தமிழ்த்தாய் சிலை குறித்து யாராவது எழுதுவார்களா என்று எதிர்பார்த்து
காத்திருந்தேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளும் அம்மா பயத்தை தான் காட்டியது.
பத்திரிக்கையில், தொலைக்காட்சி நேரிலைகளில் என்று
எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் பம்மிக் கொண்டு பதில் சொல்வதை பார்க்கும்
போது புறநானூற்று வீரத்தைப் பெற்றவனடா நம் தமிழினம் என்பதாக எடுத்துக் கொண்டேன்.
நண்பர் வில்லவன் என்னுடைய நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்.
திருப்பூரில் ஆய்த்த ஆடைத்துறையில் இருந்து தற்போது இதே துறையில் பெங்களூரில் இருப்பவர்.
கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று, நூறுகோடியில் தமிழ்தாய்க்கு சிலை. இன்னொன்று, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை துவங்குவது. முதல் அறிவிப்பை பிறகு பார்க்கலாம். அது இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமான திமிர்பிடித்த கோமாளித்தனங்களில் ஒன்று.
இரண்டாவது அறிவிப்புதான் மிக மோசமானது மற்றும் கபடத்தனமானது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் இருப்பதால் என்ன நட்டம் என்றும் ஏழைகள் ஆங்கில வழியில்தான் படிக்கட்டுமே அவர்கள் அந்த வசதியை அனுபவிப்பதில் என்ன தவறென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை எதிர்ப்பது ஏழைக்குழந்தைகள் முன்னேறுவதை தடுக்கும் நடவடிக்கையாகக்கூட சிலரால் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை தமிழ்மொழிக்கு வந்த ஆபத்து என உணர்வுபூர்வமான வழியில் எதிர்க்க நான் விரும்பவில்லை (அதற்கான சகல நியாயங்களும் இருக்கும்போதிலும்). பிரயோஜனம் இல்லாவிட்டால் பெற்ற தாய் தந்தையையே தள்ளிவைக்கும் சமூக சூழலில் மொழியை காப்பாற்று என்று சொன்னால் அது ஒரு பைசாவுக்குகூட மதிக்கப்படப் போவதில்லை. பொருளாதாரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களது அறிவுத்திறனிலும் உயர்கல்வி வாய்ப்பிலும் இந்த அறிவிப்பு உண்டாக்கவிருக்கும் பாரிய பின்விளைவுகளை மட்டும் விளக்க முயற்சி செய்கிறேன்.
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் படிப்பு இருந்தால்தான் என்ன?
முதலில் இந்த அறிவிப்பு ஆங்கிலவழிக் கல்வியே சிறப்பானது எனும் கருத்தை பாமர மக்களிடம் இன்னும் அழுத்தமாக விதைக்கிறது. ஆங்கிலவழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக் மாறியதன் பிண்ணனி மிக எளிமையானது, பணக்காரன் அதில் படிக்கிறான்
ஆகவே அது சிறப்பானதாகத்தான் இருக்கும் எண்ணம். அதைத் தவிர்த்து சொல்லப்படும் தர்கரீதியான கருத்து “எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதால் ஆங்கில புலமை மேம்படும். ஆங்கிலப் புலமை இருந்தால் வேலை கிடைக்கும். அது எதிர்காலத்துக்கு நல்லது”.
தொன்னூறுகளின் இறுதியில் சாஃப்ட்வேர் இளைஞர்கள் தஞ்சாவூர் வீதிகளில் அரைடிராயரோடு (சட்டையும் அணிந்துகொண்டுதான்) வலம்வர ஆரம்பித்து பிறகு அவர்கள் திருவிடைமருதூர் போன்ற சிற்றூர்வரைக்கும் ரியல் எஸ்டேட் விலையை ஏற்றிவிட்ட தருணத்தில்தான் கம்ப்யூட்டர் படித்தால் நல்ல வேலைகிடைக்கும் என மக்கள் பேசத்தொடங்கினார்கள்.
அதுவரை ஆங்கிலம் படிப்பதே நல்ல வேலைக்கு போவதற்கான வழியாக பலராலும் நம்பப்பட்டுவந்தது.
ஆங்கிலம் எனும் ஒற்றைப் பாடத்துக்காக ஏனைய பாடங்களை பலியிடத்தயாராக இருந்த வீரச்சமூகம் நம்முடையது. பாடங்களை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் படிப்பை ஒரு கௌரவம் சார்ந்த விடயமாக கருதிய பெற்றோர்களால் வளர்த்துவிடப்பட்ட இந்த ஆங்கிலவழிக் கல்வியை ஜெயலலிதா இப்போது எல்லோருக்குமானதாக மாற்ற உத்தேசித்திருக்கிறார்.
ஒரு சிறிய கேள்வியின் ஊடாக இந்த கருத்தை அணுகலாம். ஒரு மாணவன் ஏன் வரலாற்றையும் அறிவியலையும் இன்னொரு மொழியின் மூலம் கற்ற வேண்டும்? பிரென்ச் மொழியோ அரபியோ கற்றுக்கொண்டிருக்கும்போதே அதே மொழியில் இன்னும் நாலைந்து பாடங்களை கற்றுக்கொள் என சொன்னால் உங்களால் அது முடியுமா?
பிறகெப்படி ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் அதே மொழியில் மற்ற பாடங்களை படிக்க்ச்சொல்லி துன்புறுத்த நம்மால் முடிகிறது?
உலகில் தனித்த பாடம் என்றொன்று இல்லை. உயிரியலை உடைத்தால் அதில் கடைசியாக இருப்பது வேதிப்பொருட்கள்தான். வேதியியலை உடைத்தால் அதில் மிஞ்சுவது அணுக்கள் எனும் இயற்பியல். அணுக்களை பகுத்தறிவது என்பது வெறும் கணக்குதான்.
தாவரங்கள் பற்றிய அறிவில்லாவிட்டால் மருந்தியல் எனும் துறையே இருக்காது. மானுடவியலை புறக்கணித்துவிட்டு மரபணு ஆராய்ச்சி செய்ய முடியாது. வரலாறும் புள்ளியியலும் இல்லாவிட்டால் எந்த நவீன அறிவியலும் வளர்ந்திருக்க முடியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யப்பட்ட சரியான மற்றும் தவறான சிகிச்சைகளின் வரலாறுதான் இன்றைய நவீன மருத்துவத்தின் அடிப்படை. ஆகவே எந்த துறையில் அறிவைப் பெறவேண்டுமானாலும்
அடிப்படை பாடங்களை புரிந்துகொள்வது என்பது மிக முக்கியம். ஆனால் இந்த உண்மை தொன்னூறு விழுக்காடு பெற்றோருக்கு புரிவதில்லை.
ஆங்கில வழியில் ஒரு மாணவன் படிக்கையில் பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டு அதனை தமிழில் புரிந்துகொண்டு பிறகு ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இதே தலைவலிதான் ஆசிரியருக்கும். அவர் ஆங்கிலத்தில் படித்து தமிழில் புரியவைத்து பிறகு ஆங்கிலத்தில் எழுதவைக்க வேண்டும்.
இந்த நிலையில் ஒரு பாடத்தை புரிந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்கும் எண்ணமும் அவகாசமும் மாணவர்களுக்கு எப்படி கிட்டும்?
பாடம் நடத்துவது என்பது வழிகாட்டுவதைப்போல எளிமையான காரியமாக இருக்கவேண்டும்.
இப்போது அது மாணவனை கட்டி இழுத்துக்கொண்டு போவதைப்போல கடினமான செயலாக மாறிவிட்டதன் அடிப்படைக் காரணி ஆங்கிலவழிக் கல்வியும் மதிப்பெண் வெறியும்தான்.
எந்த மொழியில் படிப்பது என தேர்வு செய்யும் உரிமை ஏழைகளுக்கும் கிடைக்குமில்லையா? இதனால் தனியார் பள்ளி மோகம் குறையுமே?
ஆங்கிலவழிக் கல்வி என்பது பணக்கார மாணவர்களுக்குகூட பரிந்துரைக்கப்படக்கூடாத கல்விமுறை. இப்போது, தேவைப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசின் எல்லா புதிய அறிவிப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பானது எனும் தோற்றத்துடனேயே வருகின்றன.
எல்லா பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்படும் எனும் அறிவிப்பிலேயே அது தமிழில் படிப்பதைவிட சிறப்பானது எனும் கருத்தை அரசே ஒப்புக்கொள்வதாக ஆகிறது.
இதனால் தற்போது தமிழிவழியில் படிப்பவர்களும் தங்கள் படிப்பு மட்டமானது எனும் சிந்தனை உருவாகும் வாய்ப்பிருக்கிறது.
முன்பே குறிப்பிட்டதைப்போல இங்கே கல்வி பற்றிய புரிதல் கிட்டத்தட்ட இல்லை. ஆக இந்த அறிவிப்பு மக்களுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பை தரவில்லை. மாறாக இது ஆங்கிலவழி கல்விக்கு ஒரு விளம்பரமாகவே இருக்கிறது.
அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் பெற்றோர்கள் ஆங்கிலவழி படிப்பை தெரிவு செய்வார்கள். தமிழ்வழியில் மாணவர்கள் படிப்பது குறையும். பிள்ளைகள் படிப்பில் பெரிய கவனம் செலுத்தவியலாத பாமர பெற்றோர்கள் ஆங்கிலவழியில் பாடம் நடத்தி பயிற்சியில்லாத ஆசிரியர்கள் போன்ற காரணங்களால் அரசுப்பள்ளி தேர்ச்சிவிகிதம் குறையும்
(இன்றும் பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறப்பான தேர்ச்சியை காட்டுகின்றன என்பதை நினைவில் வையுங்கள்). இறுதியில் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் பள்ளிகளே சிறந்தவை என தனியார் பள்ளி முதலாளிகள் விளம்பரம் செய்யலாம்.
இதை ஒரு பரீட்சார்த்தமான முயற்சியாக ஏன் கருதக்கூடாது?
பள்ளி கல்வியில் செய்யப்படவேண்டிய மாற்றங்களை ஒரு வல்லுனர் குழுவை அமைத்து செய்யும் வழக்கம் தாமஸ் மன்றோ ஆளுனராக இருந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் கல்வித்துறை பற்றிய அறிவிப்பை தான்தோன்றித்தனமாக வெளியிடுவது என்பது ஜெயலலிதாவின் இயல்பு.
அவர் பேட்டி கொடுக்கக்கூட ஆங்கில ஊடகங்களையே தெரிவு செய்பவர். அவரது ஆலோசகர்களும் தமிழ் மொழி மீது வெறுப்பு கொண்டவர்கள். சமச்சீர் பாடத்திட்டத்துக்கு எதிரான ஜெயாவின் மூர்கமான நடவடிக்கைகளுக்கு பிறகும் அவரை நம்புவது முட்டாளதனமில்லை.. அதற்கும் மேலான ஒன்று.
இந்த அறிவிப்பின் மூலம் என்ன மோசமான விளைவுகள் உருவாகிவிடும்?
சீந்துவாரில்லாமல் இருக்கும் அரசுத்துறைகளில் முதன்மையானது கல்வித்துறைதான். இருக்கும் குறைவான மனிதவளம் இரண்டு மொழிவழிப் பாடத்திட்டத்தால் இன்னும் மோசமாக வீணடிக்கப்படும். ஒரே ஆசிரியர் இரண்டு மீடியம் வகுப்புகளையும் கையாளும் நிர்பந்தம் உருவாகும்.
அதனால் ஏற்படும் மோசமான தேர்ச்சிவிகிதம் மற்றும் கல்வித்தரத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இன்னும் அதிகமாக உருவாகும். மாணவர் வருகைக் குறைவை காரணம் காட்டி அரசுப்பள்ளிகள் மூடப்படும்.
இப்போதிருக்கும் பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தும் திறமை பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லித்தருவது என்பது வேறு ஆங்கிலம் தெரிந்திருப்பது என்பது வேறு. ஒரு மோகத்தால் ஆங்கில மீடியத்தில் சேர்க்கப்படும் மாணவர்கள் படிக்க சிரமப்படுவார்கள்.
இதனால் பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாகும், படிப்பை தொடரவிரும்பும் மாணவர்கள் தனியே பயிற்சி பெறவேண்டிய செலவு உருவாகும்.
அப்படியும் படிக்க முடியாத மாணவர்களை வேறுவழியின்றி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டிய சூழலுக்கு பெற்றோர்கள் ஆளாவார்கள்.
இன்றைக்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு இருக்கும் பெரிய சவால் பெரும் எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் அரசு பொறியியற் கல்லூரிகளில் இடம்பிடிக்கும்
தமிழ்வழியில் கற்ற மாணவர்கள்தான். ஆங்கிலவழிக் கல்வியின் விளைவாக தமிழில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிறகென்ன.. முதலாளிகள் காட்டில் மழைதான்.
எல்லாவற்றிற்கும் மேலாக இது தமிழ் மொழி மீது தமிழர்களது சுயமரியாதை மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். இன்றைய நிலையில் அரசுக்கு தேவை ஒரு கல்வியறிவற்ற சமூகமும் ஒரு சுயசிந்தனையற்ற படித்த கொத்தடிமைச் சமூகமும்தான்.
இப்போதைய இந்திய அரசுகள் (மாநில அரசுகள் உட்பட) கார்பரேட்டுகளுக்கு ஊழியம் செய்யும் ஏஜென்டாகவும் நில அபகரிப்பு செய்யும் தரகராகவும் மட்டுமே செயல்படுகின்றன.
அந்த கார்பரேட்டுகளுக்கு உற்பத்தி துறையில் பணியாற்றவும் சேவைத்துறையில் வேலைசெய்யவும் மட்டுமே ஆட்கள் தேவை.
அத்தகைய ஆள்களை மட்டும் உற்பத்தி செய்யும் பட்டறையாக கல்வித்துறையை முற்றிலுமாக மாற்றும் திட்டம் இது. அரசுப்பள்ளிகளில் இருந்துதான் மாவோயிஸ்டுகள் உருவாகிறார்கள். ஆகவே சட்டீஸ்கரில் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என சாமியார் ரவிசங்கர் ஒருமுறை யோசனை சொன்னார்.
எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்ளும் ஒரு அடிமைச்சமூகம் இன்றைய முதலாளித்துவ அதிகாரவர்கத்துக்கு அவசர தேவையாயிருக்கிறது.
அதனை சாத்தியமாக்கும் வழிகளில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முன்மொழியப்பட்டிருக்கிறது.
நிறைவாக,
குழந்தை அதன் அம்மாவிடம் வளர்வதே நல்லது என நாங்கள் சொல்கிறோம். சித்தியிடம் வளர்வதால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வாதம் தவறல்ல என்றே இருக்கட்டும்.
ஆனால் அம்மா உயிரோடு இருக்கும்போதே சித்தியை கூட்டிக்கொண்டுவருவது என்பது சட்டப்படி, நியாயப்படி மற்றும் தர்மப்படி என எல்லாவற்றின்படியும் தவறுதான். இப்போது துவங்கியுள்ளது
அம்மா இருக்கும்போதே சித்தியை அழைத்துவருவதல்ல...
அம்மாவைக் கொன்றுவிட்டு சித்தியை அழைத்துவரும் செயல். இதன் பிறகு நீங்கள் கவலைப்படப்போவது அம்மாவின் உரிமை பற்றியா அல்லது சித்தியை கூட்டிவரும் உரிமை பற்றியா என்பது உங்கள் தனிப்பட்ட உரிமை.
அதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை.