Tuesday, February 09, 2021

வணிக வெற்றி ????

இது சில நாட்களுக்கு முன் நடந்த உண்மைக் கதை. இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சமீப காலமாக நண்பர்கள் அனைவரும் தனியார் முதலாளிகள் மூலமாகத்தான் இந்தியா முன்னேறும். அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விடியக்காத்தாலே எழுந்து பார்ப்பதற்குள் வங்காள விரிகுடா பக்கம் கொண்டு போய் தள்ளி அமுக்கி கொன்று விட்டால் போதும் என்கிற ரீதியில் உணர்ச்சி வசப்படுகின்றார்கள். அதற்குப் பின் இணைப்பாக 90க்குப் பிறகு நாம் அடைந்த இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் தனியார் முதலாளிகள் தான் என்கிறார்கள்.  



அது அப்படியே உண்மையாகவே இருக்கட்டும். கடந்த 30 ஆண்டுகளில் எந்த அளவுக்கு வளர்ச்சி என்ற வார்த்தையைச் சந்தோஷமாகப் பார்க்கின்றோமோ அதற்குப் பின்னால் இழந்த இறந்த எந்த விசயத்தையும் நாம் பார்க்க வேண்டாம்.  

ஆம். வெற்றிக்கதைகள் மட்டுமே இங்கே மதிக்கப்படும்.  மற்றது அனைத்துமே புலம்பல் தான்.  இருக்கட்டும்.

இப்போது நாம் கதைக்கு வருவோம்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தை நீண்ட நாளைக்குப் பிறகு ஒவ்வொன்றாக சில தினங்களுக்கு முன் பார்த்த போது நம் ரயில்வே துறையின் சாதனை, உழைப்பு, உன்னதம் போன்ற அனைத்தும் பளிச்பளிச் என்று மின்னியது.  நான் ஏறிய ரயில் சுத்தம் ஆச்சரியப்படுத்தியது. இருக்கை வசதிகள் அசரடித்தது. குறிப்பாகக் கழிப்பறை சுத்தம் என் கண்களை வியப்பில் ஆழ்த்தியது.  ஆகா ஆடிட்டராக இருந்தாலும் பியூஷ் கோயல் சாதித்து விட்டார் என்று மனமகிழ்ந்தேன்.

ரயில் நிலையம் உள்ளே அடையார் ஆனந்த பவன் என்றொரு கடையை மட்டும் அந்தச் சமயத்தில் பார்த்தேன்.  உள்ளே விலைப்பட்டியல் ஒவ்வொன்றையும் பார்த்து விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவான்களையும் பார்த்து, விலையை ஒப்பிட்டு மனதிற்குள் குறித்துக் கொண்டேன். அவர்கள் கொடுத்த தயிர் சாதம் விலை அறுபது ரூபாய் அத்துடன் ஜிஎஸ்டி 3 என்று சொன்ன போது எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு இது வேற லெவல் என்று வந்து விட்டேன்.   பெரும்பாலும் வெளியே சென்றால் எதுவும் சாப்பிடுவதே இல்லை.  காரணம் வீட்டில் இருந்தால் தின்று கொண்டே இருக்கும் வாய்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.

ரயிலுக்குள் எப்போதும் அதிகமான நபர்கள் ஏதாவது ஒன்றை விற்றுக் கொண்டே வருவார்கள். எவரையும் காணவில்லை. எனக்கு யோசிக்கத் தெரியவில்லை. அப்போது வந்தவர் ஓர் டப்பாவில் வெஜ் பிரியாணி மற்றும் புலாவ் என்று சொல்லிக் கொண்டே வந்த போது பசி வாங்க வைத்தது.  எப்போதும் உணவுப் பொருட்களை வாங்கும் போது பலவிதங்களில் சோதித்து, நிதானித்து வாங்கிய பின்பு தான் பணத்தைக் கொடுப்பதுண்டு. ஆனால் நான் செய்த தவறு அடுத்த பஞ்சாயத்தை இந்தியா முழுக்க கொண்டு செல்லும் கனவிலும் நினைக்கவில்லை.  

டப்பாவைப் பிரித்தவுடன் சுடுதண்ணீரில் வேக வைத்த அரிசி அத்துடன் கலக்கப்பட்ட மஞ்சள் தூள் சில பட்டாணிகள். கொடுத்த நபர் சென்றுவிட்டார்.  உணவு என்பது என் உயிரோடு தொடர்புடையது. அந்த சாதம் ரேசன் அரிசி தரத்தில் இருந்தது. விலை 90 ரூபாய். அருகே இருந்தவர்கள் என்னையும் என் கோபத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மகள்கள் என்னப்பா அடுத்து ட்விட்டரைத் திறக்கட்டுமா? என்று நக்கல் செய்தனர். அதற்குள் அவர்களே புகைப்படமும் எடுத்து வைத்து விட்டனர்.

ட்விட்டரில் ஆதங்கத்தைக் கொட்டி விட்டு சாப்பாட்டை மூடி வைத்து விட்டு, கோபத்தை அடக்க முடியாமல் ரயில் வாசல்படி அருகே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு கோபத்தை மடைமாற்ற முயன்று கொண்டிருந்த போது இருவர் என்னிடம் வந்தனர்.  என் இருக்கை என் பெயர் சொல்லி உறுதிப் படுத்திக் கொண்டனர்.  ஒருவர் அந்த ரயிலில் வழங்கப்பட்டு உணவுப் பொருட்களுக்கு ஒப்பந்தக் காரர்.  மற்றொருவர் வழங்கப்படும் பொருட்கள் அதிகமான விலை வைக்கின்றார்களா? என்பதனை சோதிக்கும் இளைஞர்.

இளைஞர் பக்குவமாகப் பேசி என் கோபத்தைக் குறைக்க முயன்றார்.  அப்போது தான் என் ட்விட்டரை அவர்கள் இருந்த போது திறந்த பார்த்தேன்.  ஆயிரம் பேர்கள் பார்வையிட்டு இருந்தனர்.  மீடியா மக்கள் மட்டும் 780 பேர்கள் பார்வையிட்டு இருந்தனர்.  பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

அந்த இளைஞரிடம் நான் கோபப்படவில்லை. பொறுமையாகப் பேசி அனுப்பி விட்டேன். ஒப்பந்தக்காரர் அரை மணி நேரம் பேசினார். கொரோனா சிறப்பு ரயில் என்கிற ரீதியில் தொற்று நோய் பரவக்கூடாது என்பதற்காகக் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் மட்டும் வழங்கப்படுகின்றது என்பது தொடங்கி ரயில்வே நிர்வாகத்தில் நடந்த, நடக்கும், நடக்கப்போகின்ற மாறுதல்கள், பாதிக்கப்படும் மக்கள், கொள்ளை நோய் என்பதனை மட்டும் வைத்துக் கொண்டு கொடூர லாபம் அடிக்கும் நிறுவனங்கள் என்பது போன்ற பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நான் ட்விட் செய்த அரை மணிநேரத்தில் நிர்வாக அதிகாரிகள் செயல்பட்ட விதம் ஆச்சரியமளித்தது உண்மை. பதில் அளித்து புகார் எண் கொடுத்து அதற்கடுத்து ஒவ்வொரு செயல்பாடுகளும் நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தாலும் பத்து ரூபாய்க்கு பெறுமானம் இல்லாத அந்த டப்பா (200 கிராம்) மூலம் தமிழகம் முழுக்க இந்த நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்துக் கொண்டு இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.

இப்போது ஒரு நிறுவனம் என்றால் அதற்கு என அரசாங்கம் நிர்ணயித்துள்ள பல தரம் சார்ந்த விசயங்கள், தகுதிச் சான்றுகள் சார்ந்த பலபடிகளைக் கடந்து வந்து தான் இந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எடுத்து இருக்கும்.  இதில் தவறில்லை.

எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவெனில் திருப்பூரில் ஒரு பார்சல் சாப்பாடு (தரமான உணவகத்தில்) ரூபாய் 85.  உணவகத்தில் சாப்பிட்டால் 70 ரூபாய்.

இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் சென்று பார்த்த போது இவர்களின் பாணி வெந்த நீரில் அரசியை நனைத்து அப்படியே புதுப்புது பெயரிட்டு வழங்குவது என்பதாகவே இருந்தது. அது அவர்களின் தொழில். 

ஆனால் ரயில்வே நிர்வாகத்தில் ஒர் உணவு, அதன் தரம், அதன் அளவு, நிர்ணயித்துள்ள விலை இவற்றை ஒப்பிட முடியாத அளவுக்குத் தத்தியாக இருக்கின்றார்களா?  நகர்ந்து கொண்டிருக்கும் ரயில் போன்ற இடங்களில் வழங்கப்படுகின்ற உணவுக்கு காரண காரியங்களோடு அதன் விலை வித்தியாசம் என்றாலும் அதிகபட்சம் இருபது ரூபாய் பொருளை 90 ரூபாய்க்கு விற்க அனுமதிக்கின்றார்கள் என்றால் இதற்குப் பெயர் முதலாளித்துவம் என்பதா? அல்லது நீ எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்பதா? இஷ்டம் இருந்தால் வாங்கித் தின்று. இல்லையென்றால் பசியோடு போய்க்கோ? என்பதா?

சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்ல? ஒவ்வொரு ரயில் நிலையங்களையும் சுத்தமாக வைத்திருப்பதைப் பார்க்கும் போது அசாத்தியமான சாதனை புரிந்த அரசு நிர்வாகத்தினரால் இதனைச் சாதிக்க வேறு வழியைக் கண்டுபிடிக்கத் தெரியாத தத்திகள் தான் இந்தத் துறையில் பொறுப்பாளர்களா இருக்கின்றார்களா? இல்லை தனக்குக் கிடைத்த பருப்பு காரணமாக அமைதியாக இருக்கின்றார்களா?

300 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தில் தொற்று நோய் பரவும் என்ற பூச்சாண்டியை வைத்துக் கொண்டு ஏறக்குறைய நூற்றுக்கணக்கான முறைசாராப் பொருளாதாரத்தில் அன்றாடக்கூலி, வியாபாரம் செய்பவர்களை அவர்களின் வியாபாரங்களை முடக்கி ஒரு தனி நிறுவனம் கொள்ளையடிக்க அனுமதிப்பதற்கு என்ன காரணம் நண்பர்கள் சொல்வார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளை விட அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களின் அயோக்கியத்தனத்தினால் இங்கு நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னாலும் பல கோடி மக்கள் இன்னமும் கையேந்தி தான் வாழ்க்கை ஓட்ட வேண்டியதாக உள்ளது. இது தான் பொன் முட்டையிடும் பொதுத்துறை நிறுவனங்கள் சரிவுக்கு முக்கியக் காரணம். 

எங்கு எவருக்கு ஆப்பு அடிக்க வேண்டுமோ? என்ன மாறுதல்கள் உருவாக்க வேண்டுமோ?  எப்படிச் சட்டதிட்டத்தை மாற்ற வேண்டுமோ? அது குறித்து ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படாத காரணத்தால் இன்னமும் இங்கே ஆசிரியர்கள் வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கின்றார்கள். அரசு ஊழியர்கள் சீட் தேய்த்துப் போய்க் கொண்டிருக்கின்றார்கள் என்று நாமே நம் முகத்தைக் கண்ணாடியைப் பார்த்துக் காறித் துப்பிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு லட்சம் டப்பா.  ஒரு டப்பாவிற்கு என்பது ரூபாய் லாபம். இது அந்த நிறுவனத்தின் வணிக வெற்றி என்று நீங்கள் சொல்வீர்கள் எனில் 

உங்கள் பொங்கத்தனமும் வேண்டாம். உங்களின் பூசாரித்தனமான அறிவுரையும் வேண்டாம்.

நாங்கள் இப்படியே பிற்போக்குத்தனமாக வாழ்ந்து இறந்து போகின்றோம்.

1 comment:

Mohamed Yasin said...

இதுவும் கடந்து போகும்!!!