Saturday, May 11, 2019

எழுதிய சில குறிப்புகள் 6

நீட் குறித்து காங்கிரஸ் ன் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

நீட்டை ஏற்காத மாநிலங்களில் நீட்டுக்கு பதிலாக அதே சமயம் நீட்டுக்கு இணையான தரத்தோடு மாநில அளவில் வேறு தேர்வுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்(We Will take measures to dispense the NEET and substitute it with a State Level Examination of Equivalent Standard) என்றே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தமிழக கட்சிகளின் பார்வை என்ன?

மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை இருக்க வேண்டும். எவ்வித நுழைவுத் தேர்வும் இருக்கக்கூடாது.

காங்கிரஸ் என்ன தான் சொல்ல வருகின்றது?

மாநில அரசு தனிப்பட்ட முறையில் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எவ்வித நுழைவுத் தேர்வும் மருத்துவ படிப்புக்கு வேண்டாம் என்று சொல்பவர்களும், மாநில அளவில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு என்ன வித்தியாசம்.?

காதில் பூ சுற்றுவதற்கு முன் காது மடல்களைத் தடவிக் கொடுப்பது கிட்னிக்கு நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

***********

தேர்தல் அறிக்கை என்றால் என்ன?

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வாசிக்கப்படும் திட்டங்கள் குறித்து எவராலும் கேள்வி கேட்க முடியாது. ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பதனையும் எப்படி நிதி ஆதாரம் என்பதனையும் விவரிக்கத் தேவையிருக்காது என்பதற்காக ஜெ. தன் ஆட்சி காலத்தில் இந்த விதியின் கீழ் எல்லாத் திட்டங்களையும் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டேயிருந்தார். விதி அவரை அழைத்துக் கொண்டு டுபாக்கூர் அறிவிப்பினை நிறுத்த வைத்தது.

அதே போலத்தான் காங்கிரஸ் ன் தற்போதைய தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட அறிவிப்புகளும்.

இந்திரா காலம் தொடங்கி இன்று வரையிலும் மாநில காங்கிரஸ் தலைவர் ஐந்தாண்டுகள் நிலையாக அதே பதவியில் எவ்வித தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து இருந்து உள்ளனரா? என்று வரலாற்றுச் சுவடிகளைத் தேடிப் பார்த்தால் இவர்களின் யோக்கியதை நமக்குப் புரியும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் அவர்கள் அப்படித்தான். 

ராகுல் மச்சான் வதேரா போன்றவர்கள் மட்டுமே இவர்கள் ஆட்சியில் வாழ முடியும்.

எந்த மாநிலத்திலும் எவரையும் நிலை நிறுத்தும் எண்ணம் இல்லாதவர்கள். எவரையும் வளர்ந்து விட அனுமதிக்காதவர்கள். கொள்கைகளில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நுனி முதல் அடி முதல் பலகீன மக்களால் அதிகம் நிரம்பிய கட்சி காங்கிரஸ். கொள்கை என்பதே கொள்ளையின் அடிப்படையில் மட்டுமே.

நிலக்கரி ஊழல் நாற்றமெடுத்து சிரிப்பாய் சிரித்த போது ஒரு கூட்டத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சுசில்குமார் ஷிண்டே சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

"நிலக்கரி நிலக்கரி என்று இப்போது பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சிறிது நாளைக்கு முன் போஃபர்ஸ் ஊழல் என்று பேசினார்கள். ஒன்று வந்தவுடன் அடுத்ததை மறந்துவிடுவார்கள்" என்று சிரிப்புடன் எக்காளத்துடன் பேசி கைத்தட்டலை வாங்கினார்.

காரணம் ஊழல் ஒன்று இரண்டு என்று இருந்தால் பரவாயில்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஊறித்திளைத்த ஆட்சியில் இவர்கள் அனைவரும் பங்காளிகள்.

இவர்களின் கடைசி கட்ட ஆட்சியின் போது டெல்லியில் ராகுல் கிண்டலாகச் சொன்னதாக ஒரு பேச்சு பத்திரிக்கையாளர் மத்தியில் சிரிப்பாய் சிரித்தது.

"முதலில் நிலக்கரி, அப்புறம் 2ஜி இப்போது ஜிஜாஜி (மச்சான்)"

இவர்கள் திருந்தி விட்டார்கள் என்று நம்பினால் நாடு வேறொரு திசையில் செல்லப் போகின்றது என்று அர்த்தம்.

இப்படிப்பட்ட இத்தாலி காங்கிரஸ் கட்சி மாநிலத்திற்கான சுயாட்சி உரிமைகளை வழங்கி விடும் என்பதும், பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால் நான் சதுரங்க வேட்டை கதாநாயகனை உண்மையிலேயே மகாத்மா காந்தி என்பேன்.


**********

எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு சேரும் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் இருந்தால் இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான்.😂

தேர்தல் பிரசாரத்தின் போது, தலைவர்களை பார்க்க, தொண்டர்களும், மக்களும் ஆர்வத்துடன் வந்த நிலை மாறி, தற்போது, தனியார் ஏஜென்சிகள் வாயிலாக, ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதனால், வெவ்வேறு கட்சிகளின் பிரசாரம் என்றாலும், கொடிகள் தான் மாறுகின்றன; அதே ஆட்கள் தான் சுற்றி வருகின்றனர். இந்த கூட்டம், ஓட்டாக மாறாது என்பது, ஏற்கனவே தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆக, எல்லாமே ஏமாற்று வேலை தான்!

ஜெயலலிதா, உடல்நல குறைவால், 2014 லோக்சபா தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. ஒரு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இரண்டு லோக்சபா தொகுதிகளை சேர்த்து, பொதுவான ஒரு இடத்தில், ஜெயலலிதா பங்கேற்ற, பிரசார கூட்டம் நடந்தது. கூட்டம் வரவில்லை:

அந்த தொகுதிகளை உள்ளடக்கிய, 12 சட்டசபை தொகுதிகளில் இருந்தும், வார்டு, ஒன்றியம், பேரூர், நகர கழக செயலர் போன்ற நிர்வாகிகள், தலா, ஒருவர், 200 - 500 பேரை, கூட்டத்திற்கு, அழைத்து சென்றனர். கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்து செல்வதில், குளறுபடி ஏற்பட்டு, அந்த விபரம், ஜெ.,க்கு தெரிந்தால், தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதால், அதில், அ.தி.மு.க.,வினர், கூடுதல் கவனம் செலுத்தினர். 

கருணாநிதி பிரசாரம் செய்யும் கூட்டங்களிலும், கட்சி நிர்வாகிகள், தங்களின் மேற்பார்வையில், ஆட்களை அழைத்து வருவர். அ.தி.மு.க., கூட்டத்திற்கு வருவோருக்கு, சாப்பாடு தவிர்த்து, தலா, ஒருவருக்கு, 300 ரூபாய் வரையும்; தி.மு.க.,வில், 200 ரூபாயும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத, லோக்சபா தேர்தலை, அ.தி.மு.க., - தி.மு.க., சந்திக்கிறது.

ஜெயலலிதா மறைவால், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., செயல்படுகிறது.

லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இ.பி.எஸ்.,சும், பன்னீர்செல்வமும், வேனில் சென்றபடி, பிரசாரம் செய்கின்றனர். அவர்கள், முக்கிய சந்திப்புகளில், வேனை நிறுத்தி, சில நிமிடங்கள் பேசுகின்றனர். அந்த இடங்களில், எதிர்பார்த்த அளவிற்கு, கூட்டம் வரவில்லை. 

இதற்கு, ஜெயலலிதா பிரசாரத்திற்கு வரும்போது, கட்சியினர் வழங்கிய முக்கியத்துவத்தை, தற்போது, தரவில்லை என்பதே, முக்கிய காரணம். செலவுக்கு பயந்து, கட்சியினர், தங்கள் சார்பில், ஆட்களை அழைத்து வரவில்லை. தொண்டர்கள் போல்:

இதையடுத்து, கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, அந்த நபர்கள், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து, 300 - 500 நபர்களை, பிரசாரத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இதற்காக, அவர்களின் வீடு அருகில், வேன்கள் அனுப்பப்பட்டு, 20 - 30 பேர் என, ஒரு வேனில் ஏற்றப்படுகின்றனர். தலைவர்கள் பிரசாரத்தின்போது, 500 பேர் வரையும்; வேட்பாளர் மட்டும் பிரசாரத்திற்கு செல்லும்போது, 50 பேர் வரையும் அனுப்புகின்றனர். அவர்கள், தலைவர்கள் பிரசாரத்தின்போது, பேச உள்ள இடங்களில், இறக்கி விடப்படுகின்றனர். அங்குள்ள கட்சியினர், தாங்கள் எடுத்து வந்த, கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் அடங்கிய பதாகைகளை, அவர்களிடம் வழங்கி, தொண்டர்கள் போல் நிற்க வைக்கின்றனர்.

தலா ரூ.500:

அ.தி.மு.க., தலைவர்கள் பேசி முடிக்கும் முன், சில இளைஞர்கள், அழைத்து வந்த ஆட்களிடம் சென்று, வேனில் ஏறி கொள்ளுமாறு கூறுகின்றனர். அவர்களும், வேனில் ஏறி, அடுத்த இடத்திற்கு செல்கின்றனர். 

ஒரு தொகுதியில், சில மணி நேரங்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் தலைவர்கள், பின், அடுத்த தொகுதிக்கு செல்கின்றனர். இதனால், தாங்கள் அழைத்து வரும் நபர்களை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள், பிரசாரத்திலும் பங்கேற்க வைக்கின்றனர். 

இதற்காக, ஒருவருக்கு, கட்சிகளிடம் இருந்து, 300 ரூபாய் வரை பேரம் பேசும் ஏஜென்சிகள், 50 ரூபாய் கமிஷன் எடுத்து, 250 ரூபாய் தருகின்றனர்.

ஒரே நாளில், காலையில், ஒரு கட்சிக்கும்; மாலையில், மற்றொரு கட்சிக்கும் செல்வதால், தலா, ஒரு நபருக்கு, 500 ரூபாய் வரை கிடைக்கிறது. கட்சியினரும், ஆட்களை அழைத்து வர வேண்டிய சிரமம் இல்லாததால், தங்கள் பகுதிக்கு வரும் நபர்களை, ஒழுங்காக நிற்க வைப்பது, கோஷம் சொல்லி கொடுப்பது போன்ற பணிகளில், அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான், எந்த இடத்திலும், தலைவர்கள் பேசி முடிக்கும் வரை, 

கூட்டம் கலையாமல், அப்படியே உள்ளது. நடிகர் கமல் சென்றபோது, கூட்டம் இல்லையென, பிரசாரத்தையே கைவிட்ட சம்பவம், சென்னையில், நடந்துள்ளது. மற்ற கட்சியினர், கூட்டம் சேர்ப்பது இப்படி தான் என்பதை அறிந்தால், 'எனக்கு கூட்டமே வேணாம்' என்பாரோ கமல்!

கவனிப்பில், 'முதலிடம்!'

பூர்ணிமா: நானும், என் கணவரும், ஆறு வீடுகளில், துணி துவைப்பது, பாத்திரம் கழுவது போன்ற வேலை செய்கிறோம். ஒரு வீட்டிற்கு மாதம், 1,000 ரூபாய் சம்பளம் தரப்படும். என் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண், பிரசாரத்திற்கு வந்தால், தினமும், 200 ரூபாய் தருவதாக கூறினர். 20 நாட்கள் விடுப்பு எடுத்து, பிரசாரத்திற்கு செல்கிறேன்.

மாணிக்கம்: எத்தனை பேர் இருந்தாலும், அந்த விபரத்தை காட்டியதும், உடனடி பணப்பட்டுவாடா செய்வது, தினமும் பெண்களுக்கு, ஒரு சேலை வழங்குவது, பூர்ண கும்ப மரியாதைக்கு வழங்கப்படும் பாத்திரத்தை, பெண்களையே எடுத்து கொள்ள சொல்வது என, பிரசாரத்திற்கு அழைத்து செல்லப்படும் நபர்களை கவனிப்பதில், அ.தி.மு.க., முதலிடத்தில் உள்ளது. 

மற்ற கட்சிகள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் தரும் பணத்தில், பெரும் தொகையை பிடித்தம் செய்து, சிறிதளவு மட்டுமே, 

பிரசாரத்திற்கு வருவோரிடம் தருகின்றனர். *** தேவி, மகளிர் சுய உதவி குழு: பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கட்சியினர், என்னிடம், எங்கள் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வர சொல்வர். பெரும்பாலும், மகளிர் குழுக்களை சேர்ந்த, ஏழை பெண்களை அழைத்து செல்வேன். ஜெயலலிதா இருந்த போது, மாலை, 4:00 மணிக்கு பிரசாரத்தில், பேசுகிறார் என்றால், மதியம், 1:00 மணிக்கு, ஆட்களை அமர வைக்க வேண்டும்.

அந்த இடமும், அதிக துாரம் இருக்கும் என்பதால், காலை, 10:00 மணிக்கு, ஆட்களை அழைத்து செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படும். மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு, மதியம் முதல் வெயிலில் அமர வேண்டி இருந்ததால், 'பாத்ரூம்' கூட போக முடியாமல், பெண்கள் சிரமப்படுவர். பல மணி நேரம் காத்திருந்த காலத்தில், எவ்வளவு பணம் தந்தனரோ, அதே பணம் தான், தற்போது, மூன்று மணி நேரத்திற்கும் கொடுக்கின்றனர். இதனால், ஒரே நாளில், காலையில், ஒரு கட்சி பிரசாரத்திற்கு செல்லும் நபர்கள், மாலையில், மற்றொரு கட்சிக்கும் செல்கின்றனர். *** அகல்யா, மகளிர் சுய உதவி குழு தலைவி: என் தலைமையில் செயல்படும்,

மகளிர் குழுவில், 30 பேர் உள்ளனர். அவர்கள், புடவை, பாத்திரம் போன்ற வியாபாரம் செய்ய, ஒருவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை, தனியார் வங்கியில் இருந்து, கடன் வாங்கி கொடுத்துள்ளேன். அவர்களிடம் இருந்து, 

கடன் தொகையை, மாத தவணை முறையில் வசூலித்து, நான், வங்கியில் செலுத்துவேன். தேர்தலை முன்னிட்டு, பிரசாரத்திற்கு ஆட்களை அழைத்து வர முடியுமா என, கடன் வழங்கிய வங்கியில் வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார். அதை, குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் வருவதாக கூறினர். ஒரு நாளைக்கு, 250 ரூபாய் சம்பளம். அதில், 100 ரூபாயை கடனுக்கு எடுத்து கொள்ளுமாறும், மீதியை மட்டும் தருமாறும், உறுப்பினராக உள்ள பெண்கள் சொல்கின்றனர்.



"ஓட்டுக்கு 10,000" - ஆர்.கே.நகர் ஏஜண்ட் குமுறல் | Parliamentary Elections 2019 | Thanthi TV


No comments: