Tuesday, September 05, 2023

மது இங்கே அருந்தாதீர்கள்

ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் பார்த்து, படித்து எப்போதும் பதட்டப்படாதீர்கள். உடனே நம்பாதீர்கள். ஏழெட்டு பத்திரிக்கைகள், ஊடகங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முடியாத பட்சத்தில் புறக்கணித்து விட்டு மறந்து விடுங்கள். இன்றைய சூழலில் எந்த சம்பவங்களிலும் பத்து சதவிகிதம் கூட உண்மை இருப்பதில்லை.
ஒரு பக்கம் அரசியல் வாதிகளுக்குத் தேவைப்படும் பரபரப்பு. . மறுபக்கம் ஊடகத்திற்குத் தேவைப்படும் பரபரப்பு. இரண்டும் சேர்ந்து உருவாக்குவது தான் பொது மக்களுக்கான படபடப்பு.

பல்லடத்தில் மாதப்பூர் என்ற பகுதி எனக்கு அறிமுகமான பகுதி தான். பத்து வருடங்களுக்கு முன்பு அங்கே தொழிலாளர்களுக்காகச் சென்று உள்ளேன். இப்போது அந்த பகுதிகள் அனைத்தும் முழுமையாக மாறிவிட்டது.

"இந்த இடத்தில் தண்ணீ அடிக்காதீங்கப்பா" என்ற சொன்ன ஒரே காரணத்திற்காக மது போதையில் ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டது. 

இதனை வாசித்தவுடன் இயல்பாகவே நிகழ்ந்திருக்க வாய்ப்பதிகம் என்றே கருதுவோம். காரணம் இன்றைய சூழல் அப்படித்தான் உணர்த்துகின்றது. கூடவே கஞ்சா புழக்கம் குறித்து வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் அடி மனதைப் பிசைவதாக உள்ளது. நமக்கு நடக்காத வரைக்கும் நாம் கடந்து சென்று கொண்டே தான் இருக்கப் போகின்றோம்.

ஆனால் மது இங்கே அருந்தாதீர்கள் என்பதற்காக அந்தக் கொலைகள் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் தம்பி ஒருவர் எனக்கு அனுப்பி வைத்து புகைப்படங்களை வைத்து உணர்ந்து கொண்டேன். பொதுவெளியில் அதிகம் பகிரப்படாத புகைப்படங்கள். அருகே இருந்தவர்கள் இறந்தவர்களைப் புகைப்படங்களாக எடுத்துள்ளனர். 

மிக மிகக் கோரமாக இருந்தது.

உச்ச கட்ட போதை என்ற போதிலும் சற்று நிதானம் இருக்கத்தான் செய்யும். ஆனால் தனக்கு இதனால் கிடைக்கப்போகும் வெகுமதி பொறுத்து அருவாள் உடம்பில் இறங்கும் வேகம் அதிகமாகும். 

மதுரையில் வெட்டிக் கொல்லப்பட்ட தா. கிருஷ்ணன் புகைப்படங்களை (ஜனவரி மாதம் சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவர போகும் தமிழக அரசியல் வரலாறு புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் இதனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்) நீங்கள் பார்த்து இருந்தால் புரியக்கூடும்.

ஆனால் பல்லடத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்த போது தன் மனதிலிருந்த கோபம், ஆதங்கம், வருத்தம், இதனால் அடக்கி வைத்திருந்த வெறி போன்ற காரணத்தினால் மட்டுமே நடந்து இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றியது. ஆனால் நம் எண்ணங்களை உடனே எழுத முடியாது என்பதால் மாதப்பூர் அருகே உள்ள தம்பியிடம் இதனைப் பற்றிக் கூறி முழுமையாக விசாரித்து விட்டு எனக்குத் தகவல் தரவும் என்று சொல்லியிருந்தேன். நான் நினைத்து இருந்தது சரிதான் என்று தம்பி சொன்ன பத்து நிமிடக்கதை உணர்த்தியது.

முழுமையாக எழுத முடியாது. பல சங்கடங்களை உருவாக்கும். ஆனால் நடந்த பாதக செயலை நியாயப்படுத்த முடியாது. நாம் அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினைகள் உள்ளது.

1. உங்களிடம் பணிபுரிகின்றவர்களை நியாயமாக நடத்துங்கள். நாகரிகமாக நடத்துங்கள். கௌரவமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2. தவறான பழக்கங்கள் இருந்தால் அறிவுரை சொல்லித் திருத்த முற்படாதீர்கள். அவருக்குச் சேர வேண்டிய பணத்தை முழுமையாகக் கொடுத்து விட்டு முறைப்படி எழுதி வாங்கி விட்டு உடனே அனுப்பி விடுங்கள்.  ( குடும்பமே இறந்ததற்கு முக்கிய காரணம் ஆணவ போக்கில் அவனை துரத்திச் சென்றது முதல் காரணம். அவன் தோட்டப் பகுதியில் வேறு சிலரையும் அழைத்து வந்து காத்திருந்தது தெரியாமல் சிக்கிக் கொண்டது அடுத்த காரணம்)

3. வீட்டில் 60 முதல் 70 வயது பெண்கள் இருந்தால் அவர்களை வேலைக்காரர்களுடன் அதிகம் உறவாட வைக்காதீர்கள். இரண்டு தலைமுறைக்குப் பிறகு இங்கு உருவான மாற்றங்கள் எதையும் முதல் தலைமுறை இன்னமும் உணரமறுக்கின்றார்கள். கொல்லப்பட்ட பாட்டியம்மா பாரதி ராஜா படத்தில் வரக்கூடிய காந்திமதி போல வாயைத் திறந்தால் ஒன்ரை முழம் நீண்டு போய்க் கொண்டேயிருக்கும். வாழ்நாள் முழுக்க கோபமே வராதவனுக்குக்கூடக் கையில் கிடைப்பதை எடுத்துச் சாத்தத் தோன்றும் அளவுக்கு அம்மாயின் பேச்சை அவனை (அருவாள் எடுத்தவன்) கடந்த எட்டு மாதங்களாக வாட்டி வதைத்துக் கொண்டு இருந்ததுள்ளது.

ஆம் அவன் எட்டு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்றவன். அதற்குப் பின்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்து ஈகோ வை சீண்டும் வேலைகள்.

தன்னிடம் பணமிருந்தால் தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேர்களும் அடிமை என்ற எண்ணம் இருந்தால் இனி வரும் காலங்களில் அருவாள் மாறி துப்பாக்கி கலாச்சாரமாக மாறும்.

முழுக்க முழுக்க முன்விரோத பகை. அரசியல் என்பது இடையே நுழைக்கப்பட்ட திரைக்கதை.

அரசியல் என்ற துறைக்குத் தீர்வு தேவையில்லை. இதனால் நமக்கென்ன லாபம் என்பதே முக்கியமாகப் பார்க்கும்.

அவன் உழைத்தான். பணத்தை அடையும் வழியைக் கண்டடைந்தான். பரம்பரை சொத்து உதவியது. செய்து கொண்டு இருக்கும் தொழில் நன்றாக உள்ளது. லாபகரமான தொழில் வாழ்க்கை அமைந்துள்ளது,

இது போன்ற பல காரணங்களின் அடிப்படையில் இன்று வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதனை பணத்தை இன்னமும் தேடிக் கொண்டு இருப்பவர்கள் உணருவதில்லை. 

எனக்குத் தேவை. எப்படி அடைவது. யார் குறுக்கே இருக்கின்றார்கள். அவர்களை வழிக்குக் கொண்டு வர முடியுமா? புதைத்து முடித்து அடைய முடியுமா? 

இப்படியான சமூக வாழ்க்கையின் தொடக்கப்புள்ளிகளை கடந்து சென்ற ஒவ்வொரு காலகட்டமும் நமக்கு வெவ்வேறு விதங்களில் காட்டிச் சென்றுள்ளது. ஆனால் இன்றைய நவீன தொழில் நுட்ப உலகம் நாள்தோறும் மணிக்கொருமுறை வெவ்வேறு வழிகளில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் அதிர்ச்சிகரமான வழிகளில் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டேயிருக்கின்றது.

எட்டு மணி நேரம் வேலை செய்ய மாட்டேன். முதலாளிகளின் பேச்சுக்குக் கட்டுப்பட மாட்டேன். வேலை நேரங்களில் மது அருந்துவதை நிறுத்த மாட்டேன். ஆனால் என்னை எதுவும் சொல்லக்கூடாது என்ற தனிமனிதர்களின் பேராசை என்பதற்கு முடிவே இல்லை.

சமூகம் சம ஒழுங்கிலிருந்து விலகும் போது அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

அதாவது ஐந்து சதவிகிதம் மாறியுள்ளது என்ற நிலையில் இது போன்ற தொலை தூரத்தில் நடந்த நிகழ்வுகள் பத்திரிக்கைகளில் வரும். அதுவே ஐம்பது சதவிகிதமாக மாறும் போது உங்களுக்கு வீட்டுக்கு அருகேயும் நடக்க வாய்ப்புள்ளது.

நிதானத்துடன் மனிதாபிமானமும் தேவை என்பதனை உணருங்கள்.

No comments: