Showing posts with label Dindigul Dhandpalan. Show all posts
Showing posts with label Dindigul Dhandpalan. Show all posts

Sunday, June 08, 2025

திண்டுக்கல் தனபாலன் அவர்களைச் சந்தித்தேன்.

கடந்த ஆறாம் தேதி (06.06.2025) மதியம் அன்று திண்டுக்கல் தனபாலன் அவர்களை அவருடைய புதிய வீட்டில் சென்று சந்தித்தேன்.  அவருக்கு உடல் நலம் பாதிப்பு என்று தகவல் வந்த நாள் முதல் அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  மகளுக்காக காந்தி கிராமம் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய வேலையின் பொருட்டு சென்ற போது அப்படியே அவர் வீட்டுக்குச் சென்று இரண்டு மணி அங்கே இருந்து முழுமையாக சந்தோஷமாக திரும்பி வந்தோம். 

அவர் மனைவி உற்சாகமாகத்தான் இருக்கின்றார். மகள் சென்னையில் பணிபுரிகின்றார். வீடு நன்றாக கட்டியுள்ளார். எல்லாப் பகுதிகளிலும் காற்று முழுமையாக வரும் அளவுக்கு திட்டமிட்ட வீடு மிகவும் சிறப்பான முறையில் கட்டப்பட்டு இருந்தது. அனைத்து மகிழ்ச்சியையும் வீடு கொண்டு இருந்தாலும் தொடர் சிகிட்சை, உடல் நலத்தில் உள்ள பிரச்சனைகள் என்று தனபாலன் மன ரீதியாக இன்னும் முன்னேற்றம் அடையாமல் தான் இருக்கின்றார்.

நான் தொடர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவர் மனைவி என் வயதைக் கேட்டார். சமீப காலமாக தனபாலன் வெளிவட்டாரத் தொடர்புகளை துண்டித்துக் கொண்டு விட்டார். யாருடனும் உரையாடுவது இல்லை. எங்கும் வெளியே செல்வதில்லை. பழையபடி மாற்ற ஆலோசனை சொல்லுங்கள் என்று என்னிடம் ஆதங்கத்துடன் கேட்டார். 

ஆனால் தனபாலன் தான் எழுதிய கணக்கு சார்ந்த பதிவுகளை எவரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்ற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது. அவர் இன்னமும் திருக்குறள் ஆராய்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர் பேச்சு முழுக்க திருவள்ளுவர், அவர் வாழ்ந்த காலம், அவர் உருவாக்கிய திருக்குறள் சார்ந்த அதிசயங்கள் மற்றும் ஆச்சரியங்கள், எவரும் அதைப் பற்றியே பேசாமல் இருப்பது, பேசிய நமக்கு எவ்வித அங்கீகாரம் கிடைக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கும் சமூகம் குறித்து அதிகம் வருத்தப்பட்டார். 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்வதைப் போல அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

 


ஒரே தொழிலில் நீங்கள் முப்பது வருடங்கள் பழகினாலும் நெருக்கமான நட்பு வட்டங்கள் அமையாது.  காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு தொழில் ரீதியாக போட்டியாளராக தான் இருப்பார்கள்.  இருக்க முடியும்.  அப்படித்தான் சமூகம் நம்புகின்றது. உருவாக்கவும் செய்கிறது.  

ஆனால் என்னுடைய 15 வருட எழுத்துலகில் முதல் பதிவுக்கு பதில் அளித்து என்னை உற்சாகப்படுத்திய துபாயில் வாழும் சுந்தர் போன வாரம் வரைக்கும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.  நாகா இன்னமும் தொடர்பில் இருக்கிறார். புரிந்தவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து கொண்டு இருக்கிறார்கள்.  

மற்றபடி அரசியல் கட்சி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல் நீண்ட நாட்கள் பழகியவர்களை எதிரி போல பார்ப்பது, மனதிற்குள் சித்திரிப்பது போன்ற காரணங்களால் பல நண்பர்கள் விலகிச் செல்லும் சூழலும் உருவானது. இது கால மாற்றங்களால் உருவான குழப்பங்கள்.  

 ஆனால் கட்சி அரசியலில் மேல் மட்ட தொடர்புகளும் இருப்பவர்கள் அனைவரும் பங்குதாரர் போல் பங்காளியாக இருக்கிறார்கள்.