Thursday, August 25, 2011

ஓடிவாங்கோ…. பொழுது வந்தா விற்றுப் போய்விடும்...



 முன்னூற்று ஐம்பது

நானூறு.

ஐந்நூறு…..’


மேடையின் மேல் நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரன் தொண்டை வரள கத்திக் கொண்டிருந்தான். சந்தையைப் போல கூடியிருந்த கூட்டத்தில் மேடையின் கீழ்ப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த பகுதி முழுக்க இது போன்று ஏலங்கள் நடந்து கொண்டிருந்தது. 


விலை கேட்டவர்கள் ஏலக்காரன் சொல்லும் விலை அதிகமென்று அடுத்த பகுதிக்கு நகர்ந்து போய்க் கொண்டிருந்தனர். இது போலவே அங்கு பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கிச் செல்லவேண்டியதற்காக அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் ஏலத்திற்கு போய்க் கொண்டிருந்தனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் மட்டும் நின்று கொண்டிருந்த அவற்றை தொட்டுப் பார்த்தனர். வேறு சிலரோ தாடைகளை குத்திப் பார்த்தனர். தசைகளை கிள்ளிப் பார்த்தனர். உதட்டை பிதுக்கிவிட்டு நகர்ந்தனர். வரிசையில் நின்று கொண்டிருந்த அடுத்தது மேல் கவனம் செலுத்தினர். வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டமும் அதிகமாக இருந்தது அந்த பகுதி முழுக்க ஏலத்தொகையும், கூச்சலுமாய் இருந்தது. 


இவனைப் பாருங்கோ... குரங்கு போல எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கான்.  நீங்க எந்த வேலை கொடுத்தாலும் நல்லா செய்வான்.

ஐயன்மாரே....... இவனைப் பாருங்க.  எத்தனை இளவட்டமா இருக்கான்.  பத்தாளு வேலையை இவன் ஒரே ஆளே பார்த்திடுவான்.

ஏலத்தொகையை கூவிக் கொண்டிருந்தவன் ஏற்றிக் கொண்டே போனதைப் போலவே தொகையை இறக்கி விட்டு  நக்கலடித்துக்  கொண்டிருந்தனர்.

ஆப்பிரிகா காடுகளில் இருந்து பிடித்து வருவர்களுக்கு இத்தனை டாலரா? என்று சிலர் ஏலக்காரன் சொன்ன தொகை அதிகம் என்று அடுத்த பக்கம் நகர்ந்தனர்.

ஏலத்தின் தொகை ஏறிக் கொண்டிருந்தது. இறுதியாக எண்ணூறு என்று வந்து நிற்க ஏலம் கேட்ட  வெள்ளைக்காரன் முன்னேறி வந்தான். கொக்கியால் கட்டுப்பட்டிருந்த அந்த அடிமையின் ஒரு சங்கிலியை அவிழ்த்து ஏலத்தில் எடுத்த வெள்ளைக்காரன் பக்கம் நெட்டித் தள்ளினான். அந்த அடிமையை வாங்கிய வெள்ளைக்காரன அடிமையின் உதடுகளை விரித்து வாயின் உள்ளேயிருந்த பல்வரிசைகளை சோதித்தான். அடிமையின் மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வேகமாக இழுத்துக் கொண்டு தனது குதிரை வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு சென்றான்.  

காலிலும் கையிலும் கட்டப்பட்ட சங்கிலியால் பின்தொடர்ந்த அடிமை தட்டுத்தடுமாறி வெள்ளைக்காரன் இழுத்த இழுப்புக்கு கீழே விழாமல் வெள்ளைக்காரனை தொடர்ந்து சென்ற போது தான் தன்னைப் போல பல கருப்பர்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை அந்த அடிமை கவனித்தது. வெள்ளைக்காரன் சாரட்டு வண்டியின் உள்புறம் நெட்டித்தள்ள அந்த கருப்பு அடிமையின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியின் மறுமுனையை வண்டியின் மற்றொருபுறம் கட்டப்பட்டது. அந்த அடிமையின் பயணம் தொடங்கியது.

வாலிப முறுக்கு என்று சுட்டிக்காட்டியவனின் பெயர் குன்டா..  முழுப்பெயர் குன்ட்டா கிண்ட்டே.. மேற்கு ஆப்ரிக்காவில் காம்பியா நாட்டில் இருந்து மிகத் தொலைவில் இருக்கும் ஜப்பூர் என்ற சிறிய ஊரில் கிபி 1750 ஆம் ஆண்டு பிறந்தவன்.  அப்பாவின் பெயர் உமரோ.  அம்மாவின் பெயர் பிண்ட்டா. 

உமரோவுக்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பிரசவம் பார்த்த கிழட்டு மருத்துவச்சிகள் சந்தோஷப்பட்டனர். பிரவத்தில் முக்கியமானவளாக இருந்த ஆயஷோவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.  ஆயஷோ குழந்தைக்கு பாட்டி முறையாக இருந்தாள். கருத்த நாவல்பழம் போல இருந்த குழந்தையை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டாள். மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டது. பிண்ட்டாவின் தலைப்பிரசவம் ஆண் குழந்தையாக இருக்க இது அல்லாவின் கருணை என்று அந்த பகுதியில் வாழ்ந்த மொத்த நபர்களுக்கும் குன்டாவின் அம்மா அதிர்ஷ்டக்கார அம்மாவாக தெரிந்தாள். 


இது அதிர்ஷ்டக்குழந்தை என்று விருந்துக்கு வந்த அத்தனை பேர்களும் வாயார புகழ்ந்தனர்.

மகன் பிறந்த மகிழ்ச்சியில் அப்பா உமரோவுக்கு தொடர்ச்சியாக ஏழுநாட்களும் அதிக வேலையிருந்தது.  சுற்றியுள்ள அணைவருக்கும் உமரோ நேரிடையாகப் போய் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.  மகனுக்கு சூட்டும் பெயர் தெளிவானதாக இருக்க வேண்டும். குறிப்பாக தம்முடைய  கடந்த ஏழு தலைமுறையின் சரித்திரமும் வரக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.  மனதில் பல வித பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தார்.

எட்டாம் நாளில் ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் உமரோ வீட்டில் கூடியிருந்தனர்.  பெண்கள் தலையில் புளிக்க வைத்த பாலும், தேனும் நிரம்பிய குடங்களை சுமந்து வந்தனர். 


குழந்தையின் பெரியப்பாக்கள் கூட முரசொலி மூலம் செய்தி கிடைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து விட்டனர்.  பெயர் சூட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.  தாய் பின்ட்டா குழந்தையை மடியில் வைத்திருக்க குழந்தையின் தலையில் அங்கங்கே முடிவெட்டி மொட்டை போட்டனர்.  வரவழைக்கப்பட்டுருந்த வாத்தியக்காரகளின் ஒலித்த இசையினூடே மவுல்லி (மதக்குரு) தொழுகை செய்தார்.

உமரோ குழந்தையை கையில் ஏந்தியபடி சுற்றிலும் நடந்து சென்று குழுமியிருந்தவர்களிடம் காட்டிய பிறகு ஏற்கனவே மனதில் நினைத்து வைத்திருநத பெயரை மவுலியிடம் தெரிவித்தார்.

மவுல்வியார் எழுந்து நின்று உமரோ, பின்ட்டா கிண்ட்டே ஆகியோரின் மூத்த பிள்ளையின் பெயர் குண்ட்டா என்று அறிவித்தார்.  குழந்தையின் பாட்டனார் பெயர் கைரபா குண்டடா கிண்ட்டே. இந்த பெயரில் இருந்து  எடுத்து குண்ட்டா கிண்ட்டே என்று சூட்டப்பட்டது.  குழந்தைக்கு பெயர் சூட்டி முடிந்ததும் மவுலியார் குழந்தையின் பாட்டனார், முப்பாட்டனாரின் அருமை பெருமைகள் விலாவாரியாக புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

விழா முடிந்ததும் இரவு உமரோ தன்னுடைய மகனை கிராமத்திற்கு வெளியே உள்ள மைதானத்திற்கு கொண்டு சென்று வானத்தில் தெரிந்த நிலா, நட்சத்திரத்தை சுட்டிக்காட்டி அங்கே பார். உன்னைவிட உயர்ந்தது  என்று குழந்தையின் காதில் முணுமுணுத்தார். 


நட்சத்திரத்தின் வெளிச்சத்தை காட்டியவருக்கு தனது குழந்தை வெளிச்சத்தையே பார்க்கமுடியாமல் கப்பலின் இருட்டறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டு மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டு ஒரு அடிமையாக நாடு விட்டு நாடு செல்லக்கூடும் என்பதை நினைத்திருக்க மாட்டார்? 

காரணம் வளம் கொழிக்கும் மேற்கத்திய நாடுகள் முதல் இன்று உலகத்திற்கு மனித உரிமைகளை போதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா வரைக்கும் உள்ள நாடுகளின் வரலாற்றுக் பக்கங்களில் குண்டா போன்ற பல கோடி கருப்பின மக்களின் உழைப்பை கோரமாக உறிஞ்சப்பட்டு வளர்ந்த நாடுகளே என்பதை போகிற போக்கில் எழுதி விட்டு நகர்ந்து விடலாம். 


ஆனால் வெறுமனே அடிமைகள் என்பதை விட இவர்கள் பட்டபாடுகள், அனுபவித்ததை  வார்த்தைகளில் கோப்பது சற்று கடினமே. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் முதல் நம்முடைய இந்தியா வரைக்கும் 18 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய 300 ஆண்டுகள் வாழ்ந்த அடிமைகளின் பெயர்கள் மட்டுமே நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருக்கிறது. ஆனால் அவர்களின் அவல வாழ்க்கை என்பது ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது.  நாம் பார்த்த குண்டா அடிமையாக கொண்டு செல்லப்பட்ட  வழித்தடத்தை முதலில் பார்த்துவிடலாம்.


நரகம் என்ற வார்த்தையை கேள்விபட்டிருக்கிறார்களா?  அதை அடிமைகளின் வாழ்க்கையின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

தொடரும்.............

21 comments:

Chitra said...

It was heart breaking, when I visited one museum, which depicts the slavery in USA. Whenever you have time, check out:
http://en.wikipedia.org/wiki/United_States_National_Slavery_Museum

Anonymous said...

கொஞ்சம் படித்திருக்கிறேன்...தொடருங்கள்...

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அடிமை முறை போன்ற மனித விரோத செயல்கள் மனித சமூகத்தில் இருந்தது என்பதை பலர் மறந்து விட்டாலும் , இதன் மிச்சங்கள் வேறு பரிமாணங்களில் தொடர்கிறது. கடந்த கால் மனித உரிமை மீறல்களை நினைவு கூறுவது அதற்கு பரிகாரம் தேடவே!!!!!!!!.
இன்னும் நிறைய தகவல்கள் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள்.
நன்றி

மதுரை சரவணன் said...

nalla arumaiyaana thuvakkam.. vaalththukkal nanbare..

சத்ரியன் said...

ஜோதிஜி,

பத்தாயிரம் மைல் பயணத்தின் முதல் அடி துவங்கி விட்டது.

வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

நன்றி சத்ரியன், மதுரை சரவணன், ரெவேரி

ஜோதிஜி said...

சார்வாகன், மற்றும் சித்ரா இருவருக்கும் ஒரு கோரிக்கை.

முஸ்லீம்கள் நதிமூலம் என்று உள்ள தலைப்பை படித்துப் பாருங்க. நான் எழுதியுள்ள விசயங்களை விட கும்மி என்ற பெயரில் உள்ள உமர் என்ற நண்பன் முஸ்லீம்கள் குறித்து பல விசயங்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உள்ளார். அதைப்போலவே சிரமம் பார்க்காமல் பல விசயங்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்.

Rathnavel Natarajan said...

வேதனையான பதிவு.
உண்மை வலிக்கிறது.
நன்றி திரு ஜோதிஜி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

kobiraj said...

good one .

சார்வாகன் said...

வணக்க்ம் சகோ
/சார்வாகன், மற்றும் சித்ரா இருவருக்கும் ஒரு கோரிக்கை.

முஸ்லீம்கள் நதிமூலம் என்று உள்ள தலைப்பை படித்துப் பாருங்க/

ஏற்கெனவே படித்து உள்ளேன்.ஒரு சமூகத்தில் எதர்த்தமான் வாழ்வியலை பதிவு செய்தது அற்புதம்.இக்கால்த்தில் ஒவ்வொரு நடைமுறையும் ஆவனப்படுத்தப் படுவது பல பிற்கால் பிரச்சினைகளை தவிர்க்கும்.நமக்கும் நம்ம ச்கோதரர்களுக்கும் கொஞ்சம் அன்பு கல்ந்த ஊடல்.ஹா ஹா
நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் ...

rajamelaiyur said...

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

Unknown said...

தொடர்கிறேன் நண்பா!

Unknown said...

கொஞ்சம் கொஞ்சமாக அடிமையின் வாழ்வினை நோக்கி நகர்கிறீர்கள்(நகர்த்துகிறீர்கள்), தொடர்கிறேன்

அமுதா கிருஷ்ணா said...

படிக்கும் போதே மனம் கலங்குகிறது. எதற்கு இப்படி ஒரு வாழ்க்கை. கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி தான் எழுகிறது.

Unknown said...

வலிகள் நிறைந்த தகவல்கள்.அழகாய்த் தொகுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

என்ன மன வேதனை!மனம் அங்கேயே நிற்கிறது ஜோதிஜி.தொடர்ந்து படிக்க முடியுமா?

ஒன்று சேர் said...

அடிமைகள் தொடர் முதலில் வலைதளத்தில் எழுதிவிட்டு புத்தகமாக்கலாம் என்ற முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்கள் எழுத்து நடைக்கு கிடைத்திருக்கிற மரியாதை இது, வாழ்த்துக்கள்

கிரி said...

நான் தொடருகிறேன் .. :-)

ramasami said...

now indian govt servents what

Spark Arts Kovai said...

உணர்ச்சிமிக்க நிகழ்ச்சி