OCR (Optical Character Recognition) ஓசிஆர்
மென்பொருள்களின் முக்கிய நோக்கம் பழைய ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்து
அவற்றை மீண்டும் புதிய வகையில் பதிப்பிப்பதற்காக, திருத்தம் செய்யும் வகையிலான கோப்புகளாக
உருவாக்குவதே ஆகும். மேலும் கோப்புகளை விரும்பும் வகையில் ஃபார்மெட் செய்யலாம், பல்வேறு
டிவைஸ்களில் பயன்படுத்தும் வகையில் கோப்புகளை மாற்றியமைக்கலாம்.
ஆங்கிலத்தில் ஏராளமான
வர்த்தகரீதியான மற்றும் கட்டற்ற இலவச மென்பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் இந்திய மொழிகளில்,
அதுவும் தமிழ் மொழியில் சிறப்பான ஓசிஆர் மென்பொருள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
ஏன் உருவாக்கப்படவில்லை? என ஒரு கேள்வி எழலாம்.
அதற்கு ஓரளவிற்கு இந்த கட்டுரை பதில் கூறும். தமிழ் ஓசிஆர் மென்பொருள் உருவாக்கப்படுவதில்
எழக்கூடிய இடையூறுகள் பற்றி காண்போம்.
Scan:
பெரும்பாலும் ஓசிஆர் மென்பொருட்களின் முக்கிய
நோக்கமே பழைய ஆவணங்களை புதுப்பிப்பதே ஆகும். எனவே அவ்வகை பழைய ஆவணங்களின் பதிப்பு சற்று
சேதப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே இவ்வகை ஆவணங்களை ஸ்கேன் செய்யும்பொழுது
அதில் தெளிவற்ற படங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகின்றது. இந்த தெளிவற்ற படங்களிலிருந்து
ஓசிஆர் மென்பொருள் மூலம் துல்லியமான எழுத்து வடிவங்களை கொண்டு வருவது என்பது மிக கடினமான
வேலையாகும்.
Font:
தமிழில் Unicode, Non-Unicode என இருவகைப்பட்ட
ஃபோண்ட்கள் உள்ளன. யுனிகோட் வகை ஃபோண்ட்களை இணையத்தில் பரவலாக பயன்படுத்தி வருகிறோம்.
புத்தக பதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் இந்த யுனிகோட் வகை ஃபோண்ட்களை
சப்போர்ட் செய்வதில்லை. எனவே இப்படிப்பட்ட மென்பொருட்களில் non-unicode வகை ஃபோண்ட்களே
பயன்படுத்தப்படுகின்றது. இவற்றிலும் tscii, tab, tam, shrilipi போன்று பலவகையான ஃபோண்ட்கள்
உள்ளன. ஒவ்வொரு பதிப்பாளரும் தனக்கென ஒவ்வொரு வகையான ஃபோண்ட்களை பயன்படுத்துகின்றன.
எனவே ஓசிஆர் உருவாக்கப்படும்போது ஒவ்வொன்றின் எழுத்து வடிவம், அவற்றின் நுணுக்கமான
வேறுபாடுகள் என எல்லாவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
Script:
தமிழ் மொழியின் எழுத்து வடிவமைப்பு ஓசிஆர்
உருவாக்கத்தில் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சமாகும். மேற்கண்ட படத்தில்
காணுமாறு எழுத்துக்கள் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைகின்றது. மேல்பகுதி மற்றும் கீழ்பகுதி
பிரிவில் வரும் வளைவுகள் எந்தெந்த எழுத்துக்களுக்கு எப்படி வரும் என்பதையும் நடுவில்
உள்ளவற்றோடு அவற்றை ஒத்திசைத்து முழு எழுத்தாக வெளிக்கொண்டு வருவது ஓசிஆர் நுட்பத்தில்
மிகவும் கடினமான செயலாகும். மேலும் கா, மெ, போன்ற துணையெழுத்துகள் வரும் எழுத்துக்களை
இணைத்து கொண்டு வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியாதகும். இவை தவிர, தமிழ்மொழியில்
ஏற்படும் ல-வ, க-சு, ன-ள போன்ற எழுத்துக்களின் வடிவ ஒற்றுமை பல சமயங்களில் குழப்பம்
விளைவிக்கும் ஒன்றாகும்.
மேலும் italic, bold போன்ற ஸ்டைல்கள் கலந்து
வருவது, பலவகை ஃபோண்ட்கள் கலந்து வருதல், பல்வேறு எழுத்து அளவுகள் கலந்து வருதல், பழைய
கிரந்த எழுத்துகள் கலந்திருத்தல், படங்கள் இணைந்திருத்தல், column பிரச்சினை போன்ற
எல்லா வகையான இடையூறுகளை சமாளிக்கும் வகையிலான மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும்.
இதுவரை தமிழ் ஓசிஆர் மென்பொருள் வளர்ச்சியில்
எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளைக் காண்போம். 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு PonVizhi எனும் தமிழ் ஓசிஆர்
மென்பொருளை வெளியிட்டது. இந்த மென்பொருள் ஆவணங்களின் ஸ்கேன்கள் துல்லியமாக இருந்தால்
90% சிறப்பாக எழுத்துக்களை பிரதியெடுக்கின்றன. இருந்தபோதிலும் இந்த மென்பொருள் ஒரு
ஆரம்ப நிலை மென்பொருளாகவே இருக்கின்றது. இதுவரை இதில் பெரிதான மேம்பாடுகள் எதுவும்
வரவில்லை. இதுபோக இணையத்தில் gTamilOCR
எனும் மென்பொருளும் கிடைக்கின்றது. இது எவ்வகையில் செயல்படுகின்றதென தெரியவில்லை.
ஒரு முழுமையான தமிழ் ஓசிஆர் மென்பொருளை உருவாக்க
மென்பொருள் வல்லுநர்கள் முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் மட்டுமின்றி இந்திய
மொழிகள் பலவற்றிற்கும் ஓசிஆர் மென்பொருட்கள் உருவாக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று
வருகின்றன. புதிதாக முயற்சிப்பவர்களுக்கும், அதற்கான அடிப்படை மூலங்களும் தேவையான தகவல்களுக்கும்
இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. கடினமான உழைப்பு மற்றும் முயற்சியுடன் முனைந்தால்
நிச்சயம் மேற்கண்ட அனைத்து இடையூறுகளையும் சரிசெய்யும் வகையிலான மென்பொருளை உருவாக்குவது
சாத்தியமே. ஆனால் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. இம்முயற்சி வெற்றியடைந்தால்
அடுத்ததாக கையெழுத்துப் பிரதிகளை படியெடுக்கும் Handwriting recognition மென்பொருள்
உருவாக்கத்திற்கு அடியெடுத்து வைக்கலாம்.

