Wednesday, March 17, 2010

சிவராசன் வலைபின்னல்

தமிழ்நாட்டு காவல் துறை Q branch தொடக்கம் முதல் விடுதலைப்புலிகள் விசயங்களில் மிகுந்த முன்னேற்பாடுகளையும் தங்களால் முடிந்த அளவிற்கு ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தவர்கள்.  ஆட்சி மாறும் போது அவர்களின் தொடர்ச்சியான பணியும் அலங்கோலமாய் முடிந்து மறுபடியும் தொடக்கத்தில் இருந்தே தொடங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்.  அவர்களுக்கு இருந்த அதிகாரம் என்பது செய்திகளை,ஆதாரங்களை திரட்டுவது மட்டுமே.  முடிவு எடுக்ககப்பட வேண்டியவர்கள் அவவ்போது வந்து அமரும் ஆட்சியாளர்கள். ஆட்சிக்கு வருபவர்களின் கொள்கைகள், நோக்கங்கள், தனிப்பட்ட நிர்ப்பந்தம், தெரிந்தும் நழுவல் என்ற கொள்கையினால் அவ்வப்போது அது வெறும் காகிதமாக கோப்புகளில் உறங்கிக் கொண்டு இருக்கும்.  அப்படி உறங்கிய ஒன்று பத்பநாபா கொலைவழக்கு. 

அவர்களின் பணி இப்போது சற்று வேகம் பிடித்து இருந்தது. இத்தனைக்கும் புலனாய்வுக் குழுவினருக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன பிரச்சனைகள் நடந்தாலும் அனைவரும் ஒரே குரலில் கேட்பது உடனே சிபிஐ விசாரணை வேண்டும்.  அப்படி என்றால் மாநிலத்தில் உள்ள காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறை என்ன செய்து கொண்டுருப்பார்கள்? அவர்கள் பலம் பலவீனம் என்பது தான் என்ன? இந்த துறையில் இருக்கும் உண்மையான நேர்மையான அதிகாரிகள் வருந்தத்தான் செய்வார்கள்.  காரணம் மத்திய சிபிஐ ஒன்றும் கொம்பு முளைத்த வினோத மிருகம் அல்ல.  சிபிஐ மாநிலத்திற்குள் வந்தாலும் அவர்களும் சார்ந்து தங்களுடைய தொடக்க புலனாய்வு பாதைகளை உணர வேண்டுமென்றால் இவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.  பாடு படுபவர்கள் எப்போதும் போல கீழே தான் இருப்பார்கள்.  பட்டத்துக்கு வரும் இளவரசன் கணக்காய் சிபிஐ மேலே வந்து அமர்ந்து கொண்டு நோகாமல் நோண்டி கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள். . ஆனால் இப்போது உருவாக்கப்பட்ட சிபிஐ (எஸ்ஐடி) சற்று வித்யாசமானது.  குறிப்பாக இதன் அலுவலகம் சென்னையில்.  தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழர். அரசியல் நிர்ப்பந்தம் இல்லாத அளவிற்கு தெளிவான முறையில் வடிவமைக்கப்பட்டது. தொடக்கம் முதல் கார்த்திகேயன் போட்ட ஒப்பந்தம் என்பதே இது தான். தமிழ்நாடு என்பது ஆட்சி அதிகாரத்தில் மற்ற மாநிலத்து மக்கள் அதிகமாக இருப்பதைப் போலவே மற்ற மாநில முக்கிய பொறுப்புகளிலும் இன்றைய மும்பை கமிஷனர் சிவானந்தா போல கார்த்திகேயனும் மிகுந்த செல்வாக்குடன் கர்நாடாகவில் முதல் அமைச்சர் குண்டு ராவ் அவர்களின் இடது வலது கை போல செயல்பட்டுக் கொண்டுருந்தார். 

Q branch போலவே ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்த ஹரிபாபு வீட்டில் புலனாய்வு குழுவினரும் வீட்டில் சென்று சோதனையிட்டார்கள்.  அவருடைய ஏழ்மையான வீட்டில் ஒன்றும் கிடைக்காத போதும் அன்று அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது.  ஹரி பாபுவின் வீட்டின் பின்புறம் சென்றவர்கள் எதிர்பார்க்காத ஒளித்து வைத்திருந்த கத்தை கடிதங்கள் மறைவு பகுதியில் இருந்து கைப்பற்றினார்கள். கைப்பற்றியதை புலனாய்வுக்குழுவினருக்கு உதவியாய் இருக்கலாம் என்று மல்லிகை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட காகித குப்பைகள் அத்தனையும் பொக்கிஷம்.  பல விதமான கடித பரிமாற்றங்கள்.

பல கடிதங்களுடன் ஹரிபாபு விரும்பிக்கொண்டுருந்த பெண்ணின் கெஞ்சல் கடிதமும் இருந்தது.  ஹரிபாபு விடுதலைப்புலி இயக்கத்துடன் வைத்திருந்த தொடர்பு, அவர் ஈடுபட்டுருந்த அபாயகரமான பணி என்று மொத்தமும் அதன் மூலம் புரிந்து கொள்ள உதவியாய் இருந்தது. இதில் தான் தணு ராஜீவ் காந்தியை கொல்வதற்கு உபயோகித்த சந்தன மாலை பூம்புகார் விற்பனை அங்காடியில் வாங்கிய ரசீதும் இருந்தது. இப்போது ஹரிபாபுவைப்பற்றி சற்று புரிந்து கொள்வோம். 

இவர் ஒரு திருவாளர் அப்பாவி.  இளவயதுக்குரிய முறுக்கும் சாகசமும் நிறைந்த எண்ணங்கள் அவரை இந்த குழிக்குள் தள்ளியது. இவர் செய்த முதல் தவறு சுபா சுந்தரத்தின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது.  இரண்டாவது விடுதலைபுலிகளின் யாழ்பாணம் போல் இருந்த சுபா சுந்தரதின் அலுவலகத்திற்கு வந்து போனவர்களால் ஹரிபாபுவின் எண்ணங்களும் மாறத் தொடங்கியது., அப்போது ஏற்பட்ட தொடர்புகளால் கவரப்பட்டு தனக்கும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்தையும், சாரசரி தமிழ்நாட்டு இளைஞன் போலவே பிரபாகரன் என்று பிம்பத்தின் மேல் ஒரு கவர்ச்சியும் வந்தது. ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து சுபா சுந்தரம் செய்த அலங்கோலமான அவசர குடுக்கை சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் போய் இறுதியில் அவரை கைது செய்யும் அளவிற்கு உருவாக்கியது.  அவர் ஹரிபாபு தன்னிடம் வேலை செய்யவில்லை என்பதில் தொடங்கி, குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வாங்கலாம் என்ற நோக்கத்தில் ஹரிபாபுவின் அப்பாவை அறிக்கை விடச் செய்யது வரைக்கும் அப்பன் இல்ல குதிருக்குள்ளே என்று அவரைக் கொண்டு போய் மாட்டியது.

இதற்கிடையே சிறப்பு புலனாய்வு குழுவினரில் ஒரு பகுதியினர் துரத்திக் கொண்டுருந்த சோதனைகள் மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அச்சக பணியை நிறைவேற்றி கொடுத்துக் கொண்டு இருந்தவர்களை முற்றுகையிட்டனர். அதன் மூலம் 1987 முதல் 1990 வரையிலும் இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் நடத்திய மொத்த நிகழ்வுகளையும், அது குறித்த உலக ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து " சாத்தானின் படைகள்" என்ற புத்தக வடிவில் தயாராக இருந்த மொத்த பிரதிகளும் கைப்பற்றப்பட்டது.  அச்சிட்டவர் தலைமறைவானர்.

அப்போது, தமிழ்நாட்டு காவல் துறை தஞ்சாவூரில் வைத்து ரூசோ என்ற சங்கர் கோணேஸ்வரன் என்ற விடுதலைப்புலியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து இருந்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சீட்டில் சென்னையில் இருந்த நளினி, தாஸ் என்பவர்களின் தொலைபேசி எண்களும், போரூரில் இருந்த எபிசேனர் மளிகைக்கடை தொலைபேசி எண்ணும் கிடைத்தது. நளினியின் எண் மூலம் அவர் அடையாறு அனபான்டு சிலிக்கன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்ற உண்மையை கண்டு பிடிக்கப்பட்டது.  மேலும் பிடிபட்ட சங்கர் மூலம் பெறப்பட்ட தகவல்,  திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு கடத்தல் புள்ளியை நெருங்க முடிந்தது.  அவர் மூலம் சிவராசன் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது.
ராஜீவ் இறந்த இடத்தில் நிறுவப்பட்ட நினைவுத்தூண்கள்
ஹரிபாபுவின் நண்பர் மூலம் தலைமறைவான அச்சகம் நடத்தி வரும் பாக்யநாதன் பற்றிய உண்மைகள் கிடைக்கப்பெற்றது.  பாக்யநாதனை விசாரித்த அதிகாரிக்கு புகைப்படத்தில் இருந்த நளினி இவரின் சகோதரி தான் என்பதும் புரிந்தது. ஆனால் இரண்டாம் முறை பாக்யநாதனை விசாரிக்கும் போது தான் நளினியை தனது மூத்த சகோதரி என்பதையும் தெரிவித்தார். சங்கர் மூலம் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட நளினி தொலைபேசி எண் மூலம் அடையாறு சென்ற வேறொரு குழுவினர் அங்கு நளினியிடம் விசாரித்தனர். அப்போது நளினி சந்தேகப்படும்படி எதையும் பேசவில்லை.  அவரிடமிருந்து உருப்படியான தகவல் இல்லை என்பதோடு நளினியும் இதில் சம்மந்தபட்டுருக்கிறார் என்பதை அன்று சென்றவர்களால் யூகிக்க முடியவில்லை.  ஆனால் வில்லிவாக்கத்தில் இருந்த வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் நளினி வீட்டை சென்றடைந்த புலனாய்வு குழுவினருக்கும் பூட்டிய வீடு தான் வரவேற்றது. நளினி தப்பி விட்டார். கைது செய்யப்பட்ட பாக்யநாதன் மூலம் இந்த சதித்திட்டத்திற்கு பின்னால் உள்ள அடிப்படை விசயங்கள் புரிய ஆரம்பித்தது.

திட்டம் சரியாக நிறைவேறியதும் சிவராசன் குழுவினர் கொடுங்கையூர் வந்து சேர்ந்தனர். மறுநாள் எப்போதும் போல நளினி வேலைக்குச் சென்று விட்டார். ஆனால் புலனாய்வு குழுவினர் ஊடகத்தில் (மே 24) தணுவின் புகைப்படங்கள் முதல் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்க சிவராசன் கூட்டணியினரின் ஒட்டமும் தொடங்கியது. மே 25 பாக்யநாதன் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்த டாக்ஸியில் திருப்பதி சென்றதும், அங்கு முருகன் நளினி திருமணம் முடித்ததும், மீண்டும் ஒரு முறை முருகன் நளினி மட்டும் தனியாக திருப்பதி சென்று, முருகன் மொட்டை போட்டுக்கொண்டது வரைக்கும் வெளிவந்தது.

பாக்யநாதனுடன் கைது செய்யப்பட்ட அவரது தயார் பத்மா மூலம் மேலும் சில புதிர்களுக்கான விடைகள் கிடைத்தது.  பத்மா பணிபுரிந்து கொண்டுருந்த மருத்துவமணையில் உள்ளே பணிபுரிந்தவரிடம் கொடுத்து வைத்த ரகஸ்ய கவர் கிடைக்கப்பெற்றது.  பத்மாவின் கைது நிகழ்ந்ததும், மருத்துவமனையில் பத்மாவுடன் பணிபுரிந்த மற்றொரு நர்ஸ் பெண்ணே புலனாய்வு குழுவினரை அழைத்து ஒப்படைக்க உள்ளே இருந்த பூதம் பலவிதங்களிலும் புலனாய்வு குழுவினருக்கு உதவியது. ஓயர்லெஸ் குறியீடுகள், எண்ணும் எழுத்தும் அடங்கிய சங்கேத பாஷைகள், முருகனின் மற்றொரு பெயரான இந்து மாஸ்டர் போன்ற பல விபரங்கள் கிடைத்தாலும் சுற்றிச் சுற்றி வட்டத்திற்குள் வந்தாலும் இதற்கு மையப் புள்ளியான சிவராசன் குறித்தோ அதற்கு மேல் உள்ள முக்கியப் புள்ளி குறித்தோ தகவல் ஒன்றும் கிடைத்தபாடில்லை.

கூட்டணிக் குழுவினரின் புகைப்படம் வெளியானதும் தமிழ்நாடு முதல் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வரைக்கும் சரியான தவறான தகவல்கள் மல்லிகை இல்லத்திற்கு வந்து கொண்டே இருந்தது. இந்த செய்திகளுக்கிடையே திருமணம் முடிந்து மொட்டை தலை முருகனுடன் நளினி திருப்பதியில் இருந்து வந்து மதுரைக்கு நளினியின் தோழி வீட்டுக்குச் சென்றனர்.  அங்கு மறுக்கப்பட கர்நாடகாவில் உள்ள தாவன்கெர இடத்திற்கு செல்ல அங்கும் உதவி செய்ய மறுக்க அங்கிருந்து கிளம்பி விழும்புரம் வழியாக சென்னை வந்து இறங்கிய போது ஒவ்வொன்றையும் வந்த தகவல்கள் அடிப்படையில் அவர்களை துரத்திக்கொண்டுருந்த புலனாய்வு குழுவினர் சைதாப்பேட்டை பேரூந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கிய போது இருவரையும் கைது செய்து மல்லிகை இல்லத்திற்க்கு கொண்டு வந்தனர்.  அப்போது தான் நளினி இரண்டு மாத கர்ப்பபமாக இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட முருகன் மூலம் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மற்ற போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.  பிடிப்பட்ட ஒவ்வொருரின் வாக்குமூலம் வெவ்வேறு திசையில் இருந்து பல விசயங்களையும் புரியவைத்தாலும் இன்னமும் முன்னேற முடியவில்லை. ஆனால் கொடுத்த
விளம்பரம் மூலம் கிடைத்த மற்றொரு அற்புத ஆவணம் சிவராசனின் உண்மையான புகைப்படம்.  மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சிவராசனுக்கு இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம் வழங்கியிருந்தது.  அதன் மூலம் சிவராசனின் புகைப்படத்தோடு, ராபர்ட் பயஸ்,மகேஸ்வரன் புகைப்படங்களும் இது தொடர்பான வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றிதழ்கள், ஆவணங்கள் என்று மொத்தமும் கிடைக்கப்பெற்றது. 

இதன் மூலம் ராபர்ட் பயஸின் போரூர் முகவரி தெரியவந்தது. தஞ்சாவூரில் பிடிபட்ட சங்கர் என்ற விடுதலைப்புலி மூலம் பெறப்பட்ட தொலைபேசி எண் என்பது ராபர்ட் பயஸ் வீட்டுக்கு அருகில்இருந்த மளிகைக்கடைக்காரர் சொந்தமானது. வட்டம் இறுகியது.  அறிவு, ராபாட் பயஸ்,ஜெயக்குமார் என மொத்தமும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  இதற்கிடையே சென்னையில் இருந்து வயர்லெஸ் மூலம் செய்திகள் கடத்தப்பட்டுக் கொண்டுருந்த போதிலும் உளவுத்துறையினரால் முழுமையாக ஊடுருவ முடியவில்லை.  கடினமான சங்கேத வார்த்தைகள் ஒரு புறம், நவீன தொழில் நுட்பம் மறுபுறம்.  இயக்குவர்களின் அதி புத்திசாலித்தனம் என்று ஐம்பது சதவிகிதம் உள்ளே நுழைந்தால் செய்தியை கடத்திக்கொண்டுருப்பவர்கள் அடுத்த அலைவரிசைக்கு மாறி மற்ற செய்திகள் வழக்கம் போல போய்க்கொண்டுருந்தது.  புலனாய்வுக்குழுவினர் எதிர்பார்க்கும் நவீன உபகரணங்கள் கிடைக்காதது ஒரு புறம், இந்தியாவிடம் விடுதலைப்புலிகள் வைத்திருந்த உபகரணங்களுக்கு சமமான தொழில் நுட்பம் அடங்கிய உபகரணங்கள் இல்லை என்பது மகத்தான ஆச்சரியமும் சோகமும் கூட. தொலை தொடர்புதுறையில் சிறப்பாக பங்காற்றிக் கொண்டுருக்கும் சாம்பிட்ரோடா வரைக்கும் தொடர்பு கொண்டு பெற முடியாதது அடுத்த ஆச்சரியம். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நவீனங்களை அன்றைக்கு உள்ளபடி மாற்றிவைத்து பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் சென்னையில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்திக்கொண்டுருந்த ஹேம் அலைவரிசை பயன்படுத்துவோர் உதவ முன்வந்தாலும் இறுதி வெற்றி கிடைக்கவில்லை.  அப்போது புலனாய்வு குழுவினர் நவீன உபகரணங்கள் கேட்டு தொடர்பு கொண்ட துறையையும் பார்த்து விடலாம். DEFENCE ELECTRONIC RESEARCH LAB/ CHENNAI TELEPHONE DEPT./INTERNATIONAL MONITAR CENTER/WIRELESS PLANNING AND CO ORDINATION UNIT/ INIDAN MILITRARY SIGNAL REGIMENT.  அன்றைய காலகட்டத்தில் இல்லாத வசதிகள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு புலனாய்வு குழுவினரை போராட வைத்தது. இவர்கள் விரும்பிய கருவி HIGH FREQUENCY DIRECTION BINDER. ஆனால் இவர்களுக்கு அப்போது ஹைதராபாத்தில் இருந்து கிடைத்த கருவி HIGH FREQUENCY COMMUNICATION RECEIVER , இதன் மூலம் எந்த திசையில் இருந்து செய்திகள் செல்கின்றது என்பதை மட்டுமே உணர முடியும்.  எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்பதை உணர முடியாது.

இதற்கென்று உருவாக்கப்பட்ட வல்லுநர் குழு இந்த கருவியை வைத்துக்கொண்டு சென்னையில் புலிகாட் ஏரி, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நின்று கொண்டு பல நாட்கள் காத்து இருந்த செய்திகள் ஊடகத்தில் வந்ததும் தற்காலிகமாக கடத்திக்கொண்டுருந்த செய்திகளும் நின்று போனது. ஆனால் இத்தனை துரதிஷ்ட்டத்திற்கும் மத்தியிலும் கூட அப்போது இடைமறித்த ஒரு செய்தி மூலம் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு இலங்கையைச் சார்ந்த பொறியியல் வல்லுநர் வீட்டில் நடக்க இருக்கும் சந்திப்பு என்ற செய்தி கிடைக்கப்பெற்றது. அங்கு சிவராசனும், உளவுத் துறையில் உள்ள சாந்தனும் சந்திக்க இருப்பதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தை கண்காணித்தனர்.  அந்த பொறியியல் வல்லுநர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று ஏற்கனவே உளவுத்துறையினர் முதல் புலனாய்வு குழுவினர் வரைக்கும் தெரியும்.  மேல்தட்டு மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் பல நாட்கள் காத்து இருந்தும், குடிநீர் வடிகால் வாரிய ஆட்கள் போல புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்குள் உள்ளே போய் வந்தும் எந்த உருப்படியான தகவல்களையும் பெற முடியவில்லை.

இவர்கள் இங்கு காத்திருந்தது சிவராசன் மற்றும் சாந்தனுக்காக. ஆனால் வீட்டுக்கு வந்து கடிதம் கொடுத்து விட்டு சென்றவர் ஒரு பெண்மணி,  அந்த கடிதம் வாங்க வந்ததும் சார்பாளர்.  சிவராசன் சார்பாக பெண்மணி.  சாந்தன் சார்பாக டிக்சன் என்பவர். அவர்களைப் பொறுத்தவரையில் காரியம் வெற்றி.  இதை எதிர்பாரதவர்களுக்கு பலத்த அதிர்ச்சி.  அப்போது தான் மத்திய உளவுத்துறையில் இருந்து டிக்சனின் புகைப்படத்தை புலனாய்வு குழுவினர் வாங்கினர். 

3 comments:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

Thenammai Lakshmanan said...

அடேங்கப்பா ..எவ்வளவு நடந்து இருக்கு ஜோதிஜி..

Anonymous said...

//அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நவீனங்களை அன்றைக்கு உள்ளபடி மாற்றிவைத்து பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.//
கொஞ்சம் நம்ப கஷ்டமாகத் தான் இருக்கிறது. உங்களை சந்தேகப் படவில்லை. 2000ங்களில் / 90களின் இறுதியில் அவர்களிடம் இருந்தவை பற்றி மக்களாகிய எங்களுக்கு பிரமிப்பு இருக்கிறது. மண்ணெண்ணெய் காய்ச்சி பெற்றோல் தயாரிப்பவர்கள் அவர்கள். அதுக்கு வடி என்று பெயர் வேறு. வடி என்பது ஃபில்டர் செய்வதைக் குறிக்கும்.

ஆனால் தொன்னூறுகளில் கெரில்லா குழுவாக இருந்து இராணுவமாக மாறிக் கொண்டு இருக்கும் போது இதெல்லாம் இருந்ததா என்று ஆச்சரியமாக இருக்கிறது. சின்ன சின்னப் பொருட்களை வைத்து பெரிய வித்தை காட்டுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கிண்டல் அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எப்படியாயினும் யாராவது ஒருவர் எப்படி இயங்கினோம் என்று வெளியே சொல்லுவார்களானால் பல சுவாரசியமான விடயங்கள் எங்களுக்கு கிடைக்கலாம்.

சின்ன வயதில் பார்த்த போராளிகளுடன் இவற்றைப் பொருத்திப் பார்க்க கடினமாக இருக்கிறது. ஒரு வேளை யாருக்குமே தெரியாத அளவு அட்வான்ஸாக இருந்திருக்கலாம். உண்மையைச் சொல்லக்கூடியவர் ஒரு நாள் வரவேண்டும் என்கிற அவா இதைப்படிக்கும் போது அதிகமாகிறது.