Sunday, December 30, 2018

அங்கீகாரமென்பது வெறும் வார்த்தைகள் அல்ல



இவர் பெயர் ராதாகிருஷ்ணன். திருப்பூர் முதல் தலைமுறை முதலாளி, செல்வந்தர் போன்ற பல வார்த்தைகளில் இவரைப் பெருமைப்படுத்த முடியும். வயது 70க்கு மேல் இருக்கும். நான் திருப்பூர் குறித்து எழுதிக் கொண்டிருப்பதைத் தொடக்கம் முதல் வாசித்துக் கொண்டிருக்கும் முதன்மை வாசகர். ஒரு மகன் அமெரிக்காவில், ஒரு மகன் ஆஸ்திரேலியாவில் இருக்க இரண்டு இடங்களில் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

ஆனால் இன்னமும் வேர்களை மறக்க விரும்பாதவர். கடந்த மூன்று வருடங்களில் நேரிடையாக அறிமுகம் ஆனவர். திருப்பூர் வந்தால் நேரிடையாக வீட்டுக்கு வந்துவிடுவார். தன் மகன்களை விடு கூடுதலாக ஒரு படி மேல் என் மேல் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை செலுத்தி திக்குமுக்காட வைப்பார். இவர் மனைவியும் அந்த அளவுக்கு என் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர். 

இந்த அளவுக்கு ஒருவர் நம் மேல் மரியாதை வைக்க முடியுமா? என்று இவரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சங்கோஜப்பட்டுள்ளேன். 

+++++

சென்ற வருடமே ஒரு கிண்டில் கருவி வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.  ஆனால் (http://freetamilebooks.com/) நண்பர் சீனிவாசன் மூலம் வருடத்தின் தொடக்கத்தில் அன்பளிப்பாக என்னைத் தேடி வந்தது. மகள் பயன்படுத்துகிறார்.

நாகர்கோவில் அருகே பிறந்து வேலைக்காக இப்போது குவைத்தில் இருக்கும் தம்பி ஜோஸ் என் மின் நூலைப் படித்து, தானும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதத்தொடங்கி இன்று ஒரு புத்தகம் எழுதி இந்த வருடம் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு மின் நூலை வெளியிட்டு என் கண் எதிரே மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ந்த மரமாக மாறியுள்ளார். இன்னமும் நேரிடையாகச் சந்திக்கவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றார். அவருக்கென்று சிலவிதங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளேன். 



அவர் மூலம் அங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக என் எழுத்துக்கு விருது கிடைத்தது. இலங்கையில் நடந்த விழா என்பதால் நேரிடையாகச் செல்ல முடியவில்லை. ஆனால் விருது வீடு வந்து சேர்ந்தது. இது குறித்து இதுவரையிலும் எந்த இடத்தில் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கென்னவோ தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே தமிழ் எழுதக் கற்றுக் கொண்டு இடைவிடாமல் ஃபேஸ்புக்கில் முக்கியமான கட்டுரைகளை, கதைகளை, தொடர்களை எழுதிக் கொண்டிருக்கும் ஜோஸ்க்கு உரிய விருதாகத்தான் இதைப் பார்க்கின்றேன். அவர் சார்பாக நான் வாங்கியுள்ளேன் என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். 

++++++++++++

அப்துல் ரசாக் என்பவர் சென்னையில் இருந்து ஒரு முறை மின் அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றார். பேசினேன். வெள்ளை அடிமைகள் மின் நூலைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். கேட்டுக் கொண்டேன். அவர் குடும்பத்துடன் இறக்குமதி தொழிலில் சென்னை முதல் தமிழகம் முழுக்கப் பல இடங்களில் அலுவலகம் வைத்து முக்கியமான தொழில் முனைவோராக இருப்பவர். சென்னை வந்தால் அவசியம் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அப்படியே மறந்து போய்விட்டேன். தீபாவளிக்கு சில நாள் அவர் மீண்டும் அழைத்து இருந்தார். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒருவர் உங்களைச் சந்திப்பார். எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புரியாமல் போய்ச் சந்தித்த போது தீபாவளி பரிசு என்று கீழே கொடுத்துள்ள பெட்டி வந்து சேர்ந்தது. 



சுப.வீ தான் பேசும் கூட்டத்தில் ஒவ்வொருமுறையும் ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறுவார். இப்போதைய இளைஞர்கள் எதையும் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைக்காதீர்கள். அவர்களின் தளம் மாறியுள்ளது. அந்தத் தளத்தை நோக்கி நாம் தான் சொல்லவேண்டும் என்பார். காரணம் அப்துல் ரசாக் என்னுடைய மின் நூல்கள் எங்கெங்கு பகிரப்படுகின்றது? அதன் வரவேற்பு என்ன? என்பதனை எனக்கு வாட்ஸ் அனுப்பிய போது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. அவரின் அன்பு விருதுக்கு மேலாகத் தெரிந்தது.

+++++++++

நான் எழுதத் தொடங்கும் போது எப்போதும் போல என்னைக் கவர்ந்த சில எழுத்தாளர்களின் தொடர்பு கிடைத்தது. சிலருடன் நானே தொடர்புகளையும் உருவாக்கிக் கொண்டேன். எழுதத் தொடங்கிய போது எழுதும் விதம் குறித்த சூட்சமம் குறித்துப் பலருடனும் கேட்டுத் தெரிந்துள்ளேன். அப்போது ஒருவர் மற்றொருவருக்குக் கூறிய அறிவுரை என் காதுக்கு வந்தது. 

"மற்ற துறைகளைப் போல எழுத்துத் துறையை எவராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அது சுயமாகவே கற்றுக் கொள்ள வேண்டியது. தவழ்ந்து, நடந்து, ஓடுவது போல உண்டான பயிற்சி" என்பதாக எனக்குப் புரிந்தது. 

கடந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் பல பதிப்பக முதலாளிகளின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. சென்னையில் இருக்கும் ஒரு முதலாளி ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. 

"நாங்கள் இந்தத் துறையில் நுழைந்த போது எழுத்தாளர்களைச் சீண்ட ஆட்களே இருக்காது. ஆனால் மொத்தமாக மாறிவிட்டது. எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்தாளர்களுக்குப் பலவிதங்களில் அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. எல்லோருக்கும் சினிமாதுறையில் உள்ள போட்டி பொறாமைகளைப் பற்றித்தான் தெரிகின்றது. ஆனால் எழுத்துத்துறை அதைவிட மோசமானது. ஒரு எழுத்தாளரின் புத்தகம் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் சூழல் தமிழகத்தில் உருவானால் நிச்சயம் இந்தத்துறையில் தான் அதிகமான க்ரைம் ரேட் நடக்கும். அதனால் நீ எப்போதும் விலகியே இரு" என்றார். 

அகங்காரத்தைச் சுமந்து வாழ்பவர்கள் என்று பலரையும் சந்தித்துள்ளேன். இவனைப் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களின் அரிதாரம் பூசிய வாழ்க்கை கொண்டவர்கள் பலரும் இன்னமும் வேடத்தைக் கலைக்காமல் அந்நியன் போலவே சிலர் இருக்கின்றனர். வயது, அனுபவம் என்று எதுவுமே அவர்களுக்கு எந்தப் பாடத்தையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம். கட்சி ஆதரவு என்ற பெயரில் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பதவி கிடைத்து விடாதா? என்ற நோக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் போது இன்னமும் என் மனதில் சிங்கமாக இருப்பவர் மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்கள். 

உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக வாழ்ந்தவர். குறிப்பாக எழுதத் தொடங்கியவர்களை மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள எவரையும் உற்சாகப்படுத்துவதில் அவருக்கு ஈடு இணை எவருமே இல்லை.

++++++++


எழுத்தாளர்கள் என்றாலே பரம ஏழைகள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் பாதி உண்மை தான் உள்ளது. சூழல் மாறியுள்ளது. ஆனால் எந்தச் சூழலிலும் ஒரு எழுத்தாளர்கள் மற்றொரு எழுத்தாளரைப் பாரபட்சமில்லாமல் ஆதரிப்பதில்லை. அதிலும் இப்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப்பிழைப்பவர்கள், அதன் மூலம் உலக நாடுகள் சுற்றி தங்களை (மட்டும்) வளமாக்கிக் கொள்பவர்கள் என்று இதே போலப் பல பிரிவுகள் உண்டு. ஆனால் எழுதும் போது பாரதி முதல் பலரையும் சுட்டிக்காட்டி சுடச்சுட அறிவுரைகள் அசால்ட்டாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு எழுத்தாளர்களும் நடிகர்களைப் பார்த்து அவர்களின் வருவாய், புகழைப் பார்த்து பொறாமைப்பட்டு எழுதுவதைப் பார்த்து இருப்பீர்கள். எந்த எழுத்தாளராவது மற்றொரு எழுத்தாளருக்கு  உதவி செய்துள்ளார்கள் என்பதனை எங்கேயாவது படித்து உள்ளீர்களா? மனைவி அரசு வேலையில் இருப்பவர்கள் தொடங்கி, பல எழுத்தாளர்கள் அரசு வேலையில் இருந்து கொண்டு எழுதித்தள்ளியவர்கள், திரைப்படத் துறையில் நேரிடையாக, மறைமுகமாக பணியாற்றி வருமானத்தைப் பெறுபவர் வரைக்கும் பலரும் உண்டு.

மதம், சாதி, கட்சி மூன்றும் மற்ற துறைகளைவிட எழுத்துத்துறையில் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது நான் கடந்து வந்த பாதையில் பார்த்த உண்மை. சமூகம் எங்களை மதிப்பதே இல்லை என்ற இவர்களின் குற்றச்சாட்டு என்பது இவர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த பரிசு என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

++++++++++

சமீபத்தில் மறைந்த பிரபஞ்சன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு அப்போலோவில் சேர்க்கப்பட்ட போது மொத்த ஆறு லட்சம் தொகையையும் கட்டியவர் நடிகர் சிவகுமார். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாளைக்கு அவரைத் தேடி வரும் நபர்களும், கடிதங்களும் அவர்கள் குடும்ப அறக்கட்டளை தவிர்த்து, தனிப்பட்ட முறையில் அவர் செய்து கொண்டிருக்கும் உதவிகள் கணக்கில் அடங்காது. எனக்குத் தெரிந்தே நாலைந்து பெரிய எழுத்தாளர்கள் அவரிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய ஒருவர் மீண்டும் மீண்டும் இதையே கடைப்பிடிக்கத் தொடங்க அதுவே அவருக்குப் பல சங்கடங்களையும் உருவாக்கியது.

அவர் எங்கேயும் இதைப்பற்றிச் சொல்வதே இல்லை. அமுதவன் போன்றவர்கள் கட்டாயம் இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். பிரபஞ்சன் குறித்து நான் எழுதக் காரணம் ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதிய காரணத்தால் நிச்சயம் இது தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ற காரணத்தால் இங்கே எழுதி வைக்கின்றேன். உதவி செய்தவர்கள் சொல்லாமல் இருப்பது மரபு.  ஆனால் பலன் பெற்றவர்கள் ஒரு நன்றிக்காக எழுதுவது தவறா?

எழுத்தாளர்கள் நடிகர்களாக இருக்கின்றார்கள். நடிகர்கள் தான் உண்மையிலே மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பல உண்மையான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் திரைப்பட வசனம் என்பது இது போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு.  காரணம் இவர்களின் அகங்காரம் அந்தத் துறையில் செல்லுபடி ஆகாது. பணத்திற்காக ஓவர் ஆயில் பார்ப்பவர் தான் பலர் உள்ளனர்.  இது தான் நானறிந்த உண்மை.

 +++++++++++

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நாம் நேசித்துச் செய்யும் ஒரு விசயம் நிச்சயம் காலம் கடந்தும் நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் பலன் சிலருக்கு அவர்கள் வாழும் காலத்தில் கிடைக்கலாம். அல்லது வாழ்க்கை முடிந்த பிறகு கூட வந்து சேரலாம். அது பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கக் கூடிய முக்கிய மனிதர்களின் உதவியாகக்கூட இருக்கக்கூடும். 

குடும்பம், குழந்தைகளின் நல்வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்பதோடு உங்களுக்குப் பிடித்த ஏதோவொன்றின் மூலம் உங்கள் தடங்களை இங்கே பதிந்து விட்டுச் செல்லுங்கள். கண்களுக்குத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் அப்படிச் செய்து விட்டுப் போனதால் மட்டுமே இன்று நீங்களும் நானும் உரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.

திருப்பூரில் இருந்து கொண்டே திருப்பூர் பற்றிய உள்ளும் புறமும் உள்ள விசயங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதால் பல சங்கடங்களையும் உருவாக்கிய போதும் தொடர்ந்து எழுத்திடவே விரும்புகின்றேன். காரணம் நான் தொலையாமல் இருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் மன அழுத்தமின்றி வாழ்ந்திட முடியும்.

Saturday, December 29, 2018

கவனிப்பது வேறு கவலைப்படுவது வேறு.

மகள்களில் தேர்வுத் தாளில் கையெழுத்துப் போட்டு விட்டு வரச் சென்ற போது மகள் ஒருவர் எடுத்த படம். 

எனக்கு அறிமுகம் ஆன ஆசிரியர்கள் மட்டுமல்ல? அறிமுகம் ஆகாத ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த முறை என்ன பிரச்சனையோ? என்று யோசிப்பார்கள். நான் சந்தித்த ஆசிரியர்களும், மகள்கள், ஏன் மனைவி கூட ஏன் பள்ளியில் யாரிடமும் நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்று திரும்பி வரும் போது அங்கலாய்த்துக் கொண்டே கேட்டார்கள். 

"இந்த உலகம் இனி கேள்விகளை கேட்க விரும்பாத மனிதர்களை விரும்புகின்றது. தொண்டர் என்றால் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரசிகன் என்றால் அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்ப வேண்டும்.  வாடிக்கையாளர் சேவை என்பது மறந்து போன வார்த்தை. வங்கி முதல் வாங்கும் பொருட்கள் வரைக்கும் அவரவருக்கான நியாயங்கள் அதற்கான எல்லாவிதமான உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றது. "

"ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். மீண்டும் அவர் பலன் உள்ளவராக மாறும் போது தொடர்பு எல்லை புதுப்பிக்கப்படும். கொடுப்பவரும், வாங்குபவருக்கும் இடையே நடப்பது உறவு ரீதியான புரிதல் அல்ல. இது நவீன பண்டமாற்று முறை. இப்படித்தான் இப்போதைய உலகம் இயங்குகின்றது. அதையே விரும்புகின்றது. "

"நம் அனுபவங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் அதனை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தாலும் ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நம்மை நெட்டித்தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். "

"இங்கு எந்தக்குறையையும் ஒருவர் மேல் மட்டுமே சுமத்த முடியாது. அந்தச் சங்கிலியில் அவர் ஒரு அங்கம். அவருக்கு மேலே பலரும் உள்ளனர். தொடர்புப் படுத்திப்பார்த்தால் நாம் கோபப்பட்டவரும் ஒரு விதத்தில் பாவப்பட்ட ஜீவன் தான். வணிக நோக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் முன் நிற்கும் இந்தச் சூழலில் முடிந்தவரைக்கும், கிடைத்தவரைக்கும் எடுத்துக் கொண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்வது உங்களின் தனித்திறமை" என்றேன் மகள்களிடம். 

காரணம் இந்த வருடம் முழுக்க மகள்களுக்கு ஒரு வகையில் உதவியாய் இருந்தேன். அவர்களுக்கு எந்த நிலையிலும் மன அழுத்தம் தாக்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். முக்கியமாக என் பேச்சைக் குறைத்துக் கொண்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன். வித்தியாசம் தெரிந்தால் மனைவி மூலம் அதனைப் பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தேன். பள்ளியில் 12 மணி நேரம். வீட்டில் 3 மணிநேரம் என்று அவர்களின் வாழ்க்கை முறை என்பது படிப்பு என்ற வட்டத்திற்குள் சுருக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அளவு கடந்த பாடத்திட்டம். அவசரமாக நடத்தும் ஆசிரியர்கள். முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. முயற்சிப்பதே உங்கள் கடமை என்று மாணவர்களின் நிலை

பலவிதங்களில் நான் கவனித்துக் கொண்டே வந்தேன். இந்தச் சமயத்தில் தலைமுறை இடைவெளியின் தாக்கத்தை முடிந்த அளவு குறைக்க என்னை மாற்றிக் கொண்டே வந்தேன். அவர்களுக்குப் பிடித்த அனிருத், ஹிப்பாப் தமிழா பாடல்களை அவர்களுடன் சேர்த்து ரசித்தேன். முக்கியப்படங்கள் வரும் போது திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றேன். இடைவிடாத வாக்குவாதங்கள் தொடர்ந்து முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் மனம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தேன். யூ டியூப் ல் உள்ள சில தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன். 

இடைவெளி விட்டு முக்கியப் படங்களைச் சிடி மூலம் வாங்கிக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். வாட்ஸ் அப் பார்க்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒரு மாதிரியாக அரசு தேர்வு என்ற பயத்தைப் போக்க முடிந்துள்ளது. பயத்தை உருவாக்கி, பயத்தை வளர்த்து, பயமுறுத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியர்களைப் பார்த்து நக்கலடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். 

காரணம் படிக்க முடியாத மாணவர்கள் தங்கள் கைகளைக் கிழித்துக் கொள்ளும் நிலையெல்லாம் இந்த வருடம் கேட்க நேர்ந்தது. 

இந்த வருடத்தில் தமிழகக் கல்வித்துறையில் மிக முக்கியமான மாற்றம் நடந்ததுள்ளது. பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இனி வரும் காலங்களில் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட இனி துறை சார்ந்து எழுதப் போகும் நுழைவுத் தேர்வு தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கும் என்ற நிதர்சனம் இங்கே மொத்த அமைப்பையும் மாற்றியுள்ளது. பலவற்றைக் கண்கூடாகப் பார்த்தேன். 

அதன் தாக்கம் உருவாக்கிய மாற்றங்கள் எனக்குப் பல விதங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஆசிரியர்கள் அதிகச் சிரத்தையெடுத்துத் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றையும் முழுமையாகப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. 

தற்போதைய சூழலில் மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும் அதற்கு மேல் இரண்டு வருடம் படிக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. வளர் இளம் பருவம் அல்லது பதின்ம வயது என்று சொல்லக்கூடிய டீன் ஏஜ் சமயத்தில் மனமும் உடலிலும் உருவாகும் மாற்றங்களைத் தாய் தந்தையர் உணர்ந்து கொண்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். நான் எல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று புலம்பத் தேவை இருக்காது. 

வயதாகும் போது நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் உருவாகும் பிரச்சனைகள் பலவற்றைப் பல இடங்களில் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவி அவர் அம்மாவைப் போல நெடுந்தொடர் விமர்சியாக மாறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பீர் அடிப்பது சாதனையாகத் தெரிகின்றது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனமென்பது இயல்பானதாக மாறியுள்ளது. பள்ளி நிர்வாகம் தடை போட்டாலும் குடும்பக் கௌரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தகப்பனின் பேச்சைக் கேட்ட போது வியப்பாக இருந்தது.

ஒரு மாணவன் அல்லது மாணவி வைத்திருக்கும் அலைபேசி அத்தனை நியாயங்களையும் அடித்துத் தும்சம் செய்து விடுவதை இந்த ஆண்டு பார்த்தேன். வைத்திருக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள கூட்டாளிக்கூட்டமும் மொத்தமாகப் பாதிக்கப்படுகின்றது. 

காரணம் எப்படி? எதனை? எதன் பொருட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவதற்குள் அனைத்தும் இயல்பாகக் கிடைத்து விடுவதால் அதன் மதிப்பு பயன்படுத்துபவர்களுக்குத் தெரிவதில்லை என்பது தான் இந்த ஆண்டு பல சமாச்சாரங்கள் மூலம் கண்டறிந்த உண்மை. இதற்கிடையே தான் ஒவ்வொருவரும் கடந்து வர வேண்டியுள்ளது. 

இப்போதைய மாற்றங்கள் எதுவும் இயல்பானதாகத் தெரியவில்லை. எல்லாமே படிப்படியாகத் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால் தரம் குறைந்த பொருட்கள் விலை அதிகமாகவும், தரமிக்கப் பொருட்கள் விலை மலிவானதாகவும் மாறியுள்ளது. 

வாழ்க்கை முறையும் அப்படித்தான் உள்ளது. 

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது. எனக்குத் தோன்றவில்லை. குழந்தைகள் என்பவர்கள் தனியான ஆத்மா. எத்தனை கவலைகள் கவனிப்புகள் இருந்தாலும் உங்களின் கவனிப்பு செல்லாக்காசாகி விடும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

என்னைக் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்த மனைவிக்கு இப்போதெல்லாம் ஒரே கேள்வி? 

ஏன் இப்படி ஓரேடியாக மாறிவிட்டார்?

Friday, December 28, 2018

இங்கே முகங்கள் விற்பனைக்கு உண்டு

இந்த வருடத்தின் முக்கியச் சில குறிப்புகளை மட்டும் இங்கே எழுதி வைத்திட தோன்றுகின்றது. 

"நினைவுக்குறிப்புகளைப் படமாக எடுத்து வைத்துப் பாருங்கள். அது உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். நம்பிக்கையூட்டும்" என்று சென்ற வருடம் இறுதியில் நண்பர் சொன்ன போது சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. 

பயணங்களில், மற்ற நிகழ்விடங்களில் எதிரே காணும் காட்சி சித்திரமாக மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். புகைப்படம் எடுக்கத் தோன்றாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வார்த்தைகளாக மாற்றிக் கொள்வதுண்டு. இந்த வருடம் செல்லுமிடங்களைப் புகைப்படமாக மாற்றும் எண்ணம் உருவானது. 

பத்திரிக்கைளுக்கும், மற்ற ஊடகங்களும் தினந்தோறும் ஏராளமான முகங்களைத் தினந்தோறும் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வெறுக்கும் முகம் என்று ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் உங்கள் எண்ணத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டேயிருக்கின்றது. இது தவிர நீங்கள் பணிபுரியும் சூழல், வாழுமிடம் போன்ற இடங்களில் உள்ள முகங்கள் மறுபக்கம். மொத்தத்தில் உங்களின் உண்மையான முகம் என்பதனை மறந்து எத்தனையோ விதவிதமான முகங்களைத் தான் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்கிறது. 

சென்ற வருடம் நடந்த நிகழ்வுகளை நாமே மறந்து கடந்து வந்து விடும் மன அழுத்தமான உலகில் நாம் வாழ்ந்தாலும் வலைதளங்கள் ஏதோவொரு வழியில் நமக்கு அதனை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கின்றது. பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அட!, ஆமாம்!. நாம் இப்படியா இருந்தோம்? என்ற முக மாற்றங்கள் நம்மைக் கலவரப்படுத்துகின்றது. கூடிக் கொண்டேயிருக்கும் வயது, நினைவு அடுக்குகளில் இருந்து நம்மைப் புன்னகைக்க வைக்கின்றது. அதன் பொருட்டு இந்த வருடத்தின் பலவிதமான சூழலில் எடுத்த என் முகங்களை இங்கே பொருத்தி வைக்கத் தோன்றியது. மீண்டும் ஒரு சமயத்தில் இதனை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில். 

எந்த வருடத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் இந்த வருடத்திற்கு உண்டு. ஆனால் அவை அனைத்தும் தொடராக எழுத வேண்டிய விசயமது. உடனே எழுதும் போது அதன் பக்கவிளைவுகளின் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதனை வருகின்ற வருடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றேன். தமிழகத்தில் வந்து போன புயல்களுக்குப் பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால் அதே போலத் திருப்பூருக்குள் எல்லா மட்டத்திலும் புயல் தாக்கியது. ஆனால் யாரும் இதைப்பற்றிப் பேசவே இல்லை. திருடனுக்குத் தோள் கொட்டியது போல அமைதியாகவே இருந்து விட்டார்கள். இவை எல்லோருடைய வாழ்வையும் திருப்பிப் போட்டது. நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் விற்றார்கள், வாடகைக்கு விட்டார்கள், உள்வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தான் செய்து கொண்டிருந்த அளவை குறைத்துக் கொண்டார்கள். 

பெரிய பதவிகளுக்கு ஆட்களைத் தவிர்த்தார்கள். தரம் என்பதனை மறந்து தவித்தார்கள். பலரும் நிம்மதியிழந்தார்கள். சிலரால் பிரச்சனையின்றி இயங்க முடிந்தது. பலரும் இயங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள். இருக்கின்றார்கள். சக்கரம் இடைவிடாமல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இதன் முக்கிய விளைவுகள் அடுத்த வருடம் இறுதியில் தெரியும்? 

90 சதவிகிதம் எதிர்மறைகளும் 10 சதவிகிதம் நேர்மறைகளும் நம்மைச்சுற்றிலும் இருக்க இதற்குள் தான் நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நேர்மை, கை சுத்தமானவன், ஒழுக்கம்,கடின உழைப்பாளி,உதவிடும் உள்ளம் கொண்டவன், அரவணைத்துச் செல்லக்கூடியவன், தியாக மனப்பான்மை கொண்டவன். இந்த வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்தம் மாறிவிட்டது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த வார்த்தைகள் போற்றப்படலாம். ஆனால் எவரும் பின்பற்றப்படக்கூடாது என்ற நிலையில் இருக்கும் வார்த்தைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  மற்றொருவர் நல்லவன் என்பதற்கும் வல்லவன் என்பதற்கும் உண்டான அர்த்தம் புரிந்தால் போதும்.  குழப்பம் வராது என்றார்.

இது போட்டி உலகம். உள்ளூர் போட்டியிலிருந்து இன்று உலகாளவிய போட்டி வரைக்கும் பரந்து விரிந்துள்ளது. போட்டி போடுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை. ஆனால் நம் கொள்கை எந்த இடத்தில் அடி வாங்கும்? ஏன் இப்படி நடந்தது? என்று யோசிப்பதற்கு வாழ்வின் திசையே மாறிவிடும். சிந்தனை முழுக்க வணிக நோக்கம் என்பதனைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிதர்சன உலகத்தையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். இதன் அடிப்படையில் வருடத்தின் தொடக்கம் தொடங்கியது. 

ஐந்தாவது தலைமுறையைத் தாண்டி முதல் முறையாக டாடா குழுமத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கடந்த ஒரு தமிழர் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய காலம் வரைக்கும் வாசித்து முடித்த போது திருப்பூர் குறித்து அதிக யோசனை வந்தது. முடிந்தவரைக்கும் அள்ளிக்கோ என்ற இங்குள்ள கட்டமைப்பு கவலையைத் தந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவன சேர்மன் நந்தா அவர்களின் சுயசரிதத்தை வாசித்து முடித்துப் போது சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று அவர் கடந்து வந்த பாதையையும், ஆட்சி மாற்றங்களின் போது அவர் சந்தித்த சவால்களையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. 

மூன்றாவது தலைமுறையில் ஒருவர் உருவாக்கிய நிறுவனம் உருக்குலையாமல், நிர்வாக ரீதியாக, லாப ரீதியாக இன்னமும் சந்தையில் இருக்கும் விதத்தை, வித்தைகளையெல்லாம் பார்க்கும் திருப்பூர் சூழல் உறுத்தலாகத் தெரிந்தது.  செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் சிறிய லாபம் மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதற்கும் முதலீட்டில் உள்ள மொத்த பணமும் நாம் அனுபவிப்பதற்கே என்ற இங்குள்ள நடைமுறைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்று சந்தையில் நிற்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசாங்க ஊழியர்கள் போலக் கடைசி வரை நிலையாக இருப்பதும், பலர் ஓய்வு பெற்ற போதும் பணியாற்றிய நிறுவனத்திற்கு வேறொரு வகையில் உதவிடும் வகையில் தங்கள் சொந்த பொருளாதாரத்தைச் செழிப்பாக வைத்திருப்பதையும் படித்த போது தீர்க்கதரிசனம் என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  இன்றைய சூழலில் திருப்பூரில் வட இந்திய இளையஞர்கள் ஐந்து லட்சம் இருக்கின்றார்கள்.  

தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் துடைத்து எறியப்பட்டுள்ளனர். பாதை மாறியுள்ளனர்.  வேறு துறைக்கு மாறியுள்ளனர். நம்பகத் தன்மையில்லாத நிர்வாக அமைப்பும், நம்ப முடியாத தொழிலாளர்களின் மனோபாவம் இரட்டை தண்டவாளம் போலவே இன்றும் சென்று கொண்டிருப்பதன் தாக்கம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தில் மிக அதிக யூ டியூப் வாயிலாகப் பலரின் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்க வாய்ப்பு அமைந்தது. குறிப்பாகச் சுப. வீரபாண்டியன் பேச்சுக்கள், உலக அளவில், இந்திய அளவில் உள்ள தொழில் அதிபர்களின் உரைகள் போன்றவற்றைப் பார்க்க கேட்க முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலகத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லாத ஒரு கட்டமைப்பு உருவாகி, உருவாக்கி அதையே சரியென்று நம்பவைத்துப் படித்து வருபவர்களின் சிந்தனை முழுக்கப் பாதுகாப்பு என்று வார்த்தையின் பொருட்டுக் காலம் முழுக்கக் கூலியாகவே வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்துள்ளது. 

முகம் மட்டுமே அரசியல் மற்றும் நிர்வாகம் என்கிற ரீதியில் உள்ள கட்டமைப்பு உடைபடும் நாள் எந்நாளோ அந்நாளில் உண்மையான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். வந்து கொண்டிருக்கின்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த மாய உலகத்தை அடியோடு மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  அப்போது அரசியல், சமூக, தொழில் உலக மாற்றங்கள் வேறொரு திசையில் பயணிக்கக்கூடும். அப்போது இப்போது புனிதமாக பார்க்கப்படும் பலரின் முகங்கள் காலாவதி ஆனதாக இருக்கக்கூடும்.