முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும் மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?
அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் நிற்கிறோமே?
அரசியலில் ஊழல் செய்தவர்களை, செய்து கொண்டுருப்பவர்களை பக்கம் பக்கமாக படித்தாலும் படித்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே?
முதல் நாள் வாங்கி அடித்த டாஸ்மார்க் சரக்கு போலி என்றாலும் அடுத்த முறை செல்லும் போது பவ்யமாக நம்பிக்கையோடு வாங்கிக்கொள்கிறோமே ?
ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், ஓட்டுப் போடும் நாளில் கிடைத்த விடுமுறையில் உல்லாசமாய் ஓய்வில் இருந்து விட்டு தேர்தல் முடிவு வந்ததும் "இவன் அடித்த கொள்ளையென்று?" தெருவோர கடையில் கிடைத்த செய்தித்தாளில் பார்த்து விட்டு (படித்துவிட்டு அல்ல) அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோமே??
ஊரெல்லாம் அசிங்கம். ஒவ்வொருத்தனும் திருடனுங்க என்று புலம்பிக் கொண்டு தன் வீட்டுக்கு முன்னால் ஓடும் சாக்கடையை நடைபாதையில் திருப்பி விடுவது? ஆளில்லாத போது நடுப்பாதையில் தூக்கி நின்று கொண்டு அசிங்கம் செய்வதும்??
என் குழந்தை ஆங்கிலத்தில் பேசி கலக்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்த பெற்றோர்களும் முடிந்த அளவுக்காகவது அந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் இருப்பது? பேச தெரிந்தவர்கள் கூட குழந்தைகளுடன் தெளிவான ஆங்கிலத்தில் பேச மறுப்பது? நான் படிக்காத தற்குறி. பிள்ளைங்களாவது படித்து முன்னேற வேண்டும் என்று சொல்பவர்கள் கூட பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள் என்பதை உணர மறுப்பது?
சிபாரிசி கடிதம் வாங்கி சாமிக்கு அருகே சென்று தரிசிக்கும் ஆசாமியைப் பார்த்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நிற்கும் பொதுஜன பார்வையில் எப்படித் தெரிவார்கள்? உள்ளே கைபேசியில் பேசிக் கொண்டே மந்திரம் சொல்லும் கடவுளின் சார்பாளர்களைப் பார்த்து சாமி என்ன நினைக்கும்?
நான் இந்த நடிகரின் ரசிகன் என்பதை கூச்சப்படாமல் சொல்லிக் கொள்கிறவர்கள், நான் வாழும் வாழ்க்கை இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதை காட்டிக் கொள்ள விரும்புவதில்லையே?
இந்த பத்திரிக்கை மோசம்? அவன் எழுதுவது தப்பு? அந்தாளு பயங்கர திருடன்? இவர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்படாது?. விக்கிற விலை வாசியில திருடனாத்தான் போகனும் போலிருக்கு?
என்று புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?
என்று புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?







