Sunday, July 24, 2011

படித்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா?


வாழ்வில் துன்பங்களை துயரங்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் நான் பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு.  நாம் இன்னும் முறைப்படி படித்து இருக்கலாமோ? இந்த தொழில் அறிவை முறைப்படி கூர்மைபடுத்தி கற்று இருக்கலாமோ? தெளிவான மொழிப் புலமையை வளர்த்து இருக்கலாமோ? மாறி வந்த சூழ்நிலையை அந்தந்த காலகட்டத்திற்கேற்றபடி மாற்றிக் கொண்டு இருக்க வேண்டுமோ? என்று ஒவ்வொருவிதமாகவும் யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் இந்த எண்ணம் அடுத்து நடக்கும் சில சம்பவங்கள் மூலம் மனம் அமைதியாகி விடும். காரணம் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் என்று பட்டியலிட்டு எனக்குள் வைத்துள்ள அத்தனை விசயங்களையும் பெற்றவர்கள் என்னை விட பின்தங்கி வந்து கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டதுண்டு.  காரணம் பல குறைகளை பெற்ற எனக்கு ஒரு பெரிய நிறை உண்டு. அது தான் இடைவிடாத உழைப்பு.  குறிப்பாக உழைப்புக்கு அஞ்சாத, போராடிக்கொண்டு இருக்க வேண்டிய அவஸ்யத்தை உண்ர்ந்து அடுத்தடுத்த படியில் ஏறிவந்துள்ளேன்.


நம்மிடம் என்ன திறமைகள் இல்லை என்பதை நினைத்துப் பார்த்து நாம் வாழ்கின்ற சூழ்நிலையில் அவற்றை வளர்த்துக்கொள்ளுதல் ஒருபுறம் என்றால் நம்மிடம் இருக்கும் திறமைகளை நாம் சம்மந்தப்பட்ட தொழிலோடு ஒன்றிணைத்துப் பார்த்தல் மற்றொருபுறம். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் என்ன படித்து இருக்குறீங்க என்பதை விட அந்த படிப்போடு அது சார்ந்த மற்ற விசயங்களையில் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கீங்க என்பது தான் முக்கியமாக இருக்கிறது.  படிப்பு என்பது மரம் என்றால் கணினி அறிவு, ஆங்கில அறிவு, ஆளுமைத்திறன், உழைப்பு போன்ற விசயங்கள் மரத்திற்கு கௌரவம் சேர்க்கும் கிளைகளாக இருக்க வேண்டும்.  

இதைப்பற்றி சற்று உள்ளே நுழைந்துப் பார்க்கலாம்.

நான் இருப்பது ஆடைகள் சார்ந்த தொழில்.  அதுவும் ஏற்றுமதி துறை. இந்த துறையில் நான் நுழைந்தது திட்டமிட்டதல்ல. எதிர்பாரத நிகழ்வு. மேலும் திருப்பூரில் உள்நாட்டு வணிகம் என்றொரு தனி உலகம் உண்டு.  தொடக்கம் முதல் அதில் என் கவனம் செல்லவே இல்லை.  என்ன காரணம் என்று தெரியவில்லை. குடும்பத்திற்கோ, நான் படித்த படிப்பிற்கோ இந்த ஆடைத் தொழில் சம்மந்தம் இல்லாதது . ஆனால் இன்று இந்த தொழிலின் நீள அகலத்தை அத்தனையும் பார்த்து விட்டேன். ஆனால் போற்றத்தக்க வகையில் என்னால் உயரமுடியவில்லை.  ஆனால் வெறுக்கத்தக்க வகையில் என்ற நிலையிலும் நான் இல்லை. காரணம் பணம்.  எந்த அளவுக்கு உழைப்பு வேண்டுமோ அந்த அளவுக்கு பணத்தை கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். தோல்வியால் சுருண்டு போய்விடக்கூடாது.  மீண்டும் மீண்டும் படையெடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.  ஆனால் என் எல்லை எதுவரைக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. இதன் காரணமாகவே என் இந்த தொழில் பயணம் அமைதியான நதி போலவே போய்க் கொண்டு இருக்கின்றது. 

காரணம் நான் பெற்ற தோல்விகளையும், என் தொழில் அனுபவத்தில் நான் செய்த தவறுகளும் என்று ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.  அந்த பாடங்களை ஏற்றுக் கொண்டு அடுத்த பயணத்தை தொடங்க அந்த வலி மறந்து விடுகின்றது.  இது போல மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

நான் உள்ளே நுழையும் போது இந்த தொழிலுக்கென்று பல படிப்புகள் இருக்கிறதென்று தெரியாது.  அதுவும் நான் இந்த தொழிலில் நுழைந்த முதல் பத்து வருடங்களில் இந்த துறை சார்ந்த படித்தவர்களை நான் பார்த்ததே இல்லை.  ஆனால் காலம் மாறியது.  உள்ளூர் வாணிபம் அத்தனையும் உலக கூரையின் ஒன்றாக மாறி இதன் போக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தொழிலும் மாறத் தொடங்கிய போது தான் படித்தவர்களுக்குண்டான வாய்ப்புகள் கதவு திறக்கத் தொடங்கியது.  

டெக்ஸ்டைல்ஸ் பட்டயப்படிப்பு முதல் பட்டதாரிகள் வரைக்கும் திடீர் என்று நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட் என்ற பெயரில் அனுமதி பெற்று வருவார்கள்.  ஒரு வாரமோ அல்லது மேற்பட்ட நாட்களோ உள்ளே இருந்து உற்பத்தி சார்ந்த விசயங்களை குறித்துக் கொண்டு செல்வார்கள். நிர்வாகம் அறிவுறுத்தியபடி அவர்களுக்கு மொத்த விசயங்களையும் பாடம் போல சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன். அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் இருக்கின்றேன். 

ஆனால் நான் பார்த்தவரைக்கும் இந்த தொழில் படிப்பு படித்தவர்கள் திருப்பூருக்குள் பெரிய அளவுக்கு ஜெயித்து நான் பார்த்தது இல்லை.  அதிகபட்சம் டெல்லி, பம்பாய், பெங்களூரில் இருந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாளர்கள் நடத்திக்கொண்டு இருக்கும் பையிங் ஆபிஸ் என்ற நிலையில் ஏதோவொரு பதவியை கைப்பற்றிக் கொண்டு ஒரு இயல்பான உல்லாச வாழ்க்கைக்கு தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். சிலர் இங்கேயுள்ள நிறுவனங்களிலும் பணிபுரிகின்றார்கள் இவர்களை நிறுவன நிர்வாகம் அதிக அளவில் மதிப்பதும் இல்லை என்பதும் உண்மை. குறிப்பிட்ட தேவைப்படும் விசயங்களுக்கு கறிவேப்பிலை மாதிரி தான் இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். காரணம் இவர்கள் உடல் உழைப்புக்கு தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த ஆடைத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியவர்களும், முயற்சித்துக் கொண்டு இருப்பவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும், கடின உழைப்புக்கு தயாராக இருப்பவர்களுமே,

ஏன்? ஏன்?

சென்ற பதிவில் திருப்பூருக்கு வேலை தேடி வரும் பட்டதாரிகளைப் பற்றி பேசத் தொடங்கினோம்.  இரண்டு எம்.பி.ஏ பட்டதாரிகள் வேலை கேட்டு வந்தார்கள். ஒருவர் கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்.  அப்பா ஒவ்வொரு வீட்டுக்கும் பால் ஊற்றி கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பவர்.  ஆனால் இவர் தன் குடும்ப சூழ்நிலையைப்பற்றி சற்று கூட கவலைப்படாமல் நவ நாகரிக இளைஞராக எப்போதும் போல ஒரு சைனா கைபேசியை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தவர்.  ஒரு அளவுக்கு மேல் குடும்பத்தினர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் வேறு வழியே இல்லாமல் வேலை கேட்டு அலைந்து கடைசியாக என் முன்னால் நின்று கொண்டிருந்தார். மொத்தத்தில் கடின உழைப்புக்கு தயாராக இல்லாமல் கற்பனை வாழ்க்கையை நிஜ வாழ்க்கையாக நம்பிக் கொண்டிருப்பதை பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. 

மற்றொருவர் ஆவுடையார்கோவில் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்.  குறிப்பாக ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் சான்றிதழ் விபரங்களை வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரை பரிசோதித்த போது அவரின் கடந்த கால பல கஷ்டங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.  கிராமத்து வாழ்க்கை.  முதல் தலைமுறை பட்டதாரி. ஆனால் எம்.பி.ஏ ல் இவர் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவிகிதம்.  கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் வேலைதேடி சோர்ந்து போயிருப்பது அவர் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.  வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கே போய் இப்போது அவர் பார்த்துக் கொண்டிருப்பது திருப்பூரில் கொத்தனார் வேலை. தினந்தோறும் 400 சம்பளம். உடல் உருகி தலைமுடிகள் செம்பட்டையாக மாறி கண்கள் உள்ளே போய் கன்னம் டொக்கு விழுந்து பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது.  

ஆனால் பேசத் தொடங்கிய பத்து நிமிடங்களில் அவரின் உண்மையான ஆளுமைத்திறன், பேச்சுச் திறன், தனிப்பட்ட திறமைகள் அத்தனையும் அவரின் படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல் எரிச்சலை உருவாக்கியது.  இந்த இரண்டு எம்பிஏ பட்டதாரிகளுக்கும் அட்சரம் சுத்தமாக கணினி அறிவு என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  நான் ஏற்கனவே சொன்னபடி ஒருவரிடம் இருக்கும் பன்முகத்திறமை ஒரு நிறுவனத்திற்கு ரொம்பவே முக்கியம். ஒரு வேலைக்கு என்று தேர்ந்தெடுக்கும் நபர்களை வைத்து வேறு எந்தந்த வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயல்பாகவே ஒவ்வொரு நிறுவனமும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.  

இந்த இரண்டு எம்.பி.ஏ பட்டதாரிகள் வாழ்ந்த சூழ்நிலை, படித்த கல்லூரிகள் இரண்டும் வெவ்வேறு.  ஆனால் இருவருக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு.  கற்ற கல்வி இவர்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை அல்லது அதை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை.

இந்த இடத்தில் மற்றொரு நபரையும் நாம் பார்க்க வேண்டும்.  

இவர்கள் இருவருடன் மற்றொரு நபரையும் நான் சந்தித்தேன்.  அவர் டெய்லர் வேலை கேட்டு வந்தவர். பனிரெண்டாம் வகுப்போடு முழுக்கு போட்டு ஒரு வருடம் ஆட்டம் போட்டு திரிந்து விட்டு பனியன் ஜட்டி நிறுவனத்தில் உள்ளே நுழைந்து டெய்லராக மாறி இரண்டு வருடங்கள் அங்கு பலவித அனுபவங்களைப் பெற்று அதன்பிறகு ஏற்றுமதி நிறுவனங்களில் நுழைந்து தன்னை பட்டை தீட்டிக் கொண்டவர். ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்த பிறகு பீஸ் ரேட் என்கிற நிலைக்கு வளர்ந்தவர். வாரம் 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாரித்தவர். மல்டி ஸ்கில் என்று சொல்லப்படும் ஓவர் லாக், பேட்லாக், சிங்கர் மிசின்களை வெகு லாவகமாக இயக்கத் தெரிந்தவர்,. 

சுருக்கமாகச் சொல்லப்போனால் நிறுவன பாஷையில் ஏ கிரேடு ஆப்ரேட்டர்.. இப்போதுள்ள திருப்பூர் சூழ்நிலையில் அவரால் பீஸ் ரேட்டில் வேலை செய்ய வாய்ப்பு இல்லாத காரணத்தால் மிகப் பெரிய நிறுவனங்களில் நிரந்தர வேலையில் அமர்ந்து விட்டால் நல்லது என்ற முடிவின்படி இங்கே வந்துள்ளார். தொழிலாளர் சட்டத்தை இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும்.  நம் நாட்டு சட்டத்திற்குண்டான மரியாதை அல்ல.  பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு இருக்கும் சட்டதிட்டத்தின்படி பலவிசயங்களை ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தில் கடைபிடித்தே ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் உள்ளே வராது.  அதன்படி இந்த டெய்லருக்கு நல்ல வாய்ப்பு.  கடந்த ஐந்து வருடங்களில் இவர் உழைத்த உழைப்புக்கு பிரதிபலனாக இன்று மாதச் சம்பளம், மற்றபடி இவருக்குண்டான மற்ற வசதிகள் என்று எட்டு மணி நேர வேலைக்கு மாதம் 7000 ரூபாய் கிடைக்கும். அது போக தினமும் ஓவர்டைம் முதல் மற்ற வசதிகள் என்று தனியாக கிடைக்கும்.


மேலே பார்த்த பட்டதாரிகளுக்கு நிறுவனம் போனால் போகிறதென்று ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 5000 ரூபாய். தினந்தோறும் 12 மணிநேரம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது? நிர்வாகத்தின் கண்கள் இவர்களின் முதுகில் இருந்துக் கொண்டேயிருக்கும்.

இப்போது சொல்லுங்க? 

புற்றீசல் போல வருடத்திற்கு வருடம் பெருகிக் கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் சாதிப்பது என்ன?  எந்த மாதிரி இளைஞர்களை இந்த சமூகத்திற்கு நமது கல்வித்திட்டம் வழங்கிக் கொண்டு இருக்கிறது?  

அடுத்து?

25 comments:

Ramachandranwrites said...

இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. படிப்பு என்பது நம் மக்களைப் பொறுத்த வரை வேலை தர வேண்டிய ஒரு கருவி என்ற எண்ணம் தான் இருக்கிறது. கல்லூரியை விட்ட பின்பு படிப்பதை நிறுத்திவிடுவது என்பது மிக இயல்பாக உள்ளது. வழி காட்டும் நிலையில் பல பெற்றோர்கள் இல்லை. ஆசிரியர்கள் மீது பல மாணவர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. ஆளுமை பயிற்சி தர பல கல்லூரிகளுக்கு செல்லும்போது நான் கண்டது என்ன என்றால், படிப்பு முடிந்ததும் கணினி துறையில் ஒரு வேலை, சில நாள் சென்றதும் வெளிநாடு என்ற கனவு மட்டுமே.

வாழ்வின் உண்மைகள் புரியும் போது அதனை சமாளிக்கும் ஆற்றல் பலருக்கு இருப்பதே இல்லை. முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் பாவம். அவர்களின் குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேல் கொண்டு செல்ல வேண்டிய கடமை பற்றிய புரிதல்கள் பலரிடம் இல்லை. வழிகாட்டிகள் இல்லை, இருந்தாலும் அவர்களைப் பின் பற்ற பலர் தயாராக இல்லை

ராஜ நடராஜன் said...

எங்கே ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்!

இராஜராஜேஸ்வரி said...

கற்ற கல்வி இவர்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை அல்லது அதை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை.//

நிறைய இடங்களில் கண்டு வேதனைப்பட்ட கண்கூடான அதிர்ச்சி.

Karthikeyan Rajendran said...

பட்டதாரிகளுக்கு நிறுவனம் போனால் போகிறதென்று ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 5000 ரூபாய். தினந்தோறும் 12 மணிநேரம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது? நிர்வாகத்தின் கண்கள் இவர்களின் முதுகில் இருந்துக் கொண்டேயிருக்கும்.

இப்போது சொல்லுங்க?

மேகல்லோ கல்வி முறை ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாகவே தொடர்வதற்கு அறிமுக படுத்தியது அதையே இன்று வரை தொடர்வது வேதனை அளிக்கிறது

லெமூரியன்... said...

எல்லாக் கல்லூரிகளையும் மொத்தமாக குறை கூறி செல்ல இயலாது நண்பா
நிறைய கல்லூரிகளில் இறுதி ஆண்டிற்குள நுழையும் மாணவர்களுக்கு அவர்கள் துறை சம்பத்தப்பட்ட
வாய்ப்புகள் மற்றும் அதற்க்கான தகுதிபடுத்தும் முறை பற்றி கூட எடுத்துரைக்கிறார்கள்..

மேலும் அப்படி வாய்ப்புக்கள் அமையாத பொழுதும் சென்னைக்கு வந்து பதினைந்து மணிநேரம் வேலை செய்துகொண்டே
கணினி உதவியுடன் கூடிய இயந்திர வடிவமைப்பு பட்டய படிப்பை படித்து முடித்தேன் அதன் பின்பு இப்பொழுது ஐ.டி துறையில் இருக்கிறேன்
நமக்கான தேவைகளும் அதற்க்கான தேடல்களுமே நமக்கான வழியைக் காட்டும்...

இந்த விஷயங்களில் சென்னை மாநகரத்து கல்லூரிகள் அனைத்தும் ஒரு படி மேலே சென்று செயல் படுகின்றன
மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் மற்றும் குறுகியகால தொழிற்சாலை பயிற்சிகள்
என்று மாணவர்களை தயார்படுத்தும் நோக்கு செம்மையாகவே உள்ளது...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நமது குழந்தைகள் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, பாடங்களையும் படிப்பதில்லை. பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களையும் கற்றுக் கொள்வதில்லை. மற்ற திறமைகளை (other than study - like computer, typing, spoken english, hindi, studying story books, literature etc.,) வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு சென்று விட்டால் அப்படியே தேங்கி விடுகிறார்கள். மேற்கொண்டு படிப்போம் என்று முயற்சிப்பதில்லை. நான் எனது பிள்ளைகளை வைத்து தான் சொல்கிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.

dharma said...

Anna ettu suraikai kariku uthavathu!

நாடோடிப் பையன் said...

Good article.
I would like to suggest that going to school has nothing to do with 'learning'. It appears that the tailor mentioned in this article is a learned one in 'his' field. He is making more money as a result.
I see the same issues with IT industry too. Once a person hits 5 to 7 year mark, they start behaving that there is nothing more for them to learn OR they learn in no time. It starts their career stagnation.

சி.பி.செந்தில்குமார் said...

படிப்புக்கும் வெற்றிக்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லைதான்

அமுதா கிருஷ்ணா said...

அருமையாக நிஜத்தை பளிச்சென்று சொன்ன பதிவு..

சத்ரியன் said...

திருப்பூர் (ஒவ்வொரு பெருநகரமும்)பல்கலைக் கழகம் ஜோதிஜி.

இரண்டே ஆண்டுகளில் ஏராளமான “பாடங்களை” போதித்தது எனக்கு. கற்றுக்கொள்ள தயாராகவே இருந்தேன் நான் ( நம்மைப் போல் பலரும் இருக்கிறார்கள்.)

ஒன்று மட்டும் நிச்சயம். “ திறமையுடன் உழைப்பதற்கும், பொறுப்புடன் போராடுபவர்க்குமான உலகம்” இது.

’கல்விச் சான்றிதழ்” வெறும் ”அனுமதிச் சீட்டு”தானேயொழிய, வேலையை நாம் தான் செய்தாக வேண்டும்.

இவ்விசயத்தை இளம் கல்வியாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நம் கல்விமுறையும், சமூகமும் தவறு செய்கிறது. நம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறார்கள்.

Yaathoramani.blogspot.com said...

ஒரு பொருள் குறித்து இத்தனை தெளிவாக சிந்தித்து
இத்தனை விரிவாக பதிவுகள் பதிவுலகில் வருவது இல்லை
தாங்கள் தான் மிகச் சிறப்பாக அடுத்தவர்கள்
பயன்படவேண்டுமே என்கிற எண்ணத்தில்
தங்கள் அனுபவங்களில் கிடைத்த படிப்பினையை
மிக அழகாக பதிவாக்கி இருக்கிறீர்கள்
தரமான பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்

Anonymous said...

மிகச் சரியாக பதிவு எழுதி உள்ளீர்கள். குறிப்பாக எம்.பி.ஏ படிப்பை வேலை முன் அனுபவமின்றி படிப்பது சரியான அணுகுமுறை அல்ல (பட்டப் படிப்பை படித்தவுடன், நேரடியாக எம்.பி.ஏ). நான் பார்த்தவரை பல இளம் மாணவர்கள் வேலையில் சேரும் பொழுது மிக அதிக சம்பளத்துடன் சேர்ந்தாலும் வேலைப் பளுவை தாங்க முடியாமல் சோர்ந்து விடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன :- 1) படிக்கும் பொழுது திட்டமிடுதல் வேறு(project planning), நடைமுறை செயல்முறையிலுள்ள வேறுபாடுகள்,
2)அனுபவமுள்ள சீனியர்களை விட தான் சிறப்பானவர் என்ற தவறான நினைப்பு (ஈகோ)3) நிர்வாகத்தின் அதீதாமான எதிர்பார்ப்பு.
விதிவிலக்குகளும் உண்டு,அவர்கள் 10-30% சதவிகிதமே.இவர்கள்தான் நமது நம்பிக்கை நட்சத்திரங்கள்

தாராபுரத்தான் said...

பேசி பார்க்க வேண்டிய பிரச்சனைகள் தானுங்க..தொடருங்க

Reverie said...

அற்புதமான பதிவு...வாழ்த்துக்கள்...

http://thavaru.blogspot.com/ said...

நிறைய பேருக்கு தாம் கற்றகல்வியினால் என்ன பயன் ..அதை வைத்துகொண்டு அடுத்து என்ன செய்வதென்றே தெரியாது அல்லது அவர்களை வளர்த்து கொள்வது எப்படி என்றே தெரியாதவர்கள் தான் அதிகம்.

பார்த்து அதிசியக்கும் அளவிற்கு தம்மை மாற்றிகொள்பவர்கள் நிறையபேர் உண்டு..அதாவது தங்களை போல...

என்ன அன்பின் ஜோதிஜி..:))

Unknown said...

இப்பதிவில் தாங்கள் எழுதியிருப்பவை முகத்தில் அறையும் உண்மைகள்தான்.சரியாக எழுதியுள்ளீர்கள்.எழுத படிக்க தெரியாத ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி டையிங் மாஸ்டர் என்ற அளவில் உயர்ந்து,ஏகபோகமாக வாழ்ந்தார் என்பது போல வெற்றிக்கதைகளை நானும் அங்கு கேள்விப்பட்டுள்ளேன்.நீங்கள் குறிப்பிடும் பல்வேறு காரணிகள் திருப்பூரில் தனி மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பது உண்மையே.நல்ல அலசல்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக அனுபவபூர்வ என்பதை விட அனுபவித்த உண்மைகள் .
எந்த இடத்திலும் அறிவுரை என்ற சிறு நூல் கூட பற்றி விடாத அழகு நடை ரசிக்கிறேன் .புரிந்துகொள்கிறேன்
.நானும் இந்த திருப்பூர்வாசி என்ற
சக பயணி என்பதால் .
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

ஜோதிஜி said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி. உங்கள் விமர்சனம் பாராட்டுரை என்பதை எழுதிய விதத்தில் ரொம்பவே கவர்ந்ததாக இருந்தது.

R.Elan. said...

உங்கள் முழுப்பெயர் இளங்கோவா?

Reverie said...

அதென்ன எல்லோருமே வினோத பெயர்களை வைத்துக் கொண்டு? எப்படி உங்களை உரிமையோடு அழைப்பது?

தவறு.........,

இருவருக்கும் பெரும்பாலான ஒத்த சிந்தனைகள். ஆனால் மறைந்திருந்து நீங்கள் பார்க்கும் மர்மம் தான் ஏன் என்று புரியமாட்டேன் என்கிறது?

ஜோதிஜி said...

நன்றி தாராபுரத்தான் அய்யா. விரும்பிவாசிக்கும் வெகுஜன பத்திரிக்கை போல உங்கள் வயதுக்கு என் தளம் உதவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அனானி நீங்கள் சொன்ன விமர்சனத்தை வைத்தே இரண்டு பதிவுகள் எழுதலாம் போலிருக்கே. இரண்டாவது காரணம் அதிக அளவில் முற்றிலும் உண்மையாக இருக்கிறது.

ரமணி

நேற்று வீட்டுக்கு வந்த நண்பர் (அவரும் ஒரு அடிப்படை தொழிலாள வர்க்கத்தில் இருந்து இன்று சிறு தொழில் முதலாளியாக இருப்பவர்) இப்படி எழுதி என்ன சாதிக்கப் போறீங்க என்றார். உங்கள் விமர்சனத்தை அவரிடம் காட்ட வேண்டும்.


திருப்பூர் (ஒவ்வொரு பெருநகரமும்)பல்கலைக் கழகம்

சத்ரியன் உங்கள் டபுள் சபாஷ். காரணம் இந்த பல்கழைக்கழகத்திறக்குள் வந்த பிறகே ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். படித்த பாடங்களுக்கும், உண்மையான அனுபவத்திற்கும் உண்டான வித்யாசங்களை இந்த பல்கலைக்கழகம் தான் கற்றுத் தந்தது.

நன்றி அமுதா மற்றும் செந்தில்குமார்.

நாடோடிப் பையன்

உங்களுக்கு நன்றி. காரணம் இந்த ஐடி துறை குறித்து எனக்கு அடிப்படையில் ஒன்றுமே தெரியாது. ஆனால் இதை ஒரு கனவாக வைத்துக் கொண்டு இருக்கும் பலரையும் சமூகத்தில் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். குறிப்பாக அமெரிக்காவில் 30 வருடமாக இருப்பவர் கதை பற்றி எழுத முடியம்.

ஜோதிஜி said...

தர்மா சரியாச் சொன்னீங்க. ஆனால் இந்த ஏட்டுப் பாடங்களை முறைப்படி சொல்லிக்கொடுக்க நம் நாட்டு அரசியல்வாதிகள் விடுவதில்லையே? காரணம் இன்று கல்வியை முழுக்க முழுக்க லாபம் கொழிக்கும் தொழிலாக அல்லவா மாற்றி விட்டார்கள். ஆண்டு விட்டுச் சென்ற பல தமிழ்நாட்டு அமைச்சர்களின் ஆரம்ப கால வாழ்க்கையையும் இன்றைய அவர்களின் வளர்ச்சியையும் பார்த்தோமானால் நமக்கு பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

ரத்னவேல் அய்யா உங்கள் விமர்சனத்தை வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.

லெமூரியன் நீங்கள் சொல்வதும் உண்மை. ஆனால் தற்போது வயக்காட்டுக்குள், அத்துவான காட்டுக்குள் கட்டி வைத்துள்ள கல்லூரிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகள், நல்ல ஆசிரியர்கள் எதுவும் இல்லாமல் பாதிக்கு மேற்பட்ட கல்லூரிகள் இந்தியாவில் இருப்பது தான் மிகுந்த ஆச்சரியம்.

ஜோதிஜி said...

கார்த்தி நீங்க சொன்னதும் பல விசயங்கள் ஞாபகத்திற்கு வருது. குறிப்பாக இன்னும் பல ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளை நாம் இன்னமும் அது தேவையா தேவையில்லையா என்பதைக்கூட ஆலோசிக்காமல் பின்பற்றிக் கொண்டு இருப்பது. எல்லாபுகழும் நம் அரசியல்வாதிகளுக்கே?

நன்றி இராஜராஜேஸ்வரி. இன்னும் நிறைய பாதிப்புகளை எழுதியே ஆக வேண்டும் போலிருக்கு,

நன்றி நடா. ஞாயிறு ஒரு நாள் இனி வாய்ப்பு. வேறு வழியில்லை.

ராமச்சந்திரன் உங்கள் முதல் விமர்சனத்திற்கும் கூர்மையான பார்வைக்கு மிக்க நன்றிங்கோ.

Bibiliobibuli said...

இந்தியா கணணி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சினிமா என்று சர்வதேச அளவில் பெயரெடுத்து விட்டதாம்.

அந்த இளைஞர்கள் சிலரை விடவும் இந்திய அரசின் கொள்கைகள் மீது தான் எரிச்சல் வருகிறது.

அதிகளவில் இளைஞகர்களை கொண்ட நாடு இந்தியா. படித்துமுடித்து வெளிநாட்டில் வேலை பெற்றால் போதும் என்கிற அளவிற்கு கல்விக் கொள்கையும் போலும்.

அப்பாதுரை said...

செய்யும் தொழிலே தெய்வம் என்பது நினைவுக்கு வருகிறது. எனினும்..
செய்யும் தொழிலுக்கும் பெற்ற புத்தகக் கல்விக்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வி தொன்மையானது. நீங்கள் சொல்லியிருப்பது போல் மூவரில் இருவர் கல்வியினால் "தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை"; மற்றவர் தன்னை வளர்த்துக் கொண்டார். அறிவு என்பது பாடப்புத்தகத்தினால் மட்டுமே வருவதல்ல. (உலகமே பாடசாலை எனும் பாடலும் நினைவுக்கு வருகிறது)

ஒன்றிரண்டு stray உதாரணங்களை வைத்து பரவலான தீர்வாக எடுத்து எழுதுவது சிரமம். மூவருமே இங்கே அவ்வளவாகப் பொருந்தாத உதாரணங்கள் என்று தோன்றுகிறது - 'நம் கல்லூரிகள் சாதிப்பது என்ன?' என்ற கேள்விக்கு.

Anonymous said...

ஸ்டாஆஆஆஆஆஆஆஆஆஆப்.

பலருக்கும் படிப்பு என்றவுடன் ஏட்டுக்கல்வி என்பதே ஞாபகத்திற்கு வருகிறது போல. அவ்வ்வ்வ்வ்வ். இந்த டெய்லருக்கு கிடைச்சதும் ஒரு வகை படிப்புத் தான். என்ன அந்த படிப்புக்கு அத்தாட்சியாக ஒரு பேப்பர் (அது தானுங்க சேர்டிபிக்கேட் இல்லை).

இங்கே எல்லாம் எம்.பி.ஏ என்றால் வேலை அனுபவமில்லாதவர்கள் படிக்க முடியாது. அதுவும் சும்மா 3 வருசம் வேலை செய்திட்டு எல்லாம் படிக்க முடியாது. அட்மினிஸ்ரேஷனில் வேலை செய்திருக்க வேண்டும். அதுவும் இடைவெளி இல்லாமல் முழுதாக மூன்று வருடங்களாவது குறைந்தது வேலை செய்திருக்க வேண்டும்.

இந்தியர்களுக்கு ஏன் தான் எம்.பி.ஏ மோகமோ தெரியவில்லை. அந்தக் காலத்தில் எம்.பி.ஏ படிப்பது என்பது பெரிய அந்தஸ்து மாதிரி. இப்பயுமா? இலங்கையிலும் இந்தியாவிலும் எந்த அனுபவமும் இல்லாதவர்கள் எல்லாம் எம்.பி.ஏ படிக்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்