Saturday, February 13, 2010

தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)

போர் என்றால் பரஸ்பர அழிவு.  அது குறித்து எப்போதும் யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கப்போவதில்லை.  பழைய மன்னர்கள் வீரத்தை பறை சாற்ற தொடங்கினார்கள். படையெடுப்பாளர்களின் நோக்கம் வேறுவிதமானது.  மதத்தை நிலைப்படுத்த, வளத்தை சூறையாட மற்ற இலவச பரிசாக தான் விரும்பும் மனநோய்க்கு ஒப்பானது போன்ற சித்ரவதைகள்.  ஆங்கிலேயர்கள் நோக்கம் மொத்தத்திலும் பொருளாதாரம் சார்ந்த ஆனால் என்றும் ஊற்றுக்கண் வற்றாத ஜீவநதிக்கான ஆதாரத்தை தொடக்கத்திலேயே உருவாக்கி வைத்தார்கள்.  பக்கத்தில் இருப்பவர்கள் சேர்ந்து விடக்கூடாது.  சேர்ந்தாலும் தீராத பிரச்சனைகளைக் கொண்டு தான் வாழ வேண்டும்.  ஆள வேண்டும்.  அமெரிக்காவின் அரசியலும் இன்று வரைக்கும் இதுதான்.

                கோபால்சாமி மாத்தையாவுடன் இந்திய அமைதிப்படை
இந்தியாவிற்குள் மட்டுமல்ல உலகத்தில் மற்ற நாடுகளை ஆண்டு வந்த ஸபானிஷ் மக்கள் முதல் இந்தியாவிற்குள் வந்த மொகலாயர்கள் வரைக்கும் ஊன்றி கவனித்துப் பார்த்தால் தனி மனித வக்கிரம் தான் அதிகமாக வெளியே தெரிகிறது.   ஆனால் இந்த தனி மனித வக்கிரம் தான் இந்த இலங்கை அமைதிப்படை வீரர்கள் அநியாயமாக சாவதற்கும் காரணம் என்றால் அது தான் உண்மையும் கூட.

விடுதலைப்புலிகளின் நெற்றிகண் திறக்க மொத்த காரணம் இந்தியா.  சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் உள்ளே நுழைந்தது தன்னுடைய சுயநலத்துக்கு மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சத்தமாகவே சொல்ல முடியும்.  கேட்ட, விரும்பிய அத்தனைக்கும் ஒத்துக்கொண்டவர்களை வம்புக்கு இழுப்பது போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டே இருக்க கடைசியில் அது நடக்கவே ஆரம்பித்து விட்டது.  யுத்தம் தொடங்கியே விட்டது.  ஆட்டத்திற்கு நாங்கள் ரெடி?  நீங்கள் ரெடியா என்பது போல் தொடக்கம் பெற்றது.

ஏற்கனவே அங்கங்கே தங்களுடைய மொத்த ஆதிக்கத்தையும் அமைதிப்படை நிலைநிறுத்தி இருந்தது.  ஆனால் இது போன்ற இடங்களில் தான் பிரபாகரன் குறித்த உண்மையான புரிதல்கள் நமக்கு தேவைப்படும்.  ஒருவர் மேல் சந்தேகம் என்று தொடங்கிவிட்டால் அது சாவாக முடியும் வரைக்கும் சந்தேகம் தான்.  பின்னால் வரப்போகும் பிரேமதாசா , ராஜீவ் காந்தி மரணம் வரைக்கும் அந்த திட்டமிடல் குறித்து குறிப்பிட்டே ஆக வேண்டும்.  தவறு சரி என்பதை பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

" யாழ்ப் போரில் இந்தியா வென்றது"   " யாழ்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றியது / விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்"  இப்படித்தான் தொடக்கத்தில் நடந்த 15 நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் பரப்புரைகள் உலா வரத்தொடங்கின.  ஆனால் அன்று 2000 விடுதலைப்புலிகளிடம் போரிட்ட இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15,000 வீரர்கள்.  கடும் போருக்கும், பெரும் இழப்புக்கும் பின் தான் யாழ் நகரை கைப்பற்றினர்.

யாழ் பகுதிக்கு பொறுப்பேற்று இருந்த இந்தியத் தளபதி திபீந்தர்சிங் " போர் ஓயப்போவது இல்லை"  என்பதை சூசகமாக தெரியப்படுத்தினார்.  அவர் சொன்ன மற்றொரு வாசகம் " போர் தொடங்கியதும் 1200 விடுதலைப்புலி கொரில்லா வீரர்கள் யாழ் நகரை விட்டு வெளியேறிவிட்டனர்.  அவர்கள் ஒவ்வொருவரும் பத்து வீரர்களின் உயிரைக்குடிக்க போராடுபவர்கள்"

போர் தொடங்கியதும் இந்தியா செய்த உடனடி செயல் விடுதலைப்புலிகளின் வானொலி நிலையங்களை தகர்த்ததோடு மட்டுமல்லாமல், யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டுருந்த இரண்டு தமிழ் பத்திரிக்கை அலுவலகங்களையும் அழித்தனர்.

ஏற்கனவே ஜேவிபி என்ற சிங்கள இடதுசாரிக்கு இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் கடுப்போ கடுப்பு.  அவர்கள் தங்கள் பங்குக்கு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர்.  இப்போது அமைதிப்படை ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கினர்.  தங்களுக்கு எதிராக, உள்ளே நடக்கும் உண்மை நிலவரங்களை களத்தில் இருந்து சேகரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக மக்களை கவனமாக பார்த்து பொறுக்கி எடுத்து வெளியேற்றினார்கள்.  தாங்கள் கொடுக்கும் செய்திகளை இந்தியா மற்றும் வெளிநாட்டில் பரப்ப இந்திய அமைதிப்படையினருக்குப் பின்னால் பல ஜாம்பவான்கள் அற்புத பங்காற்றிக்கொண்டுருந்தனர்.

உள்ளே என்ன நடக்கிறது?  என்றே பலருக்கும் அந்த நேரத்தில் புரியவே இல்லை.  இந்திய அமைதிப்படையினர் மொத்த இடத்தையும் கைப்பற்றி விட்டதாக, வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடிக்காத குறைதான்.  அப்படித்தான் இந்திய ஆங்கில ஊடகங்கள் பறைசாற்றின.  ஒத்து ஊதுகுழல் போல் அங்கங்கே அறிவுஜீவிகளின் அற்புத உரையாடல் தனியாக பரப்புரையாக பரப்பப்பட்டது.  ஆனால் என்ன தான் நடந்து கொண்டுருக்கிறது.

" நாங்கள் சாகத் தயார்.  ஆனால் நாங்கள் கௌரவமாக சாவோம்.  வியட்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் போல இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.  நாங்கள் மொத்த பேர்களும் இறந்தாலும் இந்தியாவின் இழப்பு என்பது பெரிய எண்ணிக்கையில் இருக்கும் " என்று சூளுரைத்தார் அப்போது பொறுப்பில் இருந்த மாத்தையா.  இதே மாத்தையா தொடர்ச்சியாக அந்த சமயத்தில் சொன்ன வார்த்தைகள் இது.

" இந்தியாவை ஒப்பிடும் போது நாங்கள் மிகச் சிறிய இயக்கமே.  இது எங்கள் நாடு. எங்கள் பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அறிவோம்.  எங்கள் சுதந்திரத்தை விரும்பியதால் சிங்களர்களோடு நாங்கள் போரிட்டோம்.  என்னதான் இருந்தாலும் சிங்களர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே.  இங்கு வரவும், எங்களுக்கு கட்டளையிடவும் இந்தியாவிற்கு யார் உரிமை கொடுத்தது" என்று கோபத்தின் உச்சத்தில் போர் வியூகங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள்.
அக்டோபர் 6ந் தேதிக்குப்பிறகு தான் பொறி பறக்க ஆரம்பித்தது.  அந்த ஆட்டத்தையும் தொடங்கி வைத்தது இந்தியா தான்.  ஏறக்குறைய இதே தினத்தில் தான் ராஜீவ் காந்தி விடுத்த அறிக்கையின் வாசகம்.

" அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய அமைதிப்படை கடும் நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிக்கும்"  என்றார்.

அக்டோபர் 8,9 ந்தேதிகளில் கிழக்கு மகாணத்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட போராளி முகாம்களை சூழ்ந்து கொண்டு மொத்த ஆயுதங்களையும் கைப்பற்றியதோடு, 500 போராளிகளையும் கைது செய்தது.  இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை இராணுவமும் சேர்ந்து கொண்டனர்.  இதற்கு " இடி முழக்க நடவடிக்கை "  என்று பெயர் வைத்தனர்.  இதற்கு மேலும் இந்திய தளபதி திபீந்தர்சிங் மாத்தையா, பாலசிங்கம் இருவரையும் வரவழைத்து " ஒப்பந்தம் உங்களால் இடையூறு என்றால் மொத்த நபர்களையும் முடித்துக் கட்டி விடுவோம் "  என்று எச்சரித்தார்.

தெளிவான தாக்குதல் என்று இரண்டு தரப்பும் மோதிக்கொண்ட நாள் அக்டோபர் 10.  ஆனால் இதற்கு காரணம் என்று அப்போது அமைதிப்படை, " பிரபாகரன் மொத்த இந்திய தளபதிகளையும் தாக்க உத்தரவிட்ட செய்திகள் கிடைக்கப்பெற்றோம்.  அதன் காரணமாகத்தான் இந்த தாக்குதல்கள்'    என்றார்கள்.  ஆனால் இருவர் ஆட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுருந்த ஜெயவர்த்னே அக்டோபர் 4ந்தேதி முழு மூச்சாக திருகோணமலையில் இருந்து தாக்குதல்களை தொடங்க அமைதிப்படையின் உயர் அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டு இருந்தார்.   முறைப்படியான ஒப்புதல் பெற தீட்சித் உடனடியாக டெல்லி பறந்தார். இந்த மறைமுக சமிக்ஞை கிடைக்கப்பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஓய்வு சோம்பலில் இருந்து விடுபட்டு தங்களது வேட்டையை தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக இழந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கையின் காரணமாக, பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்த அமைதிப்படையின் மொத்த செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டுருந்த பிரபாகரன் அப்போது தான் மணி அடித்து தொடங்காத குறையாக தனது ஆட்டத்தை தொடங்கினார்.

200 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  போதாதா?  இதைத் தானே எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர்.  அமைதிப்படையும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.  4ந் தேதி ஜெயவர்த்னே உருவாக்கிய மாய வலை இது.  தீட்சித் பறந்து போய் டெல்லியில் பெற்ற அனுமதி காரணமாக 8ந் தேதி தலைமைத் தளபதி சுந்தர்ஜீ இலங்கையின் உள்ளே வந்து மொத்தத்தையும் கேட்டு விட்டு, அப்போதைய இந்திய இராணுவ அமைச்சர் கே.சி. பந்த் உடன் கொழும்பு சென்று மொத்தமாக மினி மீட்டிங் போட்டனர்.  பேச்சு அமைதி நிலைநாட்டுவது குறித்து?. ஆனால் நடந்த பேச்சோ இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தொடங்கப்போகும் முறைப்படியான சண்டைக்கான அச்சாரம்.

இத்தனையும் உள்ளே வைத்துக் கொண்டு அமைதிப்படையின் சார்பாக, " அக்டோபர் 10ந் தேதி யாழ் நகரில் மாலை 2,45 மணிக்கு நெல்லிப்பாலையில் 4,30 மணிக்கும் விடுதலைப்புலிகள் நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினார்கள்.  இதன் பொருட்டு தான் எங்கள் தாக்குதல்களை தொடங்கினோம்"  என்றார்கள்.

இதுபோக அமைதிபபடை உருவாக்கிய மற்றொன்றும் ஆச்சரியம் வரவழைக்கக்கூடியது.  யாழ்வளைகுடா பகுதியில் EPRLF. TELO.PLOTE  போன்ற இயக்க நபர்களை " மூன்று நட்சத்திர கூட்டணியாக " வைத்துக்கொண்டு அவர்களை உள்ளே சுதந்திரமாக செயல்பட வைத்தனர்.  மொத்த விடுதலைப்புலிகளின் செயல்படுகளையும் தடைசெய்தனர்.  இந்த சமயத்தில் இந்த இயக்கங்களிலும் இருந்து பிரிந்து போன மொத்த சிறு சிறு குழுக்களையும் ஒன்றாக இணைத்து ENTLF என்று (இப்போது இருக்கும்) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வைத்து உத்திரபிரதே மாநிலத்தில் பயிற்சி அளித்து கொண்டு வந்து உள்ளே இறக்கினார்கள்.

ஆனால் இந்த சமயத்தில் இலங்கை எதிர்க்கட்சி தலைவி பண்டார நாயகா சொன்ன வாசகத்தை நீங்கள் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.

" இங்கு தொடர்ச்சியாக இந்திய ராணுவம் இருப்பது புதிரானது.  ஆபத்தானதும் கூட.  அவர்கள் கொண்டு வந்துள்ள ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள், மோட்டார் வகையிலான தானியங்கி ஆயுத தளவாடங்கள் அத்தனையும் இலங்கைக்கு (?) புதிது. நம்முடைய இறையாண்மையை நாமே கெடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பதன் தொடக்கம் இது"

Thursday, February 11, 2010

காந்திய பாதையில் அழிவுப்படை

இந்தியா பேசியபடி எதுவும் நடந்த பாடில்லை.  பிரபாகரனுக்கோ இப்போது அமைதியாய் இருப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. ஆனால் தினந்தோறும் பலவிதமான வலிகள்,  இதற்கிடையே தங்களை விழுங்கத்துடிக்கும் மற்ற சகோதர போராளிக்குழுக்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பிரச்சனைகள் பூதாகரமாகிக்கொண்டுருந்தது.  இந்த நிலைமையில் தான் திலீபன் " நான் உண்ணாவிரம் இருக்கப் போகின்றேன்.  இந்தியா நம்மை ஏமாற்றி விட்டது " என்று (செப்டம்பர் 15) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் என்று காந்திய பாதையை தேர்ந்தெடுத்து தொடங்கினார்.

இவரின் உண்மையான பெயர் இராசையா பார்த்திபன். இவர் அப்போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றிக்கொண்டுருந்தார்.  மொத்த ஒப்பந்தத்தையும், பின்னால் பேசப்பட்ட ரகசிய பேரங்களையும் நன்றாக அறிந்தவர்.  பின்னாளில் சுப. தமிழ்செல்வனை ஆன்டன் பாலசிங்கம் தனக்கு உதவியாக வளர்த்தெடுத்ததை போலவே இப்போது இந்த திலீபன் பாலசிங்கத்தால் வளர்க்கப்பட்டுக் கொண்டுருப்பவர்.

அமைதிப்படை உள்ளே நுழைந்தது முதல் மொத்த நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டுருந்த ஜே.என்.தீட்சித் திலீபன் உண்ணாவிரதம் தொடங்கியதும் பறந்து வந்து பிரபாகரனை மிரட்டத் தொடங்கினார்.  "உங்களால் மொத்த அமைதியும் சீர்குலைந்து விடுமோ? " என்று அஞ்சுகிறேன்.

ஆனால் அப்போது இவர் பிரபாகரனை பார்ப்பதற்கு முன் அமைதிப்படை தளபதிக்கு இட்ட கட்டளை " பிரபாகரனை கைது செய்து விடுங்கள்.  முடிந்தால் பேச்சு வார்த்தைக்கு வரும் போது சுட்டுக்கொன்று விடுங்கள்".  என்ற கட்டளை மறுக்கப்பட்டது.  முதல் காரணம் முறைப்படியான அறிவிப்பு இராணுவ தலைமை தளபதியிடம் இருந்து வரவில்லை.  மற்றொன்று அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டுருக்கும் போது தான் தோன்றித்தனமாக கோழைத்தனமாக சுட்டுக்கொல்வதில் விரும்பாத அமைதிப்படை தளபதி தீட்சித் கொடுத்த கட்டளையை மேலே அனுப்பினார்.

அதுவே அப்போது இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியது.  இந்த நிகழ்வுகள் அத்தனையும் பின்னாளில் தளபதி ஊடகத்தில் சொன்ன போது தான் அன்றைய தீட்சித் கோர முகம் அணைவருக்கும் புரிந்தது.

ஏற்கனவே போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களை இலங்கை ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம் என்று பழியெடுத்துக்கொண்டுருந்தார்கள். நம்பியவர்களும், நம்பவைத்தவர்களும் இப்போது இல்லை.  ஆனால் மொத்த நோக்கத்தையும் இந்தியா வேறொரு பாதையில் தீட்சித் என்றொரு ஆளுமையில் கேள்விக்குறியாய் மாற்றிக்கொண்டுருந்தது. இப்போது இந்தியா பிரபாகரனை வறுத்துக்கொண்டுருந்தது

பிரபாகரன் ஆயுதப்பாதைக்கு திரும்பிய நாள் முதல் இன்று தான் முதன் முதலாக இயக்கத்தில் உள்ளவர் காந்திய பாதையின் வழியே சென்று உண்ணாநோன்பு (நல்லூர் கந்தசாமி கோவில்) போராட்டம் தொடங்கியது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.  செப்டம்பர் 26 தண்ணீர் கூட அருந்த மறுத்து உயிர் துறந்தார் திலீபன்.  இலங்கைக்கு எப்போது இது குறித்து அக்கறையில்லை.  காரணம் அவர்கள் அரை இறுதி ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டுருக்கிறார்கள்.  ஆனால் காந்தி தேசத்திற்கோ எப்போதும் போல இதுவும் கடந்து போகும் என்பது போல் அலட்சியம்.  மக்கள் மத்தியில் கேள்விக்குறி உருவாகத் தொடங்கியது.  இது முதல் கோணல்.

தீலிபன் கேட்ட உடனடி சிங்கள குடியேற்றங்களை தடுத்தல், ஒப்பந்தப்படி விரைவான நடைமுறைகள், தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கம் போட்டுக்கொண்டுருக்கும் போலித்தனமான குற்றச்சாட்டுகளை நிறுத்துதல், பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சிறையில் அடைத்து வைத்துருப்பவர்களை விடுதலை செய்தல்,  தமிழர் பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் ராணுவ முகாம்களை மூடுதல்.

ஆனால் அவரை சவக்குழியில் தான் இறுதியில் மூடினார்கள். ஆனால் இவருடைய சாவு எதற்கு உதவியது தெரியுமா?  அந்த நிமிடம் வரைக்கும் ஏற்கனவே பேசிய அமைதி உடன்படிக்கை பற்றி பேசி புரிந்துணர்வுகளை உருவாக்க பலாலி இராணுவ தளத்திற்கு வருமாறு பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  ஒரு வேளை திலீபன் சாகவில்லை என்றால் தொடக்கப்புள்ளி கூட தொடங்காமல் அன்றே முற்றுப்புள்ளியாய் முடிந்து இருக்கும்.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உருவான இந்த இறப்பு மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பையும், இந்திய அமைதிப்படை குறித்த தவறான எண்ணங்களையும் உருவாக்கக் காரணமாக மட்டும் தான் இருந்தது.  மிச்ச சொச்சம் என்று நம்பிக்கைகள் குறித்தான எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருந்து இருக்கலாம்.  அதைப்போலவே பிரபாகரன் மனதிலும் ஊசலாட்டம் தொடங்கியிருந்ததே தவிர அது முழுமையாக வெறுப்பு என்று மாற்றம் பெற்றது எப்போது தெரியுமா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த குமரப்பா மற்றும் புலேந்திரன்.  இவர்கள் அப்போது கமாண்டர்கள் என்ற பதவியில் இருந்தவர்கள்.  இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து பல தாக்குதல்களுக்கு காரணமானவர்கள்.  ராமேஸ்வரத்தில் இருந்து இவர்கள் இருவரும் மற்ற பதினைந்து பேர்கள் என்று மொத்தமாக 17 பேர்கள் இலங்கையை நோக்கி வந்து கொண்டுருந்தனர்.  இப்போது இலங்கை இராணுவத்தினர் அத்தனை பேரும் ஹாயாக ஓய்வெடுத்துக்கொண்டுருக்க மொத்த பாதுகாப்பு இந்திய அமைதிப்படையின் கைகளில்.  எங்கெங்கு காணினும் இந்திய ராணுவத் தலைகள்.  பயணித்துக்கொண்டு வந்த விடுதலைப்புலிகளுக்கு அலாதியான நம்பிக்கை.  இப்போது மொத்த பாதுகாப்பும் அமைதிப்படையின் கைகளில் இருக்கிறது.  நமக்கு ஏதும் நேராது?

விதி அங்கிருந்து தான் விளையாடத்தொடங்கியது.  பகவான் நேரிடைப் பார்வைபட பட்டாசு வெடிக்க காலன் பார்த்திருந்த நேரம் உருவான காலம் அது.  வந்தவர்களை அமைதிப்படை கைது செய்து விட தகவல் பஞ்சாய் பறந்து ஜெயவர்த்னேவுக்கு சென்றது.  போதாதா?  பாதுகாப்புத்துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி தன்னுடைய மொத்த அன்றாட கடமைகளை அத்தனையும் அக்கட ஒதுக்கிவைத்து விட்டு இவர்களை தொடர ஆரம்பித்தார்.  பலாலி என்ற இடத்தில் இருந்து அவர்கள் கொழும்புக்கு கொண்டு வர ஆணை.  
இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.  அமைதிப்படைக்கு தலைமை தாங்கி வந்த தலைமைத்தளபதியின் குணாதிசியங்கள்.  அவருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை இலங்கையின் உள்ளே உருவாக்கப்பட வேண்டிய அமைதி.  ஆனால் உள்ளே வந்தது முதல் நடந்து கொண்டுருக்கும் மொத்த அரசியல் மற்றும் அதைச் சார்ந்த தேவையில்லாத விமர்சனங்கள் அவருக்கு கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.  போர் என்றால் வெளியே சென்று போராடலாம்.  ஆனால் போர் செய்யக்கூடாது.  ஆனால் போராட தயாராய் இருக்க வேண்டும்.  இதைப்போன்ற வினோதமான மனோநிலையில் எந்த வீரனை எப்படி தயார் படுத்துவது.  அவரே அன்று குழப்பிப்போயிருந்தார் என்பது தான் சரியாக இருக்கும்.

இது போக தீட்சித் கட்டளை என்பது அடியாளுக்கு இடப்படுவது போல்.  முறைப்படி பெற்ற பயிற்சி என்பதற்கு சம்மந்தம் இல்லாமல் அன்றாடம் ஒவ்வொரு கட்டளையும் மாறிக்கொண்டே இருந்தது, இந்த போர்க்களம் என்பது இங்கு அவரின் போதாத காலத்தை நினைவு படுத்துவதாக இருந்தது.  இவரின் தீவிர முயற்சியும் பலிக்கவில்லை.  கொழும்பு கொண்டு செல்லப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா முயற்சி செய்ததே தவிர முழுமை இல்லை.  இந்த இடத்தில் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.  மொத்த அதிகாரமும் ஜெயவர்த்னே கையில் இருந்ததே தவிர உள்ளே உள்ள ஆளுமை அத்தனையும் அமைதிப்படையிடமும், அதன் ரிமோட் இந்தியாவிடமும் இருந்தது.  உண்மையான அக்கறையிருந்து இருந்தால் அன்றைய நிகழ்வு வேறு விதமாக மாற்றம் பெற்றதாக இருந்தது இருக்கும்.

ஒப்பந்தப்படி உண்டான வாக்குறுதிகள் கூட அந்த சமயத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டன. பிடிபட்டவர்கள் கொழும்பு சென்றால் என்ன நடக்கும்?  கொழும்பு நாலாவது மாடி சித்ரவதை என்பது இன்று வரையிலும் புகழ்பெற்றது.  ரசித்து ருசித்து சிங்களர்கள் செய்யும் அலாதியான வேலைப்பாடு நிறைந்த நுணுக்கமான சித்ரவதைக்கூடம்.  இவர்கள் புலிகள் வேறு.  கொண்டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும்.  அன்றைய மொத்த ஆட்சியாளர்களும் இந்த 17 பேர்கள் மேல் தான் கவனத்தில் வைத்து இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

கொழும்பு செல்லப்படுவதற்கு முன் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய 17 சயனைடு குப்பிகள் அவர்கள் வீரமரணத்தை உலகிற்கு உணர்த்தி அதிர்ச்சியலையை உருவாக்கியது. இந்தியாவிற்கு ஆயாசத்தை ஏற்படுத்தியது.  இலங்கைக்கு ஆவேசத்தை உருவாக்கியது. பிரபாகரன் நெற்றிக்கண் வேலை செய்யத் தொடங்கியது.  ஆட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டுருந்த இந்திய அமைதிப்படையின் தாயக்கட்டை தவறாக விழுந்து பாம்பு வாயில் சிக்கி கீழே இறங்கத் தொடங்கியது.  அமைதி காக்க போனவர்கள் அழிவுப்படையாக மாற வாங்க ராசா என்ற வரவேற்ற பொதுமக்கள் அத்தனை பேரும் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.

கோப்பில் உள்ள புள்ளிவிபரங்களை நம்பிக்கொண்டு ராஜீவ் காந்தி ஒரு பக்கம்.  இந்திய இராணுவ தலைமை தளபதி சுந்தர்ஜி பார்வையாளராக மறுபக்கம்.  இவர்கள் நடுவில் தீட்சித் இவருக்குத் துணையாக ரா உளவுத்துறை.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜெயவர்த்னே.  எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அவரின் சிஷ்யகோடிகள் மறுபக்கம்.  குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இலங்கை இராணுவத்தினர்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே பிரபாகரன்.  இவருக்கு வெளியே ஆட்டத்தின் கோட்டுக்கு அருகே காத்துக்கொண்டுருக்கும் மற்ற போராளிக்குழுக்கள்.  காரணம் இவர்கள் ஆட்டத்தில் பங்கெடுப்பதை விட வெற்றிக்கோப்பையை எப்படி கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்தனர்.  காரணம் நடக்கப்போகும் தேர்தலில் தங்களுடைய ஆளுமையை எப்படி நிலைநிறுத்தலாம் என்ற எண்ணத்தில் தயாராக இருந்தனர்.

புலி பசித்தால் புல்லை உண்ணுமா?  பிரபாகரன் அப்போதைய சூழ்நிலையில் உண்ணும் சூழ்நிலையில் இருக்க வைத்தது விதியா?  அவர் நம்பாத சக்தியா?

Tuesday, February 09, 2010

அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்

இந்தியா இலங்கையின் உள்ளே நுழைந்த போதும், அதற்கு முன்னாலும் ஊடகத்தில் சொன்ன வாசகம் இது.  

" 72 மணிநேரம் எங்களுக்கு போதும்.  மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டி விடுவோம்"

ஆனால் அன்று மொத்த அதிகாரவர்க்கத்தினருக்கும் முன் இருந்த சவாலான நோக்கம் என்ன தெரியுமா?  பத்து லட்சம் என்று பிரபாகரன் தலைக்கு வைத்திருந்த ஜெயவர்த்னே திட்டத்தின்படி ஒன்று மொத்த விடுதலைப்புலிகளையும் நிராயுதபாணியாக ஆக்க வேண்டும்.  மற்றொன்று, குறிப்பாக பிரபாகரனை தனிமைப்படுத்தவேண்டும்.  இத்துடன் ஜெயவர்த்னே உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றி இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது என்ற இந்த நோக்கங்கள் தான் முக்கிய கடமைகளாக இருந்தது.

அமைதிப்படை உள்ளே வந்ததும், ஆரம்பரமாக விழா நடத்தி பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குகிறோம், அமைதியை மொத்தமாக நிலைநாட்டுகிறோம் என்பதன் அடிப்படையில் கண்ணாமூச்சி ரே ரே என்பது போல் ஆயுத ஓப்படைப்பு வைபவமும் நடந்து முடிந்தது.  இதற்கிடையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள், மற்றும் இந்தியா கொண்டு போயிருந்த ஆயுதங்கள் என்று தரம் வாரியாக தராதரம் இல்லாத குறிப்பாக பிரபாகரனுக்கு எதிர் அணியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துக்கொண்டுருக்கும் நிகழ்ச்சியும் கனஜோராக மறுபுறம் நடந்தேறிக்கொண்டுருந்தது.

காத்து இருந்தவர்கள், வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தவர்கள், மனம் முழுக்க சொல்லமுடியாத வெஞ்சினத்துடன் இருந்தவர்கள் என்று மொத்தமாக குலுக்கல் போடாத குறையாக தேர்ந்தெடுத்து அவர்களை ரா உளவுப்படையின் அடிப்படை சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுருந்தனர்.  தினவெடுத்த தோள்கள் என்ன செய்யும்?   அது அந்தப்பக்கம்.

ஒப்பந்த ஷரத்துப்படி வடக்கு கிழக்கு மகாணங்கள் உருவாக்கபட்டு, முறைப்படியான மற்ற வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  அதற்குப் பிறகு தமிழர்களின் பிரதிநிதிகள் போன்ற சடங்கு சமாச்சாரவேலைகள். இது இந்தப்பக்கம்.

இதற்கு மேலும் உள்ளே இருந்த மற்ற போராளிக்குழுக்கள் உன் பங்கு என் பங்கு எத்தனை? என்று கணக்கீடுகள்.  ரா வின் ஆசிர்வாத வார்த்தைகள் அவர்கள் அத்தனை பேர்களையும் மொத்தமாக மாற்றி இருந்தது.  தொடக்கம் முதல் மற்ற போராளிக்குழுக்களை ஒப்பிடும் போது EPRLF பத்பநாபா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.  ஆனால் இந்திய அமைதிப்படையும், அதிகாரிகள் உருவாக்கிய புரிந்துணர்வும் அவரையும் இந்த மாயையில் விழும் அளவிற்கு மாற்றினார்கள் என்பது மிகுந்த ஆச்சரியம்.

அதுவரைக்கும் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஆனால் இந்திய அமைதிப்படை உள்ளே வந்ததும் சிங்கள குடியேற்றங்கள் அட்டகாசமாக உருவாகிக் கொண்டுருந்தது.

எல்லா சாலைகளும் ரோம் நோக்கி என்பது போல எல்லா பிரச்சனைகளும் பிரபாகரன் நோக்கி என்ற போதிலும் கூட அவரால் அந்த சூழ்நிலையில் அமைதியாய் இருப்பதை தவிர வேறொன்றும் செய்யும் அளவிற்கு இல்லை.  ஆனால் தொடக்கம் முதலே இந்தியாவிற்கு தெளிவான பார்வை? பிரபாகரன் எந்த காலத்திலும், எப்போதும் நமக்கு சாதகமாக இருக்கமாட்டார்?

அமைதி ஒப்பந்தத்தின்படி ஒவ்வொன்றையும் வரிசைக் கிரமமாக இந்தியா தான் உருவாக்கும்,  நேரிடையாக ஜெயவர்த்னேவுடன் எவரும் பேசக்கூடாது.  இந்தியா உருவாக்கியிருந்த வெளியில் சொல்லாத சட்டம் இது.  வடக்கு கிழக்கு மகாண பிரதிநிதிகள் என்று தேவைப்படும் 12 பேர் அடங்கிய பட்டியலில் பிரபாகரன் கொடுத்த ஏழு பேர்கள் நேரிடையாக ஜெயவர்த்னே கைக்குச் சென்றது.  காரணம் இந்த நேரம் மிக முக்கியம்.  மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்பட்சத்தில் எதிர்கால பிரச்சனைகளை உருவாக்கலாம்.  தான் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று தொடக்கம் முதலே பிரபாகரன் அறிவித்த காரணத்தால், தான் தேர்ந்தெடுக்கும் ஆட்களை சபையில் உருவாக்க வேண்டிய அவசர அவஸ்யங்கள் அவருக்கு.
 இதனைக்கண்ட இந்தியா " இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப்புலிகள் குந்தகம் விளைவித்தால் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும்"  என்று மிரட்டலோடு வானொலியில் (2.10.1987)விடுதலைப்புலிகளை திட்டிதீர்த்தது.

வந்தது அமைதியை நிலைநாட்ட.  ஆனால் அமைதியை உருவாக்குவதைவிட , உருவாகாமல் இருக்க என்னன்ன காரண காரியங்கள் தேவையோ அத்தனையும் தொடர்ந்து நடத்திக்கொண்டுருந்தது.

என்ன காரணம்?  பிரபாகரன் ஒரு சக்தி.  இந்தியா மற்றொரு மிகப்பெரிய சக்தி.

ஒரே நோக்கம் இவருக்கு இனி பணிந்து தான் ஆகவேண்டும்.  வேறு வழியில்லை.  அவர்களுக்கு எப்போதும் இந்தியாவிற்கு இலங்கை அடிபணிந்து இருக்க வேண்டும்.  எல்லாம் சரிதான்.

பிரபாகரன் கட்டளையிட்டால் அதிகபட்சம் பத்து நிமிடம்.  முடிவு தெரிந்து விடும்.  ஆனால் இந்தியாவிற்கு?

ராஜீவ் காந்தி முதல் கடைசி இராணுவ வீரன் வரைக்கும் மிகப்பெரிய ஜனநாயக வலைபின்னல்.  இயல்பான வலைபின்னல் என்றாலும் பரவாயில்லை.  பிரதமர், பிரதமரின் தனிச் செயலாளர், மற்ற செயலாளர்கள், ராணுவ செயலாளர்கள், தலைமை தளபதி, அயலுறவுக்கொள்கை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட அத்தனை நபர்கள் என்ற நீண்ட தண்டவாளமாக போய்க்கொண்டே இருக்கிறது.  பிரபாகரன் ராஜீவ் காந்தி என்ற இந்த இரண்டு தண்டவாளங்கள் மட்டும் இருந்து இருக்குமேயானால் நிச்சயம் அன்றே ஒரு முடிவுக்கு வந்து இருக்கும்.

ஆனால் இடையில் ஒருவர்?  அவர் தான் ஜே.என்.தீட்சித்.  மொத்த வலைபின்னல்களையும் தனக்குச் சாதமாக மாற்றியதும், இராணுவ அதிகாரிகளின் பின்னால் சொல்லப்பட்ட பேட்டிகள் வாயிலாக நாம் உணரப்போகும் விசயங்களும் எந்த அளவிற்கு ஒரு தனி மனித ஈகோவால் ஒரு இனம் அழிக்கப்பட காரணமாக இருந்ததை தொடரும் போது உங்களுக்கு புரியும்?

ஒரு வகையில் பார்க்கப்போனால் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவை விட ஜெயவர்த்னேவுடன் அனுசரித்து மொத்த பிரதிநிதிகளை உருவாக்கிவிடலாம் என்ற பிரபாகரன் மனதிற்குள் கொண்டுருந்த நம்பிக்கையும் இந்தியா தவிடுபொடியாக்கிக்கொண்டுந்தது.  ஜெயவர்த்னே மனதில் எத்தனை எதிர்கால திட்டங்கள் இருந்து இருக்குமோ அத்தனை திட்டங்கள் பிரபாகரன் மனதிலும் இருந்து இருக்கத்தான் வேண்டும்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து தொலைத்து விடலாம் என்கிற மனோநிலை.

அமைதி என்கிறார்கள்.  ஆனால் அமைதியைத் தவிர அத்தனை அலங்கோலங்களையும் நடத்திக்கொண்டுருக்கிறார்கள்.  பேசினால், உட்கார்ந்தால், நடந்தால் குற்றம்?  என்ன செய்யவது?  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி அன்றைய தினத்தில் இந்திய நடவடிக்கைகளில் தான் அதிகம் தெரிகிறது.
சமாதானமா கிலோ என்ன விலை? என்று கேட்டுக் கொண்டுருப்பவர் கையை தூக்கிக்கொண்டு முன் வர ஐயோ நீ கையை தூக்கியதும் தவறு என்பதாக இந்தியாவின் நடவடிக்கைகள்?

இது போன்ற காரண காரியங்களை சுருதி சுத்தமாக நிறைவேற்ற தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த PLOTE இயக்கத்தினர். செல்வம் தலைமையில் இருந்த TELO. பத்பநாபா தலைமையில் இருந்தவர்கள், EPRLF போன்றவர்களை மற்றொரு பக்கம் அங்கங்கே களம் இறக்கிக்கொண்டுருந்தார்கள்.

இவர்கள் உருவாக்கிய கிழக்கு மகாண பகுதியில் நடந்த மொத்த கூத்துகளும், தொடக்கத்தில் இவர்கள் போட்ட வம்புச்சண்டைகளில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்து தன்னை தங்களை ஒவ்வொருவரும் உயர்வாக கருதத் தொடங்கினார்கள்.  காரணம் பின்னால் இந்தியா இருந்து கொண்டு கொம்பு சீவிக்கொண்டுருக்கிறது.

விடுதலைப்புலிகளை அழித்து ஒழிக்க உதவிய ஒரே காரணமே தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதியாக கருதிக்கொண்டு மேலும் தங்கள் புனிதப்பணிகளை தொடங்கினர்.  இதன் உச்சக்கட்டம் அப்போது PLOTE அமைப்பில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த மாணிக்கதாசனும், எஸ்.காஸ்ட்ரோவும் கொடுத்த அறிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது.

" விடுதலைப்புலிகள் அமைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வரவில்லையென்றால் நாங்களே அவர்களை கொன்று அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை"

இவர்கள் மூலம் நடந்த சண்டையில் அப்போது ஏறக்குறைய 200 விடுதலைப்புலிகள் இறந்தனர்.  இவர்களிடம் தப்பிக்க ஓடியவர்களை அமைதிப்படை விரட்டி அடித்தது.  தொடர்ச்சியான வன்முறை.  கலவரங்கள், வன்முறைகள்.

தொடக்கத்தில் தொடங்கியது அவர்கள்.  ஆனால் மொத்தத்தையும் இறுதியில் முடித்து வைத்தது பிரபாகரன்.  சூழ்நிலையை உருவாக்கிய அவர்கள்.  ஆனால் சாதகமாக்கிக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள்.

இதன் தொடர்ச்சியாக தினந்தோறும் ஒரு மணி நேரம் "அமைதி நிகழ்ச்சி"  என்று வானொலியில் தினந்தோறும் விடுதலைப்புலிகளை இந்தியா திட்டி தீர்த்தது.

பொறுத்து பார்த்த பிரபாகரன் இறுதியாக " இந்தியா தனது உளவுப்படையை வைத்துக்கொண்டு தேவையில்லாத நபர்களை வளர்த்து அவர்களுக்கு அந்தஸ்த்து கொடுத்து எங்கள் வாழ்வுரிமை போராட்டங்களை முடக்க நிணைக்கிறது"  என்றார்.

ஒப்பந்தப்படி செப்டம்பர் 10ந் தேதி பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  ஆனால் அதைவிட யாழ்பாணம் அமைதிக்கான சூழ்நிலையில் தற்போது இல்லை என்று ஆட்சி அதிகாரத்தை தான் கைப்பற்றும் நோக்கோடு இந்தியா முயற்சிக்க ஒவ்வொன்றும் கோர்த்து முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தியது.

வெறுத்துப்போனவர்களின் திலீபனும் ஒருவர். அவர் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கியதும், அதை இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்ததும், இறுதியில் அவர் இறந்த போது இந்தியாவில் இருந்து சென்ற அமைதிப்படையின் தலையில் ஏழரை பகவான் தன்னுடைய முதல் சுற்றை தொடங்கியிருந்தார்?

திலீபன் ஏன் இறந்தார்?