அவரை டிகே சார் என்று தான் அழைப்போம். டி.குமரேசன் என்பதை சுருக்கி பள்ளியில் அப்படித்தான் அழைத்தார்கள். +2 வில் இரண்டு வருடமும் விலங்கியல் பாடத்தை அவர் தான் எடுத்தார்.
முரட்டு மீசை. நல்ல உயரமும் அதற்கெற்ற உடல் பருமனும் கொண்டு பார்ப்பதற்கே இன்ஸ்பெக்டர் மாதிரி இருப்பார். பள்ளிக்கு என்பீல்டு புல்லட்டில் தான் வருவார். பசங்க அத்தனை பேரும் அவரை "புல்லட் பாண்டியன்" என்று தான் அழைப்பார்கள்.
நாம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் புல்லட் சப்தத்தை கேட்டு திரும்பி நின்று "வணக்கம் சார்" என்று சொல்ல வேண்டும். சொல்லாமல் சென்று கொண்டிருந்தால் வகுப்புக்குள் நுழைந்தவுடன் முதல் வேளையாக குறிப்பிட்ட மாணவனை அழைத்து காதைத்திருகி அந்த வகுப்பு முடிவதற்குள் கொன்னு கொலையெடுத்து விடுவார்.
சுயமோகி என்பார்களே அதைப்போல சரியான பந்தா பார்ட்டி.
எங்கள் வீட்டில் உள்ள அத்தனை பேர்களும் அவரிடம் தான் படித்தார்கள். அதுவும் அக்கா விலங்கியல் பாடத்தில் கல்லூரி அளவில் உயர்ந்த நிலைக்குச் சென்று பாராட்டுக்கள் வந்த போது "பாருடா, உங்கக்கா எனக்கிட்ட தான் படிச்சார், எப்படி பார்த்தீயா? நீ என்னத்த கிழிக்கப் போறியோ?" என்று சொல்லி முதுகை தடவிக்கொண்டே டப் பென்று ஒரு சாத்து சாத்துவார்.
இவரை பகைத்துக் கொள்ளவும் முடியாது.
ரிக்கார்டு நோட் மதிப்பெண் சமாச்சாரம் என்ற பெரிய பூதம் ஒன்று இருந்தது. நமக்கு ஏற்கனவே படம் வரைவது என்றால் ததிகிங்கிணத்தோம். அக்கா தான் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் டிகே சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். காரணம் என்னோட வாய். எதையாவது பேசிக் கொண்டேயிருக்க அவருக்கு அதை வைத்தே என்னை கலாய்த்துக் கொண்டிருப்பது கைவந்த கலை.
காரணம் அவர் வகுப்புக்கு வந்தால் பாடம் நடத்த மாட்டார் என்பதை விட அதைப் பற்றி அதிக அளவு கவலைப்படவும் மாட்டார்.
"என்னடா தவளையோட குறுக்குவெட்டுத் தோற்றம் தெரியும் தானே? டேய் கணேசா, இங்கே வா. தவளை மாதிரி கத்திக்கிட்டே இருக்குறவன் நீ தானே, கொஞ்சம் வந்து நடத்து" என்று போய் உட்கார்ந்து கொள்வார்.
கதையடிப்பதைப் பற்றி நமக்குச் சொல்லியா தரவேண்டும். அதுவும் முன் பெஞ்சில் மூன்று கிளிகள் இருக்க நமக்கு அப்படியே கிர் என்று ஏறும். தலையில் கீரிடம் வைத்தாற் போல இருக்க வாய்க்காலில் பார்த்த தவளை முதல் கேள்வியேபடாத கடல் தவளை வரைக்கும் பொளந்து கட்ட வகுப்பு சிரிப்புடன் முடியும்.
வகுப்பு முடிகின்ற சமயத்தில் குறுக்கிட்டு "என்னடா கணேசன் சொன்னது தான்டா. வேறு எதுவும் சந்தேகம் இருக்கா" என்று கேட்டுக் கொண்டே மீசையை முறுக்கிக் கொண்டே சென்று விடுவார்.
அவரின் அத்தனை எடுபிடி வேலைகளையும் நானும் சொர்ணமும் தான் செய்வோம். இவனின் முழுப்பெயரி சொர்ணலிங்கம். ஆனால் எல்லா இடங்களிலும் சொர்ணம் என்று தான் பெயர் வரும். புதிதாக இந்த பெயரைக் கேட்பவர்கள் பெண்னின் பெயர் என்று ஆவலாய் கேட்ட கதையெல்லாம் உண்டு.
டிகே சாரின் அந்தரங்க வேலைகளை வேறு எவருக்கும் நாங்கள் இருவரும் கொடுக்க மாட்டோம். அவர் கிறிஸ்துவ குடும்பம் என்பதால் அவர் மனைவி எல்லா நாட்களிலும் கட்டாயம் அசைவம் சமைத்து எங்களிடம் கொடுத்து அனுப்புவார். ஒருவராக சென்றால் கேரியரை போட்டு கவிழ்த்து விடுவார்கள் என்று என்னுடன் சொர்ணத்தையும் அனுப்பி வைப்பார்.
சுவையான சாப்பாட்டு பிரியர்.
மதியம் அவர் வகுப்பு இருந்தால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். காரணம் அவர் சாப்பிட்ட சாப்பாடு செறிக்க பாடத்தைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் பேசிக் கொண்டிருப்பார்.
எங்கள் வீட்டில் இருந்து இரண்டு சந்து தாண்டி அவர் வீடு இருந்தது. அவர் இருந்த வீடு முழுக்க மரங்கள் அதிகமாக இருக்கும். ஒரு சின்ன காட்டுக்குள் வந்தது போலவே இருக்கும். அவ்வளவு பெரிய வீட்டுக்கு 150 ரூபாய் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சொர்ணம் பலே கில்லாடி.
கேரியரை வாங்கியதும் நான் உட்கார்ந்து கெட்டியாக பிடித்துக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவான்.
தொடக்கத்தில் நான் மூச்சிறைக்க சைக்கிளை ஓட்டும் போது மேடு பள்ளத்தில் நிறுத்தாமல் ஓட்ட அவன் வண்டவாளம் அன்று தான் எனக்குத் தெரிந்தது. கூடையில் உள்ள சின்ன கப் சமாச்சாரங்களில் உள்ள கறித்துண்டுகளை எனக்குத் தெரியாமல் எடுத்து சுவைத்துக் கொண்டு வந்ததை அன்று தான் கண்டுபிடித்தேன்.
இருவரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம்.
பள்ளிக்கு வரும் வழியில் ஒரு ஆச்சி வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய திண்னை வசதியாக இருக்க இருவரும் உட்கார்ந்த ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து கிண்ணம் வாரியாக தனியாக எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.
உள்ளே உள்ள சின்னச்சின்ன துண்டுகளை எடுத்து பங்கிட்டு எடுத்து தின்று விட்டு கை படாத ரோஜாவாக பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவதுண்டு.
அளவுக்கு அதிகமாக உள்ள கறி சமாச்சாரத்தில் அந்த சின்ன துண்டுகளை அவரால் கண்டிபிடிக்க முடியாதது எங்களுக்கு வசதியாகவே இருந்தது.
எங்கள் கூட்டணி கடைசி வரைக்கும் உடையாமல் இருந்த காரணத்தால் அவரால் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரை காரைக்குடியில் வைத்து சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
நண்பனுடன் பெரியார் சிலை அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது எங்களை கடந்து ஒருவர் போய்க் கொண்டிருந்தார். நண்பன் காரைக்குடியில் தங்கப்பட்டறை வைத்திருப்பவன். அவன் என்னிடம் "அவர் யார் என்று தெரிகின்றதா?" என்று கேட்டான். "தெரியலையே" என்றேன். "அவர் தான்டா டிகே சார்" என்று சொல்ல நொந்து போய்விட்டேன் என்பதை விட பயந்து போய்விட்டேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
காரணம் அவரின் தோற்றம் அப்படி இருந்தது.
நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் அளவுக்கு மெலிந்து போயிருந்தார். அந்த முரட்டு மீசையை காணவில்லை. பள்ளியில் பார்த்த அவரின் கம்பீர உருவத்திற்கும் அப்போது பார்த்த உருவத்திற்கும் முற்றிலும் தலைகீழாக இருந்தது. என்ன தான் வயோதிகம் என்றாலும் இந்த அளவுக்கு மாறி விடுவார்களா? என்று நண்பனிடம் கேட்ட போது "பாவம்டா சர்க்கரை நோய்" என்றான்.
திருப்பூர் வந்தவுடன் ஒரு வாரம் முழுக்க அவர் உருவம் மனதில் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருந்தது. மனதில் கொஞ்சம் பயமும் வந்தது. நாம கண்டதையும் தின்று கொண்டேயிருக்கின்றோம்.
நம் குடும்பத்தில் சிலருக்கும் இந்த நோய் உள்ளதே. அப்பாவின் சர்க்கரை நமக்கும் வந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டே சரி இனிமேல் வாயை அடக்க வேண்டும் என்று நினைத்த அன்றே கூடுதலாக கொஞ்சம் அள்ளி போட்டுக் கொண்டேன்.
அலுவலகத்திற்கு அருகே ஒரு கடை உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் "சார் சூடாக இருக்கு" என்று என்னை கேட்காமலேயே ஒவ்வொன்றிலும் இரண்டை எடுத்து கொடுத்து விடுவார். இளங்கன்று பயமறியாது தானே? ஆனால் வயிறுக்கு அது தெரியுமா?
அடுத்த இரண்டு நாளில் வெள்ளையனே வெளியேறு போராட்டமே நடக்கத் தொடங்கியது. வறண்டு போன காவேரிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் உள்ளே உள்ள சமாச்சாரங்கள் அனைத்தும் தண்ணியாக பீச்சியடிக்கத் தொடங்கியது.
"இனிமே வாயை அடக்குவியா?" என்று கக்கூஸில் ஒரு எதிரொலி கேட்டது.
வீட்டில் பூசாரியிடம் கேட்டேன்.
"வாயை கட்ட முடியாதவருக்கு வாய்க்கால் பாசனமே சிறந்தது" என்று சொல்லிவிட்டு சென்றார்.
கூடவே "இனி வண்டி நேரா வீட்டுக்குத்தானே வரும். இடையில் எங்கேயும் நிக்காதுதானே" என்று எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றினார்.
பீச்சியடித்த வாய்க்கால் பாசனம் நின்றபாடில்லை.
தொடர்ந்து உடம்பின் உள்ளேயிருந்த மற்ற பங்காளிகளையும் சேர்த்து அழைக்க ஒவ்வொன்றாக வந்து என்னப்படா சொகமா இருக்கீயா? என்று குசலம் விசாரிக்கத் தொடங்கினார்கள்.
என்னடா இஞ்சித்தேன், நெல்லித்தேன் தொடங்கி கண்டதையும் தின்று கொண்டு இருக்கின்றோமே? நமக்கா? என்று மிதப்பு வந்து அடுத்த இரண்டு நாளையும் கடத்திப் பார்த்தேன். உடம்புக்கும் மனசுக்கும் நடந்த வர்க்கப் போராட்டத்தில் உடம்பே ஜெயித்தது.
இனி கப்பு தூக்கும் வேலை கைக்கு உதவாது என்ற போது குடும்ப மருத்துவரிடம் சென்றேன்.
போவதற்கு முன்பு நண்பரை அழைத்து ஆலோசனை கேட்ட போது அவர் பங்குக்கு ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.
"சார் உங்க வயசுக்கு சர்க்கரை நோய் வந்திருக்கும்" என்று சொல்ல மனதில் கிலியடித்தது போலவே இருந்தது. அப்போது தான் டிகே சார் நினைவுக்கு வந்து போனார்.
அத்துடன் குடும்பத்தில் உறவினர்களில் எவர் எவருக்கெல்லாம் இந்த சர்க்கரை நோய் இருக்கிறது?
இந்த சர்க்கரை நோயின் ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஆங்கில மருத்துவத்தில் இதை வைத்து மாபெரும் பித்தலாட்டமே நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் சர்க்கரை நோய் என்று அடையாளம் காணப்பட்டால் அவர் குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும் என்பார்கள்.
சாப்பாடு முதல் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் வரைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.
நன்றாக கவனித்துப் பாருங்கள். அந்த நோயும் குணமாகாது. அவரும் நாள்பட மெலிந்து கொண்டே தான் செல்வார். கடைசியில் மண்டையை போடும் வரைக்கும் இந்த நோயுடன் தான் இறப்பார்.
பதிவுலகத்தில் யாராவது இதைப்பற்றி எழுதுவார்களா? என்று காத்துக் கொண்டிருக்கின்றேன்.
பத்து வருடமாக நான் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவரிடம் சென்ற போது "உங்கள் டாலர் நகரம் புத்தகம் நன்றாக இருந்தது" என்று பாராட்டிக் கொண்டே "என்னாச்சு ஆறு மாததிற்கு ஒரு முறை வந்து விடுவீங்க. ரொம்ப நாளா ஆளே காணோம்" என்றார்.
நான் இஞ்சித்தேன் சமாச்சாரத்தை சொல்லாமல் "நான் வரலைன்னா உங்களுக்கு நல்லது தானே?" என்றேன்.
"தனிப்பட்ட முறையில் சந்தோஷம்" என்று சொல்லிக் கொண்டே "உங்களுக்கு ப்ரெஷர் சரியாத்தான் இருக்கு. சர்க்கரை இருக்கான்னு பார்த்து ரிப்போட் எடுத்து கொண்டு வாங்க" என்றார்.
பரிசோதிக்க உள்ளே சென்ற போது தான் வாழ்க்கையில் உண்மையான பயம் என்றால் என்ன? என்பதை யோசித்துப் பார்த்தேன்.
பரிசோதித்த பெண்மணி சொன்னார்.
"சார் உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் காசு பணம் சேரும் போல" என்றார்.
"நீ வேற வயித்துல புளியைக் கரைக்காதம்மா? இருக்கா இல்லையா?" என்றேன்.
"ஆமா சார் சர்க்கரை நோய் இருக்குறவங்களுக்கு தான் காசு பணம் சேருமாம். அதான் உங்களுக்கு இல்லையே" என்றார்.
அதென்ன சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயா?




