அந்த 42 நாட்கள் - 27
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
நாம் இன்னலுறும் சமயங்களில் இன்முகங்கள் தேடி வந்தால் எப்படியிருக்கும்?
அப்படித்தான் இன்றும் நேற்றும் உணர்ந்தேன். வீட்டுக்கு முன் வண்டி வந்து நின்றது. பைப் எடுத்தார்கள். குழாய் மாட்டினார்கள். வண்டியின் மேல் ஏறி நின்றார்கள். காமவுண்ட் சுவர் முதல் வீட்டின் உள்ளே இருபது அடி தொலைவு வரைக்கும் கிருமி நாசினி நீரை ஒவ்வொரு பகுதியிலும் பூப்போல பூ மாரி பொழிந்தார்கள். வெவ்வேறு விதமாக பீய்ச்சியடித்தார்கள். நேற்றும் வந்தார்கள். நாளையும் வருவோம் என்று சொல்லிச் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு கவசமும் இல்லை. எப்போதும் போல ஒரு சின்ன முகமூடி. அதுவும் முகத்தில் இல்லை. வேறொரு பக்கம் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்.