Sunday, April 07, 2013

கோடி கொடுத்து குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர்

இதுவரையில் இந்த தளத்தில் எல்லாவிசயங்களையும் பற்றியும் எழுதியுள்ளேன். இதுவரையிலும் எழுதாமல் இருந்தது வள்ளல் அழகப்பர் பற்றியே.

நீண்டதொரு ஆராய்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உரியவர் அழகப்பச் செட்டியார் அவர்கள். நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் செய்தவர்.  இந்த சமயத்தில் காரைக்குடி மக்கள் மனற்ம் தங்களது முகநூலில் வெளியிட்டுள்ள அவரைப் பற்றிய விபரங்களை இந்த பதிவில் அவர் நினைவு நாள் நினைவாக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.


கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"

என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நினைவு நாள் MARCH 5

காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.

அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பர்

வள்ளலின் வரலாறு சில வரிகளில்:

1909-ல் செட்டி நாட்டின் முக்கியமான பகுதியாக விளங்கும் கோட்டையூரில் பிறந்தார் அழகப்ப செட்டியார். அவர் தந்தையார் ராமநாதன் செட்டியார், மலேசியாவில் ரப்பர் தோட்டம் வைத்திருந்தார். மகன் அழகப்பன் வளர்ந்து பெரியவனாகி இந்த ரப்பர் தோட்டத்தை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதுதான் தந்தையின் ஆசை. ஆனால் மகனுக்கோ, பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தபிறகு லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர்-அட்-லா படிக்க வேண்டும் என்று ஆசை.

தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல், மலேசியாவுக்கு கப்பல் ஏறினார் அழகப்பன். அப்போது அவருக்கு அடித்த காய்ச்சலைக் கண்டு கப்பலிலிருந்து இறக்கிவிட்டு விட்டார் கப்பல் அதிகாரி. உயர்படிப்பு படிக்கிற ஆசையை தன் பெரியப்பாவிடம் எடுத்துச் சொல்ல, 'கவலைப்படாதே, நான் உன்னை படிக்க வைக்கிறேன்’ என்றார் அவர். ஆனால், அவரும் அடுத்த சில மாதங்களிலேயே இறந்துவிட, அழகப்பன் நிலைகுலைந்து போனார். மகனின் ஆர்வத்தை உணர்ந்த தந்தை, அழகப்பனை லண்டனுக்கு அனுப்பி பார்-அட்-லா படிக்க வைத்தார். அழகப்பர் இலண்டனில் படித்துக்கொண்டே சார்ட்டர்டு பாங்கில் வேலை பார்த்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினார். 

இதற்கிடையில் அவர் விமானம் ஓட்டும் தொழிலிலும் பயிற்சி பெறத் தொடங்கி இரண்டாண்டில் சிறந்த விமானியாகவும் ஆனார். இங்கிலாந்தில் கல்வி கற்று மூன்றாண்டுகளுக்குப் பிறகு விமானி, பாங்குத் தொழிலாளி, வழங்கறிஞர் என்ற பல சிறப்புகளுடன் அழகப்பர் தாய்நாடு திரும்பினார்.

லண்டனில் சட்டப் படிப்பை படித்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார். சில ஆண்டு காலம் வழக்கறிஞர் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்தார் எனினும், அதையே தொடர்ந்து செய்ய அவருக்கு இஷ்டமில்லை. காரணம், அவர் உடம்பில் ஓடியது பிஸினஸ் ரத்தம். அவர் படித்தது ஆங்கில இலக்கியமும் சட்டமும் என்றாலும் நிதி நிர்வாகத்தை ஏறக்குறைய கரைத்துக் குடித்திருந்தார். சட்டப் பணியை விட்டுவிட்டு, பிஸினஸ் உலகில் இறங்கினார்.

அழகப்ப செட்டியார் முதல் முயற்சியாக கேரள மாநிலம் திருச்சூருக்குப் பக்கத்தில் ஒரு நூற்பாலையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்குக் கொஞ்சம் இழப்பையே தந்தது அந்த நூற்பாலை. எந்த பிஸினஸையும் கொஞ்சம் காலஅவகாசத்தில் கரை கண்டுவிடுகிற திறமை அவருக்கு உண்டு. எனவே, நஷ்டத்தில் இருந்த ஆலையை லாபத்திற்குக் கொண்டு வந்தார். அந்த ஆலையில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டித் தந்தார். அந்த பகுதி இன்றும் அழகப்பா நகர் என்கிற பெயரிலேயே இருக்கிறது.

இதன்பிறகு மும்பை பங்குச் சந்தையில் ஈடுபட ஆரம்பித்தார். மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் அவர் விரலசைவுக்கு கட்டுப்பட்டு நிற்பதைக் கண்டு மனம் புழுங்கிப் போனார்கள் அங்கிருந்த பல பெரும் டிரேடர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அழகப்ப செட்டியாருக்கு எதிராக ரகசியத் திட்டம் போட, சில நாட்களிலேயே நாற்பது லட்ச ரூபாய்க்குமேல் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. 1940-களில் நாற்பது லட்ச ரூபாய் என்பது கொஞ்சநஞ்சமல்ல.

நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கை நிறைய பணம், மலேசியாவில் ரப்பர் தோட்டம், பர்மாவில் டின் சுரங்கம், கேரளாவில் நூற்பாலை, கொல்கத்தாவில் இன்ஷூரன்ஸ் பிஸினஸ், சென்னையில் விமான சர்வீஸ் நிறுவனம் என லாபத்தை அள்ளித்தர பலவிதமான தொழில்கள் இருந்தபோதும், அவர் மனம் தனது சொந்த மக்களுக்கு நன்மை செய்வதிலேயே முனைப்பாக இருந்தது.

1940-களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் மதுரைக்கோ,திருச்சிக்கோதான் போக வேண்டியிருந்தது. இதனாலேயே பலரும் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை. இதற்கொரு தீர்வாக, காரைக்குடியில் பல கல்வி நிலையங்களை அமைத்தார்.

1947-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அழகப்பர் சென்னை அடையாற்றில் நடந்த அன்னிபெசண்ட் அம்மையார் நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், அழகப்பரின் சிறந்த நண்பருமாகிய, திரு. இலட்சுமணசாமி முதலியார; தலைமை வகித்தார். அவர் தமது தலைமையுரையில், தமிழகத்தின் கல்வித்தேக்கம் பற்றிக் குறிப்பிட்டு, செல்வர்கள் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட முன்வரவேண்டும் என்றும், கல்லூரிகளை ஏற்படுத்த ஒத்துழைக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளைக் கேட்ட அழகப்பர் உடனே மேடைக்குச் சென்று, காரைக்குடியில் தான் ஒரு கல்லூரி ஏற்படுத்த முன்வருவதாக அறிவித்தார்.

இதனை அங்கு வந்திருந்த அனைவரும் வரவேற்றனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற முறையில் திரு. இலட்சுமணசாமி முதலியார் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு மேடையிலேயே அனுமதி வழங்கினார். மறுநாள் காரைக்குடிக்கு வந்த அழகப்பர் காரைக்குடி நகர்மன்றத்திற்குச் சொந்தமான, காந்தி மாளிகையை வாடகைக்குப் பெற்று, பேராசிரியர்கள் பலரை அதிகச் சம்பளம் கொடுத்து அழைத்து வந்து 15.8.1947 இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று அழகப்பா கல்லூரியைத் தொடங்கினார். இதனையடுத்து அங்கு பல கல்வி நிலையங்கள் தோன்றின.

காரைக்குடியில் அழகப்பர் நிறுவிய ‘‘மின்-இரசாயன ஆராய்ச்சிக்கூடமே அவரின் மேலான சாதனையாகும். 

இவ்வாராய்ச்சிக் கூடத்தைக் காரைக்குடியில் நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பர் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கர் நிலமும் கொடுத்து, 1948-ஆம் ஆண்டு அதற்குரிய அடித்தளக்கல்லினை, முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு நாட்டச் செய்தார். அதன்பின் அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் உயர்நிலைப்பள்ளி, தொழில் நுணுக்கப்பள்ளி உள்ளிட்டவற்றை நிறுவியதுடன் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் ஏராளமாகப் பணத்தை வாரி வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் கிண்டியில் அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியை நிறுவுவதற்கு  5,00,000 ரூபாயும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் கல்லூரி தொடங்குவதற்கு 5,00,000 ரூபாயும், கொடுத்தார்.

காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும் ஆவன செய்தார். இங்ஙனம் தமிழக்த்தின் பொறியியற் கல்வி வரலாற்றில் மூன்று பொறியியற் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றியவர் அழகப்பர் ஆவார். 1948-ஆம் ஆண்டு கணிதமேதை இராமாநுசத்தின் பெயரால் சென்னையில் பெரும் பொருட்செலவில் அழகப்பர் கணித அறிவுக்கூடத்தைத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தென்னிந்தியக் கல்விக் கழகத்திற்கும், மதுரை லேடிடோக் கல்லூரிக்கும் நன்கொடைகள் வழங்கினார்.

அழகப்பர், தமது மகளிர் கல்லூரிக்குத் தாம் குடியிருந்த சொந்த மாளிகையையே மனமுவந்து கொடுத்தார்.

காரைக்குடி மக்கள் மன்றம் தமக்கு ஆண் குழந்தை இல்லாதததை அழகப்பர் குறையாகக் கருதியதே இல்லை. எனினும் அவரது உறவினர்கள் சில சமயம், ‘‘உங்களுக்கு ஆண் வாரிசு வேண்டாமா? யாராவது ஒரு பையனைத் தத்து எடுத்துக் கொள்ளுங்களேன்’’ என்று வலியுறுத்துவா.

அதற்கு அழகப்பர்,

‘இதோ.கல்லூரியில் கல்வி கற்றுச் செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் என் வாரிசுகள் தானே. இவர்கள் இத்தனைபேர் இருக்கும்பொழுது நான் ஏன் குறிப்பிட்ட ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்க்கவேண்டும். அது தேவையில்லை. என் சொத்து எல்லோருக்கும் பயன்படட்டும்’’ என்றாராம். அனைத்துக் குழந்தைகளையும் தமது குழந்தையாகக் கருதிய அழகப்பர் உள்ளம் போற்றுதற்குரியது.

Saturday, April 06, 2013

எடுத்தவர்களும் கொடுத்தவர்களும்

முந்தைய பகுதிகள்





இலங்கையில் போர்த்துகீசியர்கள் ஆண்டபோது, 17 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மத குருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (FERNAO DE QUEYROZ) போர்த்துகீசிய மொழியில் முதன்மையான இலங்கை குறித்த வரலாறு எழுதப்பட்டது. 

பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொத்த வரலாறுகளும் ஏற்கனவே பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபு அடிப்படைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. முழுமையாக, நம்ப முடியாத விசயங்களை வைத்து படைக்கப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் நூல்கள் உருவானது. .

இனக்குழுவாக இருந்தவர்களில் சிங்களர்களே முறையான பூர்வகுடி மக்கள் என்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் திரிபு வரலாற்றை தொடங்கி வைத்தனர்.  

இந்த வரலாற்று பிழைகளுக்கு சரித்திர சான்றுகளாக அன்றே  பல விதங்களிலும் உருவாக்கப்பட்டது. இந்த சதிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் மாற்ற முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் மறக்க முடியாத சம்பவங்களாக இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் எஞ்சிய தமிழர்களுக்கு கொடுத்து விட்டது.

உலக சரித்திர பக்கங்களில் நீக்கவே முடியாத அளவிற்கு இடம் பெற்ற ஹிட்லரின் நாசிக் கொள்கைகளுக்கு சார்பாக மொத்த வரலாற்றை திரிபு என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கிய ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் போலவே இலங்கையின் மொத்த வரலாற்றுப் பக்கங்களிலும் இந்த திரிபு தான் அதிகமாக இருக்கிறது.  

இதைப்போலவே மற்றொரு ஆச்சரியம், 

அன்று முதல் இன்று வரையிலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

பூர்வகுடி தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர் கடைசியாக இலங்கை முஸ்லீம்கள்.  இதிலும் பிழைப்பு தேடிப்போன கொழும்புச் செட்டிகள் என்ற சிறு குழுவினர் தனியாக இருக்கின்றனர். 

இலங்கைத் தமிழர்கள் என்ற இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் பல பிரிவுகளாக ஜாதி, இனம், மதம் என்று நான் பெரியவர் நீ சிறியவன் என்று தங்களுக்கு நிகர் தாங்களே என்று வேறு எவருடனும் சேராமல், கடைசி வரையிலும் மற்றவர்களை தங்களுடன் சேர்க்காமல் தனித்துவமாய் வாழ்ந்து முதல் கொடுமை என்றால், மொத்தமாக கூறுகளாக பிரிந்து வாழ்ந்தவர்கள் கோரங்களாக ஒரு இனமே அழிந்து போன இன்றைய சூழ்நிலையில் தங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இன்று மொத்த இலங்கை தமிழினத்தின் எச்சமும் மிச்சமாய் கூடார வாசிகளாக, இருப்பிடமற்ற அலையும் பழைய கால நாடோடிகளாக மாறிய போதும் இன்னும் உணராமல் இருப்பது அடுத்த மகத்தான சோகம். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இனம் என்று பெருமை பெற்றதாக சொல்லப்படும் தமிழன் என்பவனுக்கு தனியாக குணம் உண்டு என்பதைப் போல இலங்கையில் வாழ்ந்த தமிழனத்தை அழித்து முடிக்கவென்று உருவான அரசியல் சதிகள் உருவானது இன்று நேற்றல்ல.

இதன் தொடக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது. 

அவர்கள் உருவாக்கியதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர்கள் சிங்களர்கள். தன்னையும் உணர்ந்து கொள்ளாமல், தமிழினம் என்பதை விட தங்கள் இனம் ஜாதி என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தொடங்கியது இந்த தமிழினத்தின் வீழ்ச்சி.  

இதன் முடிவு இன்றைய தினத்தின் சர்வதேச அரசியலின் எழுச்சியாய் வந்து முடிந்துள்ளது. தவறான அரசியல் கொள்கைகள் எந்த அளவிற்கு மொத்த சமூகத்தையும் சீர்குலைக்கும் என்பதையும் தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எந்த அளவிற்கு மோசமான பாதைக்கு செல்லும் என்பதற்கு இலங்கையில் ஆட்சி புரிந்தவர்களே மிகச் சிறந்த உதாரணம். 

இலங்கையின் மொத்த வரலாற்றுப் பாதைகளை பார்த்தோமென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள சரித்திரத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கென்ற உழைத்தவர்களைப் போல தமிழர்களின் தடங்களையும் கவனமாக மறக்கப்படும் அளவிற்கு அவர்கள் உழைத்த உழைப்பு ஆச்சரியமாக இருக்கிறது. 

நமக்கு தமிழர்களின் வரலாறு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாதையை விட  மற்றொரு ஆச்சரியத்தை கவனித்தால் நமக்கு புரியும். ஒவ்வொரு  காலகட்டத்திலும் மாற்றங்கள் உருவானது மாற்றங்களின் மூலம் உருவான அரசியல் கணக்குகளை உணர்ந்து கொள்ளாதவர்கள் எப்படி தலைவனாக மாற்றம் பெறமுடியும்? என்பதை காலக்கண்ணாடி போல் தமிழர்களின் கடந்து வந்த பாதைகள் நமக்கு உணர்த்துகிறது. 

காரணம் அன்று முதல் இன்று வரை அரசியல் என்பது ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது அல்ல. கணக்குகளை அடிப்படையாக கொண்டது.

எல்லாமே சாத்தியம். அது எப்போதும் அரசியலில் மாத்திரமே என்பதை நம்மால் ஈழ வரலாற்றின் மூலம் புரிந்து கொள்ள முடியும்..  

இலங்கையில் வாழ்ந்த திருவாளர் அப்பாவி தமிழ் பொதுஜனம் முதல் எங்களுக்கான உரிமை வேண்டும் என்று அரசியல் மூலமாக அஹிம்சை வழியில் போராடியவர்கள் வரை கேட்டது ஒன்றே ஒன்று தான்.

எங்களை வாழ விடு என்பது தான்.  

இதுவே சாத்யமில்லாதபோது தான் "எங்களின் உரிமைகளைப் பெற ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்று ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் தங்களின் குரலை வேறுவிதமாக உயர்த்தினார்கள். 

இவர்கள் அத்தனை பேர்களும் ஆட்சிபுரிந்து கொண்டுருந்தவர்களிடம் கேட்டது 

எங்கள் தனித்தன்மையான கலாச்சராத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கான இடத்தைக் கொடு" என்று போராடிப் பார்த்தார்கள். இறுதியில் மண்ணோடு மண்ணாய் கலந்து மாவீரர்களாகப் போனார்கள். . 

“எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டாய்.  எங்களின் பிணத்தை எங்கு கொண்டு புதைக்கப் போகிறாய்?”  என்று கேட்டவர்களின் தனித் தமிழீம் எதிர்காலத்தில் வெல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதா? 

முந்தைய தொடர்ச்சி

Friday, April 05, 2013

வெளியே தெரியாத படைப்பாளி


ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை

ஜோதிஜியின் டாலர் நகரம் : 

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். 

ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.

ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.  

அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள்,  உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.

இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும்,  தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில். 

நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை  என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம்  ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. 

ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது. 

எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது.  ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும். 

நல்வாழ்த்துகள் ஜோதிஜி 

நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.

ஆக்கம்   செல்வி ஷங்கர். (வலைச்சரம் சீனா அவர்களின் துணைவியார்)

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க