Thursday, November 05, 2009

இரவுப்பறவை

இயலாமை என்பது அக்கறையின்மையின் பக்கத்து வீட்டு பங்காளி.

தமிழன் என்ற இனத்தில் இன்று வரையிலும் இயலாமை என்ற வார்த்தை வசதிகளுக்கு ஏற்றபடி மாறி வந்து கொண்டேதான் இருக்கிறது.  காலம் மாறும்.  காட்சிகள் மாறும்.  ஆனால் மாற்றம் ஏதும் பெறாமல் இந்த இயலாத்தனம் மொத்தத்தையும் மற்ற இனத்தை விட தமிழினம் அதிகமாக பெற்றுள்ளது.

மாற்றம் என்பது மாறாதது.  ஆனால் இங்கு மாற்றம் ஏதும் இல்லை.

இத்தனை இயலாமையா? நம்முடைய தமிழின முன்னோர்களிடம் இருந்தது என்று வழிநெடுக பல உதாரணங்கள் பார்த்த போதும், கீழே உள்ள உதாரணத்தை பார்த்தபோது இன்று பார்த்துக்கொண்டுருக்கும் அவலத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது.

தில்லி அரசாட்சி நடத்திக்கொண்டு இருந்தவன் (கிபி 1311) மாலிக்காபூர் என்ற அலி மன்னர்(?).  நம் ஊரை நோக்கி படையெடுத்து வரப் போகிறார் என்ற செய்தி வந்தது.  செய்தி கிடைத்ததும் தான் தாமதம் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் (ஊர் குறிப்பு இல்லை) உள்ள அத்தனை பொதுமக்கள் செய்த செயலை அங்கு சேவை பணியில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்கள் போப்பிற்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளனர்.

"ஊர் மக்கள் அனைவரும், ஊரின் திறந்த வெளிக்குத் திரண்டனர்.  ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், குழந்தைகள் என்று இன்ன பிறர், அவர்களுடன் கூடத் தாம் வளர்த்த ஆடுகள், மாடுகள் அனைத்தையும் ஒருங்கு கூட்டினர்.  அனைவரையும் சுற்றிப் பெரிய விறகுகளைக் கொண்டு வந்து விறகு வேலி அமைக்கப்பட்டது.  முடிவில், விறகு வட்டத்தின் உள்ளே திரண்டிருந்த ஊர்மக்கள், விறகுகளுக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டனர்.  அனைவரும் கதறிக் கதறித் தீயில் வெந்து செத்தனர்"

தடுக்க முயன்றவர்கள் தட்டுத்தடுமாறியது தான் மிச்சம்.  வேறு என்ன அவர்களால் செய்து விடமுடியும்?

தொடக்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் வீரம் என்பதை வீரனாக வாழ்ந்து காட்டினர்.  ஓரளவிற்கேனும் நாகரிகம் என்பது தவழத் தொடங்கிய காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு 500 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் பயணத்தின் மூலமாக வந்த அத்தனை மேலைநாட்டினரும் கடல் கடந்து வாணிபம் செய்ய என்ற போர்வையில் உள்ளே வந்து அத்தனை நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள்.

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்களான சோழர்கள் நான்கு வகையான படைகளையும் தாங்களே வடிவமைத்து, பயணம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய நாடுகளின் பட்டியல் இது.

கடாரம் (மலேசியா), சீயம் (தாய்லாந்து), சாவகம் (இந்தோனேசியா), குமர் (கம்போடியா), புட்கம் (பர்மா), சிங்களம் (இலங்கை).

கற்பனையில் கொண்டு வாருங்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, மற்ற போர் வீரர்கள், தேவையான உதவியாளர்கள், என்று இத்தனை பேர்களுக்கும் தேவையான அன்றாட தேவைகள்.  ஆயிரம் மைல்களை கடந்து சென்றதோடு அல்லாமல் அத்தனை இடங்களிலும் வெற்றிக்கொடிகட்டு என்று வெற்றியை நாட்டிய இவர்களின் வீரத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்து விட முடியுமா?

வளர்ந்த இன்றைய தொழில் நுட்பத்தில் இன்று எத்தனையோ ஓட்டைகள்.  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏராளமான தொழில் நுட்ப உதவிகள் இருந்தாலும் வீரம் என்பது என்னவென்று தெரியாதவர்கள் ஏதோ ஒரு குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆளுமை செய்து கொண்டுருப்பவர்களை எந்த வகையில் கொண்டு வருவீர்கள்?

அவர்கள் முதிர்ச்சி அடையாதவர்கள், முன்னேற்றத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் என்று எளிதான வார்த்தைகளுக்குள் அடக்கினாலும் தமிழனின் வீரம் என்பது மற்ற எந்த இனத்தையும் விட மாசற்றது.  விளங்கிக்கொள்ள முடியாத கால நிலை, பருவ நிலை, சூழ்நிலை, அத்தனையும் தங்களுடைய வீரம் ஒன்றினால் மட்டுமே சாதித்து காட்டியவர்கள்.

சென்ற இடங்களில் எவரும் காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டவில்லை.  எதையும் திணிக்கவில்லை.  புலிக்கொடியை பறக்க விட்டத்தில் அவர்களின் புனிதப்பயணம் முழுமை அடைந்தது.  ஆமாம்.  கல்வெட்டுகளும், காப்பியங்களும், இலக்கியங்களும் அவ்வாறு தான் ஒப்புவிக்கினறன.

பொருளாதார ரீதியாக அங்குள்ளவற்றை இங்கே கொண்டு வராத மன்னர்கள் கூட ஆச்சரியமாக தெரியவில்லை.  ஆனால் கல்வெட்டுகள், குறிப்பேடுகளில் கூட சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழியாக அங்கங்கே பரிணமிக்கின்றன.  வீரமாய் இருந்தவர்களை விவேகம் கொண்டு அருகில் இருந்தவர்களின் அற்புத ஆலோசனைகள் விளைவாக உருவானது.

தன்னுடைய பலம் என்பதையே பலவீனமாக கருதிக்கொண்டவர்கள்.  இன்று வரையிலும் அதுவே தொடர்ந்து கொண்டுருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

மரபுக்கோளாறு ஒரு பக்கம்.  மாற்ற முடியாத சிந்தனைகள் மறுபக்கம்.
மரபு சார்ந்த விசயங்களில் அத்தனை மயக்கம் நம்முடைய தமிழனத்திற்கு. பேரனுக்கு தாத்தாவின் பெயரை சூட்டுவதுடன் நம்முடைய கடமை முடிந்து விடுகிறது.  பண்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை எளிதில் மறந்து மறைத்து விடுகின்றோம்.  ஆளுமை என்பதில் உள்ள உண்மையான அர்த்தத்தை உணர்த்த தவறி விடுகிறோம்.  அவனே அது உணரும் போது அனர்த்தமாகிவிடுகிறது.
நம்முடைய ஆற்றலை நாம் உணராத போதும் கூட நம்மை ஆள வந்தவர்கள் மிக எளிதாக உணர்ந்தார்கள்.  நம்மிடம் உள்ள உழைப்பை மிக எளிதாக கண்டு கொண்டார்கள்.
ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகித்துக்கொண்டுருந்த பிரேசில் நாட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 20 ரப்பர் செடிகளை திருட்டுத்தனமாக மலேசியா நாட்டுக்கு கொண்டு வந்தவர் வெள்ளையர் (1877) சர் ஹென்ரி விக்ரஹாம் என்பவர். ஆனால் மலேசியாவை மொத்த ரப்பர் காடாக மாற்றியவர்கள் அத்தனை பேரும் இங்கிருந்து அழைத்துச் சென்ற நம்முடைய
தமிழின மக்கள்.

இங்கு மட்டுமல்ல.  இலங்கை, பீஜீத் தீவு,யூனியன் பிரதேசங்கள், ஆப்ரிகா வைரச்சுரங்கங்கள் அத்தனை உழைப்பும் தமிழனத்தின் உழைப்பு. ஆமாம் உழைப்பு மட்டும் தமிழனத்தின் பங்கு.  கிடைத்தபங்கு அத்தனையும் எடுத்துக்கொண்டு போனவர்கள் வெள்ளை மக்கள்.

எடுத்தார்கள்.  போனார்கள். 
வென்றார்கள். வாழ்ந்தார்கள்

வசதியான இடத்தில் இருந்து கொண்டு இன்று நமக்கே அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நாம் ?

நாம் இன்று உணரத் தயாராய் இருந்தாலும் நம்மை ஆட்சி செலுத்திக்கொண்டுருப்பவர்களின் அக்கறை என்பது அக்கரையில் உள்ளவர்களின் வாழ்க்கையை விட மோசமாகத்தான் இருக்கிறது.  அவர்களின் வாழ்வியல் அவலம் வெளியே தெரிகிறது.  இங்கு உள்ளே சிறிது சிறிதாக கட்டுமானத்தில் உள்ள கற்கள் உருவப்பட்டுக்கொண்டுருப்பது தெரியாமல் இந்தியா ஒளிர்கிறது என்பதை உரத்து வாசித்துக்கொண்டுருக்கிறோம்.

எத்தனை தடைகளை அமெரிக்கா அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு விசா கெடுபிடிகளை உருவாக்கினாலும் பில்கேட்ஸ் குரல் முதன்மையாக எதிர்த்து குரல் வருகிறதே?  காரணம் புரிந்தவர் கணக்கற்ற சொத்துக்கு அதிபதி.  காரணத்தை உணர நேரமில்லாமல் தினந்தோறும் வளர்ந்து கொண்டுருக்கும் ஊடகத்தின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிக்கொண்டுருக்கிறோம். ரசித்துக்கொண்டுருக்கிறோம்?

வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம்.  உருவாகி உள்ள வாய்ப்புகளை உன்னதமாக பயன்படுத்த தெரியாத முட்டாள் தனம் மறுபக்கம்.
உணர்ந்தவர் ஏறுவதில் ஆயிரம் தடைக்கற்களை போட்டு வைப்பது ஒரு பக்கம்.  ஓய்ந்து போனவர்களை பார்த்து "பார்த்தாயா?  நான் அப்பவே சொன்னேன்ல?" என்பவர் மறுபக்கம்.
பிய்ந்து போன செருப்பை தைக்கக்கூட தெருவில் ஆள் கிடைக்கிறார்கள்?   நைந்து போன மனத்துடன் வாழும் தமிழனை காக்க எந்த அவதாரம் மனித ரூபத்தில் வரப்போகின்றான்?

தமிழனின் வாழ்வியல் தொடக்கம் முதல் இன்று வரையிலும் உள்ள தொடர் சிந்தனையோட்டம் இது.

முன்னெடுத்துச் செல்லும் உங்கள் கரங்கள் அளிக்கும் ஓட்டுக்கு நன்றி.
விமர்சித்து தொடர்பவர்களுக்கு வணக்கம்

Wednesday, November 04, 2009

துளசிதளம்

தமிழனத்தின் முன்னோர்களும், அரசாண்டவர்களும், ஆளுமை செய்தவர்களும் என அத்தனை பேர்களும் ஆண்டவன் விசயத்தில் " குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா"  என்று தான் வாழ்ந்து இருக்கின்றனர்.

அத்தனை மன்னர்களும், தமிழினமும் " இறையே" என்ற ஒரு குறிசொல்லில் மொத்தத்தையும் மறந்தனர்.

ஏன்?    தன்னையே உணர தயங்கினர்.

புனிதம்,புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளில் புதிராகத் தான் வாழ்ந்து போய் இருக்கின்றனர்.   அடுத்தவரிடம் "அன்பு செலுத்தி" தன்னை நிலைநாட்டுவதற்கு பதில் " எல்லாம் சிவமயம்" என்பதற்குள் முடித்து விட்டனர்.  முடிந்தும் போயினர்.  இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் என்ன வித்யாசங்கள் என்று தெரியாமலேயே ஆண்டவர்களும் வாழ்ந்தனர்.  ஆட்சியில் வாழ்ந்த மக்களும் வாழ்ந்தனர்.

வாழ்ந்தவர்களுக்கு " ஆண்டவனே.........." என்று கடைசி வரையிலும் கதியாய் இருந்தார்கள்.  வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்கதிக்கு அழைத்துக்கொண்டு சென்ற போதிலும் எவருக்கும் மாற்றம் தேவையாய் இல்லை.  முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் என்று பார்த்துக்கொண்டவர்களுக்கும் பெரிதான ஆசைகளும் இல்லை.
வாழ்ந்தவர்கள் நெஞ்சில் சுமந்த லட்சியங்கள் இல்லாமல் பின் தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர்.

காரணம் தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது இன்று நேற்று வந்தது அல்ல.  அன்றே தொடங்கியது.  ஆனால் இன்று வரையிலும் விடாமல் தொட்டு தொடர்ந்து கொண்டு வந்து கொண்டு இருப்பது?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாமரன், பாதிக்கப்பட்டவன், அறிவாளி, அறிவற்றவன் என்ற எந்த வித்யாசங்களும் இல்லை.  மன்னர் முதல் கடவுள் வரைக்கும்.

உயர்வு நவிற்ச்சி அணி என்றாலும், வஞ்சப்புகழ்ச்சி அணி என்றாலும் அணி அணியாக கழுத்தில் தொங்கும் மணியாக பாதுகாத்துக் கொண்டு பயணித்துக்கொண்டுருப்பவன் தமிழன்.  அந்த தாழ்வு மனப்பான்மையே தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை வாழ்த்தி வரவேற்பது.

இன்று?

" உங்கள் பாதம் பட்டதால் இந்த மாவட்டமே புனிதமாகி விட்டது."
"வாழ்த்த வயதில்லை.  உங்களை வணங்குகிறோம்.  "

அன்று "ஆண்டவா காப்பாற்று " என்பது கூட குற்றம்.

" நான் புழுவினினும் சிறியேன்.  தொண்டர் அடிப்பொடியேன்"

"ஒரு பூனையானது பாற்கடலில் உள்ள பாலை நக்கிப் பருகுவதற்கு முயல்வது போல நான் ராமபிரானின் கதையை எழுதுகிறேன்."

அவையடக்கம் என்ற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது என்பது அன்றைய கம்பன் முதல் இன்றைய வம்பன்கள் வரைக்கும்.

"வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்" என்று எளிதாக அழைத்து விட முடியும்.  முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும்.

" மன்னா இது உன்னுடைய உழைப்பின் வெற்றி.  இதற்கு மூலகாரணமே உன்னுடைய திட்டங்களும் முன்னேற்பாடுகளும் உழைப்புமே.  இதற்கு ஏன் ஆண்டவனிடம் போய் நிற்கிறாய்.  வாருங்கள் அடுத்த கடமைக்கு உழைக்க தயாராய் ஆவோம்"

"ஐயகோ.  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.  இது இறைவன் அளித்த பிச்சை"

" அப்படியென்றால் புயல்,வெள்ளம்,மழை தாக்கி வீடு இழந்து நாட்டில் நிர்கதியாய் இருப்பது?"

" விதிப்பயன்.   மாறும்.  மாற்றம் அடையும் வரை பொறுத்து வாழ்வதே சிறப்பு."

உரையாடல்களின் மூலம் அன்றும் இன்றும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?

இப்போது புரியுமே?

நிர்மூலமாய் இருப்பவர்களின் வினைப்பயன் என்பதால் தானே அதிகாரம் எழுதியவர்கள் கூட அதிசயமாய் பார்த்துக்கொண்டுருப்பது.

காலத்தை விஞ்ஞானம் மாற்றி உள்ளது.  ஆனால் மனத்தை மாற்ற எந்த கருவியும் கண்டு பிடிக்காத ஒரே குறையினால் தான் இன்னமும் குறைத்துக்கொண்டுருக்கிறோம்.

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் வசதியான சூழ்நிலையில் வாழ்வாதார பிரச்சனைகளை வெறும் செய்திகளாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இத்தனையிலும் ஒரு ஆச்சரியம்.

தமிழினம் தம்மைப்பற்றிய உணராத பெருமைகளை, அன்று வாழ்ந்த மன்னர்கள் உணர முடியாத நிதர்சனங்கள் இங்கே உள்ளே வந்தவர்கள் உணர்ந்தது மட்டும் அல்லாமல் உள்வாங்கியதை வெளிப்படுத்திய விதம் மொத்தத்தில் ஆச்சரியமாய் இருக்கிறது.

" தமிழரின் மூதாதையரான திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள்.  உலகில் மிகப் பழைமையான உயர்ந்த நாகரிகமான சிந்து சமமெளி நாகரிகத்திற்கு இவர்கள் சொந்தக்காரர்கள்"

சிந்துவெளி அகழ்வராய்ச்சி மூலம் வெளிப்படுத்திய ஸ்பானீஸ்காரரான  ஹீராஸ் அடிகளார்.  இன்று தமிழ் பெயர் நாகரிகம் இல்லை என்று ரோஷணா, ரோஷன் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைக்கின்றோம்.  அவரின் பெயரை பார்த்தீர்களா?

" திருக்குறளை லத்தீன் மொழியில் உரைநடையாக மாற்றி வெளியிட்டவர் " இத்தாலியராக உள்ளே வந்த பெஸ்கி.  ஆனால் இவருடைய மற்றொரு பெயர் உங்களுக்கு எளிதாக தெரியும்.  ஆமாம்.  வீரமாமுனிவர்.

" திருவாசகம் படித்து அதில் உருகிப்போய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தமிழ் பக்தி இலக்கியத்தை மேலை நாடுகளுக்கு பரப்பியவர்"

ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர்.  இவர் இறக்கும் போது கூட தனது கல்லறையின் மேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வைக்கச் சொன்னவர்.

இவையெல்லாம் ஒரு கனாக் காலம் என்று கேள்வி குறியையோ, அல்லது கேலிக்குறியையோ உங்களுக்குள் உருவாக்கும்.  சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதரைப்பற்றி, " உண்மையான மகான் " பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
                                                                                       வீரமாமுனிவர்
அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த எந்த தமிழ் தலைவர்களும் செய்யாத சிறப்பை இவர் செய்தவர்.

ஆமாம் தமிழ் மொழியை தனது நாட்டு மொழியாக, தேசிய மொழியாக, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சிறப்பு கொடுத்த மனிதர்.

ஆனால் தமிழர் அல்ல.  சீனர்.

ஆமாம் ஐயா லீ குவான் யூ.
சிங்கப்பூர் என்ற நாட்டை தான் ஆட்சியில் இருந்த 50 ஆண்டுகளில் அடுத்த நூற்றாண்டுக்கு தகுந்தது போல் நகர்த்தி காட்டியவர்.  உண்மையான செயல் வீரர்.  இன உணர்வை தூண்டி என்றும் " இளிச்சவாய்தனமான மானம் இல்லாதவனாக வாழ் நீ "  என்றவர்களுக்கு மத்தியில் அறிவை உந்து சக்தியாய் ஆளுமை என்பது உனது அடக்கமும் உழைப்பும் முக்கியம் என்பதை உணர்த்திக் காட்டியவர்.  பிரிவினை என்பது எதையும் வளர்த்து விடாது என்பது நிதர்சனமான கொள்கையினால் மக்களுக்கு உணர்த்திக் காட்டியவர்.

இப்போது புரியுமே?  புனிதம் என்றவர்களுக்கும், எதுவுமே புதிர் அல்ல என்று சொன்னவர்களுக்கும் உள்ள வித்யாசங்கள்.

"தமிழுக்கு அமுதென்று பெயர்"

ஆனால் அதிகமாக குடித்து வாழ்ந்தவர்கள் மயங்கி கிடந்தாலும் இங்கு வந்தவர்கள் மற்றும் தமிழ்ர்கள் அல்லாதவர்கள் பருகிய ஒரு துளி பல விசயங்களை உலகிற்கு உணர்த்த உதவியாய் இருந்து இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கை என்பதும், தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது அவரவர்களின் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொள்வது.  அதுவே ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை உணர வைத்துக்கொண்டுருப்பதும்.
ஜி.யூ.போப்
உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது.

கிடைக்கும் அத்தனையும் நம்மை நாசகார செயல்களில் இறக்கி விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட உருவகம் அது.

காரணம் எல்லையில்லா அறிவென்பது உங்கள் ஆளுமைக்குள் இல்லாவிட்டால் எங்கு போய் நிறுத்தும் என்பதற்கு இன்று பூமியை பல நூறு அடிகள் போய் ஊடுருவித் தாக்கும் ரசாயன குண்டுகள் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட மனித இனம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

ஓலமாய் முடிந்து போனவர்களின் வாழ்க்கை எதை உணர்த்துகிறது?

ஆனால் வெறும் நம்பிக்கைகளை, அதுவே வாழ்க்கையாய், சாப்பாடு போல் உண்டு கொழுத்து அழிந்து போனவர்கள் பின்பற்றியவர்கள் மட்டும்.

ஆனால் சொல்லிக் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள், அவர்கள் மட்டும் தெளிவாக வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.

தொடர்ந்தவர்களின் வாழ்க்கை மட்டும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க்கை நிர்மூலமாகிக்கொண்டுருக்கிறது.

தமிழனின் வாழ்வியலில் "அது ஒரு கனாக் காலம்" முதல் இன்றைய "கதி கலங்கிக் கொண்டுருக்கும் காலம்"  வரையிலும் உள்ள சிந்தனை தொடர் ஓட்டம் இது.

சிறப்பு என்றால் "ஓட்டுப் பட்டையின் " மூலம் மூலத்தை தமிழனின் முகவரி ஆக்குவோம்.

வெறுப்பு என்றால் "விமர்சனம்" :மூலம் ?.

Monday, November 02, 2009

ஈர வெங்காயம்

"இங்கே வந்துருக்க ஆல் வ்யூர்ஸ்க்கு நமஸ்தே அண்டு குட்மார்னிங்.  நைன் ஏஜ்ல கலக்கல் பர்பார்மன்ஸ் கொடுத்துட்டு போயிருக்க குட்டீஸ்களின் சிங்கிங் பாத்து நீங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  வாட்ச் பண்ணிக்கிட்டுருக்க ஜட்ஜ்டோட கமெண்ட்ஸ் நல்லா கலர்புல்லா இருக்குது.  உங்களோட கிளாப் நல்ல மகில்ச்சியை தந்தது போல நம்ம சீப் கெஸ்ட் ஒரு சாங் பாடி நமக்கு ஹேப்பியை தருமாறு கேட்டுக்கொல்கிறன்"

அசாத்திய திறமை படைத்த குழந்தைகளை தனது சூரத்தனத்தால் வழிநடத்துடம் இந்த ஊடக தமிழ் மொழி உங்களையும் என்னையும் வந்து "காது குளிர" வைத்துக்கொண்டுருந்தாலும் தமிழ் மொழியின் ஈரம் இன்னும் குறையவில்லை.


நடைமுறை தமிழ் எத்தனை இருட்டுக்குள் இருந்தாலும் தமிழரின் தமிழ் மொழியின் வீச்சை இன்று வரையிலும் எவராலும் நிறுத்த முடியவில்லை.
என்ன தான் நிறுத்த முயற்சித்தாலும், தமிழ் உள்ளே பேசினாலும் தண்டனைக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்ன போதிலும் அத்தனை மம்மிகளும் கும்மியடித்துக்கொண்டே தான் படையெடுத்துக்கொண்டுருக்கிறார்கள்.

படையெடுப்பாளர்கள் வந்து அவர்களின் நவரசத்தை நிலைநாட்ட இங்குள்ள பரவசத்தை பாடையில் ஏற்றினாலும் சரி, இப்போது உள்ள "தமிழ் படித்து என்ன ஆகிவிடப்போகிறது" என்று "தமிழ் மணம்" வீசினாலும் சரி தமிழ்மொழி என்பது இன்று வரையிலும் உங்கள் விழி போல் ஓளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது.

உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது.  இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது.  தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள்.  இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா?  சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.

கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும்,  குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது.  அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது.

ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது.  ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று?

3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று?

மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?

புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.

இவையெல்லாம் காத்து இருப்பு பட்டியல் அல்ல?  காணாமல் போன மொழிகளின் பட்டியல்?  ஆனால் தமிழனின் தமிழ்மொழி?

இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தை படித்துறையில் அமர்ந்து கொண்டு நாம் பார்க்கும் ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தமிழ் மொழியின் ஈரம் குறையவில்லை. அதன் மூலம் மாறவில்லை.  முகவரி மாறி உள்ளதே தவிர முகத்தில் ஒப்பனைகள் சேர்ந்து உள்ளதே தவிர அழகு குறையவில்லை.

இன்று வரையிலும் எத்தனையோ நல்லவர்கள் உள்ளே வந்து வளர்க்கின்றோம் என்று தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிர தமிழ் தாய்க்கு வளர்ப்பு தாய் தேவையில்லாமல் சுயமாக சுயம்புவாக  நம்மை காத்துக்கொண்டுருக்கிறாள்.

அதன் வீச்சை குறைக்க முடியவில்லை.  உள்வாங்குதல் குறையவில்லை.  ஈரமாக இருக்கும் நாவில் வருவது குழந்தை தமிழாக இருக்கட்டும்.  உளறல் தமிழாக இருக்கட்டும்.  தங்கிலீஸாக இருக்கட்டும்.  தடுமாற்றத் தமிழாக இருக்கட்டும்.

ஆனால் இன்னமும் அழியவில்லை.  அழியாது.

கெட்டுப்போயுள்ளது. நம்மை விட்டுப் போய்விட வில்லை.  இன்னமும் உரித்துக்கொண்டே பயணித்துக்கொண்டு இருக்கிறது.  நம்மை மொத்த தமிழினத்தை இணைத்து வைத்துக்கொண்டுருக்கிறது.

எத்தனை கோபக் கணைகளை தமிழ் திரைப்படங்களை நோக்கி உங்கள் பார்வை பாய்ந்தாலும் உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழனத்தையும் நல்லவிதமாக கெட்டவிதமாக தன்னுடைய மூல மொழியை இது உன்னுடைய முகவரியின் மொழி என்று நினைவில் வைத்து இருக்க உதவிக்கொண்டுருப்பவர்கள் இந்த ஊடக பிரம்மாக்கள் தானே?

சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும்.  வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே?  தமிழ் மொழி என்றால் விழி மருகி அக்கம் பாக்கம் பார்த்துக்கொண்டே பயந்து கொண்டே பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடிபவர்களும், மருகி பார்வை பார்ப்பவர்களும் விரும்பு நாயக நாயகிகளை எந்த மொழி கொண்டு கனவில் கட்டிப்பிடிக்கிறார்கள்?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை ஒரு பக்கம் கிடக்கட்டும். உண்மையான தமிழ் மக்கள் விரும்பும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாறித் தொலையட்டும்.  கற்பித்து கொடுத்துக்கொண்டுருக்கும் ஆங்கிலம் மூலம் அத்தனை கலப்பின சிந்தனைகள் உருவாகட்டும்.

பெரியாரின் முன்னோடிகளும் சரி, பின்னோடிகளும் சரி வேறு வழியில்லை. இந்த தமிழ் என்ற வெங்காயத்தை உரித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.  அவனால் ஆங்கிலத்தையும் மூலம் அறிந்து கற்றுக்கொள்ள விரும்ப மாட்டான்.  தமிழ் மொழியை தகறாறு இல்லாமல் யோசித்துப் பழக மாட்டான்.  குறை பிரவசத்தை குதுகலப் பிரசவம் போல் இன்று நேரம் குறித்து குத்திக் கிழிப்பவனிடம் போய் நீங்கள் என்ன பெரிதாக எதிர்பார்த்து விட முடியும்?

கிராமத்தில் கடைக்கோடி தமிழன் வாழ்க்கை அழியும் வரையும், மண் மூடி மேடாக மாறும் வரையும் இந்த தமிழ் மொழி வாழ்க்கையை எவராலும் அழித்து விடமுடியாது.

திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர திருட்டு மொழியாக இருட்டு மொழியாக மாறி விடவில்லை.   காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா?

நீங்கள சாவது வரைக்கும் உண்பது முக்கியம்.  நீங்கள் உண்டு கொழுத்தால் தான் நீங்கள் விரும்பும் ஊடக சிறப்பு தமிழ் உங்களை வந்து அடையும்.  உண்ண நீங்கள் விரும்பும் போதெல்லாம் இந்த வெங்காயம் இல்லாமல் எவ்வாறு சமைப்பீர்கள்.   உரிக்கத் தொடங்கும் போதே உங்களை அறியாமல் இந்த தமிழ் மொழியை உரித்தாலும் உடைத்தாலும் உங்களுடன், உங்கள் வாழ்க்கையுடன் இந்த தமிழ் மொழி வந்து கொண்டே தான் இருக்கும்?

வளர்ந்து வந்த விதத்தைப் பாருங்கள்.  மன்னர் தமிழ், சங்கத்தமிழ், தீந்தமிழ், செந்தமிழ்,பாகவதர் தமிழ், பராசக்தி தமிழ்,பெரியார் தமிழ்,மெட்ரிகுலேசன் தமிழ், ஆங்கில தமிழ், இன்று அலறும் ஊடகத்தமிழ்.

காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளை கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்த தமிழ்த்தாய்.