Thursday, April 26, 2018

50 வயதினிலே - 2

ஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா? உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்டும் வெளியுலகத் தொடர்பின்றி உணர்வின்றி உள்ளும் புறமும் ஒன்றும் அறியாது ஓய்வெடுக்க முடிகின்றதா? ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில் அதிகாலையில் இயல்பாகவே குறிப்பிட்ட நேரத்தில் எழ முடிகின்றதா? உங்களின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் கழிவுகள் சிக்கலின்றி நகர்வதை வைத்து கண்டு கொள்ள முடிகின்றதா?. 

அதிகாலை வேளையில் ஆள் ஆரவமில்லா சாலையில் சிங்கம் போலக் கம்பீரமாக நடக்க முடிகின்றதா? கை வீசி நடக்கும் போது உடல் பாகங்கள் வலியில்லாமல் இருக்கின்றதா? நடக்கும் போது உங்களால் சுற்றியுள்ளதை ரசிக்க முடிந்துள்ளதா? இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? சாலையோர மரங்களில் கூட்டமாக வசிக்கும் பறவைகளின் இரைச்சலை ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா? பார்க்கும் ஒவ்வொன்றையும் விலகி நின்று பார்க்கும் பழக்கம் உருவாகியுள்ளதா? சாலையில் பார்க்கும் வீடுகள், வாகனங்கள் என் ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்த்தும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதா? 

பார்வையில் படுகின்ற ஒவ்வொன்றும் எந்தப் பாதிப்பையும் உங்களுக்குள் உருவாக்காமல் இருக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்த உண்மையான புரிதலை மனம் பெற்றுள்ளதா? நாள் தோறும் உழைக்கும் உழைப்பிற்கும் கிடைக்காத பலனுக்கும் உண்டான சமூக விதிகள் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துள்ளீர்களா? 

தொழில் உலகத்திற்குத் தேவைப்படாத நேர்மையைக் கட்டிக் கொண்டு வாழும் போது உருவாகும், உருவாக்கப்படும் அரசியலை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நீங்களே குருவாக மாறியிருக்கின்றீர்களா? 

நடைபயிற்சி முடிந்து வீட்டுக்குள் உள்ளே நுழையும் போது நேரம் மறந்து தூங்கும் மனைவி, குழந்தைகளை அவர்கள் நிலையில் நின்று ரசிக்க முடிந்துள்ளதா? முதல் நாள் இரவு குழந்தைகள் படித்த புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்க அதைத் தாண்டிச் சென்று கோபப்படாமல் சிதறிக்கிடக்கும் மற்றவற்றையும் குறிப்பிட்ட இடங்களில் அமைதியாய் அடுக்கி வைத்து விட்டு வாய் விட்டுச் சிரிக்க முடிந்துள்ளதா? 

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் மனைவி சொல்லும் முதல் நாள் பிரச்சனைகளைத் தொடரும் போட்டுத் தொடங்கும் சமயத்தில் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசனைத் தலைவனையாய் வாழ்ந்ததுண்டா? அலுவலக அரசியலை அங்கேயே விட்டு விட்டுப் பிடித்த பாடலை உரக்கச் சொல்லிக் கொண்டே உலகம் பிறந்தது எனக்காக? என்று வீட்டுக்கு வரும் பழக்கம் உண்டா? அன்றாடம் உருவாகும் அழுத்தங்கள் அனைத்தையும் பிரித்து வைத்து மழுங்காத சிந்தனையைப் பெற்றதுண்டா? 

வாழ்க்கையில் வாசிப்பைத் தொலைக்காமல் இருந்ததுண்டா? வாசிக்கும் ஒவ்வொன்றிலும் எழுதியவரின் பெயரைத் தாண்டி எழுதிய விதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய்ந்து பார்த்ததுண்டா? போக்குவரத்து நெரிசலில் நசுங்கிச் சென்றாலும் அமைதியான காட்டில் இருக்கும் அமைதியை மனம் பெற்று அவசர மனிதர்களை ஆச்சரியமாகப் பார்க்கும் மனோநிலையைப் பெற்றதுண்டா? சுற்றியுள்ள அனைவரும் மோசம். இதுவொரு குப்பை வாழ்க்கை என்ற உணர்தலை விட்டு வெளியே வந்ததுண்டா? 

இவையெல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் பக்குவம் என்ற நிலையை எட்டியிருப்பீர்கள். பணம் தேவை என்பதற்கும் பணம் மட்டும் தான் தேவை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அர்த்தம். உங்கள் ஆரோக்கியத்திற்கு வெளியே உள்ள எந்த மருந்துகளும் தேவையில்லை. நீங்களே மருத்துவராக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளவராக இருப்பீர்கள். 

நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பணத்தைத்தாண்டி உங்களுக்கான உலகத்தில் நீங்கள் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுள் என்ற வார்த்தையைத் தூர வைத்து உங்கள் உள்ளத்தையே கோவிலாக மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம். 

உங்கள் வயது ஐம்பதாக இருக்கலாம். இதனையும் தாண்டி கடந்து வந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம். ஆன்மீக எண்ணங்கள் என்னை வழி நடத்துகின்றது என்ற நம்பிக்கையுள்ளவராக இருக்கலாம். இல்லை அதையும் மீறி நான் வளர்த்துக் கொண்டுள்ள எண்ணங்களின் வலிமையே என்னை வழிகாட்டும் குருவாக உள்ளது என்று யோசிக்கத் தெரிந்தவராகவும் இருக்கலாம். இங்கு எல்லாமே முக்கியம். ஆனால் எல்லாவற்றையும் விட எண்ணங்கள் முக்கியம். நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை என்று உணர்வது மிக முக்கியம். 

எண்ணங்களுக்குத் தனிக்குணம் உண்டு. எந்நாளும் நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. நடித்தாலும் ஏதோவொரு சமயத்தில் காட்டிக் கொடுத்து விடும். எதன் அடிப்படையில் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதனை அவர்களை அறியாமல் காட்டிக் கொடுத்து விடும். நம்மிடம் அளவு கடந்த பணம் இருக்கின்றது என்பதைக் கௌரவமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் தங்களைத் தனித்தீவாக மாற்றிக் கொள்கின்றார்கள். தாம் சேர்க்க முடியாத பணத்தை நினைத்துக் கொண்டே பலரிடமிருந்து ஒதுங்கி வாழ நினைப்பவர்களும் தீவு போலத்தான் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றார்கள். இரண்டு பேர்களும் தங்களுக்கான வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ முடியாதவர்கள். 

மற்ற அனைத்தையும் விடப் பணம் அளவு கடந்த தன்னம்பிக்கையைத் தரவல்லது. அந்த நம்பிக்கை செலுத்தும் பாதை தான் கேள்விக்குரியது. பணத்தை மட்டுமே தகுதியாக நினைத்துக் கொள்பவர்களின் மனவலிமை என்பது ஏதோவொரு சமயத்தில் இறக்கப் பாதையில் இறக்கி விடும். அது பணம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கக்கூடும். இதனை உணர்பவர்கள் குறைவு. இவற்றை உணர்ந்தவர்களுக்கு இங்கே எல்லாமே வேடிக்கையாக மாறிவிடும். வேடிக்கையாளனாக வாழத் தெரிந்தவனுக்கு வெயில், மழைக் காலம் என்பது எல்லாமே ஒன்று தான். 

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகியிருப்பின் நிச்சயம் எந்தக் கதவும் முடியிருக்காது. ஏதோவொரு வகையில் திறந்தே தான் தீரும். சூழ்நிலையும் மாறலாம். பொறுத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். அதுவரையிலும் வாங்கிய கடனும், இனி வாங்க வேண்டிய கடனும் பாடங்கள் நடத்தலாம். 

அடுத்த மாதம் வேலையில்லையே? மாத சம்பளம் இல்லாவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற அழுத்தம் உங்கள் அசைத்துப் பார்த்தாலும் இவைகள் எதுவும் உங்கள் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்று நிச்சயம் சொல்ல முடியும். கவலைகள் என்பது கற்றுக் கொடுக்கும். தெளிவான பாதையை அடையாளம் காட்டும். ஆனால் அதுவே உங்களை உடல் ரீதியாகப் பாதிப்படையச் செய்தால் அதற்குப் பெயர் உங்கள் திறமையை இதுநாள் வரைக்கும் உணராமல் வாழ்ந்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

இருபது வயது வரைக்கும் உண்டான வளர்ச்சியென்பது வேறு. நாற்பது வயதுக்கு மேலே நாம் காணும் வளர்ச்சியென்பது வேறுவிதமானது. முதலில் உடல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்குப் பின்னால் வருவதெல்லாம் உள்ளம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவே இறக்கும் வரையிலும் தொடர்கின்றது. 

உள்ளத்தை அடக்கத் தெரிந்தவனின் உடல் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. ஆரோக்கியம் உள்ளவனுக்குக் காலம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த கூடியதாகவே இருக்கும். அது எழுபது வயதாக இருந்த போதிலும். இதைப் பற்றிச் சொன்னாலே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? என்று நம்மவர்கள் நம் எண்ணத்தை அசைத்துப் பார்க்கக்கூடும்? 

ஐம்பதுக்கு முன்னால் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் உடலை சுகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் பாதிக்கு மேல் வரும் வசதிகளும் வாய்ப்புகளும் உண்டான குணம் வேறு விதமானது. நாம் இறக்கும் வரையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட அமைதியான வாழ்க்கைக்கும் உதவக்கூடியதாக இருக்கும். 

இளமையில் வறுமை என்பதனை விட முதுமையில் வறுமை என்பது தான் கொடூரமாக இருக்கும். உதவி செய்ய ஆட்கள் இல்லாத போது நம்மிடம் இருக்கும் செல்வம் உதவி செய்ய ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் பக்குவம் இல்லாத நிலையில் வந்து சேர்ந்த செல்வம் நம்மைச் செல்லாக்காசாகத்தான் மாற்றுகின்றது என்பதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள முடியுமே? 

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். அதனால் என்ன? பிழைப்புவாதிகள் உருவாக்கிய சமூகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய போட்டி, பொறாமை, வன்முறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உருவாக்கிய ஒவ்வொருவரும் கடைசியில் ஏதோவொரு பெரிய மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்து இந்த உடலில் இருந்து என் உயிரைப் பிரித்து விடு இறைவா? என்று கெஞ்சுவதையும் பத்திரிக்கையில் படிக்கத்தானே செய்கின்றோம். 

நம் வாழ்க்கையின் தீர்மானங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலில் வெற்றி, வசதியுடன் கூடிய வாழ்கையில் அனுபவித்தே தீர வேண்டிய வீடு, வாகனங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. 

இல்லாவிட்டால் எல்லாமே இருக்கும். ஆனால் அவையனைத்தும் நம் அருகே இருப்பவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கை பார்ப்பவர்களாகக் காலம் மாற்றும். அப்போது உருவாகும் மன அழுத்தம் வேறொரு பாடத்தை நடத்தத் தொடங்கும். 

"நீ வாழ்ந்த வாழ்க்கையென்பது உனக்காக வாழவில்லை. உன்னைச் சார்ந்து இருந்தவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கின்றாய்?" என்று கண் எதிரே நடக்கும் வித்தியாசமான வாழ்க்கையின் அலோங்கலங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகும் மன அழுத்தமென்பது மரணப் பாதையை விரைவு படுத்தும். வெற்றி ராஜ்யத்தை உருவாக்கிய அனைவரும் இந்த இடத்தில் தான் பூஜ்யமாக மாறத் தொடங்குகின்றார்கள். 

பணத்தை மனதோடு சேர்த்து யோசிப்போம். மனம் தான் உடலை இயக்குகின்றது. இயக்குநர் சரியான நபராக இல்லாவிடின் நடிகரின் நடிப்பு நன்றாக இருக்குமா? 

தொடர்வோம்.......



15 comments:

திவாண்ணா said...

வேடிக்கை பார்க்க கத்துக்கறது நல்லதே. அதே சமயம் விலகியே இருக்கலாமா? நடக்கிற நாடகத்தில நமக்குன்னு ஒரு ரோல் இருக்குமில்லையா? அதை நடித்துக்கொண்டே அதையும் வேடிக்கை பார்க்க முடியுமா?

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? - மயிலிறகாய் மன வசப்பட்டு நிற்கும்போது இதெல்லாம் சாத்தியம் என்பதை உங்கள் மனப்பதிவுகள் மௌனமாக கால் பதித்து செல்கின்றன

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் உண்மையோ உண்மை... அசர வைத்து விட்டீர்கள்...!

Amudhavan said...

சரியான கோணம்.... சரியான பார்வை. வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

மிகச் சரியானப் பார்வை
அனுபவ வார்த்தைகள் ஐயா
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினை இப்பதிவு நினைவுபடுத்தியது. அலுவலகத்தில் பிற நண்பர்களைப் போல நானும் பணியைப் பற்றியும், உடன் பணியாற்றுவோர் பற்றியும், உள்ள சூழலைப் பற்றியும் எதிர்மறையாக (உண்மை நிலையே அதுதான்) நான் பேசியபோது, புதிதாக அப்போது அறிமுகமான நண்பர் ஒருவர் கூறியது அதிக தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. "உங்களின் குணத்திற்கு நீங்கள் நேர்மறை சிந்தனையிலேயே இருக்கவேண்டும், நீங்கள் எதிர்மறை எண்ணங்களைப் பேசுவதை நிறுத்திவிடுங்கள். ஒரு சமூக அமைப்பில் இவ்வாறான நிகழ்வுகள் இயற்கையே. நல்ல எண்ணங்கள் நம்மை மேம்படுத்துவதோடு, அருகில் இருப்போரையும் நன்னிலையில் வைக்கும். ஒரு தேர்வில் வெற்றி பெற 35 விழுக்காடு போதும் என்று உதாரணத்திற்கு வைத்துக்கொண்டால், மீதி 65 விழுக்காட்டைப் பற்றி ஏன் எதிர்மறையாக நினைக்கவேண்டும்" என்றார் அவர். அதிகம் அறிமுகம் இல்லாத, ஆனால் என்னைப் பற்றி நன்கு விசாரித்து என்னைக் காண வந்தவர் அவர். என்மீது மிகவும் மரியாதை வைத்துள்ளவர். இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கு அதிகம் என்றே தோன்றுகிறது. அருமையான பகிர்வு

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்தைப் பார்த்து அடுத்த அத்தியாயம் இது குறித்து எழுதியுள்ளேன். அதையும் படித்தவுடன் உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

ஜோதிஜி said...

தற்போது நீங்கள் உங்கள் பெயருடன் சேர்த்துள்ள அருள்நிதி என்ற பெயர் (பட்டம் என்று நினைக்கிறேன்) மிகவும் கம்பீரமாக பொருத்தமாக உள்ளது.

ஜோதிஜி said...

படித்து முடித்து அழைத்துச் சொன்னவர்களும் நீங்கள் சொன்னதையே சொன்னார்கள். நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

திருப்பூர் என்பது பொதுவாக எதிர்முறை பூமி. இங்கு இருந்து கொண்டு இப்படி யோசிப்பதால் தான் இன்னமும் ஆரோக்கியமாய் வாழ முடிந்துள்ளது.

Thulasidharan V Thillaiakathu said...

அசாத்தியமான கருத்துகள் ஜோதிஜி! முதல் பாரா, இரண்டாவாது பாராவில் சொன்னது "ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா என்பதை வரைக்கும் டிட்டோ செய்து கொள்ளலாம். இதுவரை இதில் பிரச்சனை இல்லாமல் செல்கிறது. நடைப்பயிற்சி செல்லும் போதும் சரி எங்கு சென்றாலும் சரி ரசிப்பது தொடர்கிறது. முடிந்தால் க்ளிக்கியும் விடுவதுண்டு. நிலம் முகர்ந்தால் உறக்கம் என்பது போல் உறக்கம். காலையில் உடலில் உள்ள இயற்கை அலாரம் விழிக்க வைப்பது என்று... என்னைச் சுற்றிப் பல பிரச்சனைகள் இருந்தாலும்...

சாலையில் நடப்பவை அல்லது வெளியில் நடப்பதற்கு தீர்வுகள் நம் கையில் இல்லை என்பதும் மனதில் பதிந்த ஒன்று என்றாலும் உதவ முடிந்தால் உதவுவது உண்டு.

//ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.//

மிக மிக உண்மை.

நாம் சிறுவயதில் விளையாடிய பாம்புக்கட்டமும், ட்ரேட், ஆடுபுலியாட்டம் மற்றும் தாயக்கட்டம் விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப்பாடங்கள் பல. நான் கற்று உணர்ந்ததை மகனுக்கும் கடத்தியதுண்டு..

அருமையான தொடர் தொடர்கிறோம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன்.//

ஹா ஹா ஹா எனக்கும் கிடைத்துவிட்டது!! ள் என்று மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான் அடிக்கடிச் சொல்லிக் கொள்வது உங்களின் அடுத்த இரு வார்த்தைகளையும் "அதனால் என்ன" என்பதுதான். எனக்கு அதில் வருத்தமில்லை.

கீதா

கிரி said...

ஜோதிஜி ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க :-)

நிறைய வரிகள் ஒரு எழுத்தாளருக்குண்டான திறமையில் இருந்தது.

நான் இந்த வயதை நெருங்க இன்னும் 10 வருடங்கள் உள்ளது என்றாலும்.. ஒரு கருத்து கூற விரும்புகிறேன்.

வயதான பிறகு நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வந்து (அனுபவம் பெற்று) இதை நாம் அபப்டி செய்து இருக்கலாம் என்று கடுப்பை கிளப்பும் :-) .

இதனால் ஒரு பயனும் இல்லையென்றாலும் நினைவுக்கு வந்து வெறுப்பேத்தும்.

நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. எதிர்மறை சிந்தனைகள் பக்கமே செல்லாமல் இருப்பது உடல் நலனுக்கும், மனதுக்கும் 100% நல்லது.