Thursday, May 10, 2018

50 வயதினிலே 7

நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது. 

சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் முதலாளியின் அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார். 

அவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது. 

அவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள். 

எங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. 

மீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. "என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 

இதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கெட்டழியும் போக்கும் உள்ளது. 

வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது. 

குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது. 

•••••••••• 

"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே? அவன் ஒரு கில்லாடி சார்? என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது. நேரம் காலமின்றி நீலப்படங்களின் ரசிகனாக மாறியிருப்பதை எதிர்பாராத விதமாக நண்பரின் மனைவி கண்டறிந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார். 

அதன்பிறகு எப்படி அவனை மீட்டார்கள் என்பது குறித்து நாம் இங்கே பேசப்போவதில்லை. 

தொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள். 

அவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது. 

நம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. 

•••••••• 

ஒரு நாள் என் மகள் எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

இவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். 

அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன். 

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால். 

அப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா? என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும். 

கல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம். 

குடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள். 

பதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம். 

எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால்? என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது. 

அந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும். 

கிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது. 

வீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்? என்பதைச் சொல்ல முடியுமா? 

ஒவ்வொரு ஐம்பது வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். ஐம்பதைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

இந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும். 

இறுதியாக, 

இங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது? என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம். 

என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். 

இப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும். 

இவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வேண்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள். 

காலம் மருந்து போடும். 

"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.

( பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி)






50 வயதினிலே 5

50 வயதினிலே 6

Tuesday, May 08, 2018

50 வயதினிலே - 6

அப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது. 

பொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். 

தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்கின்றார்கள். 

அரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ? அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே. 

மற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. "அப்பா சொன்னது தான் இறுதி முடிவு" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. "அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது. 

காலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது. 

சிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி? எது தவறு? என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை? இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள். 

சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற பெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது. 

இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது. 

எதனால் இது நடந்தது? என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது. 

இந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது, 

ஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே? என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம். 

தலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது. 

சுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை. 

இங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர். 

அவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது. 

குறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள். 

கூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது. 

பற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 

வாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது. 

நிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான். 

ஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. 

தவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. 

குழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது. 

இவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும்? என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. 

நாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது. 

இந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா? என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது. 

இன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும். 

பணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை. 

நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது? 

நாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம். 

காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது? 

தொடர்வோம்....... 







50 வயதினிலே 5

Saturday, May 05, 2018

50 வயதினிலே -5

காலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று என் நினைவில் வந்து போகும். மாறும் உடல் இயக்கச் செயல்பாடுகள் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமா? அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா? பதிலை தேடிக் கொண்டிருந்த எனக்கு இரண்டு விதமாகப் பதில் கிடைத்தது. 

வாரம் தோறும் தினமும் 16 முதல் 17 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை. 

ஒவ்வொரு நாளும் உற்சாகமாகத்தான் வருகின்றார்கள். அவர்களின் வேலை செய்யும் திறன் மட்டுமே பாதிக்கப்படுகின்றது. செய்யும் வேலையில் தெளிவு என்பது மாறி ஏனோதானோ என்று பணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பேற்றுகின்றனர். இதையே மற்றொரு விதமாக ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அமைந்தது. அன்றொரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூலம் வேறொரு விடை கிடைத்தது. 

தீராத ஒற்றைவலியுடன் இருக்கும் அவரின் இந்தப் பிரச்சனை அலுவலகம் முழுவதும் அறிந்ததே. ஆனால் இதற்கான காரணத்தை வேறொருவர் மூலம் கண்டறிந்த போது அவர் குடும்ப வாழ்க்கை கொடுக்கும் அழுத்தம் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணவரின் வருமானத்தை மீறி ஆசைப்படும் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து சேர்ந்து ஒவ்வொரு நோய்களாக உருவாகத் தொடங்கியுள்ளது. 

அவரின் அலுவலகப் பாரங்கள் என்பது அடுத்த நாள் தீர்ந்து விடக்கூடியது. ஆனால் மனம் சார்ந்த தீராப் பிரச்சனைகள் ஆரோக்கியத்தைக் காவு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மனம் என்பது ஆரோக்கியத்தில் இங்கே முக்கியப் பங்காற்றுகின்றது என்பதனை உணர்ந்த நாளது. 

பொருத்தங்கள் பார்த்து, கௌரவம் சேர்த்து மனங்களைச் சேர்த்து வைத்து உருவாக்கப்படும் திருமணத்தின் வரையறை இன்று மாறியுள்ளது. இரண்டு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விருப்பங்களின் நோக்கங்கள் முற்றிலும் திசை மாறியுள்ளது. திருமணத்திற்கான வயதும் மாறியுள்ளது. இவை அனைத்தும் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. இவற்றைப் போலவே குடும்ப வாழ்க்கையின் தற்போதைய இலக்கணம் முழுமையாகப் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. 

சரியான வயதில் திருமணம் முடிந்திருந்தாலும், முப்பது வயதுக்குள் பரஸ்பரம் உடல் இச்சைகள் தீர்ந்து விட உடனே வந்து சேரும் குழந்தைகள் மூலம் கவலைகளும், கடமைகளும் வரவேற்கின்றது. பேச்சு குறைகின்றது. வாழ்க்கை தடம் மாறுகின்றது. இருவரின் உள்ளார்ந்த விருப்பங்கள் வெளியே நிற்கின்றது. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கடைசி வரையிலும் சேர்ந்தே வாழ்ந்து ஆக வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் அழுத்தி வைக்கின்றது. 

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது வீட்டில் யாரோ ஒருவர் தான் பேசும்படி வாழ்க்கை மாறுகின்றது. அது பெரும்பாலும் மனைவியாகத்தான் இருக்கின்றார்கள். கணவனின் எண்ணமும் நோக்கமும் வேறு பாதையில் செல்கின்றது. இது பணம் சார்ந்ததாகவும், தனிப்பட்ட மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. 

இங்கிருந்து தான் ஆணின் மனம் ஊர் மேயத் தொடங்குகின்றது. 

இந்தச் சமயத்தில் தான் இருவரிடத்திலும் ஒரே ஆதங்கம் வெளிவரும். 

"நான் யாருக்காக இந்த அளவு பாடுபடுறேன்?"

"நான் யார்?" "நீ யார்?" என்ற ஈகோ விஸ்வரூபம் எடுக்கின்றது. 

உள்ளார்ந்த புரிதலின்றிப் பேசத் தொடங்கும் போதே வாதங்கள் திசைமாறி வாக்குவாதத்தில் சென்று நிற்கும். இனியும் ஏன் நான் பேச வேண்டும்? என்ற எண்ணம் ஒருவனுக்குத் தோன்றும் போது நாய் போல நாற்பது வயதில் மனம் அலைபாயத் தொடங்கும். கட்டுப்பாடு என்ற வார்த்தையை மதிப்பவர்கள் உள்ளும் புறமும் உருவாகும் இழப்புகளை மீறி தங்கள் கடமையை உணர்கின்றனர். எல்லைக் கோடுகளைத் தாண்டி வாழ நினைப்பவர்களின் வாழ்க்கை அதற்குப் பிறகு முட்டுச் சந்தில் போய் நிற்பதைத் தவிர்க்க இயலாது. 

இவை இங்கே சகல வசதிகளுடன் இருப்பவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு என்று பாரபட்சமில்லாமல் நடக்கும் நிகழ்விது. மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கணவனும், மனைவியும் பேசாமல் வாழும் கொடுமை, காமத்தை நோயாக மாற்றிக் கொண்டவர்கள் என்று சுட்டிக் காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உண்டு. 

"மூன்று மணிக்கு முழிப்பு வந்து விடும். வாரத்தில் ஏதோவொரு நாள் தான் வீட்டில் முழுமையாகத் தங்கும் நிலையில் அருகே படுத்திருக்கும் மனைவியை எழுப்பிப் பேசத் தொடங்கினால் பத்து நிமிடத்தில் வாக்குவாதமாக மாறி நிற்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்து நிற்கும்." 

தொழில் வாழ்க்கையில் வென்று கோடீஸ்வராக இருக்கும் முதலாளி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. 

தொழில் உலகில் கடைபிடிக்கும் அதிகாரம் என்பது தான் நம் அடையாளம் என்பதனை கருதிக் கொள்பவர்கள் அதனைக் குடும்ப வாழ்க்கையிலும் காட்ட முற்படும் போது குடும்பத்தில் குதுகலம் மறைந்து விடுகின்றது. உருவாகும் காயங்கள் அனைத்தும் மனதை ஆற்ற முடியாத ரணங்களாக மாற்றி விடுகின்றது. பணக்கார தோரணையில் கௌரவத்தைச் சுமந்து கொண்டு வாழும் வரைக்கும் வெளியே சொல்ல முடியாத சோகங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து முடிக்க வேண்டியது தான். 

பதவி உயரும் போது வார்த்தைகளைக் குறைத்துக் கொள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அதை விட முக்கியம் வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசும் போது அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகளும் மனதளவில் நிரந்தர விலகலை கணவன் மனைவி இருவரிடமும் உருவாக்கி விடுகின்றது. இதற்கு மேல் தான் இரண்டு பக்கமும் நடிப்பு வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது. 

"என்ன செய்தாய்? என்ன இழந்தாய்? என்ன சாதித்தாய்? உனக்கு என்ன தகுதியிருக்கு? ஏன் இவை உன்னால் முடியவில்லை?" 

இந்தப் பஞ்ச சீல கொள்கைகள் குடும்ப வாழ்க்கையைப் பணால் ஆக்கும். நம் குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்கும் உரையாடலாக மாறும் போது குடும்ப வாழ்க்கை தெருவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன ஐந்துக்கும் அடிப்படை பணம். ஐந்திலும் நுழைய மறுப்பது மனம். கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. 

"குழந்தைகளுக்காகத் தான் பொறுத்துக்கிட்டு வாழ்றேன். குழந்தைகள் இல்லைன்னா எங்கேயாவது போய்த் தொலைந்திருப்பேன்." 

இரண்டு பக்க வசனமும் வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையைத் தொழில் போல நினைத்து வாழ விரும்புபவர்களின் லாப நட்ட கணக்கு இது. 

பணம் படைத்தவர்கள், அதிகாரம், புகழ் அடைந்தவர்கள் என்று எவராயினும் குடும்பக் கோட்டுக்குள் வந்து நிற்பவர்கள் சிலவற்றை இழந்து தான் சிலவற்றைப் பெற முடியும். வெளியே நம் முகம் ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு விதமாகத் தெரியும். ஆனால் நம்முடைய மொத்த முகத்தையும் ஒன்றாக அறிந்தவர் மனைவி மட்டுமே. நம் ராஜதந்திரங்கள் எல்லாச் சமயங்களிலும் வென்றிடாது. தயக்கத்தை உடைத்து மயக்கமின்றிச் சரணாகதி தத்துவம் தான் உதவும். 

வீட்டில் நம் பத்து வயது குழந்தை கேட்கும் கேள்வியென்பது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்து விடலாமா? என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய்? என்று கேட்க முடியாது. புரிய வைக்கலாம். ஆனால் நம் நிலையைப் புரிந்தும், புரியாதது போலக் கேட்கும் மனைவியின் வார்த்தைகளைத் தனியாகப் பிரித்துப் பார்த்து நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 

விழித்திருக்கும் மனநிலையில் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தனித்திருக்கத் தான் வேண்டும். இவை இரண்டையும் கடந்து வந்தாலும் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டில் கோபத்தில் சாப்பிட முடியாத நேரத்தில் பசித்திரு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் எல்லாவற்றுக்கும் காலத்திடம் மருந்து உண்டு. காத்திருக்கத்தான் வேண்டும். 

வாழ்ந்த காலம் முழுக்கக் கிடைக்காத அங்கீகாரம், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடலுறுப்புகள் என்பதோடு, நமக்கு வாழ்நாளில் கிடைத்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே என்று எண்ணம் கொண்டவரா நீங்கள்? இறக்கும் வரையிலும் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி உங்கள் எதிர்கால விருப்பங்களுக்குத் திறமை இருந்தும் காலம் ஒத்துழைக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்டவரா நீங்கள்? 

உங்களுக்குத் தெரிந்த பிரபல்யங்கள், தொழிலதிபர்களின் இறுதி நாட்களில் அவர்கள் பேசியுள்ள வார்த்தைகளை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். அவை உங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதல்ல. காலம் உங்களுக்கு வழங்கிய வட்டத்திற்குள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கணக்கீடு செய்யாது? எப்படிப் பயன்படுத்திக் கொண்டாய் என்று தீர்மானம் செய்யும். 

அந்தத் தீர்மானம் தான் உங்கள் அடுத்தத் தலைமுறைக்குப் பாடமாக மாற்றப்படுகின்றது. இவர் வாழ்க்கை எப்போது முடியும்? என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர்? எதில் தோற்றவர்? 

என் சுதந்திரம் எனக்கு முக்கியம் என்று கருதி கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள். என் ஆதிக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று கடைசி வரைக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத ஆண்கள் என்று பரஸ்பரம் உருவாக்கிக் கொண்ட யுத்தத்திற்கான பெயர் இல்வாழ்க்கை எனில் வாழ்க்கை முழுக்க எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை எப்படிச் சொல்வீர்கள்? 

"வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" என்று வாழ்ந்தவர்கள் அவரவர் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றது கொலையும், தற்கொலைகளும் மட்டுமே. மனதில் காயத்தை உருவாக்கி விட்டுச் சென்ற அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் சந்ததிகளுக்கானது மட்டுமல்ல. சந்ததிகள் சேர்ந்து வாழப்போகும் சமூகத்திற்கும் உரியது. சிலவற்றை மாற்ற முடியும். சிலரை எந்நாளும் மாற்றவே முடியாது என்பதனை உணர்ந்திருந்தால் உங்களின் ஐம்பது வயதில் கூட இளைஞரைப் போலவே மனதாலும் உடலாலும் வாழமுடியும் என்ற எளிய தத்துவத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்தியிருக்கும். 

நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம். 

வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. 

அவரவருக்கான வேஷம் கலையும் நேரம் வரும் போது கூட்டம் கலைந்து விடும். வெட்ட வெளி ஆகாயம் போல எல்லாமே மாறி விடும். இயற்கையோடு கலந்தார் என்று வாசிக்கும் போது அதுவரையிலும் செயற்கையாய் செய்த செய்கைகள் அனைத்தும் சிரிப்பாய் சிரிக்கும். 

நம் வாழ்க்கையும் அடுத்தவரின் சிரிப்புக்குப் பலியாக வேண்டுமா? 

தொடர்வோம்.......