Thursday, February 03, 2022

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது (Feb 3 1969)

 அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது

...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்துப் பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது.


ஒரு நாட்டின் பெருமைக்குரிய ஜனாதிபதி மறைந்தபோது கூட இல்லாத அளவுக்கு மிக அதிகமான அவலக் குரலை வானொலியும், தமிழக அரசாங்கமும் அருவருக்கத்தக்க முறையில் இங்கு கிளப்பின. அந்தக் குரலோடு தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் குரலும் (இன்று அவர்களில் பலர் காங்கிரஸில் இல்லை.) சேர்ந்து ஒலித்தது எனக்குச் சகிக்க முடியாததாயிற்று. அவர்கள் எல்லாருமே காங்கிரசில் இருந்த காலத்தில் அண்ணாதுரையை மிகக் கடுமையாக வசைபாடியவர்களும் ஆவர். 'அண்ணாதுரை மாயை ' என்பதாக ஒன்று, பரிசுச்சீட்டு சீட்டு மாயை மாதிரி தமிழகப் பாமரர்களின் மீது கவிந்தது. அதற்குக் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் ஆட்பட்டார்கள்.

எனது நண்பர் கண்ணதாசன் காங்கிரஸ் இளைஞர்களுக்கொரு தளபதியாகப் பாவிக்கப்பட்டிருந்தும், அன்று அண்ணாதுரை மறைந்ததும் பகிரங்கமாக அழ ஆரம்பித்து விட்டார். காங்கிரஸ்காரர்களுக்குக் கொள்கை விளக்கம் தர வந்த 'கடிதம் ' என்னும் அவரது பத்திரிகை தொடர்ந்து அண்ணாதுரைக்கு நாமாவளி செய்ய ஆரம்பித்தது. இது குறித்து எனது விமர்சனங்களை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் அண்ணாதுரைக்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட அபிமானம் பற்றியே அதிகம் அழுத்தம் தந்தார். எனவே அதுபற்றி அவரிடம் பேசுவதில் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அவரோ, என்னிடம் அண்ணாதுரையின் 'பிரதாபங்கள் ' குறித்துப் பேசுவது மட்டும் அல்லாமல் என்னையும் அது குறித்துப் பேசுமாறு அழைத்தார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம். கவிஞர் கண்ணதாசன்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர். நான் முன்கூட்டியே அவரிடம் சொன்னேன். 'நீங்கள் அழைக்கிற எந்தக் கூட்டத்துக்கும் வந்து பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. அதே சமயத்தில் உங்கள் உணர்ச்சிகளுக்குப் புறம்பான சில உண்மைகளை நான் சொல்ல நேரும். அண்ணாதுரை மறைவு குறித்துப் பேசாமல் இன்றைய சூழலில் இந்த மக்கள் மத்தியில் வேறு அரசியல் விவகாரம் பேசுவது அபத்தமான காரியமாக இருக்கும். உங்களுக்குச் சம்மதம்தானா ? '

'உங்களுக்குப் பிறகுதான் நான் பேசப்போகிறேன்; நீங்கள் சுதந்திரமாகப் பேசுங்கள் ' என்று மிகுந்த நம்பிக்கையோடு சொன்னார் கவிஞர். நானும் ஒப்புக்கொண்டேன். எனது நண்பர்கள் பலர் அது குறித்து ஓரளவு அதிருப்தி கொண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் அண்ணாதுரையை விமர்சித்துப் பேசுவதை எந்தக் கட்சியைச் சேர்ந்த மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்கள் தவறாகக் கணித்திருந்தார்கள். மேலும் நான் விமர்சித்த பிறகு கண்ணதாசன் அவர்கள் அண்ணாதுரையை ஆதரித்தும் அவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தும் பேசப் போகிறார் என்பதனாலும் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது சில நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு அப்படிப்பட்ட சலனங்கள் ஏதும் ஏற்படவில்லை. அண்ணாதுரையைப் பற்றி இவர்கள் ஏற்படுத்துகிற மாயைகள் எவ்வளவு கனத்தவையானாலும் கரையத் தகுந்ததே என்பதை நான் தெளிவாக உணர்ந்திருந்தேன்.

திரு.அண்ணாதுரை மறைந்தபோது அரசியல் மரியாதைக்கோ, தனது சுயமரியாதைக்கோ சிறிதும் பங்கமில்லாமல் மிக நாகரிகமாகத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் திரு.காமராஜர் மட்டுமே ஆவார். அதற்கு அடுத்தபடி எந்தப் பிரிவில் என்னைச் சேர்த்துக் கொண்டாலும் அந்தப் பிரிவில் நான் மட்டுமே அந்த மாயையை எதிர்த்து உடனடியாகவும் பகிரங்கமாகவும் முதற்குரல் கொடுத்தவன். இது குறித்து எனக்கு இப்பொழுதும் மகிழ்ச்சியே ஏற்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசியவர்களெல்லாம் அண்ணாதுரையின் மேலான கலியாண குணங்களை எடுத்துக் காங்கிரஸ் தோழர்களுக்கு விளக்கினர். தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த தனிப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து நெஞ்சுருகினர். தேசியத் தினசரிகளெல்லாம் அண்ணாதுரை இறந்த அன்று விடுமுறை அனுஷ்டித்தன. மறுதினத்திலிருந்து அண்ணாதுரையின் வாழ்நாள் பெருமைகளையும், அவரது மரணத்தின்போது கூடிய பிரம்மாண்டத்தனத்தையும், அதன் மூலம் வெளிப்படுகிற மக்களின் 'அண்ணா அன்பை 'யும் வியந்து போற்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. எனக்கு முன்னால் பேசியவர்கள் உருவாக்கியுள்ள இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தினிடையே இதே சுருதிக்கு மாறான, இதை முற்றாகக் கலைத்துக் குலைக்கிற ஓர் இடியோசை எழுப்புவதன் விளைவைக் குறித்து நானும் கூட என்னுள் ஒரு கணம் தயங்கினேன். அந்தத் தயக்கம் ஒரு பாவனையே.

அந்தக் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரின் மனத்துடிப்பையும் நாடி பிடித்துப் பார்க்கிற மாதிரி ஒவ்வொரு முகத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பார்வையை அந்த முகங்களும் சந்தித்த பொழுது அவர்களும் என்னைப் போலவே எனது மனோ உணர்ச்சிகளைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் உணர்ந்தேன்.

நான் கடைசியில் பேசினேன்: (எனக்குப் பின்னால் பேசவிருந்த கவிஞர் அவர்கள், நன்றியுரைதான் கூற முடிந்தது.)

'இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு...

ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்...

காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல் உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நான்கு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ் காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்று பெரு மூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை...

அரசியல்வாதிகள் - அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் - அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

'எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்குச் சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை...

கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றால் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவற்றிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஓர் உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்துக் கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்குச் சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது....

என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மௌனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மௌனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ' - என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.

(நன்றி: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மக்களின் குரல் அப்படித்தான்...

மூடர் என்றுரைக்கும் மூடர்களுக்கு :-

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் - கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு...

காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் -
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு...

திண்டுக்கல் தனபாலன் said...

பேரறிஞர் என்று கழிசடை வெங்கோலனை அழைக்க முடியுமா...? இல்லை நினைக்கத் தான் முடியுமா...?