Wednesday, January 16, 2019

இவர் (தான்) மக்களின் கடவுள் 2



வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 

7. ”பாலைப்பற்றியோ விவசாயத்தைப்பற்றியோ அது வரைக்கும் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தனக்கு எது தெரியும் என்பதை விட எது தெரியாது என்று உணர்ந்தவர்களால் தான் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார் டாக்டர் வர்கீஸ் குரியன்! 

அமெரிக்காவில் தனக்கு அறிமுகமான நண்பர் ஹரிச்சந்திர யாதவை சில நாட்கள் ஆனந்த் வருமாறு கேட்டுக்கொண்டார். அவர் பால் விவசாயிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மூன்று நாட்களுக்கு மட்டும் விருந்தாளியாக வந்த அவர் அமுலில் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்று 35 ஆண்டுகள் அங்கு வேலை செய்தார்! இதுபோல் அமுலின் ஒவ்வொரு துறையிலும் மிகுந்த திறமைசாலிகளைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு தெளிவான முறையில் அவர்களை வழி நடத்தினார் டாக்டர் வர்கீஸ் குரியன். 

குஜராத்தி மொழி ஒருபோதும் அவருக்கு வசமாகவில்லை. ஹிந்தியுமே அரைகுறை தான்! ஆங்கிலத்தில் தான் அனைத்து கருத்து பரிமாற்றங்களுமே. ஆனால் மொழி அவருக்கு ஒருபோதும் ஒரு தடையாக இருக்கவேயில்லை! மிகவும் கவனிக்கப்பட்ட அமுலின் விளம்பரங்கள் படைப்பூக்கம் கொண்டவையும் காலத்திற் கேற்றவையுமாக அமைந்ததில் டாகடர் வர்கீஸ் குரியனுக்கு நேரடி பங்கிருந்தது. 

************ 

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ் கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும் அதன் வணிகச் சாம்ராஜ்ஜியத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன். அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிட்டெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணிநேரத்திற்குள்ளேயே கெட்டு போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக் கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம் டாக்டர் வர்கீஸ் குரியன் தான்! ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான். 

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல. ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம் தான் அமுல்! அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16200 கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்! ஆண்டில் 12000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும் பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலை சிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர் பானங்கள், ஆரோக்கியப் பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாயிகள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே. அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த ’செயல் பெருவெள்ளம்’ (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது. அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது! உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று! எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள். 

மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தவர் அவர்! 

•••••••••••••••• 

8. எதையும் அதிரடியாகப் பேசிவிடுவது குரியனின் பண்பு. கோடைக்காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் மாடுகள் இருமடங்கு பால் கறப்பதால் தான் அதன் காம்புகளை அடைக்கவியலாது எனவே நீங்கள் பாலை அதிகமாக வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் குரியன் முறையிட, மழைக்காலத்தில் மக்கள் இருமடங்கு பால் அருந்துவதில்லை என்பதால் வாங்கமுடியாது என்று அதிகாரிகள் எகிர, இதை எதிர்பார்த்துத் தயாராகச்சென்ற குரியன் ‘ஆனால் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதிசெய்யும் பால்பவுடரை நீங்கள் குறைக்கலாமே?’ என்று கேட்டு ‘நீங்கள் நம் நாட்டுக்கு வேலைசெய்கிறீர்களா நியூஸிலாந்துக்கா?’ என்று கொதிப்பதில் தொடங்குகிறது இவருக்கும் அதிகாரிகளுக்குமான சிக்கல். 

நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்பி இருக்கிறார். 

இந்தியா பால் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூசிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக் காட்டியிருக்கிறார். 

அவரோ மீண்டும் மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார். பயந்துபோய் இடத்தைக்காலிசெய்த அப்பெண்மணி பின் வெகுகாலம் டெல்லி வட்டாரங்களில் ‘குரியன் ஒரு பைத்தியம், என்மேல் எச்சில் துப்புவதாகப் பயமுறுத்தினார்’ என்று சொல்லிவந்தாராம்! 

குரியனின் அபார மூளையும் சமயோசித புத்தியும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. முதலாவது, கூட்டுறவு அமைப்பின் பாலில் ஈக்கள் கிடப்பதாக ஆரம்பத்தில் புகார்கள் வந்தவண்ணம் இருந்திருக்கின்றன. இது ஏதோ சதிவேலை என்று சந்தேகித்த குரியன் ‘அடுத்தமுறை ஈ கிடந்தால் அதைப் பிரேதபரிசோதனைக்கு அனுப்புங்கள்; அதன் நுரையீரலில் பால் இருந்தால் அது பாலில் விழுந்து இறந்தது, இல்லையேல் அடித்து உள்ளே போடப்பட்டது’ என்று அறிக்கை அனுப்ப அதன்பிறகு ஈ விழவேயில்லையாம். 

•••••••••••••• 


நேருமுதல் வாஜ்பேயிவரை அத்தனை பிரதமர்களுடனும் தனிப்பட்ட செல்வாக்கு குரியனுக்கு இருந்திருக்கிறது. நாட்டையும் நாட்டின் விவசாயிகளையும் நேசித்ததும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று உழைத்ததுமே தனக்கு அந்தச் செல்வாக்கை அளித்ததாக எழுதுகிறார். மற்றபடி தான் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் ஐயாயிரம் ரூபாய்தான் (1981ல்) என்கிறார். தன் திறமையைவிடக் குறைவாகச் சம்பளம் பெறுபவர்களைச் சக ஊழியர்களும் மற்றவர்களும் உயர்வாக மதிப்பார்கள் என்பது குரியனின் நம்பிக்கை. 

••••••••••••••••• 

2010-11-ல் அமுலின் வருவாய் 2.15 பில்லியன் டாலர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

••••••••••••

9. இவ்வாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைத் திறம்பட முன்னெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே அமைதியாக வேறொரு சாதனையும் குரியன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. அது என்னவென்றால் உலகிலேயே முதன்முறையாக எருமைப் பாலிலிருந்து பால்மாவு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபடைத்ததாகும். அதுவரை பால்மாவானது பசும்பாலில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்குக் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் பாதிக்கும் மேல் எருமை மாட்டிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது. 

அவ்வாறு கிடைக்கப்பெற்ற திரவப் பால் குளிரூட்டப்பட்டு ஒரு சில நாட்களிலேயே நகரங்களில் விநியோகிக்கப்பட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவி வந்தது. இதனால் திரவப் பாலை சேமித்து வைப்பதிலும், சேமித்து வைத்தலுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. 

இந்தச் சூழ்நிலையில் தான் டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் எருமைப் பாலில் இருந்து பால் மாவு தயாரிக்கும் தொழில் நுட்பமானது கண்டு பிடிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாகத் தேவைக்கு அதிகமான திரவப் பாலானது பால்மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் அதிக லாபத்தை ஈட்டியதோடு மட்டுமல்லாமல் பால் உற்பத்தியாளர்களிடையே அதிகப் பால் உற்பத்தி செய்வதற்கு ஓர் உந்து சக்தியாகவும் விளங்கியது. இவ்வாறாக டாக்டர் குரியன் அவர்கள் கிராமப்புற மக்களுக்குப் பால் உற்பத்தி மூலம் நிரந்தரச் சீரான வருமானம் கிடைப்பதற்கு ஒரு முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. 

••••••••••••••• 

10. அமுல் - இந்தியாவின் சுவை (AMUL – The Taste of India) 

டாக்டர் குரியன் அவர்கள் பால் உற்பத்தியைப் பெருக்குவதில் காட்டிய முனைப்பைவிட உற்பத்தி செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதில் பெரும் பங்காற்றினார் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவே தான் டாக்டர் குரியன் அவர்கள் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்குச் சந்தையில் ஒரு விற்பனை பெயர் அவசியம் என்று கருதினார். ஒரு விற்பனை பொருளின் விற்பனைப்பெயர் (Brand Name) மூலமே அந்தப் பொருளானது மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது என்று நம்பினார். 

அது மட்டுமல்லாமல் அந்த விற்பனை பெயருக்கேற்றவாறு விலையும், தரமும் அமையும் பட்சத்தில் அந்த விற்பனை பொருளானது சந்தையில் உள்ள மற்ற பொருளிலிருந்து தனித்துவம் பெறுகிறது என்றும் எண்ணினார். இப்படியாகப் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விற்பனைப்பெயர் தான் இன்று இந்தியா முழுவதிலும் கோலோச்சும் “அமுல்” (AMUL) என்பது. 

••••••••••• 

அமுலின் வெற்றிக்குப் பின்னால், சில முக்கியக் காரணிகள் – Game Changers இருந்தன. 

1. மிகவும் திறன் கொண்ட, மிகக் குறைந்த செலவில் அமைந்த Supply Chain: 

அமுல் மாடலில், அவர்களின் அமைப்பே தரகரின் வேலையையும், தயாரிப்பாளரின் வேலையையும் மேற்கொள்வதால், இரட்டை லாபம் மிச்சம். மேலும், உற்பத்தி மிகச் சீராக நுகர்வோரைச் சென்றடைவதால், உற்பத்தியாளர்களின் உற்பத்தி தேங்குவதில்லை. உற்பத்தி விற்காமல் தேங்கினால், அதில் பணம் முடங்கி, ஏழை விவசாயிகள் தம் தினசரித் தேவைகளைக் கூடப் பூர்த்திச் செய்ய முடியாமல் பாதிக்கப் படுவர். 

அதிகாலை, மாட்டின் மடி விட்டுக் கிளம்பும் பால், சில மணி நேரங்களில், அருகில் உள்ள குளிரூட்டப் படும் நிலையத்தை அடைந்து, குளிரூட்டப் பட்டு, பதனப்படுத்தப் படும் ஆலையை அடைந்து, பதப் படுத்த பட்டு, அடுத்த நாள் அதிகாலையில் நுகர்வோர் வீட்டு வாசலில் பாக்கெட்டுகளாய்த் தொங்கும். தினசரி, பாரதத்தின் பட்டி தொட்டியெங்கும் உள்ள 1 ½ கோடி விவசாயிகளிடமிருந்து, பால் கொள்முதல் செய்யப் பட்டு, மண் ரோடு / கல் ரோடுகளைத் தாண்டி, ஒரு நகரத்தை அடுத்த நாள் தவறாமல் அடையும் Supply Chain ஐ என்ன வென்று சொல்லலாம்?? உலகத் தரம்?????. 

அமுல் இந்த மாடலை 1940லிருந்து வெற்றிகரமாகச் செயல் படுத்தி வருகிறது, தார்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் இல்லாத காலத்திலிருந்து. இன்று, இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று தொழிலதிபர்கள் / பொருளாதார வல்லுநர்களைக் கேளுங்கள்.. இந்தியாவின் கட்டமைப்பு மோசம் என்று சொல்வார்கள்.. சாலைகள் சரியில்லை.. துறைமுகங்கள் சரியில்லை என்று. Bull shit. 

2. சரியான தொழில் நுட்பம் 

அதிக மழையும் வெப்பமும் இருக்கும் சூழலில் உள்ளது நம் நாடு. இங்கே பால் போன்ற, microially sensitive பொருட்களைச் சாதாரணச் சூழலில் எடுத்துச் கையாள முடியாது. சொல்லப் போனால், நமது மாடுகள் வளர்க்கப் படும் சூழல், பால் கறக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றிலுமே நுண்ணுயிர் சுமை, குளிர் பிரதேசங்களை விட, பலப் பல மடங்கு அதிகம். எனவே கறந்த பால் சில மணி நேரங்களில் பதப் படுத்த படாவிட்டால், கெட்டு விடும். இந்தப் பதப் படுத்துதலில் மூன்று கட்டங்கள் உண்டு. 

முதல் கட்டத்தில், பாலில் உள்ள நுண்ணுயிர்கள் பாஸ்ட்யூரைஸிங் மூலம் அழிக்கப் படுதல். இரண்டாவது, பாலை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல, குளிரூட்டப் பட்ட பாலின் குளிர்ச்சியைப் பாதுகாத்துக் கொண்டு செல்லும் கொள்கலன்கள். மூன்றாவது, அதிகக் கொழுப்பு உள்ள பாலில் இருந்து, கொழுப்பை அகற்றி, அதிலிருந்து வெண்ணெய், நெய் போன்றவற்றைச் செய்வது. 

முதலில், இயந்திரங்களை இறக்குமதி செய்த அமுல், பின்னர் தானே வடிவமைக்கவும் துவங்கியது. அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. 

•••••••••••• 

11. தென்மேற்குப் பருவக் காற்றால் மழை பெறும் பாரதத்தில், விவசாயம் ஜூன் மாதத்துக்குப் பின் தான் துவங்குகிறது. மாடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைக்கத் துவங்கும் நேரம் அது. எனவே, பால் உற்பத்தியும் அதிகரிக்கத் துவங்கி, குளிர் காலத்தில் மிக அதிகமாகப் பால் கிடைக்கும். ஆனால், கோடைக் காலத்தில் தீவனம் குறைந்து, பால் உற்பத்தியும் குறையும். ஆனால், நுகர்வோர் தேவை வருடம் முழுவதும் சீராக இருக்கும். 

இதை எப்படிச் சமாளிப்பது?? 

அதிகமாகப் பால் கிடைக்கும் போது, அதைப் பால் பவுடராக மாற்றி வைத்துக் கொண்டு, பற்றாக்குறைக் காலங்களில், அதை மீண்டும் பாலாக மாற்றிக் கொள்வதுதான் வழி. இதற்கு ஸ்ப்ரே ட்ரையிங் என்றொரு முறை உண்டு. அந்த இயந்திரங்கள், அப்போது, ஐரோப்பாவில் தயாரிக்கப் பட்டு வந்தன. அவற்றில், கொழுப்பு குறைவான மாட்டுப் பாலை மட்டுமே பதப் படுத்த முடிந்தது. ஆனால், இந்தியாவில் எருமைப் பால்தான் அதிகம். எருமைப் பாலை பவுடராக்கும்படி, இயந்திரத்தை மாற்றிக் கொடுக்கும்படி அமுல் விடுத்த வேண்டுகோள், நக்கலாக மறுக்கப் பட்டது. 

மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் பயின்று தன்னுடன் வேலை செய்ய வந்த டாலயாவிடம் அந்தச் சவாலைக் கொடுத்தார். வெற்றிகரமாக அந்தச் சவால் முறியடிக்கப் பட்டது. குளிர்காலத்தில் கிடைக்கும் எல்லாப் பாலும் கொள்முதல் செய்யப் பட்டு, பவுடராக மாற்றப் பட்டது. வடகிழக்கில் எப்போதுமே பால் பற்றாக்குறை. பவுடராக மாற்றப் பட்ட பாலுக்கு வடகிழக்கு ஒரு பெரும் சந்தையாக உருவெடுத்தது. ஆனால், பவுடர் பால் விலை அதிகமாக இருந்ததால், ஏழை நுகர்வோருக்கு, அது பெரும் பாரமாக இருந்தது. எனவே, அமுல் மிகக் குறைந்த செலவில், ரயில் மூலம் பாலைக் கொண்டு செல்லக் கொள்கலன்கள் வடிவமைத்தனர். 

மொத்தத்தில், தொழிலுக்கு என்ன தேவையோ, அந்தத் தொழில்நுட்பங்களை அமுலே உருவாக்கிக் கொண்டது. குரியன் போன்ற தொழிநுட்பமும், பொது நலனும் இணைந்த ஆளுமையில்லாமல், இது சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை. இது பெருமளவில் அன்னியச் செலாவணியை மிச்சம் செய்தது மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கும் வழி வகுத்தது. 

3. உற்பத்தியாளர்களின் நலன்: 

அமுல் முழுக்க முழுக்கப் பால் உற்பத்தியாளர்களின் தொழில் அமைப்பு. அவர்களின் தேவைகளுக்கேற்ப, தொழில் முறைகள் அமைக்கப் பட்டன. பால் உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பாலானோர் சிறு மற்றும் குறு விவசாயிகள். ஒன்றிரண்டு கால்நடைகளை வைத்திருப்போரே அதிகம். அவர்களின் மிக முக்கியப் பிரச்சினைகள் என்ன? 

பணம்: சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் பணம் புழக்காட்டம் வருடம் இருமுறை தான். முதலில் கரீஃப் என்று சொல்லப் படும் தென்மேற்குப் பருவக்காற்று மகசூலில் வரும் வருமானம். பின் இரண்டாவது போகமான ரபியின் வருமானம். மற்ற நேரங்களில் பணப் புழக்காட்டம் மிகக் குறைவு. அவர்களால், கால்நடைகளுக்குத் தேவையான சத்தான தீவனத்தை வாங்கக் காசு இருக்காது. எனவே, கொள்முதல் செய்த பாலுக்கு, வாரா வாரம் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது. 

பால் சொசைட்டியிலேயே, கால்நடைத்தீவனமும் விற்கப் பட்டது. மிக ஏழை விவசாயிகள், தினசரி பாலை ஊற்றி விட்டு, அன்றைக்குத் தேவையான தீவனத்தை வாங்கிச் செல்லும் வசதியும் செய்யப் பட்டது. வாரக் கடைசியில், தீவனம் வாங்கியது போக, மீதப் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது. 

கால்நடை நலம்: மனிதர்களுக்கே சரியான மருத்துவ வசதி இல்லாத காலத்தில் கால்நடைகளுக்கெங்கே?? ஆனால், கால்நடைகளின் உடல் நலமும், அவை சரியான நேரத்தில் கருத்தரித்தலும் பால் உற்பத்திக்கு மிக முக்கியம். அமுல், கால்நடை நலத்தைப் பேண, மருத்துவர்களை, கிராமங்களுக்கே கொண்டு வந்தது. செயற்கை முறைக் கருத்தரித்தல், கலப்பினக் கால்நடைகளை உருவாக்கி பால் உற்பத்தியைப் பெருக்குதல் போன்றவற்றை அமுல், தன் தொழிலின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதி அதில் ஈடுபட்டது. 

மகளிர்: விவசாய வீட்டில், பெரும்பாலும், பெண்கள் தான் கால்நடைகளைக் கவனித்துக் கொள்வார்கள். பால் கறப்பது, மேய்ப்பது போன்ற பல வேலைகளிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பது அவர்களே. எனவே, அவர்களின் உடல் நலன் மிக முக்கியமானது. அதில் மிக முக்கியமானது, அவர்களின் மகப்பேற்றுக் காலம். சரியான உணவு, தடுப்பூசிகள் முக்கியம். அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் போனாலோ, குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாது போனாலோ, அது பால் உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும் என்றுணர்ந்து, அமுல், திரிபுவன் தாஸ் ஃபவுண்டேஷன் என்னும் ஒன்றை உருவாக்கி, அதிலும் கவனம் செலுத்தியது. 

4. நுகர்வோர் மற்றும் பொதுநலன்: 

பெரும்பாலும் தொழிலின் முக்கியமான குறிக்கோள் லாபம் சம்பாதிப்பது என்றே கருத்து உள்ளது. ஆனால், பழம்பெரும் மேலாண் அறிஞரான பீட்டர் ட்ரக்கர் அது தவறு என்கிறார். நுகர்வோரின் தேவையை அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாகப் பூர்த்திச் செய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும் என்கிறார். அப்போது லாபம்? – அது அந்த நிறுவனம் மிக நலமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் மட்டுமே என்கிறார். தர வரிசையில் வைக்கும் போது, முதலில் வருவது நுகர்வோர் நலனே. லாபம் அதற்குப் பின் தான். நுகர்வோரைக் குறித்துக் காந்தியும் இதேதான் சொல்கிறார். 

••••••••••••••• 

வெண்மைப் புரட்சியின் துவக்கத்தில் 20 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, Operation Flood -3 ன் இறுதியில் 68 மில்லியன் டன்னைத் தாண்டி உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளரான அமெரிக்காவைத் தொட்டது. 

************* 

ஒரு அரசு திட்டமாக இருந்தும், அவர் தனது தேவைகளுக்காக, தில்லி செல்லத் தேவையே இருந்ததில்லை. ஆனால், சில லைசென்ஸ்களுக்காகச் செல்ல வேண்டியிருந்த காலத்தில், தில்லி பாபுக்கள் (இ.ஆ.ப) நடந்து கொண்ட விதம் அவரை வெறுப்படைய வைத்திருந்தது. தன் சாக்லேட் ஆலைக்கான அனுமதி பெறத் திட்டக் கமிஷன் சென்றிருந்த போது, அனுமதி வழங்க மறுத்த திட்டக் ஆணையக் கமிசார்கள் சொன்னது, ‘அதனால், உள்ளூர் இனிப்பு வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள்’. ‘ஒரு மாட்டைப் பிடித்துப் பால்கறக்கத் தெரியாத நீ என்ன எனக்கு அறிவுரை சொல்வது?’ என்று எகிறி, தனக்கு வேண்டிய அனுமதி பெற்றுச் சென்றார். தில்லியின் அதிகார வர்க்கம் அவரை மிக ஆசையாக வெறுத்து வந்தது. 

*************** 


12. 91 ஆம் ஆண்டு, இந்தியாவைப் புரட்டிப் போட்ட ஒரு ஆண்டு. அந்நியச் செலாவணிச் சிக்கலில் சிக்கிய பாரதத்தைக் காப்பாற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஓரிரவில் ஒழித்தார் அன்றைய நிதியமைச்சர் டாக்டர்.மன்மோகன் சிங். அதில் பாலும் அடங்கும். ஆனால், டாக்டர் குரியன் அதை எதிர்த்தார். 

கூட்டுறவு பால் சங்கங்கள் விவசாயிகளின் நிறுவனங்கள். அவற்றால், தனியார் துறையுடன் போட்டி போட இயலாது என்று. அது மட்டுமில்லாமல், தனியார் துறை வந்தால், லாபம் மட்டுமே குறிக்கோளாகி, அத்தியாவசியப் பொருளான பாலின் விலை ஏறி விடும், விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் கைவிடப் பட்டு, இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்னும் வாதங்களை முன்வைத்தார். அவரின் வாதங்கள் ஏற்கப்பட்டு, பால் துறையில் மட்டும் மீண்டும் லைசென்ஸ் முறை கொண்டு வரப் பட்டது. நிதியமைச்சராகும் முன்பு, இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மன்மோகன் சிங்குக்கு, குரியனின் சாதனை மீது பெரும் மதிப்பு இருந்ததும் ஒரு பெருங்காரணம். (அவர் மகள் தமன் சிங் ஒரு இர்மா பட்டதாரி!) 

90களில், தாராள மயமாக்கல் ஒரு பெரும் மதமாகவும், சர்வ ரோக நிவாரணியாகவும் கொண்டாடப் பட்டது. எல்லா லைசென்ஸ்களையும் ஒழித்தாலே இந்தியா முன்னேறி விடும் என்னும் மூட நம்பிக்கை மழைக்கால வெள்ளம் போல நுரைத்தோடியது. அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் பழமைவாதிகளாகவும், செல்லாக்காசுகளாகவும் சித்தரிக்கப் பட்டனர். குரியனும் அதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அவர் பெரும் சாதனையாளர்தான்.. எனினும், அவர் விலகி இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்னும் ஓசைகள் கேட்கத் துவங்கின. 

லைசென்ஸ் முறை வேளாண்மையைப் பாதிக்கும் சில துறைகளில் இருந்தது. உரம், கரும்பு, பால், பூச்சி மருந்து முதலையவற்றில். இதில் கரும்பும், பாலும் கொஞ்சம் வித்தியாசமனவை. அவற்றுள் விவசாயிகளின் நேரடிப் பங்களிப்பு இருந்தது. கரும்பு ஆலை லைசென்ஸ் மத்திய அரசு கையில் இருந்தது. கரும்பு விளையும் வேளாண் பகுதிகளைப் பிரித்து, ஒரு குறைந்த பட்ச கரும்பு விளையக் கூடிய ஒரு வட்டாரத்தை, மத்திய அரசு ஒரு தொழில் முனைவோருக்கு அளித்து, அவருக்குக் கரும்பு ஆலையை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமம் வழங்கும். அந்த வட்டாரத்தில் வேறெவரும் விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்க முடியாது. 

வருடத்தில் சில மாதங்கள் கரும்பு ஆலைகள் இயங்கி, சர்க்கரை உற்பத்தி செய்து, அவற்றை, ஆலைகள் தமது கிடங்குகளில் வைத்து விடுவார்கள். விற்க முடியாது. விற்க, அரசின் அனுமதி தேவை. மத்திய அரசு, மாதா மாதம் ஒவ்வொரு ஆலையும் எவ்வளவு விற்க வேண்டும் என்று ஒரு ஆர்டர் கொடுப்பார்கள். அதில் ஒரு சதவீதம் ரேஷனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இம்முறையினால், வெளி மார்க்கெட்டில் சர்க்கரை விலை கட்டுப் படுத்தப் பட்டது. விலை வீழ்ந்த காலங்களில், விற்கும் அளவைக் குறைத்தும், ஏறிய காலங்களில், விற்பனை அளவை அதிகரித்தும் அரசு மேலாண்மை செய்து வந்தது. இதனால், ஆலைகள் ஒரு சர்க்கரை வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டன (sugar cycle). ஓவ்வொரு 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கரும்பு உற்பத்தி அதிகமாகி, அவர்கள் பணம் முடங்கி, விலை குறைந்து அவர்கள் லாபம் பாதிக்கப் படும். 

அடுத்த ஆண்டு, அவர்கள் விவசாயிகளிடம் இருந்து சரியாகக் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இங்கும் அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு என்ன கொள்முதல் விலை தரவேண்டும் என்று நிர்ணயிக்கும். சர்க்கரை விலை வைக்கும் அரசுத்துறைக்கு நல்ல இரண்டாம் வருமானம் உண்டு. விற்கும் விலையில், கிலோவுக்கு இவ்வளவு என்று ஆலை முதலாளிகளும் தனியே வாங்கிக் கொள்வார்கள். அவர்களிடம் இருந்து ஒரு பங்கை அரசியல்வாதிகள் பிடுங்கிக் கொள்வார்கள். கொள்முதல் விலை குறைந்தால், விவசாயிகள் கொடி பிடிப்பார்கள். அவர்கள் செல்வாக்கு 4 மாநிலங்களில் உண்டு. எனவே, அரசியல் வாதிகள் விவசாயிகளுக்கு நல்ல விலையும் பேசி வாங்கித் தருவார்கள். 

அதே சமயம் சர்க்கரை விலை அதிகரித்தால், அரசாங்கங்கள் ஆடும் – எனவே அரசியல்வாதிகள் அதையும் கவனமாகக் கையாண்டார்கள். 

மொத்தத்தில், ஊழல் மலிந்த, அதே சமயம் அத்தொழிலின் ஐந்து முக்கியப் பங்குதாரர்களுக்கும் (அரசு, அரசியல்வாதி, தொழில் அதிபர்கள், விவசாயிகள், நுகர்வோர்), அதிக நட்டமில்லாமல் நடந்து வந்தது. இந்தியா உலகின் மிகப் பெரும் சர்க்கரை உற்பத்தியாளர். தென்னிந்தியாவின் கரும்பு உற்பத்தித் திறன் உலகில் ஒரு சாதனை. 

கரும்பு வாங்கும் விலையையும், சர்க்கரை விற்கும் விலையையும், சர்க்கரை விற்பனை அளவையும் அரசே நிர்ணயிப்பது தகாது என்று சுதந்திரச் சந்தைப் (free market) பூசாரிகள் குரலெழுப்பினர். அரசும் பணிந்து, சர்க்கரை விதிகளைத் தளர்த்தினர். முதலில், விற்பனை விதிகள் தளர்ந்தன. சர்க்கரை, பொருட்சந்தையில் ஊக வணிகம் செய்யவும் அனுமதித்தனர். சர்க்கரைப் பொருளாதாரத்தை விடப் பல மடங்கு ஊக வணிகம். விளைவு, நாட்டின் சர்க்கரை ஆலைகளில் இருந்த சர்க்கரை அனைத்தும் சந்தைக்கு வந்தன. 

15 ரூபாய் இருந்த சர்க்கரை 11 ரூபாய்க்கு வந்தது. பொருளாதாரப் பலமில்லாத ஆலைகள் அவற்றைக் குறைந்த விலையில் விற்று நொடித்தனர். அவற்றைப் பெரும் சுறாக்கள் கவ்வின. சர்க்கரை ஆலையை விட, அதன் ஏஜெண்டுகள் பெரும் ஆட்களாக உருவாகினர். இரண்டே ஆண்டுகளில், இந்தியாவின் சர்க்கரைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆடியது. தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், விவசாயிகளுக்கும் முதல் அடி. மீண்டும் சர்க்கரை லைசென்ஸ் நடைமுறைக்கு வந்தது. இன்று ஓரளவுக்குச் சர்க்கரைப் பொருளாதாரம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது. 

•••••••••••• 

நல்ல வேளையாக, பாலில் இது நிகழும் முன்பே தடுக்கப் பட்டது. அதற்கு, குரியனின் நேர்மையும், பால் உற்பத்தியில் நடத்தப் பட்ட சாதனையும், அதனால் எழை விவசாயிகள் நேரிடையாகப் பெரும் அளவில் பயனடைந்திருந்ததுமே காரணம். இன்றும் நாடெங்கிலும் தொழில் முனைவோரும் பால் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், பாலின் கொள்முதல் விலையை, கூட்டுறவு சங்கங்களும், அவற்றை ஆதரிக்கும் அரசுகளுமே தீர்மானிப்பதால், பாலின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. வெறும் பாலில் மட்டுமே வியாபாரம் செய்தால் கட்டுபடியாகாதென்று தனியார் துறையினர் தயிர், வெண்ணெய், பால்கட்டி, முதலியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். 

************ 

13. இப்படி, தான் நம்பிய ஒரு கொள்கைக்காகப் போராடி வென்ற குரியன், தன் வாரிசைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வில்லை என்னும் ஒரு ஆதங்கம் பால் துறையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவரின் கீழ், இரண்டு மேலாண் இயக்குநர்கள் இருந்தனர். ஒருவர் டாக்டர்.அனேஜா இன்னொருவர் அம்ரீதா படேல். இதில் அனேஜா, ஒரு hands on knowledge இருந்த ஒரு பால் துறை நிபுணர். ஆனால், அம்ரிதா படேல், விற்பனை மற்றும் பொதுத் தொடர்புகளில் பரிச்சயம் உள்ளவர். மேலும் அவர், முன்னால் நிதியமைச்சர் ஹெச்.எம்.படேலின் மகள். நல்ல அரசியல் தொடர்புகள் உள்ளவர். அந்தச் சஸ்பென்ஸ் நீடித்து, இறுதியில் குரியன் அம்ரிதா படேலைத் தேர்ந்தெடுத்தார். 

அவருக்குப் பிரச்சினைகள் அங்கிருந்து துவங்கின. அம்ரிதா படேலின் நோக்கம் வேறாக இருந்தது. கூட்டுறவுத் துறையை அவர் கார்ப்பரேட் ஆக்கும் செய்யும் நோக்கத்தோடு, சில நடவடிக்கைகளை எடுத்தார். தில்லி மதர் டெய்ரிக்கு தனியார் துறையில் இருந்து மிக அதிகச் சம்பளத்தில் ஒரு C.E.O வை நியமித்தார். அமுல் நிறுவனத்தலைவரை விடப் பலமடங்கு சம்பளம். மொத்தக் கூட்டுறவுத் துறையும், மிதமான சம்பளம், லாப நோக்கின்மை முதலியவற்றால், மிக வளமாக ஓடிக்கொண்டிருந்தது. மிக முக்கியமாக, அமுல் நிறுவனங்களின் அடிப்படை, மக்களாட்சியாகும். 

உற்பத்தியாளர்களால், மேலாளர்கள் நியமிக்கப் பட்டு, நடத்தப்படும் ஒரு இயக்கம். மெத்தப் படித்த மேதாவிகளால், குளிர்பதன அறைகளுக்குள் நடத்தப் படும் ஒன்றல்ல. அதன் அடிப்படையிலேயே தவறு செய்தால் என்னாகும் என்ற கவலை எல்லோரையும் வாட்டியது. இர்மாவின் வழியும் டாக்டர் குரியனின் பாதையில் இருந்து கொஞ்சம் விலகத் துவங்கியது. மிக மோசமாக விளையாடப்பட்ட அந்தச் சதுரங்க விளையாட்டில், அவர் வயதின் காரணமாகவும், மாறிய பொருளாதாரச் சூழல்கள் மற்றும் அரசியலின் காரணமாகவும் வெளியேற நேர்ந்தது 

************ 

"என் வேலை, பால் வியாபாரமல்ல. விவசாயிகளுக்கு, அவர்கள் வாழ்வைக் கொடுப்பது" என்பது குரியனின் கொள்கை. (My job is to empower them) என்பார். ஆனால், தேசிய பால் வள வாரியம், அதை வெறும் பாலாகக் குறுக்கிக் கொண்டு விடக் கூடும். 

இறுதியில், தன் வழிவந்தவர்களாலேயே வெளியேற்றப் பட்டு, எந்த மாநிலத்தின் கடை மக்களின், சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தினாரோ, அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகளால் அசிங்கப் படுத்த பட்டு வெளியேற்றப்பட்டார். 

*************** 

குரியன் அமுல், தேசிய பால்வள வாரியம், தேசிய கூட்டுறவு ஒன்றியம், தேசிய பால் இயந்திர உற்பத்திக் கழகம் என்று 30 நிறுவனங்களைத் தம் வாழ் நாளில் உருவாக்கினார். நேருவைப் போல அவர் ஒரு institution builder. அவரை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் அவர் ஒரு சர்வாதிகாரி என்று சொல்வார்கள். அது வெளியில், மற்றவர்களுக்காக அவர் உருவாக்கிக் கொண்ட ஒரு மேல் பூச்சு. அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று ஜெயகாந்தன் சொன்னதைப் போல. 

உண்மையில், தன் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு, சில அடிப்படை விழுமியங்களை அளித்து விட்டு, முழுப் பொறுப்பையும் அவர்கள் கையில் கொடுத்து விடுவார். ஆனால், அவர்கள் செய்த வேலைகளை, review செய்யும் போது, மிகக் கூர்ந்து கவனிப்பார். ஒவ்வொரு சிறு பிழையையும், பரிபூரணமில்லாத வேலையையும் மிகக் கடுமையாக விமரிசிப்பார். அதில் வெளிப்படும் எள்ளல், அற்பங்களை மிகக் காயப்படுத்தி விடும். ஆனால், உண்மையான மனிதர்களை மேம்படுத்தவே செய்யும். 

************ 

14. விளம்பரத் துறையிலும், குரியன் ஒரு தனிமுத்திரையைப் பதித்தார். வாரா வாரம் வரும் அமுல் ஹோர்ட்டிங்குகளில், கார்ட்டூன் மூலம் அன்றைய நாட்டு நடப்புகள் விமரிசிக்கப் படும். அதன் முன் வரைவை ஒரு முறை பார்த்து, அதை உருவாக்கிய விளம்பர நிறுவனத்துக்கு அனுமதியளித்த டாக்டர் குரியன் பின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும், தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. ஒரு முறை கூட அந்த விளம்பர நிறுவனத்துக்கு யோசனை சொன்னதில்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வதென்று தெரியும் என்பதே அவர் நிலை. இன்று இந்தியாவின் தலைசிறந்த விளம்பர கேம்பேயின் அந்த வாரந்தர ஹோர்டிங் என்பது அத்துறை நிபுணர்களும் அனைவருமே ஒத்துக் கொள்ளும் விஷயம். 

இவ்வளவு ஒரு பெரும் பங்களிப்பு அவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்று பார்த்தால் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பத்ம விபூஷன், மகசேசே மற்றும் உலக உணவுப் பரிசு போன்றவை. ஆனால், இம்மாபெரும் சாதனைக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசோ, பாரத ரத்னாவோ கிடைக்கவில்லை என்பது ஒரு பெரும் சரித்திரச் சோகம்தான். இஸ்ரோ ராக்கெட் விடுவதைப் பார்க்க நேரம் இருந்த பிரதமருக்கு, நேரில் சென்று ஒரு அஞ்சலி செலுத்த கூட நேரமில்லை.. பாவம். குரியன் மரித்த நாளில், ஆனந்தின் அருகில் உள்ள நதியாதில் ஒரு பால் பண்ணையைத் திறந்து வைக்க வந்த மாநில முதல்வருக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த நேரமில்லை. 

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் – இந்தச் சாதனைக்காக, இந்திய அரசிடம் இருந்து ஒரு பைசா அவர் பெறவில்லை. 

பால் உற்பத்தி மிக அதிகரித்து, மீந்த பட்டர் ஆயிலை, ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, கடலில் கொட்ட இருந்தார்கள். அதை இலவசமாகப் பெற்று, இந்தியாவில் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தில் துவங்கினார் டாக்டர்.குரியன். அது மட்டுமில்லாமல், 35 ஆண்டுகளாக, தேசிய பால் வள வாரியத்தில் பணி புரிந்ததற்காக, அவர் சம்பளம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பால் உற்பத்திச் சாதனை, குரியன் நாட்டுக்கு அளித்த பரிசு. 

ஒரு தலைவராக, தன்னலம் கருதாத மேலாளராக, institution builder ஆக, பொது நல ஊழியராக என்று எந்த நோக்கில் பார்த்தாலும், இந்தியப் பொது வாழ்வின் ஈடு இணையற்ற ஒரு மனிதராகக் குரியன் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார். 

முழுமை பெறாத கனவு : தன்னுடைய சுயசரிதையில், ‘தனது ரத்தத்தை வேர்வையாகச் சிந்தி நமக்காக உணவை தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன் நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும் அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வெற்றி எதிரிகளைக் கொண்டுவரும். பல சூழ்ச்சிகள். மத்திய அரசு குரியன் மேல் குற்றச்சாட்டுக்களைக் குவித்தது. 2006 இல் குரியன் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 

குரியன்மீது வீசப்பட்ட குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. 2012 இல் மறைவதுவரை அவர் மனதைச் சுயநலக்காரர்கள் காயப்படுத்தினார்கள். அவருக்கு இருந்த ஒரே ஆசுவாசம் ஏழை விவசாயிக்கும், பாலுக்காக அழும் குழந்தைக்கும் அவர் தெய்வம். 

குரியனின் பங்களிப்பு உலகைக் காத்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 10 கோடிக்கும் மேலான மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

(முற்றும்)



நன்றி  (எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் திரு.பாலா அவர்களால் எழுதப்பட்ட வெண்மைப்புரட்சி கட்டுரையில் இருந்து பெரும்பாலான பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளது.)



இவர் (தான்) நம் கடவுள் முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) )


இவர் (தான்) மக்களின் கடவுள்  வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 


6 comments:

செந்தில்குமார் said...

நல்ல தகவல் அறியபடாத ஆளுமை இதுவரை நான் அமுல் தனியார் நிறுவனம்தான் என்று நினைத்தேன்

KILLERGEE Devakottai said...

அமுல் பற்றிய நிறைய விடயம் அறிந்தேன் நண்பரே..

நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து இருக்கிறார் திரு.குரியன் ஆனால் இந்த நன்றி கெட்ட இளைய சமூகம் திரைப்பட நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறது.

தியாகங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை உதாசீனப்படுத்தக்கூடாது.

நாம் குரியனுக்கு இதைத்தான் செய்து இருக்கிறோம்

bandhu said...

//அதில் வெளிப்படும் எள்ளல், அற்பங்களை மிகக் காயப்படுத்தி விடும். ஆனால், உண்மையான மனிதர்களை மேம்படுத்தவே செய்யும். // excellent!
We do not deserve such great men!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவருடைய பங்களிப்பு மக்களை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்றியுள்ளது என்பது பதிவின் உச்சம்.

GoodDay WebStore said...

Awesome write-up. I’m a regular visitor of your website and appreciate you taking the time to maintain the excellent site. I’ll be a regular visitor for a long time.Web Design Company in Kolkata

Anonymous said...

Good after noon!!! ,so nice post ,yes we donot deserve the sacrifices made by the good people ,thanks for sharing.
For wellbeing - healthy you need proper nutrition.
Renatus Nova is the best food supplement with all essential nutrients for human body. It helps to prevent and cure 666+ diseases and conditions . Renatus Nova is introduced by Renatus Wellness Pvt. Ltd in India and marketed by Renatus Well-wisher Group. Renatus nova benefits for all Lifestyle diseases. It is a Completely Herbal Veg Capsule without any side effects, formulated by Renatus Wellness llc (USA) and certified by GMP & FSSAI. For more details about Renatus Wellness business plan and offers visit www.renatuswellwisher.online. Follow us on Facebook: Renatus Well-wisher. Call: +91 7278888606 [India]. Renatus Nova video on Renatus Well-wisher Youtube channel.