நான் இந்த வருடம் முழுக்க தமிழகத்தில் பயணம் செய்த ஊர்கள் முதல் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள் வரைக்கும் ஒருவர் கூட பாஜக மேல் நல்ல அபிப்ராயம் சொல்லவில்லை. அளவு கடந்த வெறுப்பு. திட்டித் தீர்த்த வார்த்தைகள். கிண்டல், கேலி, நக்கல் என்று பாரபட்சமின்றி.
தணிக்கையாளர்கள் முதல் வியாபாரிகள் வரைக்கும்.
அரசியல் தெரிந்தவர்கள் முதல் அரசியலைப் பற்றிக் கண்டு கொள்ளாதவர்கள் வரைக்கும். 72 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மோடியைப் போல மிக அதிக அவமானப்படுத்தப்பட்டவர் இங்கு யாருமே இல்லை. அதே போல இந்தியா முழுக்க மோடி என்றாலே தினமும் ஏதோவொரு வகையில் உச்சரிக்கப்படும் மந்திரம் போலவே பாவிக்கப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் மோடி ஊடகங்களை மதிப்பதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. ஆனால் இன்றைய ஊடகங்களுக்கு மோடி தான் எல்லாமே.
இணையதளங்களில் செயல்படுபவர்களை நான் பொருட்படுத்திக் கொள்வதில்லை. களத்தில் இருப்பவர்களைப் பார்ப்பேன். அங்கும் இதே எதிர்ப்பு. ஏளனம். என்ன காரணம்? எனக்கு இந்த வருடம் கிடைத்த பட்டங்கள் சங்கி, மென்சங்கி, நீங்க ஆதரவு கொடுத்தாலும் சூத்திரன் தான் இன்னும் பல வாழ்த்துகள். பேசத் தொடங்கினாலே கொன்றுவிடுவேன் என்கிற அளவுக்கு அன்புக் கட்டளை. ஏன்?
