Sunday, December 20, 2009

வெறித் தீ

யாழ்பாணத்தில் நடக்கும் மாவட்ட சபை தேர்தலில் ஜெயித்து விட வேண்டும் என்று தன்னுடைய சீடர்களான சீறீ மாத்யூ, காமினி திசநாயகா போன்ற அமைச்சர்களை ஜெயவர்த்னே அனுப்பி வைத்தார். அவர்கள் உருவாக்கிய கலவரங்கள் (1981), கடைத்தெரு முதல் யாழ்பாண மார்க்கெட் வரைக்கும் பரவியது. எறிவதை அணைக்க முயற்சிப்பவர்களை எறியும் தீயில் தள்ளி எறியூட்டப்பட்டனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணி முன்னாள் எம்.பி வெற்றிவேல் யோகேஸ்வரன் வீட்டை காவல்துறை முற்றுகையிட்டு வீட்டை கொளுத்த, மயிரிழையில் உயிர் தப்பி மனைவியுடன் பின் வாசல் வழியாக தப்பினார்.  மொத்த அலுவலகத்தையும் சூறையாடப்பட்டது.

1981 ஜுன் 1.

யாழ்பாண நூலகம் மொத்த கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. சிங்கள இனவாதிகள் மேற்பார்வையிட, காவல்துறையினர், சிங்கள இளைஞர்கள் என்று பெரிய கும்பல் கோரத்தாண்டவம் ஆடியது.  உள்ளே இருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல். அரிய சுவடிகள் முதல் ஏராளமான தமிழ் புதையல் அது.  ஆசியாவிலேயே முதன்மையானது.
ஆசியாவில் இதற்கு முன்னால் நடந்த கோரச்சுவடுகள்.

போர்த்துகீசியர்களால் (1619) எறிக்கப்பட்ட தமிழ்நாட்டு சரஸ்வதி மகால். 12ம் நூற்றாண்டில் நாலாந்தா பல்கலைக்கழகம்.  ஹிட்லர் படையெடுப்பின் போது நூலகத்தை தவிர மற்றவற்றை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.  ஆனால் இவர்களோ ஹிட்லரையும் மிஞ்சி விட்டனர்.

இவர்களின் வெறியின் தொடர்ச்சியாக பருத்தித்துறை (1984) ஹார்ட்லி பல்கலைக் கழகத்தில் இருந்த புத்தகங்கள், வல்வெட்டித்துறை நூலகம், ஈழவேந்தனின் தனிப்பட்ட அக்கறையின் பால் உருவாக்கி வைத்திருந்த (1977) ஆவண காப்பகம்,  சிவ சிதம்பரத்தின் (1983) பொக்கிஷங்கள் என்று தொடர்ந்த மொத்த தமிழர்களின் எந்த வரலாற்றுச் சுவடும் இருந்து விடக்கூடாது என்பதில் பிரத்யோக கவனம் செலுத்தினர்.

தமிழறிஞர்கள், மூத்தவர்கள் என்று எவரும் பாரபட்சம் இல்லாமல் சிறையில் அடைத்தனர்.  காந்திய இயக்கம் என்று நடத்திக்கொண்டுருந்த டேவிட், இராஜசுந்தரம் என்பவர்களை திடீர் என்று கைது செய்து,  சிறைக்கு இழுத்துச் சென்று அங்கு தேக்கி வைத்திருந்த நீரில் இரவு முழுவதும் முழு நிர்வாணமாக நிற்க வைத்து, ஊர்ந்து வரச்செய்து, மொத்த வெறியையும் தணித்துக்கொண்டனர். இது போல் ஆயுதப் பாதையில் சம்மந்தம் இல்லாத பலரும் பலவிதமான சித்ரவதைக்குள்ளானர். யாழ்பாண நூலகம் எறிவதைக் கேட்ட மாத்திரத்தில் பாதர் ரெவண்ட் அந்த இடத்திலேயே மாரடைப்பால் காலமானார்.

காந்திய இயக்கத்தின் டேவிட் அவர்களால் எழுத்தப்பட்ட தனி இதழ்கள் மொத்த விடுதலைப்புலிகளின் சாதக பாதக அம்சங்களை சுட்டிக்காட்டுவது போல, தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் குறித்து மொத்த புரிதல்களையும் உருவாக்குகிறது.  ஏறக்குறைய இன்றைய தமிழ்நாட்டு புலனாய்வு கட்டுரை போல அமிர்தலிங்கத்தின் மொத்த நிறை குறைகளையும், அவர் அடைந்த ஆதாயங்களையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்து துவைத்து காயப்போட்டுருக்கிறார்.

இந்த நூலகத்தீ என்ற "கலாச்சார பேரழிவு" மொத்த தமிழ்மக்களையும் ஆயுதப்பாதையை ஆதரிக்க வைத்தது என்பதில் மிகையில்லை. ஆனால் மக்கள் இன்னமும் அமிர்தலிங்கம் மூலம் முடிவு வந்து விடும் என்று நம்பிக்கை வைத்துருந்ததும் கலையத் தொடங்கியது. தந்தை செல்வா ஒவ்வொரு இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் கருப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற கொள்கையை அமிர்தலிங்கம் மாற்றியது, அவர் முழுமையாக அரசாங்க சார்பாளராக மாற்றம் பெற்று வந்து கொண்டுருந்ததை உணர்ந்த பிரபாகரன் இனி நம்முடைய முயற்சியை முழுமையாக மாற்ற வேண்டுமென்று தொடங்கியது தான் மற்றொரு புதிய ஆயுத தாக்குதல்.

ஜெயவர்த்னே (1982 செப் 29) தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்பாணம் வந்த போது கடற்படையினர் பயணித்து வந்த ஜீப்புக்கு குண்டு வைக்க அது தோல்வியில் முடிந்தது. ஜெயவர்த்னே மீண்டும் ஜெயித்து இரண்டாவது முறையாகவும் ஆட்சியில் அமர அக்டோபர் 27 சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையில் (மாத்தையா,புலேந்திரன் அடங்கிய எட்டு பேர் குழு) தாக்க, காவல் துறையினரால் திருப்பிச் சுடப்பட்ட போது குண்டுகள் பாய்ந்தும் தப்பிவிட்டனர். ஆனால் இராணுவத்தினரில் தொடர் முயற்சியில் பிடிபட்ட சங்கர் தப்பிக்க பாய்ந்த குண்டு உயிரைப்பறித்தது.  அந்த சங்கரின் இறப்பு தினம் தான் பின்னாளில் மாவீரர் தினமாக மாற்றம் பெற்றது.

மற்ற இயக்கங்களின் வளர்ச்சியையும் வழிமுறைகளையும் பார்த்துக்கொண்டே வந்த ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் சர்வதேச தொடர்பாளாக மாற்றம் பெற்று உலகத்தமிழர்களிடம் பிரபாகரனை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றினார்.  அதுவே பின்னால் ஆயுதம் முதல் கப்பல் வணிகம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. விடுதலைப்புலிகளின் மொத்த உலக ஆயுத கொள்முதல் சார்பாளராக கேபி என்ற கே பத்மநாபன் 1984 முதல் செயல்படத்தொடங்கினார்.

ஜெயவர்த்னே இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அமிர்தலிங்கம் தமிழர்களின் சார்பாக எவரையும் நிறுத்தாமல் இருந்த முதல் காரணமும், அதுவே அதிகாரமற்ற உள்ளாட்சி தேர்தலை தமிழர்களை புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய "தமிழர் விடுதலைக் கூட்டணி" தேர்தலில் நிற்போம் என்று கூறியதும் மொத்தமாக அமிர்தலிங்கம் "தமிழர்களின் எதிரி" என்று விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டார்.  காரணம் அப்போது விடுதலைப்புலிகளின் அறைகூவலை கேட்ட அத்தனை வேட்பாளர்களும் பயந்து விலகிக்கொண்டனர். எதிர்ப்பை மீறி நின்ற இரண்டு வேட்பாளர்களுக்கு விடுதலைப்புலிகளின் சார்பாக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

நடந்த தேர்தலில் பருத்தித்துறை, வெல்வெட்டித்துறை இரண்டு இடங்களிலும் பதிவான வாக்கு வெறும் 2 சதவிகிதம்.  மற்ற அத்தனை இடங்களிலும் வாக்கு சதவிகிதம் இந்த அளவிற்குக்கூட இல்லை.  அமிர்தலிங்கம் விடுத்த அறைகூவலை மக்கள் ஏற்கத்தயாராய் இல்லை என்பதற்கு காரணம் அச்சம் ஒரு பக்கம். விரக்தி மறு பக்கம்.

33 பேர்கள் இருந்த இயக்கத்தில் சங்கர், ஆனந்தன், சீலன் ஆகிய மூன்று பேர்களும் நடந்த தாக்குதல்களில் உயிர் இழக்க இனி தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று நிணைத்துக்கொண்ட பிரபாகரன் நடத்திய நேரிடையான கண்ணிவெடித்தாக்குதல்களில் பலியான ராணுவ வாகனமும் (திருநெல்வேலி), கைப்பற்றிய ஆயுதங்களும் பெரும் நம்பிக்கையை தந்தாலும் தாக்குதலில் இறந்த செல்லக்கிளி என்பவர் கண் எதிரே இறந்த போது முதன் முறையாக பிரபாகரன் கண்களில் இருந்த கண்ணீர் வந்தது.

இந்த தாக்குதல்களினால் இறந்த ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்புக்கு கொண்டு சென்ற போது அது வரையிலும் (1983 ஜுலை 24) தமிழர்களின் வாழ்க்கையில் பார்த்திராத கருப்பு தினமும் விடிந்தது.

4 comments:

புலவன் புலிகேசி said...

வழமை போல் நல் விளக்கங்கள்..

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு நன்றி புலிகேசி

Anonymous said...

தமிழன் ஒதுக்கப்பட்டு விட்டான்

Thenammai Lakshmanan said...

உண்மை ஜோதிஜி நூலகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்