Monday, April 05, 2021

உருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்

என் இனிய தமிழ்ப்பிள்ளைகளே

கட்டளை ஒன்று

நான் விருப்பக்குறியீடு போட்டேன். பகிர்ந்தேன். பலருக்கும் கொண்டு சேர்த்தேன் என்பது முக்கியமல்ல. ஓட்டளிக்கும் நாள் அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று அவசியம் ஓட்டளியுங்கள். உங்கள் விமர்சனங்களை நான் பொருட்படுத்த மாட்டேன். உங்கள் திட்டுகளை கடந்து சென்று கொண்டேயிருப்பேன். உங்கள் ஆத்திரமும் கோபமும் வருத்தமும் உங்களுக்கு வளரும்படி தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருப்பேன். விவாதிக்க கற்று இருக்க வேண்டும். வாசிப்பை தவம் போல செய்தல் வேண்டும். 

விபச்சாரி கண்களுக்குத் தான் பார்ப்பவர்கள் அனைவரும் விபச்சாரிகளாகவே தெரிவார்கள். நீங்கள் விமர்சனம் செய்ய அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருப்பேன். காரணம் உங்கள் முகத்தை மற்றவர்கள் அறிய. என் நிதானத்தை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள. 

என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.



கட்டளை இரண்டு

தேர்தல் தினத்தன்று நெட்ப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் பக்கம் சென்று காலை அகட்டி வைத்துக் கொண்டு ரசித்துப் பார்த்து விட்டு அன்று ஓட்டளிக்காமலிருந்து விட்டு அடுத்த நாள் முதல் அரசியல்வாதிகளே சரியில்லை என்று திட்டாதீர்கள்.

கட்டளை மூன்று

நான் மிகவும் விரும்பிய இரண்டு பெண் அரசியல்வாதிகள் மேற்கு வங்க முதல்வர் மம்தா அவர்கள். முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வர்  மாயாவதி. இருவரும் பெண்கள் என்பதால் நிச்சயம் தன்னை உணர்ந்து நடந்து கொள்வார்கள். மக்களுக்கு உருப்படியாக ஏதேனும் செய்வார்கள் என்று நம்பினேன். சுக்கு நூறாக்கினார்கள்.

கட்டளை நான்கு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வாசித்தால் கேட்டால், உணர்ந்தால் உங்களால் மூன்று நாளைக்குத் தூங்க முடியாது. ஆனால் மாயாவதி பிட் கூட நகர்த்த வில்லை. நகர்த்த விரும்பவில்லை என்பது தான் சரியான வார்த்தை. ஆனால் இவர்கள் கிண்டல் செய்யும் யோகி அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் அசாதாரணமானது. இவர்கள் புலம்பலைக் கண்டு கொள்ளாதீர்கள். நிச்சயம் அதைப் பற்றி எழுதுவேன்.

கட்டளை ஐந்து.

மோடி அவர்களுக்கு எதிரான வலுவான கூட்டணி என்பது இந்தியாவில் உருவாக வாய்ப்பே இல்லை என்பதாகத் தான் தற்போதைய சூழலில் நான் இந்திய அரசியலைப் புரிந்து வைத்துள்ளேன்.  காரணம் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம் என்பதனை அரசியல் என்பதாக அடையாளமாக மாற்றி வைத்துள்ளார்கள். இவர்கள் எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை. ராகுல் கடைசி வரைக்கும் கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் சுற்றுவது என்பது அவர் கர்ம வினை.

கட்டளை ஆறு.

நான் பாஜக ஆதரவுத் தளத்தில் எழுதியதாக உங்கள் பார்வையில் என் எழுத்துக்கள் இருக்கிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால் இவை அனைத்தும் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் அற்புத மாற்றங்கள். நான் உண்மையைத்தான் எழுதி உள்ளேன். எவரும் மறுக்கவே இல்லை என்பதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உரையாட இணைப்புகளை வழங்கி இருந்தேன்.

கட்டளை ஏழு

ஓர் அரசியல் தலைவரால் உங்களையும் என்னையும் மாற்றுவது, வாழ வைப்பது முக்கிய கடமையல்ல. 140 கோடியில் நீங்களும் நானும் மைக்ரோ அளவுக்கு உண்டான துகள். நாம் தான் நம்மை உணர்ந்து வாழ வேண்டும். மோடிக்குப் பிறகு அடுத்தவர் வருவார். அவருக்குப் பின்னால் வேறொருவர் வருவார். நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும். ஆனால் நான் மாறவே மாட்டேன். புனைவுகளை நம்பிக் கொண்டிருப்பேன் என்றால் உங்களை எவராலும் மாற்ற முடியாது. நீங்கள் தான் தேடிப் படிக்க வேண்டும். நானே சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். உங்கள் அறிவு தான் வேலை செய்ய வேண்டும். உணர்ச்சிகளை எப்போதும் ஒதுக்கி வையுங்கள்.

கட்டளை எட்டு

எடப்பாடியார் ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில் என் குடும்பத்துக்கு, என் சந்தில் உள்ளவர்களுக்கு, என் தாலுகாவில் உள்ளவர்கள், என் உறவுக்கூட்டங்களில் எவரும் அதிமுக அரசியல்வாதிகளால் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று எவரும் என்னிடம் சொன்னதில்லை. என் மகள்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். இரவில் இரண்டு முறை காவல்துறை வாகனம் ரோந்துப் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது.

கட்டளை ஒன்பது

நீ ஏன் திமுக வை இந்த அளவுக்கு எதிர்க்கின்றாய்? என்று தொடர்ந்து கேட்பவர்களுக்கு

கொள்கைகளைப் பற்றிப் பேசாதீர்கள். அதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை. அதிமுக வில் உள்ளவர்கள் எவரும் புத்திசாலிகள் இல்லை. எவராவது உருட்டுகின்றார்களா? நீங்களும் இயல்பாக இருங்கள். எலைட் தனமான பேச்சுகளை நிறுத்துங்கள். வளர்ச்சித் திட்டங்கள் போதும். அதைப் பற்றிப் பேசுங்கள். இயல்பான மனிதர்களாக வாழப் பழகுங்கள். 

அடுத்தவர் நம்பிக்கைகள் பக்கம் செல்லாதீர்கள். உங்கள் வாழ்க்கை அணுகுமுறை வேறு. மக்களின் வாழ்க்கை எதிர்பார்ப்பு வேறு. காரணம் உங்கள் கடந்த வரலாறு அனைத்தும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்? 

அதிமுக வில் உள்ளவர்களைப் பற்றியும் தெரியும். அவர்கள் அலறுவதில்லையே? நீங்கள் ஏன் அலறுகின்றீர்கள்? உங்களை விட அறிவுஜீவிகளின் வேஷ்டி பேண்ட் நனைகிறது. ஊடக மக்கள் ஏன் ஒப்பாரி வைக்கின்றார்கள். கலைஞர் அரசியல் அவரோடு போகட்டும். நீங்கள் மாறுங்கள். நானும் மாறுகிறேன். 

அடுத்த கட்ட தலைவர்கள் உங்கள் கட்சியில் ஏராளமானபேர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு வந்து உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுங்கள். பெண்களை உண்மையாகவே மதியுங்கள். பாஜக வந்துரும் என்ற வார்த்தையை மாற்றுங்கள்.

காரணம் அவர்கள் இங்கே வந்து நுழைந்து தங்கள் இடத்தை அடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 

அவர்களுக்குத் தமிழக அரசியல் அதிகாரத்தை அடைவது பெரிய விசயம் அல்ல. ஆனால் தெற்காசியாவில் எதிர்காலத்தில் நிகழப்போகும் இராணுவ பதட்டத்தைக் குறைக்கத் தமிழகம் முக்கிய பங்காற்றப் போகின்றது என்ற சர்வதேச அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் மென்மையாக இந்த மாநிலத்தைக்  கையாள்கின்றார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். 

கூடவே இந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது அவசியம் என்பதனை உணர்ந்து புயல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

ஆயில் வர்த்தகத்தில் ஓபெக் நாடுகள் இந்தியாவை அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள் என்பதனையும், டேட்டா, தகவல் தொழில்நுட்பம், விரிவாக்கம் போன்ற விசயங்களில் சீனா எந்த அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது போன்ற நல்ல விசயங்களைப் புரிந்து மத்திய அரசோடு இணக்கமாக இருந்து காரியம் சாதிப்பதை உங்கள் அப்பாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

கூலிக்கு மாரடிக்க வந்திருக்கும் பீகார் பிள்ளைக்கு இங்கு மட்டுமல்ல. மேற்கு வங்கத்திலும் எப்படி பாஜக திவசம் செய்யப் போகின்றது என்பதனைப் பார்த்தாவது நீங்கள் மாற வேண்டும்?

சில்லறைப்பயல்களை இணையத்தில் பிக்காளித்தனமாக செயல்படுவதை நிறுத்தச் சொல்லுங்கள்.

பாஜக உங்களுக்கு அதனை இனி வரும் காலங்களில் கற்றுக் கொடுக்கும்.

(சுபம்)

நன்றி வணக்கம்.

12 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

இத்தனை விளக்கங்களோடு கட்டளைகள் அவசியமே இல்லை ஜோதிஜி! புரிந்துகொள்ள மனமிருப்பவர்கள் இதெல்லாம் இல்லாமலேயே புரிந்துகொள்வார்கள், மனமில்லாதவர்கள் விதண்டாவாதம் செய்துகொண்டே இருப்பார்கள், பேசிப்பயன் இல்லை.

திமுகவின் கதையை ஆரம்பகாலத்திலிருந்து பார்த்தோமானால் வெற்று வசனங்கள், விதண்டாவாதங்கள், ஆபாச அவதூறுகள் என்றே இருந்துவருவதைப் பார்க்க, புரிந்துகொள்ள முடியும், இவர்களுடைய சமூகநீதி, நெஞ்சுக்கு நீதி என்பதெல்லாம் பசப்புவார்த்தைகளே அன்றி, காரியத்தில் ஆனது ஒன்றுமில்லை.

மாற்று அரசியல், மாற்றத்துக்கான அரசியல் என எதையும் இவர்கள் வளரவிட்டதில்லை, தாங்களும் முன்னெடுத்ததில்லை. தங்களுடைய அசுரத்தனமான பிரசாரங்களிலேயே ஜனங்கள் வேறுபக்கம் போய்விடாதபடி பார்த்துக் கொண்டதில் இவர்களைத் தாண்டி மாற்றத்துக்கான அரசியலை ஜனங்களும் தேடியதில்லை என்ற தேக்கத்தை உடைக்கிற தேர்தலாகவே இந்த சட்டசபைத் தேர்தல் இருக்கிறது.

போட்டி இரண்டுகழகங்களுக்கிடையில் தான் என்று இதுவரை இருந்ததை மாற்றி, போட்டி எங்களுக்கும் பிஜேபிக்கும் தான் என்று மாற்றியது திமுகவின் மிகமுக்கியமான சறுக்கல்.

அதிலேயே பிஜேபி தனது முதல்வெற்றியை அடைந்துவிட்டது. அண்ணாமலை IPS போன்ற இளம் பிஜேபி வேட்பாளர்கள் திமுகவின் அரவக்குறிச்சி formula வை, சிறுபான்மையினர் ஏரியாவுக்குள் இதர கட்சியினர் நுழையமுடியாதபடி இருந்த தடையை மிகச் சாதாரணமாக உடைத்தெறிந்திருப்பது இந்தத் தேர்தலில் திமுகவின் சரிவுக்கு கட்டியம் கூறியிருக்கிறது (இதை மதுரை அல்லது வேறு பகுதிகளில் அமைச்சர்களாலேயே செய்ய முடிந்ததில்லை என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்)

மாற்றத்துக்கான அரசியலை தமிழகத்தில் பிஜேபி முன்னெடுத்து வருவதில், மாநிலம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோருமே பிஜேபிக்கு ஆதரவாக இருக்க வேண்டும், சந்தேகமே இல்லை.

ஜோதிஜி said...

ஃபேஸ்புக், ட்விட்டர் ஆட்சி செலுத்தத் தொடங்குவதற்கு முன்பு வலைபதிவு என்றொரு உலகம் இருந்தது. ஒவ்வொரு பதிவுகளுக்கு 200 முதல் 1000 விமர்சனங்கள் வரைக்கும் கூட வரும்.
ஆனால் ஒவ்வொருவரும அரசியல் சார்ந்து எழுதினார்கள். ஆனால் எவரும் வெளிப்படையாக அரசியல் கட்சிகள் சார்ந்து இயங்கவே இல்லை. அதுவொரு கனா காலம் போல அழகாக அமைதியாகவே இருந்தது.
ஆனால் புண்ணியவான்கள், புத்திசாலிகள், குறுக்குப்புத்தி உள்ளவர்கள், மதத்தை மனதிற்கு வைத்து மறுகிக் கொண்டிருந்தவர்கள் தாங்கள் விரும்பிய கட்சியின் பக்கம் ஒவ்வொருவரையும் படிப்படியாக இழுத்துக் கொண்டேயிருந்தார்கள்.
படித்தவன், படிக்காதவன், எழுதத் தெரிந்தவன், கூட்டம் அதிகம் உள்ளவன், இல்லாதவன், புத்தகம் போட ஆசைப்பட்டுக் காத்திருந்தவன், எழுத்தாளர் என்ற பிம்பத்தைச் சுமக்கத் தயாராக இருந்தவன் என்று ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விலை வைத்து திமுக பக்கம் இழுப்பதில் சிலர் வெற்றியடைந்து அதுவே ஃபேஸ்புக் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
எங்கு பார்த்தாலும் இவர்கள் ஆதிக்கம். இவர்களை எதிர்ப்பதே பாவமானது. வாய்ப்பில்லை. நம் மரியாதை போய்விடும். தப்பாக எடுத்துக் கொள்வார்கள். வேறு பெயர் சூட்டி விடுவார்கள். அநாகரிகமாகப் பெயரைக் கெடுத்து விடுவார்கள். சிலவற்றை அம்பலப்படுத்தி விடுவார்கள் என்பது போன்ற பயத்தில் உருவானது தான் இன்றைய இணைய திமுக கூட்டம். விதிவிலக்குள் உண்டு என்பதனை மறுக்க மாட்டேன்.
ஆனால் இந்த தேர்தல் ஆச்சரியமானது. வித்தியாசமானது.
இலக்கியம் மட்டும் பேசுவேன் என்று சொன்னவன் நீ திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் என்று முடிக்கிறான்.
மதக் கலவரம் வந்து விடும் என்று மற்றொரு கேணச்சிறுக்கி பயமுறுத்துகிறாள்.
தாலி கட்டாமல் வாழ்வது எனக்குப் பிடிக்கிறது என்று அரைகுறை ஆடையில் மற்றொருத்தி கிட்ட வந்து முகத்தைக் காட்டி பயமுறுத்துகிறாள்.
ஒன்றா? இரண்டா?
காரணம் கேட்டால் பெரியார் மண் என்கிறார்கள். சமூகநீதி என்கிறார்கள்.
நெருக்கமாக விளக்கச் சொன்னால் இன்றைக்கு நீ போட்டு இருக்கிற பேண்ட்டில் உள்ள ஜிப் எங்கள் அய்யா கலைஞர் கண்டு பிடித்தது என்று திகிலை உருவாக்கிறார்கள்.
இந்த முறை அதிமுக பாஜக சார்பாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேர்களையும் நீங்கள் அதி தீவிரமாகச் செயல்பட்டே ஆக வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையை விதைத்த இணைய திமுகவினருக்கு நாம் எடப்பாடியார் மற்றும் மோடி சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கிரி said...

ஜோதிஜி நான் சமூகத்தளங்களில் இல்லை அதனால், உங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து தெரியவில்லை.

பாஜக வின் திட்டம் என்பது மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தை குறி வைப்பதாக இருக்கும்.

அமித் ஷாவை தமிழகத்தில் பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் களத்தில் இறங்கும் போது தெரியவரும்.

பாஜக இன்னும் முழுமையாகத் தமிழக களத்தில் இறங்க வில்லை. அதற்கு முன்பே இங்கே பாஜக பற்றியே பேச்சு :-) .

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதிமுக தோற்றாலும் வெற்றி பெற்றாலும் பலனடைவது பாஜக தான்.

ஜோதிஜி said...

ஜோதிஜி நான் சமூகத்தளங்களில் இல்லை அதனால், உங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து தெரியவில்லை.
புரியவில்லை? என்ன குற்றச்சாட்டு எழுதியிருக்கேன்?

வருண் said...

என்னங்க நீங்க ரெட்டை இலைக்கு ஆதரவா? எனக்குப் புரியலைங்க நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு. ஆனால் ரெட்டை இலை பதிவில் இருக்கனால நீங்க ஆதரவுனு நெனச்சேன்.

ஆக, ஸ்டாலின் முதல்வராகப் போறாரு போல இருக்கு!

அமுதவன் சார் சந்தோசப் படுவார்னு நினைக்கிறேன். அவர் சந்தோசப் படுவதை பார்த்து ஆறுதல் அடஞ்சுக்கோங்க! :)

வருண் said...

இந்தம்மா வானதி ஶ்ரீனிவாசன் (பி ஜே பி) நம்ம கமலை தோற்கடிச்சுட்டாங்க போல! நீங்க பி ஜே பி ஆதரவுதானே? இருந்தாலும் கமல் தோல்விய உங்களால கொண்டாட முடியாதுனு எனக்கு தோனுது. ஏன்னு தெரியலை! :)

ஜோதிஜி said...

நலமா வருண்? கமல் க்கும் எனக்கும் என்ன தொடர்பு? எனக்குப் புரியவில்லை.

ஜோதிஜி said...

முழுமையாகப் படித்தால் யாருக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்பது உங்களுக்கு புரிய வரும்.

வருண் said...

நீங்க நினைப்பதுபோல் இதில் புதிரெல்லாம் எதுவும் இல்லைங்க. தன் முதுகு தனத்துத்தான் தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியும்.
மற்றபடி அமுதவன் சார்க்கு மு க மேல் வெறுப்பு இல்லை. ஸ்டாலினையும் வெறுப்பதுபோல் தெரியாது. அதனால் சொன்னேன்.

வருண் said...

இந்த கொரோனா காலத்திலும் நல்லாத்தாங்க இருக்கேன். :) நீங்களும் நலம்னு நம்புறேன்..

----

எனக்கும்தாங்க நீங்க சொல்வது எழுதுவது எதுவுமே புரியலை. என்ன பண்றது?

நல்லவேளை, கமல்னா யாருனு நீங்க கேக்கல. அப்படி கேட்டிருந்தால்க்கூட ஆச்சர்யப் பட ஒன்னுமில்லை. நான் அப்புறம்.. ராமநாதபுரத்தில் பிறந்து பரமுக்குடியில் வளர்ந்து, பிறந்த ஊரை பரமக்குடினு சொல்லிக்கொண்டு திரிகிறவர்னு ஆரம்பிச்சு களத்தூர் கண்ணம்மால ஆரம்பிச்சு, கவுதமியைப் பத்தி சொல்லி, அப்துல்கலாம் பத்தி சொல்லி, கோயமுத்தூர் சவுத் வரை வந்து வானதி ஸ்ரினிவாசன் பத்தியெல்லாம் விவரிக்க வேண்டியதில்லாமப் போச்சு! :)

ஜோதிஜி said...

பாஜக கட்சியில் தீவிரமாக இருப்பவர்கள் என்னை தமிழ் தேசிய வாதி என்கிறார்கள். இங்கு திமுக விற்கு ஆதரவு தளத்தில் இருப்பவர்கள் என்னை பாஜக ஆதரவாளர்கள் என்கிறார்கள். ரஜினியை விரும்புகின்றவர்கள் நான் கமல் ஆதரவாளர் என்கிறார்கள். என்னளவில் கடந்த ஆறு வருடங்களில் பாஜக அரசாங்கம் உருவாக்கிய மாற்றங்கள் மூலம் எளிய மனிதர்கள் அரசின் திட்டங்களை மிக எளிதாக பெறக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதால் பாஜக அரசின் மூலம் திட்டங்கள், நடைமுறைகள், சீர்திருத்தங்கள் அனைத்தையும் நான் வரவேற்கவே செய்கின்றேன். செய்வேன். தனி மனிதர்களுக்கு ஆதரவு தளத்தில் நான் என்றும் செயல்பட்டதில்லை. செயல்படவும் மாட்டேன். நிறுவனமோ அரசாங்கமோ சிஸ்டம் என்பது இல்லாமல் இருந்தால் என்னவாகும் என்பது நீங்கள் வாழும் நாட்டில் உள்ள நடைமுறைகள் மூலம் அறிந்தே இருப்பீர்கள். இந்தியாவிலும் அப்படியான மாறுதல்கள் என் வாழ்நாளுக்குள் உருவாக வேண்டும் என்பதே என் எண்ணம். ஆசை. அதற்கு நான் பார்க்கும் சமூகத்தை, உணர்ந்தவற்றை என் மொழியில் எழுதவே விரும்புகிறேன். செய்வேன்.

ஜோதிஜி said...

எந்த நண்பர்களையும் அவர்கள் விரும்பும் மதம் சாதி கட்சி வைத்து நான் பார்ப்பதில்லை. பழகுவதில்லை. அப்படியே அவர்கள் பார்த்தால் அது என் பிழையல்ல. நான் கண்டு கொள்ளவும் மாட்டேன். காலம் கற்றுக் கொடுக்கும். ஆனால் நண்பர்கள் என்பதால் நான் உணரும் உண்மைகளை எழுதாமல் இருக்கவும் மாட்டேன். அவர்கள் வருத்தப்படுகின்றார்கள் என்பதற்காக பொய்யை உண்மை என்பது போல எழுத மாட்டேன். மாற்றுக் கருத்து என்றாலும் அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வேன். நான் மாற வேண்டும் என்றால் என்னை மாற்றிக் கொள்ள தயாராகவே உள்ளேன். அப்படியொரு சூழல் இதுவரையிலும் உருவாகவில்லை.