Showing posts with label திரும்பிப் பார்க்கின்றேன். Show all posts
Showing posts with label திரும்பிப் பார்க்கின்றேன். Show all posts

Thursday, May 09, 2013

ராமதாஸ் - இனி நித்யகண்டம் பூரண ஆயுசு



கடந்த சில வாரங்களாக மக்கள் தொலைக்காட்சியைத் தான் அதிக நேரம் பார்க்கின்றேன். ராமதாஸ் குறித்த செய்திகள் எதில் வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றேன். பத்திரிக்கைகள் முதல் வலைதளம் வரைக்கும் வெறுத்து எழுதும் அவரை நான் எப்போதும் போல விரும்பவே செய்கின்றேன். 

அவசரப்பட்டு என்னையும் அவனா நீ? என்று கேட்டு விடாதீர்கள்? 

பள்ளிப் பருவத்தில் பத்திரிக்கைகள் வாசிக்கத் துவங்கிய காலகட்டத்தில் திரைப்படச் செய்திகளுக்குப் பிறகு அதிகம் வாசித்தது அரசியல் சம்மந்தப்பட்ட செய்திகளே. ஊரில் உள்ள பிள்ளையார் கோவில் ஊரணிக்கரையில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மேடை போட்டு பேசுவார்கள்.  குட்டி தாதா முதல் பெரிய தலைகள் வரைக்கும் அத்தனை பேர்களின் பேச்சையும் கேட்டு இருக்கின்றேன்.  

ஆனால் வீட்டில் எல்லா வீட்டையும் போலத்தான்.  ஏதாவது அரசியல் பேச்சு என்றால் கட்டி வைத்து உரித்து விடுவார்கள்.  

ஏனிந்த ஆர்வம் உருவானது என்று தெரியவில்லை.  

இன்று திரைப்படங்கள் சார்ந்த விருப்பங்கள் பின்னுக்குப் போய்விட அரசியல் சார்ந்த கவனிப்பு அதிகம் உருவாகியுள்ளது.  வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது முதல் ஒரு தேர்தலைக்கூட புறக்கணித்தது இல்லை. 

என் கடமையைச் திருப்திகரமாகவே செய்து வந்துள்ளேன்.  

ஆனால் தமிழ்நாட்டில் அரசியலில் ராமதாஸ் என்னைப் பொறுத்தவரையிலும் வித்தியாசமான மனிதர்.  சாதி என்ற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டு பார்த்தால் அவர் ஒரு சமூகத்திற்கு தேவைப்படும் மனிதர்.  ஆனால் ஆட்சி, அதிகாரம் பதவி என்ற இந்த மூன்றும் இல்லாவிட்டால் பத்து காசுக்கு ஒருத்தரும் மதிக்கமாட்டார்கள் என்பதை எதார்த்தம் உணர்ந்தவர்.

மற்ற அரசியல்வாதிகளைப் போலவே மாறி மாறிப் பேசி வளர்ந்தவர்.  அதற்கு நீங்கள் சந்தர்ப்பவாதம், பச்சோந்தி என்று எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.  என் குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆட்சி, அதிகாரம், பதவி என்று எதிலும் இருக்கமாட்டோம் என்று சொல்லி இன்று தான் சிறையில் இருப்பதை விட மகன் சிறையில் இருப்பதை நினைத்து வேகாத வெயிலில் வழிந்தோடும் வேர்வையை துடைத்துக் கொண்டிருப்பவர். 

குடும்ப அரசியல் தான்.  சந்தேகம் வேண்டாம். கட்சியை வைத்து குடும்பத்தை, வசதியை வளர்த்துக் கொண்டவர் தான்.  இவரைப்பற்றி தெளிவான கட்டுரை எழுத வேண்டும் நினைத்துள்ளேன். அது சாதி குறித்த தன்மை என்று மட்டுமல்லாது நம் மக்களின் மனோநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இந்த தளத்தில் இதுவரையிலும் நான்கு அரசியல் கட்டுரைகளை என் பார்வையில் எழுதியுள்ளேன்.  

ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏராளமான பார்வையாளர்கள், திக்குமுக்காடிய விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் என்று வந்துள்ளது. ஆனால் இன்று இதை நீங்கள் படித்துப் பார்த்தாலும் அதன் நம்பகத்தன்மை புலப்படும். 

கொங்கு முன்னேற்றப் பேரவை உருவாக காரணமாக இருந்த பெஸ்ட் ராமசாமி இப்பொழுது எங்கே இருக்கின்றார் என்று தேடும் நிலைமையில் தான் இருக்கின்றார்?

கட்சி உடைந்து சின்னாபின்னாமாகி ஈஸ்வரன் வேறொரு பாதையில் போய்க் கொண்டிருக்க சாதியை நம்பி வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கொங்கு மண்டல இளைஞர்கள் கொடுத்த பணத்தை பெற்றவர் பெற்றவர் இன்று சர்வ சந்தோஷமாக இருக்கின்றார். அப்போது சக்திவேல் என்ற நண்பர் என்னோடு சண்டைக்கு வந்து விமர்சனம் எழுதினார்.  ஆனால் நான் எழுதியது தான் நடந்துள்ளது.

ன் மகள் கனிமொழி என்ற ஒரு சொல்லுக்காக கலைஞர் பெற்ற அவமானங்கள், இன்னும் மீள முடியாத பிரச்சனைகள், உலக அளவில் பெயர் வாங்கித்தந்த பூதாகார ஊழல் பூகம்பங்கள் என்று இன்றும் விடாது துரத்தும் கருப்பாகத்தான் இருக்கிறது.

ன்று வரையிலும் சீமான் குறித்து நக்கலும் நையாண்டியும் பேசிக் கொண்டிருப்பவர்களின் ஒரே தாக்கம் பாவி மண்னை கவ்வ வைக்க இவனும் ஒரு காரணமாக இருந்து விட்டானே? என்று அங்கலாய்ப்பவர்கள் தான் அதிகம்.  கடந்து போன தேர்தலில் நிச்சயம் சீமானின் பங்களிப்பு அதிகம்.  

இவர் மேல் குறைகள் சொல்பவர்கள், விமர்சனங்கள் வைப்பவர்கள் அத்தனை பேர்களும் தங்கள் முதுகில் உள்ள அழுக்கை துடைத்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும்.  துடைக்க துடைக்க வந்து கொண்டிருக்கும் வண்டி அழுக்கை எங்கே கொண்டு வைப்பது?  

அரசியலில் வளர்ந்து வரும் எல்லோரும் இருக்கும் ஆசைகள் இவருக்குள்ளும் இருக்காமலா போய்விடும்?  

இவர் மேல் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. இவர் தாண்டி வந்த விபரீதங்களுக்கும் அளவில்லை.  

இன்று வரை தாக்கு பிடித்து நிற்பதே அதிசயம் தான்.

விஜயகாந்த் பற்றி எழுதி வைத்து பல நாட்கள் கழித்து அப்பாதுரை வந்து இப்போதைய பார்வையில் விஜயகாந்த் குறித்து எழுதுங்களேன் என்று கேட்டார்.  காரணம் விஜயகாந்த எதிர்க்கட்சி தலைவராக மாறியிருந்தார்.  அவரே எதிர்பார்த்து இருப்பாரா என்று சந்தேகம்.  அதில் எழுதிய கடைசி வரிகளை படித்துப் பாருங்கள்.  கடந்த ஆறேழு மாதங்களாக அவர் கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

முழுமையாக தரவுகளோடு நிச்சயம் ராமதாஸ் குறித்து எழுத விரும்புகின்றேன்.  

காரணம் வீரபாண்டி ஆறுமுகம் சிறைச்சாலைக்குச் செல்லும் போது கூகுள் ப்ளஸ் ல் திமுக நண்பருடன் நீண்ட உரையாடல் நடத்த வாய்ப்பு கிடைத்தது.  

இன்று வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து விட்டார்.  

அவர் யாருக்காக "பாடுபட்டு" தேடித்தேடி சொத்துக்கள் சேர்த்தாரோ இன்று அதன் காரணமாக குடும்பத்திற்குள் வெட்டுக்குத்து என்று குடும்பமே நீதிமன்ற வாசலுக்கு அலைந்து கொண்டு இருக்கிறது. 

கடந்த பத்தாண்டுகளில் எந்த கட்சியில் இருந்தாலும் சரி, எந்த பதவியில் இருந்தாலும் சரி எவரும் இன்றைய சூழ்நிலையில் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை.  ஒரே காரணம் வசதியாகவே அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் உடம்புக்கு சிறை வாழ்க்கை ஒத்துக் கொள்வதில்லை.  

அது ஏறக்குறைய இறுதி பயணத்தை நோக்கித்தான் அழைத்துச் செல்கின்றது அல்லது விடுதலையானதும் அதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகின்றது. 

மேடை போட்டவுடன் வந்து சேரும் ஆட்கள் கூட்டம் இன்று இல்லை. எது பேசினாலும் வாயை பிளந்து கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் அமர்ந்திருப்பவர்களும் எவருமில்லை. காரணம் வீட்டு வரவேற்பரைக்கே அத்தனை பேர்களின் அயோக்கியதனங்களும் வந்து விடுகின்றது.  

எவரும் திருந்தத் தயாராகவும் இல்லை.  மக்களும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

இன்று அரசியல் கட்சி நடத்துவது என்பது ஒரு கார்ப்ரேட் நிறுவன திட்டத்தை விட கடினமாக உழைக்கும் அளவிற்கு மாறிப்போயுள்ளது. 

கூட்டத்திற்கு அழைக்க பணம், கொண்டு வந்து சேர்க்க பணம், வந்தவர்கள் தங்க பணம், திரும்பிச் செல்ல பணம் என்று எங்கெங்குகாணினும் பணமடா என்று அரசியலின் முகமே மாறிவிட்டது.  

இன்று தமிழ்நாட்டில் ஒரு சாதாரண நகர்மனற் உறுப்பினர் வைத்திருக்கும் டயட்டோ இன்னோவா வாகனம் என்பது இயல்பாக போய்விட்டது.  

ஆனால் அப்படி தேடித்தேடி கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள் எவரும் கட்சியில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் ஆட்சி முடியும் போது தேங்கிப் போய் சம்பாரித்த காசோடு அமைதியாகிவிடுகின்றார்கள். கக்கூஸ் கழுவி சம்பாரித்த காசு நாறவா செய்யும்?

இப்போது ராமதாஸ் அவர்களும் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்றாரோ என்று மனதில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.  

உலகில் கொடுமையானது முதுகு வலி நோய்.  அதில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது வாழ்ந்து கொண்டேயிருக்கும் போது தினந்தோறும் பரலோகம் பார்க்கும் கதை தான். நிச்சயம் ராமதாஸ்க்கு இப்போதைய காலகட்டம் ஒரு கொடுமையான காலமாகத்தான் இருக்கும்.  ஆனால் இனி வரும் அழைக்கழிப்பும், சிறைக்குள் இருக்கும் பயத்தன்மை, காவல்துறை அதிகாரவர்க்கத்தில் உள்ள தலித் அரசியல் என்று எல்லாப் பக்கத்திலும் பிரச்சனைகளின் ரூபம் பெரிதாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஊடகத்துறை, காவல்துறை, அதிகாரவர்க்கம் போன்றவர்களுடன் தொடர்பு இருப்பவர்கள் பேசிப்பாருங்கள்.  

ஒரு செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வெளியே தெரியாத அத்தனை விசயங்களையும் உங்களால் உணர முடியும். ஒரு கட்சியின் தொண்டராக ஒரு தலைவரைப் பார்ப்பவனுக்கும், அந்த கட்சி எடுத்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் கணக்குகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் எப்போதும் உண்டு என்பதை நன்றாக நினைவில் வைத்திருக்கவும். கத்திக் கொண்டு இருக்கும் தொண்டனுக்கு மட்டுமல்ல பொதுஜனத்திற்கும் அது குறித்து அத்தனை சீக்கிரம் தெரிந்து விடாது.

எதுவும் உடனே வெளியே வராது. வரவும் கூடாது. அது தான் அரசியலில் முக்கியம்.  

எப்போதும் போல வாழ்க, ஒழிக என்று கத்திக் கொண்டிருக்கும் காசு பெற்ற கூட்டத்திற்கு இதுபோன்ற விசயங்கள் எப்போதும் தெரியப் போவதில்லை. இப்போதைய ஆட்சியில் பல்வேறு கணக்குகளின் அடிப்படையில் அடுத்தடுத்து ஆப்புகள் பா.ம.கா. கட்சியினருக்கு சொருக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 

இது ஏறக்குறைய  காலில் வந்து விழு என்பது வரைக்கும் இந்த நாடகம் நீடீத்துக் கொண்டேயிருக்கும் என்று நினைக்கின்றேன்.

பா.ம.கா வில் ஓடி ஒளியும் கூட்டமும், உள்ளே தள்ளிக் கொண்டு செல்லும் கூட்டமும் தான் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  ஆனாலும் இன்னமும் வட மாவட்டங்கள் அச்சத்தில் தான் உறைந்துள்ளது.

எரிந்த பேரூந்துகளும்  கலவரத்தினால் வாழ்க்கை இழந்தவர்களைப் பற்றி இன்னும் சில மாதங்கள் பேசுவார்கள். 

முடிந்தால் வருடந்தோறும் மேடைப் பேச்சில் தவறாமல் குறிப்பிடுவார்கள்.  உருவான வன்முறைக்கு இந்த சாதி மட்டும் தான் காரணமா? இல்லை சமூகத்தில் உருவாகியுள்ள வாழமுடியாதவர்களின் வெறுப்பா?  

நிச்சயம் பேசுவோம்.

ஆட்சியாளர்கள் போட்டுள்ள கணக்குகள் சமன் செய்யப்படும் வரைக்கும் இனி ராமதாஸ்க்கு ஒவ்வொரு நாளும் நித்ய கண்டம் பூரண ஆயுள் தான்.