த அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் பார்க்க பழக முடிந்தது. இந்த வருடத்தின் சிறப்பான தருணம் அது.  என் மேல் அதிக அக்கறை கொண்ட கோவி கண்ணன் அவர்கள் திருப்பூர் வந்து சந்தித்தது எனக்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான தருண்ம். கடந்த இரண்டு வருடங்களில் என் எழுத்துக்கு மரியாதையை உருவாக்கி எங்கள் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினராக ஆன 4 தமிழ்மீடியா ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களுக்கு என் நன்றியை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. 

16.என்னை சந்திக்காமலேயே என்னிடம் காட்டும் அக்கறைக்கு தமிழ்வெளி குழலிக்கு என் மனமார்ந்த நன்றி. தமிழ்மணம், இன்ட்லியில் மட்டுமே என் பதிவுகளை இணைக்கின்றேன். சில சமயம் தமிழ் 10 தளத்தில் சேர்க்க நேரம் கிடைக்கின்றது.தமிழ்வெளி இயல்பாக இணைந்து விடும் வசதியை உருவாக்கியுள்ளார்.

இவர்கள் இல்லாவிட்டால் தேவியர் இல்லம் என்பது உலகத்திற்கு சென்று சேர்ந்திருக்காது. 

17.டாலர் நகரம் என்பது கடந்த 20 வருட திருப்பூர் என்ற ஊரின் மாறுதல்கள், நிறுவனங்களுக்கு பின்னால் உள்ள புரிதல்கள், இந்த ஊரை ஏற்றுமதி என்ற ஒரு வார்த்தை எப்படி மாற்றியது. இந்த ஊரில் உள்ள தொழில் வாய்ப்புகள் என்று என்னுடைய அனுபவங்கள் மூலம் உண்மைக்கருகே நெருங்கிப் பார்க்கும் சுவராசிய நடையில் எழுதப்பட்ட பதிவுகளின் சுருக்கம். இந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவர்களுக்கும்,  ஆனால் இந்த ஊரின் உள்ளே இருந்து கொண்டு  முழுமையான தகவல்கள் தெரியாமல் வாழ்பவர்களுக்கும் இந்த புத்தகம் உதவக்கூடும். . 

18, டாலர் நகரத்தில் முடிந்தவரைக்கும் அனைத்தையும்  எழுதி விட்டோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாய்பபட்டறைகளின் மூலம் உருவான பிரச்சனைகள்,அதன் உண்மையான விசயங்கள், பிரச்சனைகள் விஸ்வரூபம்  எடுத்ததும் திருப்பூர் சந்தித்த சவால்கள், மாறிய திருப்பூர், அதன் பின்னால் வந்த மாறுதல்கள் என்பதை இதில் சேர்க்காமல் இருந்தேன்.

ஆனால் எதிர்பாரதவிதமாக புதியதலைமுறை ஆசிரியர் திரு. மாலன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எழுத அதுவும் அந்த இதழில் கவர் ஸ்டோரியாக வந்தது. அதற்குப் பிறகு ஆழம் பத்திரிக்கைகாக திரு. மருதன் கொடுத்த வாய்ப்பின் மூலம் தற்போதைய திருப்பூரின் நிலவரத்தையும், வெகு அருகே வந்துவிட்ட அந்நிய முதலீடு குறித்தும் எழுத முடிந்த காரணத்தால் இந்த மூன்று தலைப்புகளும் சேர்ந்து மொத்தமாக இன்று வரையிலும் உள்ள திருப்பூரின் நிலைமையை தெள்ளத்தெளிவாக புரிய வைத்து விடும்.

19.என் அலைபேசி எண் கிடைக்கப்பெற்றதும் திருப்பூர் சார்ந்த இருவர் அழைத்திருந்தார்கள்.பெங்களூரில் இருந்து பேசும் நண்பர் குடும்ப உறுப்பினராகவே ஆகி விட்டார். அதில் ஆச்சரியப்பட்ட நிகழ்வும் ஒன்று. உண்டு.

திருப்பூரில் நான் ஏற்கனவே வாழ்ந்த பகுதியில் ஒரே சந்தில் அருகருகே வீட்டில் வசித்தவரும் பேசினார். பேசியவருடன் பக்கத்து வீட்டில் மூன்று வருடங்கள் வசித்து இருக்கின்றேன். இரண்டு வருடமாக தேவியர் இல்லத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். அப்போது தான் அவர் குறித்த முழு விபரமும் எனக்குத் தெரிந்தது.

இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பார்த்து இருக்கின்றோம்.  தினந்தோறும் பார்த்த போதிலும் கூட இருவரும் பேசிக் கொண்டதில்லை.  அந்த சமயத்திலும் நான் எழுதிக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துக் கொண்டேன். இப்போது கூட இதை படிப்பார். நான் இதை நினைத்து பல நாட்கள் சிரித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது

ஃபேஸ்புக்கில் அடுத்த நாட்டில் இருப்பவர்களுக்கு வணக்கம் வைப்போம். அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்றே தெரியாது. .

20,.இந்த வருடம் சென்ற வருடத்தை விட பாதிக்கு பாதி தான் எழுத முடிந்தது. என் பதிவுகளின் மூலம் ஏராளமான புதிய நண்பர்கள், வாசிப்பாளர்கள், அக்கறை கொண்டவர்கள் கிடைத்துள்ளார்கள்.

அத்தனை பேர்களின் வாழ்க்கையிலும் வருகின்ற 2013 வளமான எதிர்காலத்தை உருவாக்க தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

உங்கள் உழைப்பின் மூலம் உங்கள் உண்மையான ஒழுங்கான சிந்தனைகளின் மூலம் 2013 ல் பெற வேண்டிய கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்க எங்கள் தேவியர் இல்லத்தின் புதிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு இடைவெளி விட்டு சந்திப்போம்.

திரும்பி பாரடா 1

திரும்பி பாரடா 2

Monday, December 24, 2012

திரும்பி பாரடா 2012 (2)


1.வீட்டில் இரட்டையரில் ஒருவர் தான் வைத்துள்ள லட்சியத்திற்காக கராத்தே வகுப்புக்குச் சென்று கொண்டிருப்பதோடு அதிலும் முன்னேறியுள்ளார். வகுப்பில் எப்போதும் முதல் நிலை தான். பள்ளிக்கூட அளவில் நடந்து முடிந்த ஸ்பெல் பீ என்று சொல்கின்ற ஆங்கில தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாவட்ட அளவிற்கு தயாராகியுள்ளார்.   சென்ற வருடம் முழுக்க மூவரின் தமிழ் மொழி அறிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு பல காரியங்களை செய்தேன், தூங்கத் தொடங்கும் போது சொல்லிய கதைகளின் வழியே பாடங்கள், வெளியே அழைத்துச் செல்லும் போது புரிய வைத்த விசயங்கள் என்று கிடைத்த நேரங்களில் எல்லாம் அடித்த ஆணிகள் அற்புதமாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. 

2.என் தாய் மொழியை என் குழந்தைகளுக்கும் நல்ல புரிதலோடு சொல்லிக் கொடுக்கவும் இந்த வருடத்தில் முடிந்துள்ளது. ஒருவருக்கு தமிழ்வாசிப்பு சிறுவர் மலரில் தொடங்கிய பயணம் இப்போது வெகுஜன இதழ்களில் வந்து நிற்கின்றது. பத்திரிக்கைகளில் வரும் படங்களைப் பார்த்து விட்டு மனைவி கதறினாலும் நான் கண்டு கொள்வதில்லை. தவறுகளை விட்டு வெளியே வர முதலில் அந்த தவறுகள் குறித்து புரிதல் வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன்.  

இவர் மட்டும் சற்று முரட்டுக் குதிரை. காரணம் வீட்டுக்குள் வந்து பாடங்களை படிப்பதில்லை. பள்ளியிலேயே அத்தனையும் முடித்து விட்டு இங்கே வந்து பத்து நிமிடத்திற்குள் ஒரு திருப்பி விட்டு என்னை திமிராக பார்த்து சவால் விடுகின்றார். முடிந்தவரைக்கும் உரையாடலின் மூலம் புரிய வைத்து விடுகின்றேன். மூவரும் தமிழை பிழையின்றி எழுத வாசிக்க கடிதம் எழுத கற்றுக் கொண்டு விட்டார்கள். இருவர் இந்த வருடம் தான் சிறுவர் மலருக்கு வந்துள்ளார்கள். 

3.கடைக்குட்டியின் மற்றொரு பெயர் ஜில் ஜில் ரமாமணி. காரணம் நாட்டியத்தில் தீரா ஆர்வம். அதைவிட நொறுக்குத்தீனி. படிப்பிலும் வகுப்பிலும் இவரும் முதல் நிலை தான். . ஆனால் ஒவ்வொரு காரியமும் தேர் போல மெதுவாகத்தான் நகரும். பேசத் தொடங்கி விட்டால் ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். 

மனைவியும் இவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை கண்டு கொள்ளாதது போல காதில் வாங்கிக் கொண்டிருப்பேன். மாமியார் மருமகள் வாக்குவாதம் போல போய்க் கொண்டிருக்கும். கடைசியில் நான் நாட்டாமையாக ஆக்கப்படுவேன்.  அந்த சமயம் தான் என் ஒன் பாத்ரூம் வருது. இருங்க வந்து விடுகின்றேன் என்று தப்பி விடுவதுண்டு.

4.இடையில் ஒருவர் இருக்கின்றார். படிப்பில் பி கிரேடு. ஆனால் சாப்பாடுச் சுவையில் என்னைப் போலவே ஏ கிரேடு. எது குறித்தும் மற்ற இருவரையும் போல ஆசைப்படுவதில்லை அலட்டிக் கொள்வதும் இல்லை. உண்ண உறங்க கொஞ்சம் படிக்க அவவ்வபோது நான் தான் மிஸ் இங்கே கொஞ்சம் வந்து உட்காருங்க என்று என்னை மிரட்ட என்று அவர் பயணம் அமைதியான நதி போல போய்க் கொண்டிருக்கின்றது.  என் அம்மாவின் அம்மா குணங்களைக் கொண்டு வந்து என்னை பலவிதங்களில் மாற்றியவர் மாற்றிக் கொண்டுருப்பவர். 

5.பத்து வருடமாக எனக்கு ஒரே மருத்துவர் தான். வருடத்தில் தவிர்க்கவே முடியாமல் இரண்டு தடவை செல்வது வழக்கம். எனக்கு பெரிதான எந்த நோயுமில்லை. குடும்பத்தில் இருந்த இருக்கும் சர்க்கரை நோய் கூட அண்டவில்லை. ஆனால் திருப்பூர் நகரம் தரும் தூசியும், மாறும் பருவ நிலையும், அலைச்சலும் தரும் ஒவ்வாமை என்பது தான் சளியில் தொடங்கும். காய்ச்சலை வரவழைக்கும். வண்டி நகராது.  

மருத்துவரிடம் சென்ற பிறகு தான் ஒரு கட்டுக்குள் வந்து நிற்கும்.  உடம்பில் எதிர்ப்பு சக்தியும் வருடத்திற்கு வருடம் இழந்து கொண்டே இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வருடத்தின் பாதிக்கு மேல் தான் இயற்கை மருத்துவத்தின் பக்கம் சென்றே ஆக வேண்டும் என்று தோன்றி வெற்றிகரமாக குடும்பம் கடந்த ஆறு மாதங்களில் ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வர முடிந்துள்ளது. 

6. இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் மின்வெட்டு திருப்பூரில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ள, பார்த்த, பழகிய பலரின் வாழ்க்கையையும் சூறையாடி விட்டது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்பத்திற்கென்று உருவாக்கிக் கொடுத்த வசதிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கவில்லை.

பாதிப்பு என்று பார்த்தால் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய உண்மையான வருமானங்கள் பாதியாக கிடைத்தது மட்டுமே. அத்துடன் உழைக்க வேண்டிய தருணங்கள் இன்றி அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது தான் கொடுமை.

7.வசதிகளை பொருட்படுத்தாமல் இயல்பான கிராமது சிந்தனைகளில் வாழ்க்கை வாழ பழகிக் கொண்டதால், குடும்பத்தையும் அதன்படியே வழி நடத்துவதால் எந்த இடர்பாடுகளும் பெரிய அளவில் பாதிப்பதில்லை., குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதற்கு கிடைக்கும் பலன்கள், கிடைக்காத போது செய்ய வேண்டிய உண்மையான அக்கறை சார்ந்த உழைப்பு என்று இந்த வருடம் முழுக்க இனிய நாட்களாகவே இருந்தது.

8.ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வலைதளத்தை சோதனையாக எடுத்துக கொண்டு அதனை முழுமையாக உள்வாங்க முயற்சிப்பதுண்டு. எழுத தொடங்கிய முதல் தலைப்பு முதல் நேற்று எழுதியது வரைக்கும் பார்ப்பேன்.

இந்த வருடம் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தை பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் உள்ள விமர்சனங்கள், ஆதரவு, எதிர்ப்பு, வசவுகள், பாராட்டுரைகள் என்று அனைத்தையும்  உள் வாங்க முடிந்தது.  

9.அவரும் தினந்தோறும் விரிவாக தான் நினைப்பதை எந்தவித சமரசமின்றி எழுதுகின்றார். அளவு எதையும் வைத்துக் கொள்ளாத போதும் கூட அது அவசியமான கட்டுரையாகவே இருக்கின்றது. அதைவிட அவரின் தள வடிவமைப்பு தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் எழுதிய எதைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கி இருக்கின்றார்.  எழுதுவதைப் போல அதை கொண்டு சேர்த்தலும் அவசியம் என்பதை அவரின் தளம் எனக்கு உணர்த்தியுள்ளது. 

10.பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் உள்ள நாட்களில் மேடைப் பேச்சுகளில் கலந்து பல பரிசுகளையும் பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் வாசிப்பு மட்டுமே. பேய்த்தனமான வாசிப்பு முதல் பொழுதுபோக்கு வாசிப்பு வரைக்கும் எந்த பாரபட்சமும் இல்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில் தான் எழுத முடிகின்றது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் தமிழ்ச்செடி விழாவில் தான் முதன் முதலாக பேசினேன்.

அலுவலக ரீதியான மனித வள மேம்பாட்டுத்துறையில் வாரந்தோறும் உரையாடல் நடக்கும். தமிழ்ச்செடி விழாவில் பேசுவதற்கு முன்பு முதல் நிமிடம் வரைக்கும் எது குறித்து பேசப்போகின்றோம் என்று எதுவும் தெரியாமல் கோவை மு சரளா மற்றும் மெட்ராஸ் பவன் சிவா இவர்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு மையமாக நான் பேசினேன். நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைப் போல பேசும் பேச்சும் தெளிவாக அற்புதமாக உள்ளது என்றனர். காரணம் பொதுவாக எழுதுபவர்களுக்கு நன்றாக பேச வராது என்பார்கள். இது இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒன்று..

அடுத்த பதிவில் முடிகின்றது.

திரும்பி பாரடா 2012  1