Saturday, March 15, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 3

இந்தியர்களின் பக்தி மார்க்கத்தில் நிறைய ஆச்சரியங்களைக் கவனிக்க முடியும். காரைக்குடியில் இருந்து நினைத்தால் போய்வரக்கூடிய தொலைவில் உள்ள இராமேஸ்வரத்திற்கு இந்தப் பகுதியில் வாழ்பவர்களில், நான் பார்த்தவரைக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் இன்று வரையிலும் வடக்கே இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். 

அதேபோல உடம்பு ஒத்துழைக்காத பட்சத்திலும் "ஒரு தடவை காசிக்கு போயிட்டு வந்து செத்துடனும்" என்று சொன்னவர்களை அதிகம் பார்த்துள்ளேன். இன்று பிரபல்யமாக இருக்கும் பிள்ளையார்பட்டியை திருப்பூர் வந்த பிறகு யாரோ ஒருவரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த ஊரை நான் முழுமையாகப் பார்த்தேன். அது வரையிலும் போகிற போக்கில் அப்படியே கடந்து சென்றது தான். 

இந்த இடத்தில் நம்மவர்களின் அடிப்படை மனப்பான்மைகளையும், எப்போதும் "தூரத்துப் பச்சை" மேல் உள்ள ஈர்ப்பும் கவனிக்கக்கூடியது. அடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது? 

என்னுடைய குழந்தைப்பருவத்தில் குடும்பத்தினருடன் இராமேஸ்வரத்திற்கு ரயில் மார்க்கமாகச் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. ரயில் முழுக்கப் பரவியிருந்த கவுச்சி வாடையும், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த மீன்கள் வைத்திருந்த ஓலைப்பாய் போன்றவைகள் கூட இன்றும் நினைவில் வந்து போகின்றது. பயத்தில் அம்மாவின் கைபிடித்துக் கொண்டு கடலை ஆச்சரியமாகப் பயத்தோடு பார்த்த இராமேஸ்வரத்திற்குக் கடந்த நாற்பது வருடங்களில் மொத்தமாக நாலைந்து முறை தான் சென்றுள்ளேன். 

ஒரு முறை கூட இந்த ஊரை நான் முழுமையாக உள்வாங்கியதில்லை. இந்த முறையும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் பயணத்தின் மூலம் முதல் முறையாகத் தனுஷ்கோடி சென்றேன். 

இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதம் என்று கொள்கைகள், நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியை ரசனையோடு அணுகும் நபர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். 

விரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும். 

அடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல். 

வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது. 

இந்தப் பக்தி மார்க்கத்தைப் பற்றி இந்த இடத்தில் லேசாகப் பார்த்து விடலாம், 

"இப்படி இருப்பதற்கு நீ தான் காரணம்" இது பௌத்தம் சொல்லும் தத்துவம். 

"தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்" 

"அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமான பக்தி மார்க்கத்தையே தான் மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் விரும்புகின்றார்கள். ஆலயத்திற்குள் சென்று அனைத்தையும் கொட்டி விட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள். 

இதைத்தான் "ஆத்ம திருப்தி" "பூரண மகிழ்ச்சி" என்கிறார்கள். பக்தி மார்க்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிய பிறகு மூட நம்பிக்கைகள் அணிவகுக்கக் தொடங்கியது. 

வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கேயாவது வழி பிறந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஏன் தமிழர்கள் மற்ற இன மக்களை விடத் தனித்துவமாக இருப்பதன் காரணத்தை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

இராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த முறை பாம்பன் தரைப் பாலத்தில் சற்று நிதானமாக நின்று கடலையும் பாலத்தையும் ரசிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நின்று ரசித்தோம். அப்போது பெருமை மிகு இந்தப் பாலத்தின் லட்சணத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. பராமரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு பகுதியும் பயமுறுத்துவதாக இருந்தது. 

இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டி (1974) ராஜீவ் காந்தி அவர்களால் (1988) அவர்களால் திறக்கப்பட்ட பாலத்திற்குள் நுழைய சுங்கவரி எதுவும் வசூலிக்கவில்லை. அப்போது கீழே தெரிந்த ரயில் பாலத்தை அதன் விஸ்தீரணத்தை ரசிக்க முடிந்தது. பல வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது. 

நாங்கள் சென்ற போது (2014 ஜனவரி) நூற்றாண்டு விழா காணப்போகும் (பிப்ரவரி) பாம்பன் ரயில் பாதை விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் முதல் முறையாக 2.3 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய இந்த ரயில் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையாக மாற்றம் பெற்ற பின்னரே இதன் உண்மையான பயன்பாடும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது. 

ராமேஸ்வரம் என்பது வடக்கே உள்ள காசி போலப் புனிதத்தலம் என்கிற ரீதியில் தான் நம் மக்களின் பார்வையும் மதிப்பும் உள்ளது. ஆனால் வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்களுக்கும், வாழ முடியாமல் திரும்பி வந்தவர்களுக்கும் சரணாலயம் போல இன்று வரை காட்சியளித்துக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியான இடமும் கூட.

ஆனால் இந்தப் பாலத்தின் வாயிலாக ஈழத்திற்குச் சென்ற, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பாலத்தில் நின்று கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில் அதிக நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். 

எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது உருவாக்கிய வசதிகளையும் அதற்குப் பின்னால் உள்ள வஞ்சகம், சூழ்ச்சி, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளையும் யோசித்த போது கடற்காற்றில் மிதந்து வந்த உப்புத் தன்மையைப் போல மனமெங்கும் இனம் புரியாத பிசுபிசுப்பு உருவானது.




Friday, March 14, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 2


சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்குப் பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றித் தெரிந்த அளவுக்குச் செங்கல்பட்டிலிருந்து இராமநாதபுரம் செல்ல பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்தக் குறை இந்தப் பயணத்தின் வாயிலாக நீங்கியது. 

கீழக்கரை, சாயல்குடி, ஏர்வாடி, போன்ற ஊர்கள் பக்கம் பயணித்தது இதுவே முதல் முறை. இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சாலையில் எந்த இடத்திலும் சுங்கவரி தொந்தரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேலாக மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. நகரமயமாக்கலின் விளைவாக இரண்டு பக்கமும் உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்ற பெயரில் உள்ள திடீர் நகர்ப்புற வீக்கங்களும் கூட இல்லை. சுகமான பயணம் என்று சொல்வதை இந்தச் சாலையில் பயணித்த போது உணர்ந்து கொண்டேன். 



கடற்கரை ஓரமாக நம் வசதிக்காக உருவாக்கியுள்ள இந்தச் சாலைகளைப் பற்றிப் பேசும் போது நாம் சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவாகத் தெரிந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் மாறாத ஒரே இனம் மீனவ இனம். பரதவர் என்றழைக்கப்படும் இந்த மக்களின் வாழ்க்கையும், பண்பாடு கலாச்சாரமும் முழுக்க முழுக்கக் கடலில் தொடங்கிக் கடற்கரையோடு முடிந்து போய் விடுகின்றது. காலம் காலமாக அதைத்தாண்டுவதே இல்லை. மீனவனாகப் பிறந்து கடைசி வரையிலும் மீனவனாகவே வாழ்ந்து முடிவதோடு அவனது தலைமுறையும் இதே தொழிலிலே நுழைந்து விடுவதால் வெளியுலக வாழ்க்கைக்கும் அவர்களும் பல காத தூரம். 

ஆனால் காலமாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், மாறிப்போன நவீன வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தங்களின் பராம்பரிய பழக்கவழக்கங்கள், தொழில் முறைகள் என்று வளர்ந்த மீனவர்களின் வாழ்க்கை கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிப் போய் உள்ளனர். 

ஒரு பக்கம் "எல்லை தாண்டாதே" என்கிறார்கள். மறுபுறம் "இந்தப் பகுதியில் சாலைகள் வருகின்றது காலி செய்து கொடுத்து விடு" என்று துரத்தி அடிக்கப்படுகின்றார்கள். இரண்டு பக்கமும் சிக்கி எலிப்பொறிக்குள் மாட்டியவர்கள் போல அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அளவுக்கு உள்நாட்டுக்குள் அகதி போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மீனவர்களின் கையில் இருந்த கடல் சார்ந்த தொழில்கள் இன்றைய சூழ்நிலையில் காசிருப்பவர்களின் கைக்கு மாறிக் கொண்டேயிருக்கின்றது. இன்று மீன்பிடி தொழிலில் என்பது சர்வதேச நிறுவனங்களின் கைப்பிடிக்குள் அடக்கமான வலை போல மாறியுள்ள காரணத்தால் ஒவ்வொரு மீனவ குடும்பமும் வறுமை என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இந்தச் சாலையில் பயணிக்கும் போது இது சம்மந்தபட்ட பல மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. 

சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அவர்களின் பலம் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் இந்த மீனவர்களிடம் உள்ள பிரிவினைகளை யோசித்துப் பார்த்தால் எப்படி இவர்களுக்கு அவஸ்த்தைகள் உருவாகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த இன மக்களில் இருந்து ஒரு தலைமைப்பண்பு உள்ள எவரும் உருவாகவே இல்லை. இதுவே ஒவ்வொரு சமயத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்துக் கொண்டு வரும் தமிழ்நாட்டின் இரண்டு கழகக் கட்சிகளுக்கும் மத்தி மீன் சுவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அறிக்கை வாயிலாக லாவணிக் கச்சேரி நடத்த வசதியாகவும் உள்ளது. 

பாம்பன் பாலம் 

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து இராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்துக் கொண்டு வந்தனர். அப்போது (1984) தற்போதுள்ள பாம்பன் பாலத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தது. கடலுக்குள் படிப்படியாக ஒவ்வொரு தூண்களுக்குக் கீழே உள்ள (பீம்களும்) அமைப்புகளின் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இயற்பியல் ஆசிரியர் நாராயணன் படகில் வைத்து அழைத்துக் கொண்டு அந்தத் தூண்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பீம் பகுதியில் ஏறி அது எப்படிக் கட்டப்படுகின்றது என்பதை விளக்கினார். இயற்பியல் விதி, கடல் அரிப்பு, தாங்கும் திறன், எதிர்காலப் பயன்பாடுகள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். 

ஆனால் எனக்கோ எங்கே மீன் சுட்டு விற்கின்றார்கள்? என்பதே ஒரே தேடுதலாக இருந்தது. பக்கதில் இருப்பவனிடம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அவன் ஓரளவுக்கு மேல் தாங்க முடியாமல் "சார் இவனுக்கு மீன் பொறிக்கும் இடம் தெரியனுமாம்? அப்படியே ப்ரெஷ்ஷா கிடைக்குமாம். அதை முதலில் போய்ப் பார்த்து விடலாம்" என்று சொல்ல இருவருக்கும் அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது. அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன். 

பயணிப்போம்...........

தொடர்புடைய பதிவுகள்





Wednesday, March 12, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள்

ஆசான் என்ற யோகா மாஸ்டர் திரு. கிருஷ்ணன் அவர்களைப் பற்றிக் குறும்படம் எடுக்கத் திட்டமிடுதலுக்காகச் சென்று வந்த ஊர்களின் பார்வையும் சந்தித்த மனிதர்கள் தந்த தாக்கமும் குறித்த என்னுடைய எண்ணத்தைச் சில பதிவுகளில் எழுதி வைத்து விடுகின்றேன்.  

இதற்காக நான் பயணித்து வந்த தூரம் ஏறக்குறைய 1400 கிலோமீட்டர். சென்னையில் இருந்து கடற்கரைச் சாலை வழியாகத் தனுஷ்கோடி. அங்கே இருந்து மீண்டும் கடற்கரைச் சாலை வழியாகப் பட்டுக்கோட்டை. இதன் தொடர்ச்சியாகக் கும்பகோணம் அருகே உள்ள திருவாவாடுதுறை. அங்கேயிருந்து திருப்பூர்.

நான் இன்னமும் தமிழ்நாட்டிற்குள் பார்க்க வேண்டிய ஊர்கள், பயணம் செய்ய நினைக்கும் ஊர்கள் பல பட்டியலில் இருந்தாலும் இந்தப் பயணத்தின் மூலம் அதுவரையிலும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்த பல ஊர்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை என்ற நவீன வசதிகள் கொடுத்த சுகமான பயணத்தை, பயத்தை நேரிடையாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது. 

சென்னை 

ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் சென்று திரும்பி வரும் போது ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் பாடங்களைக் கற்றுக் கொண்டு வருவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத்தின் அவசர வாழ்க்கையை விடப் பெருநகர அவசரங்கள் மனிதர்களைப் படிப்படியாக யோசிக்கவே முடியாத அளவுக்கு எந்திரமாக மாற்றி வைத்து விடுகின்றது. இது போன்ற பெரு நகரங்களில் சராசரி வருமானம் மற்றும் சராசரிக்கும் கீழே உள்ள அன்றாடம் காய்ச்சி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் அவஸ்த்தைகள் தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை உருவாக்குகின்றது. 

இந்த வர்க்கத்தினர் இதனையே விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். வேறு எந்த மாற்று ஏற்பாடு குறித்தோ, வேறு இடங்களில் உள்ள வாய்ப்புகளைக் குறித்தோ யோசிக்க மனமில்லாது வாழ்பவர்கள் தான் என் பார்வையில் சாதனையாளர்களாகத் தெரிகின்றார்கள். பெருநகரங்கள் ஒவ்வொரு மனிதர்களையும் காந்த பூமி போல இழுத்து வைத்துள்ளது. 

பெரிய வீடுகள், வசதியான வீடுகள் என்று எப்படி இருந்தாலும் சென்னையில் கூவம் நதி ஓடும் பாதையில் மற்றும் அதன் அருகே உள்ள வீடுகளிலும் மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரையிலும் வாழ்வதும் உறங்குவதும் தனிப்பட்ட பயிற்சி எடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் போலத் தெரிகின்றது. கொசுக்களின் ரீங்காரம் தான் இந்தப் பகுதிகளில் வாழ்பவர்களின் தேசிய கீதமாக உள்ளது. கொசுக்கள் இரவில் வந்து நம்மைக் கடிப்பது இயல்பானது. ஆனால் இரவில் கொசுப்படைகளின் மத்தியில் வாழ்வதும், கட்டியிருக்கும் கொசு வலையைச் சுற்றிலும் இடைவிடாது போராடி பணி செய்யும் கொசு பகவான்களின் கருணையே கருணை. 

கனவுத் தொழிற்சாலை 

கடந்த இருபது வருடங்களில் சென்னைக்குச் சென்று வரும் போது அங்கே தனிப்பட்ட நட்பு வட்டத்தில் நான் சந்தித்த பத்துப் பேர்களில் ஒருவராவது திரைப்படத்துறை சம்மந்தபட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். 

சென்ற மாதம் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. 

அவரவர் கண்கள் முழுக்க மாறாத அதே கனவு. லட்சிய வேட்கை. இடைவிடாத முயற்சி. தனக்குத்தானே சமாதானம். 

பறிபோன இளமை. அன்றாடச் செலவுக்கே தகிங்ணத்தோம் என்று வாழ்க்கை இருந்தாலும் அந்த மாயச் சூழலில் இருந்து வெளியே வர முடியாதவர்களைப் புரட்டப் புரட்ட வந்து கொண்டேயிருக்கும் பெரிய புத்தகத்தைப் போலவே தெரிகின்றார்கள். 

நாளை விடிந்து விடும். அடுத்த நாள் உலகம் முழுக்க நம்மைப் பற்றிப் பேசப் போகின்றார்கள் என்ற இந்த வார்த்தைக்குள் தங்களை அடகு வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். 

குடும்பம், உறவுகள் அனைத்தும் மறந்து, துறந்து தனி மனிதராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 

மாறிப் போன சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் வைத்திருக்கும் கனவுகளை அடை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அருகே அமர்ந்து ஆறுதலாகவும் பேச முடியவில்லை. அவரவர் படுகின்ற துன்பங்களைக் காணச் சகிக்க நமக்குத் தைரியமும் போதவில்லை. 

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகள் 

சென்னையிலிருந்து காலை ஆறு மணிக்குக் கிளம்பினால் சற்றுத் தப்பித்துச் சென்னைக்கு வெளியே வந்து விடலாம். அலுவலக நேரம் தொடங்கும் போது சாலையில் பயணிக்க நமக்கு அவசியம் தியான மன நிலை வேண்டும். ஒவ்வொரு இடங்களில் உள்ள தடைகளும், சாரை சாரையாக வந்து போய்க் கொண்டிருக்கும் மக்கள் படைகளைத் தாண்டி செங்கல்பட்டு வந்து சேர்ந்தாலும் விடாது துரத்தும் கருப்பு போலவே போக்கு வரத்து நெரிசல் நம் விழிகளைப் பிதுங்கிப் போக வைக்கின்றது. 

குளிரூட்டப்பட்ட வசதியான வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் போது விமானப் பயணம் போலவே உள்ளது. ஆனால் நாங்கள் பயணித்த 1400 கிலோமீட்டர் பயணத் தூரத்திற்குச் சுங்கவரியாக மட்டும் 1700 ரூபாய் செலவளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஒரு இடத்தில் அதிகாரபூர்வமற்ற முறையிலும், பகல் கொள்ளை ரீதியாகக் கட்டண வசூல் செய்கின்றார்கள். 

செங்கல்பட்டில் இருந்து இராமநாதபுரம் செல்ல ஒட்டுநர் தேர்ந்தெடுத்த கடற்கரைச் சாலை என்பதையும், இப்படி ஒரு சாலை வழியாகச் செல்லமுடியும் என்பதனையும் அப்போது தான் முதல் முறையாக அறிந்தேன். 

பயணிப்போம்...

தொடர்புடைய பதிவுகள்