Tuesday, March 25, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்?இன்று வரையிலும் யாரோ, ஏதோவொரு சமயத்தில் பேசி என்னை கோபப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இருபது வருட திருப்பூர் வாழ்க்கையில் நேற்று வரையிலும் புதிதாகச் சந்திக்கும் எவருக்கும் காரைக்குடி என்ற ஊர் பெரிய அளவுக்கு தெரிந்த ஊராக இல்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு.  

டக்கென்று காரைக்கால் தானே? என்பார்கள். 

குறிப்பாக இங்குள்ள முதலாளிகளுக்குப் பிள்ளையார்பட்டி தெரிந்த அளவுக்குக் காரைக்குடி மேல் அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை. அப்படியா? என்று போற போக்கில் இழுத்தபடியே சென்று விடுவார்கள். ரொம்ப நெருங்கிக் கேட்டால் அந்தப் பக்கம் சாப்பாடு நல்லாயிருக்கும்லே? என்று வெறுப்பேற்றுவார்கள்.

இதே போலத்தான் ஆசான் என்னை மேலும் கீழும் பார்த்தார். பயணத்திட்டம் வகுத்துக் கிளம்பிய சமயத்தில் திருவாவாடுதுறை என்ற பெயரை ஆசான் சொன்னபோது நானும் புரியாமல் முழித்தேன். உங்களுக்குத் தெரியாதா? என்று ஆச்சரியமாகப் பார்த்தார். உண்மையிலேயே அன்று தான் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இப்படி ஒரு ஊர் உள்ளது என்றும், அங்குப் பிரபலமான ஆதீனம் உள்ளது என்பதையும் அறிந்தேன். 

தனுஷ்கோடியில் இருந்து கிளம்பி இராமநாதபுரம் தொடங்கி கடற்கரைச் சாலை பயணம் வழியாக பட்டுக்கோட்டை வந்து அடைந்தோம். அங்கே இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாவாடுதுறை வந்து சேர்ந்தோம். திருவாவாடுதுறைக்கு மிக அருகே மயிலாடுதுறை உள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு வந்துள்ளேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு பயணம். இரவு நேர பயணமாக இருந்த போதிலும் சாலையின் இரண்டு பக்கமும் எந்தப் பெரிதான மாற்றமும் இல்லை. அதே குறுகிய சாலைகள். ஒவ்வொரு இடங்களிலும் கிராமத்து முகம் கொண்ட சிறிய ஊர்கள். 

திருவாவாடுதுறை இரண்டுகெட்டான் போலவே உள்ளது. கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் என்பதால் மக்கள் கூடும் இடம் போலத்தான் நகரப்பகுதிகள் உள்ளது.  பெரிதான ஆடம்பரங்கள் எங்குமே இல்லை. முதன் முதலாகச் சூடிதார் அணிந்த கிராமத்துப் பெண்ணுக்கு எப்படித் தடுமாற்றம் இருக்குமோ? அப்படித்தான் இரண்டுங்கெட்டானாக முக்கியச் சாலைகள் இருந்தன. 

ஊருக்குள் நுழைந்து முக்கியச் சாலையில் இருந்து பிரிந்து போடப்பட்டுள்ள தனியார் தார் (இந்தப் பகுதிகள் ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பகுதிகள்) சாலையின் வழியாக ஆதீனத்திற்குள் வந்து சேர்ந்தோம். பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள மடம் மற்றும் அதனைச் சார்ந்த கோவில் உள்ள பகுதிகள். சுற்றிலும் உள்ளே பணிபுரிபவர்களுக்கெனக் கட்டப்பட்ட வீடுகள். உள்ளேயே நீண்ட அகண்ட தார் சாலைகள். இரண்டு புறமும் மரங்கள். வீடுகள் ஒவ்வொன்றின் வயதும் ஏறக்குறைய நூற்றாண்டுகளைக் கடந்ததாக இருக்கக்கூடும். 

ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் வயல் வெளிகள். நீண்ட மதில் சுவர்கள். பாதிக் காரைக்குடி பகுதியில் உள்ள கட்டிங்கள் போலவும் மீதி ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது போலவும் இருந்தது. அருகே இருந்த நகர்ப்புற வளர்ச்சிக்குக்குக் கொஞ்சம் கூடச் சம்மந்தம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. திரைப்படம் எடுக்கத் தேவைப்படும் பகுதியாகவும் எனக்குத் தெரிந்தது. 

மடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது பண்டாரங்கள், பரதேசி போன்ற வார்த்தைகள் உங்கள் நினைவுக்கு வருமென்றே நினைக்கின்றேன். ஆனால் இந்த மடத்தின் உள்ளே சென்று பார்க்கப் பார்க்க மிரண்டு போய் மயங்கி விழாத குறை தான். ஒவ்வொரு பகுதியிலும் கலையம்சமும், அலங்காரங்களும் சேர்ந்து விரிசல் விடாத சுவற்றில் வித்தியாசமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளும் ஓராயிரம் சரித்திர சம்பவங்கள். உள்ளே இருந்த அறிவிப்புப் பலகையை வைத்து யூகித்தபடி முறைப்படியான ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து தொடங்குகின்றது. 

இந்த மடத்தின் பூர்விக வரலாறு, ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள், படிப்படியான வளர்ச்சிகள், ஆதீன பதவிகளில் இருந்தவர்கள், அவர்களின் சாதனைகள், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், பகுதிகள், நிலங்கள் குறித்த குறிப்புகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது இந்திய அரசின் பட்ஜெட் தான் என் நினைவுக்கு வந்தது. ஒரு மினி அரசாங்கமாகவே ஆதீனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  இந்த ஆதீனங்கள் மூலம் யாரும் லாபம்? என்றொரு பெரிய கேள்வி உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். அல்லது தொடர்ந்து படித்து வரும் போது உங்களுக்கே புரியும்.

இந்தப் பகுதிக்குள் நுழைந்த பின்பு வெளியுலகமே துண்டித்தது போலவே இருந்தது. உடம்பில் இருந்த படபடப்பும், வேகமும் குறைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை தந்த சுகத்தை உடனடியாக அனுபவிக்க முடிந்தது. 

ஆசான் திருச்செந்தூரில் ஐந்தாம் வகுப்பு முடித்த பின்பு குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையில் திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு வந்தார். காரணம் ஆசானின் இரண்டு சகோதரிகளின் கணவர்கள் இந்த மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் குடும்பம் என்பதால் மடத்தில் நடக்கும் அத்தனை விசேடங்களுக்கும், மற்றும் கோவிலுக்குப் பூக்கள் கட்டி கொடுப்பது தான் முக்கிய வேலையாக இருந்தது. ஆசான் இங்கிருந்தபடியே பள்ளிக்குச் சென்றதோடு கூடவே அப்போது பதவியில் இருந்த ஆதீனத்திற்கு உதவியாளராகவும் இருந்தார். 

இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமான அனைத்து இடத்தில் இருந்தும் வரி, வசூல் போன்றவற்றைக் கவனித்துக் கொண்டதும் ஆசானே. வரி வசூல் என்றதும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நன்செய் மற்றும் புன்செய் பூமிகள். இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமாக உள்ள வாடகைக்குக் கட்டி விடப்பட்ட கடைகள், கட்டிடங்கள் இன்னும் பலப்பல. இந்த ஆதீனத்திற்குச் சொந்தமான பல இடங்கள் திருச்செந்தூரில் இருந்தது. ஆனால் அது பல தனியாருக்கு சொந்தமானதாக மாறியுள்ளது. அதற்குப் பின்னால் ஏராளமான மர்மக்கதைகள் இருப்பதால் அதைப்பற்றி இந்த சமயத்தில் விலாவாரியாக பேச வேண்டாம் என்றே நினைக்கின்றேன்.

ஆசானுடன் ஆதீனத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற போது சுவராசியம் ஏதுமில்லாமல் உள்ளே ஏதாவது ருசியாகச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் ஆசான் வாயைத் திறந்தால் திருமந்திரத்தை பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்தவுடன் நெற்றி நிறையப் பட்டை. கழுத்தில் கொட்டை மற்றும் மணிகள் உள்ள ஆபரணங்கள் என் கன ஜோராக மற்றவர்கள் எழுவதற்கு முன்பே குளித்து முடித்து தயாராக இருப்பார்.

அதாவது பாருங்க..... ஜோதி என்று ஆசான் தொடங்கினார் என்றால் அரை நூற்றாண்டு கதையைச் சொல்லி முடிக்கும் போது எனக்கு மீண்டும் பசியெடுக்கத் தொடங்கி விடும். இதன் காரணமாகவே ரெண்டு மூணு தேங்காய் மூடிகளை எப்போதும் என்னருகில் தயாராக வைத்திருப்பேன்.

திருவாவாடுதுறையில் வாழ்ந்த போது ஆசான் தங்கியிருந்த வீடு மற்றும் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்த்த போது எனக்குப் பெரிதான ஆச்சரியமல்ல. காரணம் எங்கள் பகுதியில் ஒவ்வொரு செட்டியார் வீடுகளின் அமைப்பைப் போல முற்றம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள், ஊஞ்சல், கரி அடுப்பு, போன்ற அத்தனை பழங்காலத்துப் பழக்கவழக்கங்கள் உள்ள அமைப்பாக இருந்தது. கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒன்று மட்டுமே அங்கே நான் பார்த்த நவீன பொருள். மற்றவை எல்லாமே 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விசயமாகவே இருந்தது. 

திருமூலர் பற்றி முழுமையாக முதல் முறையாக அறிந்து கொண்டது, ஆதீனங்களின் வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆதீனங்களைப் பற்றி தெரிந்து கொண்ட விபரங்கள், சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், அதிகாரப் போட்டிகள், தற்போது பதவியில் இருக்கும் ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதற்குப் பின்னால் உள்ளவர், அதிகாரப் போட்டியில் பாதிக்கப்பட்டவரை நேரிடையாகச் சந்தித்தது அவருடன் உரையாடிய போது மடத்திற்குள் நடந்த, நடந்து கொண்டிருக்கும் திருட்டுத்தனங்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் என ஒரு திகில்படத்தின் கதைக்குச் சமமாகப் பல விசயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. 

சுருக்கமாகச் சொல்லப்போனால் வருடந்தோறும் ஆதீனத்திற்கு வர வேண்டிய வருமானம் என்பது ஏறக்குறைய நூறு கோடி ரூபாய். ஆனால் வந்து கொண்டிருப்பதே இருபதில் ஒரு மடங்கு கூட இருக்குமா? என்று தெரியவில்லை. முக்கால்வாசியை விற்று தினறுவிட்டார்கள். இது தவிர ஆதீன சொத்துக்களை தினந்தோறும் சுரண்டிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

நானே சில சுவராசியமான நிகழ்வுகளை அங்கே பார்த்தேன். 

இதைப்பற்றி விரிவாக எழுதினால் ஏற்கனவே என் மேல் கொலைவெறியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் அலைபேசியில் பேசி காதில் ரத்தம் வர வைத்துவிடுவார்கள். ஆனால் உண்மைகள் எப்போதும் உறங்காது. அதற்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற பாரபட்சம் இல்லை. 

ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தாமதமானாலும் ஒரு நாள் தகுதிகள் தான் சபையில் ஏறும். அதுவரையிலும் தரமற்றது தான் பேயாட்சி நடத்தும்.

தமிழ்நாடு முழுக்க இந்த ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட பல இடங்கள் உள்ளது. இதே போலக் குத்தகைக்கு விடப்பட்ட விவசாயப் பூமிகள். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பலரால் வழங்கப்பட்ட நன்கொடைகள். இதன் மூலம் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் இது போன்ற மடங்களின் மூலம் வளர்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு பலரும் வழங்கி உள்ளனர். 

ஆனால் காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாறியதைப் போலவே இன்று ஆதீனங்களின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போய் ஊழலில் திளைத்து, உண்மைக்கு இடம் இல்லாத அளவுக்கு நிர்வாகம் கெட்டுப் போய் இறுதி மூச்சில் தான் ஆதீனங்கள் உள்ளது.  

பலருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டுவதற்குள் ஆதீனம் என்ற பெயரே இருக்காது என்கிற அளவுக்கு இந்த இடமே விற்பனை பூமியாக மாறிப் போய்விடும் என்றார்கள். 

ஆசானைப் பொருத்தவரையிலும் ஆன்மீகம் தான் அவர் மூச்சு பேச்சு எல்லாமே. ஆனால் நான் அவற்றைக் கடந்து வந்து விட்டேன். தற்பொழுது எனக்கு தினசரி வாழ்க்கையில் அன்றைய தினம் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றது. நேற்றைய வாழ்க்கையும், நாளைய வாழ்க்கையும் குறித்த யோசனைகளும், பயமும் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்மீகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

எனக்குத் தற்போது எது குறித்தும் வெறுப்பும் இல்லை. விருப்பும் இல்லை. சற்று விலகி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருப்பதால் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ முடிகின்றது. இந்த நிலையை அடைய மற்றவர்களால் முடியுமா? என்றால் அவரவர் அனுபவங்கள் தான் வழிகாட்டியாக இருக்க முடியும். பயணம் முழுக்க ஆசான் பேசிய முக்கிய விசயங்களைக் காதில் வாங்கிக் கொண்டு மற்ற கற்பனை புராணக்கதைகளைக் காற்றோடு விட்டு விடுவதுண்டு.

0o0

இப்போது தான் நாம் தலைப்பில் உள்ள விசயத்திற்கு வந்துள்ளோம். 

அதைப் பற்றி அடுத்தப் பதிவில் பேசுவதற்கு முன்பு இந்தக் கேள்விகளை மனதில் வைத்துக் கொள்ளுங்களேன். 

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 

மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

அடிக்க வருபவர்களும் துடித்து காத்திருப்பவர்களும் அடுத்தப் பதிவு வரும் வரையிலும் .............

ஆதீனம் படங்கள் பார்க்க 

32 comments:

'பரிவை' சே.குமார் said...

திருவாவாடுதுறை பற்றி அறிந்திருக்கிறேன் அண்ணா...
ஆனால் போனதில்லை.
குன்றக்குடி அடிகளார்களுடன் (முன்னவரும், தற்போதைய பொன்னம்பல அடிகளாரும்) கல்லூரியில் படிக்கும் போது பழகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பொன்னம்பல அடிகளாருடன் தொடர்பு உண்டு.

ஆதீனங்கள் குறித்தும் அதன் பின்னணியில் நடக்கும் செயல்கள் பற்றி அறிந்திருக்கிறேன்.
நல்ல பகிர்வு அண்ணா.... பயணக் குறிப்புக்கள் இன்னும் படிக்கவில்லை.... வாசிக்கிறேன்...

தொடருங்கள் அண்ணா.

தனிமரம் said...

நல்ல பகிர்வு அண்ணாச்சி திருவாவாடுதூறை பார்த்தேன் ஆன்மீக பயணத்தில்!ம்ம் மற்றும் படி ஊழல் நம்க்கு ஏன் தேவையில்லா சோலி §§ இந்தியா வந்தோமா கோவில்கள் பார்த்தோமா யாத்திரை முடித்தோமா என்று இன்றும் அப்படித்தான்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆன்மீக வாதிகள் எனக் கூறிக் கொள்ளும் பெரிய மனிதர்கள், நேர்மையானவர்களாக, அப்பதவிக்கு உண்மையானளவர்களாக, பல வித ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கும் வரைதான் ஆன்மீகத்திற்கு மதிப்பு இருக்கும்.
இன்று ஆன்மீகம் என்பதே வணிகமயமாகிவிட்டது

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் பல கடமைகள் உள்ளதால், அவரைப் போல மனநிலை வருவதற்கு நாளாகும்...

முன் கூட்டிய கேள்விகள் - ரெடி...

திண்டுக்கல் தனபாலன் said...

முன் கூட்டிய பதில்கள் இங்கே (http://jayadevdas.blogspot.com/2014/03/blog-post_26.html) ரெடி...!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

”எனக்குத் தற்போது எது குறித்தும் வெறுப்பும் இல்லை. விருப்பும் இல்லை. சற்று விலகி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருப்பதால் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ முடிகின்றது”
தெளிவான ஆன்மீகத்தின் பாதை இது தானே !வேறு என்ன வேண்டும் ?

வருண் said...

ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. வாழ்நாளிம் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை யோசிக்கும்போது. அதுக்கப்புறம் நமக்கப்புறம் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..அப்படி உக்காந்து யோசித்தால் வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும். பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை.. இதுபோல் நிகழ்வுகளைப் பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பார்ப்பது. இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை.. யாரு போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.

பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது.

எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.

ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் எல்லாம் உதவுது.

ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் இருக்குனு நெனைக்கிறேன். புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி சாகிறவந்தான் அதிகம். இதுபோல் எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். ஆத்திக பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..

Ranjani Narayanan said...

எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: 'எனக்கு இப்போது வயது 18. கடவுள் பக்தி இல்லையே?
பதில்: நாற்பதில் வரும்!

வாழ்வில் எல்லாமே நேராகப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மனோநிலை எல்லோருக்கும் வரும். வாழ்க்கை நம்மை புரட்டிப் போடும்போதுதான் எதன் மேலாவது நம்பிக்கை வைக்கத் தோன்றும் - அதாவது ஊன்றுகோல் தேவைப்படும். முதலிலிருந்தே எதையாவது பற்றிக்கொண்டுவிட்டால் வாழ்க்கை புரட்டிப் போடும்போது புதிய ஊன்றுகோல் தேவைப்படாது. எங்கு போவது, யாரை நம்புவது என்ற கேள்வியும் வராது.
எனக்குத் தெரிந்த கடவுள் நம்பிக்கை இதுதான். கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதால் மனதில் ஒரு நிம்மதி. தூக்கம் கெடுவதில்லை.
ஆத்திகம், நாத்திகம் என்பதை தாண்டி வந்துவிட்டதாகச் சொல்லுபவர்கள் இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் மாட்டிக் கொண்டவர்கள்தான். ஒருவரையும் குறை சொல்லாமல் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் அது பிறருக்கு செய்யும் உதவி.
கடவுள் என் நண்பன். நான் திட்டும்போதும் புன்சிரிப்பு; நான் புகழும்போதும் புன்சிரிப்பு. அதுவே எனக்கு கடவுளிடம் பிடித்தது.
எனது கடவுள் நம்பிக்கை பற்றி பல பதிவுகள் எழுதலாம்.
இதுவே அதிகமாகிவிட்டது.
மத அடையாளங்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் என் முன்னோர்கள் எனக்கு கொடுத்துச் சென்ற செல்வங்கள். அதை எனது அடுத்த தலைமுறைக்கு எடுத்துப்போவது எனது கடமை.
ஒருவிஷயம் கவனித்தீர்களா? நாம் தான் இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். மற்ற மதங்களில் இந்தக் கேள்விகளே கிடையாது. யாரும் கேட்கவும் கூடாது.

ஜோதிஜி said...

கடைசி வரிகள் நச். மற்றது குறித்து தொடர் பதிவில் எழுதுகின்றேன்.

ஜோதிஜி said...

காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை.. இதுபோல் நிகழ்வுகளைப் பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பார்ப்பது. இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை

இன்னும் ஒரு மாதத்திற்கு நினைத்து நினைத்து சிரிப்பேன். நன்றி வருண்

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களை எழுதும் போது ஆதரவு இருக்காது என்று தெரிந்தே எழுதுகின்றேன். நினைத்தவற்றை எழுதி வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தினால்.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன். இப்போது தான் சென்று படித்தேன். கலக்கியிருக்காரு.

ஜோதிஜி said...

நழுவலாக சொல்லியிருக்கிறீங்க. நச் சென்று அடித்து பந்தை கோல் நோக்கி செலுத்த வேண்டாமா?

ஜோதிஜி said...

ஆகா இது நல்லாயிருக்கே.

ஜோதிஜி said...

குன்றடிக்குடி அடிகளார் குறித்து தான் எழுதி தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அது என் தனிப்பட்ட அனுபவமாக இருந்துவிட்டு போகட்டுமே என்று விட்டு விட்டேன்.

Rathnavel Natarajan said...

ஆன்மீகம் என்பது யாதெனில்?
திரு ஜோதிஜியின் அருமையான பதிவு.
பழமை, ஆன்மீகம் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார். பின்னூட்டங்கள் அனைத்தும் அபாரம். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

Geetha Sambasivam said...

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். நண்பர் ஒருவர் அனுப்பிய சுட்டியின் மூலம் இங்கே வந்தேன். என்னிடம் பதில் இருக்கிறதானு கேட்டிருந்தார். இருக்கிறது-இல்லை என்பதே என் பதில்.ஆனால் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. அதை மாற்ற நம்மால் முடியாது. கடவுளுக்குக் கொள்கை எல்லாம் எதுவும் இல்லை. சாதாரண சாமானிய மனிதனுக்கு உள்ளவற்றைப் பரம்பொருளின் மேல் ஏற்ற முடியாது. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் வினைப்பயன்கள். அனுபவித்தே தீரணும். அதே போல் இருக்கும், கிடைக்கும் சுகமும் வினைப்பயனாலேயே. ஆன்மிகம் குறித்த எண்ணம் தோன்றுவதே நம்முடைய வினைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கழிந்து கொண்டு வருவதாலேயே.

Geetha Sambasivam said...

மற்றபடி பக்தி செலுத்துவதிலேயே இன்னமும் அடிப்படையையே நான் தாண்டவில்லை. ஆன்மிகம் பத்தி என்னத்தைச் சொல்ல முடியும்? ஆனால் உண்மையான ஆன்மிகவாதிக்கு விளம்பரம் தேவையில்லை. இப்போ விளம்பரம் செய்துக்கிறவங்க எல்லாம் ஆன்மிகவாதினு சொல்ல முடியாது. இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மிகவாதியாக இருக்கலாம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என அனைத்தையும் அவன் காலடியில் சமர்ப்பித்துவிட்டால் இல்லறத்திலேயே ஆன்மிக நிலையை எட்டலாம். அதுக்கெல்லாம் எத்தனையோ படிகள் ஏறணும். :( எனக்குத் தான் காமம், க்ரோதம், கோபம், பாபம்னு எல்லாமும் அளவுக்கு அதிகமாவே இருக்கே! :(

Geetha Sambasivam said...

ஆதீனங்கள் குறித்த உங்கள் பதிவு புதிய பல தகவல்களைத் தந்திருக்கிறது. திருப்பனந்தாள் காசி மடம் மட்டும் போயிருந்தேன். திருவாவடுதுறை வழியே பலமுறை போயும், மாயவரம் வழியே பல முறை போயும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கோ, தருமபுரம் ஆதீனத்துக்கோ போனதில்லை. நீங்கள் எழுதி இருப்பது அங்கே போகும் ஆவலைத் தூண்டுகிறது.

ezhil said...

நம்மிடம் வாழ்வு குறித்த ஆசைகளும் , எதிர்பார்ப்புகளும் ,பயங்களும் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்...அவரவர் காலத்திற்கேற்றார் போல் அவரவரின் உருவகங்கள்..இதோ இவ்வளவு கடவுள்கள் இருந்த போதும் அவையெல்லாம் காப்பாற்றாது எனும் நம்பிகையின்மையால் தோன்றியுள்ள சாமியார்கள்....அவை சில நேரங்களில் மனிதனின் வாழ்க்கையை நம்பிக்கையான வழியில் கொண்டு செல்கிறது எனச் சொன்னாலும் பல நேரங்களில் பல நிகழ்வுகளில் மூட நம்பிக்கையாய், மனிதனை மனிதனே பிரித்துப் பார்ப்பதாய் , அவனின் வாழ்க்கையை அழிப்பதாய் அமையும் போது இது குறித்த ஆழ்ந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.... என்னைப் பொறுத்த வரையில் ஆத்திகத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே நாத்திகம் எனும் பெயரில் அரசியல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இதில் பெரியார் சொன்னது போல் அவர் சொன்னார் என்பதற்காக இல்லாமல் எனக்கு நியாயமானதை செய்கிறேன்...மனிதமாய் இருக்க மட்டுமே விரும்புகிறேன்...

தி.தமிழ் இளங்கோ said...

அடுத்தமுறை அந்த பக்கம் போகும் போது மடத்துச் சாப்பாட்டை ஒரு கை பாருங்கள். நான் சீர்காழிப் பக்கம் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போதும் அந்த பழைய ருசி இருக்குமா என்று தெரியவில்லை.

ஆன்மீகத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?


தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
- கண்ணதாசன் (படம் : அவள் ஒரு தொடர்கதை)

வருண் said...

***எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேட்டிருந்தார்: 'எனக்கு இப்போது வயது 18. கடவுள் பக்தி இல்லையே?
பதில்: நாற்பதில் வரும்!***

ரஞ்சனி அவர்களே!

40ல சுஜாதாவுக்கு பக்தி வந்து இருக்கலாம், ஏன் இன்னும் ஒரு கோடிப் பேருக்கு வந்து இருக்கலாம். ஆனால் 40 ஆனதும் "பக்தி வரும்"னு தெரியாத ஒரு ஆளுக்குச் சொல்வதெல்லாம் கவனக்குறைவாக சொல்வது. நடிகர் கமலஹாசனுக்கெல்லாம் 40 ல பக்தி வரலை, பக்தி பத்தி புத்திதான் வந்தது. அப்படி வந்துதான் நாத்திகரானார். அவர் இள வயதில் ஆத்திகராகத்தான் வளர்க்கப்பட்டார். 40 ல பலருக்கு இருந்த பக்தியும் காணாமல் போவதும் உண்ட. அதுதான் உண்மை.

" 40 ல பக்தி வரும்", "நானும் ஒரு காலத்தில் உன்னைப்போல் நாத்திகனாகத்தான் இருந்தேன்" என்பதெல்லாம் பொத்தாம் பொதுவாக மற்றவர்களை சொல்வது தவறு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்பதை நாம் உணரவேண்டும், மதிக்க வேண்டும்.

சுஜாதா அவர் எப்படி பக்திமானானார்னு சொல்வதில் அவருக்கு உரிமை இருக்கு. கடவுளை வணங்கினால எனக்கு நிம்மதி கிடைக்கும் என்று நீங்கள் உங்களைப் பற்றி சொல்வதும் சரி. ஆனால் மற்றவர்கள் இப்படி ஆவார்கள்னு "மற்றவரைப்பற்றி தெரிந்ததுபோல்" சொல்வது, விமர்சிப்பது தவறு.

Pandiaraj Jebarathinam said...

கடவுளை அறிவியல் ரீதியில் கண்டறிய முற்படும் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா வாசித்திருக்கிறேன்.. சற்று குழப்பம் தான் ஏற்ப்பட்டது ..அதற்கு ஒருவேளை எனக்கு அறிவியல் சரிவர புரியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம்.

உங்களிடம் நிறைய எதிர்பார்ப்போடு தொடர்கிறேன்..

ஜோதிஜி said...

ஆன்மீக உணர்வு என்பது வாசிப்பதில் கிடைக்காது. வாழும் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் உணர்த்தும்.

ஜோதிஜி said...

அந்த மடத்தின் சாப்பாட்டை சாப்பிட்டேன். வௌங்கல.

ஜோதிஜி said...

எனக்கு நியாயமானதை செய்கிறேன்...மனிதமாய் இருக்க மட்டுமே விரும்புகிறேன்...

என் கொள்கை உங்கள் சிந்தனையில். நன்றி.

ஜோதிஜி said...

அவசியம் சென்று வாருங்கள்.

ஜோதிஜி said...

உங்களிடம் மட்டுமல்ல. மனிதனாக வாழும் ஒவ்வொருவரிடமும் இது இருக்கத்தானே செய்கின்றது.

ஜோதிஜி said...

நன்றி அய்யா

ஜோதிஜி said...

காலம் காலமாக பக்தி என்பது வாய் வார்த்தைகளால் மட்டுமே வளர்க்கப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

Thulasidharan V Thillaiakathu said...

ஆன்மீகம் என்பது மதத்தலைவர்களையோ, மடங்களையோ, மடாதிபதிகளையோ, கடவுள் உருவங்களையோ, சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ, மூடநம்பிக்கைகலையோ , மனு நீதி சாஸ்திரத்தையோ, சார்ந்ததல்ல. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது! மேற் சொன்னவை எல்லாமே மனிதனால் அந்தந்த கால கட்டத்திற்கேற்ப, தனக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவையே!

நம் கட்டுப்பாட்டை மீறிய, அதற்கு அப்பாற்பட்ட மாபெரும் ஒரு அண்டசாராசர சக்தியாகும்! சிவம் இல்லையேல் சக்தி இல்லை! சக்தி இல்லையேல் சிவம் இல்லை! அதாவது இங்கு சிவம் என்பது சிவனையோ, ச்க்தி என்பது பார்வதியையோ குறிப்பது அல்ல! சிவம் என்பது static power. சக்தி என்பது dynamic power இந்த இரண்டும் இணையும் போது உருவாகும் சக்தி ஒரு மாபெரும் சக்தி.நமக்கும் மீறியஒரு சக்தி உள்ளது என்பதை உணர்தல்தான் ஆன்மீகம் அல்லாது. சடங்குகளோ, சம்பிரதாயங்களோ அல்ல என்பது எங்கள் தாழ்மையான கருத்து!

srinivasan said...

மடங்களின் மறுபகுதியில் எப்போதும் பல முறைகேடுகள் கண்டிப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.முன்பு தொலை தொடர்பு இல்லை ஆதலால் வெளி உலகிற்கு தெரியாது .இன்று அப்படி இல்லை சீடனும் தானும் எப்போது தலைவர் பதவி அடையலாம் என்பதற்காக போட்டு கொடுத்து விடுகிறார்கள்.நம் உள்ளுக்குள் தான் இன்பம் , துன்பம் எல்லாமே , இதை அடைய வெளியே தேடுவது அறியாமையே."போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்ற பொன்மொழி ஒன்றே போதும்.