Sunday, July 07, 2019

உங்கள் வீட்டில் இரட்டையர்கள் இருக்கின்றார்களா?



விபரம் தெரிந்த நாள் முதல் இரட்டையர்கள் என்றால் எனக்குப் பெரிய பிரமிப்பு மற்றும் ஆச்சரியம் உருவாகும்.  பள்ளி, கல்லூரி வரைக்கும் என்னுடன் இரட்டையர் எவரும் பயணித்தது இல்லை.  இன்னமும் நெருக்கமான தொடர்பில் கூட இரட்டையர்கள் எவரும் என் வாழ்வில் வந்ததும் இல்லை.

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்ற (மூட) நம்பிக்கையைப் பல வருடங்கள் நம்பி எங்கு சென்றாலும் இரட்டை வாழைப்பழத்தை விருப்பத்துடன் வாங்கி உண்பதுண்டு.

எங்கள் முந்தைய மூன்று தலைமுறைகளில் என் வகையில், மனைவி வகையில் எங்குமே இரட்டையர்கள் இல்லை.  எனக்குத் தெரிந்த உறவுக்கூட்டங்களில் கூட இரட்டையர் இல்லை.  ஆனால் என் நண்பர் சென்னையில் உள்ள அதியமானுக்கு இரட்டைப் பசங்க இருக்கின்றார்கள்.  

நமக்கு இரட்டையர்கள் இருந்தால் எப்படியிருக்கும்? என்று பலமுறை யோசித்ததுண்டு.  நான் தங்கியிருந்த நம்பிக்கை இல்லம் என்ற குடியிருப்பில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தன.  நான் அங்கிருந்த இரண்டு வருட காலத்தில் அவர் இருவரில் யார் மூத்தவர்? என்பதனை கடைசி வரைக்கும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.  அந்த அளவுக்கு அச்சு அசலாக அவர்களின் உருவத் தோற்றம் இருந்தது.

என் மனைவி கர்ப்பமாகி மருத்துவரிடம் முதல் முறையாகச் சோதிக்கச் சென்ற போது இரட்டையராக இருக்கும் போல? என்று பூடகமாகச் சொன்னார்.  அந்த நாள் இன்னமும் என் நினைவில் உள்ளது.

மகள்கள் இருவரும் ஒரு நிமிட இடைவெளியில் திருவண்ணாமலையில் பிறந்தார்கள்.  ஆனால் இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உருவம், புத்திசாலித்தனம், விருப்பங்கள் போன்ற ஒரு துளி கூட தொடர்பில்லை.  நேரேதிர் என்பார்களே? அது போலத்தான் இருக்கின்றார்கள்.

இதில் ஒருவர் மட்டும் என்னைப் போல என்  குடும்ப தலைமுறையினர் குணாதிசயங்கள் போலவே இருக்கின்றார்.  ஆனால் இருவருக்கும் பல பொதுவான குணாதிசயங்கள் உள்ளதைப் பல முறை கவனித்துள்ளேன்.  ஒருவர் தூக்கத்தில் எழும் போது அதே அந்த சமயத்தில் அடுத்தவரும் எழுந்து விடுகின்றார். இதே போலப் பல உதாரணங்கள் உண்டு.  இவர்கள் வளர வளர நானும் மாறினேன்.  என்னை முழுமையாக மாற்றிய பெருமை இவர்களையேச் சேரும்.

ஒருவர் கல்வி ரீதியாக மாவட்ட அளவில் பெருமை சேர்த்து தந்துள்ளார். அசாத்தியமான பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். எங்கள் இருவரின் தலைமுறையில் எவருக்கும் இல்லாத பல புதிரான, ஆச்சரியமான திறமைகள் ஒருவரிடம் உள்ளது.  ஒருவரைப் பார்த்து அப்படியே படம் வரைகின்றார்.  கால்பந்து விளையாட்டில் திறமைசாலியாக இருக்கின்றார்.  கராத்தே சில படிகளைக் கடந்துள்ளார்.  விளையாட்டில் ஆர்வமிருப்பவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பார்கள்.  ஆனால் இவர் இரண்டையும் கடந்து மேலேறிக் கொண்டு இருக்கின்றார்.  ஆனால் மற்றொருவர் குடும்ப குத்து விளக்கு என்ற கோட்டை விட்டு வெளியே வராமல் அடம் பிடித்து அம்மாவிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார். எனக்கு கிடைத்த பஞ்சாயத்துத் தலைவர் பட்டம் வாழ்க்கையைச் சுவராசியமாக்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்று ஞாயிற்றுக் கிழமை.  குடும்பத்துடன் வாய்ப்பிருந்தால் இந்த காணொலிக் காட்சியை முழுமையாகப் பாருங்கள்.



Saturday, July 06, 2019

நீட் 2019 - ஆள் பிடித்து தரும் அதிகாரபூர்வ அமைப்பு

ஒவ்வொரு வருடமும் கல்வி குறித்த மற்றும் முக்கியமான நுழைவுத் தேர்வுகள் மூலம் செல்கின்ற படிப்புகள் பற்றி படித்து விட்டு நாம் எளிதாக கடந்து சென்று விடுகின்றோம்.  அதற்குப் பின்னால் உள்ள அரசியல், அவலங்கள், அலோங்கலங்கள் போன்றவற்றை மறந்தும் விடுகின்றோம்.  

சென்ற முறை பாஜக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் உள்ள முக்கியமான பத்திரிக்கை முதலாளிகள், முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் மோடியைச் சந்தித்தனர்.  

ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியே அறிவிக்கவில்லை.  

வலைதளங்களில் அதனைப் பற்றி பேச்சு வந்ததும் அதன் பிறகே படிப்படியாக ஆமாம். நாங்கள் சென்று சந்தித்தோம் என்று ஒப்புக் கொண்டனர்.

முழுமையாக என்ன பேசினார்கள்? என்ன உடன்பாடு ஏற்பட்டது? யாருக்கு என்ன லாபம்? போன்ற எதுவும் வெளியே வரவில்லை.  ஆனால் ஒரே பத்திரிக்கை முதலாளி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நான் மோடியிடம் தமிழகத்தில் உள்ள நீட் பற்றி கேட்டு நீக்கலாமே? என்றேன் என்றார்.  அதற்கு மோடி அது உச்சநீதிமன்றம் தொடர்புடையது என்று சொல்லிவிட்டார் என்று பேட்டியில் சொல்லியிருந்தார்.

அரசுக்கும் இது தொடர்பில்லை போலும் என்று தான் நானும் நினைத்துக் கொண்டு இருந்தேன்.  

தற்போது அன்புமணி இராமதாஸ் நீட் என்ற தேர்வு குறித்து (அவரும் தொடக்கத்தில் ஆதரவு அளித்தார்) முழு விபரங்களைச் சொன்ன போது பகீர் என்றது.  

உச்சகட்ட அயோக்கியதனம் என்ற முடிவுக்கு வர முடிந்தது.  

எனக்கு இன்னமும் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகம் தவிர எந்தவொரு மாநிலமும் இதனை பொருட்படுத்துவது கூட இல்லை.  

இங்கே கல்லூரிகளின் கட்டமைப்பு, தனியார் ஆதிக்கம் என்று எத்தனை காரணங்கள் அடுக்கினாலும் மத்திய அரசாங்கத்தின் அயோக்கியதனத்தை ஏன் எந்த மாநில அரசும் தமிழகம் போல கேட்பதில்லை என்ற கேள்விக்கு இன்று வரையிலும் பதிலே கிடைக்கவில்லை.

அதில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகள் இங்கே.

+++++++++++
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.

நீட் தேர்வு முடிவுகளை https://www.nta.ac.in/https://www.ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி

கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு.
ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 134 ஆகும்.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 107 ஆகும்.
நீட் மருத்துவ நுழைவு தேர்வில் தேசிய அளவில் 56.50 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம்.
720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்துள்ளார்.

+++++++

2018-ம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பகுப்பாய்வு செய்துள்ளது. அதில் நீட் தேர்வில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்ணும் மைனஸ் மதிப்பெண்ணும் எடுத்த 50 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. 

அவர்களில் 7 பேர் இந்த இரு பாடங்களில் ஏதோ ஒன்றில் சுழியம் (0) மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளனர். 10 பேர் மைனஸ் மதிப்பெண் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்ணுக்கு மைனஸ் 25 மதிப்பெண், அதாவது சுழியத்தைவிட 25 மதிப்பெண் குறைவாகவும், வேதியியலில் 10 மதிப்பெண்ணும் எடுத்த ஒரு மாணவர் உயிரியலில் 185 மதிப்பெண் எடுத்ததால் மொத்தம் 170  மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கிறார்.

மற்றொரு மாணவர் இயற்பியலில் சுழியம் மதிப்பெண், வேதியியலில் 15, உயிரியலில் 85 என மொத்தம் 100 மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவராகியிருக்கிறார். அதாவது, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண், வெறும் 13.88% மதிப்பெண் பெற்றால் மருத்துவம் சேர முடிகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற முடியாது. ஆனால், நீட் தேர்வில் 13%-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால்கூட தேர்ச்சி பெறுவதுடன் மருத்துவப் படிப்பில் சேரவும் முடிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்ல... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையே தொடருகிறது.

2018-ம் ஆண்டில் மட்டுமல்ல... அதற்கு முந்தைய ஆண்டிலும் இதே நிலைமைதான். 2017-ம் ஆண்டில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்ட இரு முக்கியக் காரணங்கள், நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும், மருத்துவக் கல்வி வணிகமாவது தடுக்கப்படும் என்பதுதான். நீட் தேர்வில் 13.88% மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது என்பதிலிருந்தே அந்த வாதம் அபத்தமானது என்பது உறுதியாகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதையும் தடுக்க முடியவில்லை என்பதும் 100% உண்மையாகும். இதை நிரூபிப்பதற்கும் ஏராளமான புள்ளி விபரங்களை எடுத்துக்காட்ட முடியும்.

நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும். 

ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்துக்கு அதிகமான தரவரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுதான். நீட் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக்கட்ட முடியாமல் விலகிக்கொள்ள, கோடிகளை குவித்து வைத்திருக்கும் பலர் 15 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர். 

மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவப் படிப்புக்குக் கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது.

Friday, July 05, 2019

உங்கள் பெயர் என்ன?


பா.ஜ.க ஆட்சியில் இறந்து போன சமஸ்கிருத மொழி மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்ற அரசியல் கட்சிகள் கதறுகின்றார்கள்?

அது உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் நம் நிஜ வாழ்க்கை எப்படியுள்ளது?

+++++

சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகளின் பெயர்களைக் கடந்த சில வருடங்களாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதே இல்லை. கேட்கும் போதே நம்மை அறியாமல் மிகப் பெரிய கோபம் வந்து தொலைத்து விடுகின்றது. அது அடுத்தடுத்த பஞ்சாயத்துக்களையும் கொண்டு வந்து விடுகின்றது. குழந்தைகள் மேல் தவறில்லை. பைத்தியக்கார அப்பாவும் அம்மாவும் எவனோ சொன்னான் என்று புரியாத மொழி, அர்த்தம் இல்லாத குடும்பத்தோடு தொடர்பு இல்லாத பெயர்களை வைத்து நாரசாரமாக்கி விடுகின்றனர்.

நட்சத்திரப் பொருத்தம் என்ற பெயரில் அவர்கள் வைக்கும் பெயர்களே அவர்களால் உச்சரிக்க முடியுமா? என்று யோசித்ததும் உண்டு. நிச்சயம் அப்படியும் நல்ல பெயர்கள் வைக்க முடியும். ஆனால் நாகரிகம் என்ற பெயரில் இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து இங்கே வந்து பணிபுரியும் ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு அருகே இருக்கின்றார்கள். அப்பாவும், அம்மாவும் திராவிடக் கருப்பு. மகன் உருண்டு திரண்டு நவாப்பழம் போலப் பார்க்கக் கவர்ச்சியாக அழகாக இருப்பான். இப்போது வயது மூன்று ஆகின்றது. அவன் பெயரைக் கேட்ட போது தூக்கிவாரிப் போட்டது.

நிஷந்தன் (இந்த ஷ தான் போட வேண்டுமாம். ச என்று எழுதக்கூடாதாம்) என்று பெயர் வைத்திருந்தார்கள். நான் அவன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருக்கும் போதெல்லாம் அவனைப் பார்த்து வாடா கருப்பையா என்று தொடர்ந்து அழைக்க அம்மா என்னுடன் சண்டைக்கு வந்து விட்டார். எவ்வளவு அழகான பெயர் வைத்துள்ளேன். ஏன் இப்படி மோசமான பெயர் சொல்லி அழைக்கின்றீர்கள் என்று சண்டைக்கு வந்து விட்டார்.

அப்படியும் விடாமல் நான் தொடர்ந்து கருப்பு கருப்பு என்றழைக்க இப்போது என் வீட்டுப் பக்கமே பையனை அனுப்புவதே இல்லை.

++++++++++

மணா  என்பவர் இது குறித்து எழுதியிருந்தார்.

துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெயர் மரபு ! -

தமிழகத்தில் உள்ள எந்தத் துவக்கப் பள்ளியிலும் தற்போது வருகைப்பதிவு எடுக்கும்போது மாணவ, மாணவிகளின் பெயர்களைக் கவனித்துப் பாருங்கள்.
பலருடைய பெயர் தமிழ்ப் பெயராகவே இருக்காது.

பெரும்பாலும் நியூமரலாஜி அடிப்படையிலோ, ஜோதிடர்கள் சொன்னபடியோ பெயர்கள் வைக்கப்பட்டிருக்கலாம். பிடித்தமான திரைப்பட நடிகர், நடிகைகள் அல்லது கிரிக்கெட் வீரர்களின் பெயர்களோ சூட்டப்பட்டிருக்கலாம்.

பிரிஜேஷ், தோஷிக், ரித்திக் – என்று இந்த ரகத்தில் பலருடைய பெயர்கள். பெண் குழந்தைகளின் பெயர்களும் இதே ரகம்.

இதென்ன… பெயர்கள் சூட்டப்படுவதை எல்லாம் தமிழ் மரபோடு இணைந்து பார்க்க வேண்டுமா என்று நம்மில் சிலர் பொறுப்பாகக் கேட்கலாம்.

சென்ற தலைமுறையில் சூட்டப்பட்ட கணேஷ், ராஜேஷ், முருகேஷ், குமார் இத்யாதி பெயர்களும் சரி,

அதற்கு முந்தைய தலைமுறையில் சூட்டப்பட்ட கருப்பையா, வெள்ளைச்சாமி, நடராஜன், பாண்டியன், முருகய்யா, கிருஷ்ணசாமி, ராமசாமி ரகப் பெயர்களும் சரி,

அப்போது இவை சூட்டப்பட்டதையும், தற்போது ஒரு பாய்ச்சலைப் போல பெயர்கள் சூட்டப்படுவதில் நேர்ந்த மாற்றத்தையும் கவனித்தால் தான் – பல விஷயங்கள் புரியும்.

தமிழருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான மரபு இருப்பதைப் போல பெயர் சூட்டப்பட்டு வந்ததற்கும் ஒரு மரபு இருக்கிறது.

சங்க காலத்தில் பெயர் வைப்பதில் குடும்ப மரபிற்குப் பங்கிருந்திருக்கிறது. பாட்டன், தாத்தா பெயரை பேரனுக்கு(பெயரனுக்கு)ச் சூட்டுவது பல குடும்பங்களில் – அதுவும் கூட்டுக்குடும்பச் சூழலில் மாறா வழக்கமாகவே இருந்திருக்கிறது. பாட்டியின் பெயரைப் பேத்திக்குச் சூட்டுவதும் அதே மாதிரி தொடர்ந்திருக்கிறது.

வழிபடும் தெய்வத்திற்குப் பங்கிருந்திருக்கிறது. பெருந்தெய்வத்தை வழிபடுகிறவர்கள் பெருமாள், கிருஷ்ணன், ராமன், கணேசன் என அந்தந்த சாமிகளின் பெயர்களை வைத்துக் கொள்ள, கிராமத்துக் குல சாமிகளை வழிபட்டவர்கள் மதுரைவீரன், முனியாண்டி, பாண்டி, கருப்பசாமி, பகவதி, இசக்கி, காளியம்மா என்று பெயர் சூட்டுவது நடந்தது.

இதில் சாதிய அடுக்கிற்கும் பங்கிருந்திருக்கிறது. குறிப்பிட்ட சாதியினர் மீது தீண்டாமையின் தீவிரம் அடர்ந்திருந்த காலகட்டத்தில் சில பெயர்களை அந்த சமூகத்தினர் சூட்டக்கூடாது என்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

செருப்பில்லாத பாதங்களில் மண் ஒட்டியிருப்பதைப் போலவே சூட்டப்பட்ட பெயர்களிலும் மதம், சாதியத்தின் அடையாளங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அதையொட்டிய பெருமிதங்களும், பெருமைகளும், சிறுமைகளும், தலைகுனிவுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் இதுவரை ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரை நடந்திருக்கிற தொல்லியல் ஆய்வுகளில் வேடுவர், ஆயர், உமணர் போன்ற பெயர்கள் கிடைத்திருக்கின்றன.

கபிலன், கம்பன், இளங்கோ, கணியன் பூங்குன்றன், திருவள்ளுவன், தொல்காப்பியன், அவ்வை, கணியன் பூங்குன்றன், பிசிராந்தையார் போன்ற படைப்பாளுமையின் பெயர்கள் தெரியவந்திருக்கின்றன.

ராசராசசோழன், ராசேந்திரசோழன், மகேந்திர பல்லவன், கரிகால்சோழன், குந்தவை, மங்கம்மா, வேலுநாச்சி, மீனாட்சி, மருதுபாண்டியர், கட்டபொம்மன், அழகு முத்து, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், சின்னமலை என்று ஆட்சி செலுத்தியவர்களின் பெயர்கள் தமிழக வரலாற்றில் பதிந்திருக்கின்றன.

இலங்கையில் செகராசன், குலசேகர சிங்கை ஆரியன், சங்கிலி என்று ஆட்சி செலுத்தியவர்களின் பெயர்கள் பதிவாகியிருக்கின்றன.

தமிழர்களின் நீண்ட கால பெயர் மரபில் இங்கே குறிப்பிட்டிருப்பதெல்லாம் ஒரு துளி மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை களப்பிரர், பல்லவர், சேர, சோழ, பாண்டியர், மராட்டியர், நாயக்கர்கள், போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்று ஒவ்வொரு பிரிவின் ஆதிக்கம் அதிகமாகும்போது பெயர்களிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டிருக்கிறது.

அதைப்போல ஆங்கிலேயரும் தங்கள் பெயரைத் தமிழ் மண்ணுக்கேற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெஸ்கி வீரமாமுனிவரானதும் அப்படித்தான்.
தமிழர்கள் இந்துக்களாக இருந்தவரை அதுவரை அவர்கள் சார்ந்திருந்த சாதியக் கட்டுப்பாடுகள் யாவும் அவர்கள் மதம் மாறிய பிறகு மாறின. கிறித்துவத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ மாறியவர்கள் பெயரளவிலும் விடுதலை பெற்றார்கள்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து இளைய தலைமுறையினர் அதில் பங்கெடுத்த பின்னணியில்–பெயர் சூட்டுவதில் இருந்த குடும்ப மரபு சற்றே மாறியது.

அதிலும் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் தலையெடுத்த பிறகு தனித்தமிழில் பெயர்களைச் சூட்டுகிற உணர்வு உருவாகி-அன்பழகன், நெடுஞ்செழியன், மறைமலை, சிற்றரசு என்று பெயர்கள் சூட்டப்படுவது புது மரபானது.

திரைப்படத் தாக்கமும் வெளிப்பட்டது. அறுபதுகளுக்கு முன்னால் ‘பராசக்தி’ படம் வெளியானதும் குணசேகரன், தனசேகரன், ஞான சேகரன் என்கிற பெயர்களைச் சூட்டுவது பல தமிழர் குடும்பங்களில் நடந்தது.

நல்லதம்பி, ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு ‘மணி மாறன்’ என்று பெயரை வைத்தார்கள்.

வைஜெயந்திமாலா, சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, காஞ்சனா, தேவிகா, விஜயா, சுசீலா என்று பெண்களின் பெயர்களில் திரைப்படத் தாக்கம் பகிரங்கப்பட்டு இன்று வரை கால மாற்றத்திற்கேற்றபடி நவீனப்பட்டுத் தொடர்கிறது.

நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’ நாவலை ரசித்தவர்கள் ‘அரவிந்தன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரை வைத்தார்கள். தி.ஜானகிராமனை ரசித்தவர்கள் ‘யமுனா’ என்று சூட்டினார்கள்.

லா.ச.ரா வை ரசித்தவர் ஜனனி, அபிதா என்றும் சூட்டினார்கள். இளையராஜா பிரபலமானபோது அவருடைய பெயரை வைத்தவர்கள் தமிழகத்தில் இருந்தார்கள்.

ஆக-பெயர் சூட்டும் மரபுக்கு உதவிக்கரம் நீட்டியவை – நமது திரைப்படங்களும், இலக்கியங்களும், அரசியல் சூழலும் தான்.

தனித்தமிழில் பெயர் சூட்டுவதற்கென்று தனி நூல்கள் கூட உருவாயின. தமிழ் வளர்ச்சிக்கழகம் தமிழ்ப்பெயர்க் கையேடு என்றே தனியாக வெளியிட்டது. ஆயிரக்கணக்கான பெயர்கள் அதில் முன் வைக்கப்பட்டன.

யாழினி, இளமதி, கயல்விழி, கனிமொழி, மலர்விழி, வளர்மதி, வெண்ணிலா என்று சாதியம் ஒட்டாத தமிழ்ப்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதற்கும் ஓரளவு விளைவு இருந்ததை அப்போது உணர முடிந்தது.

முருகன், உமா, வள்ளி என்று புராணப்பெயர்கள் சூட்டப்பட்டன. அவ்வை போன்ற பெயர்கள் குமரி மாவட்டத்தில் அதிகமாக சூட்டப்பட்டன.

பாண்டியன் என்கிற பெயர் தென் தமிழகத்தில் பலருக்குச் சூட்டப்பட்டது. விருமாண்டி போன்ற பெயர்கள் மதுரை, தேனி பகுதிகளில் வைக்கப்பட்டன. அண்ணாமலை, நாச்சியார் என்கிற பெயர்கள் செட்டிநாட்டு பகுதிகளில் அதிகம் புழங்கின.

இவை தவிர சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, நேரு, லஜபதிராய் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. மொழிப்போராட்டத் தியாகிகளான தாளமுத்து, நடராசன், ராசேந்திரன் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன.

பொதுவுடமை இயக்க உணர்வில் ஸ்டாலின், லெனின், ஜீவா போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழ் என்று மொழியின் அடையாளமாகப் பெயர் சூட்டப்படுவதெல்லாம் நடந்தது.

பழனி, திருப்பதி போன்ற பக்தியோடு தொடர்புடைய பெயர்கள் சூட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது நடிகவேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய மகளுக்கு வைத்த பெயர் ‘ரஷ்யா’.

குடும்பக் கட்டுப்பாடு அறிமுகமாகாத காலத்தில் பெண் குழந்தைகளே அடுத்தடுத்து பிறந்து கொண்டிருந்தால் ‘போதும் பொண்ணு’ என்றும், கிறித்துவக் குடும்பத்தில் ‘லிம்டன்’ என்று பெயர் சூட்டிக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதும் நடந்தது.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிக் கொடுத்துப் பெரும் நிலப்பரப்பையே செழிக்க வைத்த ஆங்கிலேய அதிகாரியான பென்னிகுக்கின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து நன்றி செலுத்தியவர்கள் மதுரை மாவட்டத்து மக்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிதித்துறைத் தளத்தில் முன்வைக்கப்பட்ட தமிழ்ப்பெயர்கள் மட்டுமே 46 ஆயிரம்.

கோடிக்கணக்கான தமிழர்கள் உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற நிலையில் தமிழருக்கான அடையாளங்களைச் சிறிது சிறிதாக இழந்து வருகிற நிலையில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதை முன்பு முக்கியமாக முன்வைத்தன தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும்.

தன்னுடைய தந்தையின் பெயரையே தூயதமிழில் மாற்றினார் தொல்.திருமாவளவன். ஆனால் மதவாதச்சூழல் அதிகரித்து, சமஸ்கிருத மயமான பெயர்களின் மீதான மயக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

பலவற்றில் தொலைகிற அடையாளம் பெயர் சூட்டலிலும் மறைந்து கொண்டிருக்கிறது.

இதனால் மத, சாதிய எல்லைகளை மீறிய இன்னொரு புதுவெளிக்கு இப்போதைய தலைமுறையைப் பெயர்கள் அழைத்துச் செல்கின்றன என்று சிலர் வாதாடினாலும், உலகமயமாக்கலின் ஒருபகுதியைப் போல, தமிழ்ப்பெயர் மரபும் குலைந்து மாறிக் கொண்டிருக்கிறது.

சாதியை அடையாளப்படுத்தும் பெயர்கள் தேவையில்லை என்று வைத்துக் கொண்டாலும், தமிழை அடையாளப்படுத்தும் பெயர்களை நீடிக்கச் செய்யலாமே!

“பெயர் என்ன, ஒரு அடையாளம் தானே! அது எப்படி இருந்தால் என்ன?’’ –என்கிற குரல்கள் கேட்டாலும், அப்படிக் கேட்பவர்களுக்கு என்ன பதில் அளிப்பது?

‘சிறையிலும், மருத்துவமனையிலும் வெறும் எண்களே நமது அடையாளங்களாக மாறுவதைப் போலவா?’- என்று பதிலுக்கு எதிர்க்கேள்வி கேட்கலாம்.

அந்தக் கேள்வியில் நமது தொன்ம மொழியின் கனத்த மௌனமும் பொதிந்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.