Friday, February 19, 2021

எல்லை மீறிய அம்மையார் கிரண்பேடி

கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவுக்குச் சொல்லும் ஆங்கில நூலின் பெயர் Dare to Do. "நான் துணிந்தவள்" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்ப்பு நூலும் உண்டு.  

ஆங்கிலத்தை வாசித்து விட்டு தமிழ் நூல் வெளியான சமயத்தில் வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன். இரண்டு முறைக்கு மேலாக பத்து வருடங்களுக்கு முன்பே வாசித்துள்ளேன்.  சென்ற வருடக் கொரோனா சமயத்தில் மகளிடம் இதனை முழுமையாக வாசித்து விடு என்று கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அற்புதமான அழகான புத்தகமது. 




பெண்கள், பெண் குழந்தைகள், மாணவிகள் அவசியம் படிக்க வேண்டி நூல் அது. கிரண்பேடியின் ஆதி அந்தம் முதல் படிப்படியாக எழுதப்பட்டு இருக்கும். 

இளமைப்பருவத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் கடந்து வந்த தடைகள், அவரின் விளையாட்டு ஆர்வம், குடும்பச் சூழல், வட கிழக்கு மாநில கலாச்சாரங்கள் என்று பல பக்கம் சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருக்கும்.

"நீ பெண். உன்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது" என்று உயரதிகாரி எச்சரித்த போது என்னால் முடியும் என்று கொடி அணி வகுப்பில் கலந்து வென்ற அசாத்தியம் தொடங்கி, இந்திரா காந்தி வாகனத்தைச் சாலையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தும் சாகசங்கள் வரைக்கும் படிப்படியாகத் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவற்றை விட இவருக்குத் தண்டனையாக வழங்கப்பட்ட திஹார் சிறை பணி தான் இவர் வாழ்க்கையில் உச்சக்கட்ட உன்னதம்.

உறுதியாகச் சொல்ல முடியும். கிரண்பேடி அம்மையார் சாதித்த சாதனைகளை வேறு எவராலும் சாதித்து இருக்கவே முடியாது. நெஞ்சுரம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு அது தான். 

அங்கிருந்த சூழலில் எவராலும் சரி செய்யவே முடியாத குழப்பமான சிஸ்டம்.  நாற்றம் பிடித்த சுகாதாரமற்ற சூழல். கீழிருந்து மேல் வரைக்கும் அங்கெங்கிணாதபடி வியாபித்திருந்த ஊழல்.  தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்த போதைப் பொருட்கள், போதைக்கு அடிமையான அதிகாரிகள், காவலர்கள்,  பாரபட்சம் நிறைந்த பாசாங்கும் நிறைந்த அதிகாரிகள். இபிகோ சட்டத்தை மதிக்காத உயர் அதிகாரிகள். வேலை செய்யவே விரும்பாத உயர் வர்க்கம் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் மலையின் உச்சியில் கவிழ்ந்து எப்போது வேண்டுமானாலும் உருளத் தயாராக இருக்கும் வாகனம் போலவே அன்றைய திகார் இருந்தது. அம்மையார் உள்ளே நுழைந்து படிப்படியாக அதனை மாற்றி வென்றார் என்பதனை அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்குப் பிரமிப்பைத் தரக்கூடும்.

ஆனால் டெல்லியில் முதல்வராக முகம் காட்டி பாஜக அடிவாங்கித் தோற்று, அதன் பிறகு என்ன காரணத்தினாலோ வாய்ப்பு வழங்கப்பட்டு அம்மையார் புதுச்சேரி வந்து அவரின் செயல்பாடுகள் தொடங்கிய போது வெறுத்துப் போனேன்.

இது ஜனநாயகம். மக்களாட்சி. வெறுத்தாலும் விமர்சித்தாலும் இதன் மூலம் தான் மக்களுக்குக் கொஞ்சமாவது நல்லது நடந்து கொண்டிருக்கிறது என்பதனை துளி கூட உணரத் தயாராக இல்லை என்பதோடு இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் கேலிக்குரியதாக இருந்தது.  

மற்றவர்கள் போல பாஜக தூண்டுதல் அடிப்படையில் தான் இவர் செய்து கொண்டிருந்தார் என்பதனை நான் நம்பத் தயாராக இல்லை. பாஜக தங்கள் கொள்கைகளுக்குச் சாதகமானவர் என்ற நிலையில் தங்கள் கட்சி சார்ந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கின்றது.  ஆனால் தினசரி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குவதில்லை. முக்கிய அரசியல் சூறாவளியின் போது தான் ஆளுநரை தங்களுக்குரியவராக வைத்துக் காய் நகர்த்துகின்றார்கள். இது நாம் பாரத்துக் கெண்டிருக்கும் எதார்த்தம்.

ஆனால் இந்த அம்மையார் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டேயிருந்தார். இஆப, இகாப என்ற பதவி என்பது அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாலமாக இருப்பது என்பதனை மறந்து தானே முதல்வர் என்கிற ரீதியில் செயல்பட நாராயணசாமியின் அரசியல் வாழ்க்கை ஆப்புக்குள் சிக்கிய குரங்கு போல் ஆனது.  எங்கும் அவரால் கை வைக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம். அதே சமயத்தில் மக்கள் சார்ந்த எந்த நலத்திட்டத்தை நிறைவேற்றவும் முடியவில்லை. விவசாயி இங்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.  

இவரைப் போல பத்து சதவிகிதம் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்த சட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டார். பொங்கல் பரிசுப் பணத்தை வாய்ப்பே இல்லை என்று மறுத்து விட்டார். ஒன்றல்ல. பல திட்டங்கள் அதோகதியானது.

சிங்கத்தை அடக்கிக் காட்டியவரை நாம் பிரமிப்பாகப் பார்ப்போம். ஆனால் அவர் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது.  குடும்ப வாழ்க்கையில் எப்படி விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் என்ற அடிப்படைத் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார். இதே நிலைமை தான் இந்த அம்மையாரும்.

டெல்லியில் வில்லை வளைத்தார். காற்றை நிறுத்தினார். மணலை கயிறாகத் திரித்தார் என்பது நம்ப வேண்டிய உண்மை.  ஆனால் திருமணம் ஆகி உங்கள் மகளுக்குச் சுடுதண்ணீர் வைக்கத் தெரியலையே? என்று புகுந்த குடும்பம் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இவர் சென்ற பிறகு புதுச்சேரி கதை கந்தலாகியது.  

ஏற்கனவே மாவட்டம் போல உள்ள புதுச்சேரியில் இதுவரையில் ஆண்ட ஒருவர் கூட அந்த குறைந்த அளவு மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவே இல்லை.  கரணம் தப்பினால் மரணம் என்று தான் அந்தப் பகுதி மக்கள் இயற்கை சீற்றத்துடனும்  அரசியல்வாதிகளுடனும் போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் பாஜக தலைமை இவர் மேல் கோபமாக இருக்க வாய்ப்புள்ளது என்பதற்கு முக்கியக் காரணம் முன்கூட்டிய தகவல் ஏதும் அறிவிக்காமல், நீக்கம் என்று அவமானப்படுத்தி வெளியே துரத்தியதும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகின்றது.  இதற்குப் பின்னால் வரப்போகின்ற தேர்தலுக்காக என்று அரசியல் காரணங்கள் தேடினாலும் தமிழிசை அடுத்த நாளே வந்து பதவியேற்க உத்தரவு வந்தது முதல் ஒவ்வொன்றாகக் கோர்த்துப் பார்த்தால் கிரண் அம்மையார் எல்லை தாண்டிப் போய்விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

இதனை மற்றொரு விசயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். இப்போது ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் அம்மையார் ஸ்மிருதி ராணி அவர்கள் சென்ற முறை அமைச்சராக இருந்த போது அவர் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒன்றாகச் சேர்ந்து போர்க்கொடி உயர்த்தினர். இந்த அம்மாவுக்குப் பேசவே தெரியவில்லை. அதிகாரிகளைக் கையாளத் தெரியவில்லை. இவரை நீக்கினால் தான் ஆயிற்று என்று பெரிய போராட்டத்திற்குத் தயாராக இருந்தனர்.  பிரதமர் அலுவலகம் முதல் முறை ஓலை அனுப்பியது. அடுத்த முறைக் குப்பைத் துறைக்கு அனுப்பி வைத்தது.  இந்த முறை ஜவுளித்துறையில் உண்மையிலேயே சிறப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.  பேச்சைக் குறை. செயலில் காட்டு என்று வந்த உத்தரவு அம்மையாரை வழிக்குக் கொண்டு வந்திருக்கும் போல. இருக்கும் இடமே தெரியாமல் பணியில் வேகம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.  ஆனால் கிரண்பேடி நிலைமை வேறு.

துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் அரசியல்வாதிகளை நாம் அனைவரும் வில்லனாகவே பார்க்க கற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் கொடூர இடி அமீன்கள் போன்ற அதிகாரவர்க்கத்தினரை நாம் அனைவரும் அறியாமல் தான் இருக்கின்றோம்.  காரணம் அவர்கள் சிஸ்டம் என்ற பெயருக்கும் சிருங்கார வாழ்க்கை வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

அம்மையார் தன் குடும்ப வாழ்க்கை, தன் மகளின் வாழ்க்கை (பேத்தி கூட இவரைத் திட்டி வீடியோ வந்தது) என்று தொடங்கி தன் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை அனைத்திலும் தோற்றவர்.  அனைத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டி புதுச்சேரியில் காட்டியதால் நாராயணசாமி சிக்கி சின்னபின்னாபட்டு சிதறுண்டு போய் இப்போது சிரித்த சாமியாகச் "சனியன் தொலைந்தது" என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

இறந்தவர் கற்றுக் கொடுத்த பாடம்

பொய்யுலகில் டேட்டா மனிதர்கள்

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கிரண் பேடி எழுதியுள்ள நான் துணிந்தவள் நூலைப் படித்துள்ளேன். அவருடைய மன உறுதியைக் கண்டு அதிசயிப்போரில் நானும் ஒருவன். இருந்தாலும் சில சமயங்களில் அவர் எல்லை மீறுவதையும் பார்த்துள்ளேன். புதுச்சேரி நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டது.

ஸ்ரீராம். said...

//ஆனால் தினசரி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குவதில்லை. முக்கிய அரசியல் சூறாவளியின் போது தான் ஆளுநரை தங்களுக்குரியவராக வைத்துக் காய் நகர்த்துகின்றார்கள். இது நாம் பாரத்துக் கெண்டிருக்கும் எதார்த்தம்.//

உண்மை.