Showing posts with label யோகாசனம். Show all posts
Showing posts with label யோகாசனம். Show all posts

Sunday, March 09, 2014

யோகா கலையும் யோகக்காரர்களும்?


யோகா கலை - சில புரிதல்கள் 


ஆரோக்கியமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடம்பு என்பதைப் பற்றி முதலில் புரிந்து கொள்வோம். 

நாம் விரும்பும் அத்தனை வசதிகளும், விரும்பும் வாய்ப்புகளும் நம்மிடம் இருந்தால் இதனைத் தான் தற்பொழுது ஆரோக்கியமான சமூக வாழ்க்கை என்கிறார்கள். மற்றவர்களால் மதிக்கப்படும் வாழ்க்கையைத் தான் சிறப்பான "அங்கீகாரம்" என்றும் சொல்கின்றார்கள். இதைப் போலவே ஆரோக்கியமான உடம்பு என்பதனை வெளித் தோற்றத்தை வைத்து தான் மதிப்பிடுகின்றார்கள். 

ஒரு ஆண் அல்லது பெண் பார்க்க அழகாக, புஷ்டியாக, களையாகத் தோற்றப் பொலிவோடு இருந்தால் அவர்களை பார்த்தவுடன் விரும்புகின்றார்கள். கவர்ச்சியான மனிதர் என்றும் சொல்கின்றார்கள். இதற்கு மேலாகக் ஆண்களும், பெண்களும் கூடுதல் ஒப்பனைகளை சேர்த்துக் கொள்ளச் சமகாலத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது என்று முலாம் பூசி உடம்பை கெடுத்துக் கொள்கின்றார்கள். கடைசியில் அனைவரும் இழந்து போன இளமையை நினைத்து அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே தான் பிரச்சனையும் தொடங்குகின்றது. இறப்பு நமக்கில்லை என்ற நம்பாத மனமும், இளமை என்பது மறையக் கூடியது என்பதனை ஏற்காத மனதையும் கொண்டவர்கள் ஆயுள் முழுக்க அவஸ்த்தைப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தான் ஆரோக்கியம் என்பதன் உண்மையான அர்த்தமும் மாறிவிடுகின்றது. 

அன்றாடம் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கும், யோகா கலைக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உடற்பயிற்சி என்பது உடலை வலுவாக்குவது. யோகா என்பதை மனதை அமைதிப்படுத்தி ஆன்மாவை இனம் காண வைப்பது. உடல் முழுக்க பரவியுள்ள சக்தி ரூபங்களை அடையாளம் காண உதவுவது.

இன்று தினசரி நடைப்பயிற்சி, அதிகமான தண்ணீர் குடித்தல் என்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறி அறிவுரை வழங்கி பலரின் வயிற்றை கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவிர வந்து கொண்டிருக்கின்ற பத்திரிக்கைகளும் மருத்துவர் போலவே அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதால் எது உண்மை? எது தேவை என்பதே எவருக்கும் தேவையில்லாமல் போய்விட்டது. 

விளம்பர மோகம் ஒரு பக்கம். விபரிதமான பழக்கவழக்கங்கள் மறு பக்கம். 

மொத்தத்தில் இன்று ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையிலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத கரும்பக்கங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத மனம். ஆசையை குறைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை சூழ்நிலை. இதனால் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை அமைதியிழந்த மனதுடன் தான் வாழ வேண்டியதாக உள்ளது.

ஆனால் யோகா என்ற கலையின் தன்மையே வேறு. இது உடற்பயிற்சி அல்ல. உங்களின் சக்தியை, உங்களுக்கே தெரியாத சக்தியை உங்களுக்கே உணர்த்திக் காட்டும் வல்லமை உடையது. 

யோகா என்ற கலையானது இந்திய நாட்டின் சிறப்பு அடையாளங்களின் ஒன்று. இதனை வெளியே இருந்து எவரும் இங்கு வந்து கற்றுத் தரவில்லை. இங்கே வாழ்ந்த சித்தர்கள் உருவாக்கிய கலையிது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இங்கே ஒவ்வொன்றையும் அறிவுத்தராசில் நிறுத்தி, எதனையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நமக்கே உரித்தான பல பாரம்பரிய கலைகள் நம்மை விட்டுச் சென்று விட்டது. இதனை மேற்கித்திய சமூகம் "பிராண்ட்" பெயரோடு மறுபடியும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது அதற்குத் தனி மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்து நாமும் அதனைத்தான் உண்மை என்று நம்பத் தொடங்குகின்றோம்.



யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லாகும். தமிழில் யோகா என்பதன் அர்த்தம் "இணைதல்" என்பதாகும். ஒலி அலையின் வேகத்தை விட அதிகமானது மனித மனதின் வேகம். நம் மனதில் வேகத்தை ஒரே இடத்தில் நிறுத்துவது தான் இதன் முதல் கடமை. அதற்கான பயிற்சி தான் இந்த யோகா நமக்குக் கற்றுத் தருகின்றது. ஒவ்வொரு ஆசனமும் நமக்கு ஒவ்வொரு விதமாக உணர்த்துகின்றது. 

நம்முடைய மனம் அலைபாயுதலை நிறுத்தினால் தான் ஆரோக்கியம் என்ற வார்த்தையின் முதல் படியை நாம் தொட முடியும். அடுத்தடுத்த பயிற்சிகளின் மூலம் மேற்கொண்டு செல்ல முடியும். இதனைத் தான் சித்தர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், தாங்கள் படைத்த பாடல்களின் மூலம் நமக்குப் புரிய வைத்தனர். 

மனதை ஒரு நிலைப்படுத்த மூச்சுப் பயிற்சி அவசியம் தேவை. இதன் மூலம் மட்டுமே நம்மிடம் உள்ள அற்புத ஆற்றலை நாம் பெற முடியும். படபடப்பு, பரபரப்பு என்று வாழ்க்கை மாறிப்போன சூழ்நிலையில் நாம் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் யோகா மட்டுமல்ல எந்தக் கலையையும் முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது. 

இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். 

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது, அவர் படபடப்பாக வந்தாலும் சரி, பயத்தோடு வந்தாலும் சரி உடனே "வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று தான் தொடங்குகின்றோம். உட்கார்ந்தால் மட்டுமே படபடப்பு குறையும், மனம் நிலைப்படும். அதன் பிறகே நம் உரையாடல் உணர்த்தும் உண்மைகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முதலில் அமர வேண்டும். அதன் பிறகே மூளை அமைதியான நிலைக்கு வருகின்றது. யோகாவின் ஆரம்பமே அமர்தலில் இருந்தே தொடங்குகின்றது. 

இந்தக் கலையில் உள்ள ஒவ்வொரு ஆசனங்களின் மூலம் நமக்கு  பல்வேறு பரிணாமங்கள், பயிற்சிகள் மூலம் தொடர முடியும். தலை முதல் பாதம் வரைக்கும் உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நம்மால் புத்துணர்ச்சி அளிக்க முடியும். 

உடற்பயிற்சி என்பது உணவோடு சம்மந்தப்பட்டது. உங்கள் சக்தி குறைய மேலும் உணவு தேவைப்படும். உண்ட உணவு உடற்பயிற்சிகள் மூலம் எரிக்க மேலும் தேவைப்படுகின்றது. இது இடைவிடாத சுழல் போன்றது. 

ஆனால் யோகா உங்கள் மனதோடு சம்மந்தபட்டது. உங்கள் உறுப்புகளை வலுவாக்குவதை விட எல்லாவிதமான உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவல்லது. இழந்த சக்தியை, உள்ளே உள்ள தெரியாத சக்தியை அடையாளம் காண வைப்பது. ஆசனங்கள் மூலம் மட்டுமே உடலும் மனமும் ஒரே சமயத்தில் சீராகும். 

உடல் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நாள்தோறும் கவலைகளால் மனம் அரித்துக் கொண்டே இருக்கின்றது என்றால் ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?  "உள்ளே அழுகின்றேன். வெளியே சிரிக்கின்றேன்" என்ற கதையாகத் தான் வாழ்க்கை இருக்கும்.

அனைவருக்கும் தெரிந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்று வைத்திருந்த திருமூலர் என்ற சித்தர் 84 லட்சம் யோகக்கலைகளை அறிந்தவர் என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றது. ஆனால் இங்கே மதம், கலைகள் என்ற இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொண்டு பலரும் திக்குத் தெரியாத காட்டில் உலாவும் மிருகங்கள் போல மனித ரூபத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒரு பக்கம் எதைப் பார்த்தாலும் சந்தேகம். எப்போதும் அவநம்பிக்கை. 

மற்றொரு பக்கம் எதைப் பார்த்தாலும் புனிதம். தாங்கள் பின்பற்றும் மதக் கொள்கைகள் தான் பிரதானம் என்று மனிதர்கள் இரு கோடுகளாகப் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். 

ஆசான் திரு. கிருஷ்ணன் ஒரு சமயம் உரையாடலின் மூலம் தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அவருக்கு மொத்தம் 2800 ஆசனங்கள் தெரியும் என்றார். ஆனால் நடைமுறையில் கைவிரல்களுக்குள் அடங்கக்கூடிய ஆசனங்களை வைத்தே பலரும் காசு சம்பாரிக்கப் பிழைப்பு வாதிகளாக மாறிவிட்டனர் என்று வருத்தத்துடன் சொன்னார். 

நம் சிந்தனையில் தெளிவு இருந்தால் மட்டுமே அன்றாட வாழ்வில் அமைதி கிட்டும். 

நாம் உருவாக்கிக் கொள்ளும் அமைதியே நம்மை எல்லா நிலைகளிலும் வழி நடத்தும். 

உங்களுக்கு மதம், மார்க்கம், தத்துவஞானிகள் சொல்லிய கருத்துக்களை விட உங்களை உணர்ந்து கொள்வது மிக முக்கியம். நம்மை நாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெரிய சாதனையாளர்களாக வர முடியாவிட்டால் கூட அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ முடியும். 

அதற்கு உங்களுக்குப் படிப்படியான பயிற்சி முக்கியம். எந்தப் பயிற்சி தேவை? அதுவும் எப்போது தேவை என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்? 

முந்தைய பதிவு     ஆசான் திரு.கிருஷ்ணன்.

Saturday, March 08, 2014

ஆசான்

நாங்களிருவரும் அவரை ஆசான் என்று தான் அழைப்போம். நாங்கள் என்றால் நானும் இராஜராஜனும். 

தமிழர் தேசம் என்ற மின் நூலே இவருக்குத் தான் முறைப்படி சமர்பிக்கப்பட வேண்டும். நான் வலைபதிவில் எழுத வந்த முதல் ஆண்டில் தமிழர்களை, தமிழ் மன்னர்களை, அவர்களது காலடித்தடங்களை, சங்ககாலத்தைப் பற்றி எழுதத் தொடங்கிய போது அறிமுகமாகி கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய அத்தனை துயரங்களில் பங்கெடுத்து என்னை மீட்டெடுத்தவர். தமிழ் மன்னர்களில் சோழப் பேரரசில் வாழ்ந்த இராஜேந்திர சோழன் குறித்து இது வரையிலும் அறியப்படாத் தகவல்களை சேகரித்து எழுத வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை விரட்டிக் கொண்டிருப்பவர்.

இன்று வரையிலும் இரு வேறு துருவங்களாக எண்ணங்கள். கருத்து ரீதியான செயல்பாட்டில் இருந்தாலும் இரும்பு காந்தம் போல ஏதோவொன்று இருவரையும் இணைத்து வைத்துத் தண்டவாளம் போல எங்கள் இருவரின் நட்பும் இயல்பான புரிதலுக்கு அப்பாற்பட்டுப் பலமாக உள்ளது. 

இராஜராஜனுக்கு அறிமுகமான ஆசானை முதன் முதலாக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் வீட்டில் நான் சந்தித்த போது ஆசான் ஈடுபட்டுள்ள யோகாசனம் துறையில் எனக்குப் பெரிதான ஆர்வம் இல்லாத காரணத்தால் அவருடன் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன். அப்போது இராஜராஜன். ஆசான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த யோகாசனம் குறித்த விபரங்களைப் புத்தகமாக மாற்றுவதில் உதவி புரிந்து கொண்டிருந்தார். 

"உங்கள் ஆரோக்கிய வாழ்வு" என்ற பெயரில் பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இந்தப் புத்தகம் ஒன்றாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  மிகச் சிறந்த இயற்கை உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி அது குறித்த வழிகாட்டுதலை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போல இவரும் தமிழ்நாட்டில் முக்கியமான நபராக கருதப்பட வேண்டியவர். 

இயற்கை உணவுகள் மற்றும் யோகக்கலையில் குறிப்பிட்டத்தக்க ஆளுமை கொண்டவர்.

நான் ஒவ்வொரு முறையும் அலுவலக மற்றும் சொந்த வேலையாகச் சென்னை செல்லும் போதும் ஆசான் வீட்டில் நானும் இராஜராஜனும் தங்குவோம். கீழே வீடும் மேலே யோகா கற்றுக் கொடுக்க ஒரு அற்புதமான வடிமைப்பில் ஒரு நீண்ட ஹால் போன்ற வடிமைப்பில் நான்கு புறமும் ஆள் உயர கண்ணாடி அற்புதமான ரசிக்கக்கூடியதாக இருக்கும். நடுநாயகமாக உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டே நானும் இராஜராஜன் கருத்து ரீதியான விவாதங்களில் புயலை உருவாக்கிக் கொண்டிருப்போம். 

ஆசான் என்பவரின் முழுப் பெயர் திரு. கிருஷ்ணன். திருச்செந்தூரில் பிறந்து சென்னையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருப்பவர். 

தனது வாழ்க்கையை யோகா என்ற கலைக்காக அர்ப்பணித்தவர். இன்று அவரின் வயது 70. திருமணம் செய்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல், திரைப்பட, சமூகப் பிரபல்யங்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யோகக்கலையைக் கற்றுக் கொடுத்தவர். கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். 

அப்படியென்றால் வசதியாக வாழ்பவர் என்ற கற்பனைக்கு வந்து வீடாதீர்கள். 

பணத்திற்கு ஆசைப்படாமல், எவருடனும் எதற்காகவும் அண்டிப்பிழைக்கும் எண்ணம் இல்லாமல் ஆச்சரியப்படத் தக்க வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் நோக்கம், தன் செயல்பாடு, தன் சுதந்திரம் என்பதில் மட்டுமே இன்று வரையிலும் குறியாக இருந்து தான் கற்று வைத்துள்ள கலையை முடிந்த வரைக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

தன்னை சந்தைப்படுத்திக் கொள்ள (மார்க்கெட்டிங்) விரும்பாமல் தான் உண்டு தன் கடமை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு சென்றவர்கள், உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் மணிக்கு இத்தனை ரூபாய் என்று சம்பாரித்துக் கொண்டிருந்த போதிலும் இவருக்கு இன்று வரையிலும் பணம் சார்ந்த விசயங்களில் அதிக அளவு அக்கறையோ ஆர்வமோ இல்லாமல் இருப்பது கண்டு பலமுறை நானும் இராஜராஜன் வியந்து போய் இருக்கின்றோம். 

மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பச்சைக்காய்கறிகள், பழங்களை மட்டுமே தன் உணவாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர். 

தொலைக்காட்சிகளின் வாயிலாக இன்று தமிழ்நாட்டில் பிரபல்யமாக அறியப்படும் பல காசு பார்க்கும் மனிதர்கள் அறியாத நூற்றுக்கணக்கான யோகக் கலையைக் கற்று வைத்திருப்பவர். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இப்படிப்பட்ட ஆசனங்கள் உண்டா? என்று யோசிக்கக் கூடிய வகையில் பன்முகத் திறமை கொண்டவர் தான் ஆசான். 

ஆனால் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. எவரையும் தரக்குறைவாக மற்றவர்களுடன் சொல்வதும் இல்லை. 

இதைப்பற்றிக் கேட்கும் போதெல்லாம் தயாராக ஒரு பதிலை வைத்திருப்பார். 

"அவரவர் வினைவழி. அவர்வர் வழி" என்பார். 

இராஜராஜனுக்கு இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது. சென்னையில் இருந்த போது அந்த முயற்சி கைகூடவில்லை. இதன் காரணமாக இந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இதுவொரு சவலான வேலையாகும். காரணம் ஆசான் ஒரு வகையில் குழந்தை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தற்கால நடைமுறைக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்துவது அத்தனை சுலபமல்ல. இதைப் பலமுறை சொல்லியே இராஜராஜன் இந்தப் பணியை என்னிடம் கொடுத்திருந்தார். 

நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டதும், முதலில் ஆசானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் முறை சென்னைக்குச் சென்ற போது அவர் வைத்திருந்த பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து படித்தேன். இரண்டாவது முறை இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கி அவர் வாழ்ந்த இடங்களை, பழகிய மனிதர்களைப் பற்றி நேரிடையாகச் சென்று தெரிந்து கொண்டு வந்து விடுவோம் என்று ஒரு நீண்ட பயணத்தை நண்பர்களுடன் தொடங்கினேன். 

காரணம் இராஜராஜன் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் அவர் மூலம் அறிமுகமான திரைத்துறையில் உள்ள நண்பர் மதன் ஒருங்கிணைப்போடு ஒரு குறுகிய காலப் பயணத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தேன். அப்போது பயணங்களில் எடுத்த படத்தை, வாகனத்தில் சென்ற போது அவருடன் உரையாடிதை வைத்து நான்கு காணொளித் தொகுப்பை உருவாக்கி உள்ளோம். 
இடங்களைத் தேர்வு செய்தல் (லோகேசன் பார்த்தல்) என்று சொல்வார்கள். பயணத்தின் போது எடுத்த படங்களை, அவர் குரலை, அவர் கற்று வைத்துள்ள பலதரப்பட்ட யோகா வழிமுறைகளை முதலில் ஆவணப்படுத்தி வைத்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதத்தில் இதை ஒரு குழுவினரோடு சேர்த்து உருவாக்கினோம். 

மீதி அடுத்தப் பதிவில்......