Thursday, May 12, 2022

'திராவிடம் ப்ளஸ்'

1949 செப்டம்பர் 19ஆம் நாளைய ‘விடுதலை’ தலையங்கத்தில் ஈ.வெ. ராமசாமி என்ற பெரியார் இவ்வாறு எழுதினார். அது திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்து இரண்டு நாட்களில் எழுதப்பட்டது:

“அவர்கள் பேசுவதெல்லாம் வெறும் மோசடி. அவர்களுக்கு தெரியும் என்னோடு இருந்தால் சட்ட சபைக்குப் போக முடியாது. பதவியை அடைய முடியாது. அதனால்தான் திருமணத்தை ஒரு சாக்காகச் சொல்கிறார்கள். அவர்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்ன?”73 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணாதுரை என்ற அண்ணா குறித்து ஈ.வெ.ரா எழுதிய வாசகத்தைப் போல இன்றைய அண்ணாமலை என்ற அண்ணா குறித்து ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்துக் கொண்டே யிருக்கின்றார்கள்?  

அன்று பெரியார் என்ற ஒரு தனி மனிதர்.  இன்று "நான் தான் பெரியவர்" என்று பல நூறு பேர்கள். 

எவரெல்லாம் என்பதனை தொடர்ந்து கவனித்து வந்த போது எனக்கொன்றும் அதிர்ச்சி ஏற்படவில்லை. அன்று ஈ.வெ.ரா    மட்டுமே அண்ணாதுரை மேல் அம்பு மேல் அம்பாக எய்து கொண்டே இருந்தார். 

அன்றைய தம்பிமார்கள் முதல் இன்றைய உடன்பிறப்புகள் வரை தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை. 

ஆனால் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை மேல் கொலைவெறித் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் யார்?

"யாரைக் கேட்டு 'திராவிடம் ப்ளஸ்' என்று அறிவித்தாய்? பாஜக இதற்கு எதிர் திசை என்பதனை சொல்லியிருக்கலாமே"?

"தமிழக பாஜக விற்கு அடிப்படைக் கட்டமைப்பு இல்லை. இன்னமும் உருவாக்கவில்லை?"

"ஏன் ஹிந்தியை எதிர்ப்பேன் என்கிறாய்? ஆதரித்து அல்லவா அறிக்கை விட்டுருக்க வேண்டும்?"

"பெரியார் நம் எதிரி. அவரை ஒழிப்பதே முக்கிய கடமை என்பதனை முரசறிவிக்காமல் இருப்பது தவறல்லவா?"

இன்னும் இது போல அடுக்கடுக்காய் அடுத்தடுத்து வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது?

இப்போதுள்ள முக்கியமான பிரச்சனை அனைவர் கையிலும் விலை குறைவான இணையத்துடன் கூடிய அலைபேசி உள்ளது.  வரமும் சாபமும் இதுவே தான்.

கூடவே ஒவ்வொருவரும் மோடி அளவுக்கு எங்களுக்குச் செல்வாக்கு உள்ளது என்று நம்புகின்றார்கள். தங்கள் சொல்வாக்கு குறித்து பெருமிதம் கொள்கின்றார்கள். எங்கள் மூலம் தான் பாஜகவின் கொள்கை பரப்பப்படுகின்றது. தமிழக பாஜக விற்கு அங்கீகாரம் என்பதே எங்கள் முகம் தான் என்பதாகவே கருதுகின்றார்கள்.   

கட்சி என்பதனை காட்சி ஊடகம் என்பதாகவே எடுத்துக் கொண்டார்கள் என்றே நம்ப வேண்டியதாக உள்ளது.

தமிழக பாஜக இங்கே உருவாகி 43 ஆண்டுகள் ஆகிவிட்டது. அண்ணாமலை அவர்கள் 12வது தலைவர். ஆனால் கடந்த பத்து மாதங்களில் அவ்வப்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த சலசலப்பு, அறிவுரை, ஆலோசனை என்று எதுவும் இதற்கு முன் இங்கே உருவாகவே இல்லையே? 

ஏன்?

திமுக, அதிமுக வில் தலைவர் பொறுப்பில் யார் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை. அதிகாரவர்க்கத்தினர் காட்டும் வழியில் சென்று அவர்கள் அளிக்கும் ஆலோசனையின்படி தங்களை வளப்படுத்தி அரசியல் தலையாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சி தான் இன்று தறுதலைகள் கூட ஊடக பலத்தில் உச்சத்தில் அமர முடியும் என்பது.

ஆனால் அண்ணாமலை இவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பது தான் இங்கே பலருக்கும் தூங்காத இரவுகளைத் தந்து கொண்டு இருக்கின்றது. 

தன்னைத் தானே இயக்கி, தன்னுடன் இருப்பவர்களை இயங்க வைத்து, அதிகாரவர்க்கத்தினரை ஆட்டிப் படைக்கக்கூடிய அடிப்படை அறிவுடன், அரசியல் என்ற அடிப்படைக் கடமைகளை உணர்ந்து உள்வாங்கி உளறல் மொழி இல்லாது ஒவ்வொரு நாளும் உற்சாக மனிதராக வலம் வருபவரை இளைஞர்களுக்குப் பிடிக்கும்.  

உழைக்க முடியாதவர்களுக்குப் பொறாமைப்படத் தானே முடியும்?  அதுவே தான் இப்போது களத்தில் பட்டுத் தெறித்துக் கொண்டிருக்கின்றது.

ஆலோசனை சொல்பவர்கள் ஆலோசகர்கள் அல்ல. அரை வேக்காடுகள்.  

கட்சி என்பது மக்களோடு தொடர்புடையது.  கட்சியின் கொள்கைகள் என்பது மக்களின் எண்ணங்களோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதனை உணராதவர்கள் உளறுகின்றார்கள் எனில் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

கட்சி என்று ஒன்று உருவான பின்பு அண்ணா ஏன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொன்னார்?

"திராவிடர் கழகம்" ஏன் "திராவிட முன்னேற்ற கழகம்" என்று மாறியது?

இதற்குள் இவர்கள் உருவாக்கிய அரசியலைப் புரிந்து கொண்டால் போதும்?  

எப்படிப்படட ஜகஜால திருடர்களிடம் அதிகாரம் உள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்?  காலமாற்றத்தில் எப்படி விஞ்ஞானத் திருடர்களாக மாறினார்கள் என்பதனையும் உணர முடியும்.

உணராதவன் உளறிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜரைப் போல கொண்டாட வேண்டிய மற்றொரு மனிதர் பக்தவச்சலம். அக்மார்க் தங்க மனிதர்.  101 சதவிகித நேர்மையான ஆட்சியைத் தந்தவர். ஆனால் ஹிந்தி என்ற வார்த்தை அவரை காலச் சக்கரத்தில் இழுத்து நசுக்கி உருத் தெரியாமல் அழித்த கதை யாருக்காவது தெரியுமா?  

இந்த ஹிந்தி என்ற மூன்று எழுத்து மூலம் திமுக என்ற மூன்று எழுத்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கதையாவது படித்து தெரிந்து கொண்டு அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லுங்களேன்.

எதிர்க்கட்சிக்காரர்களை விட "நானும் உங்க ஆள் தான்" என்று சொல்லிக் கொண்டே "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரில் காவளித்தனம் செய்து கொண்டு இருப்பவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். 

காரணம் 1949 முதல் தமிழகம் என்பது திராவிட பூமி என்று அண்ணா கதை எழுதி பெரியார் மண் என்பதாக கருணாநிதி திரைக்கதை எழுதி இறுதியாக இன்று திராவிட மாதிரி ஆட்சி என்று ஒரு கோமாளிக்கூட்டம் நடத்தும் கூத்துக்களின் மொத்த உழைப்பு 100 ஆண்டுகள்.  

முன்னும் பின்னும் நடந்த அனைத்து நபர்களின் உழைப்பும் இதற்குள் அடங்கும். இதைச் சிதைக்க முடியாது. அழிக்க முடியாது. இதில் உள்ள நல்லதை மேம்படுத்தி காலத்திற்குப் பொருந்தாதவற்றை நகர்த்தி வைக்க முடியும். 

அதைத்தான் அண்ணாமலை செய்து கொண்டு இருக்கின்றார். அதன் பெயர் தான் திராவிடம் ப்ளஸ்.

திமுக என்ற கட்சி உருவானது முதல் இன்று வரையிலும் அவர்களுக்கு அரசியல்  எதிரிகள் யாருமில்லை. இருப்பதாக உருவாக்கிக் கொண்டார்கள். எழுதினார்கள். பரப்பினார்கள். பேசினார்கள். 

ஆரியர்கள் என்று தொடங்கினார்கள். கரை கடந்து வந்து வந்தவர்கள் என்று முடித்தார்கள்.

பிராமணர்கள் எதிரியல்ல என்று தாயம் போட்டார்கள். பிராமணியம் தான் எதிரி என்று கேட்பவர்களைத் தடுமாற வைத்தார்கள். 

இது போன்று பல புதுப்புது உருட்டை இன்று வரையிலும் உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.  

இப்படிப்பட்ட வினோத ஜந்துகளை கையாண்டு கொண்டு இருப்பவர் அண்ணாமலை. அவர் மட்டும் தான் களத்தில் இருக்கின்றார் என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும். உயிர் பயமின்றி ஒவ்வொரு நாளும் போர்பரணி பாடிக் கொண்டிருப்பதுடன்  யாரால் ஆதாயம் வரும்? என்று கும்பலுடன் தான் அண்ணாமலை பணிபுரிய வேண்டியுள்ளது என்பதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

1990 க்குப் பிறகு திமுக மக்களை விட ஊடகத்தை நம்பினார்கள். காரணம் திமுக என்றால் ரௌடி, திருடர்கள், குடும்ப ஆதிக்கம், மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். மக்களை எக்காலமும் கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்பதனை பொது ஜனம் திமுக குறித்த இயல்பான அங்கீகாரமாகவே எடுத்துக் கொண்டார்கள். 

மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்ட திமுக என்ற தீயசக்தி மாற்று ஏற்பாட்டை உடனே உருவாக்கிக் கொண்டது. 

ஊடகத்தில் பணிபுரிபவர்களைத் தங்களுக்குப் பணிபுரிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஊடக நிறுவனம் வழங்கும் சம்பளத்துடன் இவர்கள் அளிக்கும் கையூட்டில் மயங்கி 24 மணி நேரமும் பரப்பியதன் விளைவு தான் "பெரியார் மட்டும் இல்லையெனில்"? 

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆலமரத்தைச் சமூக வலைதள அறிஞர்கள் சொல்வது போல ஒரே நாளில் மறுதலிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

கருணாநிதி செய்த மற்றொரு அசாதாரணமான காரியம் என்னவெனில் தமிழக அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்குப் பணிபுரியத் தேவையில்லை.  துறை சார்ந்த தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. 

தங்கள் கட்சிக்காரனாகவே கடைசி வரைக்கும் இருந்தால் போதும்.  திமுக என்ற கரை வேட்டி கட்டாதவனாகவே வாழ்ந்து விடு என்று அறிவுறுத்திய காரணத்தால் இன்று அத்தனை பேர்களும் "மோடியால் இந்த நாடு இப்படி ஆனது"? என்று மனதார நம்புகின்றார்கள்.  என்ன நடந்தது? என்று கேட்டால் பட்டம் சூட்டி பகபக வென்று சிரித்துப் பயமுறுத்துகின்றார்கள். 

இந்தச் சூழலில் தான் அண்ணாமலை தமிழக பாஜக கட்சிக்குத் தலைவராக வந்து உழைத்துக் கொண்டு இருக்கின்றார்? நான்கு பக்கமும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. கூடவே எங்கள் பங்குக்கு மேலே இருந்து பெட்ரோலை ஊற்றுகின்றோம் என்று கும்பல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது என்ன சொல்வது?

உங்களாலும் என்னாலும் மன அழுத்தமின்றி உறக்கமின்றி, சோர்வின்றி விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கத்தான் முடியுமா? 

ஒரு லட்சம் பார்வையாளர்களும் நான்கு லட்சம் சந்தாதாரர்களையும் பார்த்தவுடன் புடினுக்கு அறிவுரை சொல்வேன் என்று கிளம்பக்கூடியவர்கள் தயவு செய்து ரஷ்யா சென்று விடுங்கள். 

எங்கள் அண்ணாமலையை விட்டு விடுங்கள்.

அவரின் ஆத்ம பலம் அவரை வழிநடத்தும்.

இந்த இடத்தில் நீங்கள் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்?

இடையில் கிளைக்கதையாக உருவான அதிமுக வோ அல்லது களைச் செடியாக வளர்ந்து எச்சில் செய்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு அந்த எலும்புத்துண்டு போதும் என்று இவர்களுடன் ஒட்டுண்ணியாக உடன் வாழும் சிறிய கட்சிகள் அத்தனை பேர்களுக்கும் இன்று ஒரே எதிரி பாஜக அல்ல.  அண்ணாமலை என்ற ஒரு தனி மனிதன் மட்டுமே. முன்பு இருந்த பாஜக தலைவர்களின் காலத்தில்  மூச்சு சத்தம் ஏதும் கேடடதா? காரணம் இது வரையிலும் வீராதி வீரன், சூராதி சூரன் என்று வாய் இருக்கின்றதே என்று வாடகைக்கு விட்டு கத்த வைத்து சுகம் கண்டு வாழ்ந்து கொண்டு இருந்த ஒவ்வொருவரும் நிஜமாகவே அப்படிப்பட்ட திறமை உள்ள ஒருவர் தமிழக அரசியல் களத்திற்குள் வந்து நிற்பார் என்று கனவில் கூட நினைக்காத காரணத்தால் அடுத்து எந்தப் பக்கம் அடியெடுத்து வைப்பது? என்று புரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றார்கள்.

குட்டிகளை விட்டு ஆழம் பார்த்துப் பழகியே வாழ்ந்து வந்த திமுக இன்று தடுமாறி நிற்கின்றது. முதலுக்கு மோசம் வந்து விடப் போகின்றதோ? என்று அச்சப்படும் அளவுக்கு அண்ணாமலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இடியாகவே இறங்குகின்றது. 

தமிழகத்தில் 40 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட தமிழக பாஜக ஏன் வளரவே இல்லை என்பதற்கு உங்களால் எத்தனை காரணங்களை அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களிலும் திமுக, அதிமுக, மற்ற சாதிக் கட்சிகள் காரணமாக இருக்க மாட்டார்கள். பாஜக வில் இருந்தவர்களின் தனிமனித பலகீனமும் அளவு கடந்த பொருளாசையுமே முக்கிய காரணமாக இருந்தது என்பது விபரம் தெரிந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும்.

ஆனால் தற்போது என்ன நடக்கின்றது?

தமிழக பாஜக என்ற கட்சிக்கு அடித்தளமிட்டதில் எங்களுக்கும் பங்குண்டு என்று எவரெல்லாம் முரசறிவித்துக் கொண்டு தங்களைத் தாங்களே முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்களோ? அவர்களின் பணிவான கவனத்திற்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

"அனுமன் போல நான் மோடி அவர்களின் தூதுவனாக இங்கு வந்துள்ளேன். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று ஈழப் பயணத்தின் போது சொல்லி முடித்து மீனம்பாக்கத்தில் கால் வைக்கின்றார்.  அன்று அனுமன் பற்ற வைத்த நெருப்பு போல இலங்கையே தீயில் கொந்தளிக்கின்றது. ஒன்று சேராமல் பிரிந்து நின்ற அனைவரும் அண்ணாமலை பின்னால் அணிவகுக்க அதகளம் தொடங்கியது. இலங்கையில் எறியும் தீ ஜுவாலை இராமேஸ்வர காற்றில் உணர முடிகின்றது.

"நான் தொப்புள் கொடி உறவுகள் உணர்வுகளை உணர்ந்தவன்" என்று சொன்னதோடு மலையகத் தமிழர்களுடன் உறவாடி பிறகு சிறையில் இருந்த தமிழக மீனவர்களைச் சந்தித்து தேவையான பொருட்களை வழங்கி ஆறுதல் சொல்லி "விரைவில் உங்களைத் தமிழகத்தில் சந்திப்பேன்"  என்று சொல்லி 72 மணி நேரம் கூட முடியவில்லை.  

இன்று சிறையிலிருந்து மீனவர்கள் வெளியே வந்து கொண்டிருக்கும் காட்சியை நம்மால் காண முடிகின்றது.

கொண்டாடித் தீர்க்க வேண்டிய மனிதர் அண்ணாமலை. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பல பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

நிஜமான எதிரிகளுக்கு எதிரியாய் அரசியல் செய்வதை விட இவர்களை அடக்குவதா? அமர வைப்பதா என்பதே பார்ப்பவர்களுக்குக் குழப்பமாகவே உள்ளது.

அண்ணாமலை அவர்களை எந்தக் காலம் இங்கு கொண்டு வந்து சேர்த்ததோ அறிவிலிகளை அடக்க அந்தக் காலம் விரைவில் சில நாடகம் நடத்தும் என்று நான் நம்புகிறேன்.

அறுபது வருடங்களுக்கு முன்னால் பெரியார் உரக்கச் சொன்ன வாசகமிது.

"தமிழர்களே காமராசரை கை விடாதீர்கள். வேறு ஒருவர் எவரும் இவரைப் போல உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்".

நான் அண்ணாமலை அவர்களை அப்படியே கருதுகிறேன். என் குரல் போல பெருங்குரல் பலகுரல்களாக மாறி ஒன்றாகச் சேர்ந்து தமிழக மூலை முடுக்கு எல்லாம் ஒலிக்கும் நாள் விரைவில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

காலம் கவனிக்கும். 

கற்றுக் கொடுக்கும். 

அங்கீகாரமளிக்கும்.

ஜெய் ஹிந்த் (ஜோதிஜி திருப்பூர் 12.05.2022)

2 comments:

இராய செல்லப்பா said...
This comment has been removed by the author.
இராய செல்லப்பா said...

அறுபது வருடங்களுக்கு முன்னால் பெரியார் உரக்கச் சொன்ன வாசகமிது.

"தமிழர்களே காமராசரை கை விடாதீர்கள். வேறு ஒருவர் எவரும் இவரைப் போல உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள்".

நான் அண்ணாமலை அவர்களை அப்படியே கருதுகிறேன். என் குரல் போல பெருங்குரல் பலகுரல்களாக மாறி ஒன்றாகச் சேர்ந்து தமிழக மூலை முடுக்கு எல்லாம் ஒலிக்கும் நாள் விரைவில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். "
உங்கள் சொற்கள் பலிக்கவேண்டும் என்பதே ஏன் ஆசை.

ReplyDelete