Wednesday, July 12, 2023

2008 ஜுலை 3 - 2023 ஜுலை 3 - 15 ஆண்டு எழுத்துப் பயணம்

என் நெருங்கிய நண்பர் சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி போல பலரும் அவ்வப்போது கேட்பது வாடிக்கையாகவே உள்ளது.  இந்த ஜூலை மாதத்தில், 15 ஆண்டுகள் முடிந்து 16 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் எழுதி வைப்பது சிறப்பது என்று கருதுகின்றேன்.

நண்பர் பெரிய பதவியில் இருக்கின்றார். மகள்கள் இருவரையும் சென்னையில் அதிக கட்டணம் உள்ள அரசியல்வாதி நடத்தும் ஒரு பள்ளியில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் அவரும் அவர் மனைவியும் மாதம் தோறும் மருத்துவச் செலவுக்காக குறைந்தபட்சம் 5000 முதல் அதிகபட்சம் அதற்கு மேற்பட்ட தொகை ஒவ்வொரு மாதமும் செலவழிப்பது கட்டாயம் என்கிற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

•••

என்னை விடப் பல மடங்கு புத்திசாலி.  பேசத் தொடங்கினால் ஆதங்கம் முதல் பொறாமை வரைக்கும் மனிதர்களிடம் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் பார்க்க முடியும். இவை அனைத்தும் படிப்படியாக உடலுக்குள் தேங்கி, சிந்தனைகளில் நின்று இறுதியில் ஒவ்வொரு உறுப்புகளையும் தாக்கி கடைசியில் மாதம் தோறும் மருத்துவத்திற்கு என்று ஒரு தொகை செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றது.

உங்களுக்கு மருத்துவச் செலவே இல்லையா? என்று அவர் பலமுறை ஆச்சரியத்துடன் கேட்ட போது என்ன காரணம் என்று நான் யோசித்துப் பார்த்தால் அதற்குப் பின்னால் இந்த வலைபதிவு எழுத்து தான் காரணம் என்றே தோன்றுகின்றது.  ஆதங்கம் அனைத்தையும் நாம் இங்கே இறக்கி வைத்து விட முடிகின்றது.

•••

டாலர் நகரம் முதல் அச்சுப் புத்தகம் 2014 ஜனவரி அன்று வெளியானது.

ஈழம் வந்தவர்களும் வென்றவர்கள் 2023 மே மாதம் வெளியானது.

அடுத்து சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் தமிழக அரசியல் வரலாற்றின் 100 ஆண்டுகள் நிகழ்வுகள் என்ற புத்தகம் இரண்டு புத்தகமாக ஏறக்குறைய 800 முதல் 1000 பக்கங்கள் வரைக்கும் இருக்கும் அளவுக்கு வெளிவரப் போகின்றது.

என் எழுத்துப் பயணம் ஆக்கப்பூர்வமாகவே இருந்துள்ளது. என் எழுத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை வாசித்து அவரவர் வெறுப்பு, விருப்புக்கு அப்பாற்பட்டு என் கடமையை எழுத்துப் பயணத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வந்துள்ளேன் என்ற திருப்தி வந்துள்ளது.

எழுத்து என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதனை பல நண்பர்கள் தெரியப்படுத்தி உள்ளனர்.  

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

தமிழகத்தைத் தன் பேச்சுத் திறமையால் திமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் சிஎன்.அண்ணாதுரை அவர்கள். அவரின் பேச்சுகள் இன்றும் யூ டியுப் ல் உள்ளது.  இப்போது உங்களால் கேட்க முடியாது.  அவர் எழுதிய பல புத்தகங்கள் உள்ளது.  வாசிக்க நேரம் இருந்தால் உங்களால் அந்த காலகட்டத்தை உணர முடியும்.  எழுத்து என்பது வரம்.  பேச்சு என்பது உடனடி மாற்றம். ஆனால் அது அடுத்த நபர் தன் விருப்பப்படி எடுத்துச் சென்று விடுவார்.  அப்படியே ஒவ்வொருவராக மாற்றி அந்தந்த சூழலுக்கு ஏற்ப பேச்சுக் கலை என்பது மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் 200 வருடங்களுக்கு முன்பு பலராலும் எழுதப்பட்ட புத்தங்கள் இன்று பல விதங்களில் பல துறைகளின் மாற்றங்களுக்குக் காரணமாகவும் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தான் ஆட்சியை மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது.  

வரலாறு பொய்க்காது.

நிச்சயம் ஒவ்வொருவர் எழுத்தும் வெவ்வேறு காலத்தில் பேசப்படும்.  ஆனால் ஒன்றே ஒன்று. உங்கள் எழுத்தில் சத்தியம் இருக்க வேண்டும்.

எழுத்தாளர்கள் என்பவர்கள் தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்காக அவர்களை திருப்திப்படுத்துவதற்காக எழுதுபவர் அல்ல. அவருக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ அதனை அப்படி அந்தந்த சமயத்தில் எழுதிக் கொண்டே செல்வார்.

காலம் தீர்மானிக்கும்.
No comments: