Sunday, October 23, 2022

தீபாவளி குறிப்புகள் 24 அக்டோபர் 2022

தீபாவளி குறிப்புகள் 24 அக்டோபர் 2022


கடந்து போன இரண்டு கொரோனா, உருவான பொருளாதார இழப்புகள், இறப்புகள் என்று பல துயரங்களைக் கடந்து இந்த தீபாவளி சமூகத்தை மூச்சு விட வைத்துள்ளது. எங்கு திரும்பினாலும் கூட்டம்.  எதற்குள் நுழைந்தாலும் பல மணி நேரம் காத்திருப்பு. ஓடவும் முடியல.. ஒழியவும் முடியல.

விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, டாலர் வீழ்ச்சி என்று எப்போதும் போல மத்திய அரசை விமர்சிப்பவர்கள் சொல்லும் காரணங்களை இந்த முறை ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் வாங்கும் சக்தியைப் பார்த்து நானே மிரண்டு போய் நிற்கின்றேன். கணிப்பவர்கள் தவறா? வாங்குபவர்கள் கடன் வாங்கி சமாளிக்கின்றார்களா?

பருப்பு வகைகளில் ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளதைக் கவனித்தேன். ஆனால் கொடுமையான விசயம் என்னவெனில் எண்ணெய் வகைகள் பாமாயில் தொடங்கி பல்வேறு பெயர்களில் இருக்கும் எண்ணெய்கள் ஒவ்வொன்றும் பனைமரம் உயரம் அளவுக்குப் போய் நிற்கின்றது.  

90 முதல் 95 ரூபாய் வரைக்கும் இருந்த எண்ணெய்கள் அனைத்தும் இன்று குறைந்தபட்சம் ரூபாய் 160 க்கு கீழ் எதுவுமில்லை என்கிற அளவுக்குப் பயமுறுத்துகின்றது. ஆனால் நாம் இன்னமும் அளவு கடந்து இருக்கும் தேங்காய் கொப்பரை மூலம் தேங்காய் எண்ணெய் உருவாக்கிய அதனை மக்கள் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் மத்திய அரசு மௌனியாக இருப்பதற்குப் பின்னால் உள்ள லாபி என்பதனைத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நான் பேசிய மளிகை மொத்த கொள் முதல் வியாபாரி இந்த வருடமும் மோடி அவர்களைத் திட்டினார். எங்களால் இருப்பு வைக்க முடியவில்லை என்றார்.  ஜிஎஸ்டி யைத் தூக்கினால் தான் நாங்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்று மாநில சுயாட்சி குறித்து எனக்கு வகுப்பு எடுத்தார்.

நான் பேசிய சிறிய மளிகைக் கடை வியாபாரி மக்கள் மனம் மாறிவிட்டது. எங்களுக்குப் பெரிய அளவுக்கு வியாபாரம் இல்லை. அனைவரும் தயார் நிலையில் உள்ள பொருட்களைத் தான் விரும்புகின்றார்கள் என்றார்.  ரெடிமிக்ஸ் இருக்கின்றதா? என்று தான் ஒவ்வொரு பொருளுக்கும் தேடுகின்றார்கள் என்றார். 

பத்தில் ஆறு பேர்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்பதாக பத்திரிக்கைச் செய்திகள் சொன்னால் நான் பல இனிப்புக் கடைகளில் திருப்பதி சுவாமி தரிசனம் போல வரிசையாக நின்று மக்கள் வாங்கித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். பெண்கள் எண்ணம் மாறிவிட்டது. இயல்பான ஆசைகளை மீற முடியவில்லை. கூட இரண்டு மாத்திரைகள் போட்டுக் கொண்டால் போதும் என்கிற அளவுக்கு ஒவ்வொருவரின் எண்ணமும் தனக்குத் தானே சமாதான தூதுவராக மாறியுள்ளனர்.

இந்த முறை புரட்டாசி முழுக்க அசைவம் என்பதனை தொடாமல் இருந்தேன். சூழல் இயல்பாகவே அப்படி அமைந்தது.  ஆனால் அருகே உள்ள அசைவ உணவகத்தில் வெளியே கிரில் சிக்கனை ஒரு வரிசைக்கு ஆறு என்று ஆறு வரிசையாக 36 கோழிகளை மாலை ஐந்து மணிக்கு மாட்டுவார்கள்.  எட்டு மணிக்குள் காலியாகி விடும்.  ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வெவ்வேறு விதமாக வாழ்வது என்பது இயல்பாகவே மாறிவிட்டது. 

பல குடும்பங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கட்டு கட்டு என்று கட்டுகின்றார்கள். தவறில்லை. ஆனால் அவர்கள் குடல் உறிஞ்சிகள் எப்படி எதிர்காலத்தில் சுவையூட்டிகளை மீறி ஆரோக்கியமாக இருக்கும் என்பதனை பலமுறை யோசித்துப் பார்த்துள்ளேன்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு திரையரங்கத்திலும் உள்ள டிக்கெட் விலை வேறு லெவலில் விற்கப்படுகின்றது. அருகே உள்ள திரையரங்கத்தில் நூற்றுப் பத்து ரூபாய் என்பது இயல்பான விலையாக இருந்தது. அதற்கு அடுத்து 150 கடைசியாக பால்கனி என்பது 180 ரூபாய் என்று இருந்தது.  டிக்கெட் 110 ரூபாய் அச்சடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் விற்பனை 180 ரூபாய்.  இதே போல அடுத்தடுத்து விலையும் தாறுமாறாக.  விக்ரம் ஏன் 400 கோடி 500 கோடி வசூல் என்று சொன்னார்கள் என்பதற்குப் பின்னால் உள்ள ஒரே விசயம் அப்பட்டமாக மக்கள் பணத்தைத் திருடினார்கள். இன்று வரையிலும் இது நடைமுறையாக உள்ளது. எவனும் இதைப்பற்றிப் பேசுவதே இல்லை.

ரெட் ஜெயண்ட்நிறுவனம் கடந்த 15 மாதங்களில் வரவு செலவு என்கிற ரீதியில் அவர்களை ஆதரிக்கும் யூ டியூப் மக்களே இருபது ஆயிரம் கோடி என்றார்கள்.  மொத்தம் 17 படங்கள் வாயிலாக வந்த  தொகை என்றும் சொன்னார்கள்.  ஆனால் இது பொய். தற்போது கருப்பு வெள்ளை கணக்கு தான் தமிழகம் முழுக்க ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வருகின்றது.  இது போல மூன்று வரை தொகை இருக்கக்கூடும்.  அவையெல்லாம் எங்கேயோ வசூலிக்கப்பட்ட தொகையானது இங்கே உள்ள திரையரங்க வசூலாக காட்டப்படக்கூடும் என்றே நினைக்கின்றேன்.  

டாஸ்மாக் வசூல் ஒரு பக்கம். நேரிடையாகக் கடையில் கொண்டு போய் இறக்கி மொத்த வசூலைப் பார்ப்பது மற்றொரு புறம்.  இதே போல இன்றைய திரைப்படத் தொழிலில் மேலிருந்து கீழ் வரைக்கும் சரியாக ஆப்பு சொருகினால் மூன்று நாள் நேர்மையான வசூல் சில கோடிகள் என்று தான் சொல்வார்கள்.  காரணம் ஒரு படம் மூன்று நாட்கள் தான் அதிகப்பட்சமாக ஓடுகின்றது. கேடிகள் கொட்டம் அடங்கும்.  

எந்த ஊரிலும் கம்யூனிஸ்ட் விழா நேரங்களில் கொடி பிடிப்பதில்லை. போனஸ் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பெயருக்கென்று அறிக்கை விடுகின்றார்கள். தேர்தல் சமயங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருக்கின்றார்கள்.

நாங்கள் நீட் பயிற்சி அளித்து வென்று 7.5 சதவிகிதம் மூலம் மருத்துவராக ஏழு மாணவிகள் செல்கின்றார்கள். இனி அவர்கள் வாழ்க்கைச் சூழலும் மாறிவிடும்.  அழுத்தப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை இனி மலரும் என்றே நம்புகின்றேன். சாதிய இழிவுகளைக் கடந்து வெல்வார்கள் என்று நம்புகின்றேன். பல நண்பர்கள் உதவி உள்ளனர். அனைவருக்கும் நன்றி.

கல்லூரி சென்ற மகள்களுடன் கல்லூரி செல்லப் போகும் மகளும் சேர்த்து நாளை தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராக இருக்கின்றார்கள். சென்ற வருடம் தாவணி. இந்த வருடம் புடவை. கூட தலைநிறைய மல்லிகைப் பூ. என் ஆசை என்பது தாழம்பூ கொண்டை. சொன்ன போது மக்கள் நலக்கூட்டணியின் நிரந்தரத் தலைவர் மற்றொரு பெண்ணை வரவழைத்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட இனிமேல் எங்கே போய் தேடுவது என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்.

எப்போதும் போல அம்மையார் காரைக்குடி பலகார வரிசையைக் கடந்த சில நாட்களாக தயார் செய்து அடுக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றார். இதெல்லாம் கல்லூரி மகள் கொண்டு செல்ல என்பதால் கண்டு கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆண்கள் அனைவரும் வாட்ச்மேன் வேலை தான் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றே நினைக்கின்றேன்.  இல்லறத்தில் உள்ளே தோற்று விடு. வெளியே நல்லறமாக இருக்கும் என்று இத்துப் போன தத்துவத்தை வைத்து ஆளாளுக்கு மிரட்டுகின்றார்கள்.

தமிழர் கலாச்சாரம், பண்பாடு,தெய்வ நம்பிக்கை என்று அதன் நீளம் அகலம் என்பதனை உங்கள் தலைமுறைக்கு அறிவுரையாகச் சொன்னால் புரியாது. நாமும் வாழ்ந்து காட்டினால் தான் அடுத்த தலைமுறைக்குத் தெரியும்.  முதல் ஆசிரியர் அம்மா.  முழுமையாக வாழ்நாள் முழுக்க ஆசிரியராகவே வாழவேண்டியவர் அப்பா.  நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.  நாடு முதல் தொழில் நிறுவனங்கள் வரை, குடும்பம் முதல் தலைமுறை தாண்டிய உறவுகள் வரை தியாகம் என்ற வார்த்தையின் மூலம் கட்டமைக்கப்படுகின்றது. அதனை அடிமைத்தனம் என்று கூட்டம் சொல்லி தற்போது மக்களை மடை மாற்றுகின்றது. யோசிக்காமல் அப்படிப்பட்டவர்களைச் சந்தித்தால் அவர்கள் பேசத் துவங்குவதற்கு முன்பு உங்கள் காலில் போட்டு இருப்பதை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அவர்களின் முகத்தின் நீள அகலத்தைக் கணக்கீடு செய்து விடுங்கள்.

நாம் அடுத்த தலைமுறைகள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் வசதிகளைப் பெற்று வாழக் கல்வி உதவக்கூடும். ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் வாழப்போகும் வாழ்வியல் முறையில் மாற்றம் வந்தால் அதன் மூலம் மொத்தக் குடும்பமும் நிம்மதியிருந்தால் அதற்கு முழு முதற் காரணம்  பெற்றோர்களே.

எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய (முன்கூட்டிய) தீபாவளி வாழ்த்துகள். வாழ்நாள் முழுக்க ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். அப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மாறி இனிமேலாவது வாழத் துவங்கவும்.

2021 தீபாவளி வாழ்த்துகள்

No comments: