Wednesday, August 02, 2023

மகளிர் உரிமைத் தொகை

 

“சமூக நீதி” என்ற வார்த்தையை தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை விட அதிகம் உச்சரிக்கும் கட்சி திமுக.   அதுவே பலமுறை திமுக விற்கு பிரச்சனையாகவும் மாறி விடுகிறது. 

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னைப்பார்க்க வந்த திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்த புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

அத்துடன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க வந்த இஸ்லாமிய பெரியவர்களை நிற்க வைத்தபடியே பேசுவதையும் பார்த்தோம். இது தான் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியை உருவாக்குகின்றது.

பலமுறை அவரை புலம்பும் நிலைக்கு ஆளாக்கி வருகிறார்கள்.  இப்போது மற்றொரு திட்டம் பாதியில் நிற்பதை எப்படி எடுத்துச் சொல்வது?

"மகளிர் உரிமைத் தொகை" என்ற வார்த்தையை முதலில் தொடங்கி வைத்தவர் நடிகர் கமல்ஹாசன்.  அவர் தன் 2021 சட்டமன்றத்தேர்தல் வாக்குறுதியில் “வீட்டில் குடும்ப வேலைகள் செய்யும் பெண்களும் பணிபுரியத் தானே செய்கிறார்கள். அவர்களுக்கென்று உரிமைத் தொகை வழங்க வேண்டும்”

என்று சுபயோக சுப தினத்தில் முழங்கினார்.  ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுக கெட்டிக்காரர்கள் ஆச்சே. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். 

திமுக தன் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக “தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்றது.

இது தேர்தலில் பேசு பொருளாக மாறியது.

திமுக ஆட்சிக்கு வந்தது. உரிமைத் தொகை கோப்பு காணாமல் போய்விட்டது. பேச்சு மூச்சே காணோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொன்ன தேர்தல் வாக்குறுதியை, நிறைவேற்றாமல் இருப்பதை புள்ளி விபரத்துடன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கினார். 

திமுக முதல் இரண்டு வருடங்கள் வாயே திறக்கவில்லை. அசைந்து கொடுக்கவில்லை.  திமுக கொண்டு வந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது பெண்கள் மத்தியிலே எதிர்ப்பலையை உருவாக்கியது. பேருந்தில் அமர்ந்தால் பெண்கள் நடந்துநர் பேசும் பேச்சினை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொந்தளிக்க தொடங்கினர்.

பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பெண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் நீண்ட நேரம் காத்திருந்தால் தான் இலவச பயணம் செய்ய முடியும் என்ற நிலையைப் பார்த்து ஏசத் தொடங்கினர்.

பெண்களுக்கு அதிக எரிச்சலை உருவாக்கியது. தொலைக்காட்சி ஊடகங்கள் வராத இது போன்ற மக்களின் ஆதங்கங்கள் சமூக வலைதளங்களில் வரத் தொடங்க திமுக விழித்துக் கொண்டது.  காரணம் 2024 மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருப்பதால் மகளிர் உரிமைத் தொகையை தூசி தட்டத் தொடங்கினர்.

கூடவே அண்ணா பிறந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பதனை ஆறு மாதத்திற்கு முன்பே ஸ்டாலின் அறிவித்து டுவிஸ்ட் வைத்தார். 

இப்போது கலைஞர் நூற்றாண்டு நினைவு மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் மாற்றப்பட்டது. தகுதியான நபர்களுக்கு மட்டும் என்று சுருக்கப்பட்டது.  காரணம் வருடத்திற்கு இந்த திட்டத்திற்கு 7000 கோடி தேவை என்ற எதார்த்தத்தை உணர்ந்த அதிகாரிகள் என்ன செய்வது என்பது அறியாமல் தகவலை முதல்வர் அலுவலகத்திற்கு பாஸ் செய்தனர்.

கூடவே சில நடைமுறை பிரச்சனைகள் உருவானது. 

எப்படி வழங்குவது?

வங்கி மூலமாக கொடுப்பதா?

இல்லை ரேசன் கடையில் மாதப் பொருட்கள் வாங்கும் போது வழங்குவதா?

என்ற குழப்பம் வர தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் நடைமுறைகளை உருவாக்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.  அதாவது இதற்கென தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் நேரிடையாக ரேசன் கடைக்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படும் என்பதாக சொல்கின்றனர்.  ஆனால் இன்னமும் அதிகாரப் பூர்வமாக இந்த தகவல் இன்று வரை வெளியாகவில்லை. 

கடந்த சில நாட்களில் பரபரப்பு செய்தியாக மகளிர் உரிமைத் தொகைக்கு தேவைப்படும் வேறொரு திட்ட நிதியில் இருந்து எடுக்கப்பட உள்ளது என்ற செய்தி மெது மெதுவாக உலா வரத் தொடங்கியது.

காரணம் திமுக அரசு உண்மையிலேயே செய்துள்ள காரியங்கள் இப்போது பொதுவெளியில் அம்பலப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் SCSP நிதியில் இவர்கள் கைவைத்திருப்பதும் திட்டமே தடை செய்யப்படலாம் என்கிற ரீதியில் அறிவாலய வட்டாரமே ஆடிப்போய் உள்ளது. ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களைக் கல்விரீதியாக, பொருளாதார ரீதியாக மேலே கொண்டு வர மோடி அரசு உருவாக்கியுள்ள திட்ட நிதியை அப்படியே மாற்றியுள்ளனர்.

வரப்போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் உபி களுக்கு உள்ளூர கிலியை உருவாக்கியுள்ளது. காரணம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பத்து சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை.

பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்று தங்கள் சுய மரியாதையை பங்கம் செய்த திமுக என்று சமூக ஊடகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேருந்துகளில் நடந்து கொண்டு இருக்கும் தகராறுகளை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்போது அத்துடன் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் என்பதிலும் திமுக செய்த தில்லுமுல்லு என்றதால் திட்டம் முட்டுச் சந்துக்குள் வந்து நிற்கின்றது.

கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களிடம் இருந்து வாங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அடுத்த கட்டம் நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் விண்ணப்படிவம் கொடுக்காத வர்களை காத்திருக்கச் சொல்லி உள்ளனர்.

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் கடந்து தேர்தலின் போது அனைவருக்கும் உண்டு சொல்லிய ஸ்டாலின் தற்போது தகுதியான பெண்களுக்கு மட்டுமே என்று சொன்னதை வைத்து எப்படி பெண்களை தகுதியை தேர்ந்தெடுப்பீங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Monday, July 31, 2023

ஆகஸ்ட் 31 2023 (கற்றதும் பெற்றதும்)

நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் நிறுவனங்களுக்குச் தொழில் செய்து கொண்டு இருக்கும் அனைவரும் நமக்கு துடைத்து எரியப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.  ஒன்று அவர்கள் வைத்திருக்கும் நிறுவனம் ஒரு பெரிய நிறுவனத்திற்குக் கூலி நிறுவனமாக மாற வேண்டும் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு சிறிய நிறுவன முதலாளிகள் வேலைக்குச் செல்ல வேண்டும். தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளை, வாய்ப்புகளை ஒரே கூரையில் கீழ் இருக்கக்கூடிய வகையில் வசதி படைத்தவர்கள் மட்டுமே தற்போது தொழில் செய்ய முடியும். நிலைத்து இருக்க முடியும். லாபம் பார்க்க முடியும். 


Wednesday, July 12, 2023

2008 ஜுலை 3 - 2023 ஜுலை 3 - 15 ஆண்டு எழுத்துப் பயணம்

என் நெருங்கிய நண்பர் சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி போல பலரும் அவ்வப்போது கேட்பது வாடிக்கையாகவே உள்ளது.  இந்த ஜூலை மாதத்தில், 15 ஆண்டுகள் முடிந்து 16 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் எழுதி வைப்பது சிறப்பது என்று கருதுகின்றேன்.

நண்பர் பெரிய பதவியில் இருக்கின்றார். மகள்கள் இருவரையும் சென்னையில் அதிக கட்டணம் உள்ள அரசியல்வாதி நடத்தும் ஒரு பள்ளியில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் அவரும் அவர் மனைவியும் மாதம் தோறும் மருத்துவச் செலவுக்காக குறைந்தபட்சம் 5000 முதல் அதிகபட்சம் அதற்கு மேற்பட்ட தொகை ஒவ்வொரு மாதமும் செலவழிப்பது கட்டாயம் என்கிற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

•••

என்னை விடப் பல மடங்கு புத்திசாலி.  பேசத் தொடங்கினால் ஆதங்கம் முதல் பொறாமை வரைக்கும் மனிதர்களிடம் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் பார்க்க முடியும். இவை அனைத்தும் படிப்படியாக உடலுக்குள் தேங்கி, சிந்தனைகளில் நின்று இறுதியில் ஒவ்வொரு உறுப்புகளையும் தாக்கி கடைசியில் மாதம் தோறும் மருத்துவத்திற்கு என்று ஒரு தொகை செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றது.

உங்களுக்கு மருத்துவச் செலவே இல்லையா? என்று அவர் பலமுறை ஆச்சரியத்துடன் கேட்ட போது என்ன காரணம் என்று நான் யோசித்துப் பார்த்தால் அதற்குப் பின்னால் இந்த வலைபதிவு எழுத்து தான் காரணம் என்றே தோன்றுகின்றது.  ஆதங்கம் அனைத்தையும் நாம் இங்கே இறக்கி வைத்து விட முடிகின்றது.

•••

டாலர் நகரம் முதல் அச்சுப் புத்தகம் 2014 ஜனவரி அன்று வெளியானது.

ஈழம் வந்தவர்களும் வென்றவர்கள் 2023 மே மாதம் வெளியானது.

அடுத்து சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் தமிழக அரசியல் வரலாற்றின் 100 ஆண்டுகள் நிகழ்வுகள் என்ற புத்தகம் இரண்டு புத்தகமாக ஏறக்குறைய 800 முதல் 1000 பக்கங்கள் வரைக்கும் இருக்கும் அளவுக்கு வெளிவரப் போகின்றது.

என் எழுத்துப் பயணம் ஆக்கப்பூர்வமாகவே இருந்துள்ளது. என் எழுத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை வாசித்து அவரவர் வெறுப்பு, விருப்புக்கு அப்பாற்பட்டு என் கடமையை எழுத்துப் பயணத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வந்துள்ளேன் என்ற திருப்தி வந்துள்ளது.

எழுத்து என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதனை பல நண்பர்கள் தெரியப்படுத்தி உள்ளனர்.  

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

தமிழகத்தைத் தன் பேச்சுத் திறமையால் திமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் சிஎன்.அண்ணாதுரை அவர்கள். அவரின் பேச்சுகள் இன்றும் யூ டியுப் ல் உள்ளது.  இப்போது உங்களால் கேட்க முடியாது.  அவர் எழுதிய பல புத்தகங்கள் உள்ளது.  வாசிக்க நேரம் இருந்தால் உங்களால் அந்த காலகட்டத்தை உணர முடியும்.  எழுத்து என்பது வரம்.  பேச்சு என்பது உடனடி மாற்றம். ஆனால் அது அடுத்த நபர் தன் விருப்பப்படி எடுத்துச் சென்று விடுவார்.  அப்படியே ஒவ்வொருவராக மாற்றி அந்தந்த சூழலுக்கு ஏற்ப பேச்சுக் கலை என்பது மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் 200 வருடங்களுக்கு முன்பு பலராலும் எழுதப்பட்ட புத்தங்கள் இன்று பல விதங்களில் பல துறைகளின் மாற்றங்களுக்குக் காரணமாகவும் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தான் ஆட்சியை மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது.  

வரலாறு பொய்க்காது.

நிச்சயம் ஒவ்வொருவர் எழுத்தும் வெவ்வேறு காலத்தில் பேசப்படும்.  ஆனால் ஒன்றே ஒன்று. உங்கள் எழுத்தில் சத்தியம் இருக்க வேண்டும்.

எழுத்தாளர்கள் என்பவர்கள் தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்காக அவர்களை திருப்திப்படுத்துவதற்காக எழுதுபவர் அல்ல. அவருக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ அதனை அப்படி அந்தந்த சமயத்தில் எழுதிக் கொண்டே செல்வார்.

காலம் தீர்மானிக்கும்.