Thursday, November 14, 2013

ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா?

விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பெற்ற நவீன மருந்துகள் மட்டும் இல்லாவிட்டால் பழைய காலம் போல நம்முடைய மனித இனத்தின் ஆயுள் என்பது முப்பதோ அல்லது நாற்பது வயதுக்குள் முடிந்து போயிருக்கும்.

கலப்பின விதைகளும், ரசாயன உரங்களும் இங்கே வராவிட்டால் இன்னமும் இந்தியாவில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்.

சித்த மருத்துவத்தைப் பற்றிப் பேசினால் இவன் மாறிக் கொண்டிருக்கும் உலகத்தைப் புரிந்து கொள்ளாதவனாக இருப்பானோ? என்று சொல்லக்கூடிய நவநாகரிக உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

தலைப்பிற்குரிய முழு விபரங்களைப் பற்றித் தனியாக எழுத வேண்டும் என்றாலும் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து இளவரசர் கேரளாவில் உள்ள குமரகம் ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்றார் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நேரம் இருப்பவர்கள் இந்தப் பெரிய கட்டுரையைப் படிக்கலாம்.

நமக்கு விஞ்ஞானத்தை கற்றுத் தந்தவர்களே கடைசியில் அடைக்கலமாகும் அளவிற்கு சித்த மருத்துவம் இன்று வரையிலும் சிறப்பாக இருந்தாலும் நமக்கு சிரிப்புச் சமாச்சாரமாகவே இன்று வரையிலும் உள்ளது.  மூட நம்பிக்கைகள என்ற பெயரில் நமது பழைய பொக்கிஷங்களை பகுத்தறிவு சட்டியில் போட்டு கிண்டி உண்ண முடியாத பொருளாக மாற்றிவிட்டோம்.

சித்தர்கள் நமது உடல் அமைப்பை எப்படிப் பகுத்துப் பிரித்தார்கள் என்பதற்காக இந்த ஆவணம், அரிய பொக்கிஷத்தை நாம் எப்படி இழந்துள்ளோம் என்பதற்காக இந்தக் கட்டுரை..


தமிழச்சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் 

தமிழச்சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. இதைவிட ஒரு நோய் கூடவும் முடியாது குறையவும் முடியாது. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது. 

1. தலை 307 

2. வாய் 18 

3. மூக்கு 27 

4. காது 56 

5. கண் 96 

6. பிடரி 10 

7. கன்னம் 32 

8. கண்டம் 6 

9. உந்தி 108 

10. கைகடம் 130 

11. குதம் 101 

12. தொடை 91 

13. முழங்கால் கெண்டை 47 

14. இடை 105 

15. இதயம் 106 

16. முதுகு 52 

17. உள்ளங்கால் 31 

18. புறங்கால் 25 

19. உடல்உறுப்பு எங்கும் 3100 

ஆக 4448 என்பனவாகும்.

இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம். 

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது. 

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் 

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன.

அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும். 

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள் 

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும். 

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது. 

கிருமிகள் உருவாகக் காரணம் 

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும். 

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும். 

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும். 

கண் நோய் : 

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம். 

பொதுக் காரணங்கள் : 

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்கச் சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.

அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான். 

சிறப்புக் காரணம் : 

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும். 

காசநோய் : 

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும். 

வெள்ளெழுத்து 

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன. 

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றிச் சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது. 

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம். 

தலைநோய்

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை 

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை. 

கபால நோயின் வகை : 

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர். 

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும். 

அம்மை நோய் : 

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம். 

மேலும், அம்மை நோய்க்கு குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. 

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. 

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது. 

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு. 

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை, 

1. பனை முகரி 2. பாலம்மை 

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை 

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை 

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை 

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை 

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை 

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை 

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. 

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும். 

தொடர்புடைய பதிவுகள்






Sunday, November 10, 2013

பேதி மருந்து

மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு விடுமுறையிருந்தால் வீட்டில் கட்டாயம் இந்த உரையாடல் நடக்கும்.

"என்னங்கடா...... எதுவும் படிக்க, எழுத வேண்டியது எதுவும் இல்லையா?" என்று கேட்டால் சட்டென்று மூவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.

"கிளாஸ் டெஸ்ட் எதுவும் இல்லப்பா"

அன்றும் இன்றும் மாணவர்களைப் பரிட்சைகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

என்னுடன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஒருவனுக்குப் பரிட்சை என்றால் காய்ச்சல் வந்து விடும். மற்றப் பரிட்சைகளில் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் காலாண்டு அரையாண்டு சமயத்தில் இழுத்து வந்து உட்கார வைத்து விடுவார்கள். பரிட்சைத்தாளில் ஏதாவது எழுதி வை என்பார்கள்.

‘ஆல் பாஸ்‘ என்கிற ரீதியில் வந்தவன் பத்தாம் வகுப்பில் ஓடியே போய்விட்டான். மாறிய உலகில் இன்னமும் மாறாமல் நமது கல்வித்திட்டம் இப்படித்தான் இருக்கின்றது.

சமீப காலமாகத்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பில் முழுமையான தேர்ச்சி போய்விடும் என்ற பயத்தால் கழித்துக் கட்டி வெளியேற்றுவதும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது.

+2வகுப்பை எளிதாக ஊதித்தள்ளி கல்லூரிக்குள் நுழைந்தவரா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?தினந்தோறும் பாடங்களை ஆர்வத்துடன் தான் படித்தேன் என்று?

ஆம் என்றால் நீங்கள் கடைசி ஐந்து சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்கக்கூடும். நாம் பார்க்கப் போவது மீதி உள்ள 95 சதவிகித மாணவர்களைப் பற்றியே. இந்த 95 ல் நானும் ஒருவன்.

என் குழந்தைகளும் அப்படி இருந்து விடக்கூடாது என்பதற்காகப் பாடத்திற்கு அப்பால் உள்ள விசயங்களைப் பல முறை அவர்களுடன் உரையாடுவதுண்டு. நக்கலாய், நையாண்டியுடன் ஜாலியாய் பேசுவதுண்டு. சுற்றி வளைத்துப் பாடம் சொல்லும் கருத்தை மெல்ல அவர்களுக்குள் புகுத்துவதுண்டு.
படம் கூகுள் ப்ளஸ் சைதை அஜீஸ்
மாறாத ஆசிரியர்களைப் போல நம் பாடத்திட்டங்களும் மாறவில்லை.இங்கே சாபங்கள் தான் மாணவர்களுக்கு வரமாக உள்ளது. இதற்குள் நின்று கொண்டு சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இங்கே எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பிரகாசமென்பது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய துறைக்குச் செல்லக்கூடிய படிப்பில் சேர உதவுவது.

நான் படித்த போது தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என ஐந்தே பாடங்கள். அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல். இது தவிர வரலாறு பாடத்தில் தனியாகப் புவியியல். இன்று பாடத்திட்டங்களின் தன்மை மாறியுள்ளது. ஆனால் அதே பழைய கள். ஆனால் ஒழுகும் குப்பிகள்.

பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாடங்களை வெறுத்தவர் எவருமே இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் ஒவ்வொரு தமிழாசிரியர்களும் நல்ல கதை சொல்லிகளாகத்தான் இருந்துருப்பார்கள்.

வரலாற்றுச் சம்பவங்களில் சுவராசியம் இருந்ததோ இல்லையோ, ஆனால் வரலாற்றுப்பாடத்தை நடத்திய ஆசிரியர் சம்பவங்களைத் தொடர்பு படுத்தி ஆர்வமுடன் சொல்லத் தெரிந்திருந்தால் சில சமயம் சுவராசியமாக இருந்துருக்க வாய்ப்புண்டு.

அறிவியலின் மாற்றங்களை உணராதவர்களும், கணக்கு என்பதைக் கல்லில் உரிக்கும் நாறாக மாற்றியவர்களையும் வைத்துப் படித்த பாடங்கள் எதுவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்றா நம்புகின்றீர்கள்.

ஆங்கில வகுப்பு என்பது பேதி வர வைப்பது.

ஷேக்ஸ்பியரைப் பற்றி நடத்தும் போதெல்லாம் டூரிங் டாக்ஸியில் பார்த்த பழைய படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. ஆங்கில இலக்கணமென்பது ஆலகால விஷமாகத் தான் நடத்தியவர்கள் புரியவைத்தார்கள்.

மொத்தத்தில் பத்து மாத கஞ்சியை ஊற வைத்து ஊட்டி விட்டால் எப்படியிருக்கும்? இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது.

இந்திய தொழில் நுட்பத்தின் சாதனையான செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் குறித்து மாணவர்கள் தங்கள் பாடங்களில் படிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

பாடத்திட்டத்தை எழுதும் ஆசிரியருக்கு அது குறித்து எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட அதை எப்படி மாணவர்களுக்குப் புரிய வைப்பது? எதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற சுருக்கத்தில் உணர வாய்ப்பில்லாமல் தயாரிக்கும் போது அதுவும் மதிப்பெண்களுக்ககாகத் தயாரிக்கப்பட்ட பட்சணம் போலத்தான் இருக்கும். ஐந்து அல்லது பத்து மதிப்பெண்களின் இந்தச் சாதனைகள் மனப்பாடத்தில் மறந்தே போய்விடும்.

இதே தவறுகள் தான் இங்கே 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

கல்வித்துறை, திட்டங்கள், அதிகாரிகள், வல்லுனர்கள், விற்பனர்கள் என்ற ஏராளமான படைபட்டாளங்கள் இங்குண்டு.ஆனால் இறுதியில் மாணவர்களுக்கு மிஞ்சுவது எரிச்சலும் ஏமாற்றமும் மட்டுமே.

மூன்று நாட்கள் விடுமுறை விட்டாலும் புத்தகப்பைகள் ஏதோவொரு மூலையில் அனாதை போலத்தான் வீட்டில் கிடக்கும். தினந்தோறும் வகுப்பில் வைக்கும் பரிட்சைகளும், பொதுத் தேர்வுகளுக்கும் பயந்தே தான் இங்கே குழந்தைகள் படிக்கின்றார்கள்.

பாடத்திற்கு அப்பால் உள்ள தேடல்களை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை என்பதை விட அது குறித்த புரிதல்களும் ஆசிரியர்களுக்கே இருப்பதில்லை.

ஆசிரியர்களைக் கேட்டால் ‘எங்கள் சுமை உங்களுக்குப் புரிவதில்லை‘ என்கிறார்கள்.

புத்தகத்தை வைத்தே எழுதும் தேர்வுகளை வெளிநாட்டில் வைத்திருப்பது போல இங்கே பிட் வைத்து எழுதும் ‘தன்முனைப்பு‘ மாணவர்களை நம் கல்வித்திட்டம் தந்துள்ளது. தேர்வு என்ற பெயரில் பயத்தை உருவாக்கி, அதையே வளர்த்து பள்ளிப் பாடங்கள் என்றால் பயம் என்கிற நிலைமைக்கு வளர்ந்துள்ளோம்.

மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அவர்களின் தரம் குறித்து அறிய தேர்வு என்றால் தேறியவர்கள் எத்தனை பேர்கள்? எத்தனை எதிர்ப்பு உருவானது? அவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தைப் பார்த்த பிறகு தான் நம்முடைய ஆசிரியர்களின் உண்மையான தரமே புரிகின்றது.

இவர்கள் தான் தரமான மாணவர்களை உருவாக்க வரி கட்டும் அளவுக்கு மாத ஊதியம் பெற்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தொடரின் மற்ற பதிவுகள்

போரும் அமைதியும்

மதிப்பெண்கள் என்றொரு கிரீடம்

கழிவாகிப் போகின்றோமா?

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

மொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா?

Friday, November 08, 2013

இலவசத்திட்டங்கள் படும் பாடு

ரேசன் கடைகள் பதிவின் தொடர்ச்சி 

கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குடும்ப அட்டைக்கு ஒன்று என்ற பெயரில் வந்து சேர அது இன்று வரையிலும் பிரிக்கப்படாமல் ஊரிலேயே பரணில் தான் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சிறப்பான திட்டம். கலைஞருக்கு இது போன்ற திட்டத்தை எந்த அதிகாரி வடிவமைத்துக் கொடுத்தாரோ அவருக்குத் தமிழர்களின் அடுத்த ஏழெழு தலைமுறைகளும் நன்றிக்கடன் பட்டுள்ளது. 

காரணம் டிவி தேவையில்லை என்று கருதியிருந்தவர்களும், நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது என்று நினைத்தவர்களையும் இந்தத் திட்டத்தின் மூலம் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் தெருவில் கூடும் பழக்கம் குறைந்து விட்டது. வெட்டி அரட்டை முற்றிலும் நின்று விட்டது. 

திரையரங்க கூட்டம் குறைந்து வீட்டில், கடைகளில் என்று சர்வ இடங்களிலும் வந்து சேர்ந்து ‘கனவு காணுங்கள்‘என்ற தினந்தோறும் கொண்டாட்ட மனோநிலையைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பிய பெருமை கலைஞரையே சாரும். ஒரே வீட்டுக்குள் அறைக்கொன்று என்ற புதிய கலாச்சாரம் உருவானது. 

கலைத்தாகம் மிகுந்த தமிழர்கள் தங்களுக்கான தலைவர்களைச் சினிமாவின் மூலமே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் லட்சியங்களையும் இந்த டிவி பெட்டியின் மூலம் தேடத் தொடங்கினர். ஏற்கனவே சன் டிவி கலாநிதி மாறன் மூலம் தமிழ்நாட்டில் உருவான புதிய ஊடகத்தமிழ் பரவாத இடங்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்த பெருமையும் லட்சியங்களை அடைய அதிக உழைப்பு தேவையில்லை என்ற கூட்டமும் பெருகியுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத்தான் இங்கே உள்ள ரேசன் கடையில் பார்த்தேன். நம் அரசாங்கத்தின் இலவசங்கள் யாருக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.


உங்களுக்கு அரசாங்க திட்டங்கள் குறித்துத் தெளிவாகத் தெரிந்தாலும் கூடச் சராசரி அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தால் நாம் கூமுட்டையோ? என்று தான் தோன்றுகின்றது. இது வேறொரு உலகம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. 

அரசின் திட்டமான இலவச அரிசி இருபது கிலோ என்பது புழுங்கல் அரிசி இருபது கிலோ மற்றும் பச்சரிசி ஐந்து கிலோ என்றாலும் பல கடைகளில் 15 கிலோ என்கிற அளவுக்குத்தான் போடுகின்றார்கள். ஒரு அட்டைக்கு 5 கிலோ என்பதைத் தனியாக ஒதுக்கி விடுகின்றார்கள். பச்சரசி ஐந்து கிலோ வாங்கினால் புழுங்கல் அரிசி 15 கிலோ தான் என்று சமாளிக்கின்றார்கள். 

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நன்கு படித்த வசதியான அத்தனை பேர்களும் அங்கே பணிபுரிபவர்கள் எத்தனை மோசமாகத் திட்டினாலும் பொறுத்துக் கொண்டு அசையாத சிலை போல நிற்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் இயல்பான குணமா? அல்லது பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருப்பார்களா? என்று யோசிக்கத் தோன்றியது. 

ஏறக்குறைய இரண்டு கோடி அட்டை இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை இன்றைய சூழ்நிலையில் தேவையின் அடிப்படையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு மடங்கு கூட இருக்காது. இந்த அரிசியை மட்டும் வாங்கிச் சமைப்பவர்கள் என்றால் தமிழகத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களைத் தவிர வேறெங்கும் இருக்காது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. 

சிலர் இட்லி, தோசை மாவுக்கு என வெளிச் சந்தையில் வாங்கிய அரிசியோடு சேர்த்துப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஆனால் எழுபது சதவிகித மக்கள் வாங்கிய அரிசியை ஒரு கிலோவை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகின்றார்கள். இதே போல ஜீனி, பருப்பு வகைகள், பாமாயில் என்று ரேசன் கடையில் வாங்கும் பெரும்பாலான பொருட்களை வெளியே விற்று லாபம் பார்ப்பவர்கள் தான் அதிகம். 

இதே அரிசி பாலீஷ் செய்து வெளிச்சந்தையில் 35 ரூபாய்க்கு மாறி விடுகின்றது.இது தவிர இந்த அரிசி கோழிப் பண்ணைகளுக்குச் செல்வதுமாக அரசாங்கத்தின் பணம் வீணாகிக் கொண்டிருக்கின்றது. 

சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொண்டு வந்த கிலோ இருபது ரூபாய் அரிசியை மக்கள் எவரும் சீண்டக்கூடத் தயாராக இல்லை. ஆனால் மிக நன்றாகவே உள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. தற்போதைய சமூகத்தில் பசியைத்தாண்டி ருசிக்கு மாறிவிட்டதால் பொருளாதார ரீதியாக வாழ முடியாதவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாகவே இது போன்ற அரிசி பார்க்கப்படுகின்றது. 

இது தவிர நகர்ப்புறங்களில் இன்று லாபம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கப்படும் பையில் மாவு விற்கும் சந்தைக்கும் இது போன்ற அரிசியே பலவிதங்களில் உதவிக்கொண்டு இருக்கின்றது. 

இன்று தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் (யார் எந்தப் பதவிகளில் இருக்கின்றார்கள் என்றே இன்று வரையிலும் தெரியவில்லை) எத்தனை பேருக்கு கணினியை இயக்கி அலுவலகச் செயல்பாடுகளைப் பார்க்கத் தெரியும்? அதிகாரிகளைத் தவிர அமைச்சர்களைப் பொறுத்தவரையிலும் மின் அஞ்சல் என்றால் ஏதோ துபாய்க்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் என்றே நினைத்துக் கொள்ளும் புத்திசாலிகளாகத்தான் இருக்கின்றார்கள். 

ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் மடிக்கணினி என்பது குறித்துப் பலரிடம் பேசிப் பார்த்தேன்.

இதிலும் பல நடைமுறை சிக்கல் உள்ளது. தொடக்கத்தில் டைப்பிங் தெரிந்து கணினியை பயன்படுத்தும் போது எளிதாக இருந்தது. ஆனால் இன்று பலரும் விரல் வித்தை வீரர்கள் தான். ஆனால் நம் கல்விச்சூழல் கணினியில் படித்துத் தெரிந்து கொள்ளும் அளவில் இருக்கின்றதா? குறிப்பாக அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியர்களில் விதிவிலக்குகளைத் தவிர்த்து மாணவர்களை ஊக்கப் படுத்துபவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கே கணினி அறிவு இருக்குமா என்பது சந்தேகமே. இதற்கு மேலாகப் பாடங்களைச் சிடி களில் சேமித்து வைத்து அதை வைத்து பார்த்து படிக்கும் அளவிற்கா நம் வகுப்பறை இருக்கின்றது?

இன்று வரையிலும் தனியார் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் கூடப் பள்ளிக்கூடத்தில் கூடக் கணினி என்பதை ஏதோவொரு பூதம் என்பதைப் போலத்தான் பார்த்து தொடுங்க? என்பது போல அறிவுறுத்துகின்றார்கள். அடுத்து இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கணினிகள் தோல் இல்லாத எலும்பு போலத்தான்.

அரசாங்கத்தின் அறிவுரையின் படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும்(மேல்நிலைப்பள்ளி)இந்த மடிக்கணினி வழங்கப் படுகின்றது.

விலைக்கு விற்று விடுகின்றார்கள். சிலர் விளையாட பயன்படுத்துகின்றார்கள். மிகக் குறைவான மாணவர்கள் மட்டும் பிரயோஜனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அஸ்திவாரம் சரியாகப் போடப்படாமல் அடுக்கு மாடி கட்டுவது போலத்தான் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜெ. வின் தேர்தல் வாக்குறுதி சிறப்புத் திட்டமான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி நடுத்தர வர்க்கத்திற்குக் கீழே உள்ள பல குடும்பங்களுக்கு நிச்சயமாக உதவுகின்றது. ஆனால் பல பேர்களிடம் கேட்ட போது மின் விசிறி மட்டும் தரமாக இருப்பதையும் மற்ற இரண்டு பொருட்களும் நல்லதாக அமைந்தால் அதிர்ஷ்டமே என்கிற ரீதியில் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பேரூந்து சலுகை, சீருடை, மிதிவண்டி, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் கேள்வியே எழுப்ப முடியாத நல்ல திட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கிப் பள்ளியின் தலைமையாசிரியர் வரைக்கும் தற்போதைய ஆட்சி குறித்த பயம் இருப்பதால் மாணவர்களுக்குக் கொடுத்து முடிக்கும் வரையிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பசுமை வீடுகள் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் கட்சிக்காரர்கள் சொல்லும் நபர்களுக்கு வழங்கப்படும் திட்டம். இலவச காப்பீடு என்பது உதவுகின்றதே தவிர அதைப் பெருமையாகச் சிறப்பான செயலாக்கத்தில் உள்ள திட்டம் என்று சொல்ல முடியவில்லை.

ஏறக்குறைய 11 ஆயிரம் கோடிகள் செலவளிக்கப்படும் இலவச திட்டங்களில் வருடந்தோறும் ஆயிரம் கோடிகளை ஒதுக்கி முதலில் அரசாங்க பள்ளிக்கூடங்களின் கட்டிடங்களைச் செப்பனிட்டாலே போதுமானது. அரசு பள்ளிகளின் மேல் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் எரிச்சலை குறைத்து நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.

கலைஞர் திட்டம் கவிழ்ந்து இப்போது அம்மா திட்டம் உச்சத்தில் உள்ளது. ஜெ. வின் சாதனையான டாஸ்மாக் சாராயப் பாட்டில்களில் மட்டும் இன்னமும் அம்மா என்ற பெயர் வரவில்லை. மற்றபடி எல்லா இடங்களிலும் அம்மா புகழ் தான் தமிழ்நாட்டில் தற்போது கொடிகட்டி பறக்கின்றது.

தமிழ்நாட்டு ‘குடிமகன்‘களின் விருப்ப அம்மாவாக இருப்பவர், ஆங்கிலத்தை வளர்த்து தமிழ்த்தாய்க்கு சிலை வைக்க நினைப்பவரிடம் மனதில் எந்தத் தாய் போய் இதையெல்லாம் சொல்லப் போகின்றாரோ?

தொடர்புடைய பதிவுகள்

கிராம பொருளாதாரம் அழிந்த கதை

தப்புத்தாளங்கள்


மற்ற பதிவுகள்

நதிகள் இணைப்புத்திட்டம்  கனவா கற்பனையா?

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?