Showing posts with label பட்டாபட்டி. Show all posts
Showing posts with label பட்டாபட்டி. Show all posts

Wednesday, May 15, 2013

பட்டாபட்டி - இறப்பும் செய்திகளும்



இன்று வலைபதிவுகளில் நான்கு வருடங்களுக்கு முன் எழுதிக் கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. காரணங்கள் பல இருந்தாலும் வலைபதிவுகளை விட மற்ற சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக் என்ற சொல்லப்படும் முகநூலில் தங்களை நாலு வரி கருத்துக்களை எளிதாக எழுதி போட்டு விட்டு நகர்ந்து போய்விட முடிகின்றது.  

அதுவே பத்துப் பேர்களால் பகிரப்படும் போது அதன் வீச்சு நம்ம முடியாத அளவுக்கு உலகம் முழுக்க சென்றடைந்து விடுகின்றது. 

நிமிட நேர புகழ்.  பல சமயம் நிதர்சமான ஆச்சரியங்கள். 

இதன் காரணமாக தங்கள் பிறந்த நாள் முதல் தனிப்பட்ட விருப்பங்கள் போன்ற அத்தனை விசயங்களையும் பகிர்ந்து கொள்ள பலரும் விரும்புகின்றார்கள். 

முகநூலில் தன் முகங்களையும் மட்டும் தினந்தோறும் போட்டு பார்ப்பவர்களுக்கு கொலைவெறியைத் தூண்டுபவர்கள் அநேகம் பேர்கள். 

இது தவிர. உட்கார்ந்தால், எழுந்தால், நடந்தால் ட்வீட் செய்பவர்களையும் பார்த்துள்ளேன்.  ஆனால் தன்னைப் பற்றி வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் சிலரையும் பார்க்கும் போது உள்ளூற வியப்பு தோன்றுவது இயல்பு. அந்த வகையில் கடந்த ஞாயிறு அன்று அந்த உலகை விட்டுப் பிரிந்த பட்டாபட்டி அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது..

குமுதம் ஆசிரியர் ஏஸ்.ஏ..பி. அண்ணாமலை அவர்களை குறித்து படிக்கும் போது இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. கடைசி வரைக்கும் மக்களுடன் ஒன்றாக பழகி தான் யார் என்பதை எவரிடமும் காட்டிக் கொள்ளாமல் கடைசி வரைக்கும் ஆச்சரியப்படுத்திய மனிதர். ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றியும் இதே போல படித்துள்ளேன். 
நான் வலைபதிவில் எழுத வந்த 2009 ஆம் ஆண்டு தான் பட்டாபட்டியும் வந்தார்.  ஒரு தளத்தில் அவர் தளத்தின் டிரேட் மார்க்கான பட்டாபட்டி டவுசர் போட்ட படத்தை பார்த்து அவரின் பின்னூட்டங்களைப் பார்த்து அவர் தளத்திற்கு சென்ற போது ஆச்சரியமாக இருந்தது. 

எனக்கு நேரிடையான அறிமுகம் இல்லை என்ற போதிலும் பல தளங்களில் அவரின் அதகளத்தை ரசித்துள்ளேன். 

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய கட்டுரைகள் மூலம் அப்போது எனக்அறிமுகமான என் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது சிங்கப்பூரில் இருந்த நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகமானார்.  

பட்டாபட்டியை உங்களுக்குத் தெரியுமா? பழக்கம் உண்டா? என்று தான் முதன் முதலில் கேட்டேன். 

காரணம் சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கே அவரைப் பற்றித் தெரியாது.  

காரணம் அத்தனை பேர்களுக்கும் அறிமுகமான முகம் என்ற போதிலும் இவர் தான் பட்டாபட்டி என்று எவருக்கும் தெரியாது.  நீ தான் பட்டாபட்டியா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு தன் இருப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் கனகச்சிதமாக வைத்திருந்தார். 

சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து சென்றவர்களுக்குக் கூட இவர் இறந்த போது போது அவரா இவர்? என்கிற அளவுக்கு தன்னை எந்த இடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தவர். 

சொந்த ஊர் கோவை என்ற போதிலும் ஒரு நிறுவனத்தில் அடிமட்ட (சிஎன்சி ஆப்ரேட்டர்) தொழிலில் தொடங்கிய பயணம் இன்று இந்த உயர் பதவி வரைக்கும் உயர்த்தி உள்ளது. சிங்கப்பூரில் ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து இன்று பி.ஆர். வாங்கி தனது குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்..

பலருக்கும் இவரின் பின்னூட்டங்கள், பதிவுகள் எரிச்சலாக இருக்கும்.  ஆனால் எழுதுவதில் நகைச்சுவையாக எழுதுவது ரொம்பவே சவாலான விசயம்.  

இப்போது கூட நகைச்சுவையாக எழுதுபவர்கள் பதிவுகளை நான் தேடிப்பிடித்து படிப்பதுண்டு. அந்த வகையில் எனக்கு ரொம்பவே பிடித்தமான பதிவர் பட்டாபட்டி.  

சிங்கப்பூரில் எனக்குத் தெரிந்து இரண்டு பேர்களுடன் தான் மிக நெருக்கமாக பழகி தன்னை வெளிக்காட்டியிருக்கின்றார்.  

அதில் ஒருவர் என்னுடைய நண்பர் என்பதால் இன்று மதியம் பட்டாபட்டியில் உடல் கோவைக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக அவரும் கோவைக்கு வந்திருந்தபடியால் கேட்டு தெரிந்து கொண்டேயிருந்தேன்.  எனக்கு எந்த தொடர்பு இல்லாத நிலையில் பட்டாபட்டி பற்றி இங்கே எழுத காரணம், இவரின் இறப்பு குறித்து ஒரு பதிவில் எழுதியவர் "எனவே யாரும் அதிகமாக தண்ணி அடிக்காதீர்கள்" என்கிற ரீதியில் எழுதியிருந்ததை படித்த போது மனம் சுருக்கென்றது.  

காரணம் பட்டாபட்டி தண்ணி வாலா அல்ல. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  

அவருடைய பழக்கத்திற்கும் இந்த இறப்புக்கும் சம்மந்மே அல்ல.  

தான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் உள்ள வேலையில் உள்ள மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிமாகிக் கொண்டே செல்ல இந்த வருடம் எப்படியும் கோவையில் சொந்த தொழில் தொடங்கி இங்கே வந்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். 

தாய்லாந்தில் உள்ள நண்பருடன் அது குறித்து உரையாடி விட்டு அதற்கான தொடக்க ஏற்பாடுகளை செய்து விட்டு அங்குள்ள ஒரு பெரிய வணிக வளாகத்திற்குச் சென்ற போது தான் இந்த மரணம் நிகழ்ந்ததுள்ளது. 

தாய்லாந்தில் தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். 

காரணம் அவர் பயணத்திட்டப்படி இன்று சிங்கப்பூரில் உள்ள வீட்டில் அவர் மூத்த மகளின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வர வேண்டிய நிலையில் இருந்வர். 

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மனைவிக்கு அலைபேசியில் அழைத்து மூத்த மகளுக்கு பிறந்த நாளுக்கு வேறு என்ன வாங்க வேண்டும் என்று கேட்டு விட்டு மற்ற பொருட்களை வாங்க மற்றொரு கடைக்குச் சென்ற போது சட்டைப் பையில் இருந்து கீழே விழுந்த பொருளை எடுக்க குனிந்த போது அப்படியே சரிந்து விழ அந்த நிமிடமே உயிர் பிரிந்ததுள்ளது..

பொதுவாக ஹார்ட் அட்டாக் என்றால் அதற்கு முன்னால் ஒரு முறை அல்லது இரண்டு முறையோ நிச்சயம் அதன் பாதிப்பு, வலி தெரியக்கூடும்.  

மாஸிவ் அட்டாக் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரே நிமிடத்தில் வந்து அப்பவே ஒரு நபரின் உயிரை போக்கியது நான் கேள்விப்பட்ட வரைக்கும் இது தான் முதல் முறை. 

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவனது சாவின் மூலம் தான் நமக்கு புரியும். 

நோய், நோடி இல்லாமல் அந்த நிமிடமே இறந்து போவது என்பது இந்த காலத்தில் கொடுத்து வைத்த ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

பட்டாபட்டி அந்த வகையில் கொடுத்து வைத்தவர்.. 

15.05.2013 இன்று அவரின் மூத்த மகளுக்கு பிறந்த நாள். 

சிங்கப்பூரில் இருந்த குடும்பமும் கோவைக்கு வந்து சேர பட்டாபட்டியின் சடலமும் கோவை வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

                                                                   ************

அவரின் வலைதளத்தில் நான் எப்போதும் ரசிக்கும் வாசகம்.

டெம்ப்ளட் கமென்ஸ்

கீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்.. 
===================

ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
Present..
வடைபோச்சே...



அனானிகளுக்கு... 

உங்களுக்கு என்னோட ஒரு அட்வைஸ்.. 
எவனையும் நம்பாதே..உனக்கு சாப்பாட்ல விஷம் வெச்சு கொடுத்தாலும்
கொடுப்பாங்க உங்க குடும்பத்திலே..
அதனாலே..பேசாம, ..காலையில சாப்பாட்டுக்கு, உன்னோட உடம்பிலிருந்து நேரம் தவறாம ஒண்ணு வருமே..
அதைய பத்திரமா வெச்சு, மூணு வேளையும் சாப்பிடு.. 
எவனும் உன்னைய அசைக்கமுடியாது...