Saturday, August 18, 2012

கலைஞர் முகப்பு நூலா? அவர் முகமா?


திருப்பூருக்குள் மழை பெய்து நாளாகி விட்டது,  வானம் மேகமூட்டமாக வந்து காற்றில் ஒரு சிலுசிலுப்பை உருவாக்கினாலும் கடந்த நாலைந்து வாரமாக மழை என்பது வருமா? என்று ஒவ்வொரு முறையும் ஏங்க வைத்துக் கொண்டுருக்கின்றது, மரங்களை அழித்த வளர்ச்சியினால் ஈரப்பதமே இல்லாத வெயிலின் கொடுமையும், ஒரு விதமான புழுக்கத்தையும் அனுபவித்தே ஆக வேண்டியிருக்கிறது, சுற்றுப்புற காற்றில் இல்லாத ஈரத்தைப் போல ஊருக்குள் உள்ள பெரும்பாலான நிறுவனங்களும்  புழுங்கிப் போய் தான் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்,  ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களும் அவஸ்த்தைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் அல்லாடிக் கொண்டுருக்கின்றது,  

கடனுக்கு தொழில் என்பது மாறி கையில் காசு இருந்தால் தொழில் என்ற நிலைக்கு வந்து விட்ட காரணத்தால் சம்பாரித்து வைத்துள்ள பணத்தை எவரும் வெளியே எடுக்க தயாராக இல்லை,  சிறு குறு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை நம்பத்தயாராக இல்லை,  பெயரைக் கேட்டால் பவ்யம் காட்டும் போக்கும் மாறிவிட்டது,  பணத்தை கொடுத்து விட்டு எடுத்துப் போ? என்கிற தொனியில் வியாபாரத்தின் போக்கே மாறிவிட்டது,  வளர்ந்த நிறுவனங்களுக்கு கௌரவம் என்பது முக்கியம்,  ஆனால் நாணயம் என்பது தொடக்கம் முதலே இல்லாத காரணத்தால் இன்று பேய் முழி முழித்துக் கொண்டுருக்கிறார்கள்,  கடன்களை வசூலிக்க முடிந்தவர்கள் முடிந்தவரை போராடிக் கொண்டுருக்கிறார்கள்,  கொடுக்க மறுப்பவர்கள் மாற்று வழியை தேடிக் கொண்டுருக்கிறார்கள்,  மொத்தத்தில் இந்த ஆடு புலி ஆட்டத்தில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகளும், இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களும் மட்டுமே,  


ஒவ்வொரு நிறுவனங்களின் காசோலை உள்ளே வரும் போதும் வங்கி ஒவ்வொன்றும் தங்கள் கண்களில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டுருக்கிறார்கள், நிறுவனங்கள் வளரத் தொடங்கிய போது மற்ற தொழில் துறைகளில் தங்கள் மூதலீட்டை முடக்கிப் போட்டவர்கள் தற்போது தப்பிப் பிழைத்தவர்களாக உள்ளனர்,  ஏற்றுமதியை மட்டும் நம்பியவர்கள் மட்டுமே தற்போது நட்டாத்தில் தவிப்பவர்களாக இருக்கின்றனர், 

மற்றபடி உள்நாட்டு சந்தையில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு பெயரை உருவாக்கியவர்கள் இன்றைய காலகட்டத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டுருக்கின்றார்கள், விளம்பர மாயத்தால் பணத்தை வாரிக் கொண்டுருப்பவர்களுக்கு இதுவொரு வசந்த காலம்,  ஒரு சிறப்பான உதாரணம் ராமராஜ காட்டன், 

குடும்பத் தொடர்பு போல நடிகர் சிவகுமாரைப் பயன்படுத்தி அடுத்தடுத்து திரைப்பட நட்சத்திரங்களை வைத்து விளம்பரங்கள் செய்ய இன்று சிறிய கிராமங்கள் வரைக்கும் இவர்களின் வேஷ்டி, சட்டை என்பது ஒரு கௌரவத்தை தரும் ஒரு டிரேட்மார்க் என்கிற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது, 

இவர்களைத் தொடர்ந்து இதே வழியில் பலரும் வந்து விளம்பர உலகத்திற்கு ஒரு சிறப்பான வருமானத்தை அளித்துக் கொண்டுருக்கிறார்கள்.  வாங்குபவர்களுக்கு எப்போதும் இதன் சூட்சமம் தெரியப்போவதில்லை, 

உற்பத்தி விலைக்கும் வாங்கும் விலைக்கும் உள்ள இடைவெளி ஏறக்குறைய 300 சதவிகித லாபத்தில் நம் தலையில் கட்டிக் கொண்டுருக்கிறார்கள் என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. காரணம் விளம்பரங்கள் செய்யும் மாயை,  விளம்பரங்களை வைத்து மட்டும் நீங்கள் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் பணத்தை கண்களை திறந்து கொண்டே திருட அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம், இல்லாவிட்டால் ஈமு விளம்பரத்தைப் பார்த்து கோடிகளை கொட்டி கொடுத்து விட்டு இன்று தெருக்கோடிக்கு வந்துருப்பார்களா? இத்தனை இளிச்சவாயன்கள் நம் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உணர வாய்ப்பில்லாமல் போய்விடுமே?

••••••••••••••••••••••••••••••

கலைஞர் இணையத்தில் நுழைகின்றார் என்றதுமே தவறான வழிகாட்டுதல் காரணமான இந்த முடிவு எடுத்து இருப்பார் என்று மனதில் வைத்திருந்தேன்,

காரணம் கலைஞர் மேல் கொலவெறியோடு காத்துக் கொண்டுருப்பவர்கள் உலகமெங்கும் கோடிக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள்,  குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குத்திக் குதறியே விடுவார்கள். ஏற்கனவே இணையத்தில் கலைஞர் என்றாலே வடிவேல் கணக்காக ஓடிக் கொண்டுருப்பது அணைவரும் அறிந்ததே, 

அவர் இன்னமும் 30 வருடங்களுக்கு முன்பு அடுக்கு மொழி பேசி கவிழ்த்த கதை போல இன்று எவரும் இல்லை என்பதை உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.  

குறைந்தபட்சம் இணையத்தில் அவர் புகழ்பாடும் கோஷ்டிகளிடம் இந்த பொறுப்பை முறைப்படி ஒப்படைத்திருந்தால் கூட தப்பித்து இருக்கக்கூடும்.  முகப்பு நூலில் சேர அனுமதி கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்த காரணத்தால் மக்கள் புகுந்து விளையாடி விட்டார்கள். 


விமர்சிப்பவர்கள், விளாசித்தள்ளுபவர்கள், கிழி கிழிவென்று கிழித்துத் தள்ளுபவர்கள் என்று மூன்று விதமான கலைஞர் எதிர்பார்க்காத உடன்பிறப்புகள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அதிலும் மூன்றாவது ரகத்தினருக்கு கலைஞரின் குடும்பத்தை அசிங்கமாக அநாகரிகமாக பேசுவது என்பது அல்வா சாப்பிடுவது போல,  நானும் அவரும் முகப்பு நூலை அதில் வந்த விமர்சனத்தை கவனித்துக் கொண்டிருந்த போது படிக்க முடியாத அளவுக்கு போய்க் கொண்டேயிருந்தது.  நிச்சயம் கலைஞர் பார்வைக்கு இதை கொண்டு போயிருக்க மாட்டார்கள்.  கடைசி காலத்தில் புகழுக்காக என்று ஏன் தான் இத்தனை போதையோடு அலைகின்றாரோ? 

எல்லோரும் ஜெகத்ரட்சகன்,வைரமுத்து,வாலி போல அமைந்து விடுவார்களா என்ன? 

வழிகாட்டியாக மாறி ஒதுங்காமல் இருக்கும் வரைக்கும் இன்னும் பல அவமானங்களை சந்தித்தே ஆக வேண்டும், அவரும் உணரமாட்டார், அவரை வைத்து வாழ நினைப்பவர்களும் அதை செய்யவும் விடமாட்டார்கள், முக்ப்பு நூலில், ட்விட்டரில் இவர் தான் பதில் சொல்லப் போகின்றாரா?  ஏதோவொரு அல்லக்கை அருகில் இருக்கும்.  இவர் மனதில் நினைப்பதை அப்படியே செய்து காட்ட இன்னோரு சண்முகநாதனை உருவாக்கவா முடியும்?

•••••••••••••••••••••••••••••

ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வாரப்பத்திரிக்கைளின் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது,  முக்கால்வாசி திரைப்படங்கள் சார்ந்த செய்திகளைத் தவிர்தது,  போனால் போகிறதென்று சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை தேடிப்பிடித்து நாம் தான் கண்டு கொள்ள வேண்டும் போலிருக்கிறது,  கலைஞருக்கு மாற்று ஏற்பாடு ஜெயலலிதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பிக்கையாய் வாக்களித்தனர்,  ஆனால் அவரின் சொத்து குவிப்பு வழக்கில் தனி ஒரு ஆளாய் களத்தில் நின்றவரின் பேட்டியைப் பாருங்க, 

ஜனாதிபதி பதவிக்கு எந்த காலத்தில் மறக்க முடியாத களங்கத்தை உருவாக்கிய பிரதீபா பாட்டீல், போராட்டத்திற்கு மட்டும் தான் லாயக்கு,  ஆட்சி, நிர்வாகத்திற்கு பத்து பைசாவிற்கு பிரயோஜனமில்லாத மம்தா பானர்ஜி, அற்புதமான வாய்பை அறிவீலியாக மாற்றிக் கொண்ட மாயாவதி வரிசையில் தான் ஜெயலலிதாவும் இடம் பிடிக்கின்றார்,  மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ்க்கு மாற்று இல்லாத போக்கை போல இங்கும் இருப்பதால் கண்டதே காட்சி கொண்டதே கோலமாக ரெஸ்ட் எடுத்து டயர்ட்டாகி கொட நாடு வரைக்கும் சென்று ரெஸ்ட் எடுக்கின்றார் போலும், 

நண்பர்கள் திடீர் என்று அழைத்து ஒரு ஆச்சரிய தகவலைச் சொன்னார்கள்,  ஒரே அரசு ஆணையின் மூலம் குறிப்பாக அண்ணா பிறந்த நாள் முதல் தமிழ்நாடு முழுக்க மதுபான கடைகளை ஜெயலலிதா ஒழிக்கப் போகின்றார் என்றார்கள்,  ஒருவர் அல்ல,  பலரும் மாறி மாறி அழைத்துச் சொன்னார்கள்,  நான் நம்பவில்லை,  காரணம் அதன் மூலம் வரும் வருமானம் என்பது அரசாங்கத்திற்கு என்பதை விட பல மடங்கு தனி நபர்களுக்கு போய்க் கொண்டுருக்கின்றது என்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்?  

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த ஆச்சாரியா அவர்களின் பேட்டி


'கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''

''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''

''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'

''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். 

லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''

''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''

(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''  

''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''

''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''

''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''

''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''

''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''

''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''

''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''

''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''

''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''

''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''

''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''

-ஜூவி

காரணம் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டுருக்கின்றோம்,  ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம்,  ஆனால் ஒரு நிராதிபதியைக் கூட தண்டித்துவிடக் கூடாது அல்லவா?  அது தான் இந்த வழக்கின் நோக்கமாக இருக்கலாம்,

•••••••••••••••••••••••••••••


வேர்ட்ப்ரஸ் ல் திருப்பூர் குறித்து மனதில் தோன்றியதை என் சுய அனுபவங்களை நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கினேன்,  அது இருபது வருட திருப்பூர் வளர்ச்சியைப் பற்றியது,  என் சொந்த வாழ்க்கை அனுபவம் ஊடாக எழுதிக் கொண்டே வந்ததை டாலர் நகரம் என்ற பெயரில் புத்தகமாக மாற்றி ஒரு பதிப்பகத்தில் கொடுதது இரண்டு வருடமாக பெரிய அவஸ்த்தையில் மாட்டிக் கொண்டு விட்டேன். அவரைப் போல, இவரைப் போல என்று மாற்றி மாற்றி சொல்லி அதனை சுருக்கி, மாற்றி கடைசியில் ஆளை விட்டால் போதும் என்று என் வேலைப்பளூவின் காரணமான மறந்தே போய்விட்டேன். 

தமிழ்மீடியா தளம் நாங்கள் அதை தொடராக வெளியிடுகின்றோம் என்று சொல்லி அதன் முதல் அத்தியாயத்தை  வெளியிட்டு உள்ளார்கள்,  ஒவ்வொரு வாரத்தின் செவ்வாய் அல்லது புதன் அன்று ஒவ்வொரு பகுதியாக வரப் போகின்றது,  இரண்டு பாகங்கள் எழுதும் அளவிற்கு திருப்பூரின் வளர்ச்சியும் இன்றைய வீழ்ச்சியும் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது,  நாட்டின் வரலாற்றை படிக்கும் போது நமக்கான செய்திகள் நிறைய உள்ளதைப் போலவே ஒரு ஊரைப் பற்றி நம் வாழ்வில் ஊடே பார்க்கும் போது நாம் கடந்து வந்த பாதை பல பாடங்களை நமக்கு உணர்த்தும்,  தமிழ் மீடியா தளத்திற்கு தேவியர் இல்லத்தின் நன்றிகளை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்,

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்களின் அலசல்... டாலர் நகரம்-விரிவான விளக்கம்... வாழ்த்துக்கள்... நன்றி...

Unknown said...

good post keep it up. You ave reduced the number of writing recently, pls do continue as before.

Indian said...

//ஒரே அரசு ஆணையின் மூலம் குறிப்பாக அண்ணா பிறந்த நாள் முதல் தமிழ்நாடு முழுக்க மதுபான கடைகளை ஜெயலலிதா ஒழிக்கப் போகின்றார் என்றார்கள், ஒருவர் அல்ல, பலரும் மாறி மாறி அழைத்துச் சொன்னார்கள், //

அது நாலு மான நட்ட வழக்குக்கு அப்புறம் அம்மாவைக் குளிர்விக்க ஜூனியர் விகடன் பத்திரிகை அவிழ்த்துவிட்ட பொய் என்பதை யாரும் உணராமல் போனது ஏனோ?

Unknown said...

சிறப்பான பகிர்வு...
(பதிவுலக பக்கம் ஒரு நீண்ட இடைவெளி - மீண்டும் வருகிறேன்)

ஜோதிஜி said...

வாங்க வாங்க ஆகாய மனிதன்,

இந்தியன் நீங்க சொல்லி தான் இது எங்கிருந்து கிளப்பியது என்பதை புரிந்து கொண்டேன்,

நன்றி சூரியா, இந்த மாதம் நிறைய எழுத வாய்ப்புள்ளது, காரணம் மேலே சொன்ன நிறுவன செயல்பாடுகள்,

தனபால் உங்களுக்கு பின்னூட்ட சூறாவளி என்ற பட்டத்தை கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன், உங்கள் கருத்தென்ன?

arul said...

informative post

ESWARAN.A said...

நன்றாக உள்ளது...கேஜெட் என்றால் என்ன?