Monday, September 11, 2017

உரிமைக்குரல் ஒலிக்கட்டும்.


"நாம் வாழ்ந்த பழைய வாழ்க்கை தான் சிறப்பு" என்ற வாசகத்தை இன்று உச்சரிக்காத வாய்கள் குறைவாகவே இருக்கும். இனி முடியுமா? என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் ஒரே வரியில் சொல்லிடமுடியும். "இனி அதற்கு வாய்ப்பே இல்லை". சக்கரம் சுழலுகிறது. மேலேறியது இறங்கத்தான் செய்யும்? ஆனால் எப்போது என்று எவரால் சொல்ல முடியும்? 

வளமையான சாம்ராஜ்யங்கள் அழிந்த போது அடுத்த அரசு உருவானது. மற்றொரு மாற்றம். மாறியபடி பயணம் செய்த காலம் பல மாறுதல்களையும் கூடவே அழைத்து வந்தது. இன்று இங்கு வந்து நின்றுள்ளோம். அடுத்த மாற்றம் ஒரு மாத்திரையில் கூட வரக்கூடும். மொத்த சத்துக்களையும் ஒரு விழுங்கலில் முடித்து விடுவோம். 

அப்போது நாம் இருப்போமா? 

இயற்கை வேளாண்மை, இயற்கைப் பொருட்கள் என்று எத்தனையோ விளம்பரங்கள் நம்மை வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அவை அனைத்தும் முன்பிருந்தபடியே இருந்த இயற்கையான விதங்களில் வந்ததா? யாருக்கும் தெரியாது? நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பியவர்கள் வாங்குகின்றார்கள். விற்றவர்கள் பணக்காரனமாக மாறிவிடுகிறார்கள். 

காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் வரைக்கும் நாம் பயன்படுத்தும் மொத்த பொருட்களில் உள்ள சமாச்சாரத்தில் 90 சதவிகிதம் செயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களுடன் தான் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள். சரியா? தவறா? போன்றவற்றை நாம் இங்கே அலசப்போவதில்லை. 

வீட்டை விட்டு வெளியே வந்தால் புகையின் ஊடாகத்தான் நம் வாழ வேண்டியுள்ளது. எல்லா இடங்களிலும் பரவியுள்ள அசுத்தங்களைத்தான் உணர வேண்டியுள்ளது. தற்காலத்தில் கெமிக்கல் என்பது ஒரு வார்த்தையல்ல. அது இன்றைய வாழ்க்கையின் அடித்தளம். சுய திருப்திக்காகப் பல பொருட்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அதுவும் ஏதோவொரு இடத்தில் செயற்கையுடன் உறவாடித்தான் வெளியே வந்திருக்கும். 

நம் நாட்டில் வாழ்வதற்கு முக்கியத் தகுதி ஒன்று உண்டு. எப்போதும் உத்தேசமாகப் பேசிப் பழக வேண்டும். ஆணித்தரமாகப் பேசி விட்டால் மாட்டிக் கொள்வோம். அறிவோடு பேசி விட்டால் குழப்பமும் அத்தோடு அதிக எதிரிகளும் உருவாகி விடுவார்கள். 

இதனால் தான் நடுத்தரவர்க்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டுவதில்லை. குழந்தைகளையும் அந்த வட்டத்திற்குள் தான் வளர்க்க நினைக்கின்றார்கள். லட்சியம் பெரிதா? லட்சம் பெரிதா? என்று கேட்டுப் பாருங்கள். லட்சம் பேர்களும் லட்சத்தை மட்டும் தான் கைகாட்டுவார்கள். 

அதனால் இன்று என் குழந்தை சம்பாத்தியம் லட்சத்தில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் விரும்புகின்றார்கள். அதற்குத் தான் இங்கே இத்தனை அடிதடி. இயற்கை, செயற்கை என்று எல்லாமே பின்னுக்குப் போய் வாழ முந்திக் கொள் என்பது இன்றைய தத்துவமாக மாறியுள்ளது. அந்த வாழ்க்கையைத் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்கொள்கிறார்கள். காற்று ஒரு பக்கம் அடிக்கும் போது எதிர்காற்றில் நாம் பயணித்தால் என்னவாகும்? 

மாறிப்போன சமூகத்தில் குழந்தைகளின் மாறிப் போன குணாதிசியங்களில் இருந்தே தொடங்குகின்றேன். 

வீட்டில் குழந்தைகள் பேருந்து பயணத்தை முழுமையாக வெறுக்கின்றார்கள். இதன் காரணமாக வெளியே செல்ல மறுக்கின்றார்கள். எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் முதன்மையாக ரயில் வசதி இருக்கின்றதா? என்பதனைத் அலசி ஆராய்கின்றார்கள். நமக்கே தெரியாத தொழில் நுட்ப வசதிகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார்கள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியுமா? என்று பாருங்கள் என்று ஆலோசனையை அள்ளி வழங்குகின்றார்கள். வசதியில்லாத பேருந்துகளும், நெருக்கியடித்த மனிதர்களும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லா இடங்களிலும் தனக்கான வசதிகளைத் தேடுகின்றார்கள். வார்த்தைகளாக, வாக்கியங்களாக வாசிக்கும் எந்தச் செய்திகளும் அவர்களுக்குப் பாதிப்பை உருவாக்குவதில்லை. 

பள்ளி ஆசிரியைகள் சொல்லும் புராஜெக்ட் வேலைகளில் இயற்கை சார்ந்த விசயங்களைப் படமாக, விளக்கமாக விவரித்து எழுதி, செய்து கொண்டே கொடுப்பவர்களிடம் இயற்கை குறித்துப் பேச முடிவதில்லை. அவர்கள் வாழ்க்கையைக் கோடு பிரித்து வைத்துள்ளதாகவே தெரிகின்றது. "என் தேவை மதிப்பெண்". அதற்காக நான் இதைச் செய்கின்றேன். "என் வசதி என் உரிமை". அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நான் கேட்பதை உருவாக்கித் தருவது உங்கள் கடமை. என்பது போன்ற வாக்குவாதங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும். 

எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள காரணங்கள் ஒன்றே ஒன்று தான். வறுமை, பசி, பட்டினி, சோகம், வெள்ளம், துயரம், கவலைகள் போன்ற எதுவும் தாக்காது வாழும் எந்தக்குழந்தைக்கும் எது குறித்த பாதிப்பும் பதட்டங்களை உருவாக்குவதே இல்லை. 

பத்து வயதிற்குள் கோவில், விசேடங்கள் என்று கலந்து கட்டி இவர்களைக் கூட்டிச் சென்ற இடங்கள் அனைத்தும் மறந்து விட்டது. அன்று கார் இருந்தது. அருகாமைப்பள்ளி என்ற வசதியின் பொருட்டு வாழும் இடத்தில் கார் தேவையில்லை என்று விற்று விட்டேன். இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற ரீதியில் தான் அவர்களின் பேச்சுத் தொடங்குகின்றது. நீர்வீழ்ச்சிகள் கவர்ந்த அளவுக்குக் காடுகள் கவர்வதில்லை. உயிருள்ள விலங்குகளை விடத் தீம் பார்க் விசயங்களைத் தான் விரும்புகின்றார்கள். பழங்களை விடப் பழச்சாறு விருப்பமானதாக உள்ளது. செயற்கை பானங்கள் அதீதமாய் விரும்பப்படுகின்றது. 

தூரப் பயணமென்றாலும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட வேண்டும். வசதிகளுக்காக அழிக்கப்படும் காடுகள் குறித்து ஆர்வமில்லை. அதற்குப் பின்னால் உருவான நிகழ்வுகள் அதன் மூலம் கிடைக்கு வசதிகள் தான் முக்கியமாகத் தெரிகின்றது. 

ஆரவாரங்கள் என்பது உற்சாகத்தின் பாதை. ஆனால் உற்சாகம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தால் உள்ளும் புறமும் அலுத்துவிடாதா? யோசிக்கத் தெரியவில்லை என்பதனை விட அதைப் பற்றித் தற்போது யோசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றிலும் எளிதான வழியை இயல்பாகக் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார்கள். சுய விருப்பங்கள் என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்பதனை இவர்களைப் பார்த்து தான் கற்றுக் கொண்டுள்ளேன். பயிற்சி இல்லாமல் பலவித படங்களை நொடிப் பொழுதில் வரையும் மகளிடம் பாடக்கற்றுக் கொள் என்றால் பழிப்பு காட்டிவிட்டு நகர்கின்றார். உற்சாகமாக அரட்டை அடிக்கும் அடுத்த மகளிடம் பேச்சுப் போட்டில் கலந்து கொள் என்றால் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் போதுமே? என்று நக்கல் விடுகின்றார். 

பள்ளியில் விளையாடப் போகும் மகளுக்குக் கடினமாக உழைக்கும் கால்பந்து விளையாட்டு அளவுக்கு யோகா என்பது வெறுக்கக்கூடியதாக உள்ளது. அமைதியின் அழகை ரசிக்கும் மனமில்லை. இயல்பாக வாழப் பழக்கம் இல்லாத சூழ்நிலை உருவாக்கிய தாக்கங்கள் ஒவ்வொன்றையும் இவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மூலமாகவும் பார்க்கின்றேன். 

இது தலைமுறை இடைவெளி மட்டுமல்ல. இங்கு ஐம்பது வயதை நெருங்கி வாழும் ஒவ்வொருவரும் அடுத்த இரண்டு தலைமுறையுடன் வாழ்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இடைவெளி உருவாகாமல் இருக்க வேண்டுமென்றால் இயல்பான விசயங்களை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் முரண்பாடுகள் முண்டியடிக்காமல் இருக்கும். 

அவசரம், உடனே, இப்போதே போன்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அது நரம்பை அதன் இயல்பை பலிகிடாவாக்கும் சமாச்சாரங்கள். மூளைகளின் வேகம் அதிகமாக அதிகமாக உள்ளே சுரக்கும் திரவங்கள் என்ன விளைவுகளை எதிர்காலத்தில் இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கப் போகின்றதோ? என்பதனை பல முறை யோசித்துள்ளேன். வீட்டில் மட்டுமல்ல. குழந்தைகளின் தோழிகள், அவர்களின் நடவடிக்கைகள், பணிபுரியும் இடங்களில் நான் பார்த்த, பழகிய நபர்கள் அடங்கிய மொத்த சமூகத்தின் பாதிப்பாகவே இதனைப் பார்க்கின்றேன். 

குத்து, வெட்டு, ரத்தம் பீய்ச்சியடிக்கும் காட்சிகளை நாம் சிறுவயதில் பார்த்தால் என்ன மனநிலையில் இருந்தோம் என்பதனை இப்போது யோசித்துப் பாருங்கள். ஆனால் இன்றைய குழந்தைச் சமூகம் அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுள்ளது. அதற்குப் பின்னால் உருவாக வேண்டிய பாவம், பரிதாபம்,வருத்தங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. அறிவால் யோசித்து அறிவால் பிரித்து வாழும் குழந்தைகளின் வாழ்க்கையில் ரசனைகளுக்கு இடமேது? 

கிராமங்கள் என்றாலே வாழத்தகுதியற்ற இடம். வாய்ப்புகள் இல்லாத பகுதி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. சுத்தமான காற்று, நெருக்கடி இல்லாத வாழ்க்கை என்று பேசத் தொடங்கும் போதே ஏன் வசதிகளை நாம் மறுக்க வேண்டும்? அதற்கான உழைப்பு இருந்தால் போதுமே? என்று கேள்வி கேட்கும் குழந்தைகளிடம் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? 

குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிய வைக்க வேண்டும் என்று எத்தனையோ ஆலோசனைகள் தினந்தோறும் உங்களையும் என்னையும் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் என் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு என்பது வேறுவிதமாகத் தெரிகின்றது. 

ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும், அதற்குப் பிறகு அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் உருவாகும் பல விதமான மாற்றங்களைக் கடந்த சில வருடங்களாக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். 

வீட்டில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாடங்களே கதியென்று இருந்தார்கள். புத்தங்களைப் பாதுகாத்தார்கள். படிக்க எதுவும் இல்லாத போதும் அதனைக் குழந்தைகள் போலக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பு தொட்டது முதல் மனம், குணம் எல்லாமே மாறத் தொடங்கியது. சுதந்திரம் குறித்துப் பேசுகின்றார்கள். விமர்சனங்களை வைத்துத் தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். பதின்ம பருவத்தில் உருவாக்கும் ஹார்மோன் குறித்து, அதன் குதியாட்டம் என்னன்ன விளைவுகளை ஒரு குழந்தைக்கு உருவாக்கும் என்பதனை பல முறை மனைவியிடம் எடுத்துச் சொல்வேன். ஆனால் அவர் புரிந்தும் புரியாமலும் குழந்தைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார். 

கடைசியில் மனைவியின் குற்றச்சாட்டு என் மேல் வந்து நிற்கும். "மூன்று பேரையும் கெடுத்து வச்சுட்டீங்க. கண்டதையும் பேசி அவர்களை முழுமையாக மாற்றிவிட்டீங்க" என்பார். 

இந்த இடம் தான் முக்கியம். 

குறிப்பிட்ட வட்டத்திற்கு நான் வாழ்ந்தேன். எல்லையை மீற எனக்கு யாரும் உதவவில்லை. அதற்கான வழியும் எனக்கும் தெரியவில்லை. எதைப் பார்த்தாலும் அச்சம். எங்குத் திரும்பினாலும் பயம். ஒழுக்கம் மட்டுமே உன்னை உணர்த்தும் உயர்த்தும் என்று வளர்க்கப்பட்ட என் வாழ்க்கைக்கும் என் குழந்தைகள் வாழும் சூழ்நிலையும் வெவ்வேறானது. 

கல் கூட மண்ணாக மாறுகின்றது. கால அளவு தான் வித்தியாசம். ஆனால் குழந்தைகளின் மாற்றங்கள் மட்டும் உடனே நடந்து விடுகின்றது. மேலைநாடுகளில் பதின்ம வயதுக் குழந்தைகளின் வாழ்க்கை வேறு விதமாக உள்ளது. ஆனால் இங்கே ஆதிக்கமாகப் பார்க்கப்படுகின்றது. "முளைத்து மூணு இலை விடல" என்ற வாசகத்தைச் சொல்லாத அம்மா அப்பாக்கள் நம் நாட்டில் அரிது. 

குழந்தைகள் வளரும் போதும், வளர்ந்த பின்பு உருவாகும் முரண்பாடுகளில் முதலில் பலியாவது தகப்பன்மார்களே. தகப்பனின் ஈகோ என்ற சுயமரியாதை முதலில் அடிவாங்கத் தொடங்குகின்றது. குடும்ப வாழ்க்கையில் தாங்கள் செலுத்தும் ஆதிக்கம் மூலமே வாழ்ந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் கிடைக்கும் ஆப்பு என்பது குழந்தைகள் சொந்தமாக யோசித்துக் கேள்வி கேட்கும் தருணம் தான். நீங்க ஏன் அலுவலகம் தாமதமாகச் செல்றீங்க? ஏன் இன்று செல்லாமல் இருக்குறீங்க? ஏன் வரும் போது இதனை வாங்காமல் வந்தீர்கள்? என்று தொடங்கும் கேள்விகள் கடைசியில் கேலியாக மாறத் தொடங்குகின்றது. 

என் அலுவலகம், தொழிற்சாலை, பழகும் மற்ற எவர்களுடன் அதிகமாகப் பேச முடியாத சமூகம் சார்ந்த பொதுவிசயங்களை மூன்று பேருடனும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. ஆனால் எதை எப்போது சொன்னோம் என்று மறந்திருப்போம். கனகச்சிதமாகக் குறிப்பிட்ட விசயங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். 

என் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டிலை எடுத்துப் பார்த்தவர்கள் இன்று வரையிலும் நக்கல் நையாண்டி தான். சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவேன். நான் படித்த சூழ்நிலையை, எனக்கு வழங்கப்பட்ட வசதிகளை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை தப்ப முடியாத தருணங்களும், தாவிப் பாய்ந்து ஓடும் நிகழ்வுகளும் வீட்டில் அன்றாடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்ச்சியாக உள்ளது. காரணம் என் அப்பாவுடன் அன்று பேச எனக்குப் பயம். இன்று இவர்களுக்கோ அப்பா என்பவர் மற்றொரு தோழன். 

ஆனால் நாம் இந்த மாற்றங்களைக் கண்டு பயந்து சாகின்றோம். இனி என்ன ஆகப் போகின்றதோ? என்று அஞ்சுகின்றோம். 

ஆனால் குழந்தைகளிடம் உருவாகும் மாற்றங்கள் நம்மைக் கேட்டு வருவதில்லை. ஆசிரியர்கள், உடன்படிக்கும் தோழிகள், பழகும், பார்க்கும் நபர்கள் என்ற கலந்து கட்டி வர எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிலே கற்றுக் கொள்கின்றார்கள். இவை அனைத்தையும் விடச் சமகாலத்தில் வளர்ந்த தொழில்நுட்ப வசதிகள் தான் அவர்கள் வாழ்க்கை தீர்மானிக்கின்றது. மாற்றுகின்றது. தவறு, சரி என்று இனம் பிரிப்பதில்லை. இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைகள் இருபது வயது வரைக்கும் பொருந்தும் அல்லவா? 

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பல முறை அவரவர் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. நாம் ஆசிரியர் குறித்து மனதிற்குள் உருவாக்கி வைத்து இருக்கும் மரியாதை சார்ந்த பயங்கள் எல்லாமே இன்று அடிவாங்கி விட்டது. உன் வேலை உனக்கு? என் வேலை எனக்கு? என்று கொடுக்கல் வாங்கல் கணக்காகவே இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு உள்ளதாக எனக்குத் தெரிகின்றது. 

குழந்தைகளின் குணாதிசியங்களில் பெரும்பங்கு வகிப்பது ஆசிரியர்கள் தான் பலவிதங்களில் காரணமாக உள்ளார்கள் என்பதனை பலமுறை கவனித்துள்ளேன். தற்போது எந்த ஆசிரியர்களும் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. பாடங்களுக்கு அப்பாற்பட்டுப் பேசுவதில்லை. பொதுவிசயங்கள் குறித்து உரையாடல் அறவே இல்லை என்பது தான் முக்கியமாகத் தெரிகின்றது. இதற்குப் பின்னால் மாறிய பள்ளிக்கூடச் சூழ்நிலைகள் பெரிதாக இருந்தாலும் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துப் பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை அல்லது அது குறித்த அக்கறையில்லை. வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை நம்பாத எவரும் பெற்ற வெற்றிகளைக் கடைசி வரைக்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றீர்களா? 

அடைகாத்து வைத்திருக்கும் சொத்துக்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தி விட்டு இறந்து போய்விடலாம். ஆனால் பெற்ற சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வாங்கியவருக்கு அருகதை வேண்டுமே? 

ஆனால் எந்தத் தனியார் பள்ளிக்கூடமும் ஆசிரியரின் பொது அறிவு குறித்துக் கவலைப்படுவதில்லை. கல்வியென்பது மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே என்று தீர்மானமாக மாறிய பின்பு பொது வாசிப்பு என்பது தேவையில்லாதது போல் ஆகிவிட்டது. 

23 வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேரும் ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியை விடத் தற்போது குழந்தைகளின் மனோபாவம் மிஞ்சுவதாக உள்ளது. இதில் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. லகானைப் பிடித்துக் கையாள வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் கையாலாகத்தனத்தில் கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்பதனை பலமுறை பலவித அனுபவங்களில் வாயிலாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 

நகர்ப்புறங்களில் வளரும் குழந்தைகள் சிறு நகரங்கள், கிராமங்களில் வளரும் குழந்தைகளைவிடப் பல்வேறு விதங்களில் தினந்தோறும் மாறிக் கொண்டே வருகின்றார்கள். நல்லதும் கெட்டதும் கலந்தே வருகின்றது. ஆனால் எல்லாப் பொறுப்புகளிலும் பெற்றோர் இடம் வந்து தான் சேர்கின்றது. தடுமாற்றம் இங்கே இருந்து தான் தொடங்குகின்றது. அளவு கடந்த ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு தகுதிக்கு மீறி, தன் வருமானத்தை உணராமல் பள்ளிப்படிப்பில் தங்கள் சேமிப்பைக் கொட்டும் பெற்றோர்கள் அனைவரும் கண் இருந்தும் குருடர்களாகத்தான் எனக்குத் தெரிகின்றார்கள். 

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது "நான் என்னவாகப் போகின்றேன்?" என்று அவர்களாகவே சொன்னார்கள். இப்போது "மாற்றங்கள் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம்" என்கிறார்கள். 

"உன் முடிவு உன் கையில்" என்ற சுதந்திரம் கொடுத்தபிறகு அவர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்றால்? 

தொடர்ந்து பேசுவோம்............ 

தொடர்புடைய பதிவுகள்
15 comments:

ஜோதிஜி said...

படம் (நன்றி) Henk Oochappan

Avargal Unmaigal said...

//பதின்ம பருவத்தில் உருவாக்கும் ஹார்மோன் குறித்து, அதன் குதியாட்டம் என்னன்ன விளைவுகளை ஒரு குழந்தைக்கு உருவாக்கும் என்பதனை பல முறை மனைவியிடம் எடுத்துச் சொல்வேன். ஆனால் அவர் புரிந்தும் புரியாமலும் குழந்தைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்.

கடைசியில் மனைவியின் குற்றச்சாட்டு என் மேல் வந்து நிற்கும். "மூன்று பேரையும் கெடுத்து வச்சுட்டீங்க. கண்டதையும் பேசி அவர்களை முழுமையாக மாற்றிவிட்டீங்க" என்பார்.////


எங்க வீட்டில்தான் இப்படி என்றால் உங்க வீட்டிலும் இதே நிலமைதான் போலிருக்கிறது... சில விஷயங்களை ஆண்கள் புரிந்து கொண்டது போல பெண்கள் புரிந்து கொள்ளாமல் அந்த காலம் மாதிரியே ட்ரீட் பண்ணுகிறார்கள் ஹும்ம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்போதெல்லாம் பெற்றோர்கள் கூறும்போது பிள்ளைகள் மிகவும் அறிவோடு இருக்கின்றார்கள், புத்திசாலித்தனமாக இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் அது இயற்கையாக உள்ளதுபோலத் தோன்றவில்லை. எதிர்மறையான தாக்கங்களில் குழந்தைகள் ஆரம்ப காலம் முதலே வளர ஆரம்பிக்கின்றனர். அந்த அளவிற்கு சமுதாய சூழல் உள்ளது. அவ்வப்போது நாம் அவர்களை பக்குவப்படுத்தி வழிநடத்திச் செல்வது நலம்.

ராஜி said...

எங்க வீட்டில் நான் பலியாடு. நான் ஆஃபீஸ் அது இதுன்னு போயிடுறேன். வீட்டில் சும்மாதானே இருக்கே. கவனிக்குறதுக்கென்ன?! எல்லாம் உன்னாலதான் நீ சரியா இருந்தால் இதுகளும் சரியில்ல. கெடுத்து வச்சிருக்கேன்னு...

ராஜி said...

நம்ப பிள்ளைகள் மிகுந்த புத்திசாலிகள். அவங்களை சரியாய் கொண்டு போக நமக்கு தெரிலைன்னுதான் சொல்லுவேன்..

அந்த காலம் மாதிரி சுற்றுச்சூழலும், உணவும், அன்பும், பாதுகாப்பும் கொடுத்தா இன்னும் சிறப்பா இருப்பாங்கன்னு என் அபிப்ராயம்

G.M Balasubramaniam said...

இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் எல்லா தலை முறையிலும் உண்டு என்றே தோன்று கிறது

'பரிவை' சே.குமார் said...

எல்லாருடைய வீட்டிலும் பிள்ளைகளை கெடுத்து வைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அப்பாக்கள் மீதுதான்....

எதார்த்தமான கட்டுரை... உங்கள் பாணியில் சிறப்பாய்...

அருமை அண்ணா...

ஜோதிஜி said...

இங்கு வாழும் பெண்களில் இரண்டு வகையுண்டு. அலுவலகம் சென்று பல வித அனுபவங்கள் பெற்றவர்கள். எதார்த்தம் தெரிந்தவர்கள் அல்லது தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள். வீட்டுக்குள்ளே இருந்து வாழும் பெண்கள் அவர்களை மாற்றுவது கடினம். அவர்கள் வழியில் சென்று தான் பொறுமை காக்க வேண்டும். மாறிய சூழ்நிலைகளை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

ஜோதிஜி said...

ஒவ்வொரு புறச்சூழல் தான் ஒருவரின் அகச்சூழலை தீர்மானம் செய்கின்றது. ஒவ்வொரு காலகட்டமும் இதன் அடிப்படையில் மனிதர்களை தலைவர்களை காலம் நமக்கு வழங்குகின்றது. எல்லைகளை புரியவைத்தால் போதும். அவர்கள் உணரும் காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை, சொன்ன அறிவுரைகள் நிச்சயம் வீணாகப் போய்விடாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.

ஜோதிஜி said...

புத்திசாலிகளை விட தற்போதைய சூழ்நிலையில் தந்திரசாலிகள் தான் வெல்கின்றார்கள் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்திசாலிகள் அமைதியான வாழ்க்கைக்கு தயாராக இருக்கின்றார்கள். தந்திரசாலிகள் கடைசி வரைக்கும் காலத்தோடு போராடிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பதனை நாம் பல இடங்களில் பல மனிதர்கள் வாயிலாக பார்த்துக் கொண்டே தானே இருக்கின்றோம். நன்றி.

ஜோதிஜி said...

காந்தி சுதந்திரம் பெற்ற சிலமாதங்களில் நேரு அமைச்சர்களைப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே அங்கலாய்ப்புடன் கிராமம் பக்கம் சென்று பார்த்து வாருங்கள். ஆடம்பரம் அறவே வேண்டாம் என்றார்.

அறிஞர் அண்ணா இறக்கும் தருவாயில் கூட லஞ்சம் ஊழல் பெருகி விட்டது என்று வருத்தப்பட்டாராம்.

இப்போதும் அதே நிலை தான். நீங்க சொன்னதும் இந்த நினைவு வந்தது.

ஜோதிஜி said...

நன்றி குமார்.

Amudhavan said...

இன்னமும் நிறைய விஷயங்கள் சொல்லப்போகிறீர்கள் போலிருக்கிறதே.....

Rathnavel Natarajan said...

உரிமைக்குரல் ஒலிக்கட்டும். -அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

Paramasivam said...

Super analysis.