மகள்களின் கல்வித்திறனை, ஆளுமைத்திறனைச் சோதிக்கும் போது பல வித்தியாசமான ஆச்சரியங்களைக் கண்டதுண்டு. ஒருவர் கணக்குப் பாடங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார். 100 தான் எடுப்பார். புதிர்களை விடுவிடுப்பது பொழுது போக்கு போல அனாயசமாக கையாள்கின்றார். அறிவியல் பாடங்கள் பிடிக்காது. சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்று வருவார்.
அவருடன் ஒட்டிப் பிறந்தவர் கல்வியென்றால் காத தூரம் ஓடுகின்றார். குடும்ப பொறுப்பு, மனிதாபிமானப் பண்புகளை முழுமையாகப் பெற்று அதன்படியே வாழ விரும்புகின்றார். குடும்ப குத்து விளக்கு ஒளிரக் கல்வி தேவையென்றாலும் "எவன்தான் மதிப்பெண்களைக் கண்டுபிடித்தானோ?" என்கிறார்.
மற்றொருவர் தூண்டுதல் மூலம் சுடரொளியாக பிரகாசிக்கின்றார். ஒரே சூழல். ஒரே கவனிப்பு என்றாலும் அறிவுத்திறன் வெவ்வேறு விதமாக உள்ளது.
இவர்கள் எதை விரும்புகின்றார்கள்? ஏன் விரும்புகின்றார்கள்? எதில் அதிகக் கவனம் செலுத்துகின்றார்கள்? இவர்கள் பழகும் தோழிகள் யார்? அவர்களிடம் இவர்களுக்குப் பிடித்தமானது என்ன? என்பது போன்ற பலவற்றைக் கவனித்த போது எதுவும் சீரியஸ் இல்லை. எதற்கும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை என்பதாகவே எனக்குத் தெரிகின்றது.