Tuesday, February 22, 2011

கோவில்கள் - முரண்பாடுகளின் தொடக்கம்

ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதை கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நாடார்கள் படிப்படியாக தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டதை பார்த்ததைப் போலவே இதற்காக அவர்கள் உழைப்பிற்கு அப்பாற்பட்டு பல கொள்கைகள் மற்றும் உருப்படியான விசயங்களையும் கடைபிடித்து உள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தாங்கள் வாழும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அந்தந்த உறவின்முறை உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் நிதி தெளிவான முறையில் பாதுகாக்கப்பட்டது.  இது போக ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும் நிதி ஆதாரம் எல்லாமே பொது நல நிதியாக மாறியது.  இந்த நிதி ஆதாரத்தை கவனிக்கும் குழுவில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் இருந்தனர். இதற்கு உறவின்முறை என்று பெயர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணமான குடும்பத்தலைவர்கள் இதில் இருந்தனர். இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முறைகாரர் என்று பெயர். முக்கிய பொறுப்புகள் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாறி மற்றவர்களுக்கு வழிவிட ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் வந்தமர பிரச்சனைகள் உருவாகாமல் இந்த அமைப்பு முன்னேறத் தொடங்கியது 

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த நாடார் இன மக்களிடம் கல்வி அறிவு இல்லை. ஒவ்வொரு செயல்பாடுகளுமே அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவானது. இது போன்ற கணக்கு வழக்கு போன்ற சமாச்சாரங்களுக்கு நாடார் தவிர்த்து மற்ற இனமான வேளாளர் குலத்தில் உள்ளவர்களை கணக்கர்களாக தேர்ந்தெடுத்து மகமை தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்தனர். இது போன்ற சங்கங்களில் பெரும் செல்வந்தர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால் நடுத்தர வர்க்க வியாபார குடும்பத்தினர் முழு மூச்சில் செயல்பட்டனர். ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மகமை செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அளவிற்கு கெடுபிடியாக நடந்து கொண்டனர். 

ஒவ்வொரு கிராமத்தில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களை தாங்கள் கூடுமிடமாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் கூட்டப்படுகின்றது என்பது அந்த ஊரில் உள்ள நாவிதர் மூலம் அழைப்பு அனுப்பப்படும். கலந்து கொள்ளாதவர்களுக்கு அபதாரத் தொகையும் உண்டு.

குடும்பம் மற்றும் பொதுவான அத்தனை பிரச்சனைகளும் இது போன்ற கூட்டத்தின் மூலமே தீர்க்கப்பட்டு வந்தது.  வெளி ஆட்களை இது போன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.பெண் சம்மந்தமான பிரச்சனைகளின் போது சம்மந்தப்பட்ட பெண்ணும் நிறுத்தப்படுவாள்.  இது போன்ற பிரச்சனைகளில் சம்மந்தப்பட்டவர்கள் மூன்று காவி நிற கோட்டின் மேல் நிறுத்தப்படுவார்கள்.  இது அவர்கள் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. வாதம், பிரதிவாதம் என்று எத்தனை நடந்தாலும் இந்த சமூகத்தில் முக்கியமானவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு சம்மந்தப்பட்டவரை உறவின் முறையில் முன்னிலையில் நாவிதர் குற்றவாளியை செருப்பால் அடித்து தண்டனையை நிறைவேற்றுவார். களவு போன்ற குற்றங்களுக்கு குற்றவாளியை ஓடவிட்டு இருமருங்கிலும் உள்ள இளைஞர்கள் நின்று கொண்டு தொடர்ச்சியாக அடிப்பார்கள். கடைசியாக மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டத்தை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றவாளி அபராதத்தை கட்ட முடியாவிட்டால் அவர் வீட்டில் உள்ள பொருட்களை உறவின் முறை சென்று கைப்பற்றுவர்.  உறவின் முறை சங்க அமைப்பை எதிர்ப்பவர்களின் குடும்பத்தை மொத்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த உறவின் முறை அமைப்பு திருநெல்வேலியில் ஒரு மாதிரியாகவும் சிவகாசியில் ஒரு மாதிரியாகவும் இருந்தது.  

தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் சாகும் வரைகும் அந்த பொறுப்பில் இருந்தனர். தலைவர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.  குறிப்பாக கோவிலுக்குள் இவர்கள் நுழையும் போது தனது மேல் துண்டை இடுப்பில் எடுத்து கட்டிக் கொள்ளப்பட வேண்டும்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விருதுநகர் பகுதியில் ஜனத்தொகை காரணமாக ஆறு வெவ்வேறு உறவின்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதியில் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது. பஞ்சு வியாபாரிகள், மளிகைக்கடை தாங்கள் செய்து கொண்டிருக்கும் வணிகம் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தது.. 


ஆனால் நாடார்களுக்குச் சம்மந்தமில்லாத மதுரையில் 1831 ஆம் ஆண்டு தங்களது வியாபார அபிவிருத்திக்காக கிழக்கு மாசி வீதியில் நிலம் வாங்கினர். இதுவும் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி நாடார்கள் முன்னின்று செயல்பட்டனர். 1890 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடார்கள் தங்கள் இருப்பிடங்களை மதுரைக்கு மாற்றினர். 20 ஆண்டு தொடக்கத்தில் தான் மதுரைக்கு பலரும் நகர்ந்து வரத் தொடங்கினர்.  அதற்கும் ஒரு காரணம் உண்டு.  வெள்ளையர்கள் உருவாக்கிய ரயில் பாதைகள் முக்கிய காரணமாக இருந்தது.. மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் பாதைகள் மூலம் இணைப்பு உருவாக இரண்டு விளைவுகள் உருவாகத் தொடங்கியது. இராமநாதபுரத்தின் பல பகுதிகள் வியாபாரம் பாதிப்பாகத் தொடங்கியது.  வளர்ந்து கொண்டிருக்கும் விருதுநகர் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதனால் மொத்தத்தில் சிவகாசி ரொம்பவே பாதிப்பானது. இதன் காரணமாக மதுரையில் குடியேறும் நாடார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.

1880க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவகாசியும் ரயில் பாதை இணைப்பு மூலம் எளிதாக மதுரைக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கைகள் இன்னமும் அதிகமாகத் தொடங்கியது. சிலர் தங்களது நிறுவனங்களின் கிளைகளை உருவாக்கி தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். எந்த இடத்திற்குச் சென்றாலும் தன் ஊரின் உறவுகளை விடாமல், மகமை, உறவின் முறை போன்ற அமைப்பை சிதைக்காமல் தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர்.

நாடார்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1885 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறையால் உருவாக்கப்பட்ட கூத்திரிய வித்தியாசாலை உயர்நிலை பள்ளியாகும். இது முழுக்க முழுக்க மகமை நிதியால் மட்டுமே உருவாக்கப்பட்டது.  முதல் முறையாக நாடார் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடமும் இது தான்.  இதனைத் தொடர்ந்து தான் 1889 ஆம் ஆண்டு கமுதியில், அதன் பிறகு அருப்புக்கோட்டையில் உருவானது. கல்வி அறிவு இல்லாமல் வளர்ந்தவர்களின் தலைமுறை கல்வி அறிவோடு வளர உருவான வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆனால் இதுவரைக்கும் இவர்களின் அருமை பெருமைகளை பார்த்தது போல இவர்களின் சில வினோத செயல்பாடுகளையும் பார்த்துவிடலாம்.  பொருளாதார ரீதியாக வளர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் உருவாகும் கௌரவம் இவர்களுக்கு வந்து அதன் தொடர்பாக பல விசயங்களையும் செய்துள்ளார்கள்.  இவர்களின் அடிப்படை வாழ்க்கை முறை பனை மரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருந்தது.  ஆனால் காலம் செல்லச் செல்ல தங்களை பனையேறிகள், சாணார்கள் என்று மற்றவர்கள் அழைப்பதை கௌரவக்குறைவாக கருதினர்.  குறிப்பாக தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர்.  பனை ஏறுபவர் என்பதும், தங்களின் முன்னோர்கள் கருவாடு விற்று வளர்ந்தவர் என்பதையும் மிகப் பெரிய அவமரியாதையாக கருதினர்.  நாடார் என்ற பட்டப் பெயருடன் தான் அழைக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். 


இதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. இவர்கள் தங்களை தாங்களே உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டாலும் சமூகத்தில் மற்ற இனத்தினர் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட அத்தனை சுலபமாக பெறமுடியவில்லை. 1872 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஏழு நாடார்கள் மீது பார்ப்பனர்களும், வேளாளர்களும் சேர்ந்து வழக்கொன்று தொடுத்தனர். இந்த ஏழு நாடார்களும் இறுதியில் குத்திக் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய கலவரம் உருவாகி ஊரட்ங்கு உத்திரவு வரைக்கும் அமலில் இருந்தது.

இது குறித்து (?)) தனியாக பார்க்கலாம்.

இவ்வாறு போராடியவர்கள் தான் தான் இன்று நிலைபெற்று சகலதுறையிலும் காலூன்றி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

19 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

முறைகாரர் - தெரிந்த வார்த்தை , தெரியாத அர்த்தம் ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவின் உள்ளடக்கத்துகு ஏற்ற டைட்டில், பலே..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மனத்துல இணைக்காம போயிட்டீங்களா? ரைட்டு ,இணைச்சுட்டேன்

ஜோதிஜி said...

செந்தில் ஆண்டவரே உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நன்றிங்கோ.

செந்திலான் said...

துவக்க காலத்தில் வேண்டுமானால் நாடார்கள் ஒற்றுமையாக இருந்திருக்கலாம் ஆனால் அது சிதைவடையத் தொடங்கி விட்டது. இதே நாடார்கள் தான் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பங்குகளை விற்றனர். பின்னர் விபரீதம் புரிந்து அதிக விலை கொடுத்து மீட்டனர். வளராத ஒரு சமூகத்தை வேண்டுமானால் ஓரணியில் திரட்டலாம் அவர்களே வளர்ந்த பின்பு ஈகோ பிரச்சினை தலை தூக்கி பிளவுபடுகிறார்கள். இது எல்லா சமூகத்துக்கும் பொருந்தும்.வன்னியர்களுக்கும் இதே நிலை வரும். திருப்பூரில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ?

Thenammai Lakshmanan said...

வித்யாசமான பகிர்வு.. ஜோதிஜி..

தாராபுரத்தான் said...

இவ்வளவு விபரம் நம்ம அண்ணாச்சிகளிட்ட இருக்கா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதை கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.//

உண்மை தான்.. ஒரு காரணத்துக்காக ஒன்று பட முடிந்தாலும், அதே மாதிரி ஒற்றுமையாகவே இருப்பது கடினமானதொன்று..

//இந்த ஏழு நாடார்களும் இறுதியில் குத்திக் கொல்லப்பட்டனர். //

:((((

இந்த வேளாளர்கள் என்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.. நாயர்களும் நம்பூதிரிகளும் இதிலே வருவார்களா?

இன்னும் ஒன்று.. தலித் என்று இன்று அழைக்கப்படும் மக்களுடன் நாடார்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? இவர்களும் தீண்டாமையைக் கடைபிடித்தார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்..

நாவிதரையும் சமூகத்தில் ஒருவராக வைத்திருப்பது நல்ல விஷயம்.. அதிலும் குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் உரிமை அவருக்கு இருந்தது என்பது கூடுதல் நல்ல விஷயம்..

கூட்டுறவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.. அதிலே இணைந்திருந்த எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயன்பாட்டை அடைந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இனரீதியான முன்வைப்பும் முன்னேற்றமும் ஒரு மாதிரியான பாகுபாடு என்றே தோன்றுகிறது இந்நாளில்.. அவர்கள் துவங்கிய கடைகளில் நிறுவனங்களில் மற்றவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.. இன்றும் சென்னையில் உள்ள கடைகளில் நிலவரம் என்ன என்று தெரியவில்லை..

ஆனால் அன்று அவர்களுடைய நிலையில் இன ரீதியான முன்னேற்றம் மிகவும் அவசியமான தொன்றாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இது குறித்து (?)) தனியாக பார்க்கலாம்.//

நடுவில் இருந்து கவனமாக எழுதுங்கள்.. சாதியைப் பற்றி பேசினாலே பிரச்சனை தான்..

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி..
நாடார் இனம் பற்றிய தங்களுடைய பதிவுகளில் அவர்களின் முன்னேற காரணங்கள் வந்தவிதம் போனவிதம் எழுதியுள்ளீர்கள். இனம் பொருளாதார முன்னேற்றம் ஆக ஆக அவர்களுக்குள்ளே அவர்களை நடத்திகொண்டவிதம் (பொருளாதார வித்தியாசத்தில்) ஒற்றுமையாக இருந்ததினால் மற்ற இனத்தினரை எவ்வாறு எதிர்கொண்டார்கள் . அதே நேரத்தில் அவர்களுக்குண்டான ஏற்றதாழ்வுகளை எவ்வாறு சமன்படுத்திகொண்டார்கள் என்பதை அறிய தருவது சிறப்பாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

தவறு

நல்ல எதிர்பார்ப்பும் நான் இதையே தான் யோசித்துக் கொண்டு படித்துக் கொண்டு இருக்கும் விசயங்களும். முயற்சிக்கின்றேன்.

எல் போர்ட்

தொடக்கம் முதல் கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். சும்மா கலக்குறீங்க. இது போன்ற பதிவுகளை உள்வாங்கி பின்னூட்டமாக தருவது சற்று கடினம் தான். உங்கள் ஒவ்வொரு விமர்சனமும் ஆச்சரியமாக இருக்கிறது.

பங்காளிங்க எல்லோருமே நான் அழுகாச்சி ஆட்டம் காட்டிவிட்டு நகர்ந்து விடுவேனோ என்று என்னை கம்மை வைத்து கவனித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? இதனால் தான் தனியாக பார்க்கலாம் என்பதற்கு இடையே ஒரு கேள்விக்குறியே போட்டேன். பயபுள்ளைங்க கப்சிப்.

மற்றவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டதா என்று தெரியவில்லை..

இதற்கு இரண்டு விசயங்களை நான் பார்த்தவரைக்கும் உதாரணம் காட்ட முடியும். ஏற்றுமதி நிறுவனங்களில் இஸ்லாமியர் உரிமையாளர் என்றால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமையும் மற்றவர்களுக்கு இரண்டாம் பட்சமும்.

சிறு கடைகளில் அவர்களுக்கு மட்டுமே என்றும் இஸ்லாமியர் உதவி புரிகின்றார்கள். இதைப் போலவே கிறிஸ்துவ நிறுவனங்களில் கூட இந்த நிகழ்வுகளைப் பார்க்கின்றேன். இது எனக்குத் தவறாக தெரியவில்லை.

ஏதோ ஒரு ரூபத்தில் அவரவர்களும் உதவிக் கொண்டால் போதுமென்றே தோன்றுகின்றது. ஆனால் இங்குள்ள ஒரு பெரிய நிறுவனம் முதலியார் என்றால் முக்கியத்துவ பொறுப்பு இதைப் போன்று வேறு சில நிறுவனங்கள் வேறு சில சாதிகளை வைத்து என்று ........என் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தன் இனம் தன் மக்கள் என்று எவரும் உதவுவதாக தெரியவில்லை. தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர். இதுகுறித்து இதைப் படிப்பவர்கள் தெரிந்தால் சொல்லுங்க.

ஜோதிஜி said...

துவக்க காலத்தில் வேண்டுமானால் நாடார்கள் ஒற்றுமையாக இருந்திருக்கலாம் ஆனால் அது சிதைவடையத் தொடங்கி விட்டது. இதே நாடார்கள் தான் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பங்குகளை விற்றனர். பின்னர் விபரீதம் புரிந்து அதிக விலை கொடுத்து மீட்டனர். வளராத ஒரு சமூகத்தை வேண்டுமானால் ஓரணியில் திரட்டலாம் அவர்களே வளர்ந்த பின்பு ஈகோ பிரச்சினை தலை தூக்கி பிளவுபடுகிறார்கள். இது எல்லா சமூகத்துக்கும் பொருந்தும்

விதிவிலக்கு உண்டு செந்தில். ஆனாலும் இவர்களின் வாழ்க்கை மொத்தத்திலும் வித்யாசமே. அவரவர்களும் கரணம் ஊன்றி மேலே வந்து விட அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

நீங்களும் திருப்பூர் தானா செந்தில்?

இராஜராஜேஸ்வரி said...

தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர்//
முன்னேற்றத்தின் முக்கிய காரணம் -அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது.

செந்திலான் said...

நீங்களும் திருப்பூர் தானா செந்தில்?//இல்லை ஜோதிஜி நான் பல்லடத்தில் இருந்து தாராபுரம் மதுரை செல்லும் சாலையில் உள்ள புத்தரச்சல் என்ற ஊரை சேர்ந்தவன்.
இப்பொழுது பெங்களூரில் வாசம்.திருப்பூரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு அந்த தொழில் தொடர்பான மென்பொருள் துறையில் இருந்துள்ளேன். எனது நண்பர்கள்,உறவினர்கள் பலர் திருப்பூரில் இருக்கிறார்கள். முடிந்தால் உங்களை சந்திக்க ஆர்வம் அதனால் கேட்டேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இது எனக்குத் தவறாக தெரியவில்லை.

ஏதோ ஒரு ரூபத்தில் அவரவர்களும் உதவிக் கொண்டால் போதுமென்றே தோன்றுகின்றது. //

என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது தான் இன்றைய சமூகத்தில் பூசல்களுக்கு காரணம்.. வளர்ந்துவிட்ட நிலையிலாவது பிறரையும் எடுத்துக் கொள்ளும் மனம் வர வேண்டும்..

//பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தன் இனம் தன் மக்கள் என்று எவரும் உதவுவதாக தெரியவில்லை.//

அரசாங்க/தனியார் வேலை கிடைத்துப் போகிறார்கள். பயன் - அவர்களுக்கும் குடும்பத்துக்கும் மட்டுமே. வணிகம் வியாபாரம் மாதிரி தொடங்கினால் தான் மற்றவர்களையும் மேலே கொண்டு வர முடியும் - எனது கருத்து..

Anonymous said...

This is too silly think and write about the division of humanity. It is all because of the illiteracy and selfishness of humans like Nadars and others.

ஜோதிஜி said...

செந்தில் இந்த பின்னூட்டம் இத்தனை நாளைக்குப் பிறகு உங்களுக்கு கிடைக்குமா என்றுதெரியவில்லை. என்னுடைய மின் வழியே தொடர்பு கொள்க. அலைபேசி எண் தருகின்றேன். முடிந்தால் சந்திப்போம்.