Saturday, November 08, 2014

பணக்காரன் சொல்வதெல்லாம் தத்துவமே

கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பழகும் போது பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். எந்த நொடியிலும் நாம் நம்மை இழந்து விடக்கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் தாக்க அது மன வலிமையைக் குறைப்பதோடு அதன் தாக்கம் உடலில் பரவும் போது நாம் சேர்த்து வைத்துள்ள மனோபலத்தைப் பாதியாகக் குறைத்து விடக்கூடிய ஆபத்துள்ளது. 

நாம் வாழும் சமூகம் என்பது நாடகதாரிகளால் சூழப்பட்டது. கள்ளத்தனம் தான் தங்கள் கொள்கை என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மையினர் மத்தியில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். 

இது சரி, இது தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாகத் தான் வாழ்கின்றார்கள். இவற்றை எந்தப் புத்தக அறிவும் நமக்குத் தந்து விடாது. மனிதர்களுடன் பழகும் போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் தான் ஒவ்வொரு சமயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும். 

சிரிப்பு மற்றும் அழுகை இந்த இரண்டும் மனிதனுக்கும் மட்டுமே உரிய சிறப்பம்சம். விலங்குகளில் அதிகப் பாரம் சுமக்கும் போது அவைகள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். சில சமயம் அவற்றின் கண்ணீர் நமக்கு அடையாளம் காட்டும்.  

அடக்க முடியாத ஆற்றாமையில் மதம் பிடிக்கும் யானைகளின் செயல்பாடுகளை அதன் பிளிறல் சப்தத்தில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனால் விலங்குகளின் மகிழ்ச்சியென்பது அதன் சப்த ஒலிகளில் மட்டுமே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். வினோத மொழியில் விதவிதமான சந்தோஷங்களை அவைகள் வெளிக்காட்டிக் கொள்கின்றன. பசி இல்லா மிருகம் தன் எதிரே வரும் எந்த விலங்கினங்களையும் எந்த நிலையிலும் தொந்தரவு செய்வதில்லை. விலங்குகளின் காமப்பசிக்கு குறிப்பிட்ட பருவம் மட்டுமே. ஆனால் மனித இனத்தில் மட்டும் இவை எதுவுமே செல்லுபடியாகாத பல வினோதங்கள் உண்டு. 

கிராம வாழ்க்கையில் நம் வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்பட்டு விடும். பரஸ்பரம் அதற்குரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும் போது அது இயல்பான பழக்கமாகவே இருக்கும். அதுவே அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணமாக மாறிவிடும். ஆனால் நகர்புற வாழ்க்கையில் பல சமயம் நாடக நடிகர் போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது.


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை...

UmayalGayathri said...

தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்

'பரிவை' சே.குமார் said...

முழுவதும் வாசித்தேன் அண்ணா...
தெளிவாக எழுதி வருகிறீர்கள்... மிகவும் அருமை...

மகிழ்நிறை said...

கரெட்ட சொன்னீங்க அண்ணா!! செரி மிச்சத்தை அங்க போய் வாசிக்கிறேன்:)

கரந்தை ஜெயக்குமார் said...

//தப்பிப் பிழைக்க வேண்டும்
தனக்கே எல்லாமும் வேண்டும்//
பல சமயங்களில் கண் கூடாகக் கண்டிருக்கிறேன்
நன்றி ஐயா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைத் தமிழில் தொடர்கிறேன்

srinivasan said...

அனுபவமே பாடம் ! முதலாளிகள் எப்பொழுதும் சிரித்தால் தன் முதலுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார்கள் .