Thursday, September 30, 2010

ஏணிப்படிகளின் தொடக்கம்

முத்து முருகேசன் தன்னுடைய பத்திரிக்கை வாழ்க்கையை தொடங்கிய ஆண்டு 1973, கலைஞரின் தமிழ்முரசு  பத்திரிக்கையில் ரிப்போர்டர் வேலை.

கலைஞரின் கையெழுத்துப் பற்றி தெரியாதவர் எவருமே இருக்கமாட்டார்கள்.  அடித்தல் திருத்தல் இருக்காது.  வினோதமான நெளி போல வளைந்து போய்க் கொண்டுருக்கும்.

வாக்கியங்கள் வார்த்தைகள் மாறும் போது அதை சமய சந்தர்ப்பத்திற்கேற்ற அப்படியே கோர்ப்பதில் வல்லவர். அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோர்த்து முடித்து விடுவார். இந்த இடத்தில் இப்படி மாறி  வர வேண்டுமே என்று எவராலும் எண்ணத் தோன்றாது. அவரைப் போலவே இவரின் கையெழுத்தும் எத்தனை பக்கங்கள் தொடச்சியாக எழுதிக் கொண்டே இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய கல்வெட்டு போலவே இருக்கும். இன்று வரைக்கும் சேகரித்த அத்தனை தாள்களையும் பொக்கிஷம் போலவே பாதுகாத்துக் கொண்டுருக்கிறார்.

அப்போது மதுரையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டுருந்த பத்திரிக்கைகள் தினந்தந்தி, தினமணி. அந்த 3000 பிரதிகளை இவரின் தனிப்பட்ட சமூக கட்டுரைகள் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு மேடேறி ஓட ஆரம்பித்தது.  இவருடைய மற்ற ஆராய்ச்சிகள் எப்போதும் போல ஓடிக் கொண்டே இருந்தது. இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பல தரப்பட்ட மக்களின் பிரச்சனைகள், காரண காரியங்கள், பிரபலங்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் கோடு கிழித்துப் பார்க்க பழக ஒவ்வொன்றாக புரிபட ஆரம்பித்தது.

முமு எவருடனும் அதிகம் பேசுவதில்லை.  எவர் குறித்தும் மற்றவர்களிடம் உரையாடுவதும் இல்லை.  செய்திகள் சேகரிக்கச் செல்லும் போது அடித்தட்டு மக்களிடம் முதலில் பேச்சை ஆரம்பித்து கடைசியில் தான் பொதுக்கூட்ட மேடைக்கு செல்லக்கூடியவர். குறிப்பிட்ட தலைவர்கள் இவரிடம் மக்களின் நாடி எப்படி உள்ளது என்று கேட்டதெல்லாம் உண்டு. இதைப் போலவே தனக்குத் தெரிந்து ஒருவரின் அந்தரங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை.  கோடு கிழித்துக் கொண்டு ஒரே மாதிரியான வாழ்க்கை. இன்று வரைக்கும் அப்படித்தான்.

இவருடைய நிர்ப்பந்தம் தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் வீட்டுக்குள் இருக்கும் சாமி படங்களை பார்த்து கையை உயர தூக்கி சப்தமாக " அப்பா பாத்துக்கப்பா.............." என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக நகர்ந்து போய் விடுவதுண்டு. ஆனால் விட மாட்டார். பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவருடைய வாழ்வில் அதிகபட்சமாக பேசிய ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன்.  சிந்திப்பது, எழுதுவது கொஞ்சம் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீ குடித்துக் கொண்டேயிருப்பது.  இது தான் முக்கியப் பிரச்சனையே.

இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டம் கலைஞரின் தமிழ்முரசு பத்திரிக்கையை மூட வைக்க மறுபடியும் இவரின் வாழ்க்கை முட்டுச் சந்தில் போய் நின்றது.

மறுபடியும் இன்றைய உரத்துறை அமைச்சருக்காகவே (?) மதுரையில் (1980) முரசொலி ஆரம்பிக்க கலைஞர் முதலில் தேடிய ஆள் எங்கே முமுகடந்த கால அத்தனை அனுபவங்களையும் மொத்தமாக தீவிர கட்டுரைகளாக எழுதித் தள்ள முரசொலி முன்னேறத் தொடங்கியது.  விதி சும்மா விடுமாஇவர் எந்த இடத்திற்கும் நேரிடையாகவே சென்று செய்திகள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்.  இன்றைய " இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம்" என்பதை அன்றே ஆரம்பித்தவர்.

ஒரு அரசு போக்குவரத்து நிறுவன ஊழல் சம்மந்தமான விசயத்தில் தலையிட்டு சேகரித்த செய்திகள் மிகுந்த களேபரத்தை உருவாகத் தொடங்கியது. அசைக்க முடியாத ஆதாரங்கள் அத்தனையும் இவரின் கைகளுக்கு வந்து விட அதுவே கட்டுரையாக மாறி பிரிண்டர் வரைக்கும் வந்து விட்டது. அஞ்சா நெஞ்சன் அதை வெளியிட வேண்டாம் என்று சொல்ல உருவான பனிப்போரில் இவர் தலை உருளத் தொடங்கியது. 

இவரிடம் இரண்டு கொள்கைகள் எப்போதுமே உண்டு.  எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்யக்கூடாது.  எக்காரணம் கொண்டும் அந்த கட்டுரைகள் பதிப்புக்கு போகாமல் இருக்கக்கூடாது. மிகப் பெரிய ஆச்சரியம் கலைஞர் அவர்கள் இவரின் எழுத்துக்கு கொடுத்த மகத்தான அங்கீகாரம்.  கலைஞர் டெல்லியில் இருந்தாலும் காலையில் அவர் கேட்பது முமு கட்டுரை என்னாச்சு?

காரணம் கலைஞருக்குப் பிறகு பெயர் போட்டு வரும் அளவிற்கு இவரின் கட்டுரைகள் அப்போது பிரசித்தம்.

அஞ்சா நெஞ்சன் அவர்களுடன் உருவான் மனக்கசப்பில் வெளியேறி விட்டார்.  வெளியேறும் போது மற்றொன்றையும் செய்து விட்டே வெளியே வந்தார்.  என்ன நடந்தது? ஏன் நடந்தது? போன்ற பின்னால் உள்ள விவகாரங்களை கடிதமாக கலைஞருக்கு எழுதி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து விட கலைஞர் செய்த உடனடி காரியம் மதுரை முரசொலியை ஒரு மே தினத்தில் மூடவைத்தது.  

கண்டிப்பு, கறார், உண்மை, உழைப்பு, அசாத்தியமான திறமை போன்ற அத்தனையும் ஒரு மனிதருக்கு இருந்தால் இந்த உலகம் எப்படி வாழவைக்கும்? எப்படி தூற்றும்? என்ன மாதிரியான விமர்சனங்கள் வரும்? போன்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த நபர் முத்து முருகேசன். 

நான் பார்க்காமல் படித்த வாயிலாக உணர்ந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 

இவர்கள் இருவருமே இரண்டு துருவங்கள். 

இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..

ஊரும் வாழ்வும்

என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் எப்போதுமே ஏராளமான ஆச்சரியங்களை தந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  நான் இருக்கும் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டு பண பரிவர்த்தனைகள் அத்தனையும் கையாண்டு கொண்டுருப்பது எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல.  பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான்.  

ஒவ்வொரு நாளின் காலை முதல் இரவு வரைக்கும் உள்ளூர் தொடர்புகளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளுமாய் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது.  டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அத்தனையும் தினமும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் இருப்பிடம், உறக்கம், உணவு இது மூன்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.  ஆனால் 300 கிமீ தொலைவில் எத்தனை எத்தனை மாற்றங்கள்?. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஏராளமான அனுபவங்களை உள்வாங்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷடம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்கு தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டுருக்கிறார்கள். .

நண்பர் சொன்னது போல "ஏதோ ஒன்று". ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடச் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில்.  இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தலைநகர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டுருப்பவர்கள் முதல் கலைஞர் குடும்பம் முதல் வளர்ந்து கொண்டுருக்கும் கஞ்சா கருப்பு வரைக்கும் இத்தனையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை வெகு ஜனம் அறியாத ஒன்று. எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை "உழையுங்கள் முன்னேறலாம்.", ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  அவரவர்களுக்கு தெரிந்தவகையில். ஆனால் நான் இருக்கும் ஊரில் தன்னுடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழ் வாங்க பல வாரம் காத்து இருக்க வேண்டிய கொடுமையும் உண்டு. தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் வரையிலும் நாம் அடைந்து கொண்டு இருக்கும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது.  அது போன்ற சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது.


இது போன்ற கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு.  இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.

தொடக்கத்தில் எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே வாழ்ந்து கொண்டு இருந்த சமூக அனுபவங்களை கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது. 


என்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள அவசரமாய் கடக்க வேண்டியதாய் இருந்தது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை, 


விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் மிக ஆழமாக உள்வாங்கும் இந்த சூழ்நிலையில் மனதில் இருக்கும் வியப்பு மாறாமல் தான் இருக்கிறது.

முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை.  அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூட பராவாயில்லை.  இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது. 

வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கிய குற்றச்சாட்டு கூட்டாளி நாதாரிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய் எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான். 

அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு.  அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று.  என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்கு தெரியாமல் திரிந்தோம். ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம்.   கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள். 

சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. 

ஆனால் ஆரம்பம் முதல் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோவிந்த ராஜன் இன்று தென்னக ரயில்வேயில் உயர்பதவியில் இருந்தாலும் தான் வைத்திருந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.  அவன் பத்தாவது படிக்கும் போது சொன்ன தத்துவம் இன்றும் கூட மனதில் பசுமையாக நிற்கிறது.

" உன்னை கடவுள் என்பவர் ஏதாவது கேட்டாராஉன்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாரா? வந்து படையல் வை என்று வீட்டுக்குள் வந்து கேட்டாரா? போடா....... போய் வேலையைப் பாருங்கடா................"

அறிவுரை யாருக்கும் சொல்ல மாட்டான்.  ஏன்யாரிடமும் அளவுக்கு அதிகமாகக்கூட பேசமாட்டான்.  அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சடங்ககுகளில் கூட கடமைக்கு என்று நின்று கொண்டு இருப்பான்.  திருநீறு பூசி விட்டு எப்போதும் போல அவன் இயல்பான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டுருப்பான்.  இறை குறித்து எந்த வாக்கு வாதமும் செய்து பார்த்தது இல்லை.  அவர்கள் குடும்பத்தினர் கவலைப்பட்டாலும் தொந்தரவு இல்லாத அவன் கொள்கை இன்று வரையிலும் தடுமாறாமல் நல்ல உயர்ந்த பதவியில் இருக்கின்றான். அவன் தான் எங்கள் செட்டில் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன். 

40 வயதில் கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் எந்த தவறும் செய்யாமல் அல்லது விரும்பாமல் இன்று வரைக்கும் எனக்கு அதிக ஆச்சரியத்தை தந்து கொண்டு இருப்பவன். பத்தாவதுக்குப் பிறகு தொழில் நுட்ப கல்லூரி முடித்து சென்னையில் உறவினர் வீட்டீல் அவமானத்துடன் தங்கியவன். எதையும் பொருட்படுத்தாமல் தங்கியிருந்த இடத்தில் இருந்து சைக்கிள் ரயில் மீண்டும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து தொடக்கத்தில் 350 ரூபாய்க்கு ரெட்ஹில்ஸ்லில் வேலை செய்தவன். ரயில்வே பரிட்சை எழுதி ஒவ்வொரு படியாக உயர்ந்து வந்தவன். திருமணம் குறித்து கவலைப்படாமல் இருந்தவனைப் பார்த்து குடும்பத்தினர் தான் தேடி அலைந்து கடைசியாக விசாகபட்டினத்தில் இருந்து பெண் பார்த்து திருமணம் முடித்தார்கள்.

நான் முன்னோடிகளாக வைத்து இருப்பவர்களில் அவனுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. ரயில்வே துறையில் ஐ ஆர் எஸ் என்ற உயர் பதவிக்கு பரிட்சை எழுத அவனுக்கு முக்கிய தகுதிகள் அத்தனையும் உண்டு.  அவன் எழுதினால் கூட ஒரே தடவையில் தேர்ச்சி பெற்று வரக்கூடியவன்.  செய்ய மாட்டான்.  காரணம் இந்த பகுதியில் இடையே பார்க்கலாம்.

திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON), எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்த பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர்,

2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் தங்கியிருந்த அறைக்கு உள்ளே வந்தவர் அறிமுகப்படுத்திய நபர்.  அப்போது இவர் மதுரையில் திருநகரில் தன்னுடைய வீட்டில் வாழ்ந்து கொண்டுருந்தார்.  நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டுருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் எதிர்பாரா திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது.

" உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் " என்று நண்பர் ஒரு முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.  கல்லூரி சமயத்தில் ஒரே ஒரு சமயம் தொலைந்து போன பரிட்சைத் தாளை தேடி வந்த மதுரைக்கு இப்போது இரண்டாவது முறையாக திருப்பூரில் இருந்து பயணம்.  முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்துருநத அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தக குவியல் தான் அதிகம் தெரிந்தது. அவர் மனைவி காபி கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார்.

திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டுருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் தட்டிப் போய்விட், மூதலிடு போட்டு உட்கார வைத்து அழகு பார்க்க காத்துருந்தவர் தடுமாறி நின்று விட் இதே போல் அடுத்தடுத்து சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க யோசித்த தருணங்கள் அது.

அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கத் தொடங்கியது.

அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போல திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது.   திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன். எவர் அழைத்தாலும் அத்தனை சீக்கிரம் வெளியே சென்று விடாத மனுஷன், மறு நாள் திருப்பூருக்கே வருகின்றேன் என்று வீட்டுக்குள் வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார்.

அப்போது தான் அவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது. ஓய்வு கிடைத்த ஒரு சனி ஞாயிறு முழுக்க உரையாடலில் தான் கழிந்தது...அவர் கற்று வைத்திருந்த வித்தைகளை விட அவர் பேசி மடக்கி அவர் வழியில் கொண்டு செலுத்த ஆரம்பித்தார்.  என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. அரசியல் இரும்புகளையே கரைத்துப் பார்த்தவர். என்னைக் கரைக்க அதிக நாள் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னை அவருக்குப் பிடித்ததை விட நான் எப்போதும் விரும்பும் அரசியல் துறை ஆசானாக அமைந்த காரணத்தால் வந்தவரை ஒரு வாரம் தங்க வைக்க மனைவி என்னை வினோதமாக பார்த்தார்.  நட்பு வட்டாரம் என்பது முழுவதும் நின்று குழந்தைகள் மட்டுமே உலகமாக வாழ்ந்து கொண்டுருந்த வனுக்கு அவர் மேல் நான் காட்டிய அக்கறையும் மரியாதையும் அவளை ஆச்சரியப் படுத்தியது.

இரட்டைக்குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டுருந்தவளுக்கு இவர் அடிக்கடி விரும்பும் தேநீர் பழக்கம் எரிச்சலைத்தந்தாலும் என்னை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுருந்தவளுக்கு இவரையும் சகித்தே ஆக வேண்டிய சூழ்நிலை., காரணம் எனக்கும் அதே பழக்கம்.

அதுவரைக்கும் அத்தனை அரசியல் விசயங்களையும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்துக் கொண்டு ஒரு விதமான உத்தேச கொள்கையோடு வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு இவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தால் என்னை அவரிடம் மிக நெருக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அப்போது தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் வேலை முடித்து சோர்வோடு வந்த பொழுதெல்லாம் முழு ராத்திரி முழுக்க இவருடன் பேசி விட்டு மறுநாள் தூங்காமலேயே அலுவலகத்திற்கு சென்று விடும் பழக்கமும் உருவாகத் தொடங்கியது.  .

அக்மார்க் காந்தியவாதி.  இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு தமிழ் திரைப்படத்திற்கு தேவைப்படும் அத்தனை சுவாரஸ்யங்களும் திடீர் திருப்பங்களும் இவரது வாழ்க்கையில் உண்டு. இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு தனி மனித ஆளுமையால் மொத்த வாழ்க்கையும் மாறிப்போய் 1990க்குப் பிறகு தான் நேசித்த பத்திரிக்கை உலகத்தை மொத்தமாக கை கழுவி விட்டு இன்று திருப்பூரில் மகன் வீட்டில் வசித்துக் கொண்டுருக்கிறார்.

இவரால் உயர்ந்தவர்களும், இவர் நெருக்கமாக சந்தித்த இந்திரா காந்தி,எம்.ஜீ.ஆர்,கலைஞர் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு.  ஆனால் அத்தனையும் விட  ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை இயக்கம் சார்ந்த நபர்களும் அடங்குவர். ஈழத்தின் 1970 க்குப் பிறகு சிறிது பெரிதுமாக அடுத்த ஏழு ஆண்டு ஏறக்குறைய 36 இயக்கங்கள் உண்டு என்பதை படித்தவர்களும் களத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் தெரியும். அதில் பல இயக்கங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் கிடைக்காமல் மூழ்கிப் போனவர்களும் உண்டு.  அதில் பல பேர்கள் இவரின் எழுத்துக்கு ஆதரவாளர்.  சிறீ சபாரெத்தினம், பாலகுமார்,உமா மகேஸ்வரன் போன்றவர்கள் இவருடன் மதுரையில் இரண்டு நாட்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தங்கியிருந்தவர்கள்.

இதுவரைக்கும் ஈழம் குறித்து எழுதிய 70 சதவிகித எழுத்தாளர்கள்கள் பெரும்பாலும் புத்தக அறிவு மூலமாகத்தான் தங்களது படைப்புகளை எழுதியிருப்பர்.

ஆனால் இவர் எழுதிய "இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை" என்ற கட்டுரைகள் (1988) அன்றைய தினத்தில் விளம்பரம் இல்லாமல் விற்றுத் தீர்த்த பத்திரிக்கையின் செல்வாக்கு பழைய பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியக்கூடும். எந்த வித புத்தக அறிவும் இல்லாமல் அத்தனையும் சந்தித்த நபர்களின் வாக்குமூலங்களை வைத்தே உருவாக்கியவர். இவரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் இருந்து வந்தவர்கள் அநேகம் பேர்கள். அதிலும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தொடக்கத்தில் உருவான சர்ச்சை நிறைந்த ஆளுமையின் காரணமாக பல நூறு முஸ்லீம் மக்கள் தினமும் இவரை வந்து சந்திப்பது அன்றாட வாடிக்கை.

ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும். அதைப் போலவே இவரின் மொத்த வாழ்க்கையையும் தெரிந்து கொள்பவர்களுக்கு வேறு சில அனுபவங்களைத் தரக்கூடும்.

Wednesday, September 29, 2010

உண்டு உறங்கி விடு. செரித்துவிடும்.

அவர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர். தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு.. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத ஒரு ஆபூர்வ நபர்.  தனிமனித ஓழுக்கம் அதற்கு மேல் வெளிநாட்டில் இருப்பவருக்குச் சொந்தமான நூறு கோடி சொத்தை தனது நம்பிக்கை ஒன்றின் மூலம் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பவர். பல ஆச்சரியங்களை எனக்குள் அன்றாடம் தந்து கொண்டுருப்பவர்.

குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னை சேர்த்துருந்தார்.  என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்கு காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது.  வேறொரு காரணமும் உண்டு.,  செட்டிநாட்டு சமையல்.

அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டுருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே.  நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இத்தனைக்கும் அவர் மனைவியும் நன்றாக அசைவ உணவு சமைப்பவர்.

அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தை போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்த சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன்.


சிறிய ஓட்டு வீடு.  உள்ளே பத்து பேர்கள் தான் அமர முடியும்.  அடுத்த வரிசை வருவதற்குள் காத்துருப்பவர்கள் ஓடிப் போய் தான் இடம் பிடிக்க வேண்டும். நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களை பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டுருக்கிறது. அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தை பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது.

ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பறிமாறிக் கொண்டுருப்பார்கள். ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும். நான் பார்த்தவரைக்கும அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார். வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவிக் கொண்டுருப்பார்கள். அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எறிந்துகொண்டுருக்கும்.
நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்து புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தை பார்த்தது திகைத்துப் போய் விட்டேன். அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்து இல்லை. "மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம்" என்று விளாச ஆரம்பித்து விட்டார். அந்த குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைக்க மனமில்லாமல் துண்டுகளை கொண்டாடிக் கொண்டுருந்தார்.

ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் "கொளம்பு" என்பதை கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டுருந்தார்.  காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தை சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூட கொடுக்க வைத்து விடும்.

அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று சுத்தம் செய்தல்.மற்றொன்று மசாலா சேர்மான அளவு. மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனை சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது. தேவையில்லாத கழிவுகளை கழித்து விட வேண்டும். வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று. விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும். நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போல சுத்தம் செய்தா படைத்துக் கொண்டுருக்கிறார்கள் , செய்யவே மாட்டார்கள். மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள்.  கெட்டது, நொந்து போனது, கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டுருக்கும்.

அலசி, கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும். எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.

மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாக பார்த்துக் கொண்டுருக்க வேண்டும். மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும். கொதிக்க தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும். கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும்.

நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும். சுவை கூடி வரும் போது முடிவுக்கு கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டு சடுதியாக முடியும்.  இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும். .

வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ, அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே என்று திட்ட வைத்து விடும்.
திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும். செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது. பணத்தாசை அந்த அளவிற்கு கேவலமாக மாற்றி வைத்து இருக்கும். திருப்பூர் மக்களின் அசைவ வெறி கலாச்சாரத்தை எனக்கு தெரிந்த ஒருவரின் சொத்தை பத்து வருடங்க ளில் 60 கோடியாக மாற்றியுள்ளது.  அத்தனையும் ஊரில் இடமாக அரிசி ஆலையாக மாற்ற உதவியுள்ளது.

அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள். " கவுச்சி வாடை வந்து விடக்கூடாது"  என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள். அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டுருப்பார். ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார். ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.. கறிக்கொளம்பு, எலும்புக்கொளம்பு, இரத்தப் பொறியல், இது போக தெரக்கி எடுத்த கறிக்கூட்டு.

எப்போதுமே வெங்காய பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஒரு ஓரத்தில் கிடக்கும்.

மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டு தண்ணீர் போட்டு துடைத்து விட்டு காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள். நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளை தின்று கடித்துக் கொண்டுருப்பார்கள்.

இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள். 

வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டுருக்கும். நான் அசைவத்தை விட்டொழித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.  வீட்டில் இயல்பாகவே அந்த பழக்கம் இல்லை.  குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டு கட்டுவார்கள்.

தாத்தா முதல அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள்.  வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள்.  நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன். முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்த பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் பொந்து சந்துக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது.  செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும்.  மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாக குடல் அறுந்து விழுந்துப் போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது.

குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்த தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க. திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாக தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். முதல் பலி இந்த உயிர்ப்பலி.

மூத்த அண்ணி கூட முதலில் கிண்டலடித்தார். நீங்களாவது?நான் நம்பவே மாட்டேன் என்று கேள்விக்குறியாய் பார்த்தவருக்கு வீட்டுக்காரம்மா ஆமோதித்து செர்ன்னபோது அவர்களின் ஆச்சரியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது.  காரணம் அசைவ வெறியனாகத்தான் வாழ்ந்தேன்,

ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது. ஒன்று விடத்தையா விலாஸ். இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும்.  அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது. பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்து படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போல சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்துருந்த போது தான் ராஜு வந்தான்.  எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டுருந்தவன். அவன் அம்மா ஊருக்குள் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டுருந்தார். அவன் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் ஜெகஜால கில்லாடி. அந்த ராத்திரி நேரத்தில் என்னுடன் இருந்த நாலு பேர்களையும் பார்த்து விட்டு அவன் கேட்ட முதல் கேள்வியே என்னப்பா அதிசியமா ராத்திரி நேரத்தில் இங்கு வந்து இருக்கீங்க?

நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன்.  எப்படியாவது விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கி தருவாயா? அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம்.  எவரோ ஒருவர் மறுநாள் ஓம் மகனை இங்கே பார்த்தேனே? என்று நீட்டி முழங்கி விடுவார்கள். உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது.. தலைக்கறி, குடல்கறி, மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள்.  புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாக கொத்திக் கொண்டுருப்பார். கடையை கடந்து செல்லும் பெண்களை பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும்.

அவரை பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு. அவர் ஸ்டைலாக பேசிக் கொண்டே செய்யும் கொத்து புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும்

அன்று தொடங்கியது தான் ராஜுவின் பழக்கம்.

இப்போது மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு திரைப்பட இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முதல் பட வேலையில் இறங்கி இருக்கின்றான்.

அப்போது அவன் அறிமுகப்படுத்தியது தான் அருகே இருந்த கண்ணகி உணவகம்.  பர்மா மலேசியாவில் உள்ள பெரிய வீடுகளில் சமையல்காரராக பணிபுரிந்து விட்டு கடைசி காலத்தில் வந்து கடை போட்டுருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அத்தனை மக்களுக்கும் இந்தக் கடை தான் வேடந்தாங்கல். நான் பார்த்தவரைக்கும் அம்மியில் அரைத்த மசாலா சமாச்சாரங்களைத்தான் கடைசி வரைக்கும் பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள்.
ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது. பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும். அங்கு கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்களாளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே.

இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. இன்று கூட உள்ளடங்கிய கிராமங்களில் இப்படித்தான் பழகிக் கொண்டுருக்கிறார்கள். அப்பா, அணைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை.  மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டுருப்பார்கள்.  அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்து தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பது.  காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஓட்டி வைத்து இருப்பார்கள்.

எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டு கடைக்காரர்களே வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசை யாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம். எந்த வேலையிருந்தாலும் குறிப்பட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும். எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு.  நண்பர்கள் இடையில் எவராது தேடிவந்தால் செத்தார்கள்.  சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும்.  நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான்.

இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாக பார்த்தது இலலை. உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள். உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு. ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி, மீமிசல்,கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் குவிந்து கொண்டுருக்கும். வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்து பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை,கெண்டை,கௌங்கை, போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை. ஈரமான துணியை தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்துருப்பார்கள்.  நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளை தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும்.  அம்பானி மார்க்கெட்டிங் போல கிராம மக்களின் தந்திரம் அது.

கெளுத்தி,திருக்கை, தொடங்கி பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுததம் செய்து கொண்டுருப்பார்.  பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது.

பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும்.  அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று.  காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார்.


விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம்.  சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன்.

" அப்பா....... சாப்பிடவுடன் தூங்கினால் நல்லது இல்லை.  கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும்.  எங்க மிஸ் சொல்லியிருக்காங்க " .

என்ன பதில் என்னால் சொல்லமுடியும்?