Sunday, April 03, 2022

புதிய அனுபவம் புதிய முயற்சி

06.02.2022 - 31.03.2022


காலம் நடத்தும் பாடங்கள் ஆச்சரியமானது. 

பிப்ரவரி 2022 முதல் வாரத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ஒரு முக்கிய நபரிடமிருந்து அழைப்பு வந்தது.  




"இவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இவருடன் சேர்ந்து செயல்படுங்கள்" என்று சொல்லி அலைபேசி எண் ஒன்றையும் தந்தார்.  

நான் என் அலைபேசியில் சேமித்து விட்டு அவரை அழைப்பதற்குள் அவரே வெளிநாட்டிலிருந்து என்னை அழைத்தார்.  பேசினோம். ஐந்து நிமிடம் தான் பேசி இருப்போம். எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

அண்ணாமலை அவர் ஹோப் என்ற வலையொளிக் காட்சி என்பது பிப்ரவரி முதல் வாரத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது.
தாமு என்கிற தாமோதரன் என்பவர் வளைகுடா நாட்டில் இருப்பதும், மென்பொருள் துறையில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.

இருவருக்கும் நடந்த உணர்வுப் பூர்வமான உரையாடல்கள் ஒன்றிணைத்தது.  ஏறக்குறைய ஏழு வாரங்களில் 32 உரையாடல்கள். என்னை விட அவர் தான் அதிகமாக மெனக்கெட்டு என் விருப்பத்திற்கேற்ப என் பணிச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ஒத்துழைத்தார். இதற்காக பல்வேறு உதவிகளும் செய்தார்.

32 உரையாடல்களை மீண்டும் வெவ்வேறு பெயர்களில் மாற்றி மாற்றி பதிவேற்றியும் வருகின்றார். அதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

முதல் பேச்சு பிப்ரவரி / மார்ச் மாதம் 31ந் தேதி வரைக்கும் பேசியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் ஐந்து லட்சம் பேர்களுக்கு இந்தத் தளம் என் பேச்சைக் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறது.

அதாவது 13 வருடங்கள் வலைபதிவில் எழுதி நான் பெற்ற வாசகர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு மடங்கை ஒன்றரை மாதங்களில் வலையொளிக் காட்சிகள் கொண்டு போய்ச் சேர்ந்துள்ளதை இங்கே இப்போது பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

நான் சாதாரணமானவன். 
யாருக்கும் அறிமுகம் ஆகாதவன்.  
அறிமுகம் செய்து கொள்ள விரும்பாதவன். 
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவன். 
ஆனால் உண்மைகளை நான் சரியென நம்புவதை இந்த உலகத்திற்கு எழுத்து வாயிலாக, இலவச மின் நூல் வாயிலாக, கிண்டில் பதிப்பு வாயிலாக கொண்டு போய் சேர்த்து வந்தேன். என் தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விசயங்களை பாட்காஸ்ட் மற்றும் ஜோ பேச்சு யூ டியூப் வாயிலாகவும் கொண்டு போய்ச் சேர்த்து கடைசியில் பாஜக என்ற கட்சி சார்பாக கற்று களத்தில் இறங்கு தளம் வாயிலாக தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட்டேன். 

தேசிய சிந்தனை கொண்டவர்கள் உலகம் முழுக்க  வெவ்வேறு இடங்களிலும் வாழ்ந்தாலும் ஒன்று சேர்ந்து செயல்படத் துவங்கினோம்.

தனித்தனியாக அவரவர் பணிகளைப் பிரித்துக் கொண்டோம். 
எந்த ஆதாயமும் இல்லை. எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லை.

வாரம் ஒருவரை அழைத்துப் பேச வைத்து அதனைப் பதிவேற்றினார்கள். உலகம் முழுக்க போய்ச் சேர்ந்தது.  

இது வரையிலும் நான் வலியச் சென்று எந்த இடத்திலும் என் முகத்தை எங்கேயும் காட்டவில்லை. இதற்கிடையே வேறு சில சேனல்களில் இருந்து அழைப்பு வந்து போதும் அதனை புறக்கணித்துள்ளேன்.

வாழ்க்கை அதன் போக்கிலேயே போய்க் கொண்டு இருந்தது.

கற்று களத்தில் இறங்கு தளத்தின் கடைசி பதிவு டிசம்பருடன் நிறுத்தி வைத்து இருந்தோம். இப்போது சித்திரை 1 அன்று மீண்டும் அந்தப் பயணம் தொடங்ப் போகின்றது.



•••

அண்ணாமலை அவர் ஹோப் மூலம்  நண்பர் திரு. தாமோதரன் கடந்த இரண்டு மாதங்களில் என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.  

இதுவரையிலும் பதிவேற்றிய உரையாடல்களுக்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்து தான் அன்பைத் தெரிவித்து விட்டுச் சென்றார்.

நான் இவருடன் பேசிய போது வேறு சில சமூகப் பணி செய்து கொண்டு இருப்பதைத் தெரிவித்தேன். ஏற்கனவே பல நண்பர்களிடத்தில் கொரோனா காலத் துயரங்களினால் கல்வி ரீதியாக பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூட மாணவிகளுக்குப் பணம் பலரிடம் பெற்றுப் பல பேருக்கு உதவி செய்து இருந்தேன்.  

தாமு மூலமாகவும் அந்த உதவி இன்னும் பலருக்கும் அதிகமாகவே போய்ச்  சேர்ந்தது.

கூடுதலாக மற்றொரு பெரிய காரியத்தில் இருவரும் இறங்கியுள்ளோம். வேறு சிலரும் உள்ளனர்.

****

சில மாதங்களுக்கு முன்பு இங்கே மகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் புதிதாக வந்துள்ள திமுக அரசு எந்த அளவுக்கு அரசு பள்ளிக்கூடங்களை அரசியல் காழ்ப்புணர்வு கொண்டு கேவலமாக செயல்படுகின்றது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்தார். 

"சென்ற வருடம் வரை இ பாக்ஸ் என்ற நீட் பயிற்சி நடந்து வந்தது. பல மாணவ மாணவியர்களுக்குப் பலன் உள்ளதாக இருந்தது. இந்த வருடம் நிறுத்தி விட்டார்கள்.  என்ன செய்வது என்றே தெரியவில்லை. சென்ற வருடம் 13 பேர்கள் மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவிகித ஒதுக்கீடு மூலம் போய்ச் சேர்ந்தார்கள்.  இந்த வருடம் வாய்ப்பு இல்லை" என்றார்.

கூடவே "கோவையில் ஒரு நிறுவனம் நீட் பயிற்சிக்கென ஒரு மென்பொருள் தயாரித்து உள்ளனர். அதற்கு புரவலர் தேடிக் கொண்டு இருக்கின்றோம். அது கிடைத்தால் இந்த வருடம் நீட் பயிற்சி அளிக்க முடியும்" என்றார்.

நான் பேசி வந்த அன்றே மகளுக்கு அந்த மென்பொருளை வாங்கிக் கொடுத்தேன். நன்றாகவே இருந்தது.

***

திருப்பூரில் உள்ள  அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளில் ஆர்வம் உள்ள அக்கறையுள்ள 48 மாணவிகளுக்குப் பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்து,  மென்பொருள் நிறுவனத்துடன் பேசி, தனிப்பட்ட பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு வந்து சேர்ந்து கடந்த இரண்டு வாரமாக நீட் பயிற்சி வகுப்பு காலை மாலை என்று பள்ளியில் தினமும் நடந்து வருகின்றது.  ஒவ்வொரு வாரமும் மென்பொருள் நிறுவனம் நீட் பரிச்சை வைத்து மாணவிகளின் தயக்கத்தைப் பயத்தைப் போக்கி நம்பிக்கையை வளர்த்து வருகின்றது.

மதம் இல்லை. சாதி இல்லை. கட்சி பாகுபாடில்லை.
ஆர்வம், திறமை, நம்பிக்கை மட்டுமே.

48 மாணவிகளும் இந்த வருடம் மருத்துவராக போக வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.  

இந்த அளவுக்கு இந்த விசயத்தில் அதி தீவிரமாக இறங்கக் காரணம் திமுக அரசு நீட் பயிற்சியை நிறுத்தி விட்டது.  

இ பாக்ஸ் என்றொரு திட்டம் இருந்தது.  அதன் 7.5 சதவிகிதம் மூலம் அரசு பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் 400 பேர்கள் சென்ற ஆண்டு சேர்ந்தனர்.  

இந்த முறை நிறுத்தி விட்ட காரணத்தால் ஒவ்வொரு அரசு பள்ளிக்கூடமும் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.  

கூடுதலாக ஆர்வம் உள்ள தலைமையாசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நீட் பயிற்சி நடத்தினால் அதனை மாவட்ட கல்வி அதிகாரி மிரட்டல் விடுப்பதும் நடந்து வருகின்றது.  


இவற்றை எல்லாம் சந்தித்து, பார்த்து, இங்குள்ள மாநகரத்தந்தை துணை கொண்டு (அவர் தேமுதிக வில் இருந்து தற்போது திமுகவிற்கு வந்தவர்) அவருக்குப் புரிய வைத்து இப்போது வகுப்புகள் நடந்து வருகின்றது.

இந்த வருடம் நீட் தேர்ச்சி முடிவுகள் வரும் போது இது குறித்த அனுபவங்களை இங்கே எழுதுகிறேன்.

4 comments:

S.Bhuvaneswari said...

தமிழகம் ஊழலிலிருந்து விடுபடவேண்டும். நம் மாநிலத்தலைமை யின் பேச்சு பொது மக்களை வெகுவாக யோசிக்க வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எங்களைப் போன்ற நிர்வாகிகள் எளிமையாகக் கையாள, ஒரு செயல்திட்டம் தேவை. ஏனெனில் பயனாளிளிடத்திலேயே form access செய்ய உதவி செய்யுங்கள்.

S.Bhuvaneswari said...

தமிழகம் ஊழலிலிருந்து விடுபடவேண்டும். நம் மாநிலத்தலைமை யின் பேச்சு பொது மக்களை வெகுவாக யோசிக்க வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை எங்களைப் போன்ற நிர்வாகிகள் எளிமையாகக் கையாள, ஒரு செயல்திட்டம் தேவை. ஏனெனில் பயனாளிளிடத்திலேயே form access செய்ய உதவி செய்யுங்கள்.

Thoduvanam said...

அருமையான முயற்சியில் இறங்கி இருக்கின்றீர்கள்.வெற்றி நிச்சயம்.

Thoduvanam said...

அருமையான முயற்சியில் இறங்கி இருக்கின்றீர்கள்.வெற்றி நிச்சயம்.