Monday, September 18, 2023

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

 வீட்டுக்கருகே உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார்கள். பூஜையெல்லாம் முடிந்து வெளியே வந்த சமயத்தில் இரண்டு பக்கம் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.

ஒரு சிறிய பாக்கு மட்டை தட்டில் பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை கொஞ்சம் என்று கலவையாக இருந்தது.  மற்றொரு தட்டில் கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், லட்டு, மோதகம் வைத்துக் கொடுத்தார்கள். 
இவையனைத்தும் உங்களுக்கு இந்து மத கடவுள் சார்ந்த விழா அல்லது பக்தி என்று நினைக்கத் தோன்றும். நான் இதனைத் தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான முறை சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள சில கோடி மக்களின் வாழ்வாதார உயிர் மூச்சாகக் கருதுகிறேன்.

இந்தியாவில் மதப்பண்டிகைகள் தான் முறை சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 70 சதவிகித மக்களுக்கு வாழ்வு வழங்கக்கூடியதாக இருக்கிறது.  குறிப்பாகக் கிராமம் சார்ந்து வாழக்கூடியவர்கள். சிறுநகரங்கள், சிறு வணிகர்கள், பெட்டிக் கடை முதல் சிறிய மளிகைக் கடை வரை அனைவருக்கும் ஒவ்வொரு மத பண்டிகைகளும் அமுதசுரபி.

தேங்காய், வாழைப்பழம் பிடுங்கப்பட்ட இடத்திலிருந்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் வழியே கடந்து சென்று எத்தனை குடும்பங்களை வாழ வைத்து கொண்டு இருக்கின்றது. எத்தனை ஆயிரம் பேர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை கற்பனையில் யோசித்துப் பாருங்கள்.

விதம் விதமான பூக்கள் அது சார்ந்த  வணிகம். 

ஒரு மதம் சார்ந்த விழா வருகின்றது என்றால் அந்த பூந் தோட்டக் காரரிடம் முன் பணம் கொடுத்து எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகளும் எத்தனை ஆயிரம் பேர்கள் பல கோடிகளை முதலீடு செய்து இருக்கக்கூடும். அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்ற முட்டாள் தனத்தில் இவர்களின் பொருளாதார வாழ்வாதாரம் சூறையாடப்படுமெனில் அதனை என்னவென்று அழைப்பீர்?

பாக்கு தட்டு என்பது இன்று சிறு தொழிலில் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கும் லாபமீட்டக்கூடிய எளிய முதலீட்டுக்கான ஆதார சக்தியிது.  

சாம்பிராணி, சூடம்,விபூதி தொடங்கி வெற்றிலை பாக்கு என்பது போன்ற பலவிதமான தொழில்கள் அனைத்தும் சீசன் சார்ந்து தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது. தர்கா வழிபாடு, வேளாங்கண்ணி பிரார்த்தனை என்று எந்த மத வழிபாடு என்ற போதிலும் மத்திய மாநில அரசுகள் எங்கள் கண்டு கொள்ளவில்லை என்று கண்ணீர் விடும் மக்களை சுய மரியாதையுடன் வாழ வைத்துக் கொண்டு இருப்பது மதப் பண்டிகைகளில் புழங்கும் அணைத்து விதமான பொருட்கள் சார்ந்த வணிகம் மட்டுமே.

இதை முழுமையாக இந்தியாவில் முதல் முறையாக உணர்ந்தவர், உணர்த்தியவர் மோடி மட்டுமே.  

வைஷ்ணவி கோவில் தொடங்கி காசி விஸ்வநாதர் வரைக்கும் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் பலர் பார்வையில் புணர் நிர்மாணம். ஆனால் இன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பரப்பளவு அதிகமான பின்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மாற்றப்பட்ட பின்பு  மாதம் 50 லட்சம் பேர்கள் வந்து சென்று கொண்டு இருக்கின்றார்கள்.  ஒவ்வொரு பக்தரும் தன் வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து ஆலயம் வந்து கடைசியில் வீடு திரும்பும் நாள் வரைக்கும் அவர்கள் செலவளிக்கும் தொகை எத்தனை துறைகளை வாழ வைக்கும் என்பது யோசித்துப் பாருங்கள்.

கடல் இல்லாத உத்திரப்பிரதேசத்தில் இந்தக் கோவிலை மட்டுமே நம்பி எத்தனை லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் பிரதமரின் தீர்க்க தரிசனம் புரியலாம்.  

மக்களின் வறுமை ஒழிப்பு என்பது பல விதங்களில் பண்ண முடியும். அதில் ஒன்று மதப் பண்டிகைகளில் அரசு தலையிடாமல் இருப்பது.

இந்த முறை தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்குக் கெடுபிடி காட்டும் விதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழச் செய்கின்றது.  கட்சி அரசியல் என்பது வேறு. மாநில அரசின் நிர்வாக அரசியல் வேறு.  நிர்வாகம் என்பது பணத்தை அடிப்படையாக கொண்டது. ஏதாவது ஒரு வழியில் அரசுக்குப் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் மக்கள் தங்கள் தொழில் மூலம் சுபிட்சமாக இருக்க வேண்டும்.

இரண்டையும் இந்த முறை ஆளும் திமுக அரசு கெடுத்ததோடு தொடர்ந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வருமானத்தைத் தடை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகவே நினைக்க தோன்றுகின்றது.

சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கெடுதல் என்றால் உண்டு கொழுத்து வாழும் அந்தத் துறை அதிகாரிகளை வேலை பார்க்கச் சொல்லலாம். சாயப்பட்டறை முதல் தோல் தொழில் தொழிற்சாலை வரை அக்மார்க் உத்தம புத்திரர்களாகத்தான் தொழில் செய்கின்றார்களா?

காழ்ப்புணர்வுடன் வன்மமும் கலந்தால் அதற்குப் பெயர் நிர்வாகம் அல்ல. தமிழக காவல்துறை  என்பதனை இனி வரும் காலங்களில் கைகளுடன் கால்களும் கட்டப்பட்ட துறை என்றே அழைக்கலாம்.

யாரோ சிலருக்காக மொத்த மாநிலத்தையும் யாரோ சிலர் சேர்ந்து மோசமான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டு இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் ஆன்மீகத் தலங்கள் மிக மிக அதிகம்.  ஆனால் அவைகள் அனைத்தும் கொள்கைகள் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களின் கையில் இருப்பதால் அரசுக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தும் தனி நபர்களின் கைக்குச் சென்று கொண்டு இருக்கின்றது.  

இதை விட தமிழக மக்கள் ஆன்மீகத்தை தற்போது எப்படி அணுகுகின்றார்கள்? என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

தொன்னூறு சதவிகிதம் சோசியம் பார்த்தவர் சொன்னார் என்பதற்காகவே தமிழர்கள் தற்போது கோவிலுக்குச் சென்று கொண்டு இருக்கின்றார்கள். கோவிலுக்கு வந்து சேர்ந்த வருமானங்களும் இன்னோவா கார் வாங்க பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றது.  தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை என்பது பக்தர்களைச் சந்துக்குள் நிறுத்தி  எந்தந்த வகைகளில் பணம் பறிக்கலாம் என்பதில் மட்டுமே கவனமாக உள்ளது.

மொத்தத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைத்தும் பிச்சைக்காரர்களை போலவே நடத்தப்படுகின்றார்கள். ஆனால் அதனை உணர்கின்றவர்கள் ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது தான் பெரிய சோகம்.

கண் எதிரே எது நடந்தாலும் இவர்களுக்குக் கவலையில்லை. பரிகாரம் செய்து முடித்து விட்டால் போதும். இருப்பது போதாது.  வந்ததும் பத்தாது. கொடுப்பவன் கூரையைப் பிய்த்துக் கொடுக்க வேண்டும் என்று மனம் முழுக்க பரதேசி வாழ்க்கை  வாழ்ந்து பிச்சை எடுப்பதற்காகவே கோவிலுக்கு செல்பவர்கள் முன்னால் விக்கிரகத்தை வெளியே தூக்கிக் கொண்டு சென்றாலும் எவரும் கவலைப்பட போவதில்லை.  

கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவில்களில் நடந்த கொள்ளை,  மூலம் மட்டும் உத்தேசமாகக் கணக்கிட்டால் கூட எத்தனை ட்ரில்லியன் டாலர் என்பதனை உங்களால் யோசித்துப் பார்க்கக்கூட முடியாது. 

கோவிலுக்குள் இருந்தவர்கள் முதல் உடந்தையாக இருந்தவர்கள் வரை முதல் காரணமாக இருப்பார்கள்.  கடைசியாகத்தான் அரசு வரும்.

காரணம் அரசாங்கத்தைப் போலவே தற்போது மக்களும் கோவில் என்பதனை வியாபார தலமாக கருதுகின்றார்கள். கடவுள் என்பது வியாபாரி. அவர் எப்போதும் நமக்கு லாபத்தை மட்டுமே தர வேண்டும் என்ற எண்ணம் மாறாத மக்கள் இருக்கும் வரை இங்கே எந்த மாற்றமும் நடைபெற வாய்ப்பில்லை.  ஆட்சியில் வந்து அமர்கின்றவர்களின் எண்ணமும் மாறப் போவதில்லை.

அது வரையிலும் தமிழகத்தில் ஆட்சிகள் மாறும். காட்சிகள் மாறாது.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

No comments: