Wednesday, May 13, 2020

பழக்கங்கள் இனி தேவையில்லை



சுய ஊரடங்கு 3.0 - 51
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


இன்று வரையிலும் மொத்தமாகப் பட்டியலிட்டுப் பார்த்தேன்,

பார்த்த, பழகிய, கேட்ட, விரும்பிய, பழகிய, விலகிய, வெறுத்த, ஆதரித்த, ஏக்கத்துடன் பார்த்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு உள்ளேன்.

காரணம் கொரானா காலம் மிகப் பெரிய பாடத்தையும், படிப்பினையும், வாய்ப்பை, வசதிகளை, வரத்தையும் கொடுக்க வந்துள்ளது.



முதல் 21 நாளில் ஒழுங்காகக் கடைப்பிடித்தவர்களின் நரம்பு மண்டலம் உருவாக்கிய அதிர்வுகளும், மனதில் உருவான தளர்ச்சி, கோபம், இனம் புரியாத ஆத்திரம் என்று பலதரப்பட்ட கதைகளைத் தினமும் கேட்டு வருகிறேன்.

இந்தப் பழக்கங்கள் இனி தேவையில்லை. மகன், மகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள், நமக்கு இனி அசிங்கம் என்று மனம் எண்ணினாலும் இரவு வந்தவுடன் கால்கள் தானாகவே கடையை நோக்கிச் செல்வது இங்கே இயல்பாகவே உள்ளது.

மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவருக்கும் 5000 ம் இருபதாயிரம் சம்பாதிக்கும் தகுதியுள்ளவருக்கும் பத்தாயிரமும் இந்தக் குடியால் செலவாகின்றது. எவராலும் நிறுத்த முடியவில்லை. நெருக்கமான கடைகள் இருக்கும் போது எளிதாகக் கிடைத்து விடுகின்றது. கடந்து செல்லும் போது கடைகளைத்தாண்டி வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை.

ஆனால் பலராலும் இவற்றிலிருந்து மீள முடியவில்லை என்பதே உண்மை. 

பட்டியல்.......

1. வெற்றிலை, சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு
2. வெற்றிலை, சுண்ணாம்பு, சீவல்
3. வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை,
4. பன்னீர் புகையிலை,
5. பீடி
6. சுருட்டு
6. சாதா சிகரெட்,
7. பில்டர் சிகரெட்,
8. (அங்கீகாரமின்றி) காய்ச்சின சாராயம்
9. அரசு ஆதரித்த பட்டை சாராயம்,
10. விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், வோட்கா, ஜின்
11. குட்டி பீர், டின் பீர், பெரிய பாட்டில் பீர்,
12. மிலிட்டரி சரக்கு, உள்ளூர் சரக்கு, கம்பெனி பெயர் வைத்து பாதிக்குப் பாதித் தண்ணீர் கலந்த சரக்கு,
13. பான்பராக்,
14. கணேஷ்,
15. ஹான்ஸ்,
16. ஸ்வீட் பீடா,
17. 120 பீடா,
18. மாவா
(ராஜபோதை சமாச்சாரங்களை இதில் கொண்டுவரவில்லை)

அரசாங்கம் உருவாக்கிய தடைக்காலம் உங்கள் வாழ்க்கையில் வருமானத்தை நிறுத்தியுள்ளது என்பது பற்றி யோசிக்காமல் உங்களிடம் இருந்த ஆரோக்கியமற்ற பல பழக்கத்தையும் நிறுத்த உதவியுள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

காரணம்

நூறு கோடியை அடைந்து கோடீஸ்வரன் என்று பெயர் எடுத்தவன் முழு ஆரோக்கியம் இல்லாதவனாக இருந்தால் அவனின் சொத்துக்களை, அதன் மூலம் கிடைக்கும் சுகங்களை அவன் அனுபவிக்க முடியாது.

சுற்றியுள்ளவர்கள் தான் அனுபவிக்க முடியும். அது தான் பெரிய நரக வேதனை.

வருகின்ற மே 17  க்குள் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த உங்களின் (மேலே குறிப்பிட்ட) ஏதோவொரு பழக்கம் இருந்தால் அதனை நிறுத்தும் பட்சத்தில் 1. பணம் மிச்சம். 2. அளவில்லாத ஆரோக்கியம். 3. மருத்துவச் செலவுகள் இனி குறையும்.

(பின் குறிப்பு 115 சரக்கை ஐந்து ரூபாய் அதிகமாக வைத்து 120 ரூபாய் என்று கடையில் விற்கும் சரக்கு இன்று 600 முதல் 800 வரைக்கும் விலை உச்சத்தில் உள்ளது. மக்கள் வாங்க வரிசையில் நிற்கின்றார்கள்)

3 comments:

Yaathoramani.blogspot.com said...

தீதினும் ஒரு நல்லது என்று எண்ணித் திருந்துபவர்கள் புத்திசாலிகள்...மற்றவர்கள் அவியினும் வாழினும் என் ...

வெங்கட் நாகராஜ் said...

தீயப் பழக்கங்களை கைவிட இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் கை விடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. கடைகள் திறந்தவுடன் வந்த கூட்டத்தினை - அது அந்த மாநிலமாக இருந்தாலும் - தலைநகர் தில்லி உட்பட - பார்க்கும்போது தோன்றியது.

இங்கே அரசாங்கமே 70% கோரோனா வரி சேர்த்து விற்றாலும் நீண்ட வரிசை கடைகளின் வாயிலில்! அலுவலகம் செல்லும் வழியில் பார்த்தபோது மனதில் வலி மட்டுமே மிஞ்சியது. எவ்வளவு அதிகம் விலை வைத்தாலும் நாங்க வாங்கிக் குடிப்போம் என்று சொல்லும் மதுப் பிரியர்கள்; அவர்கள் குடிக்கிறார்கள் நாங்கள் விற்கிறோம் எனச் சொல்லும் அரசு!

Avargal Unmaigal said...

எந்தவொரு பழக்கமும் அளவிற்கு அதிகமாகிவிட்டால் அது தீயபழக்கமாகிவிடும் அது நல்ல பழக்கமாக இருந்தால் கூட.....

மது பழக்கம் தீயது அல்ல அதில் ஒரு ஒழுக்கத்தை கடைபிடித்தால்