Friday, January 26, 2018

நற்சிந்தனை மனிதர்


சில வருடங்களுக்கு முன்பு வலைபதிவில் நாடார் சமூக வாழ்க்கை வரலாறு குறித்துத் தொடர் பதிவாக எழுதினேன். எழுதும் முன்பு அவர்கள் சார்ந்த வரலாற்றை அறியும் பொருட்டுப் பல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு அமைந்தது. இன்று வரையிலும் அந்தப் பழைய பதிவுகளை யாரோ சிலர் தொடர்ந்து வந்து படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எந்தத் தலைப்பை யார் யார் எங்கிருந்து படிக்கின்றார்கள் என்ற வசதி வலைபதிவில் உண்டு.

நாடார் சமூகத்தின் இன ஒற்றுமை ஆச்சரியமளித்தது. ஒடுக்கப்பட்டு இருந்த அந்தச் சமூகம் இன்று பொருளாதார நிலையில் உச்ச நிலையில் அடைந்து ஆட்சி, அதிகாரம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் கோலோச்சுகின்றார்கள். சாதி என்ற ஒற்றைப்புள்ளி அவர்களை இணைத்து ஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், முழுமையாக முன்னேற முடியாமல் தடுமாறுகின்றார்கள். அரசியல்வாதிகளின் சமயோசித புத்தி ஒரு பக்கம் இருந்தாலும் பணமும், பதவியும் அவர்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்குக் கிடைத்தாலும் அது அடுத்தடுத்து அந்தச் சமூகம் சார்ந்த மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. கிடைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முற்படுகின்றார்கள். தங்களைப் பார்ப்பனியமாக மாற்றிக் கொள்ளத்தான் நினைக்கின்றார்கள். அவர்கள் இனம் சார்ந்த சக உறவுகளைக் கூடப் பொருட்டாக மதிப்பதில்லை. இது தான் நிதர்சனம். 

ஒரு சமூகம் முன்னேற அரசாங்கம், அதன் கொள்கைகள், அரசியல்வாதிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் தயார் படுத்திக் கொள்கின்றார்கள் என்ற சமூக நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் சோகம் தான் மிஞ்சும். அரசியல்வாதிகள் உருவாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும், விலைக்குச் சோரம் போன தலைவர்களும், கிடைத்த வாய்ப்புகளைத் தங்கள் சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டவர்களும் தான் அதிகம். 

ஆனாலும் நம்பிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய இந்தியா முழுக்க 40 சதவிகிதத்திற்கு மேலே உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை ஒப்பு நோகையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அரசாங்க சலுகைகளைப் பெற்ற குடும்பத்தின் வாரிசுகளே அடுத்தடுத்து வளர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைக்கோடி கிராமவாசிகள் இன்னமும் மனித கழிவுகளை அள்ளுவது முதல் அடிமை வாழ்க்கை முறையைத் தான் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சுய சிந்தனைகளை அடகு வைத்து, தன் நிலையை உணரத் தெரியாமல், கிடைத்த வாய்ப்புகள் தனக்கு அமையாவிட்டாலும் தன் சந்ததியினருக்காகத் தங்களைத் தியாக உருவாக மாற்றிக் கொண்டு வளர்க்க விரும்புபவர்கள் மிக மிகக் குறைவான சதவிகிதமே. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் இன்னமும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தான். 

வட்டத்தை உடைத்து வெளியே வந்தவர்கள் தங்கள் வந்த பாதையை மறக்கவே விரும்புகின்றார்கள். வர விரும்புவர்களை அரசியல்வாதிகள் அடைத்து வைக்கவே விரும்புகின்றார்கள். இது போன்ற பல காரணங்களை அலசாமல் அவர்கள் மேல் பரிதாபப்பட்டு அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள், தந்தை பெரியார் கொள்கைகள், திருமாவளவன் என்று புகழ்பாடி இன்னமும் முக நூலில் நற்சிந்தனை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் என் பார்வையில் பரிதாப ஜீவன்களாகவே தெரிகின்றார்கள். 

இந்த வருடத்தின் மத்திம பகுதியில் இருந்து தான் இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தெளிவான சிந்தனை. எல்லாமே நேர்மறை சிந்தனைகள். அளவு கடந்த நம்பிக்கைகள். இராணுவத்தின் பணியாற்றியதால் சமூக அக்கறை கூடுதலாகவே உள்ளது. எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தை அழகாக எடுத்து வைக்கும் பாங்கு, என்று எல்லாவிதங்களிலும் இவர் எழுத்துப் படிக்கத் தூண்டுவதாகவே உள்ளது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது. 

பவர் புரோக்கர் என்றொரு சாதி அரசியலில் உள்ளது. அதில் முக்கியமானவர் திக வீரமணி. கலைஞர் நம்பி வீணாப் போனவர்களில் இவரும் ஒருவர். கலைஞருக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகளை அவ்வப்போது காலி செய்வதில் வல்லவர். ஏ1 குற்றவாளியைச் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்துச் சிலாகித்தவரை நண்பர் பெருமையாக எழுதும் போது இவர் விக்ரமன் படத்திற்கு வசனம் எழுதாமல் இருந்து விட்டாரோ? என்று நினைத்துக் கொள்வதுண்டு. 

இந்த வருடம் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்களில் இவரும் ஒருவர். நன்றியும், வாழ்த்துகளும் அன்பும். Poovannan Ganapathy

Thursday, January 25, 2018

மருத்துவ சிந்தனையாளர்



முகநூல் பதிவுகள் வலை பதிவுகளைத் தின்று செரித்து விட்டது என்று புலம்பலை இந்த வருடம் முழுக்கப் பல இடங்களில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது உண்மையல்ல. வாசிக்க நேரம் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்களுக்கு உண்டான களமே வலைபதிவுகள். வாசிக்காமல் போகின்றவர்களுக்குத் தான் இழப்பே தவிர எழுதுகின்றவர்களின் சிந்தனை மேன்மேலும் கூர்மையாகிக் கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனால் முகநூல் பதிவுகளிலும் காலமாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பலரும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல், மதம், சாதி இந்த மூன்றும் தான் இந்தத் தளத்தில் பேசு பொருளாக உள்ளது. அவசர கதியாக வாசிக்க விரும்புவர்களுக்கு, அலைபேசி வாயிலாக உண்டான வாசிப்புகளுக்கு ஈர்ப்பும் இதில் தான் உள்ளது என்பதனை உணர முடிந்தாலும் அவையெல்லாம் கூச்சலும் குழப்பமும் சேர்ந்து புரிதலில் குறைபாடுகளை உருவாக்கி வன்மம் மேலும் வன்மத்தையே வளர்த்துக் கொண்டிருக்கின்றது. 

நான் 2017 வருடம் முழுக்க ஃபேஸ்புக் என்ற முகநூல் தளத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். என்ன கற்றுக் கொண்டேன் என்றால் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகின்றது. அரை மணியில் ஐம்பது செய்திகள், விரைவுச் செய்திகள் போலக் கண் இமைக்கும் நேரத்தில் வாசித்த அனைத்தும் கடந்து மறந்து போய்விடுகின்றது.

ஆனாலும் முகநூல் தளத்தில் வரும் கருத்துக்களை வாசிப்பது சுகமாக உள்ளது. காரணம் புதுப்புது நபர்கள். புதுப்புது சிந்தனைகள். புதிய துறைகள். நாம் எண்ணிப் பார்க்க முடியாத விசயங்கள். இதுவரையிலும் அம்பலத்திற்கு வராத, அந்த நிமிடம் வரைக்கும் ஊடகத்தில் கூட வராத செய்திகள் போன்றவற்றை உடனே நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

சிந்தனையின் தாக்கத்தைக் கீறிக்கூடப் பார்க்கவில்லை. கட்சி சார்பு, மத வெறி, சாதி குறித்த உரையாடல்கள் அனைத்தும் அவரவர் சார்பாக இங்கே எடுத்து வைத்தாலும் எடுத்து வைத்த கருத்தில் துளி கூட உண்மை இல்லாமல் எதிர்க்கருத்து கொண்டவர்களின் சிந்தனையை அதில் உள்ள இருட்டை வெளிச்சமாக்குபவர்கள் வெகு சிலரே. அந்தச் சிலரை இந்த வருடம் இந்த வருடம் இந்தத் தளத்தில் அடையாளம் கண்டேன். 

1. ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி மதம், சாதி இல்லாத எதிர்கால வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றார். 

2. ஒருவர் பசியைப் போக்குவது முக்கியம். தொழில் நுட்பத்தை அதன் வளர்ச்சியைப் புறக்கணிக்காதீர் என்கிறார். 

3. ஒருவர் தான் இருக்கும் மதம் இது தான். இதையும் தாண்டி என்னால் யோசிக்க முடியும். உண்மைகளை உரக்கச் சொல்ல முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றார். 

4. ஒருவர் என் வலைபதிவுகள், மின் நூல்கள் வாசித்து, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, தான் பணிபுரியும் சூழலில் தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே எழுதக் கற்றுக் கொண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு எழுத்தாளராக மாறியுள்ளார். 

5. சில பத்திரிக்கைகள் வாங்கி வாசித்த பின்பு அதில் போட்டுள்ள விலைக்கு உண்டான மதிப்பு இல்லையே? என்று மனம் வருந்தும். ஆனால் இவரின் கட்டுரைகளுக்காக மட்டும் இன்று வரையிலும் வாங்கிக் கொண்டிருக்கின்றேன். இவர் எழுதிய எழுத்துக்கள் மட்டுமல்ல. இவர் பேசி பதிவு செய்த பேச்சு உரைகளை இந்த வருடம் முழுக்க இரவு நேரங்களில் எத்தனை முறைகள் கேட்டிருப்பேன் என்ற கணக்கே தெரியாத அளவிற்கு அத்தனை முறை கேட்டுள்ளேன். பல நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளேன். 

6. ஒருவர் எனக்கு உயர் அதிகாரியாக இருந்தார். நான் இப்போது இருக்கும் உயர் பதவியில் இவருக்கும் பங்குண்டு. இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். போட்டி , பொறாமை நிறைந்த வெளியே சொல்ல முடியாத அசிங்கங்கள் நிறைந்த நான் இருக்கும் தொழில் வாழ்க்கையில் என் எழுத்துப் பக்கம் எவரையும் கொண்டு வந்து சேர்க்க விரும்புவதில்லை. ஆனால் இவர் எனக்கு வாசகராக இருக்கின்றார். என் நல்வாழ்க்கை குறித்த அக்கறை கொண்டவராக இருக்கின்றார். வாழ் நாள் முழுக்க நேர்மை என்ற வார்த்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

7. என் வாழ்நாள் முழுக்க என் நலனைக் கருத்தில் கொண்டவர். வாசகராக அறிமுகமாகி என் ஏற்றத் தாழ்வுகளில் பங்கெடுத்து இன்னமும் என்னை செதுக்கிக் கொண்டவர். இருவரின் எண்ணமும் வேறு. கொள்கைகளும் வேறு. சொல்லப் போனால் கடந்த சில வருடங்களில் என் தனிப்பட்ட கொள்கைகள் கரைந்து அவர் கடைபிடிக்கும் கொள்கைகள், எண்ணங்கள் தான் என்னை இப்போது செதுக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல. 

8. இவர் நினைத்து இருந்தால் இவர் பணிபுரிந்த சூழலில், இவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் மூலம் ஊடகத்துறையில் உச்ச பதவியை அடைந்து இருக்க முடியும். ஆனால் கொள்கை அதிலும் முடிந்தவரைக்கும் நேர்மை. உணர்ந்ததை உலகிற்குச் சொல்லியே தீருவேன் என்ற பிடிவாதம் என்ற வாழ்க்கை ஏராளமான இன்னல்களை உருவாக்கிய போதும் இன்னமும் என்னை நான் இழக்க மாட்டேன் என்று இவர் வாழும் வாழ்க்கை என் வாழ்க்கையின் சுவடுகள் போலவே உள்ளது. 

9. எதிரிகளுக்குச் சமமாக ஆதரிப்பவர்கள் அதிகம் உள்ளவர்களில் இவர் தொடர்ந்து இயங்குவது என்னளவில் இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. இவரின் எழுத்துக்கள் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்ந்து முடிந்த அரசியல்வாதிகளின் யோக்கியதை என்னவாக இருந்தது? என்பதனை நிச்சயம் உணர்த்தக்கூடியது. 

10. ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். ஆனால் இவர் எழுத்து இந்த வருடம் முழுக்க அதிக ஆச்சரியத்தை, உத்வேகத்தை, இதுவரையிலும் யோசிக்க முடியாத பல பரிணாமங்களைத் தந்து உதவியுள்ளார். 

முன் குறிப்பு கொடுத்துள்ள இவர்களைப் பற்றி எழுதுகின்றேன். 

தொடர்ந்து எழுதுவேன். 

#2017 கற்றதும் பெற்றதும்   (28/01/2017)

++++++++

நான் பார்த்த தமிழாசிரியர்கள் நல்ல கதை சொல்லியாக இருந்துள்ளார்கள். பாடத்தைப் படிக்கத் தேவையில்லாத அளவிற்கு ஈடுபாட்டுடன் பாடம் நடத்தி இருக்கின்றார்கள். ஆனால் கல்லூரி வரைக்கும் நான் பார்த்த ஒரு ஆசிரியர் கூட எழுத்தாளர்களாக மாறிப் பார்த்தது இல்லை. ஆனால் இன்று அனைத்துத் துறைகளில் இருந்தும் எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். அது அவர்கள் சார்ந்த துறைகளை மட்டுமல்லாது அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் தொடங்கி ஏனைய பிற துறைகளிலும் தங்கள் திறமைகளைக் காட்டுகின்றார்கள். 

அதில் இந்த ஆண்டு முக்கியமானவராக இவர் என் பார்வையில், வாசிப்பில் எனக்கு முதன்மையானவராக இருக்கின்றார். 

மருத்துவராக உள்ளார். தினமும் பல பதிவுகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருப்பார். இரவில் வந்து இவர் பக்கம் சென்று நிதானமாக வாசிப்பதுண்டு. 
சிலரின் எழுத்துக்கள் நம் கண்களைத் திறக்கக்கூடியது. இவர் எழுதிய பலதும் நான் யோசித்துப் பார்க்காத பல விசயங்களைக் கொண்டதாக இருந்தது. 

ரு முறை இவர் எழுதிய ஒருவரின் ஈகோவை சீண்டிப் பார்க்காதவரைக்கும் நம் வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்கிற ரீதியில் எழுதிய எழுத்துக்கள், அது சார்ந்த சிந்தனைகள் பல நாட்கள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. 

உழைத்துக் கொண்டேயிருந்தாலும் எல்லோருக்கும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. இதன் மூலக்கூறுகளைப் புதுவிதமாக அலசுகின்றார். சுவராசியமாக உள்ளது. எல்லோருக்கும் அதன் காரணங்கள் தெரிவதில்லை. ஆனால் இவர் அரசியல், திரைப்படம், சாதி, சமூகம் போன்ற பல துறைகளைப் பற்றி எழுதுகின்றார். ஒவ்வொன்றும் முத்துக்கள். 

ரே ஒரு குறை என்னவென்றால் துணுக்குச் செய்திகள் போலவே எழுதித் தள்ளி விடுகின்றார். அடுத்தவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற மெனக்கெடல் அதிகம் உள்ளது. எழுதுபவன் எல்லாச் சமயங்களிலும் மார்க்கெட்டிங் விசயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா? மருத்துவரே? 

வாசித்து யோசிக்கத் தெரிந்தவனுக்கு உங்கள் எழுத்துக்கள் போய்ச் சேரட்டும். நீங்கள் எழுத்துக்களைச் சாரம்சத்தைக் கூர்மைப்படுத்துங்கள். 

இந்த வருடத்தில் இவர் எழுத்து எனக்கு முக்கியமானது. என் வாசிப்பில் முதன்மையாக இருந்தது. 

நன்றி மருத்துவரே. வாழ்த்துகள். Dinesh Kumar 





Thursday, January 18, 2018

கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும்,


படிப்பு முக்கியம்
நல்ல கல்வி நிலையத்தில் இடம் கிடைப்பது முக்கியம்
நல்ல மதிப்பெண்கள் முக்கியம்
நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் முக்கியம்.

ஆனால் அதற்கெல்லாம் முன்னால் குழந்தைகள் சந்தோஷமாக மிக முக்கியமாக உயிரோடு இருப்பது மிக மிக முக்கியம். 

அவர்களோடு பேசுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள்மீது திணிக்காதீர்கள். அவர்கள் கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும், அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் 

Give them your love, not your thoughts

 Ramachandran B K 



கடந்த மூன்றாண்டுகளாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு நான் செல்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளேன். காரணம் பள்ளியில் உருவாகும் மாற்றங்கள், மாறிக் கொண்டே இருக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தின் முறைகள் என்று எல்லாமே என் எண்ணத்திற்கு வினோதமாகவே தெரிந்தது. எப்போதும் மனித மனம் புதிய மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்காது. 

நான் மாற்றங்களின் காதலன். ஆனால் மனைவி மாறாத வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் என் விருப்பங்களை வெறுப்பது போல நடித்தாலும் அதனைக் குழந்தைகள் விசயத்தில் மட்டும் செயல்படுத்த் தொடங்கி விடுவார். 

சமூகம், அரசியல் போன்ற தளங்களில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. அதன் பலன் யாருக்குச் செல்கின்றது? என்பதனையும் கண்காணிப்பதுண்டு. அப்படித்தான் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சியைப் பார்க்கின்றேன். அதிசியதக்க வளர்ச்சி. ஆனால் அதன் பலன்? 

நேற்று முழுவதும் தொழிற்சாலை சார்ந்த பல பிரச்சனைகள். குடிகார, மன நோய், வக்கிரம் சார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளை உள்ளே வைத்துக் கொண்டு உள்ளே வரும் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் அந்த உரிமைக்குப் பின்னால் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கிக் கொண்டிருந்த போது நினைவூட்டல் அழைப்பாக இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மகள் அழைத்தார். 

வேண்டா வெறுப்பாக மதியம் கூடச் சாப்பிட மனம் இல்லாமல் மனைவியுடன் அங்கே சென்ற போது மருத்துவமனையில் நோயாளிகள் வரிசை போலப் பலரும் அமர்ந்திருந்தனர். மருத்துவர் போலப் பெற்றோரை மாணவ மாணவியரை வைத்து 500 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? எல்லாப் பாடங்களிலும் 100 எடுக்க வேண்டும்? என்று ஜெப ஆராதனைக்கூட்டம் போல ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு கொடுமையையும் பார்த்தேன். மற்றொரு பள்ளி தலைமையாசிரியர் எவரெல்லாம் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்களோ? அவர்களை, அவர்களின் பெற்றோர்களைக் காளி கோவில் பூசாரி போல மாறி பேசிக் கொண்டிருந்தார். வெறுப்பாய், வியப்பாய் பார்த்து ஒரு பக்கம் அமர்ந்திருந்தேன். 

மகள்கள் மூன்று பேர்களிடமும் அதிகம் பேசவில்லை. காரணம் அவர்கள் மேல் சென்ற வருடம் முக்கால்சதவிகிதம் நம்பிக்கை இழந்து இருந்தேன். இந்த வருடம் பாதிக்கு பாதி நம்பிக்கை இழக்க வைத்து இருந்தார்கள். 

இரண்டு பேர்கள் படிக்கும் வகுப்பறை ஆசிரியர் அழைத்தார். அவர் எப்போதும் போல ஒருவர் வாங்கிய 90 சதவிகித மதிப்பெண்கள் குறித்து எனக்குத் தெரியும். போன தடவை சொல்லியிருந்தேன். இந்தத் தடவை சாதித்து உள்ளார் என்று பாராட்டினார். 
மற்றொருவர் 60 சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே இரண்டு முறை அவரைச் சந்தித்து இருந்தாலும் நான் எதுவும் பேசாமல் கையெழுத்துப் போட்டு விட்டு வந்து விட்டேன். மற்றொருவர் படிக்கும் வகுப்பாசிரியரிடம் பேச வில்லை. ஆனால் இந்த முறை இரண்டு ஆசிரியர்களிடமும் பத்து நிமிடம் பேசிய போது இரண்டு பேருமே மிரண்டு விட்டனர். 

சுருக்கமாக. 

இவர்களுக்கென்று ஒரு கனவு உள்ளது. அந்தக் கனவு நாங்கள் உருவாக்கவில்லை. அது மூன்றாம் வகுப்பில் அவர்களே எங்களுக்குச் சொன்னது. அதற்கான ஆயத்த ஏற்பாடுகளை என் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர்களின் கடமையாக எங்கள் பணியைத் தொடங்கி விட்டோம். ஆனால் இவர்கள் அதற்கு உழைக்கத் தயாராக இல்லை. தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மாறிக் கொண்டே வரும் வயது, உருவாகும் எண்ணங்கள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு நான் மனைவி எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தாலும் அதனைப் புறக்கணிக்கவே விரும்புகின்றார்கள். 

ஆண்களை விடப் பெண்கள் அழகாக இருப்பதை விடத் தெளிவாகத் தன்னை உணர்ந்து இருப்பது முக்கியம். தனக்கான அடையாளத்தைக் கண்டு கொள்வதும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதும் அதை விட மிக முக்கியம். ஆனால் இவர்கள் சுகவாசியாக இருக்கத் தான் விரும்புகின்றார்கள். சிறிய வயதில் பெற்றோர்கள் வன்முறை பிரயோகம் செய்தால் அது காலம் முழுக்க மனதில் தழும்பாக இருக்கும் என்பதால் அன்பால் திருத்திவிட முடியும் என்ற என் நம்பிக்கை நாளுக்கு நாள் போய்க் கொண்டேயிருக்கின்றது. இதற்குப் பின்புலமாக உள்ள முக்கியக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள். அவர்கள் மதிப்பெண்கள் குறித்த அக்கறை செலுத்துகின்றார்கள். அதற்கு இவர்களைத் தயார் படுத்த வேண்டிய அவசியங்களை உணர்த்தாமல் வெறுமனே படி என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றார்கள். புறக்காரணிகளை அவர்கள் விளக்குவதில்லை. காரணம் அவர்களுக்கே வெளியே என்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது? என்பதே தெரியவில்லை.

எங்கள் வீட்டில் இரண்டு பேர்கள் நீங்க விரும்பிய ரேங்க் ஹோல்டர் என்ற பெருமையைப் பெற்று இருக்கின்றார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் இவர்களின் தனித் திறமைகள் எந்த அளவுக்குச் சிறப்பாக இருந்ததோ அவையெல்லாம் இப்போது மழுங்கி இவர்களை விழுங்கி தின்று விட்டது. கடமைக்காக வெறுப்புடன் இவர்கள் அணுகும் பாடங்களால், உணர்ந்து கொள்ள முடியாத, வளர்த்துக் கொள்ள முடியாத சிந்தனைகளால் இவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வில் என்ன சாதிக்க முடியும்? என்று நம்புகின்றீர்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் எனக்கும் என் மகள்களுக்கும் நடக்கும் உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளும் அரசியல், பத்திரிக்கை, வீடியோ, டிவி, கலாய்ப்புகள் போன்றவற்றைச் சொல்லி நிறுத்தினேன். 

அவர் சற்று நேரம் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிரண்டு போய் சார் இங்கே வந்து மூன்று வருடங்களில் இப்போது தான் ஒரு பெற்றோர் தன் குழந்தைகளுக்காக இப்படி இருக்க முடியுமா? என்று யோசிக்க வைத்து இருக்குறீங்க என்று பேசிவிட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

மற்றொருவரின் ஆசிரியர் அவர்கள் திறமை எனக்கு உங்களை விட எனக்குத் தெரியும். அவர்கள் பெரிய மனுசி ஆயிட்டாங்க. அப்புறமென்ன? அந்தத் தெனாவெட்டு வரத்தானே செய்யும் என்றார்? 

நானும் மனைவியும் தலைமையாசிரியரை சந்திக்கச் செல்லலாம் என்று மூன்றாவது தளத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். ஒரு மகள் என்னம்மா வீட்டில் சாப்பிட செய்து வைத்துருக்கீங்க? என்றார். மனைவி என் கோபத்தைப் பார்த்து அமைதியாக வந்து கொண்டிருந்தார். தெனாவெட்டு பார்ட்டி அப்பா எனக்கு ஸ்போர்ட்ஸ் இருக்கு நீங்க போய்ப் பாருங்கள்? என்று சொல்லிவிட்டு நகரப் பாருங்கள் என்றார். 

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் வந்து கொண்டிருந்த போது பள்ளிக்கூடத் தாளாளர் என்னைப் பார்த்துக் கூட்டத்தில் இருந்து தனியே என்னை அழைத்துப் பேசினார். என் ஆதங்கத்தைச் சில வார்த்தைகளில் அவருக்குப் புரிய வைத்தேன். அவர் உங்கள் அப்பாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறையப் பிடிக்கும். இவரைப் போன்ற பெற்றோர்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட அமையாது. ஏன் இப்படி உங்கள் உண்மையான திறமை குறைந்து கொண்டே வருகிறது என்று கால் மணி நேரம் பேசினார். 
இவர்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. 

இரண்டு ஆசிரியர்களிடமும் நான் சொன்னது நான் இவர்களை எந்த விசயத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களின் கடமைகள், எதிர்காலக் கனவிற்கு உழைப்புக்குண்டான உழைப்பு பற்றிப் புரிய வைப்பேன். வழிகாட்டியாக இருப்பேன். சாதனையாளர்களாக எதிர்காலத்தில் மாறினால் நமக்குத் தேவைப்படும் அனைத்தும் நம் வீடு தேடி வரும். சாதாரண மனிதர்களாக வாழ ஆசைப்பட்டால் எல்லாப் பொருட்களையும் வாங்க வரிசையில்போய் நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

இந்த முறை அவர்கள் கொடுத்து இருந்த விண்ணப்பத்தில் நான் தலைமையாசிரியரை சந்திக்க வேண்டும் என்று எழுதிய போது மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மனதில் பயம் இல்லை. காரணம் கவலைகள் இல்லாத வாழ்க்கை. எது குறித்த அக்கறை இல்லை. காரணம் எவரை மதித்து என்ன ஆகப் போகின்றது. 

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். காரணம் சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு சீரழிவுக்குப் பின்னாலும் தனிமனித சுயநலமே மேலோங்கியுள்ளது.