Saturday, September 21, 2019

ஆவின் பாலும் ஆதார் அட்டையும்


நேற்று தான் முதல் முறையாக அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன். வீரபாண்டி பிரிவு அருகே ஆவின் பாலகம். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. காரணம் சென்ற மாதம் கூகுளில் திருப்பூரில் எங்கங்கு ஆவின் பாலகம் உள்ளது என்று தேடிப் பார்த்த போது கூகுளே சற்று தடுமாறியது போல எனக்குத் தெரிந்தது. எங்கேயோ இரண்டு புள்ளி கணக்காக ஏதோ தெரிந்தது.

ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு ஜனத் தொகை உள்ள ஊரில் ஏன் ஆவின் பாலகம் சந்துக்கு ஒன்று திறக்கலாமே? என்று யோசித்ததுண்டு. திருப்பூரில் பல இடங்களில் ஆயிரம் மீட்டர் தொலைவில் தனியார் பாலகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாலை மூன்று மணி நேரம் என்றாலும் அப்போது வண்டியில் வந்து இறங்குகின்றது. ஆனால் ஒவ்வொரு கடையிலும் ஆவின் பால் இருக்கா? என்று கேட்டால் கடைக்காரர் முடிந்து விட்டது என்கிறார்.

அதாவது ஒரு கடைக்கு ஐந்து முதல் பத்து பாக்கெட் வரைக்கும் தான் கொண்டு வந்து போடுகின்றார்கள். என்ன காரணம்? என்று கேட்டால் அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

வீரபாண்டிப் பிரிவிலிருந்த ஆவின் பாலகத்தின் உள்ளே சென்று பார்த்தேன். அழகான இடம். நேர்த்தியான கட்டிடம். குழந்தைகளுக்குப் பிடித்த சூழல் என்று எல்லாவகையிலும் பார்த்துப் பார்த்துச் செய்து இருந்தார்கள். பால்கோவா (ரூபாய் 40) ஐஸ்கீரிம் (ரூபாய் 12) நெய் ஒரு கிலோ (ரூபாய் 460) என்று விலை, சுவை, தரம் எல்லாமே ஒ.கே. தனியார் வைத்திருக்கிறாரா? அல்லது அரசு சார்பிலா? என்று கேட்க முயன்ற போது அவர் தவிர்க்கவே பார்த்தார். என்ன காரணம் என்று தெரியவில்லை.

பில் இல்லை என்றார்கள். காரணம் கேட்ட போது பிரிண்டர் வேலை செய்யாது என்றார். என் நண்பர் பக்கத்தில் தான் கம்யூட்டர் கடை வைத்துள்ளார். இலவசமாகப் பார்த்துத் தரச் சொல்லட்டுமா? என்ற போது இல்லை சார். பில் கொடுப்பதில்லை என்கிறார்.

அமைச்சர், அதிகாரிகள் என்று மேலேயிருந்து கீழே வரைக்கும் அத்தனை பேர்களையும் பெரிய குழி தோண்டி உள்ளே இவர்களைப் போட்டு மூடினாலும் தமிழ்நாட்டில் இடம் போதாது போல?

•••••••••••••••••••

தார் அட்டை..... உருவான தேதி முதல் இன்று வரையிலும் இது சார்ந்த பஞ்சாயத்துக்குக் குறைவேயில்லை. இது நமக்கு முக்கியமான தேவை என்கிற பக்கமும், இது தேவையில்லாத ஆணி என்று சொல்பவர்களும் இருந்தாலும் அதன் முக்கிய அரசியல் குறித்து நாம் பேசத் தேவையில்லை.

நம் நாட்டில் ஒரு திட்டம், அதுவும் நல்ல திட்டம் என்றால் அது எப்படியெல்லாம் சீரழிக்கப்படும் என்பதற்கு ஆதார் அட்டை குறித்துச் சொல்ல அனுபவங்கள் என்னிடம் உண்டு.

நான் கடந்த சில நாட்களில் பார்த்த சில அனுபவங்கள்...

1. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எங்கே எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? அந்த நாளில் என்ன நடந்தது? என்று கேட்டால் போதும். திரைத்துறை கதைகள் போலப் பல சுவராசியங்கள் வந்து விழும். எங்களுக்கு எந்த இடத்தில் எடுக்கின்றார்கள் என்பதனை கண்டு பிடிக்கவே அரை நாள் ஆனது. ஒவ்வொரு இடமாகக் கேட்டுப் புரிந்து குறிப்பிட்ட இடம் போய்ச் சேர்ந்த போது அவர்கள் சொன்ன பொறுப்பான பதில் நாளைக்கு வாங்க?

2. மின் அஞ்சல் முகவரி, அலைபேசி எண் விட்டுப் போனது. கொடுத்த முகவரியில் உருவான குழப்பம். ஆனால் எப்படியே வந்து சேர்ந்தது. அதாவது குறிப்பிட்ட தினத்தில் அலைந்து அவர்கள் அடுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான (அனாதை போல ஒரு அறை முழுக்கப் பரப்பி வைத்திருந்தார்கள்) அட்டைகளில் நம் முகத்தைப் பார்த்துக் கண்டு பிடிக்க நான்கு மணி நேரம் ஆனது.

3. குழந்தைகளுக்குத்தான் இந்த அட்டை பயன்பட்டது. பள்ளியில் கேட்கும் போது கொடுக்க முடிந்தது. அதனால் தனிப்பட்ட முறையில் எந்தப் பலனும் எங்களுக்கு இல்லை. நியாயவிலைக்கடை அட்டை பயன்படும் அளவிற்குக் கூட இதற்குப் பெரிய மரியாதை இல்லை. காரணம் பான் நம்பர், கடவுச்சீட்டுப் போன்றவை இருக்கும் போது இதுவொரு எக்ஸ்டரா லக்கேஜ் தான். பேரு தான் பெத்த பேரு.

4. ப்ரளெசிங் சென்டரில் முகவரி மாற்றங்கள், பெயர் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் செய்ய முடியும் என்பதனை கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைத்து விட்டார்கள். அதற்குள் பெரிய பஞ்சாயத்து இருப்பதாக அறிந்தேன். நம்மவர்கள் உள்ளே புகுந்து கபடி ஆடிவிட்டார்கள். வெறுத்துப் போய்க் கதவைச் சார்த்தி விட்டார்கள். இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு இச் சேவை மையம். கூடவே அஞ்சலகம் மற்றும் குறிப்பிட்ட வங்கிகள்.

5. ஐஓபி பெண்மணி காலை இந்த மணிக்குள் வர வேண்டும் என்றார். அதாவது காலை அரை மணி நேரம் தான் அந்தச் சீட்டில் அவர் உட்கார்கின்றார். இதற்கெனத் தனியாக ஆட்கள் இல்லை. கட்டணம் ஐம்பது ரூபாய் வேறு வாங்குகின்றார்கள். வங்கியின் உயரதிகாரியைப் போய்ச் சந்தித்து நான் வேண்டுமென்றால் சென்னைக்கு மின் அஞ்சல் அனுப்பி உங்கள் பிரச்சனையைச் சொல்லட்டுமா? என்று கேட்ட போது பதறிவிட்டார்.

6. அஞ்சலகத்தைப் போய்ப் பார்த்த போது அந்தச் சீட்டில் உள்ளவர் வேறு வேலை விசயமாக ஒரு வாரம் வெளியூர் சென்று இருப்பதாகப் பொறுப்பாகப் பதில் கூறினார்.

7. இ.சேவை மையத்தில் காலையில் எட்டரைக்குப் போய் நின்றால் ஆடி அசைந்து பத்து மணிக்கு ராஜா போலச் சீட்டுக்கு வந்து அமர்பவர் சொல்லி வைத்தாற் போல் ஆறு டோக்கன் கொடுக்கின்றார். அப்புறம் மறுநாள் தான்.

8. நெட் ஸ்லோ சார். நாளைக்குப் பார்க்கலாம் சார் என்று அவர் சொல்வதை அமைதியாகக் கேட்கும் போது தான் நாம் வாழ்வில் கடைபிடித்தே ஆக வேண்டிய உன்னதமான பொறுமையை அவர்கள் நமக்கு இலவசமாகக் கற்றுத் தருகின்றார்கள்.

எந்தக் குருமார்களும் நமக்குத் தேவையில்லை. அரசாங்க சேவைகளைப் பயன்படுத்த நாம் தேடிப் போகும் சமயங்களில் ஒவ்வொரு சூழலும், அங்குள்ள ஒவ்வொரு மனிதர்களும் நமக்குப் பலவற்றைக் கற்றுத் தந்து நாம் அதுவரையிலும் யோசித்துப் பார்க்காத ஒவ்வொன்றையும் நமக்கு உணர்த்திவிடுகின்றார்கள்.

நாம் கற்றுக் கொண்டால் தப்பில்லை.

••••••••••••••••••

னக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகனுக்கு வேலை வாய்ப்புத் தொடர்பாக அக்கா மகனிடம் குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை, வாய்ப்புகளை அனுப்பி வை என்று சொல்லியிருந்தேன். தினமும் அள்ளி தந்து கொண்டேயிருக்கின்றான்.

பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்களில், இந்திய முழுக்க உள்ள நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள், பயிற்சி சார்ந்த தகவல்கள்.

ஆனால் சமூக வலைதளங்களில் எவரும் இது போன்ற தகவல்களைப் பகிர்வதை நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை. நான் சந்திக்கும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், படித்து முடித்து வெளியே சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் உள்ள செயலிகள் அனைத்தும் அவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவக் கூடியதாகத்தான் இருக்கின்றது.

மேலாதிக்க தகவல்கள்.

தற்போது ரவுடி பேபி பாடல் யூ டியுப் ல் 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து அடுத்த நகர்வுக்குச் சென்று கொண்டிருக்கின்றது.

கனா படத்தில் வரும் வாயாடி பெத்த புள்ள பாடல் இருபது கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த யூபிஎஸ்சி தேர்வில் வென்றவர்கள், அவர்களின் பேட்டிகள், அந்தத் தேர்வுக்கு எப்படித் தயார் ஆவது, அது சார்ந்த ஆலோசகர்களின் பேச்சு உரைகள் போன்றவைகள் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்து செல்ல தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் என்னன்ன தேர்வுகள் உள்ளது? என்ன வாய்ப்புகள் உள்ளது? எப்படி அதனை அணுகுவது போன்ற தகவல்கள் அடங்கிய காணொளித் தொகுப்பு ஐந்தாயிரம் பார்வையாளர்கள் அளவுக்குக்கூடத் தாண்டுவதில்லை.

சென்ற வருடம் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு மத்திய அரசாங்கம் நடத்தியது. மாநில அளவில் தேர்ச்சி பெற்றால் மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். அடுத்த கட்டமாகத் தேசிய அளவில் வென்றால் தொகை அதிகமாகும். இந்தத் தொகை இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வாங்கும் வரைக்கும் மத்திய அரசாங்கம் வழங்குகின்றது. தனியார் பள்ளிக்கூடங்கள் பொருட்படுத்தவில்லை. எப்போதும் போல நீட் கோச்சிங் சொல்லிக் கொடுக்க ஆட்களைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சத்திய மங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

வருடந்தோறும் பத்தாம் வகுப்பு முடித்து வெளியே வருபவர்கள் 9 முதல் பத்து லட்சம் பேர்கள். இளங்கலை கல்லூரியில் படிப்பவர்கள் 10 முதல்15 லட்சம் பேர்கள். (எல்லாவிதமான படிப்புகளையும் சேர்த்து)

தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள். தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மூன்று கோடி பேர்கள். இந்த எண்ணிக்கையில் இன்றைய சூழலில் நிச்சயம் முப்பது சதவிகித பேர்களின் கையில் நவீன ரக அலைபேசிகள் உள்ளது.

14 comments:

Avargal Unmaigal said...

//ரவுடி பேபி பாடல் யூ டியுப் ல் 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து அடுத்த நகர்வுக்குச் சென்று கொண்டிருக்கின்றது.///


இதற்கு நானும் ஒரு காரணமாவேன். வீட்டில் தினமும் இந்த பாடலை பார்ப்பதுமட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் உடன் வேலைபார்க்கும் ப்ல அமெரிக்கர்களுக்கும் வரும் கஸ்டம்ர்களுக்கும் போட்டு காட்டிக் கொண்டு இருக்கிறேன்

அது ஒரு கனாக் காலம் said...

Oh...i don't know anything about this song ( busy with poojai, bhajan, japam, katcheri ) ... one more addition to the nos by tonight.

ஜோதிஜி said...
என்ன சுந்தர் இப்படி சொல்றீங்க? என் மனசு ரொம்ப சங்கடப்படுது. அவசியம் நேரம் ஒதுக்கி இந்த இரண்டு பாடலையும் பார்த்து விடுங்க. நான் எழுதியதற்கும் பார்வையாளர்கள் எந்த அளவுக்கு எகிறி உள்ளார்கள் என்பதனையும் பாருங்க. நம்ம தமிழர்கள் அனைவரும் கலை வெறியர்கள் அல்லவா? நீங்க மட்டும் ஒதுங்கியிருந்தால் நல்லா இருக்குமா?

https://www.youtube.com/watch?v=00fWlZnZAo0

136,370,112 views

https://www.youtube.com/watch?v=x6Q7c9RyMzk
645,790,026 views

ஜோதிஜி said...

அறுபத்தி ஐந்து கோடி கடந்தமைக்கு நீங்களும் ஒரு காரணம் போல. தமிழர்கள் மட்டும் கேட்டு இருந்தால் (தமிழகம் உள்ளே எட்டு கோடி உலகத்தில் மூன்று கோடி மொத்தம் 11 கோடி தமிழர்கள் இருக்கின்றார்கள்) இந்த அளவுக்கு வந்து இருக்காதோ?

அது ஒரு கனாக் காலம் said...

I didn't see last night, Howdy modi was going on , still I slept , heard only a little , very little from the speech, as I hit the bed early ( despite UAE is 1.30 hours late to Indian time) ...whats your opinion on HOWDYMODI, I thought it would not be bigger than MGM...but he pulled it off, I think some TN MP's signed the memorandum to US govt to deny the visa to Modi, ... imagine their faces now. I know lots of people said, I will not live, I will leave India, I will shave my head IF MODI BECOMES PM , ....he has been destined to be in this position. Did you notice , only this time the furniture at his mother's place is little different , its not that plastic chair . Can you name any counselor /MP/MLA from this DMK and ADMK , whose house has got only a minimum furniture? ... India's basic problem is Bijilee, Sadak , Paani - which he is really taking care, ..next comes the cleanliness, development , R & D, learning etc., he will reach there as well.

Rathnavel Natarajan said...

ஆவின் பாலும் ஆதார் அட்டையும் - எந்தக் குருமார்களும் நமக்குத் தேவையில்லை. அரசாங்க சேவைகளைப் பயன்படுத்த நாம் தேடிப் போகும் சமயங்களில் ஒவ்வொரு சூழலும், அங்குள்ள ஒவ்வொரு மனிதர்களும் நமக்குப் பலவற்றைக் கற்றுத் தந்து நாம் அதுவரையிலும் யோசித்துப் பார்க்காத ஒவ்வொன்றையும் நமக்கு உணர்த்திவிடுகின்றார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

அரசுத் துறை வேலைகள்... நிறைய இருக்கிறது. தகவல் சொன்னாலும் இங்கே அதை பயன்படுத்தும் நபர்கள் குறைவு.

ஜோதிஜி said...

சுந்தர் நானும் பார்த்தேன். என் பார்வையில்....
1. 1.4. கோடி செலவழித்துள்ளார்கள். ஏறக்குறைய இந்தியப் பணத்தில் ஆயிரம் கோடிக்கு மேலே.........
2. இது தவிரக் கலந்த கொண்ட அனைவரும் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி வந்துள்ளார்கள். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இருந்தும் பாரபட்சமின்றி வந்துள்ளனர்.
3. இந்த முறையும் ட்ரம்ப் தான் வெல்வார் என்பது என் யூகம். காரணம் இவர் அமெரிக்கர்கள் (இன்று வரையிலும் மனதளவில்) விரும்பும் இனவெறியின் காப்பான் போலவே இருக்கின்றார்கள். மண்ணின் மைந்தர்களுக்குத்தான் இங்குள்ள அனைத்து உரிமைகளும் என்பது நன்றாக அடி ஆழம் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது.
4. அமெரிக்காவிற்கு நலத்திட்டம் என்று பார்த்தால் இவர் எதுவும் செய்யவில்லை. இவர் செய்து கொண்டிருப்பது அனைத்தும் ஆழ்மன வெறியைத் தூண்டுதல். மக்களைப் புழுவாக மாற்றுதல். பன்முகத் தன்மையைச் சீர் குலைத்தல். உலகம் முழுக்க இருந்த அந்தந்த நாடுகளில் அங்கீகாரம் கிடைக்காமலிருந்த பலதரப்பட்ட புத்திசாலிகளால் வளர்ந்த அமெரிக்க நாட்டைஇன்று உணரத் தயாராக இல்லை என்பதோடு நீங்கள் வெளியே சென்று விடுங்கள் என்று கூறுவது என்பது பாசிசம்.
4. மோடியும் இவரும் ஆபாந்த நண்பர்களாக இருப்பது போலக் காட்டிக் கொள்வதும் தமிழகத்தில் சொல்லப்படும் தஞ்சாவூர் எத்தனும் மதுரை எத்தனும் சேர்ந்த கதை தான்.
5. அமெரிக்கா மோடி நேரு போல நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல பாடம் கிடைக்கும். ஒரு பக்கம் ரஷ்யா. மறுபக்கம் அமெரிக்கா. இடையே சீனாவுடன் மகாபலிபுரத்தில் கலந்துரையாடல் என்று சந்தைப் பொருளாதாரத்தின் பிதாமகன் போலவே செயல்படுகின்றார்.
6. மோடி செய்து கொண்டிருப்பது இந்தியாவை தன் முகத்தின் மூலமாக உலகம் முழுக்க அடையாளப்படுத்த முயல்கின்றார். ஆனால் காலம் வேடிக்கை பார்க்கும். நேரம் வரும் போது சலித்துத் தள்ளிவிடும்.
7. நீங்கள் சொல்வது உண்மை தான். திட்டங்கள் அனைத்தும் மாறிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் திட்டங்களின் பலனை விட அதற்கு செலவளிக்கும் தொகை பல மடங்கு அதிகம். நன்றாக இருக்கும் சாலையில் கொண்டு வரப்பட்ட குப்பையைக் கொட்டி புகைப்படம் எடுக்கும் வினோத திருவிழா நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஜோதிஜி said...

8. மோடி செய்ய வேண்டியது என்று நான் கருதுவது ஒன்றே ஒன்று தான். 130 கோடி பொது மக்களும் அரசாங்கத்தை நேரிடையாக அணுகாமல் இணையம் வழியே தாங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பலமான பாதுகாப்பான இணைய வசதிகளை உருவாக்க வேண்டும். அதனை பொதுத்துறை நிறுவனம் மூலமாகக் கூட சந்தையில் தனியார்த் துறைகளையும் பக்கவாட்டில் வளர்த்துச் சரியான போட்டியை உருவாக்கினால் போதுமானது. விலை குறையும். தரமான சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். இதில் ஏகப்பட்ட குழப்ப முடிவுகளை இந்த அரசாங்கம் இன்று வரையிலும் முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றது.
9. நேரு, இந்திரா, ராஜீவ் என்று அத்தனை பேர்களும் உபியில் போட்டியிட்டு பிரதமராக வந்த போது அந்த மாநிலத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் வந்த பிறகு தான் கல்வி சீர்திருத்தமே நடக்கத் தொடங்கியுள்ளது. பீகார் உபி முதல் பல வட மாநிலங்களில் இதுவரையிலும் பிட் அடித்து பாஸ் ஆகும் கலாச்சாரத்தை இப்போது மாற்றிக் கொண்டிருப்பதால் 90 சதவிகித மாணவர்கள் தங்கள் தாய் மொழியான ஹிந்தியில் கூட தேர்ச்சி பெறவில்லை என்றால் உணர்த்துவது என்ன? இந்த லட்சணத்தில் இந்திய முழுக்க ஹிந்தி வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அபத்தமாக இல்லையா?
10. மோடி செய்த ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே சாதனை வாரணாசியை தலைகீழாக மாற்றியது. சுத்தமான பகுதியாக உருவாக்கியது. அங்கு 100 ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த லாபியை உடைத்தெறிந்தது. சுகாதார விசயங்களில் கவனம் செலுத்தியது. போக்குவரத்து வசதிகளை விசாலமாக்கியது.

ஜோதிஜி said...

11. ஜிஎஸ்டி நல்ல திட்டம் தான். ஆனால் அதில் உள்ள குளறுபடிகளை இவர்கள் மனது வைத்திருந்தால் சென்ற ஆட்சியிலேயே நிவர்த்தி செய்து இருக்கலாம். இன்று அம்மையார் வெட் கிரைண்டர் தயாரிப்புக்கு வெறுமனே 5 சதவிகிதம் மட்டும் என்கிறர். இது போலப் பலவற்றுக்கும் சலுகைகள் வழங்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவான இழப்பு பல லட்சம் கோடி. இன்று வரையிலும் மாதம் தோறும் ஜிஎஸ்டி செலுத்தி அதன் மூலம் திரும்பக் கிடைக்கும் தொகையைப் பெற முறையான வசதிகள் உருவாக்கப்படவில்லை. ஒரு திட்டத்தை உடனே கொண்டு வருகின்றார்கள். அதில் பிரச்சனை இருந்தால் சரிசெய்யப் பல வருடங்கள் எடுத்துக் கொள்கின்றார்கள்.
12. ஆனால் பத்து சதவிகித ஒதுக்கீடு முதல் (சென்ற ஆட்சியில்) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்கள். மசோதா வெற்றி பெறுகின்றது. அடுத்த நாள் ஒவ்வொரு மாநில மருத்து கவுன்சிலுக்கும் மத்திய அரசிடம் இருந்து கடிதம் வருகின்றது. இந்த பத்து சதவிகித இட ஒதுக்கீடு செய்ய இப்போது இருக்கும் இடங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உள்கட்டமைப்பு தேவையில்லை. ஆனால் கட்டாயம் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று. தலாக் திட்டம் முதல் நாள் வருகின்றது. அடுத்த ஜிஓ வாக மாறுகின்றது. இது போலப் பலவற்றையும் சுட்டிக் காட்டலாம். அவர்களுக்கு எது தேவையோ? எது முக்கியமோ அது ராக்கெட் வேகத்தில் நடக்கின்றது. ஆனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது வரும் என்று பிரம்மனுக்குத்தான் தெரியும் போல.
13. இப்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஆளுங்கட்சி எதிர்க்கட்சி, எதிர்ப்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர் என்ற போர்வையைப் போட்டு அலைபவர்கள் என்று ஒவ்வொரு வகையினருக்கும் மாதம் தோறும் சம்பளம் போலவே கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எதிர்க்கக்கூடாது என்பதற்காக. உத்தேசமாக இப்போது மாதம் 30 000 கோடி லஞ்சம் மற்றும் ஊழல் பணம் புழங்குகின்றது என்கிறார்கள். ஒரு சமஉ மாதம் தோறும் ஒரு கோடி அல்லது இரண்டு கோடி சம்பளம் போல ஒவ்வொரு மாதமும் இதன் மூலம் பெறுகின்றார். எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் நாறிப் போய் கிடக்கின்றது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் 60 40 என்று சதவிகிதத்தில் பங்கு பிரிப்பதாகச் சொல்கின்றார்கள். இவையெல்லாம் மத்திய அரசாங்கத்தின் அமலாக்கத்துறை, சிபிஐ க்கு தெரியாமல் நடக்குமோ? காங்கு ஆளும் மாநிலம் மட்டும் தான் கண்களுக்குத் தெரியுமோ?
14. மனசாட்சியோடு சொல்லுங்கள். சமஸ்கிருதம் யார் பேசுகின்றார்கள்? யார் எழுதுகின்றார்கள்? யார் தான் இன்று பயன்படுத்துகின்றார்கள்? எத்தனை கோடி அதற்குக் கொட்டுகின்றார்கள் தெரியுமா? அதே போல ஹிந்தி மொழி அலுவல் மொழியாக ஐநா சபையில் மாற்றச் சென்ற முறை சுஷ்மா ஸ்வராஜ் 300 கோடி கொடுத்து விட்டு வந்தார்.
இவர்கள் திட்டங்களைச் செயல்படுத்துகின்றார்களா? ஆம். செயலாக்கத்தில் நன்றாக உள்ளதா? ஆம். மாறிக் கொண்டிருக்கும் எதிர்கால உலகத்திற்கேற்ப இந்தியர்களை நல்ல பாதையில் கொண்டு செல்கின்றார்களா? இல்லை.
எப்போதும் ஒருவர் அல்லது ஒரு பொருள் வெளிச்சத்திலிருந்தால் அல்லது இருக்க நினைத்தால் அந்த நபர் அல்லது அந்த பொருளில் ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். இரவும் பகலும் சேர்ந்த வாழ்க்கையில் வாழும் உயிரினங்கள் தான் இயற்கையானது என்று தானே நாம் படித்த கல்வி நமக்கு உணர்த்தியுள்ளது சுந்தர். மீதி உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகின்றேன்.


அது ஒரு கனாக் காலம் said...

பெரிய பதில் thanks .... 1000 கோடி செலவு என்பதெல்லாம் , இந்திய மக்களுக்கோ அல்லது இந்திய அரசாங்கத்துக்கோ பாதகம் எல்லை என்பது என் கணிப்பு , because this event was managed by privat parties ..அமெரிக்காவும் , அதன் அதிபரும் எப்படி வேண்டுமானுலும் இருக்கட்டும் , நம்மை பாதிக்காத வரையில் ... இந்த ஷோ மூலம், இந்தியாவை காண , ஓர் நல்ல சதமானம் ஆட்கள் இந்தியா வந்தாலே போதும் ..மேலும் அங்கு உள்ள, நம் நாட்டை மறந்து , அங்கேயே டேரா போட்டு இருக்கும் மக்களும் , இந்தியா மிக பெரும் நாடு, பழமை வாய்ந்த நாடு, ஏழை நாடு , நமது உதவி தேவை என ஒரு சிறு ஆட்கள் இதை உணர்ந்தாலும் , அதுவே போதும். மோதி எத்தன் இல்லை என்பதற்க்காகத்தான் , அவர் வீடு, தாயார், வீட்டில் உள்ள நாற்காலி, இருக்கை பற்றி எழுதினேன். இப்பொழுது அருண் ஜெ வும் இல்லை , எனவே நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம் . யாருடைய முகமும் சலிக்கும் , மோடி விதி விலக்கல்ல . I totally agree that internet, computers , aadhar , bank account, gst, icome tax , cc – all these together will play a huge role , hope Govt is working on this, the day it gets into justice dept , administration of justice will be fast .

சமஸ்க்ருதம் - யாரும் பேசவில்லை , படிக்கவில்லை, சம்மதிக்கிறேன் , அது ஒரு நுண் கலை போல , பொக்கிஷம் , நிறய நல் கருத்துக்கள் , முக்கியமாக ஆள் மனதுக்கு வேண்டி நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளது என சான்றோர்கள் சொல்கிறார்கள் . அமெரிக்காவில் படிக்கிறார்கள் , ஜெர்மனியில் படிக்கிறார்கள் , ஆராய்ச்சி செய்கிறார்கள் . இது நல்லதா , நண்மை உள்ளதா என்பதை மொழி வல்லுனர்களிடம் விட்டு விடுவோம்.

தமிழும் பெருமை வாய்த்தது தான், அதனினும நிறைய புதையல் உள்ளது ... பெருமையை நாம் தான் தூக்கி பிடிக்க வேண்டும் , கொண்டு சேர்க்க வேண்டும் , ஆனால் நடப்பது என்ன , கீழடியில் கடவுள் இல்லை, திருக்குறளில் கடவுள் வாத்து இல்லை .என பெருமை கொள்கிறார்கள் ..... ஐம்பெரும் காப்பியமானாலும் , தொல் காப்பியமானாலும் இறைவன் எங்கும் உண்டு

The most dangerous people for this kind of trend is first is the Christians , converted Christians who now wants to prove that they are more purer than the original, the kind of prayer they have , they kind of cure they have …everything against Dharma. So sad that no body is objecting to this – and they have deep pockets , some time they buy out people – like Kamal, Nithyashree …I think they don’t realize that one day they will get swallowed by Hindu customs and people

அது ஒரு கனாக் காலம் said...

yes , IN UP there is a silent revolution, u know the child death in hospital, it used to be an annual affair for the last so many years - but now after effective vaccination , this particular disease , elephentine...fever is controlled now. law and order issue was tackled first , roads , and health is being attended to... he too do not have big house , furniture, wealth, or car ... just compare the kind of house Akhilesh and his brothers had . No corruption is a big thing ...

கிரி said...

ஜோதிஜி ஆதார் விவரங்களை ஒருமுறை சிரமம் பார்க்காமல் சரி படுத்தி விட்டால், அதனால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

எனோ இதுகுறித்து எதிர்மறை செய்திகளே அதிகம் பகிரப்படுகிறது.

நானும் ஒவ்வொரு விஷயத்துக்கும் கடினப்பட்டு தான் சரி செய்தேன் ஆனால், சரி செய்து விட்டேன்.

தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை.

ஒரு நாடு ஒரு அட்டை என்பது மிகச்சிறந்த திட்டம். இதனுடைய பயனை அறியாதவர்களே எதிர்மறை செய்திகளைக் கூறி வருகிறார்கள்.

வண்டி வாங்குவதாகட்டும், பதிவு செய்வதாகட்டும் எதற்கு என்றாலும் ஆதார் மிக எளிதாக, பயனுள்ளதாக உள்ளது ஆனால், இதை ஏன் சலித்துக்கொள்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

ஒரு நாடு ஒரு அட்டைகுறித்து குறித்து விரைவில் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

கணினி பழுது காரணமாக அதிகம் எழுத முடியவில்லை.

ஜோதிஜி said...

பிம் என்ற செயலியை நீங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கக்கூடும். நண்பர் வலுக்கட்டாயமாக என்னை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்றார். பல விசயங்கள் நல்லதாக உள்ளது. ஆனால் மற்ற செயலிகளை ஒப்பிடும் போது அதன் செயல்பாடுகள் பத்தாண்டுகள் பின்னால் உள்ள தொழில்நுட்பம் போல மேம்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது. பான் எண் மகளுக்கு விண்ணப்பித்து இருந்தேன். படாவதியான கொரியர் சேவையை அரசாங்கம் உருவாக்கி (தனியார்) உள்ளனர். கழுத்தில் கை வைத்து மிரட்டி நடுராத்திரியில் கொண்டு வந்து டெலிவரி கொடுக்க வைத்தேன். அதாவது அவர்கள் கைக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மற்றொரு கொடுமை மகளுக்கு மற்றொரு பான் அட்டை மீண்டும் அப்படியே தகவலுடன் வேறொரு கொரியர் மூலம் வருகின்றது. இ சேவை மையம் வைத்து உள்ளனர். அதிகபட்சம் ஆறு பேர்கள் தான் வரிசையில் நின்று பதிய முடியும். அப்புறம் நெட் எடுக்கவில்லை என்கிறார்கள். இதுபோல பல விசயங்கள் உள்ளது. அதாவது திட்டம் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது. அதனை செயல்படுத்தும் விதங்களில் அரசு செயல்பாடுகள் படு மோசமாக உள்ளது. ஆனால் பத்து சதவிகித இட ஒதுக்கீடு, தலாக் திட்டம், காஷ்மீர் சட்ட மாறுதல்கள், காஷ்மீருக்கு ரயில் விடுதல், ரயிலை தனியார் மயமாக்குதல் போன்ற அனைத்தும் கண் இமைக்கும் முழு வெற்றியாக நடந்து விடுகின்றது. இவை எப்படி மாயமா? மந்திரமா? வங்கிக்கு அருகே இருக்கும் ஏடிஎம் பாதியளவு செயல்படுகின்றது. மற்ற இடத்தில் உள்ள ஏடிஎம் செத்து விடுகின்றது. வங்கிகளில் கேட்டால் எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள். எப்படி? மக்களுக்காக ஆட்சி என்றால் ஒரு திட்டம் கடைசி வரைக்கும் கவனிக்க வேண்டும் அல்லவா? எனக்குப் பிரச்சனையில்லை கிரி. ஒவ்வொரு வங்கியிலும் மக்கள் அலைவதைப் பார்த்தால் கண்ணீர் வருகின்றது. அட்டை சிறப்பு தான். அதை வாங்குவதற்கு அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நம் மக்கள் எத்தனை பேர்களுக்கு கணினி சார்ந்த தொழில் நுட்பம் தெரியும்? இவர்கள் அடுத்தடுத்து போய்க் கொண்டே இருக்கின்றார்கள். ஏற்கனவே உள்ளது, நடைமுறையில் இருப்பதில் என்ன பிரச்சனை என்பதனை எவரும் கண்டு கொள்வதே இல்லை என்பது தான் என் ஆதங்கம். ரேசன் கடையில் முன்பு பொருட்கள் வாங்கினால் என்ன வாங்கினோம் என்று தகவல் குறுஞ்செய்தியில் வரும். அதில் கை வைத்து வரவிடாமல் செய்து விட்டார்கள். ஆனால் ஒரே அட்டை விளம்பரம் தூள் பறத்துகின்றது.