Thursday, February 21, 2013

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள்


எவரிடமும் வேண்டுமானாலும் பேசிப்பாருங்கள்.  

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நான்கு திசைக்குள் தான் அடங்கியிருக்கும். 

தனது வாழ்க்கை, தன் குடும்பம், தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்கள்

இந்த நான்கும் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை வாழ வைக்கின்றது. மேலும் வாழ வேண்டுமென்ற ஆசையை ஒவ்வொரு நிலையிலும் தூண்டிக் கொண்டேயிருக்கின்றது.

இதனை தாண்டி வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். அல்லது மாறுதலாக வாழ்ந்து பார்க்கலாம் என்று யோசித்தவர்களின் வாழ்க்கையும் பாதியில் அதோகதியாக மாறியிருக்கும். 

எதார்த்தம் என்பது எவரும் நினைத்துப் பார்க்க முடியாது. அது எப்போதும் போல உண்மையாகவே இருக்கும்.  நாம் தான் புரிந்து கொள்வதே இல்லை.

ஆனாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சொற்ப எண்ணிக்கை தான் இந்த சமூகம் வளர்வதற்கு காரணமாக இருந்து இருக்கின்றார்கள் என்பதையாவது ஏற்றுக் கொள்வீர்களா? நீங்களும் நானும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப் பின்னாலும் கண்களுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் தன்னலமற்ற உழைப்பு இருந்தது என்பதை உணர்வீர்களா?

அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட சமூகத் தலைவர்கள்,  ஆன்மீகத்தின் மூலம் வழிகாட்டியாக இருந்தவர்கள், தங்கள் கருத்துக்கள் மூலம் சமூகத்தை வேறொரு பாதைக்கு கொண்டு சென்றவர்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு தந்தவர்கள் என்று வாழ்ந்தவர்கள் கடைசிவரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா?

மகிழ்ச்சி என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அளவு கோல் இருக்கின்றது.  பெட்டி நிறைய பணம், மனைவி விரும்பும் அளவிற்கு நகை, குழந்தைகள் பாதுகாப்புக்கு இடங்கள், வங்கிக் கணக்கில் நிறைந்துருக்கும் பணம் என்று இந்த அளவுகோலுக்கு எல்லையே இல்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி பலரும் இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

நாம் எத்தனை தத்துவங்கள் பேசினாலும் பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்றொதொரு வாக்கியத்திற்குள் அத்தனையும் அடிபட்டு போய்விடும். 

ஆனால் இதையும் தாண்டி சிலர் ஜெயித்து மேலேறி வந்து விடுகின்றார்கள். நம் கண்களுக்கு அவர்கள் கடைசி வரைக்கும் தென்படுவதே இல்லை. அது போன்ற நபர்கள் நம் கண்களுக்கு தெரிந்த போதிலும் நம் சூழ்நிலை அவர்களை பொருட்படுத்தாது அடுத்த நிலைக்கு கடந்து செல்ல தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

என்னுடைய வாழ்க்கையிலும் பணத்தை மட்டுமே தேடி அலைந்த காலமும் இருந்தது.  ஆனால் சூழ்நிலைகள் உருவாக்கிய சதிராட்டத்தில் சேர்த்த பணம் கை கழுவி சென்ற போது மனம் முழுக்க வெறுமையாக இருந்தது. மறுபடியும் பணத்தை துரத்தத் தொடங்கிய போது கைக்குள் வராமல் பழிப்பு காட்டி பாடங்கள் நடத்தத் தொடங்கியது. அது போன்ற காலம் நடத்திய பாடங்களில் ஒன்று தான் இந்த எனது எழுத்துப் பயணம்.

பணத்திற்கு அப்பாற்பட்ட இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கு அறிமுகமானது. இன்று வரையிலும் எத்தனையோ விசயங்கள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றது. நினைத்துப் பார்க்க முடியாத மனிதர்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.  நிச்சயம் பணம் என்ற ஒரு காகிதத்தால் சாதிக்க முடியாத பல விசயங்கள் இந்த உலகில் அதிகம் உண்டு என்பதை உணர வைத்தது இந்த எழுத்துப் பயணமே.

திருப்தி என்ற வார்த்தைக்கு மட்டும் முடிவே இல்லை. ஆனாலும் திருப்தியடைய என்ற வார்த்தைக்காக நாம் பல முயற்சிகளில் இறங்கி ஓயாமல் போராடிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் சென்ற வருடம் செப் 25 2012 அன்று புதுக்கோட்டையில் உள்ள சகோதரி குடும்பத்திற்கு செல்ல வேண்டிய கடமையிருந்தது.  

நான் உறவுகள் அழைப்புக்கு எளிதில் சென்று விடுவதில்லை. ஆனால் ஏதோவொரு சமயத்தில் அத்தனை பேர்களையும் சந்தித்துவிடுவதுண்டு. மனைவி குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தால் அனுப்பி விடுவதுண்டு.  இன்னமும் கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறையில் இருப்பதால் குடும்பத்தில் யாரோ ஒருவர் என் குடும்பம் சார்ந்த விருப்பங்களை என் சார்பாக (திட்டிக் கொண்டே) நிறைவேற்றி வைத்து விடுகின்றார்கள்.  தப்பி பிழைத்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

அப்போது தான் 20 வருடங்களுக்கு பிறகு அக்கா மகன் பயன்படுத்தும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை திருக்கோர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு (செப்டம்பர் 26 2012) அன்று சென்றேன். என் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை அந்த நான்கு கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம் உணர்த்தியது.

மூச்சு வாங்கினாலும் திருப்திகரமாகவே இருந்தது.

நாம் ஏன் வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? போன்ற என்னுள் இருந்த கேள்விகளுக்குள் இருந்த தூசிகளை அந்த ஆலயத்தில் தான் கழுவிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது?

ஞானாலயா பயணம் தொடரும்......................

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றிய காணொளி (27.01.2012)

முந்தைய பதிவு.



Wednesday, February 20, 2013

திரு. ஞாநியின் தகுதிகள் ?



என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு அத்தியாயத்தின் பெயர் நம்பி கை வை.

காரணம் திரு. ஞாநி அவர்களின் மேல் அந்த அளவுக்கு நான் நம்பிக்கை கொண்டவன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.  ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் தற்கால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஞாநி அவர்களின் ஓ... பக்கங்கள் தான் எனக்கு பல புரிதல்களை உருவாக்கியது.  மனதளவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு அருமருந்தாக உதவியது.

இவர் காட்டிய பாதையைத் தான்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. இவர் மட்டுமல்ல ஞாநி அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டிய 49 ஓ  (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பல கட்சிகளுக்கும் பல சமயங்களில் உதவியது. பல சமயங்களில் பீதியையும் தந்தது.  இன்று வரையிலும் தந்து கொண்டிருக்கின்றது.

எழுத்துலக பயணத்தில் தொடக்கத்தில் இருக்கும் நான் வலைதளத்தில் இன்று அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வளர்ந்தமைக்கு முக்கிய காரணமே திரு. ஞாநி அவர்களின் ஓ பக்கங்கள் தந்த பாதிப்பு தான்.

ஞாநி என்றால் பலருக்கும் கசப்பு என்றே அர்த்தம் கொள்ளும் அளவிற்கு தனது விமர்சனத்தால் இதயத் துடிப்பை எகிற வைப்பவர். இவர் தளத்தை மட்டும் சரியான முறையில் பராமரிக்க நபர்கள் அமைந்தார்கள் எனில் நிச்சயம் இன்னமும் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும். இவரது விமர்சனங்களைக் கண்டு அரசியல்வாதிகளை விட பத்திரிக்கைகள் தான் அதிக அளவு பயப்படுகின்றது. ஆனால் தனது கொள்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல இவரது எழுத்துப் பயணம் பல பத்திரிக்கைகள் தாண்டி இன்று கல்கியில் ஓ.... பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

வலையுலகில் நமது சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஏதோவொரு வகையில் சுட்டிக்காட்டி விடும் வினவு தளம் போல எழுத்தாளர்களில் வெகுஜன பத்திரிக்கையுலகில் முக்கிய நிகழ்வுகளை தனது கட்டுரையின் மூலம் தனது எண்ணங்களை எடுத்து வைப்பதில் இவரே முதல் இடத்தில் இருக்கின்றார். படிப்பவருக்கு நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்று மனதிற்குள் எத்தனை தோன்றினாலும் இன்று வரையிலும் எழுத்தில் அறம் சார்ந்த கொள்கையை கடைபிடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றார்.

திரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.

ஒரு வட்டத்திற்குள் சிக்காத மனிதர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக எழுத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். ஏராளமான விமர்சனங்கள் எளிதாக கடந்து வந்தவர்.

முழுக்க முழுக்க தனது மனோபலத்தினால் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். 

சொல்லும் செயலும் வெவ்வேறாக வாழும் தற்போதைய சமூகத்தில் தன் மனதில் என்ன தோன்றுகின்றதோஅதையே தனது வாழ்வியல் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அது மற்றவர்களுக்கு பாதிப்பு தருகின்றது என்பதற்காக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதவர்.  நிச்சயம் ஆதரவு என்ற பெயரில் தனது சுயத்தை தொலைத்து இன்று வரையிலும் நிர்வாணமாக நிற்காதவர்.

திருப்பூரில் தமிழ் இணையத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும், எனது ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த தொழில் துறை நண்பர்களுக்கு ஞாநியின் வருகை அதிக ஆச்சரியம் அளித்தது.  எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை கொண்டு போய் கொடுத்த போது தொடக்கத்தில் கிண்டல் அடித்தார்கள். அவராவது உங்கள் விழாவிற்கு வருவதாவது என்றார்கள். விழா மேடையில் ஞாநியைக் கண்ட போது ஆச்சரியப்பட்டார்கள்.

தொழில் வாழ்க்கையில் சூறாவளி போல செயல்படும் அளவிற்கு இதிலும் உன் உழைப்பை காட்டிவிட்டாய் என்று இன்று வரைக்கும் ஆச்சரியத்துடன் பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். . .

காரணம் என் தகுதி எனக்குத் தெரியும். அவர் நிச்சயம் என் எழுத்துக்காக வந்துருக்காவிட்டாலும் பையன் ஏங்கிப் போய்விடுவான். வளரவேண்டிய பையன் என்று மனதில் யோசித்து இருக்கக்கூடும்.  

காரணம் எனக்கு தெரிந்த தெரியாத துறை எதுவென்றாலும் துணிந்து இறங்கி அது குறித்து முடிந்தவரைக்கும் கற்றுக் கொள்ளும் பழக்கம் இன்று வரைக்கும் என்னிடம் உள்ளது.  

என் வலையுலக எழுத்துப் பயணத்தில் புத்தகம் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்தவர் மற்றும் அதன் வழிப்பாதையை எனக்கு உணர்த்திக் காட்டியவர் திருமதி. துளசி கோபால்

மூன்று வருடங்களுக்கு முன்னால் புத்தகம் வடிவில் நமது எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது முதல் நான் அடைந்த ஏமாற்றங்களும், ஏக்க எண்ணங்களை மற்றவர்களை விட அதிகம் உணர்ந்தவர் திருமதி துளசிகோபால் அவர்களே.

எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் எனது முயற்சிகளையும் அவர் நன்றாக உணர்ந்தவர். ஆறுதல் படுத்தி அமைதி வார்த்தைகளால் என்னை வழி நடத்தியவர்.

டாலர் நகரம் வெளி வரப் போகின்றது என்ற முதல் தகவல் அறிக்கை என்ற மின் அஞ்சல் பார்த்து அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி என்பது  எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

சில கருத்துக்கள் நம்மை ஆறுதல்படுத்தும். பல சமயம் சிலரின் எழுத்துக்கள் நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இழந்து போன ஆற்றலை மேம்படுத்தும்.  அந்த வகையில் ஞாநி அவர்களின் எழுத்துப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.

இன்று இது போன்ற ஒரு விழாவை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நான் நடத்த முடியும் என்கிற வரையில் உயர்ந்துள்ளேன். வேண்டாத வேலை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தனி மனித முயற்சி என்பதாகவும் இதைப் பார்க்கலாம்.

இதன் மூலம் நான் சார்ந்திருக்கும் தொழிலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களை கற்றுள்ளேன். இன்னமும் எனக்கு புரிபடாத ஆச்சரியமான பல விசயங்கள் உள்ளது.  

நிச்சயம் அது குறித்து எழுதுவேன்.

இந்த விழாவில் திரு. ஞாநி அவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழா திட்டமிடத் தொடங்கிய போதே எனக்குள் ஒரு விதமான வேகம் உள்ளுற உருவாகிக் கொண்டேயிருந்தது. அவருடன் உரிமையுடன் பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற காரணத்தால் அவரைச் சந்திக்க சென்னை  சென்று அழைப்பு விடுத்து அணிந்துரை வேண்டுமென்று கேட்டேன். தல அதியமானும் உடனிருந்தார். .

எழுத்தாளர்கள் பல சமயம் சிந்தனையாளர்களாக இருப்பதில்லை அல்லது இருக்க விரும்புவதில்லை. தனது கடமை என்பதோடு அதை காசாக்கும் கலையில் கவனமாக இருப்பதால் படிப்பவனுக்கு எந்த நம்பகத்தன்மையும் தருவதில்லை. காலப்போக்கில் அது போன்ற எழுத்துக்கள் வெறும் காகிதமாகத்தான் மாறிவிடுகின்றது. ஆனால் ஞாநி அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு திராவக எரிச்சலை உருவாக்கும்.

இயல்பான ஆரோக்கியத்தை பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைத்தானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே? என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ஆனால் மனம் முழுக்க வக்ரத்தை சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்கு கேலியும் கிண்டலும் அவர் குறித்த தனிப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்து அழுகல் மணத்தை சுவைக்கத் தோன்றுவதாக இருக்கும்.

ஆனால் ஞாநி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட நான் பார்த்த கேட்ட பழகிய வரைக்கும் திறந்த புத்தகம் போலத்தான் இருக்கின்றது. எவருக்கும் உரிமை உண்டு. அவர் நடத்தும் கேணி கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். எது குறித்து வேண்டுமானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். வயது வித்தியாசமில்லாது அனைவரையும் அரவணைக்கும் பாங்கு இங்கே சிலருக்குத் தான் இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அந்த வட்டத்திற்குள் சிலருக்கு மட்டுமே அனுமதி.  வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறினால் மீண்டும் உள்ளே வரமுடியாது.

புகழ் மயக்கத்தில் தன்னை தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தை பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  எழுத்து துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது.

ஆனால் ஞாநிக்கென்று எந்த பாதையும் இல்லை. எல்லா சாலையும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போல தனது சிந்தனைகள் அனைத்தும் சமூக மாறுதல் குறித்தே இருக்கின்றது என்பதைத்தான் தனது ஒவ்வொரு கட்டுரை வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார்.

வளர்ந்த, பிரபல எழுத்தாளர்கள் கூட முகநூல், வலையுலகம் என்பதை எட்டிக்காய் போல எட்டி நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இல்லாது நவீன தொழில் நுட்பத்தையும் தனது இந்த வயதில் கூட தளராது பயன்படுத்திக் கொண்டு தன்னளவில் தோன்று சிந்தனைகளை நாள் தோறும் இங்கே விதைத்துக் கொண்டு இருக்கின்றார்.

இந்தியாவிற்குள் ஜனநாயகம் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் இவரிடம் உண்டு. இவர் முகநூலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்..

ஞாநி அவர்களிடம் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கோப்பை அவருக்கு அனுப்பி கேட்ட போது நிச்சயம் தருகின்றேன் என்றார்.  ஆனால் அப்போது புத்தகமாக வர வாய்ப்பில்லாது போய்விட்டது. மூன்று மாதங்களுக்கு முன் புத்தகம் உறுதியாக வெளி வரப் போகின்றது என்று சொல்லி அவருக்கும் மீண்டும் கோப்பு வடிவில் அனுப்பி வைத்து விட்டு காகித வடிவில் அவர் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தேன்.

ஒருவரிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அல்லது அந்த வேலை முடியாத போது தொடர் நினைவூட்டல் மூலம் அந்த காரியம் முடியும் வரைக்கும் அவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பது என் வழக்கம்.   இது திருப்பூரில் உள்ள தொழில் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பழக்கம்.

ஒரு வேளை காரியம் செய்து முடிக்க வேண்டியவர்களின் சூழ்நிலை இடம் தராத போது நானே இந்த வேலையை எடுத்து முடித்து விடுவது என் வாடிக்கை.  ஆனால் திரு. ஞாநி அவர்களிடம் நினைவூட்டலோ, தொடர் துரத்தல் எதுவும் இல்லாது வழக்கத்திற்கு மாறாக அவர் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைதி காத்தேன்.

சென்னை புத்தக கண்காட்சி, அவர் புத்தகங்களை அவரே அவரது சொந்த பதிப்பகத்தில் வெளியிடும் தன்மை, அது குறித்த தொடர் பணிகள், பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், இதற்கு மேலாக அவர் ஆரோக்கியம் திருச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவரின் தனிப்பட்ட பயணத்திட்டம் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டதோடு கண்களில் ஒரு கனவை சுமந்து கொண்டு தான்  நம்பிக்கையோடு இருந்தேன்.

மனதளவில் நம்பிக்கையை தளரவிடாத ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் கேட்ட அணிந்துரை வந்தபாடில்லை.  லே அவுட் முடியும் அந்த இறுதிக் கட்டம் தீ போல நேரம் என்னைச்சுற்றிலும் பரவி உடம்பே தகித்துக் கொண்டிருந்தது.

எனக்குத் தெரிந்து விட்டது.

அப்போது தான் அவர் குறுஞ்செய்தி வந்தது.  நிச்சயம் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தார். 

எனக்கு புரிந்துவிட்டது.  

அவர் ஏன் அணிந்துரை தரவில்லை என்பதை இந்த காணொளியில் நீங்க கேட்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

நான் ஏற்கனவே எழுதிய ஈழம் சார்ந்த விவகாரங்களில், அதைப் போல திருப்பூர் தொழில் சார்ந்த விசயங்களில் எனக்கு நேரெதிர் கருத்து கொண்டவர். ஆனாலும் அவரவர் கருத்துக்களுக்கு சுதந்திரம் அளிப்பவர்.  திருப்பூர் குறித்து ஞாநி அவர்களின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுற்றுச் சூழலை கெடுக்கும் முக்கிய நகரங்களில் முதன்மையான ஊர் திருப்பூர்.

அவர் எழுத்துலக அனுபவத்தை ஒப்பிடும் போது நான் எழுவதெல்லாம் அவருக்கு மிகச் சாதாரண அரிச்சுவடி சமாச்சாரம் தான். ஆனாலும் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது தான் நான் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதற்கு உதாரணமாகும்..  

ஆனால் என் தந்தை தாய் போல வாயார மனதார தன் மனதில் வைத்திருந்த என் எழுத்து குறித்து அப்பட்டமாக கூட்டத்தில் பேசி பெருமை சேர்த்த விதம் நான் இறக்கும் தருவாயில் கூட மறக்க இயலாது.

கமல் ஹாசன் விழாவில் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசிய போது அந்த மேடையில் அப்பொழுதே அதைப்பற்றி ஒரு வார்த்தை கமல்ஹாசன் சொன்னார்.

வேறு எவருக்கு இப்படி மனம் வரும் என்றார்.

இது அதிகப்படியான உதாரணமாக உங்களுக்குத் தோன்றும்.  காரணம் இந்த விழா நடக்கும் அந்த நேரம் வரைக்கும் சில காரணங்களால் அதிக மன உளைச்சலோடு இருந்தேன். காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்கு பல பாடங்களை உணர்த்திக் காட்டியது.

ஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.

வேறு எவருக்கும் இது போன்ற வாய்ப்பு அமையுமா? என்று எனக்குத் தெரியவில்லை

 திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டு வரும் திரு. தங்கராசு அவர்கள் (அலைபேசி எண் 98 43 94 40 44 ) வீட்டில் விழா அழைப்பிதழை கொடுக்க நேரிடையாகச் சென்ற போது ஞாநி கலந்து கொள்கின்றரா? என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒருவர் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு மேடையிலேயே வெளுத்து வாங்கியதைச் சொல்லி சிரித்தார்.

நிச்சயம் ஞாநி கலந்து கொண்டால்(?) உங்களின் உண்மையான தகுதி வெளியே தெரியும் என்றார்.

அவர் சொன்னபடிதான் கடைசியில் நடந்தது.

பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான் ஒரு முக்கிய பிரபல்யத்தை விழாவிற்கு அழைத்து வைத்து என் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளேன். 

என் அக்கா, மாமனார், மனைவி, சகலை, பள்ளிக்கூட நண்பர்கள், வந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேர்களும் திரு. ஞாநி அவர்களின் பேச்சை குறித்து தான் என்னிடம் சிலாகித்துப் பேசினார்கள். சிலர் முரண்டுபட்டு நின்றார்கள். நானும் ஞாநியைப் போல கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன் . மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரில் கலந்து கொண்ட விழாவில் தமிழ்மொழி பற்று குறித்து அவர் கொண்ட மாற்று சிந்தனைகளை தைரியமாக பேசு என்று தான் அவரை வழிமொழிந்தேன். அதே போல ஞாநி எனக்கு குட்டு வைத்ததை ரசிக்கவே செய்தேன்.

குறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம். 

அவர் சொன்ன வாசகம்.

காலை நான்கு மணிக்கு எழுப்பி ஒரு சட்டி நிறைய இட்லி, சாம்பாரை கொடுத்து விட எப்படி மனம் வந்தது. ஏன் வெளியே சாப்பிட மாட்டோமா? என்றார். எனக்கு அவர் உடல் நலம் முக்கியம். அவருக்கு பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம்.  ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்பது என் பாணி. ஆனால் நான் சொன்ன கருத்தை ஏற்காது விழா முடிந்தும் கூட என்னை துவைத்து எடுத்தார். மனைவியை ரொம்ப பாடுபடுத்தாதே. மூன்று தேவியர்களும் வளர்ந்து உன்னை உண்டு இல்லை என்று படுத்தப் போகின்றார்கள் என்றார்.

ஒரே ஒரு டாலர் நகரம் புத்தகத்தை அவருக்கு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் அவருக்கு நான் பெரிதாக செய்துவிடவில்லை.

எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழப் பழகிய அவர் வாழ்க்கையில் எந்த பெரிதான் விருதுகளும் இன்று வரையிலும் அவரைத் தேடி வரவில்லை.

இவரும் தேடிச் செல்லும் நபரும் இல்லை.

விருதுகள் பலவும் இன்று எருதுகள் சுமக்கும் நிலையில் இருப்பதால் சலனமற்ற நதி போல அவர் பயணம் எந்த எதிர்பார்ப்பின்றி போய்க் கொண்டே இருக்கின்றார். .

Tuesday, February 19, 2013

படம் காட்டும் பார்வையாளர்கள் படங்கள்

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் எதிர்பார்த்த, எதிர்பாராத நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். எதிர்பார்த்து ஏமாற்றம் அளித்தவர்களும் உள்ளனர். அவரவர் சூழ்நிலையை கருத்தில் எடுத்துக் கொண்ட போதிலும் வெகு தொலைவில் இருந்து இதற்காகவே வந்திருந்த நபர்களில் எனக்கு ஆச்சரியம் அளித்தவர்களில் முக்கியமானவர்கள்.

ராஜ்குமார் சின்னச்சாமி (கடைசி வரைக்கும் படம் காட்டிக் கொண்டேயிருந்தார். ஆனால் நிச்சயம் அருகே உள்ள ஊர் தான் சொந்த ஊராக இருப்பதால் வந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் வைத்திருந்தேன்.  குறுகிய காலத்தில் கூகுள் ப்ளஸ் ல் தன்னை சுனாமியாக அறிமுகப்படுத்தி இன்னமும் சூறாவளி போல களத்தில் இருக்கும் தம்பி. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் மனதில் பட்டத்தை, தான் நினைத்ததை அப்படியே அட்சரம் மாறது எடுத்து வைப்பவர்)

ராமச்சந்திரன் (பிகேஆர்)  இவரைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஊரில் இருந்து பேரூந்தில் ஏறும் போது நள்ளிரவில் ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பூருக்கு வந்து சேர்ந்ததும் ஒரு அழைப்பு. அன்பால் அசத்திவிட்ட தல.

ஜோசப் பால்ராஜ். இவரைத் தெரியும். ஆனால் அறிமுகம் இல்லை. என்னை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர். சென்னைக்கு வந்தவர் அண்ணன் விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்று அப்துல்லாவுடன் கிளம்பி வந்தவர். சென்னையில் இருந்து கிளம்பும் போது அப்துல்லா அழைத்துச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு அழைப்பு கூட அனுப்பவில்லை.

உண்மையான அன்பையும் அக்கறையும் காட்டிய தம்பி.

அருண்மொழித்தேவன். கோவை.  இந்த விழாவிற்கென்று கோவையில் இருந்து வந்து கலந்துகொண்ட போதிலும் கடைசிவரைக்கும் இவரை சந்திக்க முடியவில்லை. இவர் கையில் புத்தகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில் தம்பிமார்களின் வேலைப்பளூவினால் தவறவிட்ட கொடுமையும் உண்டு. பெருந்தன்மையாக கூகுள் ப்ளஸ் ல் எழுதிய பாங்கு பாராட்டக்கூடியது.

முகநூலில் தீவிரமாக செயல்படும் ஆகாயமனிதன். உறவோடு தளம் நடத்திய விழாவில் நேரிடையாக வந்து அறிமுகம் ஆனார்.  உங்கள் தளம் படித்து படித்து தான்  சாயப்பட்டறை பிரச்சனையில் மோகன் கமிட்டி செயல்பாடுகளை புரிந்து கொண்டேன். நானும் திருப்பூர் மண்ணின் மைந்தன் என்றாலும் உங்கள் எழுத்து தான் என்னை பலவற்றை அடையாளம் காட்டியது என்ற தம்பி.  இவர் அடையாள புகைப்படத்தைப் பார்த்து பல நாட்கள் 70 வயதுக்கு மேற்பட்ட நபராக இருப்பார் என்று மனதில் வைத்திருந்ததை உடைத்த தம்பி. எப்போதும் வெங்கல கடையில் புகுந்த யானை போல தான் சார்ந்திருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றும் சிபி செந்தில் குமார் விழாவில் அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியமே.

சேர்தளம் சார்பாக பலரும் வந்திருந்த தம்பிமார்கள்.

தொழிற்களம் சார்பாக வந்திருந்த பெண்கள் வரவேற்பு பணியை மற்றும் வருகை புரிந்தவர்களை குறிப்பெடுக்கும் வேலையை சிறப்பாக செய்தனர்.

வலையுலகத்தை அலற வைக்கும் திண்டுக்கல் தனபாலன் மண்டபத்தின் உள்ளே வந்து என் அருகே பின்னால் நின்று கொண்டு இன்று என்னால் வர முடியாது என்று சொல்லி கலாய்த்த தம்பி.

திரு. பழனி கந்தசாமி அவர்களுக்கு முதல் நாள் என் இடுகையின் தலைப்பை அவர் இடுகையில் போட்டு நீங்க அவசியம் வருவீங்கன்னு நினைக்கின்றேன் என்று தான் போட்டேன். மனுஷர் டாண் என்று முதல் ஆளாக கூட ஒரு துணை நபரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். 

இவர்கள் இருவரும் ஒரு கிளையில் பூத்த இருமலர்கள். பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.
எனக்கு நேரிடையாக அறிமுகம் இல்லாத போதும் கூட விழாவிற்கு முதல் நாள் ஒரே ஒரு அலைபேசி அழைப்பு. மனிதர் தனது வாகனத்தில் முக்கியமான நபர்களுட்ன் வந்த ஈரோடு திரு. தாமோதர் சந்துரு.

தனது திருமண பத்திரிக்கையை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த நாள் முதல் இன்று வரையிலும் என்னுடன் நல்ல புரிதலோடு இருக்கும் சஞ்சய் காந்தி.

இந்த விழாவின் தொடக்கப்புள்ளி முதல் கடைசி வரைக்கும் மறைமுகமாக பல விதங்களில் எனக்கு உதவிய தம்பி சிந்தன்