Showing posts with label இடைத்தேர்தல். Show all posts
Showing posts with label இடைத்தேர்தல். Show all posts

Sunday, December 15, 2013

வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?

சமீபத்தில் நடந்து முடிந்த ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த போது இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரிலை விவாதத்தில் தற்போது (அதிமுக முன்னாள் அமைச்சர். சுடுகாட்டு ஊழலின் மூலம் புகழ்பெற்றவர்) திமுகவில் இருக்கும் செல்வகணபதி பேசும் போது ஒரு விசயத்தைப் போகின்ற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார். 

"ஏற்காடு இடைத்தேர்தலில் பணபலம் தான் ஜெயித்தது" என்று சொன்னதோடு மட்டுமல்லாது அங்கே ஒரு குடும்பத்தில் நடந்த சாவைப் பற்றிச் சொன்னார். அது குறித்து எந்தப் பத்திரிக்கையாவது எழுதுகின்றார்களா? என்று ஒவ்வொரு பத்திரிக்கையையும் கவனித்துக் கொண்டே வந்த போது இந்த வார நக்கீரனில் அது குறித்துப் பதிவு செய்துள்ளார்கள். 

இதை இங்கே பதிவு செய்யக்காரணம் கடந்த நாற்பதாண்டு காலத் தமிழ் நாட்டு அரசியலில் ஆண்ட, ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் உருவாக்கிய பாதைகள் என்ன என்பதையும்,வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சராசரி வாழ்க்கைக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது? மனோபாவமும் எப்படி உள்ளது? என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். 

இதில் உள்ள ஒவ்வொரு வரியிலும் ஒரு துயரக்கதை ஒழிந்துள்ளது. முழுமையாகப் படிக்கும் போது உணர்ந்து கொள்ள முடியும். இனி வரும் தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பணம் மட்டுமே தீர்மானிக்கப் போகின்றது. இது மதுரையில் திருமங்கலத்தில் தொடங்கிய ப(ய)ணமிது. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கொள்கைகளை உருவாக்கியவர்களை மக்கள் மறக்காமல் இருப்பது இயல்பு தானே? 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்கள். 

நக்கீரன் பதிவு செய்துள்ள விசயம் தற்போது நடந்து முடிந்த ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை மட்டுமே. ஆனால் நான் புதுக்கோட்டையில் சந்தித்த ஒரு மருத்துவர் சொன்ன வாசகம் 

"நமக்கிட்டே இருந்து தான் இவனுங்க கொள்ளையடிக்குறானுங்க. இது நம்ம காசு. இவனுங்க கொடுக்குறத வாங்கினா என்ன தப்பு?" என்றார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பணம் வாங்கிக் கொண்டே ஓட்டுப் போட்டதாகத் தயக்கமில்லாமல் சொன்னார். 

இன்னும் சில வருடங்களில் இதன் வீரியம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதால் இப்பொழுதே இதை இங்கே பதிவு செய்து விடலாம் என்று தோன்றியது. இதன் மூலம் நமது சமூகத்தின் உண்மையான நிலவரத்தினைக் கொஞ்சமாவது நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

காரணம் இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் நம் பகுதிக்கு இடைத் தேர்தல் வந்துவிடாதா? என்று எதிர்பார்க்கும் மனோநிலையில் தான் மக்கள் இருக்கின்றார்கள். 

இறந்தவரின் மாமியார் வாக்குமூலம் 

"நாங்கெல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க. ஒரு நாளைக்கு 70 ரூபாய் வந்தால் பெரிய விஷயம். எங்க போயர் ஜாதில படிச்சவங்களும் பெருசா இல்லை. அந்த நேரத்துல தான் தேர்தல் வந்துச்சு. கட்சிக்கார்களா வந்தாங்க. எங்க ஊரையே திருவிழா போலக் கவனிச்சுகிட்டாங்க. எங்க ஊரே சந்தோஷப்பட்டுச்சு. ஆனா எங்கூட்டுல மட்டும் அப்பப்போ நிம்மதியில்லை. என் மருமக மலரு மகன் முருகன்கிட்ட பொழுதினிக்கும் சண்டை போட்டுகிட்டே இருப்பா. அன்னைக்குத் தேர்தலில் ஓட்டு போட்டுட்டு பேரன் கண்ணனை கூட்டிக்கிட்டு போனா. 

எப்பவும் போல அவங்கம்மா வீட்டுக்குத்தான் போவான்னு பார்த்தோம். ஆனா ரெண்டு நாள் கழிச்சு உம்மருமவளும், பேராண்டியும் ராமலிங்கபுரத்துல இருக்குற கெணத்துல பொணமா மெதக்குறாங்கடின்னு சொன்னாங்க". 

மாமனார் வாக்குமூலம். 

"எங்க ஊட்டுல அஞ்சு ஓட்டு. இரட்டை இலை கட்சிக்காரங்க ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம்ன்னு கணக்கு வச்சு மொத்தம் பத்தாயிரம் ரூபாய் தந்தாங்க. மூணு மாசம் உழைத்தாலும் இம்புட்டு காசு பார்க்க முடியுமா? சொளையா கிடச்ச பணத்துல எம் மகன் முருகன் நாலாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கினான். அது தான் புருஷன் பொஞ்சாதிக்குப் பிரச்சனை வந்து ஊசுரையே விட்டுட்டா. போனவ எம் ஆறு வயச பேரனையும் கூட்டிட்டு போயிட்டாளே? அவன் என்ன பாவம் செஞ்சான்?" 

கணவர் வாக்குமூலம். 

"நாம் இருக்குற நிலைமையிலே எதுக்குச் செல்போன் வாங்கினேன்னு மலரு கேட்டா? அதுல ரெண்டு பேருக்கும் சண்டை. அப்படி இருந்தும் அன்னைக்கு (டிசம்பர் 4ந்தேதி) போயி ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு வந்தவ, இனி உன்கூட ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டுப் பையனை கூட்டிக்கிட்டு போனாள். 6ந்தேதி சாயந்திரம் கெணத்துல மிதக்குறா. பாழாப் போன தேர்தல் வந்து என் பொண்டாட்டிய பிரிச்சுடுச்சே". 

இதே போல இது போன்று மற்றொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். 

சேலத்தில் இருந்து 60 கிமீ இருக்கும் தும்பல் மலையில் உள்ள வீரன் குடும்பத்திலோ இன்னோரு வகையான துயரம். 70 வயது கணவன் வீரன் இறந்து கிடக்க அவர் உடலை வைத்துக் கொண்டே அவரின் மனைவி (65 வயது) பாப்பாத்தியம்மா வாக்களிக்கச் சென்று தன் ஜ(ப)னநாயக(?) கடமையைச் செய்து வந்தார். 

மகள் வசந்தா 

"அப்பா ஆறு மாசமா படுத்த படுக்கையா இருந்தாரு. தேர்தல் அன்னைக்கு மொதநாள் நைட் எட்டு மணி இருக்கும். அப்பா எறந்துட்டாரு. ஆனாலும் மக்காநாளு ஓட்டு போட்டுட்டு வந்துதான் அப்பாவ அடக்கம் செஞ்சோம்" 

இறந்தவரின் மனைவி 

"செத்தவரு எழுந்தா வரப்போறாரு. அவரு நேரம் போயிட்டாரு. அதுக்காக ஓட்டு போடாமலா இருக்க முடியும். மதுரைவீரன் படம் பார்த்ததுல இருந்து ஒரு முறை கூட நான் ஓட்டு போடாம இருந்ததில்ல. அதான் ஒரு பையனை கூப்பிட்டு அவன் புல்லட்டுல உக்காந்துட்டு போயி ஓட்டு போட்டுட்டு வந்தேன்". 

அருகே வசித்தவர்களின் வாக்குமூலம் 

"இங்கே முக்கால்வாசி பேருங்க ரெட்டை எலை ஆளுங்கதான். அதுவும் இந்த முறை வோட்டுக்கு ரெண்டாயிரமும், வழி செலவுக்குன்னு எரநூறு ரூபாயும் கொடுத்தவங்கள மதிச்சு அந்தம்மா ஓட்டு போட்டு வந்துச்சு. சடங்கு செய்ய ஆரம்பிச்சுட்டா வெளியே போகமுடியாதே?" 

தொடர்புடைய பதிவுகள்